ஒரு வெள்ளி இரவு வந்த புத்தகத்தை சனி இரவே படித்துவிட்டேன். எப்பொழுதாவது இப்படி அதிசயமாக நடப்பதுண்டு.
முகநூல் காலத்திற்கு முந்தைய கற்காலத்திலிருந்தே சயந்தன் அவுஸ்திரேலியாவில் வசித்த பொழுதே அவருடன் ஒரு கருத்துக்களத்தில் சண்டைபிடித்துக்கொண்டிருந்தேன். அவரை பேசியதாகவும் பின்னொருநாளில் சொல்லியிருந்தார். எனக்கு அது நினைவில் இல்லை. என்ன அதிகப்படியாக சிங்களக்கைக்கூலி என்று திட்டியிருப்பேன்.
நான் வசித்த இடத்திலிருந்து ஒரு 500 மீட்டர் தொலைவில் வந்து குடியேறிய பின்னரும் அவர் அவுஸ்திரேலியாவில் இருப்பதாக நினைத்துக்கொண்டு சண்டையிட்டுக்கொண்டு தான் இருந்தேன்.
பிறிதொரு நாளில் ஆறாவடு வாசித்தேன். அதன் பின்னர் நான் என்னுடைய கருத்துக்களிலிருந்து வாபஸ் பெற்றதென்னமோ உண்மை தான். 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்பில் இருக்கிறோம். அவர் முகநூலில் இருந்து இடையிடையே காணாமல் போவார். அப்படி நடக்கும் போது எதாவது ஒரு புத்தகத்தை எழுதிக்கொண்டிருக்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாம்.
அவர் வசித்த அதே மாநிலத்தில் நானும் வசித்ததால் ஏனையோரை விட கதைக்களம் எனக்கு மிக நெருக்கமானதாக இருக்கும். அதே ஆற்றங்கரைகளால் நானும் நடந்திருக்கிறேன்.
ஆனால் திசை ஒன்பதில் பெரும்பகுதி உக்ரைன், போலந்து, ஹங்கேரி என்று வேறு களமாக இருக்கிறது. அகதி, போர் என்று கதை வழமையான உள்ளடக்கத்தினை கொண்டிருந்தாலும் எடுத்த எடுப்பில் வாசிக்க தூண்டியது நையாண்டித் தனமான எழுத்துக்கள். இதை Satire எழுத்து வகைக்குள் அடக்கலாமா என்று தெரியவில்லை.
இதுவரை வாசித்திராத புதுவிதமான non linear கதைசொல்லும் முறையில் எழுதியிருக்கிறார். கொஞ்சம் தவறியிருந்தாலும் மண்டை குழம்பி புத்தகத்தை தூக்கி எறிய வேண்டியிருந்திருக்கும். அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
உக்ரேனிய சிறைக்காவலன் வந்து “உங்களுடைய லீடர் இறந்துவிட்டார்” என்றான். அவர் விட்ட பிழைகள் என்று ஒரு பெரிய பட்டியலை சொல்லக்கூடியவன் கூட இன்று குமுறி அழுவான். அதற்கான காரணமும் அவனுக்கு தெரியும்.
“இனி என்ன நடக்கும்?” என்று கேட்டேன்.
“கட்டை எரிந்தே சாம்பல் வரவில்லை. இனி மயிர் எரிந்தா வரும்” என்றார்.
இந்த ஐரோப்பியர்கள் என்னவோ தங்களுடையது அற்புத கலாச்சாரம் என்று பீற்றிக்கொள்கிறார்கள். இவர்களுக்குத் தெரியுமா…? சுவிற்சர்லாந்து பெண்களுக்கான வாக்குரிமை முதன்முதலாக 1971 தான் கொடுத்திருக்கிறது. ஆனால் அதே காலத்தில் சிறிலங்காவில் ஒரு பெண் பிரதமராகவே இருந்திருக்கிறார் என்று சொல்ல தோன்றியது.
இதை வாசித்ததும் மனதுக்குள் சில்லறைகளை சிதறவிட்டுக்கொண்டிருந்தேன். அடுத்த வசனத்திலையே அதை உடைத்துவிட்டார்.
“பிறகு எதற்கு இங்கு வருகிறீர்கள்” என்று அவர்கள் கேட்டால், அதெற்கெல்லாம் அந்தப் பெண் தான் காரணம் என்று எப்படிச் சொல்வது..
ஆனால் புத்தகத்தின் இறுதி வசனம் மட்டும் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.
“ஸ்ரீலங்கன் தமிழருக்கெல்லாம் இங்கே அகதிப்பதிவு தர முடியாது. நீ வெளியே போ” என்று முகத்திலடித்த மாதிரி சொன்னாள்.
“நான் ஸ்ரீலங்கன் இல்லை” என்றான் இளங்கோ.
“அப்ப…?”
“உக்ரேனியன். என்னுடைய நாட்டிலே சண்டை நடந்துகொண்டிருக்கிறது. அங்கே உயிர்வாழ முடியவில்லை. எனக்கு அகதித் தஞ்சம் வேண்டும்”
இனிவரும் காலங்களில் தமிழர்கள் என்றால் சிறிலங்கர்களாக தான் இருக்க வேண்டுமா என்ற கேள்வி மட்டும் எழுந்துகொண்டேயிருக்கிறது. அல்லது ஐரோப்பாவில் போர் வந்து மீண்டும் இலங்கைக்கு போகும் பட்சத்தில் சிறிலங்கர்கள் எங்களை ஐரோப்பியர்களாக பார்ப்பார்களா?
ஆறாவடு, ஆதிரை நாவல்களிலிருந்து திசை ஒன்பதின் எழுத்து வேறுபடுகிறது. அது சிலருக்கு பிடிக்கலாம். பிடிக்கலாம் போகலாம். அவரவர் ரசனையை பொறுத்தது.
