ஆனந்தன் அண்ணை.. உங்களை நான் கடைசியாக் கண்ட போது நீங்கள் வழமைக்கு மாறாக அமைதியா இருந்தீங்கள். அப்பிடியொரு அமைதியில உங்களை நான் அதற்கு முதல் பார்த்ததே இல்லை. எப்பவும் சிரிப்பும் கும்மாளமுமா இருக்கும் நீங்கள் அண்டைக்கு ஏன் அப்பிடி இருந்தீர்கள்? அதுவும் ஆர்மோனியப் பெட்டியை நீங்கள் வாசிக்க, நாங்கள் பாட, வீடே கலகலக்கும். சில வேளை நீங்களே பாடிக்கொண்டு ஆர்மோனியம் வாசிப்பீர்கள். ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது என குரலை உயர்த்திப் பாடுவது அவ்வளவு நல்லாயிருக்காது என்றாலும் ஆர்மோனிய இசை, அதையெல்லாம் கடந்து இனிக்கும். நீங்கள் அந்தப் பாட்டைப் பாடும் போதெல்லாம் அம்மாவோ, அத்தையோ வழமையாக் கேட்கும், ஆனந்தன் ஆரடா அந்தப் பெட்டை எண்ட கேள்விக்கு பாட்டினூடே சிரிப்பியள் ஒரு சிரிப்பு அந்தச் சிரிப்பை கடைசியா உங்களைக் கண்ட போது நான் காணவில்லை.
ஆனந்தன் அண்ணை நாங்கள் எல்லாரும் ஒண்டாத் தான் இடம்பெயர்ந்தம். ஆமி, பொன்னாலை மாதகல் எண்டு எல்லா இடத்தாலையும் மூவ் பண்ணுறான் எண்ட செய்தி கேட்டதும் தான் தாமதம் முடிந்தவரை எல்லா சாமான் சக்கட்டுக்களையும் தூக்கி சைக்கிளில கட்டத் தொடங்கினம். அண்ணா நீங்கள் உங்கடை ஆர்மோனியப் பெட்டியைத் தூக்கி சைக்கிளில கட்ட, உங்கடை அம்மா பேசுறா. மனிசர் சாகக் கிடக்கிற நேரம் உனக்கு உது தானோ அவசரம். கழட்டி எறி. நீங்கள் என்ன நினைத்தியளோ தெரியா ஆர்மோனியப் பெட்டியை சைக்கிளில இருந்து இறக்கி வைச்சிட்டு கொஞ்சம் நேரம் அதையே பாத்தியள்.
செல் சத்தங்களும் பிளேன் சத்தங்களும் கிட்டவாக் கேட்கத் தொடங்கிட்டுது. துப்பாக்கி வெடிக்கிற சத்தங்களையும் கேட்கக் கூடியதாயிருந்தது. ஆமி, சண்டிலிப்பாய் பக்கத்தாலையும் மூவ் பண்ணுறான் எண்ட உடனை நாங்கள் நவாலியால யாழ்ப்பாண ரவுணுக்கு போக முடிவெடுத்து தெருவில இறங்கினம். தெரு முழுக்கச் சனம். சிவராசன் அண்ணை வந்து தன்ரை ரண்டு பொம்பிளைப் பிள்ளையளையும் எங்களோடை கூட்டிக்கொண்டு போகச் சொல்லிட்டு, தான் பிறகு தங்கடை அம்மாவைக் கூட்டிக்கொண்டு வாறன் எண்டுவிட்டு போயிட்டார். அத்தானிட்டை மோட்டச்சைக்கிள் இருந்ததாலை அவர் முதலில எங்கடை அம்மம்மாவையும் குழந்தையோடை இருந்த கீதா அன்ரியையும் கொண்டுபோய் விட்டுட்டு வாறேனெண்டு சொல்லிட்டுப் போனார்.
ஆனந்தன் அண்ணை வழி முழுக்க நீங்கள் பேசாமல் வந்தியள். நீங்கள் சிவராசன் அண்ணையின்ர கடைசி மகள் சோபாவை சைக்கிளில ஏத்தி வந்தனியள். அவள் அழுது கொண்டேயிருந்தாள். அவ்வப்போது அழாதையடி எண்டு அவளுக்குச் சொல்லிக்கொண்டு வந்தீங்கள். இதுக்கிடையில மோட்டச்சைக்கிளில போன அத்தான் திரும்பி வந்தார். அம்மம்மாவையும், கீதா அன்ரியையும் நவாலியில உள்ள தேவாலயத்தில் விட்டு வந்ததாகவும் அந்தப் பக்கம் பிரச்சனை இல்லையெண்டும் சொன்னார். இந்த முறை அவர்,அத்தை அம்மா இவையளை ஏத்திக்கொண்டு போனார்.
நாங்களும் நவாலியில சென் பீற்றர்ஸ் தேவாலயத்துக்கு வந்து சேர்ந்தம். தேவாலயம் அமைந்த சூழல் வீதி மூடிய மரங்கள் நிறைந்த நிழலான பகுதி. இடம்பெயர்ந்த மொத்தச் சனமும் அங்கை தங்களை ஆசுவாசப் படுத்திக்கொண்டிருந்திருந்தினம். சண்டை நடக்கிற பிரதேசத்தை தாண்டி வந்திட்டம் எண்டளவில நாங்களெல்லாம் செய்தியறியிற ஆர்வத்தில அங்கையிங்கையெண்டு கதைச்சுக் கொண்டிருந்தம். அழுது கொண்டிருந்த சோபா கூட இப்ப சிரிச்சுக் கொண்டிருந்தாள். தீபா தான் அப்பாவைக் காணேல்லையெண்டு அந்தரிச்சுக் கொண்டிருந்தாள். ஆனந்தன் அண்ணா நீங்கள் ஆரோடும் கதைக்கவில்லை. உங்கடை அம்மா அரிசி மாவுக்குள்ளை தண்ணியும் சீனியும் போட்டுக் குழைச்சு எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தா.
எல்லாரையும் நல்லூர் கோவிலுக்கு வந்து சேரச் சொல்லிவிட்டு அத்தான் தனக்குத் தெரிந்த ஒரு அங்கிள் வீட்டை போய் தங்குமிட வசதிபற்றி அறிந்து கொண்டு வாறதாச் சொல்லிப் புறப்பட்டார். நானும் அவரோடை வெளிக்கிட்டன். உண்மையில நான் சைக்கிள் ஓடிக் களைச்சுப் போயிருந்தன். நாங்கள் வெளிக்கிட்டம்! என்னோடை கீதா அன்ரியும் குழந்தையும்.
ஆனந்தன் அண்ணா அப்பதான் நான் உங்களைக் கடைசியாப் பாக்கிறன் எண்டு எனக்குத் தெரியேல்லை. நாங்கள் வெளிக்கிட்டு ஆனைக் கோட்டைச் சந்தி தாண்ட.. புக்காரா குத்துற சத்தம் காதைக் கிழிக்குது. மோட்டச் சைக்கிளை பிரேக் அடிச்சு நிப்பாட்டிப் போட்டு றோட்டோரமா விழுந்து குப்புறப் படுத்தன். கீதா அன்ரி தன்ர குழந்தையை நெஞ்சுக்குள்ளை வைச்சுக்கொண்டு விழுந்து கிடந்து, முருகா முருகா எண்டு கத்துறா. தொடர்ந்து எட்டுக் குண்டுகள் ஒரே இடத்தில், ஒரே பிளேனில இருந்து. நிலம் ஒருக்கா அதிர்ந்து தணிந்தது.
அத்தானுக்கு உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கிட்டுது. பக்கத்தில இருந்த ஒரு வீட்டில கீதா அன்ரியையும் குழந்தையையும் விட்டுவிட்டு அத்தான் என்னையும் ஏத்திக்கொண்டு திரும்பவும் நவாலிப் பக்கமா ஓடத் தொடங்கினார். அங்கிருந்து வாற எல்லாரிடமும், அண்ணை எங்கை விழுந்தது, அண்ணை எங்கை விழுந்தது எண்டு கேட்கிறம். ஆருக்குமே தெரியேல்லை. இதுக்கிடையில ரண்டு மூண்டு வாகனங்கள் காயப்பட்ட ஆக்களை ஏத்திக் கொண்டு எதிர்த்திசையில் போகிறது.
நவாலித் தேவாலயச் சூழலை அடையாளமே காண முடியேல்லை. ஒரே புகை மண்டலம். காலுக்கு கீழே மிதிபடும் இடமெல்லாம் மனித தசைத் துண்டங்கள். ஆனந்தன் அண்ணா அந்தக் கணத்தை எனக்கு எப்பிடி எழுதுறது எண்டு தெரியேல்லையண்ணா. என்ர அம்மா, அத்தை, அம்மம்மா, ஆனந்தன் அண்ணா.. ஐயோ என்னாலை கத்தக் கூட முடியேல்லையண்ணா.
நான் முதலில கண்டது சோபாவைத்தான். அவளுக்கு நெற்றி, கன்னம் எல்லாம் ரத்தம். கையாலை பொத்திக் கொண்டு குழறிக் கொண்டிருந்தாள். அத்தை தன்ர சேலையில இருந்து கிழிச்சு அவளுக்கு கட்டுப் போட்டுக் கொண்டிருந்தா. அத்தையைப் பார்க்க ரத்தத்தில் குளித்திருப்பது போல கிடந்தது. இதுக்கிடையில சுவர் ஒன்று மேல் விழுந்து உள்ளிருந்து கத்திக் கொண்டிருந்த மச்சாளை அத்தான் கண்டு தூக்கிட்டார். அவவுக்கு காயம் ஒண்டும் இல்லை. ஆனா அவவுக்கு பேச்சு மூச்சொண்டும் வரேல்லை. தீபாவுக்கும் வயிற்றில் கிழியல். மற்றவர்களை உடல் முழுக்க மண்ணும் இரத்தமுமாக அடையாளம் கண்டு கொண்டோம்.
ஆனந்தன் அண்ணா.. என்னவோ தெரியேல்லை. ஆம்பிளையள் எல்லாம் தப்பியிருப்பினம் எண்டு அப்ப நான் நினைச்சிருந்தன் அண்ணா. உங்கடை அம்மா, ஆனந்தன் ஆனந்தன் எண்டு கத்தித் தேடுறது எனக்கு கேட்டது. ஆனந்தன் அண்ணா நீங்கள் எங்கை.. ?
அண்ணா.. நான் உங்களைப் பாத்தபோது நீங்கள் இரண்டு கைகளையும் மேலே தூக்கி திரும்பிப் படுத்திருந்தியள். உங்கடை அம்மா உங்கடை கன்னத்தை தட்டித் தட்டி கத்தினா. உங்களுக்குக் காயம் எதுவுமில்லையெண்டும் மயங்கிட்டியள் எண்டும் தான் நான் நினைச்சிருந்தன். அத்தை உங்கள் முகத்தில் தண்ணி தெளிச்சுக் கொண்டிருந்தா.
அண்ணா உங்கடை உடலைத் திருப்பியபோது தான் கவனிச்சம். நெஞ்சில் இதயமிருக்கும் பக்கமிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்ததை. பெரும் காயம் எதுவுமில்லையண்ணா உங்களுக்கு. ஆனா…
ஆனந்தன் அண்ணா உங்களுக்குச் செத்த வீடு கூட செய்யமுடியவில்லை. உழவு இயந்திரம் ஒன்றில் உங்கள் உடலை ஏற்றி, வரும் வழியில் கோம்பயன் மயானத்தில் எரிக்கக் கொடுத்து விட்டுக் கூடியழத்தான் முடிந்தது.
ஊரெல்லாம் உன் பாட்டுத் தான் உள்ளத்தை மீட்டுது என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் மேலே கைகளைத் தூக்கி திரும்பிப் படுத்திருந்த உங்களுடைய ஞாபகம்தான் ஆனந்தன் அண்ணா.
Last modified: March 27, 2007
_____
_____
1995 ம் ஆண்டு நவுகிரியிலெ விழ்த்தப்பட்டவை இரண்டு விமானங்கள் அடுத்தடுத்து வீழ்த்ப்பட்டவை நீங்கள் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளீர்கள்
(1990 ல் மாங்குளத்தில் ஹெலி வீழ்தப்பட்டதே அதையும் குறிப்பிடலாம்
1995 ம் ஆண்டு நவுகிரியிலெ விழ்த்தப்பட்டவை இரண்டு விமானங்கள் அடுத்தடுத்து வீழ்த்ப்பட்டவை நீங்கள் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளீர்கள்
(1990 ல் மாங்குளத்தில் ஹெலி வீழ்தப்பட்டதே அதையும் குறிப்பிடலாம்
ovvoru eela thamilanum ithu pontra anupavankaludan than ullarkal. kanaththa manathudan vaasithu mudithen.
ovvoru eela thamilanum ithu pontra anupavankaludan than ullarkal. kanaththa manathudan vaasithu mudithen.
தமிழ்பித்தன்,
சயந்தன் சொல்வது சரி. புலிப்பாய்ச்சல் சமரில் ஒரு புக்காரா விமானம் மட்டும்தான் சுட்டுவீழ்த்தப்பட்டது.
நீங்கள் சொல்வது ஏப்ரலில் சுட்டுவீழ்த்தப்பட்ட இரண்டு அவ்ரோ ரக விமானங்களை.
தமிழ்பித்தன்,
சயந்தன் சொல்வது சரி. புலிப்பாய்ச்சல் சமரில் ஒரு புக்காரா விமானம் மட்டும்தான் சுட்டுவீழ்த்தப்பட்டது.
நீங்கள் சொல்வது ஏப்ரலில் சுட்டுவீழ்த்தப்பட்ட இரண்டு அவ்ரோ ரக விமானங்களை.
இப்ப உங்களுடைய பூரிப்பின் அர்த்தம் விளங்குது…என்னத்த சொல்ல? நான் நவாலித் தேவாலயத்தில நடந்த கொடூரத்தைப் பாடசாலையில் காட்டின ஒரு படத்தில்தான் பார்த்தேன்.எல்லைக்கற்கள் என்று நினைக்கிறேன்.
இப்ப உங்களுடைய பூரிப்பின் அர்த்தம் விளங்குது…என்னத்த சொல்ல? நான் நவாலித் தேவாலயத்தில நடந்த கொடூரத்தைப் பாடசாலையில் காட்டின ஒரு படத்தில்தான் பார்த்தேன்.எல்லைக்கற்கள் என்று நினைக்கிறேன்.
பழகிய சொந்தங்கள், நட்பை பேரினவாத அரக்கனுக்குத் தின்னக் கொடுப்பதைக் கண்கூடாகக் கண்டாலும், பதிவை வாசித்தபோது வெறுமையாக இருந்தது, மனம் கனத்தது
பழகிய சொந்தங்கள், நட்பை பேரினவாத அரக்கனுக்குத் தின்னக் கொடுப்பதைக் கண்கூடாகக் கண்டாலும், பதிவை வாசித்தபோது வெறுமையாக இருந்தது, மனம் கனத்தது
வாசித்து முடித்த போது வெறுமைதான் எஞ்சியது. நமது சகோதரர்களின் துயரம் தீர பிரார்த்திப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்..? எனது கையகலாத்தனம் குறித்து மனதிற்குள் வேதனைப் படுகிறேன்.
வாசித்து முடித்த போது வெறுமைதான் எஞ்சியது. நமது சகோதரர்களின் துயரம் தீர பிரார்த்திப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்..? எனது கையகலாத்தனம் குறித்து மனதிற்குள் வேதனைப் படுகிறேன்.
unmaiyileya manathai touch panniya vidayam.Sayanthan gud work
unmaiyileya manathai touch panniya vidayam.Sayanthan gud work
மிக மிக கவலையான நிகழ்வுகள்… ஒரு சில நிமிடங்களில் ஒரு உறவை பறிகொடுப்பது…… அதன் வலி…
மிக மிக கவலையான நிகழ்வுகள்… ஒரு சில நிமிடங்களில் ஒரு உறவை பறிகொடுப்பது…… அதன் வலி…
நெஞ்சைத் தொடும் நினைவுகள்.
நெஞ்சைத் தொடும் நினைவுகள்.
கவலையான நிகழ்வு. arumaiyana pathivu. nandrikal
கவலையான நிகழ்வு. arumaiyana pathivu. nandrikal