ஈழத்தமிழர்கள் கொடுத்த விலைக்கு பிராயச்சித்தம், ஐந்தாறு பேரை தண்டிப்பது மட்டுமே அல்ல

விகடன் நேர்காணல் / 29.01.2026
நா.கதிர்வேலன்
படங்கள் : பெ.ராகேஷ்

இலங்கை இலக்கிய உலகின் தனித்ததொரு முகம் சயந்தன். எங்கே ஈழத்தின் கலையும், வாழ்வும், மரபும் செழித்துக் கிடக்கிறதோ, அங்கெல்லாம் சயந்தன் போன்றவர்களின் பங்கும் இருக்கிறது. புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தாலும், மனதளவில் ஈழத்தில்தான் குடிகொண்டிருக்கிறார் சயந்தன். ‘ஆறாவடு’, ‘ஆதிரை’, ‘அஷேரா’ என மூன்றே நாவல்களில் ஈழப்போராட்டத்தை அவர் கொண்டு செலுத்தியது புது வெள்ளமாய் மக்களிடம் சேர்ந்தது.

தன் புது நாவலான ‘திசை ஒன்பது’ வெளியீட்டு விழாவுக்கு வந்தவரோடு நடந்தது இந்த உரையாடல். குரலில் அதிர்வோ, அதீத உடல்மொழியோ, தயக்கமற்ற பாவனையோ இல்லாமல் பதில்களால் அமைந்தது என்ற வகையில் சிறப்பு.

“உங்கள் புதிய நாவல் ‘திசை ஒன்பது’ எந்தப் பின்னணியில் எழுதப்பட்டிருக்கிறது?’’

‘‘ஈழத்திலிருந்து நாங்கள் உலகத்தின் எல்லாத் திசைகளுக்கும் ஓடத் தொடங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாகின்றன. அலைந்து அலைந்து காடுகள், கடும் குளிரான பனி நிலங்கள், உறைந்த நதிகளையெல்லாம் கால்களாலேயே நடந்து கடந்த வரலாறுகள் எங்களுக்கு உண்டு. எங்கே போகிறோம், எப்படிப் போகிறோம் என்றே தெரியாத கொடுமையான பயணங்கள் அவை. அப்படியொரு பின்னணியில் எழுந்ததே ‘திசை ஒன்பது.’ ஆனால், மிகச் சமீபத்தில் நடக்கும் கதை. இக்காலத்தில் ஐரோப்பாவில் நிலைபெற்றுவரும் அகதிகளுக்கு எதிரான மனநிலையும், வலதுசாரிய அரசியலும் மட்டுமல்ல… ஐரோப்பிய ஓரங்களில் நடக்கின்ற யுத்தங்களும், குறிப்பாக உக்ரைன்- ரஷ்யப் போர், அகதிகளின் பாதைகளில் குறுக்கிடுவதைப் பின்னணியாகவைத்து `திசை ஒன்ப’தை எழுதியிருக்கிறேன். மக்களின் மனநிலையோடு இன்னும் சேர்ந்திருக்கும் என நம்புகிறேன்.’’

“புனைவை முதலில் எப்போது, எவ்விதம் உணர்ந்தீர்கள்?’’

‘‘சிறுவயது பள்ளி நாள்களில் என்னிடம் ஒருவித புளுகுக் குணம் இருந்தது. பொய் அல்ல, புளுகு. அதாவது யாரையும் நோகடிக்காத, தீமையற்ற புளுகு. எங்கேனும் கேள்விப்பட்ட ஒரு சுவாரசியமான சம்பவத்தின் ஓர் இழையை மட்டும் வைத்துக்கொண்டு, அதைக் கற்பனையில் விரித்து விரித்து, அதற்குள் என்னையும் கதாபாத்திரமாக இணைத்து நண்பர்களுக்குச் சொல்லும் பழக்கம். அவர்கள் என்னைச் சுற்றியிருந்து கேட்பார்கள். ஒருவேளை அதுதான் தொடக்கமாக இருந்திருக்க வேண்டும்.’’

“போர் முடிந்த பிறகும் இலங்கையிலிருந்து மக்கள் வெளியேறுகிறார்களா?’’

‘‘வெளியேறுவதற்கு உயிருக்கான அச்சம் மட்டுமே காரணமாக இருக்க வேண்டியதில்லை. 30 ஆண்டுக்காலப் போர் எமது இலங்கையின் மொத்தப் பொருளாதாரத்தையும் புரட்டிப்போட்டுவிட்டது. 2021-ல் அங்கே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, நிறைய பேர் படகுகளில் தமிழ்நாட்டுக்கும் வந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். வேலைவாய்ப்பின்மை, உச்சமான வாழ்க்கைச் செலவு இவற்றுக்கு மத்தியில் ஒரு சராசரியான நெருக்கடி இல்லாத வாழ்க்கையை வாழ மக்கள் புலம்பெயர்வதாகப் புரிந்துகொள்ள வேண்டும். இதுவும் ஒருவகையில் போரின் விளைவுதான்.’’

“பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மக்களை விடுவிக்கும் மக்கள் நலனுக்கான அரசியல், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இலங்கையில் தோன்றியிருக்கிறதா?’’

‘‘அநுர குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, ஊழலை ஒழிப்பது, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது, கல்வியைச் சீர்செய்வது என்ற செயல் திட்டங்களை முன்வைக்கிறார்கள். முக்கியமாக, அரச நிர்வாகங்களில் குப்பையைப்போல மலிந்துகிடக்கிற ஊழலை ஒழிப்பதை, அவர்கள் கவர்ச்சிகரமாக முன்வைக்கிறார்கள். ஊழல் அரசியல்வாதிகளைக் கைதுசெய்வது, ஊழல் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்புவது என்று செய்திகள் தடபுடலாக வெளியாகின்றன. சுற்றுலாத்துறை மறுபடியும் உச்சம் தொடுகிறது. போதைக்கு எதிராக தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கிறார்கள். கல்வியை நவீன காலத்துக்கேற்ப சீர்திருத்துகிறார்கள். இதெல்லாம் மக்கள் நல அரசியலுக்கான நல்ல அறிகுறிகள்தான். அதேவேளையில் தமிழ், முஸ்லிம், மலையக சமூகங்களின் பின்னணியில் யோசித்தால், அவர்களுடைய பிரச்னைகள் அப்படியேதான் இருக்கின்றன. போரின் முடிவில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் இல்லை. இனப் படுகொலைக்கான நீதி இல்லை. தமிழர்களுடைய அரசியல் விருப்பமான சுயாட்சி பற்றிய கதையே இல்லை. இவை ஒருபக்கமென்றால் விலைவாசி, பொருளாதார நெருக்கடி இன்னொரு பக்கம். இரட்டை நெருக்கடிதான்.’’

“இனப்படுகொலைக்கான நீதியை அநுர அரசு வழங்குமா?’’

‘‘இனப்படுகொலைக்கான நீதி என்பது குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிப்பது என்று ஒரு கருத்து இருக்கிறது. ஆனால், நான் இனப்படுகொலைக்கான நீதி என்பது இனப்பிரச்னைக்கான இறுதித் தீர்வு என்றுதான் நம்புகிறேன். ஈழத்தமிழர்கள் கொடுத்த விலைக்கு பிராயச்சித்தம், ஐந்தாறு பேரை தண்டிப்பது மட்டுமல்ல. அவர்களுடைய இறுதி இலக்கான அரசியல் தீர்வை அடைவதுதான்.’’

“ஆனால், `இனப்படுகொலையாளர்களை தண்டிக்க வேண்டும்’ என்ற குரலும் எழுகிறதே?’’

‘‘எனக்கு நம்பிக்கை இல்லை. மகிந்த ராஜபக்சேகால அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இப்போது கைதுசெய்கிறார்கள். போதைப்பொருள் கடத்தலுக்காக ராணுவ அதிகாரிகளையும் சிறையில் அடைக்கிறார்கள். ஆனால், இனப்படுகொலை விவகாரத்தில் இப்படித் துணிச்சலான நடவடிக்கையைக் கண்டிப்பாக எடுக்க மாட்டார்கள். அது சிங்கள ஆன்மாவைக் காயப்படுத்தும் என்று அநுர அரசுக்குத் தெரியும். மற்றது, ஊழல், போதைப்பொருள் எல்லாம் தனிமனிதர்களுடைய குற்றங்கள். இன அடக்குமுறை என்பது, அடிப்படையில் அரசுடையது. யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசு என்ற கட்டமைப்பிலிருந்து கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒடுக்குமுறைக்கும் படுகொலைக்கும் அரசே நீதி வழங்கச் சாத்தியமேயில்லை. அதனால்தான் தமிழர்கள், சர்வதேச விசாரணைகளைக் கேட்கிறார்கள். நீதி வெளியேயிருந்து வர வேண்டும் என்கிறார்கள். தற்போதைய உலக ஒழுங்கில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. நான் இந்த விஷயத்தில் மறுக்கப்படுகிற நீதியைப் பணயமாக வைத்தாவது இறுதி அரசியல் தீர்வுக்காக அரசை நெருக்க வேண்டும் என்கிறேன். அதுதான் எதிர்காலத்துக்கானது.’’

“அநுர குமார திசநாயக்கவைப் பற்றி இலங்கையில் என்ன கருத்து இருக்கிறது?

‘‘அவர் சிங்கள, தமிழ் மக்களிடையே விருப்பம் பெற்ற தலைவராகத் தோன்றுகிறார் என்பதை ஏற்கத்தான் வேண்டும். அவருடைய ‘பக்கத்து வீட்டுப் பெடியன்’ தோற்றத்தை வயது வித்தியாசமில்லாமல் எல்லோரும் ரசிக்கிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் சமூக ஊடகங்களில் பிரபாகரனுக்கு அடுத்த உண்மையான தலைவர் என்று தமிழர்களே எழுதுவதையும் பார்க்க முடிகிறது. புலிகளுடைய பாடல்களைவைத்து அவருக்கு ரீல்ஸ் செய்தும் போடுகிறார்கள். அவருடைய தனிப்பட்ட பழக்க வழக்கங்களைப் பார்க்கிறபோது ‘நன்றாக வளர்க்கப்பட்ட குழந்தை’ என்று சொல்வார்களே… அப்படி எனக்கும் தோன்றியிருக்கிறது. பிரச்னை அதுவல்ல. ஓர் உதாரணம் சொல்கிறேன். ‘காணாமல் போனவர்களுடைய தாய்மார்களின் துயரம், ஒரு ஜே.வி.பி இயக்கக்காரனாக எனக்குத் தெரியும்’ என்று அநுர சொல்கிறார். `தமிழ்ப் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று அவர்களுக்குச் சொல்ல வேண்டும்’ என்றும் சொல்கிறார். ஆனால், அதற்குக் காரணமானவர்களை அம்பலப்படுத்தவோ, தண்டிக்கவோ அவரால் ஒருநாளும் இயலாது.

இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கே உரியது என்ற நம்பிக்கை அது. தமிழர்கள் வெளியிலிருந்து வந்த வந்தேறிகள், இரண்டாம் தர பிரஜைகள் என்ற நம்பிக்கை. இது இன்று, நேற்று வந்ததல்ல, ஆயிரம் வருஷ நம்பிக்கை. இதை பௌத்த மகாசங்கமும் கடும் போக்குள்ள பிக்குகளும் எண்ணெய் ஊற்றி ஊற்றி வளர்த்தெடுக்கிறார்கள். நீதித்துறைகூட அவர்களுக்குப் பணிந்தே ஆகவேண்டிய நிலை.’’

“புலிகள் பற்றிய தற்போதைய நிலையை நீங்கள் மனதாலும் நினைத்தீர்களா?’’

‘‘ஒருநாளும் இல்லை. சோவியத் நாடு உடைந்த பிறகு, உலகம் – அமெரிக்கா என்ற ஒரு துருவ நிலைக்கு வந்த பிறகு, விடுதலைப் போராட்டங்களின் கதி என்னவாகும் என்று ஒரு சிலர் முன்னரே கணித்துச் சொன்னார்கள். ஆனால், புலிகளோடு இருந்த மக்கள் அப்படி ஒருபோதும் நம்பவில்லை. உயிரையே கொடுப்பது என்ற உச்சபட்ச தியாகமும், போராட்டத் தேவைக்கான அறமும் ஒருபோதும் தோற்காது என்றுதான் நம்பினார்கள். ஆனால், என்னவெல்லாமோ நடந்து முடிந்துவிட்டன. இன்றைக்கும் என்னைக் கேட்டால் ஆயுதப் போராட்டம் ஒரு தவறான முன்னுதாரணம் என்று சொல்ல மாட்டேன். ஆனால், அது எவ்வளவு விரைவாக எதிர்த் தரப்பைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கூட்டிவர முடியுமோ, அவ்வளவு விரைவாகக் கூட்டி வந்துவிட வேண்டும். பிறகு அங்கிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால், ஒரு கட்டத்துக்கு மேல் மக்கள் களைத்துவிடுவார்கள். முன்னாள் போராளிகளின் இன்றைய கைவிடப்பட்ட நிலையைக் காணும்போதும், தமிழ் அரசியலின் தேக்கநிலையைப் பார்க்கும்போதும் ஒருவேளை புலிகள் ஆயுதங்கள் இல்லாத அரசியல் சக்தியாக நீடித்திருக்கலாமோ என்ற எண்ணம், அதுவும் முன்னாள் ஆயுத இயக்கமான ஜே.வி.பி அண்மையில் ஆட்சியைப் பிடித்த பிறகு அடிக்கடி தோன்றுகிறது.’’

“உங்களுடைய விருப்பத்துக்குரிய இலங்கை எழுத்தாளர்கள் யார் யார்?’’

‘‘சிறிய வயதில் செங்கை ஆழியானை நிறைய பிடித்திருந்தது. பிறகு எஸ்.பொ., கே.டானியல், அ.முத்துலிங்கம், ஷோபாசக்தி இவர்களெல்லாம் பிடித்த இலங்கை எழுத்தாளர்கள். சிங்கள எழுத்தாளரான தக்‌ஷிலா ஸ்வர்ணமாலியின் தமிழ் மொழிபெயர்ப்புகளையும் விரும்பிப் படிக்கிறேன்.’’

“நீங்கள் தமிழிலிருந்து சிங்களத்தில் மொழிபெயர்த்து, பல நூல்களைத் தொடர்ச்சியாகப் பதிப்பிக்கிறீர்கள். அது பற்றிச் சொல்லுங்கள்?’’

‘‘ஆதிரை பதிப்பகத்தை ஒரு பொதுவான பதிப்பகமாகத்தான் தொடங்கினேன். பிறகு தமிழிலிருந்து சிங்களத்தில் மொழிபெயர்ப்புகளை வெளியிடும் ஒரு பதிப்பகமாக அதைத் தொடர்ந்து நடத்துகிறேன். அவ்வப்போது சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகள் வந்துகொண்டிருந்தாலும், தமிழிலிருந்து சிங்களத்துக்கு இல்லை என்றே சொல்லத்தக்க நிலையில் அதைச் செய்வதுதான் பொருத்தம் என்று தோன்றியது. ஈழத்தமிழர்கள் தங்களுடைய பிரச்னைகளைப் பற்றி இந்தியாவோடு பேசியிருக்கிறார்கள். தமிழ்நாட்டோடு, ஐ.நா சபையோடு, அமெரிக்கா வோடெல்லாம் பேசியிருக்கிறார்கள். ஒரு முறை சிங்கள மக்களோடும் பேசிப் பார்ப்போம். அதற்கு இலக்கியத்தைவிட வேறு தெரிவு இல்லை. தமிழர்களுடைய வாழ்வை ரத்தமும் சதையுமாக அவர்கள் உணரும்போது மாற்றம் பிறக்காதா என்ற எதிர்பார்ப்புதான் அது.’’

“தமிழகத்துக்கு வரும்போது நீங்கள் உணர்வது என்ன?’’

‘‘ரோட்டோரம் நின்றாலும், சாப்பிடப் போனாலும், கடைக்குள் நுழைந்தாலும் எங்கெங்கு காணிலும் ஓர் அதிர்வாக மனதில் நுழையும் அந்த தமிழ் Vibe… அதுதான்.’’