முதன்மை

ஆயாச்சி அல்லது கச்சான்காரப் பூரணத்தின் பேரன்

ஆறாவடுவின் நான்காவது திருத்தமும் முடித்து, “இதுதான் எனது உச்சக் கொள்ளளவு. இதற்குமேலும் நீங்கள் எதிர்பார்க்கும் செழுமை என்னிடம் மருந்திற்கும் கிடையாது” என்று அனுப்பிவைத்தபோது தமிழினி வசந்தகுமார் அண்ணன் சொன்னார். “பரவாயில்லை. இது கெட்டிக்கார இளைஞன் ஒருவன் எழுதிய சுவாரசியமான பதிவுதான். ஒரு தொடக்கமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் கெட்டிக்காரத்தனம் மட்டுமே ஒரு நாவலை எழுதப் போதுமானதல்ல. அதற்கும் மேலாக ஒரு நிறைவான மனித மனம் தேவைப்படுகிறது. வாழ்வின் சகல பாடுகளையும் பட்டு ஓய்ந்த வயதொன்றின் மனநிலையோடு பதட்டமின்றி நிதானத்தோடு வாழ்க்கையின் ஒவ்வொரு தரிசனங்களையும் அவற்றின் உயிர்த்தன்மை கெடாதபடிக்கு அணுகி கதை தன்னைத்தானே நகர்த்திச் செல்வதைப்போல நீ ஒரு நாவலை எழுத வேண்டுமென்றார். “சரி” என்றேன்.

நேரிற் சந்தித்தபோது “இதைப்படி இதைப்படி” என்று அவர் தெரிவு செய்துதந்த புத்தகங்களில் அரைவாசி, இன்னமும் படிக்காமற் கிடக்கின்றன. பிரான்ஸிஸ் கிருபாவின் கன்னி நாவலை “எங்கே, இதை நீ டிகோட் செய் பார்க்கலாம்” என்று சொல்லி ஆண்டுகளாயிற்று.

ஆனாலும், நேர்கோட்டு முறையில், இரண்டு தலைமுறையைச் சேர்ந்த மனிதர்களின் வாழ்வையும் அவர்களின் பாடுகளையும் ஒரு பெரிய நாவலில் சொல்லவேண்டுமென்ற கனவு எனக்கிருந்தது.

0 0 0

எனது அப்பம்மாவிற்கு எண்பது வயதுகளாகிறது. கடலோரக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் அவர். இப்பொழுதும் கடலில் இறங்கினால் கூந்தலை அள்ளி முடிந்துவிட்டு “பிறநீத்தம்” அடிப்பதில் “விண்ணி”. எனது சிறிய வயதில், வெள்ளைச் சேலையை என் இடுப்பில் சுருக்கிட்டு மாரிகாலக் கிணற்றில் இறக்கி மேலே நின்று வட்டமாகச் சுற்றி வருவார். அவர் பிடியை இலேசாக்குவதும் நான் நீரில் மூழ்கி “குய்யோ முய்யோ” என்று கத்துவதும் அவர் சரக்கென்று சேலையை இழுத்து என்னை நீர்மட்டத்திற்கு கொண்டுவருவதும் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை நடக்கும். மேலே நின்று “காலை அடிச்சு நீந்து” என்று அவர் சொல்வது கிணற்றுச் சுவர்களில் எதிரொலித்து ஐந்தாறு தடவை காதுகளில் நுழையும்.

நீரில் உடலைச் சமநிலைப்படுத்தி, மூழ்காதிருக்க எட்டொன்பது வயதுகளிலேயே கற்றிருந்தேன். அப்பம்மா என்னை கிணற்றிலிருந்து அப்புறப்படுத்தினார். “தவக்களையள்தான் கிணத்துக்கை நீந்தும். மனிசன் கடல்லதான் நீந்துவான்” என்று அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்தார். கடலின் மீதான நெருக்கத்தை எனக்கு அவர்தான் ஊட்டினார். விரியும் கடலைக் கண்டால் எனக்குள் உருவாகும் பரவசம் அவர் தந்தது. மன்னார் இலுப்பைக்கடவையிலிருந்து இந்தியாவிற்குப் படகேறிய போது, ஏதேனும் நடந்தாலும், இருக்கட்டுமென – இறுக்கமான அரைக்காற் சட்டையும், பனியனும் அணிந்து செருப்புமில்லாது ஏறிய நம்பிக்கை அவர் தந்தது. (அது அளவுக்கதிகமான நம்பிக்கை என்பத நடுக்கடலில் புரிந்தது வேறுவிடயம்)

கச்சைதீவு போன கதை, அவரது அண்ணனின் மகன் கடலிற்காணாமற்போய் இரு வாரத்தின் பிறகு இந்தியாவிலிருந்து வந்த கதை, ஒருவருக்கு மீன் பாடு அதிகமென்றாலும் ஊரே கொண்டாடும் கதை, ராவணன் மீசைக் கதை, ஆமை கடற்கரையில் முட்டையிடும் கதை, உலக யுத்த காலங்களில் குண்டுவீசினால் ஒரு தடியை பற்களில் கடித்தபடி படுத்திருக்கவேண்டும் என்று சொல்லப்பட்ட கதை முதலானவற்றை அப்பம்மாவிடம் கேட்டு வளர்ந்தேன்.

“ஒரு கல் எறியவே, ஒரு கிளி பறக்கவே” என்ற ஒரேயொரு பாடலைத்தவிர்த்து அவருக்கு வேறு பாடல்கள் தெரியாது. அதுகூட “இரு கல் எறியவே, இரு கிளி பறக்கவே.. மூன்று கல் எறியவே, மூன்று கிளி பறக்கவே..” என்று ஏறுவரிசையிற் போகிற ஒரு டுபாக்கூர் பாடல்தான். நித்திரைகொள்ளும் நேரம் அருகிற்படுத்திருந்து பாடுவார். துாங்கும்போது அவர் என் தலையை “உணாவத்” தொடங்கிய ஒரு நிமிடத்திற்குள்ளாயே நான் கிறங்கிச் சுருண்டுபோய்விடுவதால் எத்தனை கல் எறிந்தார் என்றும் எத்தனை கிளிகள் பறந்தன என்றும் எனக்குத் தெரியாமலே போயிற்று. கல்வி சார்ந்த கதைகளோ நீதிக்கதைகளோ அவருக்குத் தெரியாது. தன்னுடைய பெயரை மட்டுமே – அதுவும், மூன்று சுழி “ண” இல், பின்னிரண்டு சுழிகளை எப்பொழுதும் மறந்துவிடுவதால் அதனை “எ” என்பதாகவே எழுதத்தெரிந்தவர் அவர். பூரஎம்.

ஆனால் அவரின் ஒப்பாரி மட்டும் ஆயிரம் அர்த்தங்களைச் சுமந்திருக்கும். அப்பம்மா தனது முப்பது வயதிற்கு உள்ளாகவே கணவரை இழந்திருந்தார். ஏழு பிள்ளைகளில் நால்வரை, நோயிற்கும், விபத்திற்கும், பொலிடோலுக்கும் பலிகொடுத்திருந்தார். நான் பிறந்த ஐந்தாவது மாதம், அவரது ஆறாவது மகன் இருபத்தி மூன்றாவது வயதில் காதலிற் தோல்வியென்ற ஒரு காரணத்தை எழுதிவைத்துவிட்டு பொலிடோலைக் குடித்துவிட்டு அது உடலிற் “சுவறும்” வரை உடலைக் குலுக்கி ஓடி விழுந்து செத்துப்போனார்.

அப்பம்மா அத்துயரங்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே அழுத்தி வைத்திருந்தார். திடீர்திடீரென அவை ஒப்பாரிகளாக வெடித்துச் சிதறின. கல் அடுப்பில் செம்பாட்டுமண் நிரப்பிய பெரிய தாச்சிச்சட்டியில் கச்சான் வறுக்கும்போது பிசிறலாக விரியும் மெல்லியதொரு அழுகை பிறகு ஒப்பாரியாக விரியும். கணவனினதும் பிள்ளைகளினதும் நினைவுகளும் அவரின் கனவுகளும் அந்த ஒப்பாரியில் வழிந்தோடும். அப்பொழுது நாங்கள் அவர்வை இடையீடு செய்வதில்லை. விலகியிருப்போம். என்னைக் கண்ணுற்றால் “சித்தப்பனைத் தின்ன வந்தவனே, உன் சிரிச்ச முகத்தில அவர்ன் பொட்டு வைச்சானே” என்றழுவார்.

சித்தப்பா பொலிடோல் குடிப்பதற்கு சற்று முன்பாக வீட்டிற்கு வந்தாரென்றும் காலையிலேயே குளிக்க வார்க்கப்பட்டு பாயிற் படுத்திருந்த என்னை கிணற்றடிக்குத் துாக்கிச் சென்று குளிக்கவார்த்தாரென்றும், சிரட்டைக்குள்ளிருந்த கறுத்தப்பொட்டை நெற்றியில் பெரிதாய் இட்டு தன் தோளோடு சாய்த்துக் கொஞ்சினார் என்றும் அப்பம்மாவின் ஒப்பாரிகளே எனக்குச் சேதி சொல்லின. ஊரின் சாவு வீடுகளுக்குச் சென்று “ஒரு பாட்டம், இரண்டு பாட்டம்” என்ற கணக்கில் அழுவது அவரது வழமை. ஒத்த வயதில் நான்கு பெண்கள் ஒன்றாய்க் குந்தியிருந்து அருகிருப்பவர் தோளைக் கையால் அணைத்தபடி ஒப்பாரி வைப்பார்கள். அது இறந்தவருக்கான அழுகையாக இருப்பதில்லை. அது சொந்தத் துயரத்தின் குரல்.

அப்பம்மா தனது முப்பது வயதில் கோயில்களில் கச்சான் விற்கத்தொடங்கினார். தொடர்ந்து 28 வருடங்கள் அவர் கச்சான் விற்றார். கச்சான்காரப் பூரணத்தின்ரை பேரன் அல்லது ஆயாச்சியின்ரை பேரன் என்றுதான் நான் ஊரில் அறியப்படத் தொடங்கினேன். மூன்றாவது வகுப்பில் பள்ளிக்கூடத்தில்………………. க்கு காதல் கடிதம் கொடுத்துப் பிடிபட்டபோது, ………………………. ரீச்சர், “கச்சான் விக்கிற பூரணத்தின்ர பேரனுக்கு, மில் கார …………………. மகளைக் கேட்குதோ” என்றுதான் பிரம்பால் விளாசினார்.

அப்பம்மா கச்சான் அடுப்பில் அல்லாடிக் கொண்டிருந்த புகையும், இரவில் எண்ணப்படும் சில்லறைக் காசுகளின் கிணுங்கல் ஒலியும்தான் நினைவு தெரியத்தொடங்கிய நாட்களின் ஞாபகங்களாக இருக்கின்றன.

நிலமை சீராக இருந்த முன்னாட்களில் தொலைதுாரக் கோயில்களுக்குச் சென்று தங்கியிருந்து யாவாரம் செய்து வருவாராம். தனியொருவராக மன்னார் கேதீஸ்வரத்திற்கு கேரதீவு சங்குப்பிட்டி “பாதையில்” சென்று திருவிழா முடித்து வந்த கதைகளையும், சாட்டியில் அந்தோனியார் கோயிலுக்குச் சென்று தங்கி வந்த கதைகளையும் அறிய நேர்கிறபோது எத்தகைய ஆளுமையும் வைராக்கியமும் நிறைந்த பெண் அவர் என்று ஆச்சரியமாயிருக்கிறது.

பனையோலையால் பின்னப்பட்ட கடகம் ஒன்றினுள் தனித்தனிப் பைகளில் கச்சான், சோளம், கடலை முதலானவற்றைக் கட்டுவார். கோயிலில் அவற்றைப் பரப்பி வைப்பதற்காக மேலே மூன்று வட்டமாக இழைக்கப்பட்ட சுளகுகளை அடுக்குவார். அவற்றின் மேலே பெட்டிக்குள் பெட்டி என்றவாறாக ஐந்தாறு பனையோலைப் பெட்டிகள் இருக்கும். பத்து ரூபாச் சுண்டு, ஐந்து ரூபாச் சுண்டு, ரண்டு ரூபாச் சுண்டு என அளவில் வேறுபடும், வெளிப்பார்வைக்குத் தெரியாத- உள்ளே அளவைக் குறைத்துத் தகரமடிக்கப்பட்ட சுண்டுப் பேணிகள், சுருக்குப் பைகள் என அனைத்தையும் பெட்டியில் திணித்து இழுத்துக் கட்டி தலையில் ஏற்றி நிமிர்ந்து நின்றாரென்றால் பிறகு கையால் பிடிக்க வேண்டியதில்லை. கையை விசுக்கி விசுக்கி வேகமாக நடப்பார். தலையில் கடகம் தன்பாட்டில் பதுங்கிக் கிடக்கும்.

அப்பம்மாவிடம் ஒரு பழக்கமிருந்தது. தலையில் கடகத்தை ஏற்றி “படலையை” தாண்டும் முன்பாக அவர் எனது தங்கச்சியை தனக்கு முன்னால் வரச்சொல்வார். அத் தருணம் பார்த்து வாசலைக் கூட்டுவதுபோல நான் விளக்குமாறோடு நின்று “சொறிச்சேட்டை” செய்வேன். “ச்சீச் செடியே..” என்று திட்டிவிட்டு திரும்பிச் சென்று கடகத்தை இறக்கி மறுபடியும் முதலேயிருந்து தலையில் ஏற்றி வருவார்.

இன்றைக்கு பரவலான வழக்கில் இல்லாத வார்த்தைகளை அவர் உச்சரிப்பதுண்டு. சாதாரண பேச்சு வழக்கில் இப்பொழுதும் நான் உபயோகிக்கிற “பறையாமல் இரு பாப்பம்” (பேசாதிரு) என்பது அவரினது பாதிப்பாக இருக்கலாம். தவிரவும் “செடி..” “நரகத்து முள்ளு” முதலானவற்றை அவர் உச்சரிக்கும் தொனியில் அவை கடுமையான வசைச் சொற்களாக மாறியிருக்கும்.

யாவாரம் காரணமாக அவர் ஊருக்குள் பேமஸாயிருந்தார். ஆயாச்சி என்றால் ஊர் தாண்டியும் தெரியும். அப்பம்மாதான் வெற்றி என்ற போராளியை வீட்டிற்கு சாப்பிட அழைத்து வந்தார். போராட்டம் பற்றிய தத்துவார்த்தமான கோட்பாட்டுப் புரிதல்கள் அவரிடம் கிடையாது. போராட்டம் என்பதே அவரின் அக்கறைக்கு அப்பாற்பட்ட விடயமாக இருந்திருக்கலாம். ஆனால் வழியில் சாப்பாடு கேட்ட ஒருவனைத் தவிக்க விட்டு வர அவர் மனம் ஒப்பவில்லை. அழைத்து வந்துவிட்டார். வெற்றிக்கு வெற்றிலை மெல்லுகிற பழக்கம் இருந்தது. அவன் சாப்பிட்டு முடிய, அப்பம்மா ரோஸ் நிறச் சுண்ணாம்பை வெற்றிலையில் தடவி மெல்லிய புகையிலைக் காம்பு ஒன்றையும் உள்ளே வைத்து மடித்துக் கொடுப்பார்.

பின்னாட்களில் வெற்றி எங்கள் வீட்டில் ஒருவனான். பிறகு அப்பம்மாவின் ஒப்பாரியில் ஒரு வரி ஆனான்.

அப்பம்மாவிற்கு அவன் புலி, இவன் புளொட் என்றெல்லாம் பார்க்கத்தெரியாது. இம்முறை ஊரில் நின்ற போது படலையடியில் “ஆயாச்சி” என்று அழைத்து நுழைந்த இளைஞன் ஒருவன் தேர்தல் பிரச்சார நோட்டீஸ்களை அவரின் கையிலும் என் கையிலும் தந்தான். ஈபிடிபி தேர்தல் பிரச்சார நோட்டீஸ்கள் அவை. “ஆயாச்சி, மறக்காமல் வெத்திலைக்குப் போடணை” என்று அவன் புறப்பட்டபோது “இருந்து தண்ணியை வென்னியைக் குடிச்சிட்டுப் போடாப்பு” என்று அவனை இருத்தினார். அவர் அப்படித்தான். ஒரு கொள்கை இல்லாதவர் 😉

அவரிற்கு ஒருநாள் ஒரு இந்திய ராணுவச் சிப்பாய் மரண பயத்தைக் காட்டினான். அன்று காலையில் ரோந்து சென்று சிப்பாய்கள் மீது போராளிகள் குண்டெறிந்த சம்பவ வலயத்தில், கோயிலுக்கு கச்சான் விற்கப்போனவர் அகப்பட்டுக் கொண்டார். வழியாற் போனவர் வந்தவர் மீதெல்லாம் இந்திய இராணுவத்தினர் தாக்கத்தொடங்கினார்கள். கோப மிகுதியில் ஒரு சிப்பாய் அப்பம்மாவின் நெஞ்சில் துப்பாக்கியை வைத்து சுட்டுவிடுவதுபோல மிரட்டினானாம். பயத்தில் சேலையோடு சிறுநீர் கழித்துவிட்டார். கோயிலுக்குப் போகவில்லை, வீட்டிற்கு வந்து யாரோடும் பேசாது பேயறைந்தவர் போலிருந்தார். பிற்காலங்களில் அச்சம்பவத்தை விபரிக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் அமைதியாகிவிடுவார்.

0 0 0

கனவைச் சுமந்துகொண்டுதான் போனேன். அந்தக் கிராமத்தையும் வெள்ளந்தியான மனிதர்களையும், அப்பம்மாவையும் அவரது பாடுகளையும் வாழ்வையும் ஒரு பெரிய தரிசனமாக நாவலொன்றில் இறக்கி வைக்க வேண்டும் என்ற கனவு.

வீட்டுச் சுவரில் சுண்ணாம்பினால் நானெழுதிய பூரணவாசா என்ற பெயரும், கச்சான் காரியாலயம், உரிமையாளர் பூரணம் என்ற எழுத்துக்களும் இன்னமுமிருக்கின்றன. அப்பம்மா சொன்னார். “விதானையார் இப்பயும் கேப்பார், ஆரணை இதை எழுதினது என்று. நான் சொல்லுவன். இது என்ரை பேரன் எழுதினது என்று.”

அப்பம்மாவின் அருகிலிருந்து அவரது வாழ்க்கையைக் கேட்டேன். பிள்ளைப் பிராயத்து கனவுகளை, திருமண நாளின் வெட்கத்தை, கணவன் இறந்த நாளின் துயரத்தை, பிள்ளைகள் இறந்த நாட்களின் வெறுமையை, தந்தையைத் தாயை, உறவுகளை, கிராமத்தை, கடலை, மனிதர்களை கேட்டு முடித்தேன். இன்னமும் கேட்பதற்கு மிச்சமிருக்கின்றன.

ஆனால், இந்த இடைப்பட்ட 18 வருட இடைவெளியில் அந்த வாழ்விலிருந்தும் அதன் அனுபவங்களிலிருந்தும் அந்நியப்பட்டுப்போன என்னால் அதன் உயிர்த்தன்மை கெடாத எதையும் எழுதமுடியுமெனத் தோன்றவில்லை. முடியாதுதான். அந்த வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் அதன் களத்தில் பயணித்தாவது இருக்க வேண்டும். நெஞ்சில் திரண்டு ஊறியிருக்க வேண்டும்.

எனக்கு கெளுத்துமீன் முட்டையில் கறி எப்படி வைப்பதென்று தெரியவில்லை. இறால் வறை எப்படிப் பொன்னிறத் தேங்காய்த் துருவல்களைப் போல இருக்கின்றன என்று அறியவில்லை. ஏலம் கூறும் நடைமுறை தெரியவில்லை. மீன் பாடுகளைப் பொறுத்து ஊருக்கு வரிசெலுத்துகிற சிஸ்ரம் விளங்கவில்லை. ஐம்பது வருடங்களுக்கு முன்பு என்ற சித்திரத்தை மனதால் வரையவே முடியவில்லை.

என்றேனும் ஒரு காலம் வாய்க்கலாம். வயதால் உணர்கிற பருவம் கிட்டலாம். வாசிப்பினால் அதனை அடைய முயலலாம். வாழ்வை எழுத முன்னர் அதன் குறுக்குவெட்டுத் துண்டங்களையாவது எழுதிப் பயிலலாம். அதுவரை

“ஏன்ரா மேனை, எல்லாத்தையும் கேட்கிறாய். செத்தவீட்டுப்புத்தகம் அடிக்கிறதுக்கே..?” என்ற அப்பம்மாவின் வார்த்தைகள் பொய்த்திருக்க வேண்டும்.

By

Read More

கிழவனின் உயிர்!

“பொழுதுவிடிந்து வெளிச்சம் பரவியதும், புதைத்த இடத்தில் பூ வைக்கலாமென்று போனால், ஆண்டவரே, பச்சைப் பிள்ளையை மூடிய குழியில் மண்ணைக் கிளறிப் போட்டிருந்தார்கள். என்னால் தாங்க முடியவில்லை..”

மர்மக்கதையொன்றின், முதலாவது முடிச்சை இலாவகமாக முடிவதுபோல நடேசுக் கிழவர் ஆரம்பித்தபோது நான் நிமிர்ந்து உட்கார்ந்து தலையை அவரிடத்தில் சரித்தேன். இம்மாதிரியான திகில் கதைகளை – ஏழு மலை, தாண்டி ஒரு குகைக்குள் கிளியின் உடலில் உயிரைப் பதுக்கி வைத்திருக்கும், மந்திரவாதிகளின் கதைகளை – வெள்ளை இறகுகள் முதுகில் முளைத்த கேட்ட வரம் தரும் தேவதைகளின் கதைகளை இப்பொழுது யாரும் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. “வாயைத் திற.. அல்லது ஆமிக்காரனிடம் பிடித்துக்கொடுப்பேன்” என்று நேற்றுப்பின்னேரம் ஓர் இளவயதுபெண் தன் சின்ன மகளை உருட்டி மிரட்டி சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தாள். பூதங்களும், பொக்கான்களும் ஆமிக்காரர்களுக்குப் பயந்து ஓடிவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

“அந்நாட்களில் இருளத்தொடங்க முன்னரே, ஊரடங்குச்சட்டம் தொடங்கிவிடும். காலை ஆறுமணியிலிருந்து பின்னேரம் ஆறுமணிவரைதான் சனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நேரமாயிருந்தது. பின்னர் வீடுகளுக்குள் முடங்கிவிடவேண்டும். ஒரு அவசரமென்றால் கூட அசைய முடியாது” கதையின் இரண்டாவது முடிச்சை இப்படிக் கோர்த்தவர் ஒரு மிடறு சாராயத்தை வார்த்து தண்ணீரைக் கலந்து குடித்தார். அப்பொழுது விசத்தைக் குடிப்பதுபோல, முகத்தைச் சுழித்து உதடுகளை அட்ட திக்குகளிலும் கோணினார்.

“இப்பொழுது நிற்பதைப்போலத்தான் அப்பொழுதும். வீதிக்கு வீதி ஆமிக்காரன் துப்பாக்கியோடு நிற்பான். ஆறுமணியாகிற நேரம், அவர்களைத்தாண்டி சைக்கிளில் போவதென்றால், குளிரில் பற்கள் சில்லிடுவதைப் போல முதுகு கூசும். எந்த நேரத்திலும் ஒரு துப்பாக்கிக் குண்டு, நெஞ்சைப் பிரித்துக்கொண்டு முன்னால் வரலாம். அப்படியொரு நாள் என் இரண்டு கண்ணாலும் பார்த்திருக்கிறேன். ஒரு மம்மல் கருக்கு நேரம், சந்தியிலே, சென்றிக்கூடு. உள்ளே துப்பாக்கியை நீட்டியபடி ஆமிக்காரன். நான் தலையைக்குனிந்து கொண்டு அவனைத்தாண்டி சைக்கிளை மிதிக்கின்றேன். கொஞ்ச நேரத்தில், உன்னொத்த வயதிருக்கும், இளம் பெடியன் ஒருவன் மோட்டர் சைக்கிளில் என்னைக் கடக்கிறான். டுப் என்றுதான் ஒரு சத்தம் கேட்டது. மோட்டர் சைக்கிள் உலாஞ்சிக்கொண்டுபோய் வேலிச் செத்தைக்குள்ளே செருகி விழுந்தது. அதற்கு முன்னமே பெடியன் விழுந்துவிட்டான். நிறைவெறியில் உடம்பு பஞ்சு மாதிரிப் போகுமே, அப்படித்தான் எனக்கு நெஞ்சுக்குள்ளே சொட்டுத் தண்ணீரும் இல்லை. ஆண்டவரே.. ” நடேசுக் கிழவரின் வார்த்தைகள் காட்சிகளாயிருந்தன. அவை என்னை தற தற என ஒரு மலை உச்சிக்கு இழுத்துச்சென்றன. அவர் சட்டென்று நிறுத்தியதும், ஆர்வ மிகுதி பீறிட்டது. “ஏன் அவனைச் சுட்டார்கள்” என்று கேட்டேன்.

நடேசுக் கிழவர் தன்னுடைய வாழ்நாளில் ஒருபோதும் பார்த்திராத ஒரு வினோத ஐந்தைப் பார்ப்பதுபோல கண்களை குறுக்கி என்னைப்பார்த்தார். உண்மையாகவே உனக்குத் தெரியாதா என்பதைப்போலான பார்வை. “இது என்ன புதினமான கேள்வி. சுட்டவனிடம் துப்பாக்கியிருந்தது. செத்தவனிடம் அது இல்லை. அவ்வளவும்தான்” என்றார். நான் அமைதியானேன். நடேசுக் கிழவர் சாராயப்போத்தலை கையில் தூக்கி கண்களுக்கு அருகாக வைத்துப்பார்த்தார். அது இப்பொழுதுதான் வற்றத் தொடங்கியிருந்தது. முழுவதுமாக கலக்கி இறைப்பார் என்று நினைத்தேன். அமர்ந்த இடத்தில் விரல்களால் ஒரு மோட்டார் சைக்கிளை மண்ணில் வரையத்தொடங்கினேன். அதன் ஒரு சக்கரத்தில் இரண்டு கண்களையும் மூக்கையும் வாயையும் விரல் தன்னியல்பாக வரைந்தபோது நடேசுக் கிழவர் முதற்சொன்ன குழந்தையின் நினைவு எழுந்தது. “பிறகு, அந்தக் குழந்தைக்கு என்ன ஆயிற்று.”

“அது செத்துப்போயிற்று”

மீண்டும் அமைதியானேன். எழுந்து போகலாமென்று நினைத்தேன். நடேசுக் கிழவரின் முகத்தில் படிந்திருந்த உணர்வுகளை அறியமுடியவில்லை. சமயங்களில் அது ஏதோ உறைப்பான உணவைச் சாப்பிடுவது போலிருந்தது. அடுத்த நொடியே புளியம்பழத்தைப் பற்களுக்கிடையில் சூப்புவது போலானது. வேலியில் ஓடிய ஓணான் ஒன்றை அவரது கண்கள் பின்தொடர்ந்தன. அது இரண்டு கதியால் இடுக்குகளினால் ஓடி மறைந்தபிறகும் முடிவிடத்தில் அப்படியே நிலைத்திருந்தன. அவர் பெருமூச்சு விடுத்தார். “பாவம், கல்யாணம் கட்டி ஆறு வருடத்திற்குப் பிறகு பிறந்த குழந்தை அது. ஆறு மாதத்தில் பொசுக்கென்று போயிற்று”

“என்ன ஆயிற்று” என்று கேட்டேன். இம்முறையும் அது செத்துப்போயிற்று என்றாராயின் எழுந்து போய்விடுவதெனத் தீர்மானித்திருந்தேன்.

“அது யாருமில்லை. என் தங்கையின் குழந்தைதான். அச்சு அசல் என் ஆச்சியைப் பார்ப்பதுபோல அதே வட்டமுகம். சந்தேகமேயில்லை, ஆச்சிதான் தங்கையின் வயிற்றில் வந்து பிறந்தாள். தங்கச்சி எனக்குப் பதினைந்து வருடங்கள் இளையவள். அண்ணன் என்று இல்லாமல் ஒரு அப்பா போலத்தான் மரியாதை. புருஷன் வெளிநாடு போக, நான் அவளோடேயே தங்கிவிட்டேன். தனிக்கட்டையல்லவா. அவளுக்குக் கல்யாணம் முடித்து ஆறு வருடமாக கோயில் குளமெல்லாம் அலைந்து பெற்ற குழந்தை அது. அன்றைக்கு இரவு ஒரு மணியிருக்கும். குழந்தைக்கு வலிப்பு வந்தது. வெள்ளை வெள்ளையாய் வாயால் நுரை தள்ளியது. குடித்த பால்தான் என்று முதலில் நினைத்திருக்கிறாள். கொஞ்ச நேரத்திலேயே காலை இழுத்து இழுத்து குழந்தை உதறத்தொடங்கிவிட்டது. பார்த்துக்கொண்டு நிற்காமல் உடனேயே ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகலாம் என்று கார்க்கார மணியத்திடம் ஓடினேன். ஊரில் அவனிடம்தான் கார் இருந்தது. மணியம் வருகிறேன் என்றான். ஆனால்.. ” என்று நிறுத்திய நடேசுக் கிழவர் அடுத்த குவளையை நிரப்பினார். இம்முறை அதிகம் தண்ணீர் கலக்கவில்லை.

“உனக்குத் தெரியுமா.. அக்காலத்தில், ஆஸ்பத்திரிக்குப் போவதென்றால் மூன்று சோதனைச் சாவடியைக் கடக்க வேண்டும். ஒவ்வொன்றிலும், அரைப்பனை உயரத்தில் மண் அணை இருந்தது. மண் குவிந்து சுனாமி மாதிரி வந்தால் எப்பிடியிருக்கும்.. ஆண்டவரே அப்படியிருக்கும்..”

வளவின் ஒரு மூலையில் அடியில் ஒன்றித்து மேலே ஆங்கில வி எழுத்துப் போல நீண்டு வளர்ந்திருந்த இரண்டு பனைகள் நின்றன. அதிலொன்றின் அரைப்பனை அளவு உயரத்தைக் கண்களால் அளந்தேன். ‘சற்று மிகைதான்’

“பெரிய ராணுவ முகாமிற்குப்போய் அனுமதி வாங்கிக்கொண்டு வாருங்கள். நான் தயாராகிறேன் என்று மணியம் சொன்னான். சரி காரை எடு. காரிலேயே போய் அனுமதியை வாங்கிய பிறகு குழந்தையைக் கொண்டு போகலாம் என்றேன். மணியம் என்னைக் கையெடுத்துக் கும்பிட்டான். அண்ணையாணை, குறைநினைக்க வேண்டாம். எனக்கு மூன்று பிள்ளைகள். ஏதும் நடந்தால் அவர்கள் தனித்துப் போய்விடுவார்கள். ஊரடங்கு நேரத்தில், திரியும் எவரையும் கேட்டுக் கேள்வி இன்றி சுட்டுத் தள்ளுகிறார்கள். என்னால் வரமுடியாது என்று குந்திவிட்டான். என்னுடைய மனது அப்படியொருநாளும் அல்லற்பட்டதில்லை. நான் தானே தங்கச்சிக்கு எல்லாமும். என்னை நம்பித்தானே விட்டுவிட்டுப் போனான். நடக்கிறது நடக்கட்டும் என்று யோசித்தேன். நடந்தே போவதுதான் சரியென்றுபட்டது. ஆமியைக் கண்டால் சடாரென்று கையை உயர்த்த அதுதான் வசதியாயிருக்கும்.

kizavanஆனால் ஓடித்தான் போனேன். ஐம்பது வயதில் அப்படி ஓட மூச்சு முட்டியது. கொஞ்சத் தூரம் போனதும்தான் மூளைக்குள் மின்னியது. அடையாள அட்டைகளை எடுத்துவரவில்லை. திரும்பவும் வீட்டுக்கு ஓடினேன். அப்பொழுது குழந்தைக்கு வலிப்பு அடங்கியிருந்தது. ஆனால் திடீர் திடீரென்று கால்களை உதறுகின்றதாம். குழந்தையைச் சுற்றி ஒப்பாரி வைப்பதுபோல இருந்தார்கள். ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாமென்று குழந்தையைப் பார்த்தேன். அமைதியாய்க் கிடந்தது. திடீரென்று மூச்சை இழுத்து கால்களை உதறியது. நெஞ்சிலே சளி கூடு கட்டினாற்போல முட்டியிருக்க மூச்சு விடும்போது ஒரு சத்தம் வருமே.. அப்படியொரு சத்தம். பிஞ்சுக் குழந்தையை அந்தக்கோலத்தில் காணச் சகிக்கவில்லை. தங்கச்சி என் காலைப் பிடித்தாள். அண்ணன் உன்னை எனது ஐயாவைப்போல நினைத்துக் கேட்கின்றேன். குழந்தையை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போ என்று கதறுகிறாள். என் கண்ணெல்லாம் நீர். எனது அவசரத்திற்கு எனது ஊர்த்தெருவில் போக, எவரிடமெல்லாமோ அனுமதி கேட்கவேண்டியிருக்கிறது. மணியத்தோடு இப்பொழுது வருகிறேன் என்று சொல்லிவிட்டு அடையாள அட்டைகளை வாங்கிக்கொண்டு ஓடத்தொடங்கினேன். எவரின் உயிருக்கும் மரியாதை இருக்கவில்லை. அடையாள அட்டைகளுக்குத்தான் மரியாதை.

நள்ளிரவு, இரண்டு மணியிருக்கும். மார்கழி மாதத்துப் பல்லு நடுங்குகிற குளிர் வீசிக்கொண்டிருந்தது. ஆள் அசுமாத்தம் கண்டு நாய்கள் குரைக்கத்தொடங்கியிருந்தன. எனக்குக் கெடிக்கலக்கம். வைரவரே உம்முடைய வாகனத்தின் வாயைக் கட்டி அருளும் என்று முணுமுணுத்துக்கொண்டே ஓடினேன்.

சனங்களின் வீடுகளுக்கு வெளிச்சமில்லை. ராணுவ முகாம் மட்டும் நான்கு பக்கத்தாலும் வெளிச்சம் பாய்ச்சி விளையாட்டு மைதானம் போலக்கிடந்தது. சோதனைக் கூண்டிலொருவன் தடுத்தான். துப்பாக்கியை என் நெஞ்சுக்கு நேரே நீட்டிக்கொண்டு எங்கே போகிறாய் என்று கேட்டான். பெரிய ஐயாவைப் பார்க்க வேண்டும் என்றேன். அதெல்லாம் முடியாது. நீ விடிந்ததும் வா என்றான். அவனுக்கென்ன ஒரு பதினெட்டு வயது இருக்குமா.. நான் அவனைக் கையெடுத்துக் கும்பிட்டேன். ஐயா தயவு காட்டுங்கள். தவ்வல் குழந்தை வலிப்பு வந்து வாயால் நுரை கக்குகிறது. ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டும். அனுமதி எடுக்க வந்தேன் என்றேன். அவன் உள்ளே பேசினான். பிறகு உள்ளே போ என்றான். அவனை திரும்பவும் ஒரு தடவை கும்பிட்டுவிட்டு ஓடினேன்.

உள்ளே ஒரு சத்தம் சந்தடி இல்லை. நான் மூச்சுவிடுவது கொடிய மிருகமொன்றின் மூச்சுப்போல எனக்குக் கேட்டது. அந்தப்பெரிய முகாமில் நான் தனியே நின்றிருந்தேன். யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய இறைச்சிக் கடை என்று அந்த முகாமைச் சொல்வார்கள். அந்தனை மோசமான சித்திரவதைகள் அங்கு நடந்திருந்தன.

சற்று நேரத்தில் பெரியவன் வந்தான். மூக்குமுட்டக் குடித்திருந்தான். இரண்டு கண்ணுக்குள்ளும் நெருப்பு எரிவதைப்போல சிவந்து கிடந்தன. நான் அழாத குறையாக ஒப்புவித்தேன். குழந்தைக்கு எத்தனை வயதென்று கேட்டான். ஆறு மாதம் தான் ஐயா என்று கெஞ்சுவதைப்போலச் சொன்னேன். மிகச்சாதாரணமாக, இன்னமும் நான்கு மணிநேரத்தில் விடிந்துவிடும். பிறகு கொண்டு செல்லுங்கள் என்றான். அவனின் காலில் விழுந்து கதறத்தொடங்கினேன். அவன் காலை உதறினான். நான் விடவில்லை. அவன் எழும்பு என்றான். அடையாள அட்டைகள் இரண்டையும் வாங்கி வைத்துக்கொண்டான். பிறகு ஒரு தாளில் சிங்களத்தில் எதையோ எழுதி கையெழுத்திட்டான். அடையாள அட்டைகள் இரண்டும் முகாமில் இருக்குமென்றும் காலையில் வந்து வாங்கும்படியும் சொன்னான். எனக்குத் தயக்கமாக இருந்தது. அடையாள அட்டை இல்லாமல் அத்தனை சோதனைச் சாவடியையும் எப்படித் தாண்டுவது.. பரவாயில்லை, கடிதம் இருக்கிறதுதானே. மெத்தப்பெரிய உபகாரம் ஐயா என்று சொல்லிவிட்டு திரும்பினேன். பெரியவன் என் வலது தோளை அழுத்தி நிறுத்தினான். இப்பொழுது மணி இரண்டே முக்கால், காலை ஆறுமணிக்குள் இந்தப் பகுதிகளில் புலிகள் ஏதாவது குண்டு எறிந்தாலோ, அல்லது சுட்டாலோ, நீயும் உனது குடும்பமும் கூட்டாகத் தற்கொலை செய்து கொள்ளுங்கள். எங்கள் நேரத்தை மிச்சப்படுத்துங்கள் என்று அவன் சொன்னான். என் கால்கள் நடுங்கின.

மணியம் வீட்டுக்கு ஓடினேன். மணியத்தின் காரில் வீட்டிற்குப் போனோம். குழந்தை இப்பொழுதும் மூச்சுவிடச் சிரமப்பட்டது. தாயையும் குழந்தையையும் ஏற்றினோம். முக்கால் மணிநேரத்தில் ஆஸ்பத்திரிக்குப் போய்விடலாம் என்றான் மணியம். பத்தாவது நிமிடத்தில் முதலாவது சோதனைச்சாவடி குறுக்கிட்டது.

வீதிக்குக் குறுக்காக, ரெயில்வே கடவை போல துலாவை இறக்கியிருந்தார்கள். ஒரு சிப்பாய் அதிக தூரத்தில் நின்று டோர்ச் விளக்கைப் பாய்ச்சினான். ஒளியாலேயே இறங்கு என்பதுபோல சைகை காட்டினான். நானும் மணியமும் இறங்கிப்போனோம். ராணுவப்பெரியவன் தந்த அனுமதித் துண்டைக்காட்டினேன். அவன் அடையாள அட்டைகளை எடு என்றான். ஆண்டவரே, என் தொண்டையில் தண்ணீர் வற்றிப்போனது. குரல் வரவில்லை. ஆமிப்பெரியவர் அதை வாங்கி வைத்திருக்கிறார் என்றேன். சற்றும் யோசிக்கவில்லை அவன். அடையாள அட்டைகள் இல்லாமல் போக முடியாது. திரும்பிப் போய்விடுங்கள் என்றான். என் கண்ணில் பொல பொலவென்று கண்ணீர் வழியத்தொடங்கியது. அவனுக்கொரு இருபது வயது இருக்குமா… அவனையும் கையெடுத்துக் கும்பிட்டேன். ஐயா காருக்குள் ஒரு தடவை வந்து பாருங்கள். தவ்வல் குழந்தை மூச்சிழுக்க முடியாமல் கிடக்கிறது. தாய்க்காரி அழுது ஓய்ந்துபோனாள். ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோனால்தான் எதையாவது செய்யலாம் என்று தளுதளுத்தேன்.

அவன் காருக்கு அருகாக வந்து நின்று உள்ளே வெளிச்சம் பாய்ச்சினான். அவள் அவசரத்திற்கு இரவு உடுப்போடு வந்தவள். குறுகிப்போய் இருந்தாள். அவன் கதவைத் திறந்து அவளிடமும் அடையாள அட்டையை வாங்கிப்பார்த்தான். துலாவைத் துாக்கிவிட்டான்.

மூன்றாவது சாவடியையும் தாண்டினோம். தங்கச்சி பின்னாலிருந்து கத்தினாள். குழந்தையில் துடிப்பில்லை. கண்மட்டும் விழித்திருந்தது. கையில் தூக்கி தோளில் சாய்க்க, அது தலையைத் தொங்கப்போட்டது. நான் ஆயிரத்தெட்டுத் தெய்வங்களையும் அழைத்தேன். ஒன்றுக்கும் யோசிக்காதே. அது நித்திரையாகி இருக்கும். இதோ ஆஸ்பத்திரி அருகிற்தான். இன்னொரு பத்து நிமிசம்.. என்றேன்.

மணியம் வாசலில் நிறுத்தினான். தெய்வங்களுக்கு நன்றி சொல்லிவிட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு அவசரபிரிவிற்கு ஓடினேன். டொக்டர் குழந்தையின் நெஞ்சில் கை வைத்துப்பார்த்தார். கை நாடியைப் பிடித்துப்பார்த்தார். என்னிடம் எதுவும் சொல்லாமலேயே குழந்தையின் கண்களை மூடினார். என் தோள்களை ஆறுதலாகப் பற்றிக்கொண்டு பிள்ளை இறந்து நிறைய நேரமாகிவிட்டது என்றார். கண்ணுக்கு முன்னாலே பூமி பிளந்து போலிருந்தது. எத்தனை மணிக்கு வலிப்பு வந்தது என்றார். இரவு ஒரு மணியிருக்கும் என்றேன். நேரத்தைப்பார்த்தார். ஒன்றும் சொல்லவில்லை.

அந்த அதிகாலையில் தாயின் ஓலம் ஆஸ்பத்திரியை உலுக்கியது. இந்தப் பாழாய்ப்போன மண்ணில் நீ ஏன் வந்து பிறந்தாய் என்று அவள் கதறினாள். ஆஸ்பத்திரிக்கு உன்னைக் கொண்டுபோக முடியாத பாவி ஆனேனே. என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா என்று நெஞ்சில் அடித்து அழுதாள். அழத்திராணியற்றவளாக மயங்கிச் சரிந்தாள்.

குழந்தையின் உடலை காரிலேயே கொண்டு வந்தோம். வரும்வழியில் பெரிய முகாமிற்குச் சென்று அடையாள அட்டைகளை வாங்கினேன். ஆமிப்பெரியவன் ஏதோ நினைப்பு வந்தவனாக குழந்தை எப்படியிருக்கிறது என்று கேட்டான். அது செத்துப்போய்விட்டது என்று சொல்லிவிட்டு வந்தேன்.

பச்சை உடம்பு. நீண்ட நேரத்திற்கு வைத்திருக்க முடியாது. அன்றைக்கே செத்தவீட்டைச் செய்து முடித்தோம். ஊரடங்கு தொடங்க முன்னரே கொண்டுசென்று புதைத்தோம். அடுத்தநாள் புதைத்த இடத்தில் பூ வைக்கலாமென்று போனேன்.

அமைதியான நடேசுக் கிழவர் மீதி வார்த்தைகளை வானத்தைப் பார்த்தபடி சொன்னார். “அப்பொழுதுதான் குழியைக் கிளறியிருந்ததைக் கண்டேன். நாயோ நரியோ கிளறியிருக்கும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆறமுடியாத கவலை. ஆனால், நாயும் நரியும் அத்தனை ஆழத்திற்கு குழியைக் கிளறியிருக்குமென்று நான் நினைக்கவில்லை. என்ன நடந்ததென்று ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அவன் ஒருவன்தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான்..”

நடேசுக் கிழவர் முடித்தபோது, அவர் நிறை வெறிக்கு வந்திருந்தார். வார்த்தைகள் ஒன்றோடொன்று பிணைந்து புசத்தின. போத்தலைக் கவிழ்த்து அதன் கடைசித் துளியை நாவில் ஊற்றினார். எனக்கு அந்த முகம்தெரியாத குழந்தையின் நினைப்பாகவே இருந்தது. நான் இதுமாதிரி கதைகளைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். செய்வினை சூனியம் முதலான மந்திர தந்திரங்களைச் செய்பவர்கள் குழந்தைகளின் உடல்களைத் தேடி அலைவார்களாம். அதனால் சிறு குழந்தைகளைப் புதைத்த சுடலைகளில் இரவுகளில் காவலுக்கு நிற்பார்களாம் என்று பாட்டி சொல்லியிருக்கிறாள். ஆனால் அதெல்லாம் 50 வருடங்களுக்கு முன்னர்.. அக்காலங்களில் பேய் சர்வசாதாரணமாக உலவுமென்பாள். அப்படியொரு பேய் தன் கழுத்தை வெட்டியது என்று ஒரு தழும்பைக் காட்டுவாள். தாடையின் கீழாக நீண்ட தழும்பு அது. இப்பொழுதும் உண்டு. ஒருவகையான ஹிஸ்டீரியா நோய் உங்களுக்கு இருந்திருக்கிறது. நீங்களே வெட்டிக்கொண்டிருக்கிறீர்கள் என்று சொன்னால், அவளுக்குப் புரிவதில்லை.

ஒரு பூனை சத்தமிடுவதைப்போல, நடேசுக் கிழவர் விசும்புகிற ஒலி கேட்டது. வெறி முற்றியவர்கள் இப்படி விசும்பி அழுவது வழமைதான். போதையில்தான் எந்தப் பாசாங்கும் புறப்பூச்சுக்களும் இல்லாமல் உணர்வுகள் பீறிடுகின்றன. “ஆண்டவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான்” என்று மீண்டுமொருதடவை நடேசுக் கிழவர் சொன்னார். பிறகு மெதுவாக “அவன் என்னையும் பார்த்துக்கொண்டிருந்தான்” என்றார். ஒரு மின்னல் வெட்டியதைப்போல தலையைத் திருப்பி அவரைக் கூர்ந்து பார்த்தேன். முகத்தைத் தாழ்த்திக்கொண்டார். அவரது கண்களில், அவரிட்ட முடிச்சுக்களில் ஒன்று அவிழ்ந்ததைப் போலிருந்தது. சட்டென்று நடேசுக் கிழவர் என் கைகளை அழுத்திப் பற்றினார். “எனக்கு அறுபது வயதாகிவிட்டது. முன்னரைப் போலில்லை. பொசுக்கென்று போகவும் கூடும். சாகிற நாளில் ஒரு பாரமும் இல்லாமற் போய்ச்சேர வேண்டும். எனக்கொரு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்திருந்தால் அவனுக்கு உன்னுடைய வயதுதான் இருந்திருக்கும். நீயும் மகனைப்போலத்தான். இதைக் கேள். பத்துவருடங்களாக கிளறிய குழியிற்குள் புதைத்த உண்மையைக் கேள்..”

நான் ஓரளவிற்கு ஊகித்துவிட்டேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவரது குரலும் அது வெளிப்பட்ட தொனியும் அவரில் நெருக்கமான இரக்கத்தை ஏற்படுத்தின. அவரின் பிடிலியிருந்து கைகளை விடுவிக்காமல் அமைதியானேன். ஆனால் ஒரு குழந்தையைக் குழியிலிருந்து ஏன் தோண்டியெடுக்க வேண்டும்..

kbavantநடேசுக் கிழவரின் வார்த்தைகள் கோர்வையற்றிருந்தன. “அன்றைக்கு இரவு பதினொரு மணியிரக்கலாம். எல்லோரும் தூங்கிவிட்டார்கள். வெளியே அவ்வளவு வெக்கை இல்லை. ஆனால் எனக்கு வியர்த்துக் கொட்டியது. டோர்ச் லைற்றை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். நிலவு என்னோடேயே கூட வந்தது. சுடலைக்கு நடந்து போவதென்றால் அரைமணி நேரமாகும். குடுகுடு என்று நடக்கத்தொடங்கினேன். நடுச்சாமாத்தில் சுடலைக்குப் போவதைப் பற்றி யோசிக்கவேயில்லை. பேய்களைச் சமாளித்துவிடலாம். ஆமிக்காரர்கள் வந்தாலும் என்றுதான் பதற்றமாயிருந்தது. காற்றில் ஏறிப் பறந்ததைப்போல போய்ச்சேர்ந்தேன். மூச்சு வாங்கியது. களைப்பாறத் தோன்றவில்லை. தடித்த மரக்கட்டை ஒன்றை எடுத்து சற சற என்று குழியைத் தோண்டத்தொடங்கினேன். கூரான கட்டை குழந்தையைக் குத்திவிடுமென்று நினைத்தபோது என் கண்களைக் குத்தியதைப் போலவே வலித்தது. அதனைத் தூர எறிந்தேன். முழந்தாளிட்டு கைகளால் மண்ணை வறுகத்தொடங்கினேன். கடற்கரை மணலைப்போல சொர சொரவென்று கிளறினேன். குழந்தையின் குளிர்ந்த முகத்தில் விரல்கள் வருடின. நெஞ்சுக்குள் என்னவோ செய்தது. கைகளை உதறியெடுத்தேன். டோர்ச் லைற்றை வாயில் வைத்துக் கொண்டேன். வெளிச்சத்தில் முகம் தெரிந்தது. நிறையக் கறுத்திருந்தது. “செத்த பிறகும் நிம்மதியாய்த் தூங்கவிடாத பாவி நான்” என்று நினைத்தபோது கண்ணீர் பொங்கி வழிந்தது. நிறைய நேரம் தாமதிக்க முடியாது. குழந்தையின் கழுத்தில் மண்ணை விலக்கினேன். அது கிடந்தது. என்னுடைய பணப் பேர்ஸ்.
பின்னேரம், குழந்தையை குழியில் கிடத்தி, சொந்தக்காரர்கள் எல்லாரும் மண் தூவினார்கள். நான் நன்றாகக் குடித்துவிட்டுத்தான் சுடலைக்கே போயிருந்தேன். ஆற முடியாத துன்பத்தில் என்னால் குடிக்காமல் இருக்கமுடியாது. சேட்டுப் பொக்கற்றில் பேர்ஸ் இருந்தது. குனிந்து மண்ணைத் தூவியபோது விழுந்திருக்க வேண்டும். கவனிக்கவில்லை. ஆனால் வீட்டுக்கு வந்து தலைமுழுகியபோதுதான் பொறிதட்டியது. யாருக்கும் சொல்லவில்லை. இரவு எல்லோரும் தூங்கியபிறகு புறப்படுவதென்று தீர்மானித்திருந்தேன்.

நடுங்கும் விரல்களால் பேர்ஸை எடுத்தேன். படிந்திருந்த மண்ணை ஊதித் தட்டிவிட்டு பத்திரப்படுத்திக் கொண்டேன். சுடலை வீதியில் ட்ரக் ஒன்றின் வெளிச்சம் தொலைவில் தெரிந்தது. டோர்ச் லைற்றை அணைத்து குழியிற்குள்ளேயே உடலை மறைத்தேன். அப்பொழுது குழந்தை என் நெஞ்சோடு கிடந்தது. இராணுவ ட்ரக் தாண்டிப்போனது. அவரச அவசரமாக எழுந்து கால்களால் மண்ணைத் தள்ளி மூடினேன். வீட்டுக்கு ஓடிவந்துவிட்டேன். குழியைச் சரியாக மூடவில்லை. இரவிரவாக நித்திரையில்லை. நரியோ, மரநாயோ குதறிவிடும் என்று பயமாயிருந்தது. விடிந்ததும் முதல் வேலையாக பூ போடுகிற சாட்டில் ஓடினேன். ஆண்டவரே, அப்படியொன்றும் நடக்கவில்லை. மண்ணை இறுக்கினேன். மண்டியிட்டு குழந்தையிடம் மனசார வேண்டினேன். “ஆச்சி.. என்னைப் பெற்ற ஆச்சி… என்னை மன்னித்துவிடு.. இந்தப் பாவியை மன்னித்துவிடு..”
சட்டென்று கையிலிருந்து வெற்றுப்போத்தலை நடேசுக் கிழவர் கல்லில் குத்தினார். அது சிதறி உடைந்தது. “நான் பாவி நான் பாவி” என்று பலமுறை முணுமுணுத்தார்.

நான் உணர்ச்சிகள் எதனையும் முகத்திற் காட்டாமல் இறுகியிருந்தேன். அவர் மீது படிந்திருந்த இரக்கத்தைத் துடைத்து அழித்தேன். வெறும் பணத்திற்காக இப்படியொரு காரியத்தைச் செய்தார் என்ற போது வெறுப்பாயிருந்தது. “பேர்சுக்குள்ளே எவ்வளவு காசு இருந்தது.. ஒரு ஐநூறு..? அல்லது ஆயிரம்..“ எள்ளலோடு கேட்டேன்.

“ஐந்து சதமும் இருக்கவில்லை மகன். ஆனால் அதற்குள்தான் என்னுடைய இரண்டு அடையாள அட்டைகளும் இருந்தன. ஒன்று அரசாங்கம் தந்தது. மற்றையது ஆமிக்காரர் தந்தது..”
முழுப்போதையில் நடேசுக் கிழவர் வார்த்தைகள் அற்றுப்போகமுன்னர் கடைசியாகச் சொன்னார். “ஏழு கடல் தாண்டி ஒரு குகையில் கிளியின் உடலில் மந்திரவாதியொருவனின் உயிர் இருந்ததுபோல, என்னுடைய உயிர் உடலுக்கு வெளியே அந்த இரண்டு அட்டைகளிலும் இருந்தன.”

-அந்திமழை டிசம்பர் 2013 இதழில் வெளியானது
ஓவியம் மருது

By

Read More

புத்தா.. அல்லது ஆதிரையின் முதலாம் அத்தியாயம்

05 ஜூன் 1991

ரியிருட்டு. தொடையில் ஈரலித்துப் பின்னர் முதுகு நோக்கி ஊர்கின்ற ஈரம் என்னுடைய மூத்திரம் தானென்பதை  வலது கையினால் அளைந்து நான் உறுதி செய்தேன். இடது கையின் மணிக்கட்டுநரம்பை நசித்துக்கொண்டிருந்த விலங்கு, கூண்டின் இரும்புக் கம்பியோடு பிணைக்கப்பட்டிருக்க, முடிந்தவரை ஈரத்திலிருந்து உடலை நகர்த்த முயற்சித்தேன். குண்டும் குழியுமாய் சிதிலமான தரையில் கிளை பிரியும் தாரையென மூத்திரம் மற்றுமொரு பாதையில் என்னைத் தொட்டது. சற்றுமுன்னர் அளைந்த கையை வயிற்றில் தேய்த்துத் துடைத்துக்கொண்டேன். விரல்களில் பிடுங்கிய நகக் காயங்களிலிருந்து நோவு கிளர்ந்தது. நீரில் மெதுவாக முங்குவதைப்போல வியர்வையும் மூத்திரமும் கலந்த நாற்றத்தில் புலன்கள் இயல்படையலாயின. இருளை அளைந்தேன். இடது கண் ஒரு கொப்புளம் போல வீங்கிக்கிடந்தது. விழிமடலைத் திறக்கும்போது  பிளேற்றால் தோலை வெட்டிப்பிளப்பதைப்போன்ற வலி. ஒன்றரைப் பார்வையில்  கம்பிகள் கீலங்கீலமாகப் புலப்பட்டன. புகையைப்போல குளிர் பரவிற்று.

வெளிச்சத்தின் பாதைகள் அடைக்கப்பட்டிருந்தன. தோலுரிந்ததுபோல சுவர் பூச்சுகள் கழன்று தொங்கும் பழங்காலத்துக் கட்டடத்தில் தனியான பதினைந்து இரும்புக்கூடுகளில் ஒன்றிலிருந்தேன். உடனிருந்த இரண்டு தமிழர்களை ‘உண்மையிலேயே’ தெரியவில்லை. அவர்களோடு பேசியதுமில்லை. ஆனால் உபாலி என்னோடு பேசுவான். உயிர் பிய்ந்து தொங்கிக்கொண்டிருந்த வெறும் கூடாக என்னைக் கொண்டுவந்து கொட்டிய அந்த இரவு விடிந்தபோது, பக்கத்துக் கூண்டிலிருந்த உபாலி “மச்சான், நீ புலி தானே, அப்படியானால் உனக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். மறைக்காமல் சொல்லு…. சந்தையில் புதிதாக என்ன ஆயுதம் வந்திருக்கிறது….” என்று சிங்களத்தில் கேட்டான். நான் உடற்பாகங்களை அசைக்கையில் பிரியாதிருந்த வலியைச் சகித்துக்கொண்டு எழுந்து நின்றபோது, “உனக்குத் துப்பாக்கிகளைக் கையாளத் தெரியுமல்லவா…. நீ என்னோடு சேர்ந்து விடு” என்று கட்டளைத் தொனியில் சொன்னான்.

உபாலியின் அதிகாரத்திற்குப் பொலிஸார் பயந்து நடுங்கினார்கள். காலையில் கக்கூசிற்கும், முகம் அலம்பவும் கூண்டுகளைத் திறக்கச் சற்றுத் தாமதமானாலும் உபாலி கெட்ட தூஷண வார்த்தைகளால் அவர்களைத் திட்டுவான். பவ்வியமாகத் திறந்து விட இடுப்பில் வழியும் சாரத்தை, ஆடும் விதைகள் தெரிய உயர்த்தியபடி கக்கூஸிற்குள் நுழைகையிலும்  தூஷணத்தைப் பொழிவான். கூண்டுகளிலிருந்து பார்த்தாலே தெரிகின்ற திறந்த குழிக் கக்கூசிலிருந்து சமயங்களில் சிரிப்பான். அங்கு சிரங்கைப்போலப் பாசி படிந்த சிறிய பிளாஸ்ரிக் வாளி, நீர்க்குழாயின் கீழிருந்தது. ‘க்ளக்…. க்ளக்….’ என்று நீர் சொட்டும் ஓசை இரவில் ஒருவிதப் பேயுலக ஒலியாய்க் கேட்கும்.

மெல்லிய வெளிச்சத்தில் தூசுகள் அலைகின்றன. மூத்திரம் மூன்று கிளைகளாக வழிந்திருந்தது. இரவு தொடையிடுக்கில் சரித்துப் பெய்த வாளியைக் கால்பாதத்தால் தள்ளியிருந்தேன். அது ஒரு கோடாக வெடித்திருந்தது. இல்லை, வெடித்த வாளியைத்தான் பொலீஸ்காரன் தந்திருந்தான். மூத்திர நெடி ஊறிய சாரத்தைக் கால்களில் உரித்துச் சுருட்டி கையெட்டும் தூரத்தில் வழிந்திருந்ததை ஒற்றியெடுத்தேன். கக்கூஸிலிருந்து உபாலி ‘காலை வணக்கம்’ என்பதுபோலக் கையசைத்தான். நேற்றிரவு, சலக்கடுப்புத் தாங்கவியலா வலியில் விலங்கை அசைத்துச் சத்தமிட்டு யாரையாவது அழைக்க முயற்சித்த அந்த அகாலவேளையில் “நான் இங்கே ஒவ்வொரு சிறையாகக் கிடந்தலைகிறேன். அவள் வருடத்திற்கொரு பிள்ளை பெறுகிறாள்” என்று மனைவியைத் தூசித்துக்கொண்டிருந்தவன்  நான் மறுபடியும் மறுபடியும் மணிக்கட்டை அசைத்துச் சப்தமெழுப்பவும், “யாரடா” என்று உறுக்கினான். “எனக்குச் சலம் கடுக்குது. திறந்து விடணும்” என்று மெதுவாகச் சொன்னேன். அவன் மறுபேச்சின்றி “அடே, பத்துப்பேர் சேர்ந்து புணர்ந்து பெற்ற பொலீஸ்காரப் பயல்களே, எங்கேயடா இருக்கிறீர்கள்” என்று குரலுயர்த்தினான். சட்டென்று டோர்ச் விளக்கு ஒளிர்ந்து சூரியன் நகர்வதுபோல அருகாக வந்தது. உபாலியிருந்த திசையை நான் வாஞ்சையுடன் பார்த்தேன். அவன் “நீ படுத்தெழும்புகிற அத்தனை பேரையும் என்னால் சொல்லமுடியுமடி” என்று விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான்.

முகத்தில் வெள்ளை ஒளியைப் பாய்ச்சியவன், “மூத்திரமா” என்று கேட்டான். தலையைக் குனிந்து ஆமோதித்துவிட்டு தொடையிரண்டையும் நெருடியபடி “திறந்துவிடுங்கள்” என்றேன்.

“நீ புலி என்பதில் எனக்கு இப்பொழுது உண்மையாகவே சந்தேகமாயிருக்கிறது” என்றவன் நீர்ப்பற்று அற்ற உலர்ந்த வாளியொன்றை உள்ளே தள்ளினான். “இதிலே பெய்து தொலை” என்றான்.

முன்னரென்றால் அழைத்துச்சென்று கக்கூசில் ஏற்றிவிட்டு நான் குந்தவும், விலங்கை இழுத்தபடி அருகிலேயே நிற்பவன், அந்தப் பழக்கத்தை இன்றைக்கு விட்டொழித்தான். ஒருவேளை குழியில் பட்டுச் சிதறும் துளிகள் அவன் கால்களில் தெறிப்பதை அவன் விரும்பாதிருக்கலாம். வெளிச்சத்தை அணைத்துவிட்டு விலகியபோது “மாத்தையா, வெளிச்சம்….” என்று இழுத்தேன்.

“நீ புணரும் போதும் நான்தான் வெளிச்சம் பாய்ச்ச வேண்டுமா….” என்ற குரல் மட்டும் வந்தது. நான் கால்களை விரித்து இடது கையினால் தொடைகளின் இடையில் வாளியை நகர்த்தினேன். விடுதலை என்ற சொல்லின் பரிபூரண அர்த்தமது. வாளியை நிமிர்த்தி, இரண்டு காற்பாதங்களிலும் கவ்வி ஒரு வேவுப்புலியின் அவதானத்தோடு சுவரோரமாகத் தள்ளிவைத்தேன்.

சற்று முன்னர் வாளியைத் தந்த போலீஸ்காரன் “வெறும் மூத்திரத்தை அடக்கத் தெரியாதவர்களா புலிகளில் இருந்தார்கள்….” என்று முணுமுணுப்பது கேட்டது.

சிங்கமலை லெட்சுமணன் என்கிற நான் மலையகத்தில் தெனியாய என்ற தோட்டத்தில் பிறந்தவன் என்பதையும் எழுபத்தியேழு கலவரத்தில் தந்தை என்னைத் தோளிலேயே காவிச்சென்று முல்லைத்தீவின் காட்டுக் கிராமமொன்றில் தஞ்சம் புகுந்தார் என்பதையும் ஏழு வயதில் மனதில் பதிந்த சிங்கள மொழியை என்னால் இன்னமும் சரளமாகப் பேசமுடியும் என்பதையெல்லாம் கண்டுபிடிக்க முடிந்த நிலாம்தீனுக்கு, நான் சிறுவயதில் நித்திரைப்பாயிலேயே மூத்திரப்பழக்கத்தைக் கொண்டிருந்தேன் என்பதையும், வளர்பருவத்தின் விழிப்புணர்ச்சி, அதைத் தடுக்க அது அடிவயிற்றில் தேங்கிக் கடுக்கச் செய்யும் வலியை ஏற்படுத்திற்று என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. என்னை ‘அமத்திய’ மூன்றாவது நாள் அவன் துப்பாக்கி சுடும் பொஷிசனில் எனக்கு முன்னால் வந்தமர்ந்தான். நெடிதுயர்ந்த உருவத்தின் ஊடுருவுகின்ற கண்களை ஒருகட்டத்திற்கு மேல் எதிர்கொள்ள முடியவில்லை.  “பெயர் என்ன என்று சொன்னாய்?”

“சோமையா ராசேந்திரன். சொந்த ஊர் ஹட்டன். பிழைக்க வந்த இடத்தில் எப்படியோ இந்தத் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. பணம் தருகிறோமென்றார்கள். ஆனால் இன்னமும் தரவில்லை.”

நிலாம்தீன் சட்டென்று என்னுடைய தாடையைப் பற்றிக்கொண்டு கேலியாகச் சிரித்தான். “நடிகனடா நீ” என்றான். பின்னரெழுந்து கதிரையில் கிடந்த கோப்பினைப் புரட்டியவன் “முழுப்பெயர் சிங்கமலை லெட்சுமணன்” என்றபோது நான் எனது கடைசி நம்பிக்கையையும் வழிந்தோட விட்டேன். இரண்டு முழங்காலையும் கையால் இறுக்கிக் குந்தியிருந்தேன். என் உயரத்திற்குக் குனிந்தான். “எங்க சனங்களின் கண்ணீர் உங்களைச் சும்மா விடாது அப்பனே” என்று தூய தமிழில் சொல்லி முடித்தான். இரண்டு நாட்களுக்கு முன்னர் அவனைப் போலவே தமிழில் பேசிய மற்றுமொருவன் “தோட்டக்காட்டு நாய்க்கு முல்லைத்தீவுக் காட்டுக்குள்ளை என்ன வேலை” என்றவாறே மூஞ்சையில் குத்தினான்.

நான் முல்லைத்தீவிலிருந்து கொழும்பிற்கு வந்து மூன்று மாதங்கள்தான் முடிந்திருந்தது. வந்ததிலிருந்தே மட்டக்களப்பிற்கும் அம்பாறைக்கும் பதுளைக்குமாக அலைந்து திரிந்தேன். தொடக்கத்திலிருந்த லேசான பதற்றம் மெல்ல மெல்லப் பின்னர் தணியத் தொடங்கியிருந்தது. கண்களில் ஒருவிதத் தெளிவு. ஆனால் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை போலும்.

ஒருமுறை சித்திரவதையின் போது விஜேயரத்ன கொக்கரித்த குரலில் கேட்டான் “திருப்பியெல்லாம் அடிக்க மாட்டாயா புலியே…. ஏன் பயந்துபோய் இருக்கிறாய்?” விஜேயரத்ன அவ்வளவாகப் பேசுவதில்லை. பின்னொரு நாளில் அவனுக்கு பேத்தையன் என்றும் ஒரு பெயர் உண்டென்பதை அறிவேன். அவனுடைய சித்ரவதைகள் நேர்த்தியும் நுணுக்கமும் மிக்கவை. வலி எதிராளியின் முகத்தில்  வழியும்போது அவனுடைய முகத்தில் பரவும் குரூரமான பரவசத்தை நான்  முதல் நாளிலேயே கண்டுகொண்டேன். காமத்தில் உச்சத்தைத் தொட்டதைப்போல அவனுடைய முகம் கோணி நிற்கும்போது வதை சாவைத் தட்டித் தட்டித்திறக்க முயற்சிக்கும். அந்த உச்சத் தருணத்தின் பிறகு அவன் ஓயத்தொடங்குவான். நான் சித்திரவதைகளின் ஆரம்பத்திலேயே வாதையைக் கண்களால் கொட்டுவேன். ஓர் அப்பாவியைப்போல அவனைப் பார்ப்பேன். ஒருநாள் கையை ஓங்கியவன் சுளீரென்று வலிப்பு வந்தவன் போலக் கையை இறக்கினான். “வேசை மகனே, அடிக்கும்போது அப்படிப் பார்க்காதே, அந்தப் பார்வையை என்னால் தாங்க முடியவில்லை” என்றான். விஜேயரத்ன என்னுடைய முதலாவது விசாரணையாளன்.  அன்றைக்கு ஒடுங்கிய பாதையால் அவன் என்னை இருளான விசாரணை அறைக்கு அழைத்துச் சென்றபோது குறடு, ஆணி, முள்ளுக்கம்பி, சோடாப்போத்தல், கொட்டான்தடி…. ஒவ்வொன்றாக நினைத்துக்கொண்டேயிருந்தேன். இருள்தான் விசாரணையாளர்களின் துணையாயிருக்கிறது. இருட்டு நம்பிக்கைகளைச் சிதைத்துவிடுகிறது. ஒளியின் கீற்றைக்கூடப் பார்க்கமுடியாத இருட்டில் தற்கொலை எண்ணங்கள் துளிர் விடுமாம் என்று படித்த நினைவிருக்கிறது. இவர்கள் என்னைத் தற்கொலை செய்ய அனுமதிக்கவில்லை. சாவுக்கு அருகாகக் கூட்டிச் செல்வதும் மறுபடியும் திருப்பி அழைத்து வருவதுமாயிருந்தார்கள்.

10689524_10153346791279951_8737033188617690887_n
உருண்டைத் தலையில் நறுக்கிய மயிரும் உட்புதைந்த தூக்கமில்லாத கண்களும் கொண்ட விஜேயரத்ன தடித்த ஒரு புத்தகத்தைக் கையில் சுழற்றியபடி வந்தான். கதிரையை இழுத்துப்போட்டு உட்கார்ந்தவன் கதிரைக் கால் அருகாக புத்தகத்தை பொத்தென்று வைத்தான். அதுவொரு காவி நிற அட்டைப் புத்தகம். புத்தகங்களைக் கண்டாலே சந்திராம்மாவின் நினைவு பெருகுகிறது…. அந்த ஓவியத்திலிருந்தவர் புத்தரா?… தெரியவில்லை. சற்றே தலையைச் சரித்த அந்த முகத்தில் சோகம் அப்பிக்கிடந்தது. கருணை சொரியும் வல்லபக் கண்கள்.

விஜேயரத்ன நிதானமாக எழுந்து என்னைச் சுற்றினான். மூன்றாவது தடவை கையிரண்டையும் முறுக்கிப் பின்னிழுத்து மின்சாரக் கம்பியினால் இறுக்கி முடிச்சிட்டான். பின்னால் சென்று சாரத்தை அவிழ்த்து விழுத்தினான். உள்ளாடையை உருவி இறக்கினான். அது உரித்த கோழியைப் போல காற்பாதத்தில் சுருண்டு கிடந்தது.

என்னுடைய குதிகால்கள் மெதுவாக உந்த முயற்சித்தன. கால்களை மடித்துக் குந்தியிருக்கச்சொல்லி மனது உறுத்தியது. ஆடைகளைக் களையும் விசாரணையாளன் அப்பொழுது அதிகாரத்தைத் தனக்குள் ஏற்றிக்கொள்கிறான். ஆடையிழந்தவன் அடிமையைப் போலத் தன்னைக் குறுக்குகிறான். இனிவரும் நாட்களில் ஆடையிழந்த பல தமிழர்கள் ஓடிப்போய்ச் சுவரோடு ஒட்டிநிற்பதையும் அவர்களுடைய தோளினைத் தொட்டுத் திருப்பும் விசாரணையாளர்கள் ‘தமிழனின் சாமான்’ என்று வெடித்துச் சிரிப்பதையும் நான் காணுவேன்.

விஜேயரத்ன கொடுப்புச் சிரிப்புடன் என்னை முழுதாக அளந்தான். நான் கண்களைத் தாழ்த்திக் கூச்சமடையப் பழகிக்கொண்டேன். தொடைகளை ஒன்றோடொன்று உரசி இடுப்பை முன்வளைத்து நெளிந்தேன். அவன் சீழ்க்கையொலியோடு கதிரையை மேலும் முன்னால் நகர்த்தி உட்கார்ந்தான். அப்பொழுது புத்தருடைய முகத்தைக் கதிரையின் கால் நெரித்தது.

“சோமையா ராசேந்திரன்…. உனக்குத் தெரிந்த வேறு யாரெல்லாம் புலிகளிடம் சூப்பிக்கொண்டு இப்படியான ஊத்தை வேலை செய்கிறீர்கள்….” உண்மையை முதலில் தானே கண்டுபிடிக்கவேண்டுமென்ற முனைப்போடு கேட்டான்.

“எனக்குத் தெரியாது.”

அவனுடைய வலது கால் உயர்ந்த வேகத்தில் என் தாடையில் இடித்து முகத்தைப் பின்னாற் தள்ளியது. மல்லாந்து விழுந்தேன். பின்மண்டையில் கிடுங் என்றது.  காதுக்குள் ஏதேதோ கூச்சல்கள். வாய்க்குள் ரத்தத்தின் செப்புச்சுவை ஊறியது. மூக்கிலிருந்து திரவம் ஒழுகுகிற உணர்வு. மேலே கூரையில் அலை அலையாக வட்டங்கள் விரிந்தன. விஜேயரத்னவின் முகம் மங்கலாகத் தெரிந்தது. அவன் குனிந்தபோது தலை மட்டும் இறங்கிவருவதைப் போலிருந்தது. தலைமயிரைக் கொத்தாகப் பிடித்துத் தூக்கினான். “இனி உனக்குச் சொல்ல முடியும். உண்மையச் சொல்லு.”

“நம்புங்கள்…. நான் அவர்களில் ஒருவரைக்கூட நேரே சந்தித்ததில்லை. கடிதங்களும் முகவரிகளோடு வருவதில்லை. உண்மையில் நான் என்ன செய்யவேண்டுமென்பதை அவர்கள் இன்னமும் எனக்குச் சொல்லவில்லை.”

“இந்திய நாய்…. ” என்றான் விஜேயரத்ன. முகத்தில் கணச் சலிப்பு. நான்  புழுதி கிளறும் காலக் குதிரையொன்றில் காற்று நெஞ்சிலறைய என் மூதாதையரின் தலைமுறைகளைக் கடந்து பயணித்து மீண்டேன்.

“மன்னித்துக்கொள்ளுங்கள் மாத்தையா….”

அவன் உந்தி எழுந்த வேகத்தில் கதிரை ஓரடி பின்நகர்ந்தது. புத்தகத்தைக் கையிலெடுத்தவன் அதனை வகிடு பிரித்து என் தலையில் கவிழ்த்தான். கூரையைப்போல அது பொருந்தி நின்றபோது தரையிற் கிடந்த இரும்புக் குழாயைத் தூக்கினான். சற்றுமுன் வரையிலான மெதுவான வேகத்திற்குத் துளியும் பொருந்தாமல் கையை ஓங்கியபோது காற்று விசுக் என்றது. ஷக் என்ற சத்தம் அட்டையிலிருந்த  புத்தரைக் கடந்து, தாள்களைக் கடந்து நடுமண்டையில் ஊடுருவியபோது கண்கள் செருகிக்கொள்ள ஒளிரும் வண்ண அரிசித் துணிக்கைகள் விசிறின.

புத்தர் அநாதரவாகக் கிடந்தார். ‘புத்தா’ என்று வாஞ்சையோடொலிக்கும் குரல் கிணற்றுக்குள் ஒலிப்பதுபோலக் கேட்டது.

0 0 0 0 0 0 0 0

புத்தா…. இங்கே வந்து பாரேன்….” என்று கியோமாக் கிழவி பதற்றத்தோடு அழைக்க அறையிலிருந்து ஓடிச்சென்றேன். சந்திரசேகரனைக் கைது செய்துள்ளதாக ரூபவாஹினி சொல்லிக்கொண்டிருந்ததை கியோமா வைத்த கண் வாங்காது பார்த்தபடியிருந்தாள். “என்ன புத்தா…. இப்படியுமா உங்களுடைய தலைவர்கள் செய்வார்கள்….” நான் கிழவியின் கண்களை நேராகப் பார்த்தேன். என் உள்ளிருந்தொரு மிருகம் அவளுடைய சொற்களைக் கணக்கிட்டுக்கொண்டிருந்தது. முன்பொருதடவை “புத்தா…. ரஞ்சன் விஜேயரத்னாவைக் கொன்றுவிட்டார்கள் பாவிகள்” என்று அலறியடித்துச் சொன்னபோதும், பிறிதொருநாள் “ஐயோ புத்தா, தொலைக்காட்சித் திரை முழுவதும் ரத்தமும் மனிதத் துண்டங்களும்…. ராஜீவைக் கொன்றுவிட்டார்கள்” என்று கத்தியபோதும் அவளுடைய கண்களில் இப்போதிருந்ததைப்போன்ற அச்சமிருந்தது. அன்றைக்குத் தொலைக்காட்சித் திரையில் ரோஸ் நிறக் காலொன்றைக் கண்டேன்.

கொழும்பின் புறநகர்ப்பகுதியில் வாடகைக்கு விடப்பட்டிருந்த அந்த வீட்டைப் பற்றிய தகவல் கிடைத்த மாலையிலேயே நான் கியோமாக் கிழவியைச் சந்தித்தேன். நகரத்தின் பரபரப்பிலிருந்து விலகிய தெருவின் முடிவில் சிங்களப் பாரம்பரியமான கட்டடக்கலையில் மிளிர்ந்த வீடு அது. கொடித்தாவரமொன்று முற்றத்தின் மேலே பரவிநின்றது. கியோமாவிற்கு அறுபது வயதிருக்கலாம். தென்பகுதியின் ஏழைக்கிராமம் ஒன்றிலிருந்து நாற்பது வருடங்களுக்கு முன்னர் கணவரும் கியோமாவும் இந்நகரத்திற்கு வந்தார்களாம். ஓரளவு நல்லநிலையில் இருந்தபோது இந்நிலத்தைச் சொந்தமாக வாங்கி வீடு கட்டிக்கொண்டார்கள். கணவர் இறந்துவிட, இரண்டு மகன்களும் திருமணத்தின் பிறகு நகரத்தின் அடுக்கு மாடிகளுக்குப் போய்விட, வீட்டின் விறாந்தையோடியிருந்த ஓர் அறையை யாரேனும் படிக்கின்ற மாணவர்களுக்கு வாடகைக்கு விட கியோமா தீர்மானித்தாள்.

“படிக்கின்ற பிள்ளைக்கு வசதியாயிருக்கும் புத்தா…. உங்களுக்கு அல்ல, குறை நினைக்க வேண்டாம்” என்று அவள் எனக்குச் சொன்னாள்.

“நானும் படிக்கவே ஆசைப்பட்டேன் அம்மா. ஆனால் வசதியிருக்கவில்லை. இப்பொழுது வெளிநாடுகளிலிருந்து பொதிகளை இறக்கும் ஒரு கார்கோ கொம்பனியில் வேலை கிடைத்திருக்கிறது. இதில் காலூன்றி விட்டால் ஹட்டனிலிருக்கிற என் தம்பியைப் படிக்க வைத்துவிடுவேன். வேறிடங்களில் அதிக வாடகை கொடுக்க  வசதியில்லை. மனது வையுங்கள்.” சரளமாகக் கோர்த்த என்னுடைய சிங்களச் சொற்களுக்கு கியோமா பணிந்தாள். அடுத்த நாள் காலை அவள் என்னைப் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று பொலிஸ் பதிவுத்துண்டில் சோமையா ராசேந்திரன் என்ற பெயரைச் சேர்த்தாள். அதிலொரு பிரதியெடுத்து நான் வைத்துக் கொண்டேன்.

சாப்பாட்டை நான் வெளியில் பார்த்துக்கொண்டேன் என்றாலும், காலையில் சுடுநீர்ப் போத்தலில் தேநீர் எடுத்துவந்து “புத்தா எழுந்துகொள்” என்று சொல்வதற்குக் கியோமா தவறியதில்லை. சட்டென்று சந்திரம்மாவின் மலர்ந்த முகம் ஞாபகத்தில் வரும். அவளும் விடிகாலையிலேயே தேநீரைக் கொண்டுவந்து நீட்டுவாள். சாப்பிடும்போது தனக்காக எதையும் எடுத்து வைக்காமல் கறியையும் காய்களையும் என் தட்டிலேயே குவித்துவைப்பாள். “வளர்ற பெடியனல்லோ…”

வெளியில் செல்லாது வீட்டிலிருக்கின்ற நேரங்களில் கியோமாவும் வற்புறுத்திச் சாப்பிட அழைப்பாள். ஈரப்பலாக்காயின் கறிச்சுவை என்னில் குற்ற உணர்ச்சிகளைக் கிளறப்பார்த்தது. அப்படியொருநாள் “உன் வேலைகள் எப்படிப்போகிறது புத்தா…. தம்பி எப்படியிருக்கிறான்….” என்று அவள் எதேச்சையாகக் கேட்டபோது கையிலேந்திய சோற்றுக் குழையல் உதறித் தட்டில் விழுந்தது. அவளை வெறிக்கும் கண்களால் பார்த்தேன்.

ஹவ்லொக் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த குண்டு நிரப்பிய கார், தீயின் நாவுகளால் சூழப்பட்டுப் பேரோசையோடு எழுந்து விழுந்ததும், வீதிச் சுவர்களெல்லாம் கொத்திக்கிளறப்பட்டதும், கண்ணாடி முகப்புகள் நொறுங்கித் தெறித்ததுமான அன்றைய இரவு கியோமா மேலே எனக்கு முதற்தடவையாகக் கோபம் வந்தது. அவள் தொலைக்காட்சியைக் காட்டி “பார் புத்தா…. இந்த அழிவுகளை. மனச்சாட்சியில்லாதவர்களால் இந்த அழகிய நாடு அழியப்போகிறது” என்றாள். அப்பொழுது அவளுடைய கண்கள் கோபத்தையும் வெறுப்பையும் உமிழ்ந்தன.

என் கண்கள் குரூரமாக ஒளிர்ந்தன. “ஆம், மனச்சாட்சி இல்லாதவர்களால் இந்த நாடு அழியப்போகிறது என்பது உண்மைதான்” என்று தீர்க்கமாகச் சொன்னேன்.

“ஏன் புத்தா, இப்படியான அநியாயங்களைச் செய்ய வேண்டாமென்று தமிழர்கள் புலிகளிடம் சொல்ல மாட்டார்களா….”

நான் சோற்றுத் தட்டை நகர்த்தி விட்டு எழுந்துகொண்டேன். வெளிப்படுத்த முடியாத கோபம் பதற்றமாக உருமாறியிருந்தது. “பசிக்கவில்லையா புத்தா….”

“இல்லை” என்றுவிட்டு அறைக்கு வந்தேன். அவள் “எனக்கும்தான்” என்றாள்.

அடுத்த இரண்டு நாட்களாகத் தொடர்ச்சியற்ற கெட்ட கனவுகள் வந்தன. கைகளைப் பிணைத்துத் தெருவில் யாரோ என்னை இழுத்துச் செல்கிறார்கள். திரண்ட மனிதர்கள் வெறிகொண்ட கண்களோடு என் மீது கற்களை எறிகிறார்கள். அவர்களிடையில் அவளை நான் பார்த்ததும் தன்னை மறைத்துக்கொள்ளும் விருப்பில் கிழவி கியோமா நழுவிச்செல்கிறாள். நான் “மெத்த நன்றி கிழவி” என்று உரத்துக் கத்துகிறேன். எனக்குப் பழக்கமற்ற காட்டுப் பகுதியொன்றில் என்னைக் கட்டிப்போட்டிருக்கிறார்கள். நான் மூத்திரம் நனைந்த ஆடைகளோடு “எனக்குப் பசிக்கிறது” என்கிறேன். அப்பொழுது கியோமா தட்டைப் பொத்தென்று முன்னால் வைத்து வெறும் ஈரப்பலாக்காய்க் கறியை ஊற்றுகிறாள். “சாப்பிடு புத்தா….” என்று சொல்கிறாள்.

கதவினைப் பலமாகத் தட்டுகிறார்கள். பிறகு இடிக்கிறார்கள். நான் சரேலென்று விழித்தேன். கியோமா இப்படித் தட்டுவதில்லை. மூளைக்குள் சுளீரென்றது. ‘கிழவி வேலையைக் காட்டிவிட்டாள்….’ அரைஞாண் கொடியிலிருந்த குப்பியில் கை வைத்து இழுத்தேன். அப்பொழுது கதவு ஓவென்று திறந்தது. அணை உடைந்ததும் பாய்கிற நீர் போல ஆமிக்காரர்கள் பாய்ந்தார்கள். என்னை விழுத்தி மேலே நொடியில் ஏறிக்கொண்டார்கள். தலைமயிரில் கைகளைச் செருகிக் கோதினார்கள். அரைஞாண் கொடியை பிளேடால் கீறி வெட்டியெடுத்தான் ஒருவன். பிளேற் பட்ட இடத்தில் ரத்தம் கசிந்தது. காதுமடல், காதுக்குழி, அக்குள், வாய், குதமென்று விடாமல் தேடினார்கள்.

முகத்தைத் தரையோடு அழுத்திப்பிடித்திருந்தவனின் விரல்கள் சிங்கத்தின் காலைப்போல கன்னத்தில் முழுவதுமாகப் பரவியிருந்தன. அறையைச் சல்லடையிட்டபிறகு அகப்பட்ட சோமையா ராசேந்திரன் பெயரிட்ட அடையாள அட்டையோடு வெளியே தள்ளி வந்தார்கள். நான் கியோமாவைத் தேடிக்கொண்டிருந்தேன். கிழவி காட்டிக் கொடுத்துவிட்டு எங்கேயோ ஓடிவிட்டாள். இரண்டு பக்கங்களிலும் பொலிஸார் என்னை இழுத்தபடி வாசலைக் கடந்து தெருவில் நடத்தியபோது முகப்பில் நான் கியோமாக் கிழவியைக் கண்டேன்.

கியோமாவிற்குப் பக்கத்தில் இரண்டு படைச் சிப்பாய்கள் நின்றார்கள். அவர்களுக்கு நடுவில் அவள் முழந்தாளில் இருந்தாள். முதுமையில் தளர்ந்த அவளுடைய கைகளிரண்டும் முதுகின் கீழ் மடிக்கப்பட்டு நைலோன் கயிற்றினால் இறுக்கப்பட்டிருந்தன. சுருக்கங்கள் விழுந்த முகத்தின் உட்புதைந்த அவளுடைய கண்கள் இரக்கமும் பரிதாபமுமாயிருந்தன. அவள் என்னைப் பார்த்தாள். நான் சரேலென்று தலையைத் தாழ்த்தினேன். கால்கள் தொய்ய, அவளை நெருங்கினேன். கியோமா கிழவி, தன்னருகில் நின்ற சிங்களப் படைவீரனை நிமிர்ந்து பார்த்தாள் “புத்தா, இவன் நீங்கள் நினைப்பவன் மாதிரியானவன் இல்லை. அவனை வீணாகக் கொடுமைப்படுத்தாதீர்கள்….” என்று இறைஞ்சினாள். அப்பொழுது கியோமாவின் நீண்ட நரைத் தலைமயிரைப் பற்றியிழுத்து கீழே விழுத்திய படைவீரன் அவளுடைய மார்புக்கு நேரே வலது காலை ஓங்கி அந்தரத்தில் நிறுத்தினான். “ஒரு வார்த்தை பேசினாயென்றால் கிழட்டுப் பன்றியே…. மிதித்தே கொன்றுவிடுவேன்” என்றவன் “எதிரிகளை மன்னித்துவிடலாம். துரோகிகளை மன்னிக்கவே முடியாது” என்று பற்களை நறுமியபடி சிங்களத்தில் சொல்வதை முதற் தடவையாகக் கேட்டபடி அவளைக் கடந்து இழுத்துச் செல்லப்பட்டேன்.
0

(ஓவியம் கார்த்திக் மேகா)

By

Read More

ஈழத்துஇலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு கரிசனை உள்ளதா? – நேர்காணல்

19FEB, 26FEB 2017 திகதிகளில் இலங்கை தினக்குரல் பத்திரிகையில் வெளியானது.
நேர்காணல் : கருணாகரன்


1. கூடிய கவனிப்பைப் பெற்ற உங்களுடைய “ஆறாவடு”, “ஆதிரை” க்குப் பிறகு, யுத்தமில்லாத புதிய நாவலைத் தரவுள்ளதாகச் சொன்னீங்கள். அடுத்த நாவல் என்ன? அது எப்ப வருது?

அந்த நாவலுக்கு இப்போதைக்குக் கலையாடி என்று பெயர். எழுதிக்கொண்டிருந்த காலம் முழுவதும் பெரிய மன அழுத்தத்தைத் தந்த நாவல் ஆதிரை. அந்த நாவல் ஒரு கட்டத்திற்குப் பிறகு தன்னைத்தானே கொண்டிழுத்துக்கொண்டுபோனபோது ஒரு கையாலாகாதவனாக நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்., மனம் சலிச்சு, இதிலிருந்து வெளியேறி விடவேண்டுமென்று நொந்துகொண்டிருந்தேன். அதுவொரு அலைக்கழிப்பான காலம். அதை எழுதிமுடித்து அது வெளியாகிவிட்ட பிறகும் கூட, துயரப்படும் ஒரு மாந்தர் கூட்டத்தைக் கைவிட்டுவந்த ஓர் உணர்வுதான் இருக்கிறது. இதை மறுபடியும் எழுதித்தான் கடக்கவேண்டும்போலிருக்கிறது. உண்மையைச் சொன்னால் மனது ஒரு கொண்டாட்டத்தை விரும்புகிறது.
ஆறாவடு எள்ளலும் துள்ளலுமாக எழுதப்பட்ட ஒரு நாவல். இப்பொழுது யோசித்தால் ஒரு துயரக்கதையை பகிடியும் பம்பலுமாக எப்பிடிச் சொல்லியிருக்க முடியும் என்று தோன்றுகிறது. அதனால் அந்த மொழியை மட்டும் எடுத்துக்கொண்டு அவுஸ்ரேலியாவின் மெல்பேண் நகரிலிருந்த ஒரு பல்கலைக்கழகம், ஒரு பெற்றோல் ஸ்ரேஷன், ஒரு மக்டோனால்ட்ஸ் உணவகம், ஒரு மாணவர் விடுதி இவற்றைச் சுற்றுகின்ற ஒரு குறுநாவலாக அது உருவாகியிருக்கிறது. கலையாடியை ஆண் மனமும், பெண் உடலும் என்றவாறாகக் குறுக்கிச் சொல்லலாம்.

img_3867

2. இப்படி வெவ்வேறு தளங்களில் புதிய வாழ்க்கையை எழுதுவது அவசியமே. ஆனால், புதிய நாவலில் “ஆண்மனமும் பெண் உடலும் பேசப்படுகின்றன” என்று சொல்கிறீங்கள். இதில் நீங்கள் குறிப்பிடும் பெண் உடல் என்பது தமிழ்ப் பெண்ணை மையப்படுத்துகிறதா? தவிர, பெண்ணுடலை எந்த வகையில் வைத்து நோக்குகிறீங்கள்?

கலையாடியில் ஓர் ஆண்மனம், பெண்ணைப் புரிந்துகொண்டிருக்கிற அரசியல்தான் பேசப்பட்டிருக்கிறது, பெண்ணை வெறும் உடலாக நோக்குவதும், அதனை ஒரு சொத்து என்று கருதி அதில் தனது உரிமையை நிறுவும் அதிகாரமும், பெண்ணின் ஆன்மாவை எதிர்கொள்ளும் துணிச்சலற்று, தோல்வியை மறைக்க அவளின் உடலில் கட்டவிழ்க்கும் வன்முறையும்தான் ஓர் இழை என்றால் அதற்குச் சமாந்தரமாக மறு இழையில் இவற்றையெல்லாம் கேலியாக்கி எள்ளி நகையாடும் பெண் உணர்வும், சமயங்களில் சிலிர்த்துத் திருப்பியடிக்கும் கோபமுமாகப் பிரதி நிறைந்திருக்கிறது. மிகுதியைப் பிறகொருநாளில் பேசுவோம்.

3. “ஆதிரை” பற்றிய உங்களுடைய இன்றைய மனநிலை அல்லது அனுபவம் எப்பிடியிருக்கு?

அதனுடைய அரசியலிலும், இலக்கியத்திலும் சரியையும் நிறைவையும் உணர்கிறேன். என்றாவது ஒருநாள், அதன் இலக்கியத் தரத்தின் பற்றாக்குறையை உணரும் விதத்தில் என்னுடைய சிந்தனைகள் மாறுபடலாம். ஆனால் ஈழப்போர் தொடர்பான அதன் அரசியல் செய்தியில் நான் என்றைக்கும் மாறுபட்டு நிற்கப்போவதில்லை.

4. அதை எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? எதுவும் மாறுதலுக்குள்ளாகும். மாற்றம் என்பதே அடிப்படையானது என்பதால், ஈழப்போர் மற்றும் ஈழப்போராட்டம் தொடர்பான கருத்தியலும் நோக்கும் மாறுபடுவதற்கான, மீள் பார்வைக்குட்படுவதற்கான சூழல் உருவாகும்போது உங்களுடைய நிலைப்பாடும் அனுபவமும் மாறுதலடையுமல்லவா?

நாவலில் ஒரு சாமானிய மக்களின் பார்வைதான் முதன்மை பெறுகின்றது. வாசகர் அதன் அரசியலை மொழிபெயர்க்கிறார். ஒரு சாமானியனின் வாழ்வும், துயரமும், மகிழ்ச்சியும் அவனுடைய வாழ்வின் அடிப்படையாயிருந்தவை. காலம் மாறுகிறபோது ஆய்வாளர்கள் வேறுவேறு விதமாக மொழிபெயர்க்கலாம். ஆனால் அடிப்படையாயிருந்தவை மாறிவிடப்போவதில்லை. அதனால்த்தான் இலக்கியப் பிரதிகளை காலத்தால் அழியாதவை என்கின்றோம். சரி ஒரு பேச்சுக்கு என்னுடைய நிலைப்பாடும் அனுபவமும் மாறிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள், நாவலில் நான் உருவாக்கிய ஏதோ ஒரு பாத்திரத்தின் அரசியல் மாறிவிடுமா என்ன..? அது நாவலில் செலுத்திய செல்வாக்கு மாறிவிடுமா..?

5. அது (ஆதிரை) வாசக, விமர்சன, இலக்கியப் பரப்பில் உண்டாக்கியிருக்கும் அடையாளம் குறித்த உங்களுடைய புரிதல் அல்லது மதிப்பீடு?

யாரால் எழுதப்பட்டது என்ற ஒரு செய்தியை வைத்தே அது பெருமளவிற்குப் பார்க்கப்பட்டது. அதன்படியே.. புலி ஆதரவு, புலி எதிர்ப்பு.. அல்லது எழுதியவரைப்போலவே குழப்பமானது என்றவாறாக அடையாளப்படுத்தியிருந்தார்கள். ஒரு இலக்கியப் படைப்பை அது வெளியாகிய நாளிலேயே இது புலி ஆதரவு நாவல், எதிர்ப்பு நாவல் என்று வரையறுக்கிற திறனாளர்கள் நம்மிடையில்தான் அதிகமிருக்கிறார்கள் என்பதை பெருமையோடு கூறிக்கொள்கிறேன்.

6. ஆனால், புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்பதெல்லாம் அர்த்தமுடையதா? அத்தகைய சொல்லாடல்களும் அடையாளப்படுத்தல்களும் அவசியம்தானா? இத்தகைய அணுகுமுறை எரிச்சடைய வைக்கும் ஒன்றாகவே பலராலும் உணரப்படுகிறது. தவிர, இந்த இரண்டு தரப்பினரும் அடிப்படையில் ஒரு புள்ளியில்தான் நிற்கிறார்களல்லவா?


முதலில் அடிப்படைப் பிரச்சினைகள் என்ன என்பது தொடர்பான கேள்விகளை எமக்கு நாமே கேட்கும்போது, நீங்கள் சொன்ன தரப்புக்கள், அவற்றின் செயல்முறை பற்றியதான விடயங்களைக் கடந்துவிடுவோம் என்று நினைக்கிறேன். இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் அடக்குமுறையை எதிர்கொள்கிறார்களா..? அவர்கள் இரண்டாம் தரப் பிரசைகளாகக் கருதப்படுகிறார்களா..? சம வாய்ப்புக்கள் அவர்களுக்குக் கிடைக்கின்றனவா.. ? இவைதான் பிரச்சினைகளின் அடி நாதம். இவற்றை நோக்கி நம்முடைய உரையாடல் நகர்கின்றதென்றால் ஆதரவு – எதிர்த் தரப்புக்களைப்பற்றி அதிகம் பேசத் தேவையில்லை. ஆனால் நாம் ஆதரவு – எதிர்ப்பு, அதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறோமெனில் எங்களுடைய நேர்மையை நிச்சயமாகச் சந்தேகிக்கத்தான் வேண்டும். மக்களுடைய பிரச்சினை தொடர்பில் எமக்கிருக்கின்ற அக்கறையை கேள்விக்கு உட்படுத்த வேண்டியிருக்கும்.

7. இந்தியாவிலும் புலம்பெயர் நாடுகளிலும் “ஆதிரை” அறிமுகமான அளவுக்கு இலங்கையில் அறிமுகம் நிகழவில்லை என எண்ணுகிறேன். இதைப்பற்றிய உங்களுடைய அவதானம் என்ன? இதற்கான காரணம் என்ன?

என்னுடைய முயற்சியில்லை என்பது ஒரு காரணம். பதிப்பாளரும், “நல்ல புத்தகம் அதுவாகப் போகும், நாம் எதற்குத் தனியாக மெனக்கெடவேணும்.. அதனால் வேலையைப் பாருங்க சயந்தன்” என்று வழமைபோல சொல்லிவிடுவார். அவர் சொல்வதுபோலவே நடப்பதால் நானும் தனி முயற்சிகளைச் செய்வதில்லை. இந்தியாவிலும், இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் அறிமுக நிகழ்வுகளையும் புத்தக விநியோகங்களையும் நண்பர்கள் தம் சொந்த முயற்சியில் செய்திருந்தார்கள். அவர்களை நன்றியுடன் நினைவு கூருகிறேன்.
இலங்கையில் இலக்கிய அமைப்புக்கள், ஒரு பண்பாட்டு நிகழ்வாக பிரதேசங்கள் தோறும், புத்தகச் சந்தைபோன்ற ஏற்பாடுகளை ஓர் இயக்கமாக ஏற்படுத்தினால், பதிப்பகங்களுக்கும் வாசகர்களுக்கும் ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்தினால் ஆதிரை மட்டுமல்ல, பல்வேறு புத்தகங்களையும் இலங்கையிற் கொண்டு சேர்க்கலாம். அவ்வாறு ஓர் அதிசயம் நிகழுமெனில் துறைசார்ந்த பதிப்பகங்களும் இலங்கையில் உருவாகும்.

8. நிச்சயமாக. அதற்கான முயற்சிகளை எந்தத் தளத்தில் முன்னெடுக்கலாம்? இதில் புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பு எப்படி அமையக்கூடும்?

முதலாவது சந்தை இல்லை. சந்தை இருந்திருப்பின் இலாப நோக்கம் கருதியாவது அதை யாராவது முன்னெடுத்துச் சென்றிருப்பார்கள். இப்பொழுது வேறு வழியே இல்லை. வேற்றுமைகளுடன் ஒன்றுபட்டுச் செயற்படக்கூடிய புள்ளிகளை இனங்கண்டு இலங்கை முழுவதுக்குமான வலைப்பின்னலை உருவாக்குவதுதான் அவசியமானது. தன் முனைப்பு அற்ற நபர்களால் இப்படியொன்றை நிச்சயதாக ஏற்படுத்த முடியும். இன்னொரு விடயம், முற்போக்காச் சிந்திப்பவர்களாலேயே இப்படியான உதாரண அமைப்புக்களைக் கட்டமுடியாதபோது எவ்வாறு வெகுசன அரசியலில் சிறப்பான அமைப்புக்களை உருவாக்க முடியும்.. என்று நம்பிக்கையீனம் எழுகின்றது. நீங்கள் புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்புப் பற்றியும் ஏதோ கேட்டீர்கள்.. சரி விடுங்கள்.. அடுத்த கேள்வியைக் கேளுங்கள்.

9. இலங்கை, இந்தியா, புலம்பெயர் நாடுகள் என்ற மூன்று தளங்களிலும் ஆதிரை எவ்வாறு உணரப்பட்டுள்ளது?

வாசகப் பரப்பில் தமிழ்நாட்டிலிருந்தும், இலங்கையிலிருந்தும் எழுத்துமூல விமர்சனங்கள் நிறைய வந்துள்ளன. எழுத்துப்பரப்பில் இயங்குகிறவர்களில் தமிழ்நாடு, புலம்பெயர்நாடுகளிலிருந்து பலரும் ஆதிரை பற்றிக் கவனப்படுத்தியிருந்தார்கள். ஆனாலும் அதனுடைய அரசியல் செய்தியை பலரும் மௌனத்தோடு கடந்திருந்தார்கள் என்று உணர்கிறேன். விமர்சனமென்பது அதை நிகழ்த்துபவரின் அரசியல் நிலைப்பாடு, ரசனை மட்டம் போன்றவற்றோடு தொடர்புடைய, அதற்கான முற்றுமுழு உரிமையை அவர் கொண்டிருக்கிற ஒரு வெளிப்பாடு என்ற புரிதலோடு இயங்கினாலும் சில கருத்துக்கள் இதயத்திற்கு நெருக்கமாகிவிடுகின்றன. “காலையில் படிக்கத்தொடங்கினேன், இப்பொழுது நள்ளிரவு ஒரு மணி. முடித்துவிட்டுப் பேசுகிறேன்” என இயக்குனர் ராம் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள், எழுத்தாளர் இரவி அருணாச்சலம் நாவலைப் படித்துக்கொண்டிருந்தபோதே உரையாடியவை அனைத்தும் நான் ரசித்தவை. நாவல் வெளியாகிய ஒரு மாத காலத்தில், நாவல் பயணப்பட்ட நிலங்களுக்குச் சென்று, அவற்றைப் படம்பிடித்து, ஒரு தொகுதிப் படங்களாக ஒரு வாசகர் அனுப்பியிருந்தார். அதுவொரு நெகிழ்வான தருணமாயிருந்தது. ஓம்.. ஒரு விருது மாதிரி..

10. தொடர்ச்சியாக யுத்தம் சார்ந்தே அதிகமாக எழுதப்படுகிறது. ஈழத்தமிழர்கள் யுத்தத்தை இனியும் பேச வேண்டுமா? அல்லது அது தேவையில்லையா? அப்படிப் பேசுவதாக இருந்தால் எந்தப் பகுதிகள் இனிப் பேசப்பட வேணும்?

யுத்தம் எல்லோரையும் பாதித்திருந்தது. எதிர்கொண்டவர்கள், பங்காளிகள் என பாதிக்கப்பட்ட எல்லோரும் அதிலிருந்து வெளியெறுவதற்கான ஆற்றுப்படுத்தல் கிடைக்கும் வரையில் அந்த நினைவுகளால் பீடிக்கப்பட்டிருப்பார்கள். ஒரு சமூகத்தைப் பீடித்திருக்கும் நினைவுகளின் வலிகள் எழுத்தாவதில் ஆச்சரியமெதுவும் இல்லை. ஆகவே இதைத்தான் பேச வேண்டுமென்ற வரையறைகள் தேவையில்லை. ஆயினும் காலப்போக்கில் பின் யுத்தகாலத்தில் ஏற்படுகின்ற சமூக, பொருளாதார அசைவியக்கக் குழப்பங்கள், ஈழத்தில் இனிவரும் எழுத்துக்களில் செல்வாக்குச் செலுத்துமென்று நினைக்கிறேன்.

நான், மனித அகவுணர்ச்சிகள் பற்றி அவற்றின் உறவுச் சிக்கல்கள், முரண்கள் பற்றியெல்லாம் அதிகம் எழுதப்படவேண்டுமென்று விரும்புகிறேன். ஆதிரையில் யுத்தம் பின் திரையில் நிகழ்ந்துகொண்டிருக்க, அந்தக் கதை மனிதர்களின், அன்பு, குரோதம், விசுவாசம், காழ்ப்பு என அகத்தின் உணர்ச்சிகளை நான் பேசியிருக்கிறேன். ஒருநாள் நாஞ்சில் நாடான் பேசும்போது சொன்னார். ஆதிரையிலிருந்து யுத்தத்தைப் பிரித்தெடுத்துவிட்டாலும், அதற்குள்ளே ஒரு கதையிருக்குமென்று. அதை நானும் ஆமோதிக்கிறேன்.

11. யுத்தம் அரசியலின் விளைபொருள். வாழ்க்கை அதைக் கடந்தது. பெரும்பாலான யுத்தக்கதைகள் அரசியலில் மட்டும் தேங்கியிருப்பதேன்? யுத்தத்தில் வெற்றிகொள்ள முடியாததன் வெளிப்பாடு இதுவா?

அப்படியில்லை. யுத்தம் எங்களுடைய வாழ்வின் ஓர் அங்கமாக இருந்தது. எம்முடைய ஒவ்வொரு செயற்பாடுகளும் அதனுடன் தொடர்பு பட்டிருந்தன. யுத்தத்திற்கு வெளியே ஒரு வாழ்க்கை இருந்திருப்பின் – நீங்கள் கேட்கிறது நிச்சயமாகச் சாத்தியமாயிருந்திருக்கும். ஆனால் இருக்கவில்லை. இதனை எழுதித்தான் கடக்க முடியும்.

12. ஆதிரையை வாசித்தவர்கள், நாவலில் காண்கிற நிலப்பகுதிக்குச் சென்று அந்தப் பகுதிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நிலப்பகுதியைச் சார்ந்த நாவல்களுக்கு இப்படி ஏற்படுவதுண்டு. ஜானகிராமனின் நாவல்களைப் படித்து விட்டு கும்பகோணம் தெருக்களில் திரிந்த வாசகர்கள் அதிகம். அதைப்போல, சிங்காரத்தின் நாவல் மதுரைத்தெருக்களில் பலரை நடக்க வைத்தது. மாதவன் கதைகள் கடைத்தெருக்களைப் போய்ப்பார்க்க வைத்தது. ஆதிரை எழுத முன்னும் எழுதிய பிறகும் நீங்கள் அந்த நிலப்பகுதியை எப்படி உணர்ந்தீர்கள்?

ஆதிரையின் பிரதான கதை நிகழும் நிலத்தில், அந்த மனிதர்களோடு நான் தொண்ணூறின் மத்தியில் மூன்று வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். அந்த மனிதர்களுக்கு முன்னால் ஒரு இருபது வருடத்தையும் பின்னால் ஒரு பத்து வருடத்தையும் புனைவில் சிருஸ்டித்ததுதான் நாவலாகியது. அதற்கு முன்னர் அந்த நிலம் ஒரு நிலமாகவே எனக்குள்ளிருந்தது. பிறகு, இதோ, உங்களோடு உரையாடிக்கொண்டிருப்பதற்கு 3 நாட்களின் முன்னர்தான் சென்று வந்தேன். இப்பொழுது ஒரு முழுமையான சித்திரமாக, ஒரு வாழ்க்கையாக் காட்சிகள் என் கண்முன்னால் விரிந்திருக்கின்றன. புனைவுக் கதாபாத்திரங்கள் கூட, இதோ இந்த இடத்திலேயே அவர்களுடைய கொட்டில் இருந்தது என்று கண்ணில் தோன்றினார்கள். கிட்டத்தட்ட அந்த ஒருநாள் மறுபடியும் நாவலுக்குள் வாழ்ந்ததுபோலிருந்தது.

13. இலக்கிய வாசிப்பும் இலக்கியச் செயற்பாடுகளும் சற்று அதிகரித்துள்ளதாகத் தோன்றுகிறது. எழுதுவோர், வாசிப்போர், வெளியீடுகள், வெளியீட்டகங்கள், உரையாடல்கள், அபிப்பிராய வெளிப்பாடுகள், விவாதங்கள், சந்திப்புகள் எனத் தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் உருவாகியுள்ளன. இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது?

அவ்வாறான ஒரு மாற்றம் ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை. சமூக வலைத்தளங்கள் தொகுத்துத்தரும் ஒரே சட்டத்தில் தோன்றும் காட்சியினால்தான் அப்படித் தோன்றுகிறது. அதுமட்டுமல்ல, ஒப்பீட்டளவில் வீழ்ச்சியைத்தான் நான் உணர்கிறேன். சிற்றிதழ்களின் எண்ணிக்கை, எழுத்தாளர்களின் எண்ணிக்கை, புத்தகங்களின் எண்ணிக்கை அவற்றையே எமக்கு எடுத்து இயம்புகின்றது. இன்றைக்கு ஈழத்தில் ஒரு இலக்கியப்பிரதியின் ஒரு பதிப்பென்பது 300 பிரதிகள்தான். ஓர் இலக்கிய நிகழ்வுக்கு வருபவர்களின் எண்ணிக்கை 20 தான்.

14. ஆனால், இடையிருந்த காலத்தை விட ஒரு தொடர்ச்சியான உரையாடல் நிகழ்கிறதே. இன்றைய வெளிப்பாட்டை அல்லது செயற்பாட்டை வெளிப்படுத்துவதில் சமகால ஊடகம் அல்லது வெளிப்பாட்டுச் சாதனம் சமூக வலைத்தளங்கள்தானே ?

சமூக வலைத்தளங்கள் என்ன செய்தனவென்றால், அது முன்னர் இருந்த தீவிர இலக்கியம் – வெகுஜன இலக்கியம் – இலக்கியத்துடன் ஒரு தொடுசலும் வைத்துக்கொள்ளாத சமூகம் என்ற வேறுபாடுகளை, அல்லது அவற்றுக்கிடையிலிருந்த கோட்டை அழித்துப்போட்டுவிட்டன. அந்தச் சாதகத்தன்மைதான் நீங்கள் சொல்வதைப்போன்ற ஒரு தோற்றப்பாட்டைக் கொடுக்கிறது. அதுமட்டுமில்லை. எழுத்தாளர் – வாசகர் என்ற கோட்டைக்கூட இந்த நுட்பம் இல்லாமற் செய்திருக்கிறது. அதாவது இலக்கிய அதிகாரப் பல்லடுக்குத் தன்மையை இல்லாமல் செய்திருக்கிறது. அதை நான் வரவேற்கிறேன். ஆனால் நான் முதற் கூறிய பதிலுக்கு வேறு கோணமுண்டு. எத்தனை எழுத்துக்கள் புத்தக வடிவம் பெறுகின்றன.. எத்தனை பேர், உழைப்பைச் செலுத்தி காலத்திற்கும் நின்று பயனளிக்கக்கூடிய எழுத்தை உருவாக்குகிறார்கள். அந்த எண்ணிக்கையை யோசித்துப் பாருங்கள்.. சமூக வலைத்தளம் அந்தப் பரப்பில் ஒரு துரும்பைத்தன்னும் துாக்கிப்போடவில்லை.

15. புதிய இதழ்கள் எப்படி வரவேணும்? சமூக வலைத்தளங்களும் இணையமும் வாழ்க்கை முறையும் மாறியிருக்கும் சூழலில் சிற்றிதழ்களின் இடம் எப்படி இருக்கப்போகிறது?

சிற்றிதழ்கள் ஒரு சமரசமற்ற நோக்கத்திற்காக, அதை இலக்காகக் கொண்டு தீவிரத்தோடு உருவானவை. அந்த வெளியீட்டாளர்களைக் குட்டிக் குட்டி இயக்கங்களாகத்தான் பார்க்கிறன். மைய நீரோடடத்தில் இல்லாத / விளிம்பு நிலையில் உள்ள / அதிகம் கவனத்தை பெறாத கருத்தியலோ / கோட்பாடோ (அது கலை இலக்கிய கோட்பாடாக இருக்கலாம் அல்லது அரசியல் கருதுகோளாக இருக்கலாம் ) எண்ணிக்கையில் மிகச் சிறிய இலக்கத்தில் உள்ளவர்களால் மிகப்பெரிய உழைப்பை கொடுத்து முன்னெடுக்கப்படுபவை. இன்று நாம் காணும் சகல கருத்தியல்களும் ஏதோவொரு காலத்தில் மிகச்சிறிய எண்ணிக்கையுடைய நபர்களால் எடுத்துச் செல்லப்பட்டவையே. இது சிற்றிதழ்களின் பொதுவான பண்பு.

ஆனால் இப்போது பத்துப்பேரிடம் படைப்புக்களை வாங்கித் தொகுத்துவெளியிடுகிற மேடைகளாக இதழ்கள் உருமாறிவிட்டன. வெகுசன ரசனையிலிருந்து சற்று உயரத்திலிருக்கிற படைப்புக்களைத் தெரிவதைத் தவிர ஒரு கருத்தியல் சார்ந்த நோக்கு அவைகளுக்கு இல்லை. ஈழத்தில் வெளிவருகிற இதழ்களில், ஞானம், ஜீவநதி, புதியசொல் எல்லாமுமே நாலு கவிதை, ரெண்டு கதை, மூன்று கட்டுரையென்று வாங்கி கவரும் விதத்தில் லே அவுட் செய்து அச்சிட்டுக்கொடுக்கின்ற தொகுப்பு இதழ்களாகத்தான் பார்க்கிறேன்.

ஆனால் என்னைக் கேட்டால் இணையத்தின் வருகைக்குப் பிறகு இப்படித் தொகுப்பு இதழ்களின் தேவை இல்லாமல் போய்விட்டது என்றுதான் சொல்வேன். வெறுமனே அச்சு வடிவத்திற்கு வருவது மாத்திரமே தொகுப்பு இதழ்களின் பாத்திரமாகிவிட்டது. அதுமட்டுமில்லை. அவரவர் இருப்பை பதிவு செய்யும் நோக்கோடு இயங்குவதையும் வருத்தத்தோடு கருதிக்கொள்கிறேன்.

இன்றைக்கும் மைய நிரோட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியாத ஏராளமான கருத்தியல்களை முன்னெடுக்க வேண்டியவர்களாகத்தான் நாங்கள் இருக்கிறோம். நிறைய அசமத்துவ போக்குகள் எங்களைப் பாதிக்கின்றன. இருப்பினும் நாம் நம்புகின்ற அல்லது எமக்குச் சமாந்திரமான கருத்தியல் ஒற்றுமை உள்ளவர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற சிற்றிதழ்களின் அல்லது இயக்கங்களின் வெற்றிடம் நம்பிக்கை தரக்கூடியதாக இல்லை. வெற்றிடத்தை நிரப்புவது யார்…?

16. மாற்றிதழ்கள் அல்லது மையநீரோட்டம் தவிர்க்க விரும்பும் கருத்தியலுக்கும் அடையாளத்துக்குமுரிய எழுத்துகள், இதழ்கள் இன்று வந்தால், அதன் மீது புறக்கணிப்பிற்கான வசையும் எதிர்ப்புமல்லவா வெளிப்படுத்தப்படுகிறது. குறிப்பாக துரோகச் செயலின் வெளிப்பாடு என்ற விதமாக. தமிழகத்தில் சிற்றிதழ்கள் எதிர்கொள்ளப்பட்ட நிலைமையும் ஈழத்தில் இன்றுள்ள நிலைமையும் வேறானது. ஆகவே, இதை எப்பிடி எதிர்கொள்வது?

சிற்றிதழ் என்றாலே வசையும் எதிர்ப்பும் கூடப்பிறந்தவைதானே.. அவற்றுக்கு அஞ்சி ‘பங்கருக்குள்’ ஒளிந்துகொள்ளமுடியுமா.. ? ஒரு தெளிந்த நோக்கம் இருந்தால்போதும். சமாந்தரமான கருத்துள்ளவர்களின் பங்களிப்போடு சிற்றிதழ் இயக்கத்தைச் செயற்படுத்தமுடியும். நோக்கம் இல்லையென்றால், அல்லது எதிர்ப்புக்கு அஞ்சினால் சமரசத்திற்குத்தான் உள்ளாக நேரிடும். சமரச இதழ்கள் ஒரு போர்முலாவுக்குள் தம்மைச் சிறைப்படுத்திவிடுவன. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், காலச்சுவடு, உயிர்மை எல்லாமுமே ஒரு போர்முலாவிற்குள் இருந்தாலும், அவை தமக்குப் பின்னால் பெரிய பதிப்பகங்களைக் கொண்டியங்குகின்றன. அவர்களுடைய பதிப்பு முயற்சிதான் காலம் தாண்டியும் பேசப்படுமேயொழில இதழ்கள் அல்ல. இது தெரியாமல் ஈழத்து இதழ்களும் அதே போர்முலாவிற்குள் நிற்பது வருத்தம் தருவது.

17. சமூக வலைத்தளங்கள் இலக்கியத்துக்கு எப்படிப் பங்களிக்கின்றன? எவ்வாறான பங்களிப்பை அது செய்ய முடியும்?

இலக்கியம் தொடர்பான உரையாடலை மேலும் விரித்து விரித்துச் செல்ல வைத்ததை சமூக வலைத்தளப் பங்களிப்பின் ஒரு நல்ல விடயமாகப் பார்க்கலாம். ஓர் உரையாடலில் ஆர்வமுள்ள எல்லோரையும் அதில் பங்காளிகளாக்கியது ஒரு குறிப்பிடத்தகுந்த விடயம். அச்சு ஊடகங்களில் அது நடக்கவில்லை. அங்கே ஒரு தணிக்கையிருந்தது. மற்றையது நம்பிக்கையளிக்கக் கூடிய பலர் தம்மைச் சுயாதீனமாக வெளிப்படுத்திக்கொள்கிற வெளியாக அது இருந்தது. அது முக்கியமானது. தவிர இலக்கியச் செயற்பாடுகளை, ஆர்வலர்களை அது ஒருங்கிணைக்கிறது. திரட்டுகிறது. அதேவேளை சமூக வலைத்தளங்களில் ஒரு ‘திணிப்பு’ இருக்கிறது. மேலோட்டமான முன் கற்பிதங்களை இது ஏற்படுத்திவிடுகிறது.

அதனால் சமூக வலைத்தளங்களில் உலாவுகிற போது மூளையை அவதானமாக நமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவேண்டியுள்ளது.

18. தமிழிலக்கியத்தின் ஆதிக்கம் அல்லது செல்வாக்கு இன்னும் இந்தியாவிடம்தான் உள்ளது என்று இந்திய எழுத்தாளர்கள் நம்பும் நிலை உண்டென்று கூறப்படுவதைப்பற்றி?

நிச்சயமாக, அது தமிழ்நாட்டை மையப்படுத்தியுள்ளதாகத்தான் கருதுகிறேன். புனைவு என்ற தளத்தில், ஈழப்பிரதிகள், தமிழ்நாட்டின் கவனத்தைப் பெறுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அப்புனைவின் கதைக்களம் மற்றும் அனுபவங்கள், அவர்களுடைய அனுபவப்பரப்பிற்கு அப்பால் நிகழ்வதால், இந்தக் கவனம் நிகழ்கிறது. அல்லது, ‘அடிபட்ட இனம்’ என்ற கழிவிரக்கத்தாலும் கூட இந்தக் கவனம் ஏற்படுகிறது. இவ்வாறான கழிவிரக்கத்தினால் எனது படைப்பொன்று தமிழகத்தில் கவனத்திற்குள்ளாகுமானால் அந்நிலையை நான் வெறுக்கிறேன்.

மேற்சொன்னதைத் தாண்டிய ஒரு கரிசனை, ஈழ இலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு உள்ளதா என்பது கேள்விக்குரியது. ஏனெனில் இன்றைக்கும் ஈழத்தில் ஒன்றிரண்டோ ஐந்து ஆறோ புத்தகங்கள் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. இவற்றில் எதைப்பற்றியாவது தமிழகத்திற்குத் தெரியுமா.. நாங்களாகக் காவிக்கொண்டு போனாலேயன்றி தமிழகம் தானாக அவற்றை அறிந்துகொண்டிருக்கிறதா..

ஆக அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.

அதே வேளை, கலை இலக்கியம் சார்ந்த கோட்பாட்டு தளத்தில் ஈழத்தின் பங்களிப்பு எந்தளவு துாரத்திற்குத் தாக்கம் செலுத்துகின்றது என்பதுவும் கேள்விக்குரியதே. புதுப்புதுச் சிந்தனைகள், புதிய கருத்தியல்களைத் தமிழுக்குக் கொண்டுவரும் மொழிபெயர்ப்புக்கள் என ஈழத்தில் ஏதாவது நிகழ்கிறதா? முன்பு அவ்வாறான ஒரு சிந்தனைச் செல்நெறி மரபாகவே இருந்திருக்கிறது. இன்று இல்லை. இனிமேலும் அதற்கான நம்பிக்கையேதும் தென்படுகிறதா.. ?

19. முன்பிருந்த சிந்தனைச் செல்நெறி பின்னர் இல்லாமல் போனதேன்? அத்தகையை சிந்தனை எழுச்சி எவ்வாறு சாத்தியமாகும்?

பல்கலைக்கழகத்தின் சீரழிவும் ஒரு காரணமென்று நினைக்கிறேன். முன்பென்றால் அங்கிருந்தவர்கள் அதைச் செய்தார்கள். முக்கியமாக அவர்கள் பல்கலைக் கழகம் அல்லாத சமூகத்துடனும் ஊடாடினார்கள். சிந்தனைகளை வெளியே கடத்தினார்கள். இன்று சமூகத்திற்கும் பல்கலைக் கழகத்திற்கும் இடையில் ஒரு தொடர்பும் இல்லை. அது தனியே வேலைக்கு ஆட்களைத் தயார்செய்துகொண்டிருக்கிறது.

20. உங்களுடைய புதிய நாவல்களின் அரசியல் என்னவாக இருக்கும்? அவற்றின் களம் எது?

நாவல்களில் என்ன அரசியலென்று நான் சொல்லவேண்டுமா? விமர்சகர்கள் தான் அதைக் கட்டுடைத்துக் கூற வேண்டும். ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். நான் புனைவுக்கு ஊடாக அரசியல் இலக்கொன்றை நோக்கி வாசகர்களை அழைத்துச்செல்லும் மேய்ப்பன் அல்ல. புனைவை நான் அவ்வாறே புரிந்தும் வைத்துள்ளேன். எனது நாவல்கள், அதிகாரமற்ற சனத்தின் பார்வையில், அவர்களைச் சூழவுள்ள சமூகத்தையும் அரசியலையும் பார்ப்பதுவே. நாவலோட்டத்தில் எனது சொந்த அரசியலுக்கு குறுக்கீடுகள் வருமானால் அவற்றை நான் தணிக்கை செய்வதில்லை.
ஓம். புனைவில் பாத்திரங்களுக்கு அரசியல் இருக்கும்தான். பாத்திரங்கள் அரசியலைப் பேசும்தான். ஆனால், அவ்வரசியலுக்கு மாற்றான கருத்துக்களை கொண்ட பாத்திரங்களும் இயல்பிலேயே அங்கிருக்கும். அப்பாத்திரம் தனக்கான நியாயத்தைப் பேசுவதற்கான வெளியும் அங்கிருக்கும். அதுதானே அப்பாத்திரத்திற்கு நான் செய்கின்ற நியாயம். ஒன்றுக்கொன்று எதிரான பல்வேறு நிலைப்பாடுகளை பிரதிபலிக்க கூடிய ஒரு கதைக்களனை நான் என்னுடைய படைப்புக்களில் உருவாக்கியுள்ளேன். ஒரு சமூகத்தின் குறுக்குவெட்டு அப்படித்தானேயிருக்கும்..
மற்றும்படி எனக்கு என்னுடைய அரசியலை நிறுவும் ஒரு தேவை இருக்குமானால், நிச்சயமாக நான் அதை ஒரு கட்டுரையூடாகச் சொல்லவே விரும்புவேன். நான் தற்போது இயங்கும் நாவல் வடிவத்தின் ஊடாக, ஒரு பெரும் அனுபவத் தொற்றை வாசகருக்குள் நிகழ்த்துவதே என்னுடைய பணி. ஒருவேளை அந்த அனுபவத்திற்கூடான சிந்தனை அவருக்கு ஒரு அரசியல் தெரிவை ஏற்படுத்தக்கூடும். மக்கள் சார்ந்த அரசியலாக அதுவிருக்கும் என்று நம்புகிறேன்.

21. இலங்கையின் எதிர்கால அரசியல் குறித்த நம்பிக்கைகள்?

நம்பிக்கையளிக்கக் கூடியதாக எதையும் உணரமுடியவில்லை. அதற்காக ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம், நம்பிக்கையைத் தொலைத்த சமூகமாக இருக்கவேண்டியதுமில்லை.

அரசியற் சிந்தனைகளை முழுநேரமாகச் செயற்படுத்திவரும், ஓர் இளைய தலைமுறையைக்காணுகிறேன். சமூகம் அவர்களைத் தாங்கிக்கொண்டால் மட்டுமே, அவர்களால் தொடர்ந்து இயங்க முடியும். அந்த நிலைமை தோன்றும்போதே அரசியல் நம்பிக்கையளிக்கக் கூடியதாகவும் மாறும். இன்று நம்மிடையில் உள்ள அரசியல் தலைமைகளில் பெரும்பாலானவர்கள் அரசியலை பொழுதுபோக்காகச் செய்பவர்கள், தங்களுடைய ஓய்வு காலத்தில் செய்பவர்கள், பகுதி நேரமாகச் செய்பவர்கள், அல்லது தங்களுடைய தனிப்பட்ட நலன்களுக்காகச் செய்பவர்கள். இவர்களுடைய தலைமையில் இயல்பாகவே அரசியலின் தார்மீக அறம் இல்லாமற் போய்விடுகிறது.
எங்களிடையே ஒரு சாமானிய மனிதன், கட்சியொன்றின் கடைசி உறுப்பினராகி, படிப்படியாக மக்களுடைய செல்வாக்கைப் பெற்று, தலைவனாகும் சந்தர்ப்பமேதாவது உள்ளதா.. ? ஏதாவது ஒரு கட்சி பிரதேசவாரியாக தன்னுடைய கட்சிசார் நபர்களைக் காட்சிப்படுத்தியுள்ளதா..? பொதுசனத்தில் ஒருவர் ஒரு கட்சியில் அதன் கொள்கைகளைப் பார்த்து இணைந்து செயற்படுகிற நிலைமை உண்டா..? கட்சிகளின் தலைமைகள் உருவாகுவதில், கட்சியின் கடைசி உறுப்பினர்களின் பங்கு என்ன..? அதிலேதாவது ஜனநாயக வழிமுறை கடைப்பிடிக்கப்படுகிறதா..?
இவற்றுக்கெல்லாம் ஆம் என்ற பதில் கிடைக்கும்போதே, கிராமிய மட்டங்களிலிருந்து புதிய அரசியல் தலைமைகள் உருவாகும் வாய்ப்புத் தோன்றும். மக்களின் உண்மையான பிரச்சினைகளை அரசியல் தலைமைகள் உணரத்தொடங்கும். அதுவரை தமிழ் அரசியலின் தலைமைத்துவம் அதன் சரியான அர்த்தத்தில் வெற்றிடமாகவே இருக்கும்.

22. அரசியலினால் பெரும் இழப்புகளையும் வலிகளையும் அனுபவங்களையும் சந்தித்த மக்களின் அரசியல் தலைவிதி இப்படி இன்னும் இருளில் நீள்வதற்கான காரணம் என்ன?

அரசியலினால் பெரும் இழப்புக்களையும் வலிகளையும் சந்தித்தவர்கள் அரசியல் தலைமைக்கு வரும்போது இந்தத் தலைவிதி மாறக்கூடும். அவர்களால்தான் உடனடித் தீர்வுகள் – நீண்டகாலத் தீர்கள் என்ற அடிப்படையை உணர்ந்து செயற்படமுடியும். இன்றைக்கு இருக்கிற அரசியல் தலைவர்களில் எத்தனைபேர், யுத்தத்தை நேரடியாக அனுபவித்தவர்கள்.. அதற்குள்ளே இருந்தவர்கள்..?

23. யுத்தம் முடிந்த பிறகும் நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தமிழ்ச்சமூகத்தினர் விருப்பமாக இருப்பதேன்?

பொருளாதாரமும் ஒன்று என்பதை மறைக்கவேண்டியதில்லை. ஆனால் நாட்டுக்குள்ளேயே தன்னிறைவு அளிக்கக்கூடிய இயல்பான பொருளாதார வளர்ச்சி குலைந்துபோனதிற்குப் பின்னால் இனப்பிரச்சினையும் யுத்தமும்தான் இருந்தன என்ற உண்மையை ஒத்துக்கொள்ளவேண்டும். மூளை சார் உழைப்பாளராக வருவதற்கான இயல்பற்ற அதேவேளை ஒரு மனிதப்பிறவியாக மற்றெல்லோரையும் போல வாழ விரும்பும் நியாயத்தைக்கொண்ட ஒருவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாதென்றால் அதற்குரிய தொழில்வாய்ப்புகளும், துறைகளும் பரவலாக உருவாக்கப்படவேண்டும். வாழ்வதற்கு உரியதாக பொருளாதாரச் சூழலை மாற்றவேண்டும். அதை அரசும், அரச அலகுகளும்தான் செய்யவேண்டும். இன்னொரு விடயம், மருத்துவர்களாக, பொறியியலாளர்களாகவும், கல்வியாளர்களாகவும் பலர் நாட்டைவிட்டு வெளியேறிக்கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களையும் உங்கள் கேள்விக்குள் உள்ளடக்கியிருக்கிறீர்களா..?

24. தாயகம் திரும்புவதைப்பற்றிய புலம்பெயர்ந்தவர்களுடைய கனவும் நிஜமும் என்ன?

நான் ஒரு புலம்பெயர்ந்தவன் என்றவகையில் ஒருபோதும், தாயகத்து வாழ்வை ஒரு முடிந்தபோன கனவாக நினைத்து அழுதது இல்லை. கனவை நிஜத்தில் தொடரும் சூக்குமம் தெரிந்தவனாக இருக்கின்றேன். அவ்வளவே!

00
நேர்காணல் : கருணாகரன்

By

Read More

காஸா! படுகொலை நாட்களின் குறிப்புகள்

Rasha N. AbuShaaban இங்கிலாந்தின் Aberdeen பல்கலைக்கழக முதுநிலைப்பட்டம் பெற்றவர். பலஸ்தீன சிவில் சமூக அமைப்புக்களிலும் மனிதாபிமான மற்றும் அபிவிருத்திச் செயற்திட்டங்களிலும் பணியாற்றியவர். தற்போது சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணிபுரிகின்றார். உரிமைகளை உறுதிசெய்வதும், அதிகாரங்களைக் கையளிப்பதுவுமே, பெண்கள் குழந்தைகள், இளைஞர்கள் உள்ளடங்கலான அமைதிமிக்க பலஸ்தீன சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான திறவுகோல்கள் என்பது இவருடைய நம்பிக்கை. தற்பொழுது ஆக்கிரமிப்பு யுத்தம் நடைபெறும் காஸாவிலிருந்து இக்குறிப்புக்களை alochonaa.com இணையத்தளத்திற்காக எழுதுகின்றார்.

தமிழில் மொழிபெயர்ப்பு : சயந்தன்

Gaza, July 9, 2014
பாதுகாப்புமுனை, (“Protective Edge”)இஸ்ரேல்அறிவித்த புதிய யுத்தம், இன்று அதிகாரபூர்வமாக ஆரம்பித்தது.

மூன்று இஸ்ரேலியக் குடியேறிகள் கடத்தப்பட்டு வெஸ்ட்பாங்கில் சடலங்களாக மீட்கப்பட்ட நாள் முதலாகத் தொடர்ந்த அச்சுறுத்தல் இன்று வெடித்தது. இக்கொலைகளுக்கான மறுப்பையோ உரிமைகோரலையோ இதுவரை யாரும் வெளிப்படுத்தவில்லையென்ற போதும் இது ஹமாஸ் அமைப்பின் கைங்கரியம் என்பதே இஸ்ரேலின் உறுதியான நம்பிக்கை.

குடியேறிகள் கடத்தப்பட்ட சில மணித்தியாலங்களிலேயே வெஸ்ட்பாங்கிலுள்ள ஹமாஸ் உறுப்பினர்களின் வீடுகளை இஸ்ரேலியப் படைகள் தாக்கியழிக்கத் தொடங்கின. நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டார்கள். கடந்த வாரத்தில் பாலஸ்தீன இளைஞர் ஒருவர் ஜெருசலேத்தில் கொலைசெய்யப்பட்டார். இவையனைத்தும் மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கும் நடவடிக்கைகளாகவே கருதப்பட்டன.

இப்பிரதேசத்தில் பெருகிவரும் அழுத்தங்களுக்கு இஸ்ரேலின் பொறுப்பான பதிலுக்காகக் காத்திருந்த மக்கள், முதல்நாள் தாக்குதலிலேயே தாம் இலக்குவைக்கப்பட்டதில் உறைந்துபோயினர். ஆம், 365 சதுரகிலோமீற்றர் பரப்பும், 1.7 மில்லியன் மக்கட்தொகையும் கொண்ட காஸா நிலத்துண்டில் இஸ்ரேலியப் படையினர் நூற்றுக்கணக்கில் குண்டுகளை வீசத் தொடங்கினார்கள். ஆகாய வழி ரொக்கெற் வீச்சுக்களிலும் குண்டுகளின் பெருவெடிப்புக்களிலும் எங்களுடைய உடல்கள் குலுங்கி அதிர்ந்தன. இதயங்கள் நொருங்கித் துகள்களாயின.

இந்த யுத்தம் எத்தனை நாட்களைத் தின்னும்..? 2008 -2009 காலத்தய காஸ்ட்லீட் சண்டைபோல 23 நாட்கள் நீடிக்குமா..? அல்லது 2012 ஒபரேஷன் பாதுகாப்புத்தூணைப்போல 8 நாட்களில் முடியுமா.. ? இவற்றைவிட அதிக நாட்களா.. அல்லது சிலநாட்களுக்கா.. எது எப்படியோ இன்று முதல்நாள்.

Mideast Palestinians-Living Under Blockadeநேற்றிரவு ஒரு மணிநேரம்கூட என்னால் உறங்கமுடியவில்லை. வேவு விமானங்களின் இரைச்சலுடனேயே இரவு கழிந்தது.தலைக்கு மேலாக விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. புனித ரம்ஜான் மாதமென்பதால் நோன்பை முடித்து இரவிலேயே உணவு உட்கொள்வது வழமை. இரவிலிருந்தே குண்டுவீச்சுக்களும் தீவிரமடையத் தொடங்கின. இராணுவ நிலைகளையும் விவசாய நிலங்களையும் இஸ்ரேலியப் படைகள் குறிவைப்பதாக செய்தியில் சொன்னார்கள். விடியற்பொழுதில் இறுதியாகக் கண் சொருகும் வரைக்கும் செய்திகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இரைச்சல்களுக்கும் வெடியோசைகளுக்கிடையும் ஓரிரு மணிநேரம் தூங்கமுடிந்தது. ஓரிரு மணிநேரம்தான். திடீரென பூமி அதிர்வது போல, படுக்கையும் வீடும் அதிர்ந்தன. மார்புக் கூட்டிலிருந்து இதயம் துள்ளி விழுந்தாற்போல உணர்ந்தேன். மூச்செடுக்கவும் மறந்த கணம் அது.

காலை துயரச்செய்திகளோடேயே விடிந்தது. நூற்றுக்கணக்கான பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருந்தனர், பலர் காயமடைந்தனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன, பள்ளிவாசல்கள் தாக்குதலுக்குள்ளாகின.

வடக்குக் காசாவில் ‘அபுகவெராவின்’ குடும்பத்தில் குழந்தைகளுட்பட பலர் கொல்லப்பட்டிருந்தனர். கூரையின்மீது கூடி நின்று தாம் அப்பாவிமக்கள் என்பதை அடையாளப்படுத்தினால் தாக்குதலிலிருந்து தப்பமுடியுமென்று அவர்கள் நம்பியிருந்தார்கள். ஆனால், எதிரிப்படைகளிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்கமுடியுமா.. அவர்களுடைய விமானங்கள் மிகச் சாதாரணமாக ஏவுகணைகளை வீசின. படுகொலை அரங்கேறியது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அனைவரும் வீட்டோடு சமாதியான புகைப்படங்கள் நெஞ்சை உருக்கின.

பலஸ்தீன வானொலிச் சமிக்ஞைகளை இடைமறித்து அவற்றில் தம்முடைய செய்திகளை இஸ்ரேல் இராணுவம் ஒலிபரப்பியது. பலஸ்தீனர்கள் தம்முடைய வீடுகளைக் காலிசெய்து பாதுகாப்பாக வெளியேற வேண்டுமாம். எங்ஙனம் சாத்தியம்.. ? காஸா கடலோரமெங்கும் இஸ்ரேலியப் போர்க்கப்பல்கள் வரிசையாகத் தொடுத்து நிற்கின்றபோது.. எங்கனம் சாத்தியம்.?முற்றுகைக்குள்ளான எல்லைகளைக் குறுக்கே கடந்துவிடத்தான் முடியுமா? தரையிலிருந்து சீறும் எறிகணைகளையும் வானத்தை மங்கச் செய்யும் விமானங்களையும் கடந்து பாதுகாப்பான வெளியேற்றம் எங்ஙனம்..?

இரவு பரவி விட்டது.நோன்பை முடித்துக்கொள்வதற்காக வானொலிகளை நிறுத்தி அமைதித் தருணங்களை முயற்சித்தோம். சாத்தியமானதுதானா அது..? விமானங்களையும் வெளியே கேட்கிற குண்டுச்சத்தங்களையும் நிறுத்திவைக்க இயலுமா. ? நாம் தொழுகை அழைப்பிற்காகக் காத்திருந்தோம். சோர்ந்த இதயத்தோடும் நீர்வழிந்தோடும் கண்களோடும் கைகளை மேலுயர்த்தித் தொழுதோம். இந்நாளில் தம்முடைய பிரியமான உறவுகளை இழந்தவர்களுக்காகவும், தம் வீடுகளைக் கண்முன்னே பறிகொடுத்தவர்களுக்காகவும், இறைவனைத் தொழுதோம். இன்றைய வலி மிகுந்த காட்சிகளை நினைவிற் கொண்டோம். இன்றைய முழுநாளும், இது யுத்தத்தின் முதல்நாள் என்ற நினைவு பரவியிருந்தது. இன்னமும் எத்தனை நாட்களை இது தின்னும்.. ?

இன்றைக்குப்பகல், தெற்கு இஸ்ரேல் நகரத்திலுள்ள இஸ்ரேலிய கடற்படைத்தளம் தாக்குதலுக்கு உள்ளானதாக ஹமாஸின் இராணுவப்பிரிவான அல்கஸாம் (Al-Qassam)தெரிவித்தது. இஸ்ரேலினுள்ளே சில மைல்களை எட்டும் உள்ளுார்த் தயாரிப்பு ரொக்கெற்றுக்கள், அப்பகுதி இஸ்ரேலியரைத் திகிலடையச் செய்திருக்கும். இச்செய்தி சிறுநம்பிக்கையை அளித்தது. ஆம். மிகக் கொடுமையான மௌனத்தை சர்வதேசம் கைக்கொள்ளும் இவ்வேளையில் அநியாயங்களைச் சகித்துக்கொண்டு மௌனமாயிருக்கத் தயாராயில்லாத புரட்சியாளர்கள் நம்முடனுள்ளார்கள் என்ற நம்பிக்கை இது. இவ்வகை ரொக்கெற்றுக்கள் இஸ்ரேலிற்குப் பெரியளவான இழப்புக்களை ஏற்படுத்தாதென்று தெரிந்ததுதான். பதிலடியாக நூற்றுக்கணக்கான எறிகணைகளை அவர்கள் ஏவுவார்கள். ஆனால், நாம் எதிர்த்துப் போராடுகின்றோம் என்பதையும் அரபு உலகிலிருந்தோ வேறெங்கிலுமிருந்தோ யாருக்காகவும் என்பதையும் உலகிற்குச் சொல்ல வேண்டும். ஏனெனில் நீதி நம்பக்கமே இருக்கின்றது. இழந்த உரிமைகளையும் நிலத்தையும் திரும்பப் பெறுவதற்கு நாம் போராடியே தீரவேண்டும்.

யுத்தத்தின் முதல் நாள் இரவில் கரைந்து போகிறது. இதுவரை 22 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 125 பேருக்குக் காயங்கள். இந்த எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் உயர்கிறது. காஸாவின் வெளியிலிருந்கும் சிலருக்கு இவை வெறும் இலக்கங்களே. ஆனால் எங்களுக்கு – காஸாவின் மக்களுக்கு, இவை புள்ளிவிபரங்கள் அல்ல. இந்த இலக்கங்கள் எங்களுடைய வலிகள், அடுத்து எவர் கொல்லப்படுவார் என்கிற துயர்.. எவ்வகைக் குண்டு வீசப்படுமென்ற அச்சம்..

இந்தப்பொழுதில் நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் வலிமையையும் பொறுமையையும் அருளும்படி இறைவனை வேண்டிக்கொள்வதுதான்.

By

Read More

× Close