திசை ஒன்பது வாசிப்பு / சின்னராஜா விமலன்

புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர் சயந்தன் எழுதிய ‘திசை ஒன்பது’ நாவலை இன்றைய தினம் படித்து முடித்ததும் சிறியதொரு அறிமுகக் குறிப்பை எழுதத் தோன்றியது.

புலம்பெயர் எழுத்துக்கள் அறிமுகப் படுத்திய புதிய களங்கள் ஈழத்து இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பவையாக அமைந்தன. அந்தவகையில் ரஷ்யா – உக்ரேன் போரை முழுமையாகச் சித்திரிக்காவிட்டாலும் அதனைப் பேசிச் சென்ற வகையில் அந்தக் களத்தில் பதிவு செய்யப்பட்ட நான் வாசித்த ஈழத்து முதல் நாவல் என்பதனால் ‘திசை ஒன்பது’ நாவல் முக்கியமாகப்படுகிறது.

குறிப்பாக ஈழத்தில் போர் நிகழ்த்திய பேரழிவால் ஏற்பட்ட விரக்தி கதையின் நாயகனான இளங்கோவை நாவலில் இப்படி பேச வைக்கிறது…

” ஒருவேளை மூன்று நாட்களில் போர் முடியவில்லை என்றால்…

போர் இல்லாத இன்னொரு நாட்டுக்கு ஓடுவேன்….

அவ்வளவு பயமா உனக்கு?

அவ்வளவு சலிப்பு…

எனக்கு ரஷ்ய ராணுவமும் ஒன்று தான் உக்ரேன் ராணுவமும் ஒன்று தான். அவ்வளவு ஏன் இலங்கை ராணுவமும் இந்திய இராணுவமும் கூட ஒன்று தான்”

புலம்பெயர் ஈழத்து நாவல்களில் அகதிகளாக செல்பவர்களின் பயணத்துயரம் பெருமளவில் பதிவாகிய நிலையில் புதிதாக என்ன சொல்ல இருக்கிறது என்ற கேள்வி எழுவது இயல்பு.

ஆனாலும் நாவலின் கீழ்வரும் பகுதி புதியதொரு அனுபனுபவமாக இருந்தது.

” நான் அப்போதுதான் அவர்களைக் கவனித்தேன். குதிரைகளில் வருகிற போர்வீரர்களை சாண்டில்யனின் கதைப்புத்தகங்களில் படித்திருந்தாலும் நேரில் காண்பது இதுதான் முதல் தடவை. முதுகில் வளைவில்லாமல் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார்கள். கருமையும் பச்சையும் திட்டுத் திட்டாகப் பரவியிருந்த ராணுவச் சீருடை. தோளில் துப்பாக்கியை மாட்டியிருந்தார்கள். சிலருடைய கண்களில் அலட்சியம் மிதந்தது. சிலரது கண்கள் உத்தரவுக்காகக் காத்து நிற்பதைப்போல அசைந்தன. ஒரேயொருவன் மட்டும் தீர்மானமான கண்களோடு குதிரையிலிருந்து குதித்தான்.

எங்களைக் குதிரைகளில் ஏற்றிக்கொண்டார்கள். ஒரு மிருகத்தின் முதுகில் கால்களை விரித்தபடி உட்கார்ந்திருக்க எனக்கு அந்தரமாக இருந்தது. குதிரையின் ஒவ்வொரு காலடியிலும் கொடிச்சீலை போல ஆடினேன். குதிரைக்காரனின் ஒரு தோளைத் தயக்கத்தோடு பற்றினேன். அவன் எதுவும் சொல்லாமலிருக்க, அடுத்த தோளையும் பிடித்துக்கொண்டேன். நான் நேருக்கு நேராக ஒரு குதிரையைக் கண்ட முதல்நாளில் அதன் முதுகிலேயே ஏறிச் சவாரி போவேன் என்று ஒருநாளும் நினைத்ததில்லை”

இந்த நாவலின் முக்கிய அம்சமாக ‘அதிகார மனநிலை’ குறித்து கேள்விக்குட்படுத்துவதை சுட்டிக் காட்டலாம்.

“இத்தனை அழிவுகளைச் சந்தித்த யூதர்கள் பிறகெப்படி பாலஸ்தீனத்தில் அப்பாவிகளைக் கொல்கிறீர்கள்…?” என்று ஒருநாளும் நான் ஹன்னாவைக் கேட்டதில்லை. அவளைச் சங்கடப்படுத்தக் கூடாது என்றல்ல, இம்மாதிரி விவாதங்களுக்கு முடிவே இல்லை என்று இப்போது சலிப்பு ஏற்பட்டுவிட்டது.

அதுமட்டுமல்ல, “நீங்கள் ஏன் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை விரட்டினீர்கள்?” என்று இணையத்தில் சற்று உலாவினாலே அவளாலும் திருப்பிக் கேட்க முடியும்”

அகதிகள் குறித்து ஐரோப்பியர்களின் மனோநிலையை இப்படி பதிவு செய்கிறார்.

” ஐரோப்பாவுக்கு ஏன் வருகிறீர்கள் என்று கேட்டேன். எங்கோ நாகரீகமடையாத ஊத்தை நிலங்களிலிருந்து எங்களுடைய நிலத்துக்கு ஏன் வருகிறீர்கள்?”

“சேர்… சொந்த நாடுகளில் குறைந்தபட்ச வாழ்க்கையைக் கூட வாழ முடியாத அரசியல் பொருளாதார சூழல்கள் இருக்கின்றன… நீங்கள் கூட… கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வாழ்க்கைப்பாட்டுக்காக சுவிஸுக்கும் ஜெர்மனிக்கும் போகிறீர்கள்தானே…”

“நாங்கள் போவோம்… ஏனென்றால் இது எங்களுடைய நிலம். ஒரே நிறம்… ஒரே கலாச்சாரம். நீங்கள் ஏன் வருகிறீர்கள்…? வேறு நிறம்… வேறு கலாச்சாரம்… வேறு சாப்பாடு…”

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“இதோ பார்… பெரிய பெரிய யுத்தங்களுக்குப் பிறகும் எங்களுடைய நாடுகளில் சுதந்திரமும், அமைதியும், அழகான வாழ்க்கைத் தரமும் இருக்கிறதென்றால் அதற்குப் பின்னால் எங்களுடைய கடுமையான உழைப்பும் தியாகமும்தான் இருக்கிறது. நீங்களோ உழைக்கவும் தியாகம் செய்யவும் வக்கற்றவர்கள். அதனால்தான் உங்களுடைய நாடுகள் நாறிப்போய்க் கிடக்கின்றன. எங்களுடைய உழைப்பாலும் தியாகத்தாலும் மட்டுமே உருவாகிய அழகான சூழலை நாங்கள் ஏன் உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்…? “

அதேசமயம் ஐரோப்பிய நாடுகளால் அகதிகள் விடயத்தில் கடைப் பிடிக்கப்படும் பாரபட்சங்களையும் நாவல் சித்திரிக்கத் தவறவில்லை.

” புகலிடம் கோருவது ஓர் அடிப்படை மனித உரிமை என்று வாதாடுகிற மனித உரிமை அமைப்புகள், இந்த விவகாரத்தில் ஐரோப்பாவின் இரட்டை முகத்தையும் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. கொசோவாவில் 1998, 1999 காலத்தில் முஸ்லீம் அல்பானியர்கள் கொல்லப்பட்டபோது அவர்களை ‘நம்மவர்கள், உணவிலும் உடையிலும் குடும்பக் கட்டமைப்பிலும் ஐரோப்பிய கலாச்சாரத்தை ஒத்தவர்கள்’ என்று ஆரத்தழுவி வரவேற்ற அதே ஐரோப்பா சிரியாவிலிருந்தும், ஆப்கானிஸ்தானிலிருந்தும் அகதிகள் வரும்போது, கலாச்சார, தீவிரவாத அச்சுறுத்தல்கள் என்று கதவை அடைத்துவிடுகிறது”

நன்லீனியர் முறையில் சொல்லப்படும் நாவலில் கதைசொல்லி ஒரு எழுத்தாளராக இருப்பதனால் ஈழத்து இலக்கியச் சூழலையும் விமர்சனத்திற்கு உள்ளாக்குகின்றார். அது தீவிரமாயும் எள்ளலாகவும் வெளிப்படுவதை அவதானிக்க முடிகின்றது

” இந்தக் கதையின் அடிப்படை முரண் என்ன என்று எனக்குப் பிடிபடவே இல்லை. ஒருவேளை பயணக் கட்டுரையைத்தான் நாவலென்று எழுதிக்கொண்டிருக்கிறேனோ என்றும் தோன்றியது. அப்படியும் எழுதுகிறார்கள்தான். ஆகக்குறைந்தது அரசியல் கருத்துக்களும் இல்லை. மனித உணர்வுகளும் உறவுகளுமே ‘பெரிய அரசியல்தான்’ என்றாலும் இன்றைக்கு அரசியல் என்பதே இயக்கம், அரசு, கட்சி, தமிழ், சிங்களம் என்று குறுகிவிட்டது. அவற்றை எழுதாவிட்டால் அரசியல் நீக்கப்பட்ட பிரதி என்று முத்திரை குத்தவும் செய்கிறார்கள்”

…………………………………………………………………..

“வெளிநாடுகளில் வாழ்கின்ற இளைய தமிழ்த் தலைமுறையைப் பற்றி எனக்கும் ஒன்றும் தெரியாது. அங்கிருக்கிற எழுத்தாளர்களும் அதைப்பற்றி ஒன்றையும் எழுதுவதாகக் காணோம். அவர்கள் எண்பதாம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தின்ற புட்டும் மாம்பழமும்தான் சோக்கான சுவை என்று இன்னமும் எழுதுகிறார்கள்”

அதேசமயம், கருணாகரமூர்த்தி, சோபா சக்தி, முத்துலிங்கம், ஜெயமோகன், சயந்தன், ஜோர்ஜ் ஓவல் மற்றும் ரஷ்ய எழுத்தாளர்களின் கருத்துக்களும் நாவலில் பொருத்தமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புலம்பெயர் வாழ்வு ஏற்படுத்திய பண்பாட்டு நெருக்கடிகளை இளங்கோ – ஹன்னா ஜோடிகள் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வதன் ஊடாகப் பதிவு செய்தாலும் காலத்திற்கு ஏற்ற பண்பாட்டு மாற்றங்களுக்கு யாழ்ப்பாணத்தவர்கள் தம்மை தகவமைக்கத் தடுமாறுவதை ‘கலைக்கலா’ பாத்திரம் வாயிலாக பகடியும் செய்கின்றார்.

புலம்பெயர்ந்த பின்னரும் சாதியை கடைப்பிடித்தாலும் பொருளாதார மேம்பாட்டிற்காக செய்யும் தொழிலை மறைத்து சாதியபிமானத்தை பேணும் மனநிலையையும் நாவலில் வெளிச்சமாக்கி உள்ளார்.

“சுவிஸுக்குப் போனபிறகு ஏதாவது வேலையொன்றை இமையா செய்யத்தான் வேண்டும் என்று ஒருநாள் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது “சித்திரம் வேலை செய்யிற ஹொட்டலிலேயே உடுப்புகள் தோய்க்கிற லோன்றியில் வேலை

எடுக்கலாமாம்” என்றாள் இமையா.

அப்பா அவளைச் சலனமற்றுப் பார்த்தார். குரலைச் செருமி “தொழில்களில் மேல் என்றும் கீழ் என்றும் ஒன்றும் இல்லை. ஆனால் நீ லோன்றியில்தான் வேலை செய்கிறாய் என்று ஊருக்குள்ளே யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்… உடுப்புத் தோய்ப்பதைப்போல படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டு மானத்தை வாங்கிவிடாதே…” என்றார்.

……………………………………………………….

அவர் கொஞ்சம் முற்போக்கான பிற்போக்கு”

குடும்பத்தை பிரிந்து நீண்ட காலம் புலம்பெயர்ந்து வாழும் போது உறவுகளில் ஏற்படும் விரிசல்களையும் பிரிவுகளையும் சமூகவியல் நோக்கில் அருந்தவம் என்ற பாத்திரத்தின் ஊடாக பதிவாக்கி உள்ளார்.

அந்த வகையில் நல்லதொரு வாசிப்பனுபவத்தை தந்த ‘திசை ஒன்பது’ நாவலின் ஓர் அறிமுகக் குறிப்பையே இங்கு தந்துள்ளேன். நூல் குறித்த விரிவான விமர்சனத்தை இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவேன்.

21.01.2026

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *