நியூயோர்க் வாழும் தமிழ்! எழுதும் மனதில் நின்றெரியும் சுடர்

2025, நவம்பர் இறுதியில் ஒருநாள். அன்று மதியம்போலதான் கொழும்புக்குப் போயிருந்தேன். திட்வா புயல் நாட்டை நாசம் செய்துகொண்டிருந்தது. ஓயாத பெருமழை. யாழ்ப்பாணத்துக்கான பயணப்பாதைகள் துண்டிக்கப்பட்டிருந்தன. கொழும்புக்கு அருகே ‘வத்தளை’ என்ற நகரில் தங்கியிருந்தேன். வெளியே நிலமையின் தீவிரம் மன உளைச்சலாக இருந்தது. அந்த இரவு, களனி ஆறு உடைத்துப் பாயும் என்றும் வத்தளை நகரம் நீரில் மூழ்கும் என்றும் சமூக வலைத்தளங்களில் எதிர்வுகூறிக்கொண்டிருந்தார்கள். அச்சமும், நம்பிக்கையுமென ஒருவித தத்தளிப்பான மனநிலை. அப்போதுதான் வாழும் தமிழ் பற்றிய சுருக்கமான குறிப்போடு நிகழ்வுக்கான அழைப்பை மகேஸ்வரி அனுப்பினார்.

சற்று நேரத்திலேயே என்னுடைய வருகையை உறுதிப்படுத்தினேன். மனது இலேசானதாகவும் உற்சாகமானதாகவும் உருமாறியிருந்தது. எழுத்தும், அது பற்றிய உரையாடல்களும் இந்தமாதிரியான மாயாஜாலங்களை எப்போதுமே ஏற்படுத்துகின்றன. உரையாடாவிட்டாலும் கூட அதற்கு நடுவே உட்கார்ந்திருப்பதுவே மனநிலையில் பெரும் தாக்கத்தைச் செலுத்துகிறது. தொடர்ந்து எழுத்தில் இயங்குவதற்கான ஊக்கமும் அதுவே.

அடுத்தடுத்த வாரங்களில் அமெரிக்காவுக்கான பயண மற்றும் தங்குமிட ஏற்பாடுகள், அங்கே நடைபெறவுள்ள உரையாடல் தலைப்புகள் என மகேஸ்வரியும், ஒஸ்ரின் சௌந்தரும் தெரியப்படுத்தினார்கள். ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கான சிறுகதைகளைத் தெரிவது பற்றி ஜெயமோகன் செய்தி அனுப்பியிருந்தார். இரண்டு கதைகளை அனுப்பினேன்.

மேடையில் பேசுவதில் அல்லது உரையாடுவதில் எனக்கு எப்போதுமே தயக்கமும் கூச்சமும் உண்டு. ஒரு பழக்க நிலை உருவாகிவிட்டால், பகிடிகளாலும் பம்பல் கதைகளாலும் நண்பர்களைச் சிரிப்பால் நிறைக்க முடியுமென்றாலும், புதியவர்களுக்கு முன்னால் பேசுவதற்கு குரல் அடைப்பு, உடல் நடுக்கம், நாவுக் குழறல் என சிலபல சிக்கல்கள் எனக்கு இருக்கின்றன. சிறுவயதிலிருந்தே அப்படித்தான். நேர்சரியில் என்னுடைய முதல் மேடையில் நான் ‘சுத்தம்’ பற்றிப் பேச வேண்டியிருந்ததாம். மேடையில் ஏறி ‘சுத்தத்திற்கு சோப்புப் போட்டுக் குளிக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டு அழுதுகொண்டே மேடையில் இருந்து இறங்கி ஓடிவிட்டதாக அம்மா இப்போதும் நினைவுபடுத்துவார்.

ஆகவே வாழும் தமிழ் அரங்கு உரையாடலின் முழுமைக்காக என்னைத் தயார்ப்படுத்த விரும்பினேன். அதுவே அரங்குக்குச் செய்யும் மரியாதை. ஒஸ்ரின் சௌந்தரிடம் பேசியபோது, கலந்துரையாடலை ஒருகிணைக்கும் பிரணவ்ஐ அறிமுகம் செய்தார். நாங்கள் மூன்று, நான்கு தடவைகள் பேசினோம். பிரணவ்வின் தந்தை ரவி அண்ணா கொடுத்த ஊக்கத்தை இங்கே நினைவு கூர்கிறேன். நான் குறிப்புகளை தயார்செய்து சிறு அட்டைகளாக வைத்துக்கொண்டேன். ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.

ஏப்ரல் 1, காலை பத்து மணிக்கு சூரிச்சிலிருந்து பயணம். அமெரிக்க நேரம் மதியம், ஒரு மணிக்குத் தரையிறங்கிவிடும். அன்றைய நாள் தொடர்ச்சியாகப் பதினெட்டு மணிநேரங்களுக்குச் சூரிய ஒளியைத் தந்துகொண்டே இருந்தது. நீண்ட பகல். நியூயோர்க் விமான நிலையத்தின் குடிவரவுப் பகுதியில் நிறையக் கூட்டம். ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக வரிசை நகர்ந்தது.

ஒருமுறை தன்னுடைய அமெரிக்கப்பயணத்தில் குடிவரவு அதிகாரியிடம் எழுத்தாளர் என்று சொல்லவும் அந்த அதிகாரி வரவேற்று வழியனுப்பியதைப்பற்றி ஜெயமோகன் எழுதியது நினைவுக்கு வர, அதை நானும் முயன்று பார்ப்போம் என்று நினைத்தேன். 2024 டிசம்பரில் சென்னை விமான நிலையத்தில் நானொரு எழுத்தாளர் மற்றும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதைத் தெரிந்துகொண்ட அதிகாரிகள் எட்டுமணி நேரமாகத் தடுத்து வைத்து ஆள் மாறி ஆள் விசாரணை செய்தது ஓரமாகப் பயங்காட்டிக்கொண்டே இருந்தது. அவர்கள் என்னுடைய மூன்று நாவல்களின் மொத்தக் கதையையும் விலாவாரியாக விவரிக்கச் சொன்னதால்தான் அவ்வளவு தாமாதமாகியிருக்கும் என்று சமாதானம் செய்ய முயன்றேன். அன்றைக்கு அவர்களிடம், ‘இப்போது இந்த மூன்று நாவல்களைப் பற்றியும் உங்களுடைய மனச்சாட்சிபூர்வமான விமர்சனக் கருத்துக்களைச் சொல்லுங்கள்’ என்று நான் கேட்டிருக்க வேண்டும். அது இன்னமும் தாமதமாகிவிடும்.

அமெரிக்கக் குடிவரவு அதிகாரியிடம், எழுத்தாளர் என்றும் இலக்கிய நிகழ்வுக்காக அழைக்கப்பட்டிருக்கிறேன் என்றும் சொன்னேன். எங்கே தங்குகிறீர்கள் என்று கேட்டாள். ஹொட்டலின் பெயரைச் சொன்னேன். ஆதாரங்கள் எதுவும் கேட்கவில்லை, விரல் அடையாளங்களைப் பெற்றுக்கொண்டபிறகு வழியனுப்பி வைத்தாள்.

வெளியே அழைத்துச் செல்வதற்காக பழனிஜோதி வருவதாக அறிவித்திருந்தார். அவருக்கும் மகேஸ்வரிக்கும் செய்தி அனுப்பிவிட்டு வெளியே வந்தேன். சற்று நேரத்தில் பழனி என்னை ஆரத் தழுவி வரவேற்றார். அதற்குச் சற்று நாட்களுக்கு முன்னர்தான், அவரும் மகேஸ்வரியும் ஆதிரையைப் படித்திருந்தார்கள். இருவருமே ‘இத்தனை நாட்கள் எப்படி இதைத் தவறவிட்டோம்’ என்று வியந்து பேசினார்கள். பழனி அதை விமானநிலையத்திலும் தொடர்ந்தார். எனக்கு முன்பாக கொரியாவிலிருந்து வந்த சதிஷும் மலேசியாவிலிருந்து வந்திருந்த அரவிந்தும் ஒன்றாகவே ஹொட்டெலுக்குப் பயணித்தோம். சாலை நெரிசலில் அதுவும் ஒரு நெடிய பயணமாக நீண்டது. ஆனால் உரையாடல்களில் நேரம் போனதே தெரியவில்லை.

நியூஜெர்சியிலிருந்த Courtyard by Marriottஹொட்டெலுக்கு வந்தோம். தமிழ்நாட்டிலிருந்து எழுத்தாளர்கள் இன்னமும் வந்திருக்கவில்லை. எனக்கும் ரா.கிரிதரனுக்கும் ஏழாவது மாடியில் அறை ஒதுக்கியிருப்பதாக சௌந்தர் சொன்னார். ரா.கிரிதரன் லண்டனிலிருந்து இரவுதான் வருவார். நான் மட்டும் செக் இன் செய்துவிட்டு கீழிறங்கி வந்தேன். நிகழ்வின் செயற்பாட்டாளர்கள், பாலாஜியும் பத்மநாப பிள்ளையும் உணவுக்காக வெளியே அழைத்துச் சென்றார்கள். பேச்சினிடையே, ஒருதடவை, பத்மநாபா காலையை ‘காலம்பிறை’ என்று சொன்னதை அவதானித்தேன். அவருக்குக் கன்னியாகுமாரிப் பக்கமாக ஓர் ஊர். கன்னியாகுமாரிக்கும், ஈழத்திற்கும் இடையில் உள்ள பேச்சுவழக்கு ஒற்றுமைகள், உணவுப் பழக்க ஒற்றுமைகள் பற்றி சற்று உரையாடினோம். ஹொட்டலுக்குத் திரும்பிய சற்று நேரத்தில் காலம் செல்வம் அண்ணன், வெங்கட், யுவன் சந்திரசேகர் எல்லோரும் கனடாவிலிருந்து காரில் வந்து இறங்கினார்கள்.

காலம் செல்வம் அண்ணனைக் கண்டாலே பரவசம்தான். அவர் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் வெடிச்சிரிப்புத்தான். அவரைப் பற்றிப் பேசுவதுகூட முசுப்பாத்தியே. அவர் காலம் சஞ்சிகையின் அடுத்த வெளியீட்டுக்குத் தயாராகும் போது எழுத்தாளர்களை போனில் அழைத்து “இதழில் கதை எழுதும் நேரமிது” என்று பாடுவதாக அண்மையில் தெய்வீகன் சொல்ல, பதிலுக்கு ‘காலம்’ வரும் வரை பொறுத்திருந்தால் கன்னி இவள் மனம் கனிந்திடுமே…” என்று பதில்ப்பாட்டுப் பாடினேன். அதை செல்வம் அண்ணனுக்குச் சொல்லிச் சிரித்தேன். அவர் “ஒரு 25 மீற்றர்கள் சற்றுத் தள்ளிச் சென்றுவிட்டு வருவோம்.. வா” என்று அழைத்துப்போனார்.

நாங்கள் நின்றதற்கு நேர் எதிரே, ஒரு உயர்ந்த கட்டிடடத்தில் JP Morgan என்று மஞ்சள் ஒளியால் எழுதப்பட்டிருந்தது. அது ஓர் உலகளாவிய அமெரிக்க வங்கி. செல்வம் அண்ணன் அதைச் சுட்டிக்காட்டி, “இங்கைதான் கூட்டம் நடக்கப்போகுது போல, அதுதான் அவரின்ரை பெயரை எழுதியிருக்கு” என்று தனக்குத் தெரிந்த மாதிரிச் சொன்னார். “வடிவாப் பாருங்கோ.. அது JP Morgan” என்று திருத்தினேன். அவருடைய அறையை திருச்செந்தாழையுடன் பகிர்ந்துகொள்வதாகச் சொன்னார். ‘அப்ப அடுத்த காலம் இதழுக்கு திருச்செந்தாழை கதை கொன்பேர்ம்தானே..’ என்று சீண்டினேன்.

எனக்குத் தூக்கக் கலக்கம் தொடங்கியது. தமிழ்நாட்டிலிருந்து வருகிற எழுத்தாளர்களைச் சந்தித்தபிறகு அறைக்குத் திரும்ப விரும்பினாலும் நித்திரை கண்களில் சுழன்றது. ஒஸ்ரின் சௌந்தரிடம், அறை எண்ணைச் சொல்லி, ரா.கிரிதரனை அனுப்பி வையுங்கள் என்றுவிட்டு அறைக்குச் சென்றேன். நெடு தூக்கம்.

காலையில் ஐந்துக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது. இரவு ரா.கிரிதரன் அறைக்கு வந்திருக்கவில்லை. அதுபற்றிப் பிறகு கேட்டபோது என் நித்திரையைக் குழப்ப வேண்டாம் என்று இன்னொருவரோடு தங்கிக்கொண்டதாகச் சொன்னார். அறையிலேயே Coffee ஐ போட்டுக் குடித்துவிட்டு ஆறுக்கெல்லாம் கீழே இறங்கினேன். யாருமில்லை. கூகுள் வரைபடத்தில் பார்த்தபோது ஹொட்டலுக்குப் பின்னால் ஹட்சன் ஆறும் அதைக் கடந்து அடுத்த பக்கத்தில் நியூயோர்க் நகரமும் இருந்தன. ஆற்றோரமாக நடந்துவர எண்ணி வெளியேறினேன். குளிர் 9 செல்சியஸ் அளவில் இருந்தது. அமெரிக்காவில் ஃபாரன்ஹைட் அளவீட்டில் சொல்கிறார்கள். 48 இற்கு கிட்டவாக வரும். ஆனால் 48 என்னும்போது அந்தக் காலநிலையின் சில்லிடலை மனது உணரத் தவறுகிறது. அமெரிக்கர்களுக்கும் மறுவளமாக இப்படித்தான் இருக்கும்.

ஹட்சன் ஆற்றின் கரையோர நடக்கும் பாதையில் நடக்கத் தொடங்கினேன். ஒளி எட்டிப்பார்க்காத காலை. காற்று தன்னோடு குளிரைப் பிசைந்து முகத்தில் அப்பியது. ஆற்றுக்கு எதிர்க்கரையில் நியூயோர்க் நகரில் வானுயர்ந்த கட்டிடங்கள் வரிசையாக நட்டுவைத்ததைப்போல மின்னொளியில் பிரகாசித்தன. இம்மாதிரிப் பிரமாண்டமான கட்டிடங்களை எட்ட நின்று பார்த்தாலே போதுமென்று தோன்றியது. தினப்படி நாட்களில் இவற்றோடு ஊடாடுவது பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்திவிடுமோ என்று யோசித்தேன். ஒருவேளை நான் இந்த நிலத்துக்கு அந்நியன் என்ற தாழ்வுச் சிக்கலா அது? இதுவே பச்சை வயல்களும், மரங்களும் பூக்களும் என்றால் அப்படித் தோன்றாதா… என பலதையும் நினைத்தவாறே நடந்தேன். அவ்வப்போது உடற்பயிற்சி ஓட்டத்திலிருந்தவர்கள் எதிர்ப்பட்டார்கள். ஓரிருவருக்கு காலை வணக்கம் சொன்னேன். அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. பெருநகரங்களில் அதை எதிர்பார்க்க முடியாது. கிராமப்புறங்களில் என்றால் நின்று நிதானித்து ஒரு புன்முறுவலையும் பதில் வணக்கத்தையும் சொல்லக் கூடும்.

ஏழு, ஏழரைக்குக் ஹொட்டெலுக்குத் திரும்பினேன். பத்மநாபா மட்டும் லொபியில் நின்றார். இரவு எல்லோரும் வந்துவிட்டார்களா என்று கேட்டுத் தெரிந்தேன். காலை உணவு தயாராக இருந்தது. எடுத்துக்கொண்டு அறைக்குத் திரும்பினேன். சுவையான இட்லி, வடை, பொங்கல். குளித்துத் தயாராகி மறுபடியும் கீழே வந்தபோது ஜெயமோகன், சுனில் கிருஷ்ணன், ரா.கிரிதரன், அஜிதன் என ஒரு குழு காலை நடைக்குத் தயாரானது. அவர்களோடு இணைந்துகொண்டேன். வாழும் தமிழ் விருது, புதிதாகத் தொடங்கவுள்ள இணைய இதழ் போன்ற தகவல்களை ஜெயமோகன் குறிப்பிட்டார்.

காலை வெளிச்சத்தில் பிரமாண்டமான கட்டிடங்கள் கொஞ்சம் தோற்றுப்போய் நிற்பதாகத் தோன்றியது. ஒளிர்ந்துகொண்டிருந்தபோது மிளிர்ந்த மங்கலத்தை இழந்திருப்பதான மனவோட்டம். அமெரிக்காவின் கட்டிடங்களைக் காணும்போதெல்லாம் அவற்றை பெரிய ராட்சத மிருகங்களும், ஏலியன்களும் உடைத்து விழுத்துவதைப்போலவும், முறித்து எறிவதைப்போன்றதுமான திரைப்படக் காட்சிகளே மனதில் தோன்றுவதாக நண்பர்கள் குறிப்பிட்டார்கள். இக்கரையில் நின்றபடி நியூயோர்க்கைப் பார்த்து உஷ் என வாயில் விரலை வைத்து ஆணையிடும் ஒரு பெண் தலைச் சிற்பம் வரைக்கும் நடந்தோம். அது Water’s Soul சிற்பம். நீரின் ஆன்மா. சுமார் எண்பது அடி உயரமிருக்கும். அதன் கீழே நின்று அண்ணாந்து பார்த்தபோது அது ‘பேசாதே..’ என்றல்ல.. ‘இயற்கையைக் கேள்’ என்று உத்தரவிடுவதைப்போலத்தான் தோன்றியது.

மதியம் அருகிலிருந்த உணவு விடுதிகளில் உணவெடுத்தபிறகு இரண்டு குழுக்களாக சுதந்திரதேவி தேவி சிலையைப் பார்க்கப் புறப்பட்டோம். நம் சிறுவயதுகளில் அமெரிக்கா என்ற தேசம் இந்தச் சிலையின் வழியாகத்தான் அறிமுகமாயிருக்கும் என்று நினைக்கிறேன். வேறு எவ்வாறெல்லாம் அமெரிக்கா எனக்கு அறிமுகமானது? ராணிகாமிக்ஸில் ஷெரிப், செவ்விந்தியர்கள், மூன்றாம் வகுப்புப் புத்தகத்தில் தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்த ஆபிரகாம் லிங்கன், ஜீன்ஸ் திரைப்படம், நாசா விண்வெளிப் பயணங்கள், செப்ரெம்பர் 11, ஊரை அடித்து உலையில் போடும் போர்கள்..

ஆனாலும் அமெரிக்காவின் நிலவியல் பிரமாண்டத்தைப்பற்றி நான் பெரிதாக ஒன்றும் அறிந்திருக்கவில்லை. அதனுடைய சமூக, குடியேற்ற வரலாறு எல்லாம் அரசல் புரசலாக அவ்வப்போது கேள்விப்பட்டவைதான். இந்தப் பயணத்துக்குப் பிறகுதான் தேடித் தெரிந்துகொண்டேன். நியூயோர்க் நகரத்தின் முன்னைய பெயர் நியூ ஆம்ஸ்டர்டாம், அது நெதர்லாந்தின் ஆதிக்கத்தில் இருந்தது. பின்னர் பிரிட்டனால் கைப்பற்றப்பட்டு பெயர் மாற்றப்பட்டது. அமெரிக்காவின் 15 மாகாணங்களை உள்ளடக்கிய Louisiana நிலப்பரப்பு, சுமார் 530 மில்லியன் ஏக்கர், (இன்றைய அமெரிக்காவின் 23% நிலம்) முன்னர் பிரான்ஸ் வசமிருந்தது. அதை 15 மில்லியன் டொலர்களுக்கு விலைபேசி 1803இல் நெப்போலியனிடமிருந்து வாங்கினார்கள். அப்போது நெப்போலியன் ஏதோ பணக் கஸ்ரத்தில் இருந்தாராம். ஒரு ஏக்கருக்கு 0.03 சென்ட். அவ்வாறே ரஷ்யாவிடமிருந்து வாங்கிய நிலம், மெக்சிகோவிடம் சண்டையிட்டுப் பறித்த நிலம் என தொடக்ககால கிழக்குக் கரையோர பிரிட்டன் குடியேற்ற நிலங்கள், இன்றைய அமெரிக்காவாகப் பெரு உருவெடுத்தன.

சுதந்திரதேவிச் சிலை அமைந்துள்ள தீவுக்கு படகில் சென்றோம். படகுக்கான நுழைவுச் சீட்டுகள் வாங்கும் இடத்தில் ஒரு பாழடைந்த புகையிரத நிலையத்தை அப்படியே பராமாரிக்கிறார்கள். 1900 தொடக்கத்தில் ஐரோப்பாவிலிருந்து வந்த லட்சக்கணக்கான மக்கள் இங்கிருந்துதான் அமெரிக்காவின் பிற பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். அது பாழடைந்து இருந்தாலும், அந்த மக்களின் முகங்களிலிருந்த எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் இன்றைக்கும் சுமந்திருப்பதாகத் தோன்றியது.

சுதந்திரதேவிச் சிலை நோக்கிய பயணத்திலேயே நான், வெயில், லக்ஷ்மி சரவணகுமார், இளங்கோ கிருஷ்ணன், தமிழ்பிரபா, திருச்செந்தாழை என ஒரு செட் இயல்பாக உருவானது. கலை, இலக்கியம், சினிமா, அரசியல் என பல்வகை உரையாடல்களுடன் அது இறுதிவரை தொடர்ந்தது. அன்றைய நாளை சாம்பல் நிற மேகங்கள் போர்த்தி வைத்திருந்தன. காது மடல்களை சில்லிடச் செய்யும் குளிர். சுதந்திரதேவியைச் சுற்றி நடந்தோம். ஒளிப்படங்கள் எடுத்தோம்.

அடுத்த நாள், ஏப்ரல் 3, வாழும் தமிழ் நிகழ்வின் முதலாவது நாள். சரியாகக் காலை ஏழரைக்கு எல்லோரும் தயாராகி இருந்தோம். இரண்டு பேருந்துகள் எங்களை ஏற்றிச்செல்ல வந்திருந்தன. சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் நியூயோர்க் நகர மையத்தில், The New York Academy of Medicine க்கு வந்தோம். சுந்தரராமசாமி அரங்கு, க.நா.சு அரங்கு என இரண்டு அரங்குகள் அங்கே அமைக்கப்பட்டிருந்தன. தொடக்கநிகழ்வு சரியாகப் பத்து மணிக்கு கவிஞர் தேவதேவனின் ‘அசையும்போது தோணி’ கவிதை இசைக்கப்பட்டு ஆரம்பித்தது. அரங்கை வியந்து பார்த்தேன். முன்னூறு பேரளவில் நிறைந்திருந்தார்கள். ஜெயமோகனின் தொடக்க உரையில் அவர் மன நிறைவும் நிறையவே உணர்ச்சிவசப்பட்டவராகவும் தோன்றினார்.

அன்று காலையிலேயே என்னுடைய அரங்கு. தலைப்பு The timeless humanity. அஜிதனும் பீட்டர் கொன்ஸ்டன்டைனும் உடனிருந்தார்கள். சபையைப் பார்த்தவுடனேயே அந்த நேர்சரிக்கால நடுக்கத்தை உணர்ந்தேன். அது என்னுடைய உடல்மொழியில் தென்பட்டிருக்குமென்றுதான் நினைக்கிறேன். எப்படியோ ஒருவாறு ஒப்பேற்றிவிட்டேன். போரும் எழுத்தும் பற்றிய கேள்வி தனிப்பட்ட அளவில் நெருக்கமாக இருந்தது. போர் மனிதர்களை வெறும் இலக்கங்கள் ஆக்குகிறது. இலக்கியம் அவர்களை மறுபடியும் மனிதர்கள் ஆக்குகிறது என்றபோது ஒரு கண நிசப்தமும் தொடர்ந்து துயரார்ந்த கரவோசமும் எழுந்தது. அரங்கின் நிறைவில் முன் வரிசையிலிருந்து குறிப்பெடுத்துக்கொண்டிருந்த இளையோர்கள் சூழ்ந்துகொண்டு பாராட்டினார்கள். கேள்விகளைக் கேட்டார்கள். போரை வெளியிலிருந்து பார்க்கும் அவர்களுடைய மனப் பதிவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். அந்த இளையோர்களைப் பின்னர் வெவ்வேறு அரங்குகளில் வழிநடத்துனர்களாகப் பார்த்தேன். ஆர்வமும் தேடலும் ஆளுமையும் கொண்டவர்கள். ஒருவிதத்தில் இருநாள் அரங்குகளிலும் என்னை ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருந்தவர்கள் அவர்கள்தான். என்னுடைய பதில்கள் நன்றாக இருந்ததாகச் சிலர் சொன்னார்கள். ஒருவர் தேடி வந்து ‘பதில்கள் ஒருபக்கம் இருக்கட்டும், உங்களுடைய குரல், நல்ல Base இல் ஒரு ரேடியோ ஜொக்கியைப்போல இருந்தது’ என்று பாராட்டிவிட்டுப் போனார்.

நிகழ்வுக்கு வரும்போது, ஒருவேளை என்னை யாரென்றே தெரியாத கல்யாண வீட்டில் ஓர் ஓரமாக உட்கார்ந்தமாதிரி ஆகிவிடுமோ என்றொரு நினைப்பு இருந்ததுதான். ஆனால் நிறையப் பேருக்கு ஆறாவடு, ஆதிரை நாவல்கள் வழியாக அறிமுகமாகியிருந்ததை அறிந்து உள்ளபடி மகிழ்ச்சி. 15 ஆண்டுகளுக்கு முன்னால் ஆறாவடு வெளியானபோது அதைப்பற்றிக் கட்டுரைகள் எழுதிய பாஸ்டன் பாலா, சாரதி ஆகியோரோடு அறிமுகம் செய்துகொண்டேன். பழனி, ஒருவரை அறிமுகம் செய்து, இவர் ஆதிரையின் தொடக்க அத்தியாயங்களில் வருகிற மலைநாடு நிலத்தைச் சேர்ந்தவர், அந்த நெருக்கடிகால அனுபவங்களைக் கொண்டவர் என்றார். அவர் பதுளையில் பிறந்து 77 களில் சிறுவயதில் குடும்பத்தோடு தமிழ்நாடு திரும்பியவர். இலங்கையில் சிறுவயதுப் புகைப்படங்களைக் காட்டினார். அண்மையில் இலங்கைக்குப் பயணம் செய்து அந்தப் புகைப்படங்களிலிருந்த அதே இடங்களில் படம் எடுத்திருந்தார். பழைய, புதிய படங்களை அடுத்தடுத்துப் பார்த்தபோது இன்னதென விவரிக்க முடியாத ஓர் உணர்வினால் ஆட்பட்டிருந்தேன்.

அடுத்து நிகழ்ந்த அரங்குகளை அரை மணி நேரங்களாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் சென்று வந்தேன். ஓர் இடைவெளியில் நீலி ரம்யா அறிமுகமானார். பேச்சின் ஓரிடத்தில் எதேச்சையாக, தமிழ் விக்கியில் அவருடைய பங்களிப்புக் குறித்துத் தெரியவர, அங்கே கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஆதிரைக்கான பக்கம், மன்னிக்கவும். பரிசீலனையில் இருக்கிறது என்று வருகிறதே.. நானும் மாதத்தில் நான்கு முறையாவது போய்ப் பார்க்கிறேனே.. எப்போது பரிசீலிப்பீர்கள் என்று விளையாட்டாகக் கேட்டேன். ஆவன செய்வதாகச் சொன்னார்.

மதிய இடைவேளையின்போது அருள்ஜோதியும், சுபாவும் பக்கத்திலிருந்த பூங்காவுக்கு எங்களைக் கூட்டிப்போனார்கள். நகரத்தின் மத்தியில் நீள் செவ்வக வடிவில் சுமார் 800 ஏக்கர்களில் விரிந்திருந்தது. ஆறுதலாகச் சுற்றிப்பார்க்க ஒரு நாளாவது தேவை. Magnolia பூக்களைச் சொரிந்த மரங்கள், புகைப்படங்களுக்கு அழகான பின்னணியாக இருந்தன. நிறையப் பேசினோம். இளங்கோ கிருஷ்ணன், வெயில் ஆகியோரிடம் என்னுடைய நெடுநாள் சந்தேகம் ஒன்றைக் கேட்டேன். ஈழ இலக்கியங்களில் போரின் தாக்கம் தவிர்க்கவே இயலாமல் வெளிப்படுவதைப்போல, திராவிட இயக்கங்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உட்பட, நெருப்பும் தகிப்புமான அந்தக் கால வாழ்வு ஏன் தமிழ்நாட்டு உரைநடை இலக்கியங்களில் வெளிப்படவில்லை? என்ற கேள்விக்கு சமூக வரலாற்றுச் சூழலின் பின்னணியில் பதில் சொன்னார்கள். ஒருவேளை அது இனிமேல் வெளிப்படும் என்றார் வெயில்.

பின்மதிய அரங்குகளுக்குத் திரும்பினோம். இடைவேளை நேரங்களில் புதிய புதிய நண்பர்கள் அறிமுகமானார்கள். கடந்த பதினைந்து ஆண்டுகளாகவே தமிழ்நாட்டுக்கு வருடத்தில் ஒருமுறையாவது போய்விடுகிறேன், ஆனால் அமெரிக்காவில் வைத்துத்தான் நிறைய சக எழுத்தாளர்களையும் நண்பர்களையும் அறிமுகப்படுத்திக்கொள்ள முடிந்தது. எண்களைப் பரிமாறிக்கொண்டோம்.

அன்றைய ஜெயமோகனுடைய தொடக்க உரையில் ‘வாழும் தமிழ்’ என்ற பெயருக்கும் காலம் செல்வம் அண்ணனுக்கும் இடையிலான உறவைச் சிலாகித்து, அந்தப் பெயருக்காக அவருக்கு நன்றி தெரிவித்திருந்தார். அதை நினைவுகூர்ந்த செல்வம் அண்ணன் “ஆனால் என்னுடைய மனைவி, அந்தப் பெயரை நான் பைபிளிலிருந்து சுட்டதாகச் சொல்லுகிறா.. நீயே சொல்லு, ஹீப்ரு மொழியில் எழுதிய பைபிளில் எங்கேயாவது தமிழ் வாழும் என்று எழுதுவாங்களா..” என்று வருத்தப்பட்டார்.

எங்களுடைய செட் இல் லக்ஷ்மி சரவணகுமாருக்கு இரண்டாம் நாள் அமர்வு. முதல் நாள் அமர்வுகளை முடித்தவர்கள் அவரிடம் “பதற்றமாகத்தான் இருக்கும், ஒன்றும் யோசிக்க வேண்டாம், அதெல்லாம் பார்த்துவிடலாம்.. இருந்தாலும்…” என்று பகிடிக்கு வம்பிழுத்தோம். அவருடைய உரை, வன்முறையையும் எழுத்தையும் மையப்படுத்தியிருந்தது.

இரண்டாம் நாள் ஒருவித கொண்டாட்ட மனநிலையில் இருந்தேன். வேலை, நேரமின்மை போன்ற உள் அழுத்தங்களும் ஈரான் போர், அது நம் அன்றாடத்தில் நேரடியாகச் செலுத்தும் பாதிப்புகள் என்ற வெளி அழுத்தங்களும் இந்த ஐந்து நாட்களும் எங்கோ தள்ளிப் போயிருந்தன.

அன்றைக்கு ரெஸ்ட் ரூமில் என்னைப் பார்த்த ஒருவர் “நீங்கள் வெயிலின் தம்பியா?” என்று கேட்டார். “அமெரிக்காவில் என்னைப் பார்த்து வெயிலின் தம்பியா என்று கேட்ட ஐந்தாவது ஆள் நீங்கள்” என்று நடிகர் விஜயின் குரலில் விளையாட்டாகச் சொன்னேன். நிகழ்வின் பார்வையாளராக தொலைதூர அமெரிக்க மாகாணத்திலிருந்து அவர் வந்திருந்தார்.

இரண்டாம் நாள் நிறைவில் நிகழ்வு நடந்த இடத்திலிருந்தே, இளங்கோ கிருஷ்ணன், லக்ஷ்மி சரவணகுமார், தமிழ்ப்பிரபா, திருச்செந்தாழை, வெண்ணிலா, வெயில், நான் என ஒரு சிறு குழு நியூயோர்க்கின் இரவைக் காணப் புறப்பட்டோம். எங்களை அரவிந்தன் கண்ணையன், சுபா, அவருடைய கணவர், அருள்ஜோதி ஆகியோர் அழைத்துச் சென்றார்கள். நிலக்கீழ் மெட்ரோக்களில் பயணித்தோம். நகர மத்தியில் மிதந்து தெருக்களைப் பராக்குப் பார்த்தபடி நடந்தோம். வழியில் St Patrick’s Cathedral இல் ஈஸ்டர் வழிபாடு நடந்துகொண்டிருந்தது. உள்ளே சென்றோம். முழு இருளில் கைகளில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தை ஏந்தியபடி மக்கள் நிறைந்திருந்தார்கள். ஒலித்துக்கொண்டிருந்த இசையின் தொனியில் மனது உள்முகப்பட்டது. அமைதிக்காகப் பிரார்த்தியுங்கள் என்ற குரல் கேட்டது. ‘ஈரான், காசா என எல்லோருடைய அமைதிக்காகவும்’ என்று மனதுக்குள் முணுமுணுத்துக்கொண்டு வெளியே வந்தேன்.

Times Square க்கு நடந்தோம். அது பகல் போல ஒளி வெள்ளத்தில் மிதந்தது. பார்த்த இடத்தில் எல்லாம் பிரமாண்டான LED திரைகளில் விளம்பரங்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. சனத்திரளின் நடுவே குட்டி குட்டியாக தெருவோர இசை நிகழ்வுகள், நடனங்கள், வரலாற்றுக் கதாபாத்திரங்களைப்போல ஒப்பனையிட்ட கலைஞர்கள், சுடச்சுட புகைப்படங்களை எடுத்துக்கொடுக்கும் படப்பிடிப்பாளர்கள் என அந்த இடமே களைகட்டி இருந்தது. இரவு நேரக் கோவில் திருவிழாக்களில் சிறுவயதில் அனுபவித்த ஒருவித கனவு மயக்கத்தை நெடுநாட்களுக்குப் பிறகு உணர்ந்தேன். பல வர்ண ஒளி வெள்ள நீருக்குள் மெதுவாகக் கைகளை அசைத்து நீந்துவதைப்போன்ற மனச் சித்திரம்.

நள்ளிரவில் ஹொட்டலுக்குத் திரும்பினோம்.

அடுத்தநாள் மதியத்தில் கூரை திறந்த பஸ்களில் நகரத்தைச் சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டிருந்தாலும் காலநிலை மதியம் 12 மணிக்கு மழை வரும் எனச் சொன்னதால் அதற்குப் பதிலாக The MET மியூசியத்திற்குச் சென்றோம். உள்ளே எல்லோரும் கூட்டமாகப் பின்தொடர்வது சாத்தியமில்லை என்பதால் ஐந்தாறு பேர்கொண்ட சிறு குழுக்களாகவும் அவர்களுக்கு ஒரு வழிகாட்டியும் என பிரிந்துகொண்டோம். முதலில் எகிப்திய நாகரீகப் பகுதிக்குள் சென்றோம். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னாலான ஒரு காலத்துக்குள் நடக்கிறேன் என்ற உணர்வு மனதில் தளும்பிக்கொண்டே இருந்தது. எகிப்திய பகுதி தந்த பிரமிப்பை மற்றைய பகுதிகள் தரவில்லை. ஐரோப்பிய கலை வேலைப்பாடுகளைக் கொண்ட 1700 களின் குவளைகள், கூஜாக்களைப் பார்த்தபோது ‘எகிப்துக்காரன்கிட்ட பேசுறியா..’ என்ற ஏளனக்குரலை எனக்குள் உணர்ந்தேன். வெயிலும், லக்ஷ்மி சரவணகுமாரும் ஐரோப்பிய மறுமலர்ச்சிகால ஓவியங்களைத் தேடித் தேடி பார்த்து ரசித்தார்கள். என்னுடைய ஆச்சரியமும் பிரமிப்பும், கலை வெளிப்பாட்டில் அல்ல, அது காலத்தின் தொன்மையிலேயே கட்டப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தேன். ஒரு எகிப்திய மண் சுவரில் வரையப்பட்ட கோடுகளாலான ஓவியம் ஏற்படுத்திய ஆச்சரியத்தை, வர்ணங்களைக் குழைத்துத் தத்ரூபமாக வரையப்பட்ட ஓர் ஐரோப்பிய ஓவியம் தரவில்லை. 4000 வருடங்கள் vs 400 வருடஙகள்.

அன்றைய இரவு இளங்கோ கிருஷ்ணன் அறையில் அவரோடு நான், வெயில், லக்ஷ்மி சரவணகுமார், தமிழ்பிரபா, திருச்செந்தாழை, எஸ்.செந்தில்குமார் குழுமியிருந்து நள்ளிரவு தாண்டியும் பேசிக்கொண்டிருந்தோம். வெயில் சில பாடல்களைப் பாடினார். கலைந்து சென்றோம்.

இறுதி நாளின் காலை. எழும்போதே மறுபடியும் அன்றாடங்களின் சலிப்புக்குள் புகவேண்டியதை எண்ணி மனம் சோர்ந்திருந்தது. காலை உணவுக்காகக் கீழிறிங்கினேன். எல்லோரும் பிரிவின் கதைகளையே பேசிக்கொண்டிருந்தார்கள். ஜெயமோகன் அருகில் நிற்க நான் அழகுநிலாவிடம் “சரி.. நாங்கள் லண்டனில் சந்திப்போம்” என்று சொன்னேன். ஜெயமோகன் சிரித்துக்கொண்டே “பதிவு பண்ணுகிறாராம்” என்றார்.

காலை பத்து மணியளவில் இரண்டு குழுக்களாக தமிழ்நாட்டிலிருந்து வந்த எழுத்தாளர்கள் விமான நிலையத்துக்குப் புறப்பட்டார்கள். எனக்கும், ரா.கிரிதரனுக்கும் இரவுதான் விமானம் என்பதால் மதியத்துக்குப் பிறகு 3 மணி அளவிலேயே ரக்ஸி ஏற்பாடு செய்திருந்தார்கள். ரா. கிரிதரன் தன்னுடைய நண்பரைப் பார்த்துவரச் சென்றிருந்தார். ஒவ்வொருவராக விடைபெற்றார்கள். ஒஸ்ரின் சௌந்தர், ‘ஹொட்டெலில் இருந்து புறப்படும்போதும், விமானநிலையத்துக்குச் சென்ற பிறகும் மறக்காமல் செய்தி அனுப்புங்கள்’ என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். அவரும் விமானத்தைப் பிடிக்க வேண்டியிருந்தது.

நான் மட்டுமே எஞ்சிவிட சட்டென தனிமை கவிந்தது. சிறுவயது நாட்களில் தொலைதூரக் கிராமங்களை நோக்கி இராணுவம் முன்னேற முயலும்போது போர் வெடித்துவிடும். அப்போதெல்லாம் அந்தப்பக்கங்களில் இருக்கும் சொந்தக்காரர்கள் இடம்பெயர்ந்து எங்கள் வீட்டுக்கு வருவார்கள். அவர்களோடு என் வயதொத்தவர்களும் நிறைய. பள்ளிக்கூடமும் இருக்காது. ஒரே விளையாட்டுத்தான். வீட்டை அதகளப்படுத்துவோம். திடீரென்று ஒருநாள் இராணுவம் பின்வாங்கியதாகச் சொல்வார்கள். சொந்தக்காரர்கள் புறப்பட்டுப் போய்விடுவார்கள். அந்தத் தனிமையின் வெறுமையை எதிர்கொள்வது சிரமம். ‘ஆமிக்காரர்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் அந்தக் கிராமங்களில் இருந்திருக்கலாம்’ என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். இப்போதும் அப்படியொரு மனநிலைதான்.

ரா.கிரிதரன் வந்த சற்று நேரத்திலேயே ரக்ஸியும் வந்தது. விமான நிலையத்துக்கு வந்தோம். விமான நிலையத்திலிருந்து மகேஸ்வரி, பழனி, சௌந்தர், ஜெயமோகன் ஆகியோருக்கு செய்திகளை அனுப்பினேன். விமானத்தில் ஏறி அமர்ந்தபோது ஒன்று தோன்றியது. எல்லோரையும் போலவேதான் அன்றாடங்களின் சுமை, எழுத்து மனோநிலையில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அது தணியாத சுடராக நின்றெரிய உதவும் சந்திப்புகளும், நேரம் போவதே தெரியாத நேர் உரையாடல்களும் எனக்கு அரிதினும் அரிதானவை. இங்கே சுவிற்சர்லாந்தில் என்னை எழுத்தாளராக அறிந்தவர் யாருமிலர். ஒரு முறை அதை அறிந்த ஒருவர், தன்னுடைய பாட்டியின் நினைவஞ்சலி மலரில் அவரைப்பற்றியும் அவர் வாழ்ந்த புங்குடுதீவு பற்றியும் கவிதை எழுதித்தருமாறு கேட்டபிறகு நானும் யாருக்கும் சொல்வதில்லை.

இப்படியொரு சூழலில், தனியே எழுத்தும் இலக்கியமும் சமூக அரசியலும் பேசித்திரியும் ஐந்து நாட்கள் வாய்த்தால் களிப்புப் பெருகாதா என்ன? இந்த உற்சாகம் இன்னும் மூன்று நான்கு மாதங்களைத் தாங்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *