‘அஷேரா’ வெவ்வேறு போராளி இயக்கங்களைச் சார்ந்த இருவரின் நினைவோட்டம் வழியாக இலங்கை விடுதலைப் போரின் சில பக்கங்களைத் திறந்து காட்டுகிறது..கூடுதலாக பனி சூழ்ந்த ஸ்விட்சர்லாந்து மண்ணின் ‘எகெரி’ ஏரிக்கு மேலே மலையில் மையம் கொண்டிருக்கும் அகதி முகாமொன்றின் வாழ்க்கைச் சூழலையும் சித்தரிக்கிறது.. இரு முன்னாள் போராளிகளின் அகக் கொந்தளிப்புகளே நாவலை முக்கியமானதாக மாற்றுகிறது..உள்நாட்டில் நிகழும் இடைவிடாத போர்ச்சூழல் சாதாரண மனிதர்களின் உளவியலை எவ்வாறு கலைத்துப் போடுகிறது என்பதை நாவல் கலை நயத்தோடு விவரிக்கிறது..
83 இனக்கலவரத்திற்குப் பின் விடுதலைக்காகப் போராடும் போராளிக் குழுக்கள் தங்களுக்குள் தீவிரமாக மோதிக் கொள்கின்றன..போராளிக் குழுக்களால் பாதிக்கப்பட்ட முந்தைய தலைமுறை ஆளுக்காக ஒரு போராளி இளைஞன் அடைகிற குற்ற உணர்வும் அதிலிருந்து நீளும் நிஜமான பரிவும் நாவலில் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது..
ஆயுதப் போராளிகள் குறித்து நம் பொதுப் புத்தியில் படிந்திருக்கிற பல பிம்பங்களை இந்த நாவல் துடைத்தழிக்கிறது.. ‘இடிந்தக் கரைக்குப் போய் பயிற்சி எடுத்தால் ஆறே மாதத்தில் பொதுவுடைமைத் த.மி.ழீ.
ழ.ம் மலர்ந்து விடும்..இந்த வருடத்திற்குள் கூடப் பிறந்த பெட்டைகளை கரையேற்றி விடலாம் ‘ என்கிற நடுநிசி நம்பிக்கையுடன் படகேறுகிற வெள்ளந்தி மனிதர்கள்தான் துப்பாக்கிகளையும் ஏந்துகின்றனர்..
‘நீங்கள் பு.லி உளவாளிகளா?’ என்று சந்தேகப்பட்டவுடன் ஒருவன் இன்னொருவனைக் கேட்கிறான்..
” உளவாளின்னா வயல்ல இறங்கி வேலை செய்யுறவங்கதான ? “
இந்த வெள்ளந்திக் கூட்டத்தில் ஒருவனைத்தான் காலத்தின் கொடுங்கரங்கள் கொலைப் பசியோடு துரத்துகின்றன..
அமைப்புகளில் உறைந்திருக்கும் அதிகாரம் தனி மனிதர்களின் அன்றாட வாழ்வினைப் பாதிப்பதை நாவல் உரையாடல்களின் வழி கதைக்காமல் காட்சிகளின் வழி உணர்த்துகிறது..
‘அற்புதத்தை ‘ஒவ்வொரு இயக்கமும் துரத்தித் துரத்தி வேட்டையாடுகிறது..’ துரோகி ‘ ‘ கைக்கூலி ‘ ‘ உளவாளி ‘ என்று விதவிதமாய் பட்டம் சூட்டுகின்றனர்..பெண் வாடையே அறியாதவனின் ஆண்குறியில் ‘ பாலியல் குற்றவாளி ‘ என்கிற சிலுவை ஏற்றப்படுகிறது..
நாவலின் போக்கில் இருவேறு தரிசனங்கள் முன் வைக்கப்படுகின்றன..
இயக்கப் போராளிகள் மீதான அவதூறுகளை
” இதொன்றும் தனி ஆளின் குரல் இல்லை..இது அமைப்பின் குரல் ” என்று கூறுகிற அதே நபர் சகோதரச் சண்டையில் சிக்கி சாகப் போகிற தருணத்தில் ,
” அமைப்பிற்கெண்டு குரல் இல்லை போல..யார் யார் முடிவெடுக்கிறாங்களோ அப்போதைக்கு அதுதான் குரல்”
என்று புலம்பும் போது நாவலின் சம்பவங்களை மொத்தமாக வேறொரு பார்வையில் உணர முடிகிறது..
இந்த நாவலில் ” நான் யார்?” என்கிற ‘சுய அடையாள விசாரணை ‘ பல கதாபாத்திரங்களின் மனத்தில் வந்து போகிறது.. அந்தக் கேள்வி ஆன்மீக நோக்கில் கேட்கப்படுவதில்லை..வெறும் புற இருப்பை முள் நிழலாய் துரத்தும் சூழல்களாலேயே பல கதாபாத்திரங்கள் இந்த அலைக்கழிப்பிற்கு ஆளாகின்றனர்..பு.லியாகி விட்ட சிங்களப் பெண், பல்வேறு இயக்கங்களால் மாறி மாறி துரோகி பட்டம் பெறுகிறவன்.. ஒரே ஒரு கேள்வி வெவ்வேறு மனங்களிடம் கை மாறிக் கொண்டே இருக்கிறது..அகதி வாழ்வின் ஒற்றைக் கையிருப்பாக அது மட்டுமே எஞ்சுகிறது..’
சொந்த மண்ணில் நிகழும் சகோதர யுத்தத்திற்கு நடுவே அற்புதத்திற்கு ‘ நான் எவரோடிருக்கிறேன்?’ என்பது புரியவில்லை..இன்னாரோடிருக்கிறேன் என்கிற தெளிவிலிருக்கும் அருள் குமரனுக்கு ‘ நானென்ன செய்கிறேன்?’ என்பதை அறிய முடியவில்லை..இந்த அடையாளச் சிக்கல்களை சயந்தன் எல்லை தாண்டியும் விரிக்கிறார்..நஜீபுல்லாவின் தந்தை கவிதை எழுதும் ஆப்கன்வாசி..அவர் சோவியத்துக்கு எதிராக தம் மக்களை ஒன்றிணையச் செய்ய சொற்களால் அறைகூவல் விடுக்கிறார்..ஆனால் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பின் அவர் ஒரு போதும் திட்டாத அமெரிக்கப் படையினரின் வான்வெளித் தாக்குதலில் செத்துப் போகிறார்..நாவல் முழுவதும் அடையாளச் சிக்கல்களால் மனித மனங்கள் அடையும் தவிப்பு நுணுக்கமாகக் கூறப்பட்டிருக்கிறது..
” கோதுமை நிறம் கொண்ட ஐயர் மாமியை ஸிவிஸ் மண்ணில் வைத்து அடையாளம் தெரியாமல் மீன் வாங்கச் சொன்ன பாவத்திற்காக வேலையைப் பறி கொடுக்கும் பகடிக் காட்சி அடையாளப்படுத்தலின் மீதான கூர் விமர்சனமேதான்..
டச்சுக்காரனுக்கு இந்தியாவும் , இலங்கையும் ஒன்றுதான்..இலங்கைக்காரனுக்கு பாகிஸ்தானும், ஆப்கனும் அப்படித்தான்..அகதிகளுக்கு ஆஸ்திரியாக்காரனும் , ஸ்விஸ்காரனும் ஒரே ஆள்தான்..ஆனால் அடையாளப்படுத்தலின் அலட்சிய தோரணை ஒவ்வொரு இனக்குழுவையும் ஆழ்மனத்தில் நுட்பமாகச் சீண்டுவதை நாவல் பதிவு செய்திருக்கிறது.
இன்னொரிடத்தில் ” அண்ணன் தம்பிக் கதைகள் எல்லாம் வேறெங்காவது வைத்துக் கொள்ளனும்..இங்க எல்லாரும் தோழர்கள் சரியா ” என்று ஒரு போராளி புதிதாய் வந்தவனை அதட்டுகிறான்..ஒற்றை விளிச்சொல்லிலேயே ‘ எந்த இயக்கம்?: என்பதை அடையாளப்படுத்தும் அரசியலை சயந்தன் நுட்பமாக பேசியிருக்கிறார்..
இந்த நாவலில் ‘ குற்ற உணர்வு ‘ பெறுகிற இடம் பிரதானமானது..கதை நாயகன் அருள் குமரன் கிறிஸ்தவனாக இருப்பது தற்செயலானதன்று..அவனுடைய குற்ற உணர்வு சிறு வயதில் லஜ்ஜையே இல்லாத காமத்தின் பேருருவிற்கும், தூய்மைவாதத்தின் கற்பனையால் மலர்ந்த காதலுக்கும் நடுவே நிகழும் ஊசலாட்டத்தால் பிறக்கிறது..அந்தக் குற்ற உணர்வே அவனை தாயகத்துக்காக துப்பாக்கி தூக்கும் போராளியாக்குகிறது.
பின்னர் தனி மனித எல்லைகளைத் தாண்டி ‘ நான் என்பது என் இயக்கமே ‘ என்கிற புரிதலால் அடைகிற வேறொரு குற்ற உணர்வு பரிவின் வாசல்களைத் திறந்து வைக்கிறது..அகதி முகாமில் அவனைப் போலவே கைகளில் இரத்தக் கறை படிந்த ஆப்கானியைப் பார்க்கிறான்..அவன் தற்கொலை இவனுடைய குற்ற உணர்வை மேலும் வலுப்படுத்துகிறது..கடைசியில் சிங்களப் பெண்ணாய் பிறந்து பு.லியாய் மாறி சாகசங்கள் செய்து இப்போது சாதாரண காதலியாய் மாறி விட்ட அவந்தியை கற்பனை செய்கிற போது முகத்தில் பெருகும் புன்னகையால்தான் அருள் குமரன் எல்லா குற்ற உணர்விலிருந்தும் விடுபடுகிறான்.
அதுவே நாவலின் மைய தரிசனமாக இருக்கிறது..தன்னைக் கடந்து போகும் இணைப் பறவைகளின் மூக்குரசலைப் பார்த்து இரத்தம் வழியும் சிலுவையை இறக்கி வைத்து விட்டு மூச்சு விடும் இலங்கை இயேசுதான் அருள் குமரன்..
ஆண், பெண் உறவு சார்ந்த சித்தரிப்புகள் நாவலில் உக்கிரமான காட்சிகளாகவே இடம் பெற்றிருக்கின்றன..அம்மாவுக்கு வேறொரு ஆடவனோடு ஏற்படுகிற பிறழ் உறவு முதிராச் சிறுவனின் அகத்தை பாதிப்பதை நாவல் தீப்படரும் வனத்தில் தப்பியோடும் சிறு குஞ்சின் தவிப்பை நேர் கொண்டு பார்ப்பவனின் மொழியில் விவரித்திருக்கிறது..அருள் குமரனினின் அம்மா ” அப்பன் கொஞ்ச நேரம் வெளில இருங்கோ .அம்மா மாமாவுக்கு மருந்து போட்டு விட்டு வருகிறேன் ” என்று மகனை வெளியில் நிறுத்தி கதவடைக்கும் காட்சி நாவலின் தொடக்கத்தில் வரும்..
ஸ்விட்சர்லாந்து அகதி வாழ்வில் அருள் குமரன் காதலிக்கும் அபர்ணா
” அரங்கன் கூப்பிடுகிறார் நான் வைக்கிறேன்”
என்று கணவன் பெயரைச் சொல்லி தொலைபேசியை வைப்பாள்..இரு சம்பவங்களையும் மாறி மாறி நினைவு கூர்ந்து அருள் குமரன் அடையும் தவிப்பு நாவலில் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது..
நடத்தை பிறழும் ஒவ்வொரு பெண்ணும் அருள் குமரனுக்கு அம்மாவை நினைவூட்டுகிறாள்..ஓவ்வொரு பெண் உடலும் அற்புதத்திற்கு அவன் பார்த்தே இராத ஓர் அருவப் பெண்ணின் ‘ பாலியல் குற்றச்சாட்டை ‘ நினைவூட்டி விடுகிறது..இருவருமே பெண்ணின் மார்புக் குவைகளில் பதுங்கித்தான் மீட்சியைத் தேடுகிறார்கள்.
‘அஷேரா ‘ என்பது ஆதி இஸ்ரவேலர்களின் தாய் தெய்வம்.
நாவல் முழுவதும் ‘அஷேரா ‘ வெவ்வேறு பெண் உடல்களில் எழுந்தருகிறாள்..அல்லது எழுந்தருள்வதாக ஆண்கள் உருவகித்துக் கொள்கின்றனர்..
இந்த நாவல் எந்த மனச்சாய்வும் இன்றி வரலாற்றின் பின்ணணியில் நின்று தனி மனிதர்களின் அகத் தவிப்புகளையே பேசுகிறது..
நாவலின் உச்சக் காட்சியாக ஒன்றைச் சொல்வேன்..எதிர் போராளிக் குழுவினரிடம் இருந்து தப்பி ஓடும் அற்புதம் ஒரு விறகுக் கட்டையை உடையில் ஒளித்துக் கொண்டு துப்பாக்கி வைத்திருப்பவனைப் போல் பாவனை செய்து ஒரு வீட்டில் நுழைகிறான்..அது குழந்தையில்லாத இணையர் மட்டுமேயிருக்கிற வீடு..அந்தப் பெண்ணை அடிக்கப் போகிற போது சலனமில்லாத அவள் கண்களைப் பார்க்கிறான்..
” உன்னை இந்த வயிற்றில் சுமந்த பாவத்திற்காக உன்னிடமிருந்து எந்த அடியையும் தாங்கத் தயாரடா ” என்று சொல்வதைப் போன்ற தாயின் பார்வை அது ‘ என்று உணர்கிறான்..
அடுத்த நொடியே அழுகை உடைத்துக் கொண்டு வருகிறது
” நான் சப்பறம் இல்லை..நான் அருணா இல்லை..நான் கிருபன் இல்லை “
என்று அவள் கால்களில் விழுந்து ‘ பசிக்குது ‘ என்று அழுகிறான்..
எல்லா யுத்த சூழல்களிலும் தம்மைச் சூழந்திருக்கும் தீவினைகளுக்கு அப்பால் மானுடம் உயிர்த்திருக்கும் தருணங்கள் உண்டு.வரலாற்றின் குறுக்கு வெட்டுப் பார்வைக்கும், இனக்குழுங்களின் நியாய தர்மங்களுக்கும், இஸங்களின் கண்டுபிடிப்புகளுக்கும், எல்லைக் கோட்டின் இரு புறங்களிலும் குத்த வைத்திருக்கும் சரி தவறுகளுக்கும் அப்பால் இந்த உயிர்ப்புத் தருணங்களை கண்டறியத் தெரிந்தவனே கலைஞன்..அஷேராவை நல்ல நாவலாக உணரச் செய்வதும் அதுவேதான்..