திசை ஒன்பது வாசிப்பு / சுரேஷ் பிரதீப்

திசை ஒன்பது ஒரு வகையில் ஆறாவடுவினை ஒத்த நாவல். ஆறாவடு நாவல் ஒரு கடும் துயரத்தில் முடியும். சயந்தன் இந்த நாவலை கரும்பகடியின் உச்சத்தில் போய் முடித்திருக்கிறார்.

இந்நாவலின் சிறப்பென்று நான் நினைப்பது இதன் அப்பட்டத்தன்மைதான். தலைப்பே அப்பட்டமாகத்தான் இருக்கிறது. எந்த திசையிலும் நகர விடாத வாழ்வு. வழக்கம்போல சயந்தன் இந்நாவலுக்குள் நிகழும் எந்த அவலத்திற்கும் துயரத்திற்கும் அரசியல் காரணங்களைத் தேடவில்லை. விலகி நின்றே அணுகுகிறார். எவ்வளவு விலகி என்றால் ஒரு கட்டத்தில் இளங்கோவுடைய வாழ்க்கை ‘நார்மல்’ ஆக இருப்பதாக நமக்குத் தோன்றுவிடுகிறது!

தேசிய அடையாளம், காதல் ,திருமணம் என எல்லாவற்றின் மீதும் கவியும் அவலத்தை சயந்தன் மீண்டும் ஒருமுறை எழுதி காட்டி இருக்கிறார்.

இருபது வருட இடைவெளியில் நிகழும் இளங்கோவின் கதையும் இமையாவின் கதையும் ஏறத்தாழ ஒன்று போலவே இருக்கிறது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நமக்கொரு‌ நம்பிக்கை இருந்தது. உலகம் நிரந்தரமான சமாதானத்தின் பாதைக்குத் திரும்பிவிட்டது, இனி இருப்பதெல்லாம் உலகத்தைத் துடைத்து சுத்தம் பண்ணும் வேலைதான் என்று நம்பினோம். இந்த நாவல் அப்படி இல்லை என்கிறது. ஆயிரக்கணக்கான மனிதர்கள் பதுங்குக்குழியில் உயிர் பிழைப்போமா என்று அஞ்சிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் நிலம் இலங்கை என்றால் என்ன உக்ரைன் என்றால் என்ன? இளங்கோவின் ‘அடையாளமும்’ அதைத்தான் சொல்கிறது. நாவலின் இறுதிவரியை வாசித்தபோது முகம் புன்னகையில் மலர்ந்துவிட்டது. அது ஏன் என்று இவ்வளவு நேரமாக யோசித்து யோசித்துப் பார்க்கிறேன். பிடிகிடைக்கவில்லை!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *