அஷேரா! குற்றவுணர்வும் காமத்தின் ஊடாட்டமும்

சயந்தனின் அஷேரா நாவல், ஈழப்போருக்குப் பிந்தைய போராளிகளின் மனநிலையை ஒளிப்படமாக குறிப்பிடுகிறது. பல்வேறு உணர்வுகளின் மையமாக, காதல், குற்றவுணர்வு மற்றும் தற்கொலை ஆகியவை கதையின் பங்கு. இக்கதையில் முன்னாள் போராளிகள் மற்றும் அகதிகள் அனைவரும் கடுமையான தண்டனைகள் மற்றும் வெளிவட்டார அணுகலை எதிர்கொள்கின்றனர். போரின் விளைவுகள், வாழ்க்கையின் சிக்கல்கள் மற்றும் காதலின் கஷ்டங்களுக்கு இடையிலான யுத்தமாக இந்த நாவல் உருவாகிறது.

சயந்தனின் அஷேரா நாவலை வாசித்தேன். ஈழப்போருக்குப் பிந்தைய போராளிகளின் மனநிலையை ஒட்டிய நாவலாக அமைந்திருக்கிறது. வளரிளம் பருவத்திலே போராளி குழுக்களில் பங்கேற்பவர்கள் வாழ்வின் ஒரு பகுதியைப் போரின் உக்கிரத்தையும் உயிரச்சத்துடனே எதிர்கொள்கின்றனர். போர் விழுமியங்களான தியாகம், இலட்சியம் ஆகியவையை அச்சங்கொள்ளச் செய்கின்ற தண்டனைகளின் வாயிலாகவும் இயக்க நடவடிக்கைகளாக முன்வைக்கப்படுகிறது. இந்தச் சூழலில், இயல்பாக மனத்தில் எழுகின்ற காதல், சாவச்சம் ஆகியவை தறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதிலிருந்து தப்பித்து வெளியேறுகிற முன்னாள் போராளிகள் இருவரை மையமிட்டே நாவல் அமைகிறது.

சுவிர்சுலாந்தின் மொர்கார்தென் அகதிகள் முகாமிலிருந்து நாவல் தொடங்குகிறது. மெர்கார்தென் குன்றின் அருகில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் சுவிஸைக் கைபற்ற ஆஸ்திரிய நாட்டு இளவரசன் தலைமையில் படையெடுப்பு அங்கு நடைபெறுகிறது. அதனைச் சுவிஸ் நாட்டு தளபதி முறியடிக்கிறான். அந்த உக்கிரமான போரிலிருந்து தப்ப ஆஸ்திரிய நாட்டு வீரர்கள் அங்கிருக்கின்ற ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.

அந்த முகாமில் இருக்கும் அருள்குமரனின் விசாரணை அறிக்கையிலிருந்தும் அவனது குறிப்பேட்டிலிருந்துமாக நாவல் விரிகிறது. வெளிநாடொன்றில் அருள்குமரனின் அப்பா வேலை செய்கிறார். அம்மாவுக்கும் எதிர்வீட்டில் வசிக்கும் சரவணபவனுக்கும் உறவு இருப்பதை ஏழு வயதிலே அறிகிறான். அம்மாவுக்கும் சரவணபவனுக்கும் சண்டை ஏற்படுகிறது. அவளுடைய வீட்டுக்கி வந்துனறைக்கதவைச் சார்த்திச் சேலையொன்றை எடுத்துத் தூக்கிட முயல்கிறான் பவன். தடுக்கச் செல்லும் போது கடைசியாக ஒருமுறை எனக் கோரிக்கை வைக்கிறான். வெளியே நில்லுங்கோ மாமனுக்கு மருந்து கொடுத்துவருகிறேன் என அம்மா அவனுக்காக இணங்கி போகிறாள். காலமெல்லாம் அம்மாவின் அந்த வார்த்தைகள் அவனை அருவிக்கொண்டிருக்கிம்றன  பின்னொரு நாள், யார் என்ன சொன்னாலும் அம்மாவை வசைபாட கூடாது என மகனிடம் சொல்லிவிட்டு அரளிவிதையை அரைத்துச் சாப்பிடுகிறாள். தேவாலயத்தின் மீது போடப்படும் குண்டில் உடல் சிதறி இறந்து போகிறாள். அம்மாவின் அம்மாவான பெத்தம்மாவும் தூரத்து உறவான அமலி அக்காவுடன் வளர்கிறான். வளரிளம் பருவத்துக் காதல் வகுப்புத் தோழியான ஆராதனாவின் மேல் துளிர்க்கிறது. அவளைத் தனக்கான ஆறுதலாகவும் மீட்பாகவும் காண்கின்றான். வீட்டில் இருக்கும் அமலி அக்காவின் மீதான பாலியல் இச்சை தாளாமல், அவளுடன் உறவு கொள்கிறான். குற்றவுணர்வும் பயமும் மேலிட வி.புலிகள் இயக்கத்தில் சேர்கிறான். அந்த இயக்கத்தின் ரொக்கட் என அழைக்கப்படும் நீதியரசன் அறிமுகமாகிறான். இயக்கப் பதிற்சிகளில் கடுமையாக நடந்துகொள்ளும் ரொக்கட், நண்பர்களுக்கு நோவு,பசி போதான தருணங்களில் சாலப்பரிந்து ஊட்டும் அன்னையாகிறான். அங்கிருந்து தப்பியோடி, தமிழ்நாட்டுக்குச் செல்ல மறைந்திருக்கும் போது பிடிபடுகிறான். பின்னர், புலிகளின் ரகசியச் செயல்பாட்டாளனாக மாறி குண்டு வெடிப்பு ஒன்றில் மறைமுகமாக ஈடுபடுகிறான். அந்தக் குண்டுவெடிப்பில் 38 குழந்தைகள் இறந்து போகின்றன. மற்றோரு குற்றவுணர்வுக்கான முடிச்சு விழுகிறது. இப்படியாகக் குற்றவுணர்ச்சிகளும் அன்பின் தகிப்பும் உள்ளவனாக சுவிற்சலாந்துக்கு அகதியாக வருகிறான்.

அங்கு முன்னரே அகதியாகத் தஞ்சமடைந்திருக்கும் அற்புதத்தைக் காண்கிறான். தமிழீழத்துக்கான ஆயுதம் தாங்கிய போரென்பது பல இயக்கங்களும் தனிநபர்களும் நடத்தியதே. அப்படியாக, புளோட் இயக்கத்தில் பங்கெடுத்துப் பின்னர் டெலோ இயக்கத்தில் இணைந்து விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்படுகிறார். தமிழீழம் அமைந்தால் வரதட்சணை இல்லாமல் அக்காமார்களைத் திருமணம் செய்து கொடுக்கலாம் எனத் தொடங்குகிற இயக்க ஈடுபாடு பின்னாளில் வெறும் உயிர்த்தலுக்கான அலைவுறுதலாக மாறிப் போகிறது. அடைக்கலம் கொடுத்தவர்களைப் பலிகொடுப்பதும் பிறரை மருட்டியாவது உயிரை இருத்திக் கொள்வதுமான அலைவில் மீண்டு சுவிஸில் அகதியாகத் தஞ்சமடைகிறார். அங்கே, வயதான யூதத்தம்பதிகளின் வீட்டில் வாடகைக்கு இருக்கிறார். பாலியல் இச்சை மேலிடும் போது அரைகுறை ஆடைகள் அணிந்த பெண்களின் காட்சிகளைப் பார்த்து ஆறுதலடைகிறார். உயிர்வாழ்தலுக்கான நெடிய போராட்டத்தில்  காமம் முற்றிலும் மரத்துப் போயிருக்கிறது. பாலியல் உணர்வு மேலிடும் போது செம்மறியாட்டுடன் உறவுகொள்ள முயன்ற குற்றத்துக்குக் கைது செய்யப்படுகிறார். அருள்குமரன் அவர் மீது அன்பு செலுத்துகிறான்.

கொழும்பில் பிறந்து அஷேரா என்ற புனைபெயரில் சுவிஸில் அகதியாக இருக்கிறாள் அபர்ணா.  எந்நேரமும் சந்தேகத்துடன் கணவன் அலைகிறான். அவனை விட்டுவிலக முடியாத சகிப்புத்தன்மையுடன் வாழப்பழகிவிட்டாள். அருள்குமரனுடனான நட்பு ஏற்படுகிறது. கடந்து போயிருக்கும் இளவயது காதலின் பரவசமும் அன்பையும் இருவரும் உணர்கின்றனர். அருளிப் மனத்தில் எழுந்திருக்கும் அம்மாவின் காம இச்சையைப் பற்றிய பிம்பமும் ஆண்களைப் பற்றிய அஷேராவின் பொதுப்பார்வையும் உரசிக் கொள்கின்றன. தங்களுக்குள் பொதிந்து போயிருக்கும் குற்றவுணர்வு, காயங்கள் கூர்நகங்களாகி ஒருவரையொருவர் பிறாண்டி கொள்கின்றனர். அந்தக் குருதித்தடங்களைப் பார்த்து அன்பும் செலுத்து கற்றுக் கொள்கின்றனர்.

தலிபான் இயக்கத்தில் கட்டாயமாகச் சேர்க்கப்படுகின்ற நஜிபுல்லா கள்ள உறவில் ஈடுபட்ட பெண்ணைச் சுட்டுக் கொல்கிறான்.  அந்தக் குற்றவுணர்வினால் முகாமின் மேலிருக்கும் குன்றிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்கிறான். புலிகள் இயக்கத்தில் இணைந்து காயமுறுகின்ற சிங்கள பெண்ணான அவந்திகா, பிந்தைய நாட்களில் தன்னைச் சிங்களவளாக அறிவித்துக் கொண்டு பாதுகாப்புத் தேடிக் கொள்கிறாள். ஆட்டோகாரர் ஒருவருடன் ஒடிச்சென்று புதியவாழ்வையும் ஏற்படுத்திக் கொள்கிறாள்.

போராளி குழுவிலிருந்து வெளியேறுகின்றவர்கள், மனிதர்களை நெருங்கமுடியாத அளவு நினைவுகளில் இருக்கும் கீழ்மைகளையும் குற்றவுணர்வையும் எண்ணிப் பெருக்கிக் கொண்டிருக்கின்றனர். இயக்கத்திலிருந்து தப்பும் அற்புதத்துக்கு அடைக்கலம் தரும் பண்ணையாரையே பலி வாங்கிவிட்டே தப்ப இயல்கிறது. இயக்கம் அவனைக் கற்பழிப்புக் குற்றவாளி எனப் பழி சுமத்தித் தேடுகிறது. எதிரி போராளி கும்பலின் முன் கைகூப்பி உயிர் பிழைக்கிறான். உயிர்த்திருப்பதற்கான போராட்டமாக அலைகழிகின்ற வாழ்வில் இயல்பான உணர்வுகள் அனைத்தும் மட்டுருத்தப்படுகின்றன. சுவிஸில் பாலியல் தொழிலாளியைப் பார்க்கும் போது கற்பழிப்புக் குற்றவாளி எனும் நினைவால் அலைகழிக்கப்படுகிறான். அவனுடைய வாழ்வில் தூய அன்பு ஒன்றை அருள்குமரனிடம் உணர்கிறான்.

அருள்குமரன் தன் வாழ்வில் நிறைந்திருக்கும் பெண்கள் குறித்த நினைவுகளை மீட்டியப்படியே இருக்கிறான் . பிறிதொரு இளைஞனுடன் உறவு கொண்டிருந்தாள் என்பதற்காக அம்மா மீதான கலங்கலான சித்திரத்தைக் கொண்டிருக்கிறான். நஜிபுல்லா கொல்கின்ற பெண்ணின் வாக்குமூலமே பெண்களின் இயல்பான பாலியல் தேவை குறித்து தெளிவிக்கின்றது. அந்தக் காமத்தையே அமலி அக்காவிடமும் உணர்கிறான். வேறொருவனை மனத்தில் நினைத்துக் கொண்டு, அருள்குமரனிடம் தன் எளிய பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்கிறாள். ஆராதனாவிடம் காதலையும் காமத்தையும் உணர்கிறான். அவன் நினைவுகளில் காமத்தின் மீது படிந்திருக்கும் கசப்பைப் போக்கும் அனுபவமாகவும் உணர்கிறான்.  கணவனால் துன்புறுத்தப்பட்டும் அவனுடனான வாழ்வைத் தொடரும் அபர்ணாவிடமும் அன்பை உணர்கிறான். அபர்ணாவிடமும் ஆராதானாவிடமும்  ஒன்றையொன்று நிகர் செய்யும் அன்பு என்னும் அனுபவத்தை உணர்கிறான். குற்றவுணர்வும் கீழ்மைகளும் அமிழ்த்த தற்கொலையே தனக்கான மீட்பாக உணர்கிறான்.

தனது அக்காளின் திருமணத்துக்காக இயக்கத்தில் அற்புதம் இணைகிறான். குற்றவுணர்வையும் பயத்தையும் மறைத்துக் கொள்ள இயக்கத்தில் அருள்குமரன் இணைகிறான். இயக்கங்களின் இலட்சியங்களுக்கான கருவிகளாகிறார்கள். இயக்கப்போராளிகளிடம் தியாகம், வெறி போன்ற விழுமியங்கள் போன்றவற்றையே கோருகின்றன. பசி, காமம், காதல் போன்ற அத்தனை உணர்வுகளும் மழுங்கடிக்கப்படுகின்றன. இயக்க ஒழுங்குமுறைக்குள் பொருந்த மறுக்கும் உணர்வுகள் துண்டிக்கும் தண்டனைகள் தரப்படுகின்றன

அற்புதம் தெலோ இயக்கத்தில் இணைந்த மறுநாளே இயக்கத் தலைமைக்குத் துரோகம் புரிந்தான் என இளைஞனொருவனை அடித்து முதுகு தோலை உரித்து உப்புக்கண்டம் தடவி அந்தரத்தில் கட்டித் தொடங்கவிடுகின்றனர். இயக்கத்தில் இணைந்த புதியவர்ளை உயிரற்ற உடலைக் கருக்கு மட்டையாள் விளாறச் செய்கிறார்கள். அந்தத் தண்டனையை அளித்தவனே, இயக்கப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் தப்பிக்க முயல்கிறான். இயக்கப் போராளிகளிடம் உயிரச்சத்தை ஏற்படுத்தும் தண்டனைகளால் தலைமையிடம் விசுவாசத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்த நம்பிக்கைகளின் பின்னணியில் அதிகாரப் போட்டிகள் நடைபெறுகின்றன.

தமிழீழத்துக்கான ஆயுதம் வழியிலான போராட்டத்தில் பங்கேற்ற அமைப்புகள், தனிநபர்களின் பெயர்கள் நாவலின் தொடக்கத்திலே இருக்கின்றன. அந்த அமைப்புகளுக்குள் நிலவி வரும் போட்டிகளும் தலைதூக்குகின்ற அமைப்புகளை முடக்கும் செயற்பாடுகளுக்காக எதிரிகளுடன் தற்காலிகச் சமரசம் செய்து கொண்ட அரசியல் வரலாற்றையும் ஊடாகப் பதிவு செய்கின்றார். இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கின்ற அகதிகளுக்கான வாழ்விடங்களின் மோசமான சூழலையும் காண முடிகிறது. பல்லாண்டுகளாக அகதிகளுக்கான மறுவாழ்வு மையங்களாகச் செயல்படுகின்ற முகாம்கள் அடிப்படையில் எவ்வித மாறுபாடுகளுமின்றி அவர்களை அகதிகளாக மட்டுமே வாழ அனுமதிக்கிறது.

நாவலின் இறுதியில் ஜெருசலேத்தில் அஷேரா எனும் பெண் தெய்வச் சிலைகளை யாஹ்வே எனும் மன்னன் சிதைக்கச் செய்கிறான். அந்தத் தெய்வத்தின் மீதான நம்பிக்கையையும் சேர்த்து உடைக்க முயல்கிறான். மக்கள் உடைந்து போயிருக்கும் விக்கிரகங்களுக்கு முன்னால் நின்று மன்னிப்புக் கோரி தம் குழந்தைகளுக்குத் தெய்வத்திடம் பாலூட்டச் செய்கின்றனர். அவர்களில் ஒருபகுதியாகத் தெய்வமாகும் தருணமது. அவ்வாறே தன் உடலின் ஒரு பகுதியாகவே மாறியிருக்கும் குற்றவுணர்வும் காமத்தின் முடிவில்லா ஊடாட்டத்திலிருந்தும் விலகி நிற்க தற்கொலை புரிந்து கொள்கிறான் அருள்குமரன்.

– அரவின்குமார்

By

Read More

பூரணம்

துங்கு அகழிக்குள்ளிருந்து தலையை உயர்த்திப் பார்த்தேன் என்றாள். காயக்காரர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கப்பல் அவளையொரு தனித் தீவில் கைவிட்டுவிட்டு தொலைவாகப் போய்க்கொண்டிருந்தது. முதுகிலேயோ தொடையிலேயோ எனக்கும் ஒரு வெடி பட்டிருந்தால் என்னையும் ஏற்றிச் சென்றிருப்பார்கள் என்று நினைத்தேன் என்றாள். ‘சின்னக்காயம் எண்டால் ஏத்த மாட்டார்கள்..’ ஒருத்திக்கு வயிறு பிளந்திருந்தது என்றாள். எட்டிப்பார்த்தால் ஆழ் கிணறு மாதிரி.. அதிஷ்டக்காரி, அழுது குழறாமலேயே ‘காயக்காரக் கப்பலில்’ இடம் பிடித்துவிட்டாள். இனி குண்டுச் சத்தங்களைக் கேட்க மாட்டாளென்று பொறாமையாய் இருந்தது என்றாள்.

வானத்தைப்போன்ற பிரமாண்டமான தகரக்கூரையில் இடி உரசுமாற்போல ஒரு ஷெல் கூவியபடி விழுந்து வெடித்தது என்றாள். ‘விஷ்க்.. விஷ்க்..’ சன்னங்கள் காற்றை ஓட்டையிட்டன. தலையை உள்ளே இழுத்துப் பதுங்கினேன் என்றாள். வெளியில் அவளுடைய தலைக்கறுப்பை கண்டால் கதிர் அண்ணன் கண்டபாட்டுக்குத் திட்டுவார். ‘உனக்குச் சாக விருப்பமெண்டால் சொல்லு, நாளைக்கே நான் ஏற்பாடு செய்யிறன்’

கதிர் அண்ணன் இயக்கத்தில் இருந்தார் என்றாள். பக்கத்திலிருந்த தரப்பாள் கொட்டிலில், அவரும் ஓர் ஊனமுற்ற பொறுப்பாளரும் தங்கியிருந்தார்கள். அவர்களுடைய ‘வோக்கி ரோக்கி’ இரைகிற சத்தம் கேட்டது. அகழிக்குள் சாக்கை விரித்துவிட்டு மல்லாந்து படுத்துக்கொண்டேன் என்றாள். எதிரில் அண்ணா உட்கார்ந்திருந்தார். அவருடைய இரண்டு பிள்ளைகளும் தொடையில் தலை வைத்து நித்திரையாகியிருந்தார்கள். அவர்களுடைய நெற்றியை தடவிக்கொண்டிருந்தார். முகம் தடித்து வீங்கிப்போயிருந்தது. அவர் ஒழுங்கான ஒரு நித்திரை கொண்டு கண்டதேயில்லை என்றாள்.

பதுங்கு அகழிக்குள் இருட்டு நுழைந்தது. கப்பல் இப்பொழுது ஒரு கறுப்புப் புள்ளியாயிருக்கக்கூடும். அதையே நினைத்துக்கொண்டிருந்தேன் என்றாள். ஓர் ஆட்டம் அசைவில்லாமல் அது போய்க்கொண்டிருந்தது. சின்னச் சின்ன நீர் மேடுகளாகத் தளும்பியபடி கடல் அமைதியாயிருந்தது. குழந்தைகள் வீரிடாமல் நித்திரை கொள்கிறார்கள். காயக்காரர்கள் முனகவில்லை. காற்று முகத்தை வருடுகிறது.

படீரென்று பக்கத்தில் வெடித்தது. பதுங்கு அகழியின் சுவர் உதிர்ந்து கொட்டுண்டுவதைப்போல உணர்ந்தேன் என்றாள். இருட்டுக்குள் விழிகளால் துளாவினாள். அண்ணா இன்னமும் உட்கார்ந்திருக்கிறார் போல. பதற்றமான பேச்சுக் குரல்கள் வெளியே நடந்துபோயின. ‘ஆமி மூவ் பண்ணினால் கதிர் அண்ணன் சொல்லுவார்’ என்ற நம்பிக்கை இருந்தது என்றாள். இரு தரப்பும் துவக்குச் சன்னங்களைப் பரிமாறிக்கொண்டார்கள். ஷெல்கள் இங்கிருந்து கூவிச்சென்று தொலைவில் வெடித்தன. காதுகளைப் பொத்திக்கொண்டேன். கடல் மட்டும் இரைந்தது என்றாள். அன்றிலிருந்து ஒன்பதாவது மாதத்தில் பூவரசன் பிறந்தான் என்று மேலும் கூறினாள்.

000

டுப்பிற்குள் அணைந்து நின்ற பூவரசனின் கழுத்தையும் முதுகையும் வைகறையின் விரல்கள் பரிவுடன் வருடின. அவளுடைய குரலில் தென்பட்ட தெளிவும் நிதானமும் திருப்தியாயிருந்தது. ஆறு வருடங்களுக்கு முன்னர், மெனிக்பாம் முகாமிலிருந்து முதற்தடவையாக மகப்பேறுக் ‘க்ளினிக்குக்கு’ சென்றபோது அங்கிருந்த தாதியின் அதட்டலான கேள்விகளுக்கு குனிந்த தலை நிமிராமல் அழுதுகொண்டிருந்ததை நினைத்தாள்.

“பதினேழு வயசுப் பெட்டைக்கு பிள்ளையைத் தந்தவன் யாரெண்டு தெரியேல்லையெண்டால் யாராவது நம்புவினமா? வீட்டுக்குத் தூரமில்லாமல்போய் எத்தினை நாளெண்டாவது கணக்கு வைச்சிருக்கிறியா”

வைகறை ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் கேவினாள். “அழாதை. இந்தா.. தண்ணியைக் குடி” தண்ணீர்ப் போத்தலைக் கை நீட்டி வாங்கி வாய் வைத்துக் குடித்தாள். சற்று முன்னர் “குழந்தையின்ர அப்பா வரேல்லையா” என்று கேட்டபோது இருந்ததைப்போல தாதியின் குரல் தணித்திருந்தது. அதற்கு வைகறை பதில் சொல்லவில்லை. தாதி “அப்பா இறந்திட்டாரா” என்று கேட்டாள்.

“இல்லை மிஸ் அப்பா யாரெண்டு தெரியாது”

வைகறைக்கு பதின்மூன்றோ பதின்நான்கு வயது நடந்துகொண்டிருந்தபோது பக்கத்துக் காணியிலிருந்த சிவந்தி அக்காவும் இதே பதிலைத்தான் சொன்னாள். அதுதான் ஞாபகத்தில் வந்திருக்கவேண்டும். சிவந்தி அக்கா திருமணம் செய்துகொள்ளாமலேயே ‘பிள்ளைத்தாச்சியாய்’ இருக்கிறாள் என்ற சேதியும் தகப்பன் யாரென்று தெரியாதாம் என்ற சேதியும் ஊர் முழுக்கப் பரவியிருந்தது. அவளை யாரும் நம்பவில்லை. ‘யாரையோ காப்பாற்றத்தான் இப்பிடிப் பொய் சொல்லுறாள்” என்று பேசித்திரிந்தார்கள். சிவந்தி அக்கா வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள்.

ஒரு நாள் ‘நல்ல தண்ணி’ அள்ளப் போனபோது அவளுடைய அப்பா ஒரு தும்புக் கட்டையால் பாம்பை அடிப்பதைப்போல அவளை அடித்துக்கொண்டிருந்ததை வைகறை கண்டாள். பூசாரிக்கு உரு வந்ததைப்போல அவருடைய முகம் விகாரமாயிருந்தது. “செத்துப்போ.. உயிரோடை இருக்காதை. செத்துப்போ..”

“அடிக்காதைங்கோ..” சிவந்தி அக்கா வயிற்றைப்பிடித்தபடி புழுதியில் பிரண்டு குழறினாள். தந்தை களைத்துப்போனவர்போல தொப் என்று உட்கார்ந்தார். “ஆரெண்டாவது சொல்லனடி. காலில விழுந்தெண்டாலும் கூட்டிக்கொண்டு வாறன்”

“எனக்குத் தெரியாது…” சிவந்தி அக்கா கத்தினாள்.

“எக்கேடு கெட்டும் நாசமாப் போ” என்று தும்புக்கட்டையைச் சுழட்டி எறிந்துவிட்டு அவர் படலையைத் திறந்துகொண்டு வெளியேறினார்.

வைகறை ஓடிச்சென்று சிவந்தி அக்காவைத் தூக்கி இருத்தினாள். “தண்ணி கொண்டு வரட்டா..” வாளியில் நீர்  இறைத்துக்கொண்டுவந்து கைகளில் கோலி வாயில் பருக்கினாள். சிவந்தி அக்கா அனுங்குகிற குரலில் “சத்தியமா எனக்கு இருட்டை மட்டும்தானடி தெரியும்” என்று முணுமுணுத்தாள்.

வைகறை இருட்டைச் சபித்தாள். இருளை, நிலவை, கடலை, கப்பலை, வெக்கையை, வியர்வை, ஒரு புளித்த நெடியை அனைத்தையும் சபித்தாள். கண்ணீர் மறுபடியும் வழிந்தது.

“அழாதை. தனியவா வந்தனி.. ” என்று தாதி கேட்டாள்.

“ம்..”

க்ளினிக்குக்கு வருவதற்கு யாருமிருக்கவில்லை. அவளுக்கு ஏழெட்டு நாட்களாகவே தலைச் சுற்று இருந்தது. மார்புக் காம்புகளில் ‘விண்’ என்ற நோவு. முகாமில் பக்கத்துக் கொட்டிலுக்குள் இருந்த ரமணி அக்காவிடம் கோடாலித் தைலம் வாங்கி நெற்றியிலும் மார்பிலும் பூசிக்கொண்டாள். புதுப்பழக்கமாக இரவுகளில் அடிக்கடி சலத்திற்குத் தூண்டியது. ஒரு பூனையைப்போல வெளியேறி வாசலின் ஓரத்தில் கழித்துவிட்டு மருமக்களோடு வந்து படுத்துக்கொண்டாள். ஒரு நாள் தொண்டைக்குள் புளிச்சலாக புரைத்துக்கொண்டு வந்து சத்தியாகிவிட்டது. வாசலிலேயே ஓங்காளித்தாள். ரமணி அக்கா ஓடிவந்து நெற்றியிலும் பிடரியிலும் கை வைத்துத் தலையைத் தாழ்த்தி “மிச்சத்தையும் எடு” என்றாள். அவள் “சாப்பாடு ஏதோ ஒத்துக்கொள்ளவில்லையாக்கும்” என்றபோதுதான் இரண்டு மாதங்களாக துடக்குத் தேதிகள் குழறுபடியாயிருப்பது உறைத்தது. நிலைகுலைந்து போனாள். அண்ணாவுக்கு மூச்சும் விடவில்லை.

முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறியபோது ‘ஆமிக்காரர்கள்’ அவளையும் அண்ணாவையும் பிள்ளைகளையும் ஒரே குடும்பமென்றே பதிவு செய்து கூடாரத்தை ஒதுக்கியிருந்தார்கள். மருமக்கட்பிள்ளைகளுக்கு நான்கும் மூன்றுமான வயதுகள். நிலவன் என்றும் இறைவன் என்றும் பெயர். வைகறையோடு நல்ல வாரப்பாடாயிருந்தார்கள். குளிக்க வார்க்கவும், கழுவவும், சோறு தீத்தவும் அவள்தான் வேண்டும் என்ற பிடிவாதத்திற்கு அண்ணனிடம் வாங்கிக்கட்டுவதும் உண்டு.

வைகறையின் அம்மாவை, அவளுக்கு நினைவு தெரிவதற்கு முன்னரேயே நோய் காவு கொண்டிருந்தது. அப்பாவிடம்தான் வளர்ந்தாள். அண்ணனை வேண்டுமென்றால் தன்பாட்டில் வளர்ந்தான் என்று சொல்லலாம். இவளைத் தாயில்லாக் குறை தெரியாமல் பார்த்துப் பார்த்து வளர்த்தார். பதின்மூன்று வயதில் பருவமெய்தி வீட்டிலிருந்த காலத்தில் அண்ணன், அவனுடைய இருபத்தியொராவது வயதில் திருமணம் செய்துகொண்டான். அவனும் அண்ணியும் ஊரைவிட்டு ஓடிப்போய் மூன்று மாதத்தின் பின்னரே திரும்பி வந்தார்கள். அண்ணி கர்ப்பமாயிருந்தாள். அக்காலத்திற்தான் நிர்மலா மாமி வீட்டிற்கு வந்தாள். அவளை அதற்கு முன்னரும் வழிகளில் கண்டிருந்தாலும் பழக்கமிருக்கவில்லை. நிர்மலா மாமி இவளைக் கண்டதும் மலர்ந்து சிரிப்பாள். சில நேரங்களில் சுண்டியதைப்போல முகம் சுருங்க பதைப்போடு ஒதுங்கி விலகுவாள். அவளைப் பார்க்கும்போது இன்னதெனத் தெரியாத ஓர் இஷ்டமும் நெருக்கமும் அதுபாட்டுக்கு உருவாகும். நல்ல செந்தளித்த முகம். அதில் பெரிய வட்டக் குங்குமப்பொட்டு.

நிர்மலா மாமி காலையில் பத்துமணிக்கெல்லாம் வந்துவிடுவாள். வந்ததும் பச்சை முட்டையைக் கடும்கோப்பியில் கலக்கியடித்துச் சுடசுடக் கொடுத்தால்  வைகறை அதை ‘அடிமுட்டக்’ குடிப்பாள். மதியத்தில் நல்லெண்ணையில் வதக்கிய கத்தரிக்காய் பொரியலும் கீரையும் பிசைந்த குழல் புட்டு. தன் கையாலேயே ஊட்டுவாள். வெயில் சாய பழங்களைக் கீலம் கீலமாக நறுக்கி சில்வர் தட்டில் அடுக்கி வைப்பாள்.. அவள்தான் ரமணிச்சந்திரனையும் லக்சுமியையும் வாசிக்கச் சொல்லிக் கொடுத்தாள். அவள்தாள் நப்கின்களைப் பயன்படுத்துவதை விளங்கப்படுத்தினாள்.

நிர்மலா மாமி இருக்கும்போது அப்பா ஒருநாளும் வீட்டிற்கு வருவதில்லை. அவர்கள் இருவரையும் ஒன்றாகக் கண்டதேயில்லை. ஏழோ எட்டு மாதத்திற்குப் பிறகு திடீரென்று ஒரு நாள் அப்பாவும் நிர்மலா மாமியும் மன்னாருக்குச் சென்றுவிட்டார்கள் என்று அறியநேர்ந்தபோது ‘அப்பா என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாம்.’ என்று வைகறை இரவு முழுவதும் அழுது புலம்பினாள். ‘அவளையும் கூட்டிக்கொண்டு வாங்க என்று நிர்மலா மாமியாவது அப்பாவிற்குச் சொல்லியிருக்கலாம்..’ என்று கோபப்பட்டாள்.

வைகறையை அண்ணன் தன்னுடன் அழைத்துச் சென்றான். அவன் “எங்கடை அப்பா செத்துப்போனார்” என்று சொன்னான்.  போன நாளிலிருந்தே ‘பிள்ளைப் பெத்திருந்த’ அண்ணிக்கு உதவி ஒத்தாசைக்கு ஓர் ஆள் தேவைப்பட்டிருந்ததைப்போல வைகறை முழு நாளும் மெனக்கெட்டாள். அண்ணிக்காரி ஒரு பொல்லாதவள்.. பகலெல்லாம் அவளும் அண்ணனும் ‘நாயே பேயே’ என்று சண்டை பிடித்தார்கள். தர்க்கம் பெருகப் பெருக அண்ணன் “கத்தாதை..” என்று உறுக்கியவாறே கிட்ட நெருங்குவான். அவளுடைய கன்னத்தில் ‘பளார்’ என்றொரு அறை விழும்வரைக்கும் பொறுத்துக்கொண்டிருந்தவள் போல பத்ரகாளியாகிவிடுவாள். அதற்குப் பிறகு அவளைச் சமாதானப்படுத்த முடியாது. “நக்கித் தின்னி, பொறுக்கி” என்றெல்லாம் அவளிடமிருந்து வசைச்சொற்கள் விழும். “மாதாவே. இதெல்லாத்தையும் பாத்துக்கொண்டிரும்” என்று ஓலமிடுவாள். பானைகளையும் சருவச் சட்டிகளையும் தூக்கி வீசுவாள். அண்ணன் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியேறியபிறகு வைகறையைப் பார்த்து “உன்ரை அண்ணரை எப்பிடி ஒரு பெட்டிப் பாம்பா அடக்கிறது எண்டு எனக்குத் தெரியுமடி” என்று வன்மத்தோடு சொல்வாள். பிறகு இரவு அமைதியாக நீளும். அண்ணி இரண்டாம் முறையாகவும் கர்ப்பமானாள்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் அண்ணி செத்துப்போனாள். அப்பொழுது கடைசிப்பெடியன் ஒரு ‘தவ்வல்’ குழந்தை, ஒரு வயதும் ஆகவில்லை. சாதாரண காய்ச்சல் என்று மாறி மாறி பனடோல் போட்டுக்கொண்டிருந்தவள் ஐந்தாவது நாள் ‘தஞ்சக்கேடாகி’ சுருண்டு விழுந்தாள். இரவே ஒரு மோட்டர்சைக்கிளை ‘ஹயருக்குப்’ பிடித்து நடுவில் இருத்திவைத்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றார்கள். நினைவு தப்பிவிட்டது. மூன்றாவது நாள் பிரேதமாகக் கொண்டுவந்தார்கள். அவளுடைய கால்மாட்டில் குந்தியிருந்து பெருவிரல்களைப் பொத்திப்பிடித்துக்கொண்டு அண்ணன் கதறியது கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. “நீங்கள் என்ரை அம்மாவெல்லோ..”

‘அண்ணனுக்கு எப்பிடிச் சொல்லுறது’ க்ளினிக்கில் வைகறையின் சிறுநீரைச் சோதித்து கர்ப்பத்தை உறுதிசெய்தபோது அவள் கூடாரத்திற்குத் திரும்ப மனமில்லாமல் புழுதிக்குள்ளேயே குந்தியிருந்தாள். காட்டு வெயிலில் உச்சி எரிந்தது. ஒரு மொட்டாக்குக் கூட போடத்தோன்றவில்லை. வயிற்றில் ஒரு சதைத் திரட்சி வளரத்தொடங்கியிருக்கிறது என்பதை சீரணிக்க முடியாமல் மூச்சுத் திணறியது. ‘நிர்மலா மாமி நெற்றியைத் தடவினால் ஆறுதலாயிருக்கும்’ என்று நினைத்தாள். யாரிடம் சொல்வதென்று ஒன்றும் தோன்றவில்லை. ‘விசாரணையில நானொரு இயக்கப்பெட்டையெண்டு பிடிச்சுக்கொண்டுபோய் பிடரியில சுட்டால் நல்லது..’ என்று யோசிக்கவே பெரிய ஆசுவாசமாயிருந்தது. அவ்வாறான வீடியோக் காட்சிகள் வெளியாகியிருக்கின்றன என்று முகாமில் பேசிக்கொண்டார்கள். ‘ஆமிக் கொமாண்டர் பல்லை நெருமிக் கொண்டு வயித்தில உதைஞ்சால் எவ்வளவு ஆறுதல்…’

வைகறை கிரமமாக இராணுவ விசாரணைகளுக்குப் போய் வரவேண்டியிருந்தது. அவள் ஓர் இயக்க உறுப்பினர் அல்ல என்பதை அவர்கள் பிடிவாதமாக நம்ப மறுத்தார்கள். “பொய் சொல்ல வேணாம், ஒரு நாள் புலியில இருந்தாலும் சொல்லிடணும்” என்று திரும்பத் திரும்ப வற்புறுத்தினார்கள். ஒரு தடித்த ஆமிக்காரி வைகறையின் உடலில் ஆயுதப்பயிற்சியின் தளும்புகளைத் தேடிக் களைத்தாள். “ஏன் உன்னை புலிகள் பிடிச்சிட்டுப் போகல” என்று சந்தேகத்துடன் கேட்டாள். “உன் வீட்டில அண்ணா தம்பி யாராவது இயக்கத்தில இருந்தாங்களா”

“இல்லை.. எனக்கு அவங்களைக் கண்ணிலயும் காட்டக்கூடாது” என்று வைகறை தீர்மானமாகச் சொன்னாள். அவள் ‘கதிர் அண்ணையைத்’ தவிர என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். அவளுக்குக் கதிர் அண்ணை என்றால் காணும். அவனில் நல்ல விருப்பம். மாத்தளனிற்கு வந்து கைவிடப்பட்டிருந்த கூடாரமொன்றிற்குள் நுழைந்தபோதுதான் முதன்முதலாக அவனைக் கண்டாள். பக்கத்துக் கூடாரத்தில் சக்கர நாற்காலியிலிருந்த பொறுப்பாளரின் முகத்தை துணியை ஈரத்தில் பிழிந்து துடைத்துக் கொண்டிருந்தான். பார்த்தவுடனேயே போராளி என்று புரிந்தது.

“அண்ணையாக்கள், இந்தக் கொட்டிலில வேற யாரும் இருக்கினமோ”

கதிர் அண்ணை நிமிர்ந்து அவர்களைப் பார்த்தான். பிறகு சாதாரணமான குரலில் “இருந்தவை. நேற்றுத்தான் செத்திருக்கவேணும்” என்றுவிட்டு அலுவலில் மூழ்கினான். வைகறைக்கு விறுக் என்று கோபம் வந்தது. ‘இப்பிடியா பதில் சொல்லுற’ முகத்தைத் திருப்பிக்கொண்டாள். கூடாரத்தின் பிளாஸ்ரிக் தரப்பாள் கத்தியால் குதறியதைப்போல கிழிந்து தொங்கினாலும் உள்ளே பதுங்கு அகழி நல்ல நிலையில் இருந்தது. சாக்குகளிலும் சேலையை வெட்டித் தைத்த பைகளிலும் நிரப்பிய மண் மூட்டைகளால் நன்றாகக் காப்புச் செய்யப்பட்டிருந்தது. அங்கேயே தங்கிக்கொள்வதென்று முடிவு செய்தார்கள்.

கதிர் அண்ணையையும் அந்தப் பொறுப்பாளரையும் தினமும் ஒருமுறையென்றாலும் சந்தித்துப்பேச போராளிகள் வந்தார்கள். அவர்கள் வருவதையும் போவதையும் ‘பராக்குப்’ பார்த்தபடிதான் வைகறை பொழுதைப் போக்கினாள். கதிர் அண்ணையிடம் மீறாத ஓர் ஒழுங்குமுறையும் நிதானமும் இருந்தது. ஷெல்கள் வெடித்துக் கரும்புகை அடங்கிய இரண்டாவது நிமிடத்தில் அவன் பச்சைத் தண்ணீரால் முகத்தை ஒத்தியெடுத்துவிட்டு ‘உப்’ என்று கன்னத்தை ஊதிச் சவரம் செய்தபடியிருப்பதைக் காணலாம். இரண்டொரு நாட்களிலேயே அவன் மருமக்கட்பிள்ளைகளுக்கு பிஸ்கற்றுக்களைத் தருவது சூசியம் தருவது வாழைப்பழம் தருவது என ஒரு பரஸ்பர அறிதல் உருவாகியிருந்தது.

ஒருநாள் வைகறை இறைவனுக்கு ரொட்டியைக் கிழித்துத் தீத்திக்கொண்டிருந்தாள். பச்சை மிளகாயை நறுக்கி வெறும் கோதுமை மாவில் பிசைந்து மண்ணெண்ணெய்த் தகர மூடியில் வாட்டிய ரொட்டி. எதிரில் கதிர் அண்ணை இளைப்பாறுவதைப்போன்ற ஒரு தோரணையில் உட்கார்ந்திருந்தான். அவனுடைய கையில் ஒரு சிறிய புத்தகமிருந்தது. விரல்கள் அலைச்சலோடு தாள்களைப் புரட்டுவதும் நிறுத்திவிட்டு வேறெங்கோ வெறிப்பதுவும் ஓரக்கண்ணால் இவளைப் பார்ப்பதுமாக இருந்தான். அது புதியதொரு அந்தரமாக இருந்தது. வைகறை சட்டையில் ஏதாவது கிழிசல் இருக்கின்றதா என்று தன்னியல்பாகத் தடவிப்பார்த்தாள். அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். ரொட்டியின் கடைசித் துண்டை இறைவனின் வாயில் ஊட்டிவிட்டு எழுந்தபோது கதிர் அண்ணையின் குரல் கேட்டது.

“பசிக்குது. ஒரு ரொட்டி சாப்பிடுங்கோ எண்டு என்னைக் கேட்க மாட்டியா..”

அவள் விருட்டென்று அடுப்புக்கு ஓடினாள். ஒரு துண்டு ரொட்டி கூட மிச்சமிருக்கவில்லை.

ஷெல்கள் விழுந்து வெடிக்கும்போது மட்டுமல்ல, அரிதிலும் அரிதாக ஒரு சுடுகாட்டின் அமைதி நிலவும்போதுகூட கதிர் அண்ணை, வைகறையை வெளியில் திரிய அனுமதிப்பதில்லை. “உள்ளை போய் இரு” என்று விரட்டுவான். அவளை இயக்கம் பிடித்துக்கொண்டு போய்விடக்கூடாதென்பதில் அவனுக்கு உள்ளூர ஒரு விருப்பம் இருந்திருக்கவேண்டும். ஒருநாள் “இஞ்சை வா” என்று கூப்பிட்டான். கையில் ஒரு சீருடைப் போராளியின் புகைப்படம் இருந்தது. அதைக் கொடுத்தான். “இவன் இப்ப உயிரோடை இல்லை. பெயர் பேராளன். ஊர் தேராவில். உன்னை எவளாவது இயக்கத்துக்கு வரச்சொன்னால் இதைக் காட்டி அண்ணை மாவீரர் எண்டு சொல்லு. உண்மையைக் கண்டுபிடிக்க மூண்டு நாளாவது ஆகும். அதுக்குள்ளை ஒரு அதிசயம் நடக்காமலா போய்விடும்.”

இன்னொருநாள் மூன்று கற்களின் இடுக்கில் எரிந்த அடுப்பில் குறிப்புப் புத்தகங்களையும் புகைப்படங்களையும் கிழித்துக் கிழித்து எரித்துக்கொண்டிருந்தான். தீயின் செம்மையில் உக்கிரமாயிருந்த அவனுடைய முகத்தை இதற்குமுன்னர் வைகறை ஒருபோதும் கண்டதில்லை. ஓடிப்போய் அவனிடமிருந்து அவற்றைப் பறித்தாள். “கதிர் அண்ணை, இது மொக்கு வேலை”

அவன் “கொண்டு வா..” என்று கத்தினான். மிரண்டுபோய்க் கொடுத்தாள்.

“நீங்கள் வைச்சிருக்கேலாது எண்டால் படங்களை என்னட்டைத் தாங்கோ. நான் வைச்சிருக்கிறன்”

“வேணுமோ” எழுமாற்றாக ஒரு படத்தை உருவி நீட்டிவிட்டு சட்டென்று திருப்பியெடுத்தான். “இதில யூனிபோமில நிக்கிறன். இது வேண்டாம்” இன்னும் இரண்டொரு படங்களை விலக்கி விலக்கித் தேடினான். “இந்தா இதை வைச்சிரு”

அந்தப் புகைப்படத்தில் கதிர் அண்ணையும் ஒரு முதிய பெண்ணும் நின்றிருந்தார்கள். அவள் சீத்தைத் துணியிலான பூப்போட்ட கைலியைச் சுற்றிக்கொண்டு மேலே வெள்ளைச் சட்டை அணிந்திருந்தாள். முகத்தில் சுருக்கங்கள் விழுந்திருந்தன. பழுப்பு நிற கல் பதித்த மூக்குத்தி அணிந்திருந்தாள். கண்கள் ஒளிர்ந்து சிரித்தன. கதிர் அண்ணை அவளுடைய தோளைக் கட்டிப்பிடித்தவாறு தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து நின்றான். சற்றுமுன்னர் அவளை முத்தமிட்டிருக்கவேண்டும். சாரமும் முழங்கை வரை மடித்துவிடப்பட்ட பச்சைச் சேட்டும் அணிந்திருந்தான்.

“நான் லீவில போய் நிண்ட நேரம் எடுத்தது. பத்து வருசத்துக்குப் பிறகு பிறந்த ஒரேயொரு முத்தெண்டு பூரணக் கிழவி என்னில அப்பிடியொரு பாசம்.  ம்.. இப்ப இந்தக் கடற்கரையிலதான் எங்கையாவது திரியும்”

கதிர் அண்ணையைக் கடைசியாகக் கண்ட நாளில்தான் மாத்தளன் கடலிற்குக் காயமடைந்தவர்களை ஏற்றுவதற்காகக் கப்பல் வந்திருந்தது. கடற்கரையில் சனங்கள் முண்டியடித்தார்கள். திடீரென்று முடிவெடுத்ததைப்போல அண்ணன் பிள்ளைகளை இழுத்துக்கொண்டு கடற்கரைக்குப் புறப்பட்டான். “யாருடைய காலில விழுந்தெண்டாலும் இவங்களை ஏத்திக்கொண்டு போகப்போறன். நீ தனியச் சமாளிப்பாய்தானே” என்றபோது வைகறைக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மௌனமாக நின்றாள். ஆனால் அவனால் அப்படியெல்லாம் வெளியேற முடியாதென்று நினைத்தாள். அதுவொரு ஆசுவாசமாக அவளைத் திருப்திப்படுத்தியது.

அண்ணன் இரண்டு பைகளை மட்டுமே எடுத்துக்கொண்டான். நிலவனும் இறைவனும் அவனுடைய விரல்களைப் பிடித்து நடப்பதற்குப் பின்னடித்தார்கள். இவளைத் திரும்பி திரும்பிப் பார்த்தார்கள். “வாறியளா.. இல்லாட்டி விட்டுட்டுப் போகவா” கத்தினான். வைகறை அவர்களுக்குக் கையசைத்தாள். வெளியில் வந்து நின்றாள். சனக்கூட்டம் திணறுப்பட்டது. ‘இயக்கத்தோடு சண்டை பிடிக்கினம்போல’

மேலதிக சிகிச்சைக்காக யாரையெல்லாம் திருகோணமலைக்கு அனுமதிப்பது என்பதில் இயக்கத்திடம் ஓர் அளவுகோல் இருந்தது. காயத்தின் தீவிரத்திற்கும், மருத்துவர்களின் பரிந்துரைக்கும் அப்பாலும் கடும்போக்கைக் கடைப்பிடித்தார்கள். ‘கதிர் அண்ணை நினைச்சால் என்னையும் அனுப்பலாமா’ என்று வைகறை யோசித்தாள். ‘ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லியாவது அனுப்பலாம்..’ திரும்பிப் பார்த்தாள். அவனுடைய கூடாரம் வெறுமையாய் இருந்தது.

திடீரென்று கடற்கரை அமளிப்பட்டது. சனங்கள் கடலை நோக்கித் திரண்டு ஓடினார்கள். அவர்களிற்கும் இயக்கத்திற்கும் வாய்த்தர்க்கம் முற்றியிருக்கவேண்டும். கூச்சலாயிருந்தது. வைகறை நிலவனுக்காகவும் இறைவனுக்காகவும் வருத்தப்பட்டாள். ‘படீர்’ என்று ஒரு துப்பாக்கி வெடித்தது. தொடர்ந்து மூன்று அழுத்தமான வெடிகள் கடலை உதைப்பதைப்போல கேட்டன. சனக்கூட்டம் கத்திக்கொண்டு நாற்புறமும் சிதறியது. அண்ணன் பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தான். “மேல் வெடி வைச்சுச் சனத்தைத் துரத்திறாங்கள். கதிர்தான் சுட்டவன்” என்றான்.

சற்றுக்கழித்து கதிர் அண்ணையைத் துப்பாக்கியோடு கண்டாள். இவளைக் காணாததைப்போல நடந்துபோனான். ‘என்ர காலுக்குக் கீழயும் இவர் ரெண்டு வெடி வைச்சால் அடுத்த முறை கப்பல் வரேக்கை இந்த நரகத்தை விட்டுப் போகலாம்’ என்று யோசித்தாள். ‘நிலவனையும் இறைவனையும் அண்ணன் தனியச் சமாளிப்பார்தானே’

கதிர் அண்ணை அன்றைக்கு இரவு கூடாரத்தில் தங்கினானா தெரியவில்லை. மறுநாள் மதியம்போல செத்துப்போய்விட்டான். விமானத் தாக்குதலில் ஸ்தலத்திலேயே பலி. ஒரு முன்பள்ளிக் கட்டிடத்தில் வெறும் ஏழெட்டுப்பேரோடு அஞ்சலி நடந்தது.  கேள்விப்பட்டபோது வைகறைக்கு உடம்பு நடுங்கத்தொடங்கிற்று. அழுதபடி ஓடினாள். கதிர் அண்ணைக்கு எந்த இடத்தில் காயமென்று தெரியவில்லை. ஒரு காட்போட் பெட்டிக்குள் சாதாரண ஆடையில் வளர்த்தியிருந்தார்கள். காலையில் சவரம் செய்த முகத்தில் மொய்த்த இலையான்களை ஒரு சிறுவன் விசிறியபடியிருந்தான். வைகறை நிற்கத் திராணியற்று அவனுடைய தலைமாட்டில் உட்கார்ந்தாள். சருமச் சுருக்கங்கள் நிரம்பிய முகத்தில், ஒளி வற்றிய கண்களைக்கொண்ட ஒரு கிழவியை அவள் சுற்றுமுற்றும் தேடினாள். அந்த முதிய பெண்ணின் ஒப்பாரிப்பாடல் கதிர் அண்ணைக்கு ஆறுதலாயிருக்குமென்று நினைத்தாள்.

இந்த நரக நிலத்திலிருந்து தன்னை வெளியேற்றும் வல்லபம் கதிர் அண்ணைக்கு உண்டு என்ற நம்பிக்கை வைகறைக்கு இருந்திருக்க வேண்டும். அவன் நினைத்திருந்தால் கப்பலிலோ, ஏதேனும் கள்ளப்பாதையிலோ அனுப்பி வைத்திருக்க முடியும். அவனைப் பெட்டியோடு தூக்கி உழவு இயந்திரப்பெட்டியில் ஏற்றினார்கள். அழுகை வெடித்தது. வாயைப்பொத்தி அடக்கினாள். கடமுட என்று சப்தமெழுப்பியபடி உழவு இயந்திரம் நகர்ந்தது. கூடாரத்திற்குத் திரும்பினாள். வானம் கரு நீல நிறமாகியிருந்தது.

வைகறைக்கு சாப்பிடப் பிடிக்கவில்லை. பதுங்கு அகழிக்குள் இறங்கினாள். அண்ணன் பிள்ளைகளின் முதுகில் தட்டித் தூங்க வைத்துக்கொண்டிருந்தான். காற்றை உறிஞ்சியெடுத்துவிட்டதைப்போல புளுக்கமாக இருந்தது. அகழிக்கு மேலேறிப் படுக்கலாமா என்று யோசித்தாள். பயமாயிருந்தது. அண்ணன் பிள்ளைகளை தொடையிலிருந்து இறக்கிவிட்டு கால்களை நீட்டி அகழிச்சுவரில் சாய்ந்தான். அவனுடைய கண்கள் வழமைபோல மேலே நிலைகுத்தின. இரவு எட்டு எட்டரை இருக்கலாம். மயான அமைதி. இந்நேரங்களில் கதிர் அண்ணையின் ‘வோக்கி’ இரைகிற சத்தத்தைக் கேட்டாலே தெம்பாயிருக்கும். தொலைதூரத்தில் ஒரு பஞ்சப்பட்ட துப்பாக்கியிலிருந்து ஒன்றோ இரண்டு சத்தங்கள் அவ்வப்போது கேட்டன. ஆறாவது கூடாரத்தில் ஒரு குழந்தை வீரிட்டு அழுதது. இந்த இருட்டையும் அமைதியையும் பற்றிப்பிடித்தபடி ஒரு கள்ளப்பாதையால் யாரேனும் வெளியேறிக்கொண்டிருக்கக்கூடும். அந்த நிழல் உருவில்  பொறாமைப்பட்டாள். இரவுக்குக் காலில் வெடிபட்டதைப்போல ஊர்ந்தது. வைகறை நேரத்தைப் போக்காட்ட அலைகளைக் கூர்ந்து கேட்க முயற்சித்தாள். ‘ஸ்ஸ்’ என்ற இரைச்சல் ஒவ்வொருமுறையும் பெருகி பொலபொலவென்று உடைந்து பின்வாங்கியது. ‘சண்டை முடிஞ்சதும் நிர்மலா மாமியைத் தேடிக் கண்டுபிடிக்கவேணும்.’ என்று தோன்றியது. அண்ணனுக்குத் தெரிந்தால் காலை அடித்து முறிப்பான். அவன் நிர்மலா மாமியைத் திட்டித் தீர்க்காத ஒரு வசைச்சொல் இல்லை. ‘அண்ணனும் பாவம்தான்.’

அப்பாவும் நிர்மலா மாமியும் ஓடிப்போன பிறகு “உங்கட அப்பா ஏன் இப்பிடிச் செய்தவர்” என்று ஊரார் அவனைத்தான் துக்கம் விசாரித்தார்கள். நிர்மலா மாமியின் கணவர் மூக்குமுட்டக் குடித்துவிட்டுவந்து வீட்டு முற்றத்தில் நின்று தூஷணத்தில் கத்தினார். அண்ணன் பதிலுக்கு ஒரு வார்த்தையும் திருப்பிச் சொன்னதில்லை. நிறைய அவமானப்பட்டான். நிறையக் கவலைப்பட்டான். பள்ளிக்கூடத்தில் ஒரு பெடியன் வைகறைக்குக் கடிதம் கொடுத்தபோது முதலில் அண்ணனுடைய பரிதாபமான முகம்தான் ஞாபகத்தில் வந்தது. அந்தப் பெடியனுக்கு மேல் வரிசையில் தெத்துப்பல். சாடையான வாக்குக் கண். பார்க்க வேணும்போல இருக்கிற முகம். ‘உன் மௌனம் அழகுதான். எனினும் உதிரும் ஓரிரு வார்த்தைகளுக்காகக் காத்திருக்கிறேன்’ என்று கடிதத்தில் எழுதியிருந்தான். அவனுக்குக் கடைசிவரையும் பதில் சொல்லவில்லை. ஆனாலும் அவன் கொஞ்சம் தாமதித்து வந்தாலும் தவிப்பாயிருந்தது. வேறு பெண்களைப் பார்த்தாலே எரிச்சலாயிருந்தது. வைகறை பாதி உறக்கத்தில் ஒரு புன்னகையை வரைந்தாள். சவப்பெட்டி அளவிலான ஓர் இருள்கட்டி அவளை மூடிக்கொள்வதைப் போலிருந்தது. ‘குப்’ என்ற புளித்த வாடையை முகர்ந்தாள். ‘கள்ளப்பாதையால் யாரோ வெளியில போகினம் போல’ என்ற நினைவோடியது. அலை உடைந்து பின்வாங்கிய பிறகு இரைச்சலே இல்லை. ‘கடல் வத்தி நிலமாச்சுதெண்டால் நடந்தே போயிடலாம்..’ இளஞ்சூடுடைய அவளுடைய தட்டையான வயிற்றில் இருட்டின் சொரசொரப்பான விரல்கள் அவசரமாகப் பதிந்து அழுத்தின. வெகு தொலைவில் பஞ்சப்பட்ட அந்தத் துப்பாக்கி ‘டுப்’ என்று தன்னுடைய கடைசிச் சன்னத்தையும் துப்பியது. ‘சண்டை முடிஞ்சிட்டுது போல.. சனங்களை இனி வெளிய விடுவினம்..’ ஒரு மூச்சுக்காற்று தேகமெங்கும் அலைந்து திரிந்தது. வியர்த்தது. களைத்தாள். ஆறாவது கூடாரத்திலிருந்து வீரிட்ட குழந்தை அழுகையை நிறுத்தியிருந்தது. யாரோ அதனைத் தூங்கச் செய்திருந்தார்கள்.

000

காலையில் நிலவனின் வீரிட்ட குரலில்தான் கண்விழித்தேன் என்றாள். அவனுடைய பிஞ்சுக் கால்களின் கீழே அண்ணன் காய்ந்த சுள்ளித்தடியால் விளாச குழந்தை பதைத்துப் பதைத்துக் குழறியது. ஓடிச்சென்று அவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டேன் என்றாள். “ஏன் அடிக்கிறியள்” என்று கேட்கவில்லை. அண்ணனும் எதுவும் சொல்லவில்லை. அவனுடைய நேர்ப்பார்வையைக் காணக்கூடாதென்று பிரயத்தனமெடுத்தாள். பெரும்பாலும் நாள் முழுவதும் நின்றுகொண்டேயிருந்தேன் என்றாள்.

மேலும் இரண்டொரு நாட்களுக்குச் சிறுநீர் கழிக்க இயலவேயில்லை என்றும் கூறினாள்.

000

மெனிக்பாம் முகாமின் நீளக் கூடாரத்தின் பிளாஸ்ரிக் தடுப்பிற்கு அப்பால் ரமணி அக்காவும் மூன்று பிள்ளைகளும் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். வைகறை ஒரு நாளின் முக்கால்வாசி நேரமும் அவர்களுடனேயே இருந்தாள். அவள் இரண்டு தடவைகள் க்ளினிக்கிற்கு இரகசியமாகச் சென்று வந்தாள். இரண்டாம் முறை “என்னெண்டு தெரியேல்லையக்கா, ஒரே உடம்பு தஞ்சக்கேடா இருக்கு” என்று சொன்னாள். ரமணி அக்காவை நிமிர்ந்து பார்க்கவும் தயக்கமாயிருந்தது. கண்களின் அலைச்சலும் உத்தரிப்பும் காட்டிக்கொடுத்துவிடும் என்று பயந்தாள். திடீரென்று ‘இவவுக்குச் சொல்லுவமோ’ என்று நினைத்தாள். ரமணி அக்கா முதற்கேள்வியாக ‘யாரடி..’ என்று கேட்பாள். ‘தெரியாது’ என்று சொன்னால் ‘நீயெல்லாம் ஒரு பொம்பிளையோ” என்று திட்டுவாள். அவளுடைய மூத்த பெண்ணுக்கு பன்னிரெண்டு வயது நடந்துகொண்டிருந்தது. ‘இங்கு வருவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொள்ளவேண்டும்’ என்று வைகறை முடிவு செய்தாள். ஆனால் இயலவில்லை. அண்ணனுடைய கூடாரத்தில் ஒரு நிமிஷம் கூட அவளால் காலூன்ற முடியவில்லை. அவனோடு பேச்சுக் குறைந்து இல்லாமலேயே போய்விட்டது. நிலவனிலும் இறைவனிலும் காரணமின்றி எரிச்சல்பட்டாள். துடிக்கத் துடிக்க அவர்களுடைய தொடைச் சதையில் கடிக்க வேண்டும்போல ஒருமுறை தோன்றியது. திடுக்கிட்டுப்போனாள். பிறகு வருந்தினாள்.

“என்னடி ஒரு மாதிரி இருக்கிறாய்” என்று ரமணி அக்கா இரண்டொரு தடவைகள்  விசாரித்தாள். வைகறை மூன்றாவது க்ளினிக்கிற்குப் போவதற்கு முதல்நாள், அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு “என்ன எண்டாலும் என்னை நம்பிச் சொல்லு..” என்று நேரடியாகவே கேட்டாள்.

வைகறைக்கு பொசுக் என்றெல்லாம் கண்ணீர் முட்டவில்லை. “சுகமில்லாமல் இருக்கிறன். நாளைக்கு மூண்டாவது க்ளினிக்” என்று இறுகிய குரலில் சொன்னாள்.

“பிள்ளையள்.. வெளிய போயிருந்து விளையாடுங்க” ரமணி அக்காவின் பிள்ளைகள் கூய் என்றவாறு வெளியே ஓடினார்கள். அவள் வைகறையின் விரல்களை ஒவ்வொன்றாக நீவிவிட்டாள். “நான் மூண்டு பிள்ளையளிட அம்மா. என்னையே இந்த நாய்கள் பார்த்த பார்வையும் கேட்ட கேள்வியும் நினைச்சாலே வயித்தைப் பிரட்டும். ஆமிக்காரங்கள் உன்னைத் தனியவா விசாரிச்சவங்கள்?”

வைகறை தலையைக் குனிந்துகொண்டிருந்தாள். செத்துப்போன தாயே திரும்பி வந்துகேட்டாலும் வாயைத் திறப்பதில்லை என்றொரு ஓர்மம் வளர்ந்து கொண்டிருந்தது. நிர்மலா மாமி புட்டுத் தீத்தியபடியே “அது யார் பிள்ளை” என்று கேட்கிறாள். வைகறை அவளுடைய கையை விறுக் என்று தட்டிவிட்டு எழுந்து போகிறாள். “யாரடி அது” என்று கேட்கின்ற சிவந்தி அக்காவை கண்களில் ஏளனம் கொப்பளிக்கப் பார்க்கிறாள். “யாரம்மா..” அப்பா கேட்கிறார். அழுகை வருகிறது. உதடுகளைத் தைத்துக் கொள்கிறாள்.

ரமணி அக்கா வற்புறுத்தவில்லை. அடுத்தநாள் க்ளினிக்கிற்கு வைகறையோடு புறப்பட்டுவிட்டாள். “தெரிஞ்ச பிள்ளைதான்” என்று தன்னை அறிமுகப்படுத்தினாள். தாதி ‘இந்தக் காலத்துப் பிள்ளைகள்..’ என்று எதையோ இழுக்கவும் அதை மறித்து “காதலிச்சுத்தான் கல்யாணம் கட்டினவள். என்ன செய்ய.. கடவுளின்ரை அனுக்கிரகம் இல்லை” என்று துயரத்தோடு சொன்னாள். வைகறை அவளைச் சரேலென்று திரும்பிப் பார்த்தாள்.

தாதி கண்களைச் சுருக்கினாள். “அதைத்தான் நானும் கேட்டனான். இவ தெரியாதெண்டு சொன்னா” என்றாள்.

“புருசன் இயக்கத்தில இருந்தவர் எண்டதை எப்பிடி எல்லாரிட்டையும் சொல்லுறது.. எந்தப் புத்தில எந்தப் பாம்பு இருக்குமோ..”

அதற்குப் பிறகு தாதி எதுவும் பேசவில்லை. பரிசோதனைகளை முடித்து இயல்பாக இருக்கிறது என்றாள். சில சத்துக் குளிகைகளை வழங்கினாள். க்ளினிக்கிற்கான அடுத்த திகதியைக் குறித்துக் கொடுத்தாள். வரும் வழியில் “ஏன் அப்பிடிச் சொன்னீங்கள்” என்று வைகறை ரமணி அக்காவைக் கேட்கவில்லை. ‘அப்படிச் சொன்னதுக்கு நன்றி சொல்லுவமோ’ என்று தோன்றியது. பிறகு அதையும் சொல்லவில்லை. எதையுமே பேசாமலிருக்க அந்தரமாயுமிருந்தது. ரமணி அக்கா அதை சொற்ப நேரத்திற்கு உடைத்தாள். “என்ர மூண்டாவது பெட்டையின்ரை முப்பத்தொண்டுக்குத் தகப்பன் இல்லை. முதலே செத்திட்டார். ஆனா அவளை யாரும்  பதில் தெரியாத ஒரு கேள்வியைக் கேட்டு அவமானப்படுத்த ஏலாது. உன்ர வயித்தில தங்கியிருக்கிறது சிங்களமோ என்னவோ, அது ஒரு மனிச உயிர். யாராலும் நக்கலடிக்க ஏலாத ஒரு மனுசப்பிறப்பா நாளைக்கு அது நடந்து திரியவேணும் என்று நான் நினைச்சன். பிழையெண்டால் இப்பவே அதைக் கொலை செய்”

முதுகு வடத்திலிருந்து எதையோ பிடுங்கி எடுக்கிற மாதிரி சுளீர் என்றது. வைகறை போன வேகத்தில் உடுப்புக்களை அடைந்திருந்த இரண்டு பைகளையும் கொட்டிக்கிளறி அடியில் கிடந்த கதிர் அண்ணையின் படத்தை எடுத்தாள். தேகம் நடுங்கியது. விறுவிறென்று முகாமிலிருந்த ஒபிஸிற்குப் போனாள். கொமான்டரைச் சந்திக்க வேண்டும் என்றாள்.

“சேர்.. நான் இப்ப கர்ப்பமா இருக்கிறன். இவர்தான் என்ரை கணவர். இயக்கத்தில இருந்தவர். நாங்கள் கலியாணம் கட்டி ஆறு மாசம்தான் ஆகியிருந்தது. பிளேனடியில செத்திட்டார். இதை நான் முதலில் பயத்தில சொல்லவில்லை. மன்னிக்க வேணும்” படபடவென்று ஒப்புவித்தாள். உடம்பின் நடுக்கம் குறைந்தது போலிருந்தது. கொமான்டர் விபரங்களை எழுதித் தரச்சொல்லி தாளை நீட்டினான். கதிர் அண்ணையும் பூரணக் கிழவியும் கட்டிப்பிடித்தபடி நின்ற படத்தை தரச்சொல்லி வாங்கிக்கொண்டான்.

ஐந்தாவது நாள் பூரணக் கிழவியோடு ஆமிக் கொமான்டர் கூடாரத்திற்கு வந்தான்.

000

பூரணக் கிழவி ஒரு மாம்பழம் வதங்கியதைப்போல சுருங்கியிருந்தாள் என்றாள். அவளுக்குக் கூன் விழுந்திருந்தது. பழுப்பு நிறக் கல் பதித்த மூக்குத்தியைக் காணவில்லை. அவளுடைய கண்கள் மட்டும் மின்னின என்றாள். அருகிலேயே நின்ற கொமான்டர் “ஒங்க மாமி பூரணத்தை நான் கண்டுபிடிச்சிக் கொண்டு வந்திருக்கிறது” என்று சிரித்தான். தலை விறைத்தது என்றாள். கொமான்டர் “மருமகளிட்ட போங்க” என்றான். கிழவி அந்தச் சொல்லிற்காகக் காத்திருந்தவளைப்போல ஓடிவந்து தோளை இறுக்கிக் கட்டிப்பிடித்தாள். அவளுக்குப் பூஞ்சையான பாரமற்ற தேகம். ஒரு குழந்தைப்பிள்ளையைத் தாங்கிக்கொள்வதைப் போலிருந்தது. கைகளால் முகத்தை ஏந்தி மாறி மாறிக் கொஞ்சத் தொடங்கினாள். கன்னத்தில் பதிந்த ஈரத்தை இலேசான அருவருப்புடன் துடைத்தேன் என்றாள். கிழவிக்குக் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது. விம்மினாள். “வம்சம் அழியாமல் காத்த என்ர ஆத்தை” என்று காதுக்குள் முணுமுணுத்தாள். நொய்ந்த மார்போடு கட்டியணைத்தாள். சரேலென்று மண்டியிட்டு உட்கார்ந்தாள். கண்ணீர் வழிகிற முகத்தை நிமிர்த்தி ஆசையோடு பார்த்தாள் என்றாள்.

000

கிழவி நடுங்குகிற விரல்களால் வைகறையின் இளஞ்சூடான வயிற்றைத் தொட்டுத் தவிப்போடு தடவினாள். “என்ரை முத்தான முத்து வளர்கின்ற மூலமே” என்ற பெருங்குரல் உடைந்து காட்டு வெக்கையில் வழிந்தது. பூரணம் சின்னதாக மேடிட்ட அந்த வயிற்றைக் கையெடுத்துக் கும்பிடலானாள்.

By

Read More

புலம்பெயர் தமிழர்கள் ஓர் அரசியல் சக்தியே கிடையாது

மகால ஈழ எழுத்தாளர்களுள் சயந்தன் குறிப்பிடத்தகுந்தவர். ”ஆறாவடு” நாவலின் மூலம் வெகுவாக அறியப்பட்ட இவரின் இரண்டாவது நாவலான “ஆதிரை“ (தமிழினி பதிப்பகம்)  ஈழப்படைப்புக்களில் முக்கியமான வருகை. நாவல்களை மட்டுமல்லாது சிறுகதைகளையும் எழுதும் சயந்தனின் மிக அண்மைய சிறுகதையான “பூரணம்” விவாதத்திற்கு உள்ளானது. ஆதிரை என்கிற பெயரில் பதிப்பகம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். இப்போது தன்னுடைய மூன்றாவது நாவல் எழுதும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

நேர்கண்டவர்: அகரமுதல்வன்

நாம் மீண்டும் மீண்டும் தமிழ் (தமிழக) அறிவுலகச் சூழலை மட்டுமே சுழன்று வருவதாக எனக்குத் தோன்றுகிறது. புலம்பெயர்ந்து நீங்கள் வசித்துவரும் நாட்டின் அறிவார்ந்த தரப்பினரோடு உங்களுக்கு கலைவழித் தொடர்புகள் ஏதேனும் உண்டா? உங்களுடைய ‘ஆதிரை’ நாவலை அந்த நாட்டு மொழியில் மொழிபெயர்க்கலாம் அல்லவா?

மொழி ஒரு முதல் சிக்கல். ஆங்கிலப் பரிச்சயம் இருந்தது. ஆனால் ஜெர்மன், பிரெஞ்சு மொழிகள் அவ்வாறல்ல. அவற்றைக் காதால்கூட முன்னர் கேட்டதில்லை. அதனாலேயே அவற்றில் நுழைய நிறையச் சிரமம் இருந்தது. அதிலும் புலம்பெயர்ந்தவுடனேயே எதிர்கொள்கின்ற தஞ்சக் கோரிக்கை இழுபறிகள், வேலைப்பளு, அசட்டை போன்றவற்றாலும் மொழியில் ஆழமாகக் காலூன்ற முடியவில்லை. அன்றாடச் சீவியத்திற்குப் போதுமான அளவிலேயே ஜெர்மன் மொழியை அறிந்து வைத்திருக்கிறேன். அதிலும் வாசிப்பென்பது இலவசப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளைப் படிப்பதோடு முடிந்து விடுகிறது. ஜெர்மனிய இலக்கியம், ஜெர்மனிய எழுத்தாளர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. இந்தத் ‘தெரியாமை’ தனியே இலக்கியத்திற்கு மட்டுமென்றில்லை. புலம்பெயர்ந்த நாட்டின் சமூக, அரசியல் விவகாரங்களில்கூட எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. இங்கே நடைபெறுகிற ஒரு கூட்டாட்சி அரச தேர்தலை விடவும் இலங்கையிலும், இந்தியாவிலும் நடைபெறுகிற உள்ளூராட்சித் தேர்தலில் ஆர்வமாயிருக்கிறேன். இலங்கையாவது நான் பிறந்து வளர்ந்த நாடு. இந்தியத் தேர்தலை எதற்காகக் கவனிக்கிறேன் என்பது இன்னமும் புரியவில்லை. இவ்வாறாகத்தான் புலம்பெயர்ந்த முதல் தலைமுறையில் பெரும்பாலானவர்கள் வாழ்கிறார்கள்.

இலக்கியத்தில் நாங்கள் தமிழகச் சூழலைச் சுற்றி வருகிறோம் என்கிறீர்கள். ஒரு கவனிப்பு உள்ளதென்பது உண்மைதான். அது எழுத்திற்கா அல்லது ‘ஈழத்தமிழருக்கா’ என்பதை உரையாடிக் கண்டடைய வேண்டியிருக்கிறது. 2009இற்குப் பிறகு ‘இரக்கத்துக்கு உரியவர்கள்’ என்ற பரிவின் கீழ் ஈழ எழுத்துக்கள் தமிழகத்தில் கவனிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. ஆனால் இலக்கியத்திற்கு கறாரான மதிப்பீடுகள் அவசியம் என்று நான் கருதுகிறேன். இன்றைக்கு நாம் வியக்கின்ற இலக்கியங்களை அவ்வாறான மதிப்பீடுகளின் வழியேதான் கண்டடைந்தோம். மதிப்பீடுகளின் கடுமையை ‘பாவப்பட்ட சனங்கள்’ என்று கருதித் தணிக்க வேண்டியதில்லை. பாவப்பட்ட சனமாயிருப்பதை நான் ஒருபோதும் விரும்பவில்லை. இதேவேளை தமிழகத்திற்குள் நுழைந்துதான் பின்னர் அதற்கு வெளியே போகவேண்டிய ‘கள நிலவரத்தை’யும் பதிவு செய்கிறேன். ஷோபா சக்தியை எனக்கு சாரு நிவேதாதான் கோணல் பக்கங்களில் அறிமுகம் செய்தார். தமிழ்நதியை பிரபஞ்சன் அடையாளம் காட்டினார். தமிழகம் வியந்த பிறகே ஈழம் தன்னுடைய பிள்ளைகளைக் கவனிக்கிறது என்பது என்னுடைய ‘மனப்பிராந்தியாக’ இருந்தால் அது எனக்கு மகிழ்ச்சியே. 

ஆதிரை மொழிபெயர்ப்பு பற்றிக் கேட்டிருந்தீர்கள். அது ஆறாவடுவுக்கு நிகழ்ந்திருக்கிறது. ஒரு தற்செயல் நிகழ்வாக. எவெலின் மாசிலாமணி என்பவர் தமிழிலிருந்து ஜெர்மனுக்கு மொழியாக்கம் செய்பவர். சுவிற்செர்லாந்தைச் சேர்ந்தவர். காத்தவராயன் கூத்திலிருந்து ஜெயமோகன் வரை மொழியாக்கம் செய்துள்ளார். அவர் ஆறாவடுவை மொழிபெயர்க்க முன்வந்தார். இரண்டு ஆண்டுகளாக மொழிபெயர்ப்பு வேலைகள் நடந்தன. ஒவ்வொரு வாரமும் அவரைச் சந்தித்தேன். கீழைத்தேய பகைப்புலத்தை மேற்கிற்குத் தருவதில் எழுகிற சிக்கல்களையெல்லாம் அனுபவித்தேன். இறுதியில் என்னால் வாசித்துப் புரிந்துகொள்ள முடியாத ஆனால் என்னுடைய பிரதியை கைகளில் வைத்துப் பார்க்கின்ற அனுபவம் அலாதியாகத்தான் இருந்தது. இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாக வேண்டியது. கோவிட் 19 சற்றுத் தள்ளிவைக்கக் கூடும். ஆறாவடு ஜெர்மனில் வெளியான பிறகு ஆதிரையை மொழிபெயர்ப்பதற்கான வாய்ப்புகள் கூடும் என்பது என்னுடைய நம்பிக்கை.

ஈழப் படைப்பாளிகளின் சமகால இலக்கியத்தில் ‘ஆதிரை’ நாவலும் மிக முக்கியமானது. அந்த நாவலை எழுதிய காலங்களில் நினைவுகளின் வழியாக தாயகத்திற்கு மீளத்திரும்பும் வாதையை கண்டிப்பாக அனுபவித்து இருப்பீர்கள். ஒரு புலம்பெயர் படைப்பாளியாக அந்த வாதை இரத்தத்தை காயப்பண்ணும் அளவிற்கு கொடூரமானது. எப்படியான உணர்வுகளும் கொந்தளிப்புகளும் உள வீழ்ச்சிகளும் அந்த நாட்களில் இருந்தன?

ஈழப்போரில் என்னுடைய குற்ற உணர்ச்சியே ஆதிரை நாவல். கடைசி நாட்களில் ‘கைவிடப்பட்ட சனங்கள் யார்’ என்ற கேள்வி என்னில் குமுறியபடியே இருந்தது. அதுவோர் எரிமலைக் கொதிநிலை. எல்லோருக்குமான விடுதலைப்போரின் இறுதிமுடிவில் அதன் வெம்மையை, கருகிய எரிவை, இரத்த வெடுக்கை ‘ஏழைகளும் நலிந்தோரும்’ மட்டுமே அனுபவிக்க நேர்ந்ததை ஒரு தற்செயல் நிகழ்வென்று சமாதானமாக இயலவில்லை. சமூக, பொருளாதார படிநிலைகள் ‘போருக்குள் விளையாடிய’ உண்மை அறைந்து கொண்டேயிருந்தது. குரூரமாகப் பல் இளித்தது. இறுதி யுத்தத்தில் அகப்பட்டவர்களில் இந்திய வம்சாவழியினரான மலையக மக்கள் நாற்பது வீதத்தினர் என்று புள்ளிவிபரம் சொல்கிறது. அட்டை உறிஞ்சிய பிறகு மீந்த இரத்தத்தை தமிழீழ விடுதலைக்காக எங்களுடைய நிலங்களில் அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் பாய்ச்சியதை அரசியலிலும், இலக்கியத்திலும் யாரும் கவனப்படுத்தவில்லை என்பதை ‘தவறுதலாக நிகழ்ந்துவிட்டது’ என்றா கூறமுடியும். இல்லை. விடுதலையின் முழுமையான ‘கிரெடிட்’ஐ தன்னுடையது என்று சொல்ல ஆசைப்பட்ட ஒரு சமூக மனநிலையே இதற்குக் காரணம். இது குற்றம் சுமத்தப்பட வேண்டிய மனநிலை. இது கேலி செய்யப்பட வேண்டிய மனநிலை. தாழாக் குற்ற உணர்வும், ஆயிரம் கேள்விகளும், சுய கேலியுமே ஆதிரை ஆனது. ஆதிரையை ஒரு புலம்பெயர்ந்த மனோநிலையோடு நான் எழுதவில்லை. அது எழுதப்படுகின்ற போதே மூன்று தடவைகள் அந்த நிலங்களுக்குச் சென்றிருந்தேன். கதை மாந்தரோடு பேசியிருக்கிறேன். அவ்வாறு ‘விடுப்புக்’ கேட்பதுவே குற்ற உணர்வு மிகுந்த அனுபவம்.

ஆதிரையை நிறைவு செய்யும்போது என்னைப் பீடித்திருந்த குற்ற உணர்ச்சியிலிருந்து வெளியேறுவேன் என்று நினைத்திருந்த போதும், ‘குருதிச்சேறில் நனைந்திருந்த கழுத்திலிருந்து ஆதிரை சயனைட் குப்பியை இழுத்தாள்’ என்ற இறுதி வரியை எழுதி முடித்தபோது முப்பது ஆண்டுகளாக என்னோடிருந்த சனங்களை மறுபடியும் கைவிட்டு வந்த உணர்வே என்னை ஆட்கொண்டது.   

புலம்பெயர்ந்து வாழும் சனங்களிடையே கடுமையான சாதிய மனோபாவங்கள் தலையெடுப்பதாக அறிய முடிகிறது. தாயகத்திலும் தான். மேற்கத்திய கலாச்சாரச் சூழலோடு தம்மை இணைத்துக் கொண்டாலும் இவ்வாறான சாதியை மனநோயை விட்டு ஏன் விலக மறுக்கிறார்கள்? உங்களுடைய அனுபவத்தில் இதனை எவ்வாறு எண்ணுகிறீர்கள்?

நிலத்தை மாற்றிக் கொள்வதால் தமிழ்ச்சமூக மனதில் முற்போக்கான மாற்றங்கள் ஏற்படுமென எதிர்பார்ப்பது வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான் என்பதைப் போன்றது. இரண்டாயிரம் வருடங்களாக நிலங்களையும், மதங்களையும், பண்பாட்டு மாற்றங்களையும் சந்தித்து வந்தபோதும் ஒரு சின்னக் கீறு தன்னும் படாமல் காவி வந்த சாதிய மனோபாவத்தை ஒரு புலம்பெயர்வு அழித்து விடாது. தாய் நிலத்தில் சாதி என்ன நிலவரத்தில் உள்ளதோ அதேதான் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உண்டு. அதை சாதி மேற்கத்திய வெர்சன் 2.0 என்று பெயரிடலாம். சக மனிதர்களிடம் ஒரு சமூக அதிகாரப் படிநிலையை அனிச்சையாக உணரும் சாதிய மனோநிலையோடு இங்கு நிறைய மனிதர்கள் உலாவுகிறார்கள். இதற்காக வெட்கித்து, குற்ற உணர்வு கொண்டு இதிலிருந்து வெளியேற சமூக அறிவை வளர்த்துக் கொள்ளும் கூர்மையையும் அவர்களிடம் நான் காணவில்லை. பெரியாரை உள்ளே அனுமதிக்காதே.. அம்பேத்கரை வெளியே அனுப்பு. தலித்தியத்தை எதற்காக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்ற கூச்சல்கள்தான் அதிகமாயிருக்கின்றன. ஒரு தர்க்கத்திற்காக தேசியம் என்ற எண்ணக்கருவை மேற்கில் இருந்துதான் பெற்றோம் என்று வாதாடினால்… வாதாடி என்ன ஆகப்போகிறது.. அடுத்த கேள்வியைக் கேளுங்கள்.. 

தமிழ் தேசியம் தொடர்பான உங்களுடைய நிலைப்பாடு என்ன? அதனை நீங்கள் எவ்வாறு புரிந்து கொள்கிறீர்கள்?

ஓர் அடையாள அரசியலாகவே தமிழ் தேசியத்தை உள்வாங்கினேன். எந்த அடையாளத்தின் பொருட்டு தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தால் ஒடுக்கு முறைக்கு உள்ளானார்களோ அதே அடையாளத்தை ஒரு கூட்டுச்சக்தியாக, கூட்டு எதிர்ப்பாக முன்வைக்க வேண்டியிருந்தது. இன்றைக்கும் அதைச் சார்ந்தே நிற்கின்றேன். அதற்குள் நின்றே பின்வருவனவற்றைப் பேசுகின்றேன். இங்கே தமிழ் தேசியத்தையும் பழைய ஆண்ட பரம்பரைக் கனவுகளையும் ‘ஒண்டடி மண்டடியாகக்’ குழப்பிக்கொள்வோரே அநேகம். அடக்குமுறைக்கு எதிராக ஆதிக்க உணர்வால் போராட முடியாது. நான் ஒடுக்குமுறைக்கு எதிரான திரள் வடிவம் என்ற வகையிலேதான் தலித்தியம், பெண்ணியம் போன்ற அரசியல் சிந்தனைகளையும் புரிந்து கொள்கிறேன். அவற்றைக் ‘கருவியாகப்’ பயன்படுத்துகிற தரப்புக்களில் கேள்விகள் உண்டு. உதாரணமாக 2010இல் ஈழ வடபுலத்தில் தலித்தியச் சிந்தனைகளுக்கூடாக மக்களைத் திரட்டி மகிந்த ராஜபக்சவுக்கு ஓட்டுச் சேர்க்க முயற்சித்தார்கள். அவர்களுக்கு புலி வெறுப்பின் உச்சத்தில் அதற்கொரு வடிகாலாக மகிந்த ஆதரவு இருந்ததேயன்றி வேறு காரணங்கள் இருக்கவில்லை. இப்படியானவர்களில் சந்தேகங்கள் உண்டே தவிர தலித்தியச் சிந்தனைகளில் ஒரு சிறு சந்தேகமும் இல்லை. இவை தமிழ் தேசியத்தின் சமாந்தரமான பயணிகள். ஒன்றுக்கொன்று நட்பு முரணோடு இயங்க வேண்டியவை. ஆனால் தமிழ் தேசிய இனத்திற்குள் நடக்கின்ற சமூக, பால், வர்க்க அசமத்துவங்களில் தமிழ் தேசியம் கள்ள மௌனம் சாதிக்கின்றது. மௌனத்தினால், உள்ளிருக்கும் ஒடுக்குமுறையாளர்களின் பக்கத்தில் நிற்கிறது. அது ஒடுக்கப்பட்டவர்களுடைய அருகில் ஓர்மத்தோடு குரல் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த ஆசையை தேசியத்தைக் குலைக்க நினைக்கும் சதி என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஒரு பொது எதிரிக்கு முன்னால் இவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்கிறார்கள்..

தமிழ் தேசியமும் தலித்தியமும் சமாந்தரமான பயணிகள் என்றேன். அவற்றை எதிர் எதிர் துருவங்களுக்குத் தள்ளிவிடும் சக்திகளில் அவதானத்தோடு இருக்க வேண்டும். ‘ஈழத்தின்’ தமிழ் தேசியப் பயணத்தில் எல்லோருடைய வியர்வையும் உண்டு. எல்லோருடைய இரத்தமும் உண்டு. ஒருநாளைக்கு தமிழ் தேசியப் பலம் ‘தீர்வை’ கண்டடைகிற போது அது எல்லோருக்கும் உரியது.. இந்நிலையில் முன்னரே ‘தரப்புகளை’ வெளியேற்றுவது தமிழ் தேசியத்தின் ‘உள்ளிருக்கும் மேலாதிக்க மனநிலைக்கே’ சார்பாகி விடும். கவனம் தேவை.  

தமிழ்தேசியம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு துணையாக நிற்கவில்லை என நீங்கள் கூறுகிறீர்கள். அப்படி பொத்தாம் பொதுவாக வரையறை செய்யமுடியாதென கருதுகிறேன். தேசியம் என்பதே முழு ஜனநாயகமும்,சமத்துவமும் கொண்டதுதான். ஈழத்தில் இருக்கும் தமிழ் தேசியமானது ஆக்கிரமிப்பிற்கு எதிரானது. நீங்கள் இப்போதிருக்கும் (புலிகளுக்கு பின்னரான காலம்)  தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் தேசிய அமைப்பாக கருதி இந்த முடிவுக்கு வந்திருக்கிறீர்களா?

தேசிய எண்ணக்கரு ஜனநாயகத்தை உள்ளடக்கியது. அதனால்தான் தமிழ்ச் சூழலில் அநேகம் பேருக்கு தேசியம் புரிவதேயில்லை என்கிறேன். நம்மில் பலர் தமிழ் தேசியம் என்பதை சிங்கள ஆமியைச் சுடுவது என்றே புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று நான் சொல்வதுண்டு. ஈழத்தில் தமிழ் தேசியம் ஆக்கிரமிப்பிற்கு எதிரானது என்கிறீர்கள். ஆம். அது சிங்கள பேரினவாதச் சிந்தனைக்கு எதிராக தூலமான முறையில் போராடியிருக்கிறது. எதிர்த்து நின்றிருக்கிறது. நன்று. ஆனால் தனக்குள் நிகழும், சமூக, பால், வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியிருக்கிறதா.. குரல் உயர்த்தியிருக்கிறதா.. மகளிர் தின நிகழ்வுகளையும் மே தின நிகழ்வுகளையும் சான்றாகச் சொல்லாதீர்கள்.. அவை வெறும் சடங்குகளாகி நாளாகிவிட்டன. சென்ற வருடம் வடபுலத்தில் வரணியில் ஒரு கோவிலில் வெளிப்படையாக சாதி அடிப்படையில் ஒரு பிரச்சனை வெடித்தது. தாழ்த்தப்பட்டோர் தேர் இழுக்கக்கூடாதென்று இயந்திரத்தை வைத்து இழுத்தார்கள். இது செய்தியாகிய போது தமிழ் தேசியக் குரல்கள் ஓர் அலையாக நியாயம் பேசவில்லை. அப்போது தமிழ் தேசியம் யாருடைய குரல் என்று சந்தேகம் எழுமல்லவா… அல்லது யாருக்கோ அச்சப்படுகிற குரல் என்று தோன்றுமல்லவா.. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை மட்டும் முன்வைத்து இதைப் பேசவில்லை, மொத்த சமூக வெளியையும் அவதானிக்கிறேன். புலிகளுக்குப் பிறகான பத்தாண்டுகளில் தமிழ்த்தேசியம் தன்னை முற்போக்காக வெளிப்படுத்தவேயில்லை. அவ்வாறானால் புலிகளுடைய காலம் எப்படியிருந்ததென்று ஒரு கேள்வி உருவாகும். சாதிக்கெதிரான ஒரு கருத்தியல் அறிவூட்டலை புலிகள் முன்னெடுக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதில் அவர்கள் வேண்டுமென்றே தங்களுடைய அதிகாரத்தை மட்டுப்படுத்திக் கொண்டார்கள் என்று புலப்படுகிறது. ஆயினும் சாதிய வன்முறைகளை, சாதிய ஒடுக்குமுறைகளை அவர்கள் கடும் குற்றங்களாக சட்டத்தில் பிரகடனப்படுத்தியிருந்தார்கள். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அவை முன்னரே குற்றச்செயல்கள் என்றாலும்கூட புலிகள் அதை மிகத்தீவிரமாக அணுகினார்கள். மேற்சொன்னதைப் போன்ற தேர் இழுப்பதில் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை புலிகளுடைய காலத்தில் வேறு மாதிரியே தீர்ந்திருக்கும். அது ஒடுக்கப்பட்டவர்களுடைய தரப்பில் பெறுமதியானது. இந்த ‘பெறுமதி’ என்ற வார்த்தையைக் குறித்துக் கொள்ளுங்கள். இன்னொன்று புலிகளுடைய காலத்தில் தலித்திய அரசியலுக்கு எதிரான ‘கேலிக் குரல்கள்’ தமிழ் தேசியப் பரப்பிலிருந்து வெளிப்பட வாய்ப்பே இல்லை. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு முற்போக்குத் தமிழ்  தேசியம் பற்றிய சிந்தனைகள் எனக்கு இருந்தன. உள்ளிருக்கும் அசமத்துவங்களுக்கு எதிரான போக்குடைய ஒரு தமிழ் தேசியக் கனவு அது. இருக்கின்ற தமிழ் தேசியத்திலிருந்து இன, பால், சமூக, வர்க்க ஒடுக்குமுறைக் கருத்துக்களை வெளியேற்றுகிற வேலைத் திட்டங்களை யோசித்திருக்கிறேன். எதுவானாலும் இறுதியில் அயர்ச்சியே எஞ்சுகிறது. 

ஈழப்போராட்டம் இன்றைக்கு சந்தித்திருக்கும் ஜனநாயக வழியிலான அணுகுமுறைகளும் தேக்கம் அடைந்து இருக்கின்றன. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் சடங்கியல் ரீதியாகவும், உணர்வெழுச்சி புகை மூட்டத்திற்குள்ளும் நீதிக்கான அறிவார்ந்த அரசியல் போராட்டத்தின் கொதிநிலை இன்று  தணிந்து போய்விட்டது போல தோன்றுகிறதே?

ஈழப்போரில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதி காலம் தொட்டே கொடையாளர் பாத்திரம்தான் உண்டு. இதை என்னுடைய பதிநான்கு வருட புலம்பெயர் வாழ்வின் அனுபவத்தில் சொல்கிறேன். ஒரு காலத்தில் புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுடைய கூட்டுச் சிந்தனையை ஓர் அரசியல் திரளான சக்தியாக்கி சர்வதேச அரசியலில் செல்வாக்குச் செலுத்தமுடியுமென்று நம்பியிருந்தேன். அது நான் புலம்பெயர்ந்திருந்த ஆரம்பக் காலங்கள். அதனால் ‘உருளுதாம்… புரளுதாம்..’ போன்ற நம்பிக்கைகள் எனக்கிருந்தன. நாடு கடந்த அரசு பற்றிய எண்ணக்கருவை வியந்திருக்கிறேன். அது செயல் வடிவம் பெற்ற சில ஆண்டுகளிலேயே ‘சிரிப்புக் கம்பனி’ ஆகிவிட்டது. என்னுடைய ஒரு நண்பர் அண்மையில் கீழ்வருமாறு சொன்னார். ‘புலம்பெயர்ந்த சனங்கள் தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளோடு உறவுகளை ஏற்படுத்தி அங்கிருக்கின்ற அரசியல்வாதிகளோடு ‘லொபி’ வேலைத்திட்டங்களைச் செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் அவர்கள் இலங்கையில் இருக்கின்ற சுமந்திரனோடும், கஜேந்திரகுமாரோடும் ‘லொபி’ செய்து கொண்டிருக்கிறார்கள்’ உண்மைதான். புலம் பெயர்ந்த தமிழர்கள் ஓர் அரசியல் சக்தியே கிடையாது. கேள்வியில் குறிப்பிட்டதைப்போல நினைவுச் சடங்குகளையே அவர்களால் செய்ய இயலும். இதை ஒரு குற்றச்சாட்டாக நான் கூறவில்லை.

உங்களுடைய மூன்றாவது நாவலை எழுதி வருகிறீர்கள். புலம்பெயர்ந்து வாழும் நிலத்தின் கதையை எழுதுவதாக நீங்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். மிக முக்கியமான நகர்வாக நான் இதனைக் கருதுகிறேன். ஒரு படைப்பாளி அவனுடைய ‘அலைந்துழல்’ ஜீவிதத்தில் ‘அகதி’  நிலையில் இருந்து எழுதும் புனைவாக அதனை நான் எதிர்பார்க்கிறேன். வெளிவரவிருக்கும் நாவல் குறித்து  பகிர்ந்து கொள்ளுங்களேன்?

வாழும் நிலத்தின் கதையென்று சொல்ல மாட்டேன். ஆனால் கதை வாழும் நிலத்தில் நிகழ்கிறது. தொடக்கத்தில் குண்டுச் சத்தங்களும் துப்பாக்கி வேட்டுக்களும் கேட்காத ஒரு நாவல் என்று தீர்மானித்திருந்தபோதும் முடிவில் அது நிராசையாகத்தான் முடிந்தது. முதலாவது நாவலான ஆறாவடு, செய்திகளின் தொகுப்பு என்றொரு விமர்சனம் இருந்தது. அது பகுதியளவிற்கு உண்மையானது. வரலாற்றுச் செய்திகளே அதில் பெருமளவுக்குக் கதையாகவும் நிகழ்ந்தது. ஆதிரையில் வரலாறு மேடையின் பின்திரைச் சேலை போல் இருந்தது. புதிய நாவலில் வரலாற்றைச் சொல்லும் இலக்கிய நாட்டத்திலிருந்து விலகியிருக்கிறேன். மிகுதியை நாவல் வெளியானதும் நீங்களே சொல்லுங்கள்.   

ஈழத்தின் இலக்கிய விமர்சனத்துறையானது, க.சிவத்தம்பி, க.கைலாசபதி போன்றவர்களுக்கு பின்னால் நிகழ மறுத்துவிட்டதன் காரணமாக எதனைக் கருதுகிறீர்கள்? இப்போது வெளிவரும் பெயரளவிலான விமர்சனங்கள் கடுந்தனிமனித வெறுப்புகளை மட்டுமே கொண்டிருப்பதை நீங்கள் உணர்கிறீர்களா?

விமர்சனத்துறை என்றில்லை, புதிய கோட்பாட்டுச் சிந்தனைகள், புதிய மொழிபெயர்ப்புக்கள் எதுவுமே ஈழத்தில் இப்போது நிகழ்வதில்லை. தமிழகம் இது விடயத்தில் ஆச்சரியப்பட வைக்கின்றது. எம்மிடம் அப்படியொரு பாரம்பரியம் இல்லை. இன்றைக்கும் ஆறுமுகநாவலரைக் கேள்விக்கு உட்படுத்தினால் சைவமும் தமிழும் என்ற லேபிளுக்குக் கீழ் அவரை ஒளித்துவைக்கிற கல்விதான் நமக்குப் புகட்டப்பட்டிருக்கிறது. க.சிவத்தம்பி, க.கைலாசபதி காலங்களில் பல்கலைக்கழகங்களுக்கும் சமூகத்திற்குமான ‘போக்குவரவு’ சிறப்பாயிருந்தது. இலக்கிய சமூக அரசியல் விவகாரங்களில் அது சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தியது. உரையாடல்களை சமூகத்தில் நிகழ்த்தியது. இன்றைக்கு பல்கலைக்கழகம் அதிலிருந்து வெளியேறி விட்டது. சமூகத்திற்கும் அதற்கும் இப்போது கிலோ மீற்றர் கணக்கில் இடைவெளி உண்டு. ஆக, இவற்றையெல்லாம் வெளியிலிருந்துதான் மறுபடியும் முதலேயிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஈழச்சூழலில் தற்காலத்தில் அனோஜன் பாலகிருஷ்ணன், தர்மு பிரசாத் போன்றவர்கள் இலக்கிய மதிப்பீட்டாளர்களாக நம்பிக்கை அளிக்கிறார்கள். மற்றபடி தனி மனித வெறுப்பினால், விருப்பினால் வந்து கொண்டிருக்கும் ‘நறுக்குகள்’ வேறு திணைக்களத்தைச் சேர்ந்தவை. அவை நிலைத்தகவல் வகையானவை. எப்போதாவது இன்றைய நாளின் ஞாபகத்தில் வரக்கூடியவை. பின்னர் அமிழ்ந்து விடுபவை.     

பொதுவாக ஈழத்தமிழர் மீதான பரிவினால் மட்டுமே சில ஈழப்பிரதிகளுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு இருப்பதாக சில பிரதிவாதங்கள் உண்டு. அப்படியான பிரதிகளுக்கு ‘கழிவிரக்க பிரதி’யென சிலர் பெயர் சூட்டியும் இருக்கிறார்கள். என்னளவில் இது கண்மூடித்தனமான வாதம். உங்களுடைய ஆதிரை நாவலுக்கு தமிழகத்தின் இந்துத்தமிழ் பத்திரிக்கை வழங்கிய விருதையும் இவ்வாறு கருதமுடியுமா? இப்படியான வாதங்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

முதலாவது கேள்வியில் இலக்கிய மதிப்பீட்டில் கறார் தன்மை அவசியமென்று சொன்னேன். எல்லா எழுத்துக்களுக்கும் கடுமையான முதலாவது மதிப்பீட்டாளர் எழுதியவரே என்பது என்னுடைய நம்பிக்கை. நான் எழுதிய எல்லா எழுத்துக்களையும் நீங்கள் படிக்கவில்லை என்பதற்கான காரணம் ஒரு மதிப்பீட்டாளராக அவற்றை நான் வெட்டி வீசி எறிந்திருக்கிறேன் என்பதுவே. ஆகவே வெளியிலிருந்து வருகிற மதிப்பீடுகளின் ‘உண்மையான இடத்தை’ எழுதுபவரால் உள்ளுணர முடியும். அதனாலேயே சில ஈழப்பிரதிகள் ‘பாவம் பார்க்கப்பட்ட’ எழுத்துக்களாக அணுகப்படுகின்றனவோ என்ற சம்சயம் எனக்கு உண்டு. 2009இற்கு முன்னர் இப்படி நடக்கவில்லை என்பதை ஆதாரமாக வைத்தே இதைப் பேசுகிறேன். இதைப்பற்றி தமிழகத்தின் விமர்சகர்கள், மதிப்பீட்டாளர்கள் எல்லோருடனும் திறந்த உரையாடல் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இந்துவுடைய விருது குறித்துக் கேட்டீர்கள். வெளியிலிருந்து வருகின்ற மதிப்பீடுகளின் உண்மைத்தன்மையை எழுதியவரே முதலில் அறிவார் என்று முதலில் சொல்லியிருக்கிறேன். இதைக் கேளுங்கள். சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தைச் சேர்ந்த கலகம் அமைப்பினர் என்னுடைய ‘பெயரற்றது’ கதைத்தொகுப்பிற்கு ‘சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான’ விருதுச் செய்தியை அனுப்பியிருந்தார்கள். அதைப் பணிவன்புடன் மறுத்திருக்கிறேன். ஆதிரைக்கும் பெயரற்றதுக்குமான என்னுடைய சொந்த மதிப்பீடுகளே ஒன்றைப் பெறவும் இன்னொன்றை மறுக்கவும் செய்தன.

செவ்வியல் தன்மை வாய்ந்த படைப்புக்களை எழுதவல்ல இடத்திற்கு ஈழத்தமிழ் இலக்கியம் இன்றைக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்று கருதுகிறேன்.இனிவரும் பத்து ஆண்டுகளுக்குள் அது நிகழுமென நம்பிக்கை இருக்கிறது. உங்களுடைய அனுமானம் என்னவாக இருக்கிறது?

எழுத்து ஒரு தவம் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஆனால் அது நிறைய உழைப்பைக் கோருகிறது. உலகம் வேகமாகி விட்டது. அந்த வேகம் எல்லாவற்றிலும் பாதிப்பைச் செலுத்துகிறது. பத்து வரியில் ஒரு நிலைத்தகவலை எழுதி அடுத்த அரை மணிநேரத்தில் ஐம்பது விருப்புக்குறிகளைப் பெறுவதற்கு மனித மனம் விரும்புகிறது. எழுத்தை முன் வைப்பதற்குப் பதிலாக பெயரை அடையாளமாக்குவதும், பெயருக்கு விசிறிகளைப் பெறுவதும் ஒரு நுட்பமாக மேற்கொள்ளப்படுகிறது. பிறகு எதை எழுதினாலும் உள்வாங்கப்படுமென்று நம்பப்படுகிறது. இவ்வாறான குறுக்குப் பாதைகளுக்கூடாக செவ்வியல் இலக்கியங்களை யோசித்துப் பார்க்கவே எனக்குக் கண் வேர்க்கிறது. இருப்பினும் இந்தக் கேள்வியை  நேர்மறையாக நிறைவு செய்வதற்காக செவ்வியல் படைப்புகள் வராது என்று சொல்லவில்லை. வந்தால் நன்றாயிருக்குமென்று கூறுகிறேன்.

‘கண் வேர்க்கிறது’ என்கிற உங்கள் பதிலில் இருக்கும் அங்கதத் தொனியை நான் விளங்கிக்கொள்கிறேன். செவ்வியல் இலக்கியங்கள் பற்றிய உங்களுடைய கருதுகோள் என்ன?

அது காலத்தினில் நிற்க வேண்டும்.!

தொடக்கத்தில் சிறுகதையாளராக இருந்து நாவல்களுக்குள் வந்தவர் நீங்கள், இப்போது மீண்டும் சிறுகதை எழுதுகிறீர்கள். சிறுகதை, நாவலென இவ்விரு  கலைகளுக்கும் அதனுடைய வடிவ உள்ளீடுகள் சார்ந்தும்  அமைப்புகள் சார்ந்துமே நிறைய வேறுபாடுகள் உண்டு. எதனை நீங்கள் உங்களுடைய நெருக்கமான கலையாக கருதுகிறீர்கள்?

என்னுடைய வருகை நாவல் ஊடாகவே நிகழ்ந்தது. அதற்கு முன்னர் எழுதியவற்றை எழுதப் பழகிய கதைகள் எனலாம். நாவல்தான் எனக்கு வசப்பட்ட கலை. அதில்தான் நிதானத்தையும் சுதந்திரத்தையும் உணர்கிறேன். சிறுகதை கைக்குள் திமிறுகிற ஓர் உயிரியைப்போல இருக்கிறது. நான் எழுதியவற்றில் ஒரு நான்கை நல்ல சிறுகதைகளென்று சொல்லலாம். ஒரு முறை நண்பர் சசீவன், கையில் ஒரு குறுங்கத்தியோடு அலையும் மனோநிலையில் ஒரு சிறுகதையை எழுதிவிடலாம் என்று குறிப்பிட்டார். அதனாலேயோ என்னவோ அந்த வடிவம் கை வருவதே இல்லை. ஒரு கத்தியை எனக்கு ஒழுங்காகப் பிடிக்கக்கூடத் தெரியாது.  

மழுப்பல்கள் வேண்டாம் சயந்தன். கண்ணை மூடிக்கொண்டு சொல்லுங்கள். இன்றைய இளம் எழுத்தாளர்களில் உங்களுக்கு நம்பிக்கைத் தரக்கூடியவர்களாக யார் யாரை அடையாளப்படுத்த விரும்புகிறீர்கள் ?

கண்ணைத் திறந்துகொண்டே சொல்கிறேன். யதார்த்தன், சுசித்திரா, கார்த்திக் பாலசுப்ரமணியன், சுரேஷ் பிரதீப், அனோஜன் என்று தொடரலாம். இவர்களுடைய ஒரு கதையாவது ‘அட இதை நான் எழுதியிருக்கலாமே’ என்று தோன்ற வைத்துள்ளது. 

நீங்கள் படைப்பூக்க மனநிலையில் இருந்தே புனைவை எழுதத் தொடங்குவீர்கள் என்று நம்புகிறேன். உங்களுடைய படைப்பு மனவெழுச்சியை நீங்கள் எவ்வாறு கண்டடைகிறீர்கள்? அப்படியான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்?

இந்தக் கேள்விக்கு ஆழ்மனத்தின் வாசலைத் தட்டும் அனுபவம், அக மன இயக்கம், அறிந்தும் அறியாததுமான பொருண்மைத் திறன்கள் என்ற வார்த்தைகளைக் கொண்டு ஒரு மனவெழுச்சி தரக்கூடிய பதிலை எழுதலாம் என்றால், ஓர் கவிதையில் கவிஞர் இசை குறிப்பிட்டதைப்போல ‘எனக்கு ஒன்றுமே புரிவதில்லை தம்பி’ என்றுதான் தோன்றுகிறது. எழுத வேண்டுமென்ற வேட்கை நீண்ட கால இடைவெளிகளில்தான் உருவாகிறது. ஆதிரை வெளியாகி ஐந்து ஆண்டுகளாகின்றன. இடையில் மூன்று கதைகள் எழுதியிருக்கிறேன். புதிய நாவலைத் தற்போது எழுத வேண்டுமென்று தோன்றியதற்குரிய படைப்பூக்கக் காரணியை எனக்குத் தெரியாது. தொடர்ச்சியாகப் புனைவுகளும், வரலாறுகளும், சமூக அரசியலையும்  வாசித்துக் கொண்டிருப்பதால் இலக்கியம் பற்றிய என்னுடைய சிந்தனைகள் காலத்திற்குக் காலம் மாற்றமடைகின்றன. ஒருவேளை ஊற்றில் நீரைப்போல புதிய இலக்கியப் புரிதல்கள் எனக்குள் ஊறி ஊறி ஒரு முழு அனுபவமாகின்ற போது அதை ஒரு இலக்கிய வடிவமாக முன் வைக்கின்ற தாகம் ஏற்படுகின்றது எனலாம். நான் பெறுவதற்கு ஒன்றுமில்லையெனில் நான் தருவதற்கும் ஒன்றும் இல்லை.

நன்றி யாவரும் இணையம்

By

Read More

அஷேரா! புனைவெனும் பொய் – நந்தா கந்தசாமி

ஒரு எழுத்து அது ஒரு நாவலாக இருந்தாலென்ன அல்லது அது ஒரு வெறும் கடதாசி எழுத்தாக இருந்தாலென்ன, புனைவெனிலும் அது உண்மைக்கு மிக அருகாக போகுமெனில் அது ஒரு மேன் இலக்கியம் ஆகின்றது . நான் “அஷேராவை” வாசிச்சு நொந்து போனேன்.

சயந்தனின் “அஷேரா” நாவலில் முதல் பக்கதில் தமிழீழ விடுதலை அமைப்புக்களை , தமிழீழ விடுதலை இயக்கத்தில்(TELO) இருந்து அட்டவணை படுத்திய சயந்தன், EROS, EPRLF, PLOTE மற்றும் தமிழீழ விடுதலை இராணுவத்தின்(TELA) பின் ஆறாவது அமைப்பாக தமிழீழ விடுதலை புலிகளை (LTTE) அட்டவணை படுத்தியதன்  அரசியல் என்ன ? இயக்க உருவாக்க காலம் உலகறியும்.

“அஷேரா” வுக்கு பதிலாக “அமலி”  என்றிருந்தால் இந்த நாவல் என்னும் கனதியாக இருந்திருக்கும். 

பண்ணையார் கொலையும் “புளொட் “B” காம்ப் படுகொலைகளும் புளொட்டின் “உள்ளிருந்தவர்களால்”  பகிரங்கபடுத்தப்பட்டு “புளொட்” இயக்கம் உடைந்து சிதறி போனது யாவரும் அறிந்த ஒன்று.  பண்ணையார் கொலையுடன் “மதன்” கைது செய்யபட்டு சித்திரவதை செய்து கொல்லபட்டதும் மதனுடன் தப்பி ஓடிய “விச்சு” இப்போ கனடாவில் வாழ்வதும் உண்மை. 

ஆனால் சயந்தனின் புனைவும் புளொட் அமைப்பின் மீதான வன்மமும், காழ்ப்புணர்ச்சியும், புரட்டும், அற்புதனின் பாத்திர படைப்பின் மூலம் சயந்தன் தன் விசுவாச அரசியலை செய்திருக்கிறார். நாவலை பாராட்டி சூமில் பேசிய இந்திய முற்போக்கு இலக்கியவாதிகளின் நாவல் மீதான பாராட்டு இதற்கு தானே ஆசை பட்டாய் “சயந்தன்” என கேட்க தோன்றுகிறது. புலுடா எல்லோரிடமும் விட ஏலாது சயந்தன். 

டம்பிங் கண்ணன் (சங்கிலி) முள்ளிகுளத்தில் நின்று ஓடாது அடிபட்டே செத்து போனான். சங்கிலி மீது மிகவும் மோசமான விமர்சனத்தை கொண்டிருந்தாலும் அவதூறுகளை விதைப்பதை பொறுத்திருக்க முடியவில்லை. நாவல் மீதான முழுமையான விமர்சனத்தை எழுதுவதென்பது நேர விரயம். எழுதும் எழுத்தில் ஒரு நேர்மை இருக்க வேண்டும் அது புனைவெனிலும். 

புளொட் என்னும் ஒரு இயக்கம் தளத்தில் தன் அங்கத்துவ இலக்கத்தை கொண்டிராத முழுமையாய் ஒரு தன் ஆர்வ தொண்டர் (Volunteers) அடிப்படியில் இயங்கிய அமைப்பு. அவ் அமைப்பின் தலைவரை சுளிபுரத்தில்,  இரண்டே இரண்டு வாரம் தன் ஆர்வ தொண்டனாய் இயங்க தொடங்கிய ஒரு தோழனும் சந்திக்ககூடியதான ஜனநாயக விழுமியங்களை வளர்த்தெடுத்த தோழர்களை கொண்ட அமைப்பாகவும் அது இருந்திருக்கிறது. அதன் மீது இவ்வாறு எறிந்த சேற்றை தொடர்ந்து எறிதல் கேவலம் அதுவும் புனைவெனும் பொய்யுடன்.

By

Read More

ஒரு சொட்டுக் கண்ணீர்

அப்படியொருநாள் தட்டிலிருந்து கவளம் சோற்றை வாயருகில் கொண்டு போனபோது சோற்றையிட்டவர் சொன்னார். “கஸ்ரப்பட்டு இந்தக் குளிரிலையும் பனியிலையும் உழைத்த காசையெல்லாம் உங்களை நம்பித்தானே அனுப்பி வைத்தோம். கரியாக்கி விட்டீங்களே”அந்த வார்த்தைகளைக் கேட்டபிறகு தொண்டைக் குழிக்குள் எனக்கு எப்படிச் சோறு இறங்கும். அதன்பிறகு நான் கோயிலுக்குப் போறதில்லை. அண்ணன், யாருக்காக நாங்கள் துப்பாக்கிகளைத் தூக்கினோம்?  கடைசியில் எங்களைக் காப்பாற்றிக் கொள்ள மட்டும்தானா..?”

காக்கா அமைதியாகி நகத்தைக் கடிக்கத்தொடங்கினான். ரொக்கெற் தன்னுடைய கால்களைத் தூக்கி மடித்து சோபாவில் குந்தினான். சாதாரணமாக கால்களை விரித்து நீண்டநேரம் அவனால் உட்காரமுடிவதில்லை. அவனைச் சிறைப்பிடித்த மூன்றாவது மாதம் ஒரு விசாரணையில் உடலைச் சுழற்றி சுவரோடு வீசியதால் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.

“இயக்கம் இருந்திருந்தால் நாடு கிடைத்திருக்குமா என்பதை சரியாச் சொல்லத்தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக நாங்கள்  அனாதைகள் ஆயிருக்க மாட்டோம்.” காக்கா அழத்தொடங்கினான். “ச்சீ, என்ன இது சின்னபிள்ளைமாதிரி அழுகின்றேன் ” என்று பிறகு அவனே சொன்னான். அழுகையை அடக்க சொண்டுகளைக் கடித்தபடி கண்களை மூடியிருந்தான. “ஒவ்வொருநாளும் விடியும்போதும் பழகிச்சிரித்த யாரோ ஒருவனது நினைவு நாளாகத் தொடங்குகிறது. பகல் அவமானங்களோடு போகிறது. இரவு அழுகையோடு முடிகிறது. பயிற்சி பயிற்சியென்று உடம்புக்கு மட்டும் வைராக்கியம் தந்துவிட்டு மனதை அப்பிடியே பஞ்சுபோல விட்டுவிட்டார்கள் ” அவனால் ஒருபோதும் அழுகையை அடக்க முடியவில்லை. குமுறிக் குமுறி அழுதான். ரொக்கெற் காத்திருந்தான்.

“நாங்கள் எங்கட  வாழ்க்கை முழுவதும் சாவைத்தாண்டித்தான் வந்திருக்கிறம். உண்மையில் சாவைக் கூட வைத்துக்கொண்டுதான் வாழ்ந்தேயிருக்கிறம். யோசித்துப்பார்த்தால் நாங்கள் மட்டுமில்லை. எல்லோரும் சாவைக் கூட வைத்துக்கொண்டுதான் வாழ்கிறார்கள். சாவு தன்பாட்டில் நடக்கட்டும். அப்படித்தான் முந்தியும் நடந்தது என்று நினைச்சுக்கொள்ளுங்க. கனக்க யோசிக்க வேண்டாம்” என்றான் ரொக்கெற். பின்னர் பேச்சை மாற்றும்பொருட்டு “இப்ப எங்கையிருக்கிறீங்கள்”என்று கேட்டான்.

“நிறையத் தூரத்தில் மலையில் ஒரு வீடு. மூன்று பேர் தங்கியிருக்கிறோம். தொலைவுக் கிராமமென்பதால்  ஒருமணிநேரத்திற்கொரு பஸ்தான் போகும். இரவில் ஒன்பது மணிக்குப் பிறகு பஸ் இல்லை. வேலைமுடிந்து நடந்துதான் போவேன். குளிர்காலங்களில் பயங்கரம். இன்னமும் விசா கிடைக்கவில்லை . அதற்கொரு வழிபிறந்தால் நல்லதொரு வேலையும், வேலைக்குப் பக்கத்தில் வீடும் எடுக்கலாம்”

“எல்லாம் சரியாகிவிடும்”

“ஆயுதப்போராளிகளுக்கு விசா அனுமதி கொடுக்கமாட்டார்களாம் என்று அன்றைக்கு சலுானில் பேசிக்கொண்டார்கள்.”

“அதொன்றுமில்லை. நான் இங்கேதானே இருக்கின்றேன்.”

“நீங்கள் பதினொரு வருஷம் சிறையில் இருந்தீர்கள். செஞ்சிலுவைச் சங்கம்தானே உங்களை அனுப்பி வைச்சது. அதனால் அவர்களின் தலையீடு இருந்திருக்கும். எங்களுக்கு அப்பிடியில்லைத்தானே. உங்களுக்கு இளங்கீரனைத் தெரியுமா. அவர் மட்டக்களப்பு அம்பாறை அரசியல் பிரிவுக்காரர். அவர் ஆயுதத்தோடு பயிற்சி செய்யும் காட்சி முன்னர் பி.பி.சியில் ஒளிபரப்பானதாம். அதனாலேயே அவருக்கும் இன்னமும் விசா கொடுக்கவில்லை. அவர் அன்றைக்கு கடைக்கு வந்திருந்தார். மட்டக்களப்பிலேயே இன்னமும் இருக்கின்ற மனைவியையும் மகளையும் எங்காவது ஆபிரிக்க நாடொன்றுக்காவது அவசரமாக எடுக்கவேண்டுமென்றார்.”

ரொக்கெற் “சாப்பிடலாமா”என்றான். குசினிக்குச் சென்று பீங்கான் கோப்பையில் சோறிட்டு கறிகளை மேலே ஊற்றி கொண்டுவந்தான். ஒரு முட்டை அவித்திருக்கலாம் அல்லது மீனைப்பொரித்திருக்கலாம் என்று அப்பொழுததான் தோன்றியது.

காக்கா தொடைகளின் மேலே கோப்பையை வைத்து மெதுவாக விரல்களால் அளைந்தான்.

“வெட்கப்படாமல் சாப்பிடுங்க”

முதற்கவளத்தை வாயிலிட்ட காக்கா தொடர்ந்து பேசலானான்.

“பதிவு செய்யாமல்தான் தமிழ்க்கடையில் வேலை செய்கிறேன். கள்ள வேலை. இன்னமும் இரண்டுபேர் வேலை செய்கிறோம். அவர்களிடமும் விசா இல்லை. விடிய ஒன்பது மணிக்குத் தொடங்கும் வேலை, கடையை மூடி கழுவித்துடைத்து முடிவதற்கு இரவு எட்டுமணியாகும். பரவாயில்லை. நேரக்கணக்குப் பார்த்தா இயக்கத்தில் வேலை செய்தோம். ஆனால் எங்கட பொறுப்பாளர்கள் எப்போதாவதுதானே திட்டியிருக்கிறார்கள். இங்கே முதலாளி எப்பவும் திட்டுகிறார். எல்லோருக்கும் இறைச்சியை விற்றனுப்பு, மீனை விற்றனுப்பு என்றால் என்ன செய்யிறது. ஒருநாள், ஒரு ஐயரம்மாவிடம், நிறைய நாளுக்குப் பிறகு முரல் வந்திருக்கின்றது. சொதி வைத்துக் கொடுத்தால் கணவர் சமைத்த கையிற்கு மோதிரம் போடுவார் என்று தெரியாத்தனமாகச் சொல்லிவிட்டேன். ஐயரம்மா சன்னதமாடிவிட்டா. அவவின் முகத்தைப் பார்த்தால் உனக்கு ஐயராட்கள் என்று தெரியவில்லையா என்று முதலாளி என்னைத் திட்டித் தீர்த்தார். உண்மையில் அப்படித் தெரியுமா அண்ணன்”என்று நிறுத்தினான். ரொக்கெற் சிரித்தான்.

“கால்வாசி சம்பளம்தான் கிடைக்கிறது. பதியாமல் வைத்திருப்பது முதலாளிக்கும் ரிஸ்க் என்பதனால் அந்தச் சம்பளமாம். ஆனால் அவருக்கு விசா இல்லாத ஆட்கள்தான் வேண்டியிருக்கிறது. எனக்கென்ன கவலையென்றால் விசா இல்லையென்பதற்காக எனது உழைப்பின் பெறுமதி மற்றாட்களை விடவும் காற்தூசியாகிவிட்டது என்பதுதான். விசா கிடைத்தால் முதல்வேலையாக ஒரு வெள்ளைக்காரனிடம் வேலைக்குச் சேரவேண்டும்”

“முதலாளிகளில் தமிழென்ன, வெள்ளையென்ன.. எல்லோரும் ஒரேமாதிரித்தான். என்னை மட்டும் சும்மாவா விடுகிறான் வெள்ளைக்காரன். பிழிந்தெடுக்கின்றான். அதிலும் இரண்டு வேலை. இரண்டு முதலாளி. பின்னச் சொல்லவா வேணும்”

“வெள்ளைக்காரன் நல்ல சம்பளம், பென்சன், இன்சுரென்ஸ் எல்லாம் தருவானே”

“அவர்களுக்கு சிஸ்ரமாகச் சுரண்டுவது எப்படி என்று நல்லாத் தெரியும். தமிழனுக்கு அந்தப் பக்குவம் இல்லை. வேலைக்காரனை சாதி குறைந்தவன் என்று பார்க்கிற மனதுதானே தமிழனுடையது”

காக்கா சற்று நேரம் அமைதியாயிருந்தான். பிறகு “இன்றைக்கு பென்சன், இன்சுரென்ஸ் என்றெல்லாம் யோசிக்கின்றேன். இயக்கத்தில் இருந்தபோது பிற்காலத்தில் என்ன செய்யிறதென்ற நினைப்பே இருந்ததில்லை. ஒரு நம்பிக்கை இருந்தது. செத்துவிடுவோம் அல்லது அண்ணை கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை.”

காக்கா பின்னேரம் தான் புறப்பட்டுப்போனான். பிறகு நீண்டநாட்களாக அவனைக் காணவில்லை. ரொக்கெற்றும் கடைப்பக்கம் போகவில்லை. கோடைகாலத்தில் ஒருநாள் அவனைக் கண்டபோது அவன் அந்தரமாயும் பதற்றமாயும் இருந்ததாக ரொக்கெற் உணர்ந்தான்.

குளக்கரையின் நடைபாதை வாங்கில் காக்கா அமர்ந்திருந்தான். கையில் கால்ஸ்பெர்க் பியர் போத்தலொன்றை வைத்திருந்தான். கண்கள் ஒருவகை மிதப்பில் நிலையற்று அலைந்தன. ரொக்கெற்றைக் கண்டதும் போத்தலைப் பின்னால் ஒளிக்க முயற்சித்து பிறகு கைவிட்டான்.

“இந்தக்கருமம் சரியான கய்ச்சல் அண்ணன் ”குழந்தையொன்றின் வார்த்தைகளாக அவையிருந்தன. ரொக்கெற் அவனது தோள்களை ஆதரவாகப் பற்றிக்கொண்டு நின்றான். “தஞ்சக் கோரிக்கையை நிராகரித்து விட்டார்கள். நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று கடிதம் வந்திருக்கிறது அண்ணன். எனக்குப் பயமாக இருக்கிறது.” குரல் உடைந்திருப்பதாகப்பட்டது.

ரொக்கெற்றிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “எல்லாருக்கும் இங்கை அப்படித்தான். முதல்ல சறுக்கும். நம்பிக்கையோடு இருங்கள். தெரிந்த லோயர் இருக்கிறார். அப்பீல் செய்யலாம். மனதை உற்சாகமாக வைத்திருக்க வேணும்.” காக்காவைப் பற்றிய ஓர் எச்சரிக்கையுணர்வு அவனில் தொற்றியிருந்தது.

“புத்தகங்கள் படிப்பீரா, இங்கையிருக்கிற லைபரெறியில் தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன.”

காக்கா அமைதியாக இருந்தான். மெதுவாக “விடுதலைப்புலிகள் பேப்பர் மட்டும் முன்னர் படிப்பேன். ” என்று சொன்னான்.

இரண்டாவது வேலைக்கு நேரமாகிக்கொண்டிருந்தது. காக்காவை விட்டுப்போகத் தயக்கமாயிருந்தது. காக்கா அவனின் முன்னாலேயே ஒரு மிடறு பியர் குடித்தான்.

“செத்துப் போகலாம் போல இருக்கிறது.” என்றவன் “சாவது என்றால் எப்பிடி.. கடிப்பதற்கு குப்பியா இருக்கின்றது..” என்று சிரித்தான்.

உதடுகள்தான் சிரித்தன. மனதின் அலைச்சலை ரொக்கெற் முழுமையாக உணர்ந்திருந்தான். அவன் சிறையிருந்த நாட்கள் நினைவில் மிதந்துகொண்டு வந்தன. சாவு பெரும் விடுதலை எனத் தோன்றிய நாட்கள் அவை. உடலின் உச்சபட்ச வலியைத் தாங்கும் எல்லையை சித்திரவதைகள் கிழித்துத் தாண்டும் ஒவ்வொரு கணத்திலும், சாவு தன்னை விடுவிக்கப்போகிறது என்று அவனது மனது கொந்தளிப்பை அடக்கி தெளிந்த நீரைப்போல ஆகியிருக்கிறது. மூச்சுக்கள் சீராகியிருக்கின்றன. வாயில் இலேசாக புன்னகையும் கசியும். ஆனால் ஒவ்வொருமுறையும் சாவு அவனை ஏமாற்றியது.

“உங்களுக்குப் பாலனைத் தெரியுமா” திடீரென்று காக்கா கேட்டான்.

“அவன் அம்பாறைப் பெடியன். இப்ப ஆள் இல்லை. மட்டக்களப்பிலிருந்து வன்னிக்குப் போன ஒரு கடற்பயணத்தில் அவனும்  போனான். இரவுப்பயணம். திருகோணமலைக் கடலில் நேவி மறித்து அடிக்கத்தொடங்கியதில் படகு சிதைந்துபோனது. பாலனைத்தவிர ஒருவரும் மிஞ்சவில்லை. அவன் நீந்தினான். ஓயாமல் நீந்தினான். அதிகாலை வெளிச்சம் பரவமுதலே கரையைத் தொட்டவன் அப்படியே மயங்கிப்போனான். கண்விழித்தபோது ராணுவம் கைது செய்திருந்தது. கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன. கழுத்தில் குப்பி இல்லை. இன்னும் சற்று நேரத்தில் விசாரணை தொடங்கிவிடும். பாலன் ஒரு கரும்புலி. விசாரணையின் கொடுமை தாங்கமுடியாமல் எதையாவது சொல்லிவிடுவேன் என்று அவன் அஞ்சத்தொடங்கினான்.

அப்பொழுதுதான் பாலன் அதைச் செய்தான். அவன் நாக்கை வெளியில தள்ளி பல்லால் கடித்தபடி தாடையை நிலத்தில் ஓங்கி அடித்தான். நாக்குத் துண்டாயிற்று. ஆமி அவனைத் தூக்கிச்சென்று ஆஸ்பத்திரியில் போட்டது. எப்படியும் தன்னிடமிருந்து இரகசியங்களைப் பெற்றுக்கொள்வார்கள் என்று பாலன் நம்பினான். அவன் இன்னுமொன்றையும் செய்தான். ஆஸ்பத்திரியில் அவனை வளர்த்தியிருந்த கட்டிலின் தலைமாட்டின் இரும்புக் கம்பியில் தலையை மோதி உடைக்கத்தொடங்கினான். ஆறாவது தடவை மோதிய கணத்தில் அவனது கண்கள் மேலே செருகி மண்டை ஓடு சிதைந்து செத்துப்போனான்.”

ரொக்கெற் பெருமூச்சொன்னை விடுவித்தான். இப்படிப்பலதும் நடந்தாயிற்று.

“நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால் சாகவேணுமென்று முடிவுசெய்தால் குப்பிதான் அவசியமென்றில்லை”

0 0 0

02.12.2012 பனி உருகிய காலை

காக்காவின் அறை வாசலை மஞ்சள் நிறத்தாலான பிளாஸ்ரிக் வரியல்களால் மூடியிருந்தார்கள். மூன்று பொலிஸ்காரர்கள் மிகச் சாதாரணமாக நடமாடினார்கள். அருணின் முகம் இன்னமும் திகைப்பிலிருந்தது. காக்காவின் உடலை சற்றுமுன்னரே அம்புலன்ஸ் ஏற்றிச்சென்றதாக அவன் சொன்னான். ரொக்கெற் அறைவாயிலில் நின்று பார்த்தான்.

பெரிதாகப் பொருட்கள் இல்லை . மூலையில் ஒரு சூட்கேஸ் இருந்தது. ஒருவர் மட்டுமே படுக்க முடிகிற மெத்தையொன்று சுவரோரமாகத் தரையில் கிடந்தது. நீலநிறப் போர்வை கால்மாட்டில் குமைந்திருந்தது. மெத்தையின் அருகே தரையில் ரத்தம் கருஞ்சிவப்பு நிறத்தில் தெரிந்தது.

மொழிபெயர்ப்பாளர் வந்திருந்தார். பொலிஸ் அருணிடம் விசாரணைகளைத் தொடங்கியிருந்தார்கள்.

“அகதி முகாமிலிருந்து இரண்டு மாதங்களுக்குப்பிறகு இந்த வீட்டிற்கு வந்தோம். எனக்கும் தீபனுக்கும் காக்காவிற்கும், இல்லை அது அவரது பட்டப்பெயர். உதயகுமாருக்கும் இந்த வீட்டை நகரசபை ஒதுக்கியிருந்தது. நானும் தீபனும் ஒரு அறையில் தங்கினோம். அவர் எங்களோடு பெரிய நெருக்கமில்லைத்தான் ஆனால் பிரச்சனையொன்றுமில்லை. நாங்கள் கொஞ்சம் ஜொலிப் பேர்வழிகள். அவர் அப்படியல்ல. யாராவது அவரது மனம் நோகும்படி கதைத்தால் அன்றைக்கு முழுவதும் எதையாவது யோசித்துக் கொண்டிருப்பார். பழசெல்லாவற்றையும் மறந்துவிட்டு வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள் என்று நான்கூட ஒன்றிரண்டு முறை சொல்லியிருக்கிறேன். அதற்கு ஒவ்வொரு நாளும் ஒரு தோழனின் நினைவு நாளாகவே விடிகிறது. பழையதை எப்படி மறக்க என்று கேட்டார். நேற்று இரவு நானும் தீபனும் படம் பார்த்துவிட்டுத் திரும்பியபோது இரவு ஒரு மணியாகவிட்டது. கொஞ்சம் குடித்திருந்தோம். விடிய பாத்ரூமுக்கு எழும்பிப் போனபோதுதான் லைற் போட்டேன். உதயகுமார் மெத்தைக்கு வெளியே கையை நீட்டியபடி படுத்திருந்தார். கீழே ரத்தமாயிருந்தது. கையிலிருந்து ரத்தம் வடிவது நின்றிருந்தது. அவர் அப்பவே செத்துப்போயிருந்தார். எனக்கு என்ன செய்யிறதென்று தெரியவில்லை. பயந்தும்போனேன். தீபன்தான் வெளியே ஓடிப்போய் இரண்டு சுவிஸ்காரர்களைக் கூட்டிவந்தான். நான் ரொக்கெற் அண்ணைக்கு சொன்னேன்.”

ரொக்கெற் நேரத்தைப் பார்த்தான். ஐந்து நிமிடத்தில் பஸ் எடுத்தால்தான் மட்டுமட்டான நேரத்திற்கேனும் வேலைக்குச் செல்லமுடியும். அவன் சோர்ந்துபோயிருந்தான். உடலுக்கு முடியவில்லை. இன்று வரமுடியாதென்று சொல்லலாமா என யோசித்தான். செப் நூறு கேள்விகள் கேட்பான். பிறகு சுடுதண்ணியை மூஞ்சையில் கொட்டியவன் போல நாளைக்குக் கடுகடுப்பான்.

ரொக்கெற் பஸ்ஸில் ஏற் உட்கார்ந்தான். வெளிச்சம் பரவிக்கொண்டிருந்தது. கண்களை மூடியபோது கைகளை மெத்தையின் வெளியே நீட்டியபடி காக்கா நிமிர்ந்துகிடந்தான். கைகளிலிருந்து இரத்தம் ஒவ்வொரு துளியாக தரையில் சொட்டியது. காக்காவின் திறந்துகிடந்த உறைந்த கண்களின் பார்வைக் கோணத்தில் சுவரில் எம் 16 ரகத் துப்பாக்கியோடு சீருடையில் பிரபாகரனின் சிறிய படமொன்று கொழுவியிருந்தது. கத்தையான மீசை. இரண்டு சயனைட் கயிறுகள், இடது பொக்கற்றில் செருகப்பட்டிருந்தன. இடுப்பில் பிஸ்டல் துப்பாக்கி…

ரொக்கெற் படரும் எண்ணங்களை அழிக்கமுயற்சித்தான்.

பஸ் அவனது வீட்டைக்கடந்தபோது தன்னிச்சையாக மணியை அழுத்தி அடுத்த இறக்கத்தில் இறங்கினான். கால்கள் தம்பாட்டுக்கு நடந்து வீட்டுக்கு ஏறின. கதவைத்திறந்து நுழைந்து சோபாவில் விழுந்தான். கண்களில் உடைத்துக்கொண்டு நீர் பொங்கத்தொடங்கியது. கைகளை நெஞ்சிலடித்து மெல்லிய தீனக்குரலில் அழுகை வெடிப்புற்றது. கேவிக்கேவி அவன் ஒப்பாரி வைக்கலானான்.

“பாடையில நாயகமா  நீ படுத்தால் இந்த நாடே கதறியளும் என் ராசா, ஆருமில்லாப் பிணமா நீ போய்ச்சேர்ந்தாய், இங்கை அழுது துயர் கரைக்க ஒரு ஆளில்லையே…. ”

காலச்சுவடு 2014 பெப்ரவரி இதழில் வெளியானது
ஓவியம்: ஞானப்பிரகாசம்

By

Read More

× Close