பாவனைகள் வாழ்வின் அழுத்தமிளக்கிகளுள் ஒரு உத்தி. எதிரிலிருப்பவர் பாவனை செய்கிறார் என்று அறிந்தபோதும் ஆபத்தற்ற பாவனைகளைகளைப் பொருட்படுத்தாமல் விட்டகல்வதே நல்லது. அகதிகளின் வாழ்வில் பாவனைகள் அன்றாடத் தேவையாகிறது. அவர்கள் ஆபத்தானவர்களாக இருக்கக்கூடும் என்ற ஐயத்தின் நிழல் அவர்கள் மீது எப்போதும் விழுகிறது. பாரம் கூட்டும் நிழல்.
புது நிலத்தில் வேறு வேறு இயக்கங்களைச் சேர்ந்த இருவர் சந்தித்து வாழ்கின்றனர். அவர்களுக்கு இடையிலும் ஐயங்களும் அச்சங்களும் கடந்தகாலத்தின் செறிந்த இருளில் இருந்து நீண்டு வந்து கீறல் போட்டுச் செல்கின்றன. அருள்குமரன் முதல் பத்தியிலேயே அதிகாரிகளுக்குப் பதிலளிக்கையில் பாவனையைச் செய்கிறான். தன் வயதை முகத்தசைகளை இளக்கிக் குறைத்துக் காட்டுகிறான். அது தன் அப்பாவித்தனத்தைப் பறைசாற்றட்டும் என்பது நோக்கம்.
அஷேரா சயந்தனின் புது நாவல். அதன் உள்ளடக்கம் அவரைத் தனித்துக் காட்டுகிறது. ஆதிரையின் மாபெரும் கட்டமைப்பு போரின் அவலத்தை தீச்சுடும் பக்கங்களால் நிரப்பிய தமிழின் முதன்மை நாவல்களுள் ஒன்று. அஷேரா அத்தகைய பெரும் திட்டங்களை ஒதுக்கி வைக்கிறது. போருக்குப் பிந்தைய புலம்பெயர் வாழ்வை அதன் நல்ல, தீய அம்சங்களோடு முன்வைக்கிறது.
போர் முடிந்தும் அதன் குரல்கள் ஒலிப்பது நிற்பதில்லை. மழைவிடுத்தும் தூறல் விடாமல் நீள்கிறது.
அகப்போராட்டமும் தன் சிறுவத்தில் இருந்தே தொடர்வதை முதன்மைப் பாத்திரம் அணுகுகிறது. தாயின் தவிப்பையும் சோரத்தையும் பிரித்தறியத் திறமையற்ற அகவையிலேயே அகத்தில் வெட்டுக் காயம் விழுந்துவிடுகிறது அருள்குமரனுக்கு. அதற்குக் களிம்பிடவும் ஒருத்தி வருகிறாள். அதன்மேல் எலுமிச்சையைத் தேய்க்கவும் ஒருத்தி வருகிறாள். தூய வெள்ளை பக்கங்களில் ஏகப்பட்ட கிறுக்கல்கள். அதிலிருந்து ஒரு பொருள்மிக்க தோற்றத்தை வரைய வேண்டும்.
அன்பான வருடலுக்கும் ஆக்ரோஷமான கழுத்து நெரிப்புக்கும் இடையே எளிய உள்ளங்கள் அலைபாய்கின்றன.
தன் உயிருக்கு அஞ்சி குடியானவர் வீட்டில் ஏறிக் குதிக்கும் அற்புதம் என்பவர் உடைக்குள் மறைத்து வைத்த சிறு கட்டையை துப்பாக்கி என்று ஏமாற்றி அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுவதும் அவர்கள் முன்பே தாளாமல் குந்தி அழுது மன்னிப்பு கேட்பதும் அவர்கள் இல்லத்திலேயே தங்கி வாய்ப்பைப் பயன்படுத்தி உயிர்ப்பிழைப்பதுமான அத்தியாயம் சிறப்பு. நாவல் நெடுகவே அற்புதம் உயிர்ப் பிழைத்து தப்பும் காட்சிகள் நேர்த்தியாக மிகைத் தொனி இன்றி எழுதப்பட்டிருந்ததை வியக்க முடிந்தது.
அருணாவும் அருள்குமரனும் ஆழத்தீண்டலை ஒதுக்கி அகன்ற பிறகு அருணாவுக்கும் அரங்கனுக்கும் (கணவன் – மனைவி) மீண்டும் சேர்வு நிகழ்கிறது. அந்தப் புள்ளியில் அருள்குமரன் தடுமாறித் தவிக்கும் அத்தியாயம், குறிப்பாக அதன் துல்லியமான உரையாடலுக்காக நாவலின் சிறப்புகளுள் ஒன்றாக மனத்தில் நின்றது. அதை ஒத்த பல பகுதிகள் இருக்கின்றன.
ராணா, அமலி, அவந்தி, நிலாமதி, அமந்தா என நினைவில் நிற்கும் கதாபாத்திரங்கள் ஏகப்பட்டவை . கதாபாத்திரங்களை வெகு சில வரிகளில் நினைவில் பதியும் வண்ணம் விதந்து செல்கிறார் ஆசிரியர். போரின் வலி தலைமுறைகளின் விதைகளில் கூட புகுந்து பரவுகிறது. குருதியின் அழுகிய மணம் நினைவுகளில் ஓங்கி அடிக்கிறது. இதற்கிடையில் அன்பையும் ஆதரவையும் தேடிக் கண்டடைந்து வாழ்ந்தாக வேண்டும்.