பிச்சை வேண்டாம் நாயைப் பிடியுங்கள்

எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. பிரபாகரனது கண் புருவம் நெற்றி தாடையென விலாவாரியாக பிரித்து மேய்ந்த போஸ்ட்மார்ட்ட கட்டுரைகள் முதல் ஆறுமாதத்திற்கு முன்னாலாவாது புலிகள் பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருந்தால் இப்போது ஈழம் என்னும் சுயாட்சி மாகாணமாவது கிடைத்திருக்குமென்ற `அலுக்கோசு´த்தனமான எழுத்துக்கள் வரை பார்த்தாயிற்று. மேலும் எழுதுவதற்கு என்ன உண்டு..?

வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறேன். இந்தப்போர் ஏன் தோல்வியுற்றதென ஒரு மூன்றாம் தரப்பாக நின்று ஆராயமுடியாத மனத்தடை எனக்கு உண்டு. எனக்குமட்டுமல்ல என் சிந்தனையையொட்டிய பல புலம்பெயர்ந்தவர்களுக்கு உண்டு. ஒவ்வொரு தடவையும் வவுனியாவின் காட்டு முகாம்களில் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு அடுத்தநேரச் சோறுக்கு கையேந்துகிற நம் சொந்தங்களைக் காணுகிற போதெல்லாம் இவர்களுக்கு இந்த வாழ்வை நாமே பரிசளித்தோம் என்ற தாங்கவொண்ணாத குற்ற உணர்ச்சியில் குமைந்து விடுகிறேன்.

இதுபற்றி நிறையப்பேச விருப்பமில்லை. ஆனால் ஒன்றைச் சொல்லமுடியும். காலக்கோடுகளுக்கு வேண்டுமானால் புலிகள் இயக்கம் தோல்வியுற்றது மே 18 ஆக இருக்கலாம். ஆனால் உண்மையென்னவெனில் அது தன்னை கடைசி வரை நம்பியிருந்த தன்னோடிருந்த மக்களிடம் தோல்வியுற்று மாதங்களாயிற்று என்பதுதான். அந்தக் கடல்களும் காடுகளும் நிறையக் கதைகளை வைத்திருக்கின்றன. அதனை அவைகளே சொல்லட்டும்.

ஆனால் இன்றைய புலிகளின்தோல்வியும் தலைவரது இழப்பும் (இந்த இடத்தில் நீங்கள் என்னைத் துரோகியெனலாம்) என்னை வலிக்கச்செய்தளவு வவுனியாக் காடொன்றின் கட்டாந்தரையில் கூடாரம் அடித்து தினம்தினம் விசாரணைகளை எதிர்கொண்டிருக்கும் என்வயதொத்த ஒரு இளைஞனுக்கு இருக்கப்போவதில்லை. யாருக்குத்தெரியும்…? நிம்மதிப் பெருமூச்சொன்று தோன்றியிருந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை..

000

pichaiஇலங்கையில் தற்போது வாழும் குறிப்பாக வன்னியிலிருந்து வெளியேறிய மூன்று லட்சம் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கும் அவர்களின் விருப்புக்களுக்கும் இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்திருக்கின்ற எங்களது எண்ண ஓட்டத்திற்கும் இடையில் நிரவமுடியாத பாரிய இடை வெளியொன்று எப்போதோ விழுந்துவிட்டது. ஈழம் சுயநிர்ணயம் அடிப்படை உரிமைகள் என்பனவெல்லாம் நமது பேச்சாயிருக்க குந்த ஒரு நிலம்.. குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் முடிந்தால் கொஞ்சம் சோறு உயிரோடு விடிகின்ற அடுத்த நாட்காலை என்பது அவர்களின் அதிகூடிய எதிர்பார்ப்பாகியது. அந்த தவிர்க்கவியலாத நிலையை நாம் விளங்கிக் கொள்ளவில்லை. விளங்கிய பலர் வெளிச்சொல்லவில்லை நானுட்பட..

கடந்த திங்கட்கிழமை, செட்டிக்குளம் முகாமிலிருந்து வவுனியா வைத்திய சாலைக்கு வந்த மச்சாளுடன் பேசினேன். அவர் தனது குழந்தைகளுக்காக வந்திருந்தார். பார்க்கச் செல்லும் நபர்கள் செல்பேசியூடு தொடர்புகளை அவ்வப்போது ஏற்படுத்துகிறார்கள். மச்சாள் தனதிரண்டு பிள்ளைகள் உயிரோடிருப்பது குறித்து பறாளாய் முருகனிலிருந்து புதுகுடியிருப்பு முருகன் வரை நன்றி சொன்னாள். மரணஅறிவித்தல் சொல்வதுபோல அவள் சாவுகளை வரிசைப்படுத்திக்கொண்டிருந்தாள். உனக்குத் தெரியும்தானே.. வேலுமாமா.. வெளிக்கிட்டு வாறநேரம் செல்விழுந்து அந்தஇடத்திலேயே சரி.. பாப்பாவையும் பிள்ளையளையும் நாங்கள் எவ்வளவோ இழுத்துபாத்தம். பாப்பா பிரேதத்தை விட்டுட்டு வரமாட்டன் எண்டு அதிலையே இருந்து அழுதுகொண்டிருந்தா. பிள்ளைகளும்தான். நாங்கள் என்னசெய்யிறது. விட்டிட்டு வந்திட்டம். அவவும் செத்திருப்பா.. பிள்ளையளும்தான்…

மச்சாள் தொடர்ந்துகொண்டேயிருந்தாள். நான் ம் மட்டும் கொட்டிக்கொண்டிருந்தேன். அந்தக்கோயில் வைச்சிருந்த ஐயாடை உடம்பே கிடைக்கல்லை.. மனிசிக்கு கால் இல்லை. தண்ணி அள்ள வெள்ளைக்கேட் காணியில இருந்து வாற கண்மணி ஆட்களை தெரியும்தானே.. அந்த குடும்பமே இல்லை.. அவரில்லை. இவ இல்லை.. அவர்கள் இல்லை என மச்சாள் சொல்லிக்கொண்டே இருந்தாள். மரணங்கள் எத்தனை தூரம் மரத்துப்போன ஒரு விசயமாகி விட்டது அவளுக்கு.

இறுதியில் நான் ம் கூடகொட்ட முடியாத ஒரு கேள்வியை அவள் கேட்டாள். உங்கட தலைவர் ஆறுமாசத்துக்கு முதலே சரணடையிற முடிவை எடுத்திருந்தால் எவ்வளவு சனம் தப்பியிருக்கும்..

அவள் தெளிவாகச் சொன்னாள். உங்கட தலைவர்!

எப்படி இந்தப் பிரிவு ஏற்பட்டது.. ? புலம்பெயர்ந்த நாம் யாருக்காக போராடினோம்?

வவுனியாவின் காடுகளின் திசைநோக்கி / சாவகச்சேரி முகாம்கள் நோக்கி கையெடுத்துக் கும்பிடுகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். முகத்தில் காறி உமிழுங்கள். எங்கடை பெடியள்.. மற்றும் எங்கட சனங்கள் என்ற ஊடாட்டத்தில் எங்கட சனங்களுக்காக எத்தனையோ இரவுகள் உருகியபோதும் நாசமறுப்பார் கொல்லுறாங்கள் என நாசமறுப்பாரில் எல்லாத்தரப்பையிட்டும் வெம்மியபோதும் நான் இறுதிவரை எங்கடை பெடியங்களுக்காகவே வெளியே பேசினேன் என்பதையிட்டு என்னைக் கொன்று போடுங்கள்.

000

புலிகளிடத்தில் நான் உணர்வுத்தளத்தில் மிக நெருங்கியிருந்தேன் ஏனென்பதற்கு காரணங்களை விபரிக்க முடியுமா எனத்தெரியவில்லை. அது என்வயதொத்த பலருக்குமான நிலையாக இருக்கலாம். சிந்தனை மட்டத்திலும் தமிழர்கள் தாம் விரும்புகின்றதான ஒருதீர்வினை பெறுவதற்கு சிங்கள அரசை அதன் இராணுவ பொருளாதார இயந்திரங்களை நொருக்கி பணியவைக்ககூடியதான ஒரு நம்பிக்கையாக புலிகள் இருந்தார்கள் என்னளவில். ஆனால் ஒரு கட்டத்தில் – பிச்சைவேண்டாம் நாயைப் பிடியுங்கள் என எல்லோரையும் போலவே ஒரு இழவும் வேண்டாம். சனத்தை உயிரோடு இருக்கவிட்டுவிடுங்கள் என நானும் மறுகினேன். ஆனால் வெளிச்சொல்லத் தைரியமற்றிருந்தேன். பொதுவெளியில் புலிகளை நோக்கி சுட்டுவிரல் நீட்ட தயக்கமுற்ற ஒவ்வொரு பொழுதும் குற்ற உணர்ச்சி அதிகரித்துக் கொண்டே போனது. புலிகளுக்கு வெளியே புலிகளல்லாத பலருக்கும் துரோகிப்பட்டங்களை வழங்குவதற்குரிய அதிகாரங்களிருந்தன என்பதுவே பெரும் பயமாகியது. (இன்றது பத்மநாதனைத் துரோகியென்கிறது. தயாமோகனைத்துரோகியென்கிறது. நாளை மதிவதனியே வந்து அவர் இல்லைத்தானென்றால் அவரையும் துரோகியெனச் சொல்லும்)

புலிகளின் தலைவரிடத்தான நெருக்கமும் மேற்சொன்ன வகையானதே.. கூடவே சில பிடிபடாப் பெருமைகளும் சுமந்தது. இன்றவரில்லையென்றாகி விட்டது. அந்த உண்மை அடுத்து நிகழ்ந்தேறும் அரங்குகளில் தெறிக்கிறது. எத்தனை வெட்கக் கேடான வேதனையான பொழுதுகளைத் தாண்டுகிறோம் நாம். புதிய புதிய மர்ம மனிதர்கள் தோன்றுகிறார்கள். புதிய புதிய அறிக்கைகள் வருகின்றன. தளத்திற்கு வெளியே எஞ்சிய புலிகள் இயக்கமோ அல்லது வால்களே இன்று இரண்டாக நிற்கின்றன எனத் தெளிவாகத் தெரிகிறது. மக்களின் மரணங்களை வைத்து நிகழ்த்திய அரசியல் மக்களைத்தாண்டியும் நீள்கிறது.

மக்கள் பாவம். முன்னைய நாட்களில் இயக்கம் பிரிந்தபோது தலைவர் இருக்கின்ற இடத்திற்கு தம்மையும் நகர்த்தினார்கள். இப்போதும் அப்படியே.. தலைவர் இருக்கின்றார் எனச் சொல்கிற இடத்திற்கு.. நகர்த்துகிறார்கள்.

எல்லோரும் விரும்புகிறார்கள். எல்லலோரும் நம்புகிறார்கள்.. என்ன செய்ய.. நம்பிக்கைளும் விருப்பங்களும் எப்போதும் உண்மையாகி விடுவதில்லையே..

நான் உணர்வு ரீதியாக நெருங்கியிருந்த அக்கறையுற்றிருந்த புலிகள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டது. வரலாற்றில் அதன் தொடர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. புதிய மர்ம ஆசாமிகள் குறித்து எனக்கெதுவித அக்கறையும் இல்லை. அது பத்மநாதனோ அறிவழகனோ.. எவராகவும் இருக்கட்டும்.

30 ஆண்டுகாலம் போராடிப் போய்ச்சேர்ந்த ஒருவனின் மரணத்தை மறைப்பதில் ஆயிரம் காரணங்கள் சொல்கிறார்கள். மக்கள் எழுச்சி தடைப்பட்டுவிடுமாம். அடுத்த ஆறு மாதத்தில் மக்கள் எழுச்சிமூலம் எதையாவது சாதித்துவிடும் நம்பிக்கையென்பது எத்தனை பெரிய மோசடி?

விடுதலைப்போரை வைத்து தின்று கொழுத்த கூட்டம் தலைவர் உயிரோடிருப்பதாகத்தான் சொல்லும். அதுமட்டுமல்லாமல் வைகோவையும் நெடுமாறனையும் கொண்டு சொல்லவும் வைக்கும். நாம் விரும்புகிற செய்தியைச் சொல்வதால் அவற்றையே நாமும் நம்புவோம். (ஒருவார காலம் துக்கம் அனுஸ்டிக்கச்சொல்லி அதனை அனுஸ்டித்துக்கொண்டிருந்த ஒரு தொலைக்காட்சி தனது பிசினஸ் பாதிக்கப்பட்டுவிடுமோ என பயந்தோ என்னவோ அதை நிறுத்திவிட்டது. இதுநாள்வரை தம்மை புலிகளின் அதிகாரபூர்வ ஊடகமாக குறிப்பால் உணர்த்திக்கொண்டிருந்த பல ஊடகங்களும் திடீரென்று கள்ள மெளனம் சாதிக்கத் தொடங்கிவிட்டன. HERO இல்லாத படம் ஓடாதென்பதைப் போல)

அலுப்படிக்க எழுதுகிறார் என நான் நக்கலடிக்க எழுதுகிற இராயகரனும் குடித்துவிட்டு எழுதுகிறார் என நான் அனானியாக ஆங்காங்கே கும்முகிற சிறிரங்கனுமாவது அந்த தலைவனுக்குரிய அஞ்சலியைப் பாடட்டும். தன்மீதும் தன்போராட்டத்தின் மீதும் அக்கறையுள்ள சிலரையாவது பிரபாகரன் சம்பாதித்தார் என்பதே ஒரே ஆறுதல்.

நான் முழுவதுமான நம்பிக்கையற்று இருக்கிறேன். வெறும் கோரிக்கைகளோடு..
புலம்பெயர்ந்து வாழ்கிற ஈழத்தமிழர்களே.. உங்களது அடுத்த எந்த அரசியல்நகர்வும் அங்கே மிச்சமிருக்கிற செத்துப்பிழைத்த சனத்தை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். யாழ்செல்லும் படையணியோ திருமலை செல்லும் படையணியோ எந்தப்படையணியின் அநாமதேய அறிக்கைகளுக்கும் ஊடகங்களில் முக்கியத்துவம் தருவதைத் தவிருங்கள். இனியாவது புலம்பெயர் மாடுகளை குசிப்படுத்தும் செய்திகளை வழங்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
நாம் மக்களோடு மக்களாக கலந்திருக்கிறோம் என்ற யாழ்செல்லும் படையணியறிக்கை எவ்வளவு லூசுத்தனமானதென்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா..? யாழ்ப்பாணத்தில் ஒரு முகாமை நிறுவி 14 வயதிலிருந்து 50 வரையான எல்லாரையும் முகாமிலிட்டு வடிகட்டப்போகிறோம் என சிங்களம் புறப்பட்டால் கேட்பதற்கு நாதியில்லையென்பதை புரிந்து கொள்ளுங்கள். இதுவே மட்டக்களப்பிற்கும் பொருந்தும். இதுவே திருகோணமலைக்கும் பொருந்தும்.

பத்மநாதனாக இருக்கட்டும் அறிவழகனாக இருக்கட்டும்.. அங்கே எஞ்சியிருக்கின்ற போராளிகளுக்கு தண்டனையேதுமற்ற பொதுவாழ்வில் இணைவதற்கான ஏதாவது ஒரு வழியை எப்படியாவது ஏற்படுத்திக் கொடுத்துவிடுங்கள். வெட்கத்தை விட்டு சொன்னால்.. (இதிலென்ன வெட்கப்பட இருக்கிறது. கருணாநிதியை கெஞ்சி ஜெயலலிதாவை கெஞ்சி ஒபாமாவை கெஞ்சி யுஎன்ஓவை கெஞ்சி கடைசியில் மகிந்தவையும் கெஞ்சி.. விட்டபிறகு கருணா என்கிற முரளிதரனைக் கெஞ்சுவதில் என்ன நேர்ந்துவிடப்போகிறது. ) கருணாமூலமாகவேனும் ஒரு பாதுகாப்பான சரணடைவை ஏற்படுத்திக் கொடுங்கள். நடு ஆற்றில் விட்டதைப்போன்று தனித்த அந்த போராளிகளையும் தளபதிகளையும் இராணுவம் தேடித்தேடி அழிக்கிறது என்ற செய்திகளை தாங்கமுடியவில்லை.

முகாம்களில் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு தங்களைத் தொலைக்கப்போகிற உறவுகளுக்கு என்ன சொல்ல முடியும்..? இதோ.. இங்கே மீளவும் exil government புறநிலை அரசு சுயாட்சிக்கான அழுத்தம்.. தமிழீழ தனியரசிற்கான தேர்தல் (அதுமட்டுமல்ல.. மீளவும் போராளிகளை பலப்படுத்தி ஈழத்தை அடைவோம் என்கிற இரக்கமற்ற கதைகளும் கூட) என அடுத்த காட்சிகளுக்கான மேடைகள் தயார் செய்யப்படுகின்றன. இவை தேவை அல்லது தேவையற்றவை என்பதை தெளிவாக அறிவித்துவிடுங்கள். நாம் வெறும் 4 மில்லியன்களே உள்ள தனித்த இனம். வேறெவரும் அற்ற இனம். ஆறுகோடி தொப்புள் கொடி என்பதெல்லாம் ச்சும்மா.. அந்த ஆறுகோடிப்பேரில் நாம் சிலருக்கு பெரும் சோகமாக இருந்தோம். சிலருக்கு பெரும்தொல்லையாக . சிலருக்கு நோ கமன்ட்ஸ் ஆக.. சிலருக்கு வியாபாரமாக .. அவர்களில் எமக்காக அழுபவர்களின் கண்ணீரை நாமே துடைத்துவிட வேண்டியிருப்பதுதான் உண்மை நிலவரம். அதை விடுத்து ஆறுகோடி பேரை வைத்து எதையாவது செய்யமுடியும் என யோசிக்கத் தொடங்கினால் – அந்தக் கணமே அவ் நினைப்பைத் தூக்கியெறிந்துவிட்டு சிங்களவர்களோடு கை கோர்த்துக் கொள்ளுங்கள்.

வேறென்ன சொல்ல…? மீளவும் ஒருதடவை மன்னித்துவிடுங்கள் எனக் கேட்பதைத் தவிர

Last modified: May 25, 2009

5 Responses to " பிச்சை வேண்டாம் நாயைப் பிடியுங்கள் "

  1. உண்மையான யதார்த்தம் என்பது இது தான்.

  2. “உங்கட தலைவர் ஆறுமாசத்துக்கு முதலே சரணடையிற முடிவை எடுத்திருந்தால் எவ்வளவு சனம் தப்பியிருக்கும்..”

    நட்புடன் சயந்தனுக்கு….
    தங்களின் மேற்குறிப்பிட்ட குறிப்பு எவ்வளவு முக்கியமானது….
    அது ஏன் அப்படியோ அல்லது வேறு வழியாகவோ நடக்கவில்லை என்பது இப்பொழுதும் என்போன்ற பலரின் கேள்வி…
    அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் பின்வரும் கட்டுரையை எழுதியிருந்தேன்…
    ஆரசியல் தோல்வியா? இராணுவத் தோல்வியா?
    http://meerabharathy.wordpress.com/2010/09/

    ஆனால் என்ன பிரயோசனம்….
    யார் கவனித்தார்…பொது மனிதர்களைப்பற்றி யாருக்கு அக்கறை…
    நட்புன்
    மீராபாரதி

  3. Logesh.P says:

    Vanakam .This is really Made me to think a lot .And its the real truth also .We that to accept the Reality with out any hesitation .
    But the truth is what we will do for it .We are just stand like a blind All the best friends

  4. சயந்தன் says:

    People who recently come here, Please visit here http://sajeek.com/archives/263 to view all the comments..

  5. Anonymous says:

    உண்மை

× Close