ஆதிரை : முன்நின்று கல்நின்றவள் – கமலக்கண்ணன்

களத்தில் ஆயுதமேந்திப் போராடும் வீரர்களுக்கு இணையாக அன்றாட வாழ்வின் நிலையின்மையுடன் போராடும் குடியானவர்களும் போரின் வலியை ஏந்திச் சுமப்பதில் முதன்மையானவர்களே. பத்துக்கும் குறைந்த வயதுடைய முகையவிழாக் குழந்தைகள், பேதலிப்பின் விளிம்பில் நின்றபடி முன்னகரும் தாய்மார்கள், நரைகூடிக் கிழப்பருவம் எய்தியபின்னும் பிஞ்சுகளின் மரணத்தைக் கண்டு வேதனையுறும் முதுமகன்கள் என நூலெங்கும் ஈழ விடுதலைப் போரின் வலிமிகுந்த சான்றுகள் கதாபாத்திரங்களாக நிரைகட்டி வருகின்றனர்.

கடல் பிரித்த கோட்டிற்கு இப்புறம் கூட்டமாய்த் திரண்டு நின்று அகம் பதறும் எண்ணத் துணியாத கொடூரங்கள் அரங்கேறிய துன்பவியல் நாடகத்துக்கு மெளன சாட்சிகளாக நின்றோம். அந்தச் சமீபத்திய வடுவை ஆழமாகக் கிளறுகிறது ஆதிரை வாசிப்பு. எட்டாண்டுகளுக்கு முன்பு ஆதிரை வாசித்திருக்கிறேன். மீண்டும் கூர்மை கூடட்டும் என்று தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்புகளை வாசிக்கத் திட்டமிட்டபோது முதலில் ஆதிரையைத்தான் எடுத்தேன்.

இம்முறை வாசிப்பின் முடிவில் கண்ணீரை, அழுகையை, வாழ்க்கை பற்றிய புரிந்துணர்வை, மகிழ்ச்சியை எனப் பல்வேறு ஆதார உணர்வுகளை நினைவுகளின் தொகையாகப் பொதி போல் அகத்தில் குவித்துச் சென்று விட்டது. என் அகத்தில் விளைந்த இளகலும் முதிர்வும் இந்த வாசிப்பை கனத்த முற்றுப்புள்ளியாக்கி மெளனத்தில் உளையவிட்டது. பொதுவாக ஒரு புதினம் மேற்சொன்ன உணர்வுகளை வாசகருக்குத் தந்து சென்றாலே அது இலக்கிய வெற்றி.

ஆனால் இந்நாவலை வாசித்து முடித்ததும் எந்தக் குறிப்பிட்ட உணர்விலும் நிலை கொள்ள இயலவில்லை. தமிழன் மட்டுமல்ல கூர்ந்து வாசிக்கும் யாராலும் இயலாது. ஆரம்பப் பக்கங்களில் நிகழும் கொடூரங்களில் அகம் சூடுபட்டுப் பதறித் தவித்த நாம் மெல்ல மெல்ல படுகொலை நோக்கி அழைத்துச் செல்லப்படுகிறோம். வெடி விழுந்த கோயில் விதானம் போல் நம்மை நெருட்டுகிறது உறைந்த குருதியின் நினைவுகள். யாமத்து ஓலம்போல் உறக்கத்தைக் கெடுக்கிறது தீயாயெரிக்கும் கொடுங்கனவுகள். இருப்பின் மலர்ச்சியை வாட்டி வதைக்கிறது புதையுண்ட பிஞ்சுகளின் உயிர்ப் படிமங்கள். தொண்டை வறளும் ஓலங்கள் நெஞ்சின் சுவர்களில் மோதி மடிகின்றன.

வாசிப்பின் ஓட்டத்தில் ஒரு புள்ளியில் துயருக்குள்ளான தமிழினத்தின் வலி மிகுந்த பக்கங்கள் உணர்வுநீக்கி மருந்து கொடுத்ததைப்போல ஆயின. புலன்கள் செயல்படும் தளத்திலான வலியுணர்வு இற்றுவிட்டது. மெலிசுடர் போல அகத்தின் வலி மட்டும் எஞ்சுகிறது. இன்னும் சில பக்கங்களில் அகவலியும் அற்று அணைந்துபோய் மரத்துப் போன எண்ணவெளி உருவாகிவிட்டது. அறாக் கண்ணீர்த் தாரையின் கரிப்புச்சுவை அகத்தின் நாவுகளுக்குப் பழகிவிட்டது. நூலில் அரிதாக ஆங்காங்கே வெளிப்படும் புன்னகை மீதும் அடுத்து வரக் காத்திருக்கும் அழிவின் வேதனை நிழல் படிந்து அச்சுறுத்துகிறது. யாருமற்ற வெறுமையைப் பார்த்து ஊமையாய் மேடை ஏறி நின்று அரற்றத் துடிக்கிறது உள்ளம்.

சயந்தனின் ஆதிரை ஈழ விடுதலைப் போராட்டக் களத்தை அருகாமைச் சட்டகத்தில் வைத்து அணுகுகிறது. அதாவது புனைவின் பலத்துடன் களத்தில் நிகழ்ந்த மிகக் கொடுமையான நிகழ்வுகளைத் தன்னியல்பாகச் சித்தரித்ததும் அதை மிகச் செம்மையான படைப்பூக்கத்துடன் செய்ததும் ஆதிரை மட்டுமே. ஆதிரையின் உணர்வுச் செறிவுக்கு அருகே வேறெந்தத் தமிழ் நாவலும் நெருங்கி வர முடியாது. பல நூறாண்டுகள் தமிழின் உச்ச இலக்கியமாக இது நிலைத்திருக்கும்.

பொதுவாக ஈழ இலக்கியம் அரசியல் மீதே கவனத்தைக் குவிக்கும். ஆனால் ஆதிரை நம் நேரடி வாழ்வில் இருந்து உயிர்பெற்று எழுந்த பல கதாபாத்திரங்கள் வழியாக வாழ்வையே முதன்மைப் பொருளாகத் தீட்டுகிறது. அரசியல் இல்லாமல் இல்லை அது உயிர்களின் பெருவலியால் இயல்பாகப் பின்னணிக்கு நகர்கிறது. அதுவே இதன் தனிப்பெரும் சாதனை.

மயில்குஞ்சரும் ஆச்சிமுத்துக் கிழவியும் அவரவருக்குத் தெரிந்த இயன்ற வழியில் வரும் தலைமுறைக்கு உதவுகின்றனர். தன் மகன்கள் சாவதைக் கண்டு அரற்றிய பின்னும் தலைமுறைப் பிஞ்சுகளைக்கு ஒரு வாய் உணவூட்டத் துடிக்கிறாள் ஆச்சி. பொருட்டின்றி மலிந்து போன சாவுகளை எண்ணி அரற்றுவதோடு நில்லாமல் போராளிகளுக்குக் கானக வழிகாட்டியாக வாழ்கிறார் மயில்குஞ்சர். தனியர்களின் அன்பும் பரிவும் தியாகமுமே உலகளாவியதொரு நல்லரசியலை நிகழ்த்த முனைகிறது.

புலிகளின் போராட்ட காலகட்டங்களின் அத்தனை நியாயங்களை முன்வைப்பதோடு அதன் மறுபக்கத்தின் மறுபக்கத்தையும் தவறாமல் காட்டிச் செல்கிறது இப்புதினம். எங்குமே வெற்று ஆவணங்களின் தொகுப்பாகப் புதினம் நகரவேயில்லை. நுண்ணோக்கியின் துணைகொண்டு துலங்கக் கண்டாலும் உயிர்ப்புடன் திகழும் கதை மாந்தர்களின் அணுக்கத்தால் அன்பின் மானுடப் பரிவின் கூறுகளோடு முன்னேறுகிறது. வேட்டைக்குச் செல்லும்போது சங்கிலி லெட்சுமணனுக்கு வேட்டையின் நுணுக்கங்களை விவரிக்கும் காட்சி இனமானத் தமிழர் வேட்டையாடப்பட இருப்பதன் முன்னறிவிப்பு போல் இருந்தது. மிருகங்கள் மனிதர்களைப் போல அல்லாமல் வேடர்களின் மணத்தைக் காற்றின் மூலம் அறிந்து திரளாகத் தப்பும் ஆற்றலுடையன என்ற குறிப்பு வருகையில் மனிதர்களின் தாழ்நிலை பற்றிய பரிதவிப்பு எழுகிறது.

வினோதமான வர்ணனைகள். ஆறிய உடற்புண்ணின் நிறத்தில் கறம்பிய கோரைக்கிழங்கு என்று ஓரிடத்தில் வருகிறது. யதார்த்தமாகக் காட்டில் கண்ட ஒரு பொருளைப் புண்ணுடன் தொடர்பு படுத்துகையில் அது வலியின் பாதைக்கு வாசகரைப் பழக்குகிறது. எழுத்தாற்றலைக் கண்டு வியப்பதா அது உருவாக்கும் குருதிக் கொப்பளிப்புச் சூழலை எண்ணி மறுகுவதா.. ஒரு கணம் குழம்பிச் செயலற்று நிற்க வேண்டியுள்ளது. அந்தக் கற்பனை எழுத்தாளனின் நாடி அலையின் வேதனையில் இருந்து பொங்குவது என்று உணர்ந்து பிறகு அமைதியாக வேண்டியுள்ளது. உள் அலைகளைக் கட்டுக்குள் வைக்க வினைக்கெட வேண்டியதாகிறது.

வெயிலின் நகம் உடலைக் கிள்ளியது என்று சொல்வதும் காட்டுக்கொடியைப் போல் எண்ணங்கள் சிக்கிக் கிடப்பதும் கண்ணீர்த் துளி திரண்டு பன்றியின் கால்தடத்தில் விழுவதும் இத்தி மரமிருந்த இடத்தைக் கடக்கையில் குழந்தை புதைத்த இடத்தைப் பொருத்திக் காட்டுவதுமாகத் தெறிப்பும் தெளிவும் ஒருங்கே அமையப் பெற்ற விதப்பு முறையை நின்றெண்ணிச் சிந்தித்துப் பின் கடக்க வேண்டும். ஒவ்வொரு அடியாக முன்னகர்த்தி ஒவ்வொரு கம்பியாக மீட்டித்தான் இந்தப் பெருநாடகத்தை நிகழ்த்தி இருக்கிறார் ஆசிரியர்.

மான்வேட்டைக்குச் செல்லுகையில் கலையும் பெட்டையும் கொஞ்சும் அழகைப் பார்த்ததும் அழகான குடும்பத்தை அழிக்கும் குற்றஉணர்வு சுரந்துவிடுகிறது. குற்றஉணர்வு சுரக்க வேண்டிய அதே ஊற்றில் சக மனித இனத்தையே அழிக்கத் துடிக்கும் வன்மமும் மனிதர்களுக்குச் சுரக்கிறது என்பது முரண் மட்டுமல்ல பேரவலம். பிறப்பின் நோக்கம் சிதைத்த அபத்தம். கொல்லும் முன் துவக்கின் வில்லைக் கட்டிப்போடும் தடையும் விடுவித்துச் சுண்டித் தெறிக்கவிடும் விரலும் அகத்தின் அங்கமே!

நாவலின் முதன்மை நோக்கங்களுள் ஒன்று வாசிப்பவர்களின் மனசாட்சியைத் தூண்டிக் குற்ற உணர்வை அவர்களுக்கு அடையாளம் காட்டுவது. ஐந்து ரூபாய் காசுக்காகக் குரங்குகளைச் சுடுகிறவனுக்குப் பிள்ளைகள் குரங்கு முகத்துடன் பிறக்கும் என்ற சிறுபிள்ளைத்தனமான நம்பிக்கை இடனறிந்து சொல் பொருந்திய வலியில் வாசிக்கையில் எத்தகைய வலுவான குற்றஉணர்வை எழுப்புகிறது!

நாமகள் வயிற்றில் இருந்தபோதே அன்னையிடம் மார்பன்னத்துக்கு ஏங்கும் வெள்ளையன் வளர்ந்து இயக்கத்தில் சேர்ந்து துவக்கெடுத்துச் சுடுவது ஒரு உருமாற்ற வளைகோடு என்றால் அவனே தன் உடலில் புதைந்துவிட்ட சிறு சன்னத்தைச் சமாளிக்க முடியாமல் அகம் சோர்ந்து இயக்கத்தில் இருந்து விடுவிப்பு கோரித் துண்டு கொடுத்து விட்டுப் பிள்ளைகள் முகம் பார்ப்பது இன்னொரு வளைகோடு.

தார்ப்பாலின் கூடாரங்களில் தங்கும் அவசர வெளியேற்றக் காலத்தில் தன் மகள்களுக்காகத் தங்கையைத் தவறவிட்டுவிட்டுத் தவிக்கும் அவனது குற்றஉணர்வில் நம் முகங்களைப் பொருத்தி விடுகிறார் ஆசிரியர். பெரியப்பாவின் மரணத்தைக் கற்பனையால் கண்டே நொடித்துப் போன அவன் மனது இயக்கத்துக்கு வெளியே வந்தபிறகு எப்படியெல்லாம் கொடுங்கனவுகளால் துரத்தப்படுகிறது என்பது ஒரு முக்கியமான கண்ணி.

இப்படி ஒட்டுமொத்தத் தமிழினத்தின் குற்றஉணர்வுகளைப் பலவிதங்களில் கிளர்த்துகிறது ஆதிரை. சயந்தனே தன் குற்றஉணர்வு தாளாமல் சில வரிகளில் புதினத்துக்குள் வந்து மனம் தளர்த்த முயன்று பார்க்கிறார்.

மரணத்தைப் பொருட்டெனக் கருதாத வாலிபன் முதிர்ந்து மணந்து தன் பசுங்குழவியைக் கையில் ஏந்தியதும் மரணநிழல் சூழ்வதை உணர்ந்து நடுங்குவதைக் காட்டியுள்ளார். பின்னிளமையும் பிறப்பும் இறப்பும் இன்மையும் பிணியும் ஏழ்மையின் வன்மையும் யுத்தக் காலத்தில் இயல்முரண்கள் என்று காட்டிய ஆசிரியரின் அகத்தை ஆரத்தழுவிக் கொள்கிறேன்.

நெருநல் இருந்தவன் இன்று அகால மரணமடையும் கொடுமை உடைய போர் சூழ்ந்த நிலத்தில் பதினேழு பதினெட்டு வயதுகளில் காதல் வீரியத்துடன் எழுகிறது. அதுதான் காதலுக்கு உகந்த பருவம் என்பதன் உயிரியல் சான்று போல.

சட்டென மழை வலுத்துப் புயலாகும் காட்சி ஒன்று இருக்கிறது. செறிவாக எழுதிய காட்சிகளுள் ஒன்று. வாழைத்தோப்பு சரிவதும் கோழிகள் கேருவதும் ஆட்டு நிரை மேட்டில் கனைப்பதும் எனத் துல்லியமான வார்ப்பு. நானும் மழைவில் புதினத்தில் வெள்ளக் காட்சியை எழுதி இருக்கிறேன். இதைப் படித்ததும் நாணமே எஞ்சியது. பிற்பகுதியில் வரும் ஆழிப்பேரலை கொந்தளிப்புக் காட்சியும் அத்தகைய உணர்வையே ஏற்படுத்தியது. நான் வேடிக்கை பார்த்து எழுதியதற்கும் வலி தாங்கித் தப்பிப் பிழைத்தவன் எழுதியதற்குமான இயல் வேறுபாடுகள் இவை.

பிறகு இன்னொரு ஒப்பீடும் தோன்றியது.

ஆழிப்பேரலைக் காட்சி ஒன்றையும் எழுதியுள்ளார். மழைவில்லில் நானும் எழுதியுள்ளேன். அது தன் பங்குக்கு அப்பாவி உயிர்களைச் சூறையாடிச் செல்கிறது. அந்தச் சித்தரிப்புகள் மிக அணுக்கமாக வலி ஏற்படுத்தின.

இந்நாவலே ஆழிப்பேரலையின் வீரியத்துடன் தான் நிகழ்கிறது. சாதிச் சச்சரவுகள், இத்தி மரம், நம்பிக்கைகள், தலைமுறை உணர்ச்சிகள், தாய்மை, தோழமை, காமம் என எந்த ஆதார நிலைப்பாட்டையும் பாகுபாடின்றி போர் அடித்து உடைத்தெறிகிறது. எறும்புக்கூட்டத்தைச் சுற்றித் தீக்குழம்பை ஊற்றி ஒழுகவைத்ததுபோல் நிகழ்கிறது இனப்படுகொலை.

லெட்சுமணன் அட்டைப்படத்தில் புரவியேறி வந்த எழில்மிகு மாவீரனைக் கற்பனையில் ரசித்து அகச் சிவப்பு கொள்ளும் நேரம் புலிகளின் கொளுந்து வெற்றிகள் நிகழ்வதால் உண்டாகும் வெற்றிச் செருக்கு நுட்பமாகப் புனையப்பட்டுள்ளது. தலைவரின் இறப்பு குறித்த உரையாடல்களை மிகச் செறிவாகப் பேசுகிறது சிவராசன் பாத்திரம். அவரே ஆதிரையை அறிமுகம் தந்து தாழாமல் அரற்றுகிறார். சிறிய பாத்திரம் என்றாலும் சிவராசன் தொகுத்து வழங்கும் இயக்கத்தின் சிறப்புகள், தோல்வி குறித்த பார்வை, பெண் போராளிகளின் பங்கேற்பு யாவும் கண்ணீரை வரவழைக்கின்றன.

வன்முறையை எழுதுவதென்றால் அதன் மீது வெறுப்பு ஏற்படும்படி எழுத வேண்டும். வேழத்தின் மிதிபட்டு சாலையில் நசுங்கி ஒட்டிய கிழவியின் உடல், ஹெலியில் இருந்து பீக்குண்டு போல் தூக்கி எறியப்பட்ட வாலிபச் சடலம், தலை உடல் தனித்தனியே கிடக்கும் அப்பாவிச் சடலம், எரியில் எறியப்பட்ட குழந்தையின் தாய், நம்பிக்கையுடன் தங்களைச் சுமந்து செல்லும் தந்தையின் வேட்டிக் கிழிசலை வெள்ளைக் கொடியாகக் காட்டியபடி இறந்த பிள்ளைகள்… என எங்கும் வன்மத்தின் மீதான சாடல். சாடல் எனில் நேரடியான சாடல் இல்லை, புனைவின் வலிமையோடு முன்வைக்கப்படும் உணர்வெழுச்சிக் காட்சிகள். ஆதிரை வாசிப்பால் போரென்னும் பெருங்குற்றத்தைப் போற்றும் எவரும் நாணித் தலைகுனிவர்.

முந்தைய தலைமுறையின் சாதிப் பிரிவினைகளைச் சந்திராவுக்கும் அவள் அம்மா ராசாமணிக்குமான உரையாடல்கள் கூர்மையுடன் எடுத்தியம்புகின்றன. தன் உதரம் பிறவா மகனாகக் கருதிய லட்சுமணனைத் தள்ளி வைக்க அறிவுரை சொல்லும் ராசாமணியைச் சந்திரா வெறுத்துச் சினக்கும் கணமும் பேரினவாதப் படைகளிடம் சிக்கி எப்படித் தன் தந்தையும் தாயும் அல்லல் உறுகிறார்களோ என்று கலங்கும் மகளின் உள்ளப் பொருமலும் உலக மாந்த உணர்ச்சிகளின் அத்தாட்சி. சாதிப் பாகுபாட்டின் கீழ்மையைத் தொப்புள் கொடியுறவின் மேன்மை வெல்லும் நோக்கத்தையும் எய்திய படைப்பு இது.

சந்திரா வயிறு திறவாமல் உலகக் குழந்தைகளுக்காகத் தவிக்கும் தாய் என்றால் சோதிமலர் இந்நாவலின் ஒளிகளுள் ஒருத்தி. பாம்பு தீண்டி இறந்துகொண்டிருக்கும் கிழவியை மிதிவண்டியில் மடக்கி வைத்து இரவில் அழுத்திச் செல்லும் காட்சி நாவலின் அற்புதங்களில் ஒன்று. அவளுடைய ஏமாற்ற நிலையும் மனத்திடமும் மகிழ்ச்சியான பேச்சும் அனைவருக்காகவும் உதவும் பண்பும் ஊழ் விரட்டிச் சென்ற போர்க்களத்திலும் தொடர்வது நாவலில் தேடிப் பிடித்த ஆறுதல்களுள் ஒன்று. அவளுடைய மகள் பெயர் கானகி! அக்குழந்தையின் கன்னத்தை அன்பாய்க் கிள்ளிக் கொண்டேன். தன் காதல் கணவர் போருக்கு இரையாகும்போது கண்ணீரே வராமல் அகம் நோக்கிப் பார்க்கிறாள். காலம் செய்த கோலம். யாரைக் குற்றம் சொல்வது.

கொத்துக் கொத்தாகச் சுடப்பட்டுச் சாகும் தமிழினத்தவரை ஆவணப்படுத்துவதிலும் நுட்பம். ஓரிடத்தில் ஈழ நாதத்தில் ‘நேற்று சுடப்பட்டு இறந்தவர்கள்’ என்ற பகுதி தினமும் வெளியானது என்று சொல்லிவிட்டுக் கடந்து விடுகிறார் ஆசிரியர். வாசிக்கும் நமக்குள் அந்த வரி வெடித்துக் கரும்புகையாகச் சூழ்கிறது. ஏதோ காய்கறி விலை, சென்செக்ஸ், விளையாட்டு ஸ்கோர் போல மரணங்களுக்கென்று பட்டியல் தினசரி வெளியாகும் அவலம் இந்தப் புவியில்தான் நிகழ்கிறது என்பது எத்தகைய பதற்றம் தருவது!

புதினத்தில் குழந்தைகளைப் பல இடங்களில் முன்வைத்தது நெஞ்சில் விழுந்த கடைசிக் குண்டு. பல இடங்களில் ஷெல் அடிக்கையில் குழந்தைகள் வீறிடுவதும் அவர்கள் எரிந்து சாவதும் சுனாமியின் கொந்தளிப்புக்குள் சிக்கிய நிறை மாத கர்ப்பிணி ஈன்ற சிசுச்சடலம் தொப்புள்கொடியுடன் இருப்பதும் சாந்த இத்திமரத்தின் வெறுமை பதைந்த குழந்தையின் உடலை நினைவூட்டுவதாகச் சொல்வதும்! அப்பப்பா! கருணையற்ற ஆசிரியர்!

பல இடங்களில் மனிதர்கள் கொத்தாய்ச் சாகும் பெருஞ்சோகம் நிகழ்ந்து முடிந்ததும் ஒரு துளிரும் நம்பிக்கையையும் சேர்த்தே இந்நாவல் மண்ணூன்றுகிறது. வாசித்துச் செல்ல செல்ல அந்த நம்பிக்கை முழுத்தாவரம் ஆகும் முன்பே சிதையக் காண்கிறோம். நம்பிக்கைகள் மீதான அவநம்பிக்கைகள் வளர்ந்து அங்கிருந்து நான் சொன்ன அகம் மரத்துப் போதல் நிகழ்கிறது. போரின் இறுதிக் கட்டத்தில் கூட அத்தார் தனது முந்தைய புலப்பெயர்வைச் சொல்லி அதற்கும் இதற்குமான சோர்வைக் குறிப்பிடுகையில் வெள்ளையனிடம் சற்றே நம்பிக்கைக் கீற்று மிளிர்கிறது. முதல் முறை திரளாகப் புலம்பெயரும் தன்னிரு மகள்களும் அவனுக்கு அந்த ஊக்கத்தையும் கட்டாயத்தையும் தருகிறார்கள். ஆனால் வாசகர்களுக்கோ வலி மிகுந்த புன்னகை படிகிறது.

அத்தாரைக் காதலித்து மணமுடித்தது முதல் மாத்தளன் கடற்கரையில் தார்ப்பாலின் கூடாரங்களில் தங்கும்வரை சந்திரா இந்த இயக்க வன்முறையை வெறுத்துக்கொண்டே இருக்கிறாள். அவளுக்கு அதற்கு மாற்று வழி சொல்லவும் இயலவில்லை என்றபோதும் கண்ணுக்குக் கண் என்ற கோட்பாடு அவளை நெருட்டி வாட்டுகிறது. எல்லோர் மீதும் சினம் உண்டாகித் தான் மனம்பிறழப் போவதாகப் பதறுகிறாள். அன்பின் இயலாமை. அவள் வெடி பட்டு மண்பட்ட குருதி வழியச் சாகும்போது அருகிலேயே அமர்ந்து சாகிறான் அத்தார்.

உயிரைக் காக்க ஒரு தாய் பொய்க் கல்யாணம் வேண்டுகிறாள். புதியவர்கள் சந்திப்பு நிகழ்கிறது. போரை அறியாப் பசி மட்டும் விழித்தே கிடக்கிறது. கஞ்சிக் கொட்டில்கள் தன்பாட்டுக்குப் பசியாற்றுகின்றன. இயக்கத்தில் இருந்தோரை அழைத்துச் சென்று அதில் பலரை மாயமாக்குகிறார்கள். தீராத வலி. மீனாட்சி தானே குழியில் படுத்ததைப் போன்று சாகிறாள். அவளைப் பதுங்கு குழியில் இட்டு மூடிவிட்டுப் பிறர் புறப்படுகிறார்கள். மண்ணையிட்டு மூடுகையில் பேத்தி இசைநிலாவும் ஒரு கை மண்ணள்ளிப் போடுகிறாள். நாமும் ஒரு துளிக் கண்ணீரை மானசீகமாகச் சிந்துகிறோம்.

போருக்குப் பிந்தைய விரக்தி நிலை வெகு சில பக்கங்களில் தீவிரமாக வருகிறது. நம்பிக்கைகள் நசிந்த பிறகு முன்பே இந்தச் சிதைவு ஏற்படுமென்று தனக்குத் தெரியுமென்று சில மூத்த இயக்கத்தினரே சொல்வதைக் கேட்கையில் போரின் அபத்தம் விளங்குகிறது. இறுதிப் பகுதியில் வரும் ஆதிரை ஒரு மகத்தான குறியீடு. அர்ப்பணிப்பும் கட்டுணர்வும் மிகுந்த ஈழ விடுதலைப் போரில் பெண்களின் பங்கு சிலிப்பை ஏற்படுத்துவது.

காந்திய வழிப் போராட்டத்தின் மீது நம்பிக்கைக் கொண்டவன் நான் என்றபோதும் அது வெற்றிபெற்றதற்குக் காலனி ஆதிக்க நாடுகளின் கிறித்தவ நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு அவர்களின் குற்றஉணர்வைத் தூண்டும் ஒரு தந்திரத்தைத் தன்னகத்தே அது கொண்டிருந்ததும் காரணம். மோகன்தாஸ் கரம்சந்த் போல பல நேரிய அறிவியலாளர்களும் நாட்டுக்கு உழைத்த வல்லுநர்களும் ரஷ்ய பலவந்த அரசாங்கத்தால் கேள்வியே கேட்கப்படாமல் கொல்லப்பட்ட கதைகள் ஏராளம். இதன் மூலம் காந்திய அறவழியைக் கேள்விக்குள்ளாக்க முயலவில்லை. மாறாக ஆயுதத்தின் வகைமையையும் அதை எடுக்க வேண்டிய அவசரத்தையும் எதிரியின் உளவியல் நிர்ணயம் செய்கிறதோ என்ற அவதானிப்பை முன்வைக்கிறேன்.

ரெளலத் சட்டத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த ஜாலியன் பூங்கா படுகொலையும் ஈவு இரக்கமற்ற ஒன்றே. அத்தகைய சுடுவெயில் தரையிலும் அறத்தின் துண்டினை விரித்து அமர்ந்த பல் இல்லாத கிழவரும் வியப்பளிக்கத்தான் செய்கிறார்.

ஆனால் வரலாறு அப்படியொன்றும் எளிய இரு கண்களுக்கு முன் துலங்கி விரிந்து விடாது என்று புரிந்ததும் ஊழிற் பெருவலி யாவுள என வள்ளுவன் குரல் கேட்டு அமைதி கொண்டேன். ஆதிரை தமிழின் மிகச் சிறந்த புதினங்களுள் ஒன்று. களத்தின் கனத்திலும் எழுத்துக் கூர்மையிலும் தன்னிகரற்றது. ஏக்கங்களின் உணர்வுகளின் சுயபச்சாதாபங்களின் வேதனைகளைப் பேசும் பெரும்பாலான புதினங்கள் தலைமுறைப் பிஞ்சுகளின் உயிர்ப் பிரச்சனையைப் பேசும் ஆதிரைக்கு முன் நிற்க முடியாது.

ஆதிரை | சயந்தன் | தமிழினி பதிப்பகம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *