போராட்டங்கள் வலுப்பெற்றிருந்த காலத்தில் இளங்கோவன் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்து செல்ல முயல்கிறார். தனக்கு நிச்சயமான பெண்ணை அவர் அங்கே சென்ற பிறகு இலங்கையிலிருந்து அழைத்துக்கொள்ள வேண்டும். இமையாவுடைய வருங்கால கணவர் சித்திரம் சுவிட்சர்லாந்தில் இருக்கிறார். அவரைச் சேர இமையாவும் கிளம்புகிறார். வெவ்வேறு காலகட்டங்களில் ஆரம்பிக்கிற இருவரது பயணமும் மிகுந்த சவால்களும் , சோதனைகளும், சாகசங்களும் நிரம்பியவை.
இங்கிருக்கும் கேரளாவிற்கு என் மனைவியை அனுப்பிவிட்டு அவர் அங்கே போய் சேரும்வரை மனம் ஒரு நிலையில் இல்லாமல் ஆடியபடி இருக்கிறது. ஆனால் முறையான ஆவணங்கள் இல்லாமல் , முகம் தெரியாத முகவர்களை நம்பி , ஒரு நாட்டிற்கு போக பல நாடுகளுக்குள் புகுந்து , மொழி தெரியாத புதிய மனிதர்களுடன் புழங்கி … இவற்றை நினைக்கவே பதற்றமாக இருக்கிறது. ஆனால் ஓர் இனம் இதைச் செய்து கொண்டே இருக்கிறது. ஒரு நிம்மதியான வாழ்க்கையைத் தேடி அகதிகளாக அவர்கள் இந்த ஆபத்தான பயணங்களை செய்தபடி இருக்கிறார்கள்.
முறையான ஆவணங்களும் சூழலும் இருந்தால் 15-20 மணி நேரத்தில் செய்துவிடக்கூடிய பயணங்களை , சிலர் 20 நாட்களில் செய்கின்றனர் , சிலருக்கு 200 நாட்கள் , சிலர் 20 ஆண்டுகள் ஆனாலும் போய்ச் சேருவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு கதை எழுதப்பட்டிருக்கிறது.
சிறைத் தண்டனையில் என்ன தண்டனை இருக்கிறது. எந்த இடமும் மூன்று மாதங்களில் பழகி விடும் என்று உளவியல் சொல்லுவதாக முகவர் தேவாரம் சொல்கிறார். உணவு, இருப்பிடம், கழிப்பிடம் எதுவும் பழகிவிடும்.
பிறகு உண்மையில் அங்கே நிகழும் தண்டனை என்ன ? பிரியமானவர்களிடமிருந்து நாம் பிரிய நேருவதே தண்டனை. ஒருவர் தம் பிரியமானவர்களுடன் ஆற்றொழுக்கு
போல் காலத்தில் பயணம் செய்துகொண்டிருக்கிறார். சிறை அவரை அந்த ஒழுக்கில் இருந்து விலக்கி தனிமைப் படுத்தி விடுகிறது. மீண்டும் வரும்போது எதுவும் பழசு போலில்லை. அதுதான் தண்டனை.
பொதுவாக ஈழ இலக்கியங்களின் களம் இலங்கை , இந்தியா அல்லது அவர்கள் புலம்பெயர்ந்திருக்கும் மேற்கு நாடுகளாக இருக்கும். இந்நாவலின் களம் பயண வழியில் அவர்கள் சிக்கிக்கொள்ளும் ரஷ்யா , பெலாரஸ் , உக்ரைன் போன்ற இடைப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகள். முக்கிய கதாப்பாத்திரங்களுக்கு முகம் கிடையாது என்பதை நாவல் வாசித்து முடிந்து அசை போட்டுக் கொண்டிருக்கும்போது உரைத்தது. குரல் வழியே அவர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.
சயந்தனின் கதைமொழி திரைப்படம் பார்ப்பது போல் இருக்கும். சரியான இயக்குனர்கள் முயன்றால் சயந்தனின் கதைகள் எல்லாம் தரமான திரைப்படங்கள்.
புத்தகம் : திசை ஒன்பது
எழுத்து : சயந்தன்
பதிப்பகம் : தமிழினி.
