அஷேரா! எல்லோருக்குமான பிறழ்வு – நிஜந்தன்

கடந்த காலம் உண்மையில் முடிந்து விடுமா?
அல்லது நம் தலைகளின் மீது
தன் வாழ்வைத்தொடருமா?

-ஃகாத்தா ஸம்மான்

இந்த கேள்விக்கான விடையை ஆமாம், என்கிறது சயந்தனின் அஷேரா நாவல். அதுமட்டுமல்லாமல் நமது நினைவுகள் தொடர மட்டுமில்லாமல் அதற்கடுத்து வரக்கூறிய வருங்காலத்தை வடிவமைப்பதிலும் பெரும் பங்கு கொள்கிறது என்பதை நாவல் வழியாக சொல்கிறது.

தனது இருப்பத்தியிரண்டு வயதில் அருள்குமரன், உளவியலும் தெரிந்துவைத்திருக்கும் குடியுரிமை அதிகாரிகளின் விசாரணைக்கு முன் அமர்ந்திருப்பதிலிருந்து நாவல் தொடங்குகிறது.

இயக்கத்திலிருந்து வெளியேரிடலாம் என்று நடுச்சாமத்தில் முடிவெடுக்கும் போதும், இறுதி வரை இன்னதென்று அறியாத துக்கத்தின் போதெல்லாம் அமலியக்காவின் பெயர் அண்ட் லவ்லி வாசனை அவனை துளைக்கிறது.

வாசனைகளை போலவே வார்த்தைகளுக்கான பொருள்களையும் அவனின் சிறிய வயதில் அறிந்துகொள்ளும் பொழுதிற்கு பிறகு அவன் உறவு கொள்ளும் அற்புதம், அபர்ணா, அரங்கன், ஆராதானா, அவந்தி, நஜிபுல்லா போன்றோரின் கதைகளிலும் வாசனை, வார்த்தைகள் ஊடுறுவி செல்கிறது.

போர் மற்றும் புலம்பெயர்தல் குறித்த நாவல்களில் இல்லாத அம்சம் இந்த நாவலில் உள்ளது அது நினைவுகளின் அலைகழிப்பு. ‘தனிகுரல் என்று எதுவுமேயில்லை எல்லாம் இயக்கத்தின் குரல் மட்டுமே’ என்று சொல்லும் போர் சார்ந்த நினைவுகள் மட்டுமல்ல, அதைத்தாண்டியும் அதற்கிடையேயும் மனதிற்குள் அமுத்தி வைத்திற்கும் குரல்கள். அது போர் உருவாக்கும் சமூகம் தனிமனிதர்களின் உளவியலை கலைத்துப் போடுகிற குரல்களும் கூட என்றும் சொல்லலாம்.

அருள்குமரன் தன் அம்மா மற்றும் அவளின் பிறழ் உறவான சரவணபவனின் நெருக்கத்திற்கிடையே அறிந்து கொள்ளும் நிம்மதி, சஞ்சலம், குதூகலம், ஏமாற்றம் போன்ற வார்த்தைகள், அபர்ணா குரூரம் என்ற வார்த்தையின் பொருள் கூட உனக்கு தெரிந்திருக்காது அல்லவா என சொல்கிறாள்.

இதுபோன்ற மனஎழுச்சிக்கொள்ளும் வார்த்தைகளை தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கிரகித்து கொள்ளும் வயதிற்கு முன்பே புரிந்து கொள்கிறான். அப்பாவும் அம்மாவும் காதலித்துதான் திருமணம் செய்துகொள்கிறார்கள், வெளிநாட்டுக்கு வேலை சென்றவுடன் வாரம் இரு கடிதம் வருகிறது ஆனால் சரவணபவன் அம்மாவிற்கு நெருக்கமானவுடன் அம்மாவின் பதில் கடிதம் குறைகிறது. இருவரின் நெருக்கம் அருள் குமரனினிடம் அம்மா ” அப்பன் கொஞ்ச நேரம் வெளில இருங்கோ .அம்மா மாமாவுக்கு மருந்து போட்டு விட்டு வருகிறேன் ” என்று சொல்லும்போதெல்லாம் உருவாகும் தாழ்வுணர்வு, ஆராதானாவால் குறைகிறது. ஆனால் அமலி அக்காவிடம் ஏற்படுத்தும் நடத்தையால் பிறழ் உறவுகொள்ளும் எல்லாரிடமும் தாயையும் அமலியையும் நினைவுக்கு கொண்டு வந்து கொண்டே இருக்கிறது, நான் யார்? என்ற சுயம் குறித்த கேள்வியால் இயக்கத்திற்கு ஓடிபோகிறான்.

அது ஒருவகையான தற்கொலை அல்லது அதற்கும் மீறிய ஒரு தண்டனை எனத்தான் கொள்கிறான். அதனால் தான் வெளியேறிவிடலாம் என்று செல்பவனை மீண்டும் இயக்கத்திற்கு திரும்பி நடக்க செய்கிறது அவனது நினைவுகள், அதேதான் அற்புதம் அவர்களை புரிந்துகொண்டு அவர்களிடம் நெருக்கம் காட்டவும் முடிகிறது. குறிப்பாக அற்புதத்திற்கு அம்மை போட்டவுடன் அவரை குழந்த்தையை போல பரிவுடன் கவனிக்கவும் வைக்கிறது.

மத்திய வயதிற்கும் மேலுள்ள அற்புததின் நினைவின் காலம் சகோதர இயக்கத்தின் மோதலிக்கிடையே உள்ளது. “நீங்கள் புளோட் இயக்கத்தில் ரெய்னிங் எடுப்பதற்காக சுழிபுறத்தில் படகேறியபோது நான் தவழவும் தெரியாத குழந்தை” என ஓரிடத்தில் அருள்குமரன் சொல்கிறான்.

அற்புதமின் வாழ்க்கை அவலமானது. ஆனால் ஆழத்தில் அவரொரு குழந்தை. அதை அருள்குமரன் சரியாகவேப் புரிந்துகொள்கிறான். அதனாலேயே அவனால் உடனிருக்க முடிகிறது, அவரிடம் இருக்க முடிகிறது, அம்மைப்போட்டுக்கொண்ட தருணத்தில் ஆறுதலைக் கொடுக்கமுடிகிறது.

அற்புதம் என்ற பெண் வாடையே அறியாத ஒருவன் மீதான பாலியல் மீறல் என இயக்கத்தின் அதிகாரம் கொண்ட பழிதான் அவரை துரத்தியடிக்கிறது. எல்லா இயக்கமும் துரோகி, உளவாளி மற்றும் பாலியல் குற்றவாளி என பட்டங்களை கொடுக்கிறது.

அவரால் இயங்கக்கூட முடியாத ஒருவனாய் முடக்கிப்போட்டுவிடுகிறது அவரின் நினைவுகள். அதன் எல்லை ஆடுடன் உறவுகொள்ள முயற்சிக்கும் வரை செல்கிறது. அற்புதமே அந்த செய்தி தாள்களை கொடுக்கும்பொழுது, அருள்குமரன் ஒன்றும் நடவாதது போல அவரை வாஞ்சையோடு அணைத்துக்கொள்கிறான்.

அவரின் நினைவின் தடத்தை அழிக்க அவன் மேற்கொள்ள நினைக்கும் செக்ஸ் க்ளப்பிற்கு கூட்டி செல்ல முடிவெடுக்கும்போது அவன் தடுமாறுகிறான். இது தான் அவருக்கு தீர்வா? ஏனென்றால் ஒரு முறை அவர் அங்கிருந்தும் பதற்றத்தோடு ஓடி வந்த தருணம் முன்பேயுண்டு. அவருக்கு ஏற்ப்பட்ட நினைவின் குற்றவுணர்வாக அருள்குமரன் தனக்கு ஏற்ப்பட்டதாக நினைத்து கொள்வதற்கு அவனக்கு காரணம் என்ன வென்று கூட தெரியவில்லை. ‘அது ஏன்’ என அபர்ணாவிடமே கேட்கிறான்.

ஒருவேளை அபர்ணாவின் நெருக்கம் கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.
ஏனென்றால் ஆராதனா போல எனக்கொரு தாய் இருந்திருக்கலாம் என்று அபர்ணாவிடம் சொல்லும் பொழுது ‘ஏன் நான் இல்லையா?’ என்கிறாள்.

அபர்ணாவை சந்திக்கும் முன் ஆப்கானிஸ்தானிலிருந்து அகதியாக வந்திருக்கும் நஜிபுல்லாவின் தாய்க்கு பிறழ் உணர்வால் கிடைக்கும் தண்டனை குறித்த வீடியோ அவனை அருள்குமரனை நிலைகுலையத்தான் வைக்கிறது அந்த தருணத்தில் அவனால் எதுவும் செய்ய முடிவதில்லை. ஐயோ என அலறுகிறான். ஆராதானாவின் நெருக்கத்தை தேடுகிறான், தன்னையே காயப்படுத்திக்கொள்ளத்தான் செய்கிறான். அற்புதத்திற்கு கொடுத்த வாஞ்சையை நஜிபுல்லாவிற்கு கொடுக்க முடியவில்லை, அப்போது அபர்ணாவை சந்திக்கவேயில்லை

அதனால் நஜிபுல்லாவின் துன்புறுத்தும் நினைவை அழிக்க இருக்கும் ஒரே முடிவான சாவைத்தான் தேடிக்கொள்கிறான்.

அரங்கனால், நிகழும் சந்தேகங்களுக்கை உள்ளாகும் அபர்ணாவின் வாழ்வு சிக்கலானது திருமணத்திற்கு முன்னரான அவனுடன் உறவு வைத்துக்கொள்ளும்பொழுது ஏன் நீ மறுக்கவில்லை என்று திருமணத்தின் போதே தொடங்கி விடுகிறது, அருள் குமரனை அது போன்ற ஒரு சமயத்தில் உதவிவேண்டியே சந்திப்பு உருவாகிறது.

அபர்ணாவிடம் தன் தாயை பற்றி சொல்லிய பின் ” அப்பன் கொஞ்ச நேரம் வெளில இருங்கோ .அம்மா மாமாவுக்கு மருந்து போட்டு விட்டு வருகிறேன் இந்த குரல் ஏழு வயதிலிருந்து இப்பொழுது வரை கேட்டுக்கொண்டே இருக்கின்றன அபர்ணா”

அந்த தருணத்தில் தான் குரூரம் என்ற வார்த்தையை அறிமுகம் செய்கிறாள் அபர்ணா. அன்றிரவு குறுஞ்செய்தியாக

“உன்னுடைய அம்மாவிலும் பிழை சொல்லமுடியாது”

“அதற்காக ஆராதானாதான் மீட்டாள் என்பது ஒருவித கற்பனை” என அனுப்புகிறாள்.

அதன் பின்னர் அபர்ணாவின் கணவன் ‘அரங்கன் கூப்பிடுகிறார் நான் வைக்கிறேன் என்று தொலைபேசியை வைக்கும் பொழுது அருள்குமரன் அடையும் தவிப்பு குறித்து வரும் விவரிப்புதான் நாவலில் நாமடையும் உட்சம்.

அபர்ணாவுடன் இருக்கும் தருணமொன்றில் தொலைக்காட்சியில் குண்டு வெடிப்பு செய்தியை பார்த்த கொண்டபோது வெடித்து அழுவதற்கு பின்புதான், இனனொரு குழந்தைகள் குண்டு வெடிப்புக்கு நான் தான் காரணம் என ஒப்புக்கொள்வதோடு நாவல் முடிகிறது.

இறுதியாக எல்லாரும் ஏதோ ஒரு வகையில் பிறழ்வுகளை எதிர்கொண்டவர்கள்தான் என்ற அம்சத்தில் ஒருவருக்கொருவர் துணை என்று இருப்பதை வாழ்வு அனுமதிக்கிறதா? இல்லை நம்மை அது இன்னொருவரை எதிர்கொள்ளவே முடியாத பதற்றத்தை கொடுத்து வாழ்வு நம்மை சிதைக்கிறதா?

இந்த கேள்வியைத்தான் அழுத்தமாக எழுப்புகிறது இந்த நாவல்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *