சயந்தனுடைய இதுவரை வெளிவந்த ஆறாவடு, ஆதிரை, அஷேரா ஆகிய நாவல்களையும் பெயரற்றது மற்றும் இறுதி வணக்கம் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் வாசித்திருக்கின்றேன். திசை ஒன்பது அவரின் நான்காவது நாவல்.
சுவிஸ்க்கு அகதித் தஞ்சம் கோரிப் புறப்படும் இளங்கோவை மையமாகக் கொண்டு தன்வரலாற்றுப் பாணியில் அகதிகளின் பயணக் கதைகளைக் கூறுவதே திசை ஒன்பது நாவல்.
அகதி என்பது இலங்கையிலிருந்து மாத்திரமல்ல. இந்தியா, பாகிஸ்தான், குர்திஷ், எரித்திரியா என்று வெவ்வேறு நாடுகளையும் இனங்களையும் சேர்ந்தவர்கள். அனைவரின் கதையும் ஒன்றுதான். யுத்தம். அதற்குத் தப்பவோ அல்லது பணம் உழைக்கவோ அகதிகளாகியிருக்கிறார்கள்.
நாவல் முழுவதும் ஒரு எள்ளல் கூட வருகிறது. கதைசொல்லியான இளங்கோ ஒரு எழுத்தாளராக வர ஷோபாசக்தி, அ. முத்துலிங்கம் கருணாகரமூர்த்தி, ஜெயமோகன், ஜோர்சா ஓவல், ரஷ்ய எழுத்தாளர்கள் என பலரையும் அவர்களது படைப்புக்களையும் கதைக்குள் கையாண்டிருக்கிறார் சயந்தன். சில வேளைகளில் எள்ளலாகவும். அதுவே அத்தியாயங்களை இணைக்கவும் கதையை கொண்டு செல்லவும் வாய்ப்பாகின்றது.
நாவல் நேர்கோட்டுப் பாங்கற்ற முறையில் (non linear) நகர்கிறது.
யாழ்ப்பாண மனநிலை அதிலும் போலி முற்போக்கு, சாதியம், கணவன் மனைவி உறவுமுறையும் எதிர்பார்ப்புகளும், ஆணாதிக்கம் போன்றன நகைப்பிற்குள்ளாகின்றன.
வழமைபோல சயந்தனின் எழுத்து ஆற்றொழுக்காக கட்டிப்போட ஒரே இரவில் நாவலை வாசித்து முடித்தேன்.
நாவலின் ஒரு சில பகுதிகள் மீள்வாசிப்பைப்போல இருந்தன. அவற்றை வேறுவிதமாக மாற்றியிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.
கதை மாந்தர்களில் அருந்தவமும், ஹன்னாவும் மனதில் நிலைக்கிறார்கள்.
நாவலின் பல இடங்கள் படிமங்களாகவும் குறியீடுகளாகவும் இருக்கின்றன. உதாரணமாக உக்ரைனின் யுத்தத்திற்காக போராட இணையுமாறான அழைப்பு மற்றும் கண்களும் கைகளும் கட்டப்பட்டு சுடப்படல் போன்றன ஈழ இறுதி யுத்தத்தை மனதில் எழுப்புகின்றன.
அகதிகளின் துயரத்தை எள்ளலுடன் சிந்திக்க வைக்கும் ஒரு சிறந்த வாசிப்பனுபவம். ஆனால் ஆதிரையை இன்னும் வெல்லவில்லை. நண்பர்களுக்கு பரிந்துரைக்கின்றேன்.
Canute Aravintharaj Denicius
