2013ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆறாவடு’ என்ற நாவல் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் இலங்கையில் அந்த நூல் கிடைக்கவில்லை. அதை வாசிக்க வேண்டும் என்ற ஆவலால், அதைப் படைத்த எழுத்தாளருக்கே நான் மின்னஞ்சல் அனுப்பினேன்.
அதற்கு,
“துரதிர்ஷ்டவசமாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ இலங்கையில் ஆறாவடு கிடைக்கவில்லை. இந்தியாவில் இருந்து தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம்”
என்று பதில் வந்தது.
காலப்போக்கில் அச்சு நூல்களை வாங்கிப் படிக்கும் ஆர்வம் சற்று குறைந்து, Amazon Kindle வழியாக நூல்களை பதிவிறக்கம் செய்து வாசிக்கத் தொடங்கினேன். அப்போது தான் சயந்தனின் அடுத்த நாவலான ‘ஆதிரை’ கிடைத்தது. அதனுடன் சேர்த்து ஆறாவடுவும் கிடைத்தது.
இந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக விமான நிலையத்தில் அவரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரது மூன்றாவது நாவலான அஷேராவை அவரிடமிருந்து நேரடியாகக் கையில் பெற்றுக்கொண்டேன்.
அதிர்ஷ்டம் அதோடு நிற்கவில்லை. இதோ, இம்முறை அவரது கையெழுத்துடன் ‘திசை ஒன்பது’ நாவல் வெளிவந்த அடுத்த நாளிலேயே என் கரங்களில் வந்துள்ளது.
நான் வாசித்த அவரது முதல் மூன்று நூல்களும் ஈழப் போராட்டத்தை மையமாகக் கொண்டவை. ஆனால் திசை ஒன்பது நாவல்,
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் முடிந்த பின் புலம்பெயர்ந்த அகதியின் கதையையும், 2022ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த ஒரு பெண்ணின் கதையையும் இணைத்து, சமகால பின்னணியில் எழுதப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த இரு கதைகளும் சந்தித்து முடிவை அடைகின்றன.
தமது இலக்கை அடையும் வரை, ஒவ்வொரு நாட்டின் எல்லைகளையும் கடக்க அவர்கள் எதிர்கொள்ளும் வேதனைகள், வாசகனாகிய எங்களுக்கும் அந்த அனுபவத்தை நேரடியாகக் கடத்துகின்றன.
கதையில் பாத்திரங்கள் குறைவாக இருப்பதால், திரைப்படங்களில் போல காட்சிகள் முன்–பின் மாறி சொல்லப்பட்டிருந்தாலும், எந்த குழப்பமும் இல்லாமல் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் கதை வாசகனை தன்னுள் இழுத்துக்கொள்கிறது.
சில இடங்களில் எழுத்தாளர் தான் கதையை எழுதும் விதத்தையையே கதைக்கூடாக சொல்லி இருப்பார்
இன்றைய காலத்தில் குறைந்து வரும் வாசிப்பு பழக்கத்துக்கும், பேஸ்புக் ரீல்ஸ், யூடியூப், டிக்டாக் போன்ற குறுநீள வீடியோக்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கும் சமூகம்
ஆயிரம் ரூபாய் செலவிட்டு திரையில் ஒரு தென்னிந்திய திரைப்படம் பார்ப்பதை விட, இந்த நாவல் பல மடங்கு மதிப்புடையது.
