எழுத்தாளர் சயந்தனின் ஆறா வடுவும். ஆதிரையும் தமிழ் நாவல் உலகிற்கு அவரின் மிக முக்கியமான பங்களிப்புகள்.
திசை ஒன்பது அவருடைய புதிய நாவல். போர் நிகழ்த்திய உளவியல் சிக்கலில் இருந்து மீளவே முடியாத துயரங்களின் பொழுதுகளையே நாவலாக்கியிருக்கிறார்.
வாழ்வதைத் தவிர வேறு எந்த சாத்தியத்தையும் வழங்காத போர் மேகம் சூழ்ந்திருக்கும் இந்த உலகினில் அகதியாக அல்லாடி அலைந்து திரிகிற இளைஞனே நாவலை எழுதுகிறான்.
எட்டுத் திசைகளும் அடைக்கப்பட்ட பிறகும் ஒன்பதாவது திசையை திறக்கும் அகதிகளின் உளவியலே கதை. அகதிகள் என்றால் இலங்கையில் இருந்து வந்தவர்கள் மட்டுமல்ல, பாக்கிஸ்தானிலிருந்து, இந்தியாவிலிருந்தும்கூட. ஏன் இப்படி கால் பாவ இடமின்றி அலைகிறார்கள். பசித்துக் கிடக்கும் இந்த வயிறுகள் மான அவமானம் பார்ப்பதில்லை ஒருபோதும். பல உக்கிரமான கேள்விகளையும் அகதி அரசியலின் மீது எழுப்புகிறது நாவல்.
தன் கதையை மட்டுமல்லாது தான் எழுத நினைத்த கதையொன்றையும் நாவலுக்குள் எழுதி அடுக்குகிறார்.
போரின் குரூரத்திலிருந்து தப்பிப் பிழைக்க உலகெங்கும் நாடு நாடாக அலைகிற மனிதர்கள் நாவலெங்கும் நிறைகிறார்கள்.
எழுத்தாளர் எழுதுவதால் அ.முத்துலிங்கம், எஸ். ராமகிருஷ்ணன், ஷோபா சக்ததி புதுமைப்பித்தன், ஏன் விலங்குப்பன்னை ஜேம்ஸ் ஆர்வெல், ஜெயமோகன் என பலரும் சிலவரிகளில் கடக்கிறார்கள்.
“போரால் வரும் சுதந்திரத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். நான் போரே இல்லாத எங்காவது போய் விடுகிறேன்”.
நாவலுக்குள் வருகிற நாவலைப் பற்றிய ஒற்றை வரியிது.
நாவலைப் பற்றி மிக விரிவான விமர்சனத்தை ஆறா வடுவிற்கும், ஆதிரைக்கும் எழுதியதைப் போல திசை ஒன்பதிற்கும் எழுத வேண்டும்.
