ஆறாவடு, ஆதிரை, அஷேரா என்று தன் நாவல்களுக்கு ‘அ’ வரிசையில் சயந்தன் தலைப்பிடுவது தற்செயலா திட்டமிட்டதா என்று தெரியவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே அவருடைய நாவல்களைத் தொடர்ந்துகொண்டிருக்கிறேன். அவருடைய மூன்றாவது நாவல் “அஷேரா” 2021 ஆம் ஆண்டு ஆதிரை வெளியீடாகவும், 2024 ஆம் ஆண்டு இரண்டாவது பதிப்பாக தமிழினியிலும் வெளியாகியிருக்கிறது. சயந்தனின் முந்தைய நாவல்களுக்குக் கிடைத்த கவனமும் உரையாடலும் அஷேராவுக்கு கிடைத்ததா என்று தெரியவில்லை. (பெருந்தொற்றுக் காலகட்டம் ஒரு காரணமாக இருக்கக்கூடுமோ?)
அருள்குமரன், அற்புதம், அபர்ணா, அரங்கன், ஆராதானா, அவந்தி என்று அஷேராவில் கதாப்பாத்திரங்களின் பெயர்களும் ’அ’ வரிசையில் அமைந்திருக்கின்றன. புலம்பெயர்ந்த நாட்டில் தகவமையும் காலகட்டத்தில் மூளும் நினைவுகளின் வாதைகளும் குற்றவுணர்வும் அஷேராவில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அருள்குமரன் மற்றும் அற்புதராஜா ஆகிய இருவரும் ஈழப் போராட்டத்தின் இருவேறுபட்ட தலைமுறைகளின் சாட்சியங்களாக இருக்கிறார்கள். அற்புதராஜாவின் கதை இயக்கங்களுக்கு இடையே சகோதரச் சண்டை உச்சமடைந்திருந்த காலகட்டத்தையும் அருள்குமரனின் பின்கதை பிற இயக்கங்கள் அழிக்கப்பட்டு புலிகள் மட்டும் அரசுடன் சமருக்கு நின்றிருந்த காலகட்டத்தையும் பின்னணியாகக் கொண்டிருக்கின்றன.
ஆகப்பெரிய காயங்களுக்குப் பிறகும் காலத்துடனும் வாழ்க்கையுடனும் திரும்பவும் ஒருங்கடைவதைத் (reconciliation) தவிர மனிதர்களுக்கு வேறு நியதிகளில்லை. ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமாகவும் இல்லை. நாம் நினைவின் கைதிகள், தப்பவே முடிவதில்லை. ஊழாகப் பின்தொடர்ந்த கோழைத்தனத்தால் மரணத்தாலும் நிராகரிக்கப்படும் அற்புதராஜாவின் வாழ்க்கை அவலமானது. ஆனால் ஆழத்தில் அவரொரு குழந்தை. அதை அருள்குமரன் சரியாகவேப் புரிந்துகொள்கிறான். அதனாலேயே அவனால் உடனிருக்க முடிகிறது, அவரைச் சகிக்க முடிகிறது, நோய்த்தருணத்தில் ஆறுதலைக் கொடுக்கமுடிகிறது.
விவிலியத்தில் சொல்லப்படுகிற அஷேரா என்ற கானானிய தாய்த்தெய்வத்தின் படிமத்தைக் கொண்டு தாய்மையின் வேர்களை விசாரிப்பதையே அஷேரா நாவலைக் குறித்த என்னுடைய பிரதான வாசிப்பாகக் கொள்கிறேன். தாய் என்பவள் ஒரு பெண்ணுங்கூட, ஆனால் தாய்ப்படிமமோ புனிதம் ஏற்றப்பட்டது. புனிதங்களின் வேஷத்தைப் போட்டுக்கொள்ளாமல் ரத்தமும் சதையுமாக அருள்குமரனின் தாய் இருக்கிறாள். சரவணபவனுக்கும் அவளுக்குமான உறவைப் புரிந்தும் புரியாத பருவத்தில் காணும் அருள்குமரன் தாய்மையைக் குறித்த மரபான மதிப்பீடுகளுக்கும் தன்னுடைய யதார்த்தத்திற்குமிடையேயான முரணில் சிக்கிக்கொள்கிறான்.
இந்தத் தாய்ப்படிமம் நாவலுக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அகதியாக வந்த நஜிபுல்லாவின் பின்கதையைக் ஊடுபாவாகக் கொண்டு இன்னொரு விதமாகச் விவரிக்கப்படுகிறது. அருள்குமரனும் நஜிபுல்லாவும் ஒன்றிணையும் புள்ளி குற்றவுணர்வுதான். நினைவழிப்பு மட்டுமே குற்றவுணர்விலிருந்தான விடுதலையைச் சாத்தியப்படுத்த முடியும். நினைவழிப்பு என்பது மரணம். நஜிபுல்லா அதைத்தான் தனக்கு நிகழ்த்திக்கொள்கிறான்.
“குற்றமற்ற உன்ர கை” என்று அற்புதம் அருள்குமரனிடம் சொல்கிறார். அந்த ஒற்றை வாக்கியம் அவனைக் குலைத்துப்போடப் போதுமானதாக இருக்கிறது. அருள்குமரனின் கை மெய்யாகவே குற்றமற்றதா? ஊழின் கைதான் குற்றமுடையது என்று சொல்லித் தப்பிவிடமுடியாத நிலைதான் அவனுக்கு. கொழும்பில் தெறித்த குழந்தைகளின் ரத்தத்தில் அவனுடைய பங்கும் இருக்கிறது. வாழ்க்கையைத் துரத்தி அழிக்க அந்தக் கொடுங்கனவு ஒன்று போதாதா? அதனால்தான் நஜிபுல்லா நடந்த தடத்திலேயே அருள்குமரனும் நடக்க வேண்டியிருக்கிறது
அருள்குமரன், அற்புதராஜா மற்றும் அபர்ணா என்ற மூன்று பிரதானப் பாத்திரங்களைக் கொண்டிருந்தாலும் சப்பறம், டம்பிங் கண்ணன், றொக்கெட், அவந்தி, நிலாமதி என்று ஆழமான குணவார்ப்புகள் கொண்டு சிறிய பாத்திரங்களும் குறிப்படத்தக்கனவாக இருக்கின்றன. குறிப்பாக றொக்கெட் மற்றும் அவந்தி ஆகிய இரு பாத்திரங்கள் நுட்பமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. போரைப் பற்றி எழுதும்போது புனைவு வரலாற்று சாட்சியமாகவும் மாறுகிறது. அஷேராவிலும் அந்த சாட்சியம் இருக்கிறது.
காலமும் நிகழ்வுகளும் குலைத்துப் போடப்பட்டு நான்-லீனியர் முறையில் அஷேரா சொல்லப்பட்டிருக்குக்கிறது. பிரதானமாக அருள்குமரன் மற்றும் அற்புதத்தின் வாழ்க்கையைச் சொல்வதாக இருந்தாலும் துணைக்கதாப்பாத்திரங்களும் வலுவாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதால் வெவ்வேறு வாழ்க்கைகளின் நினைவுத் தொகுப்பு என்ற தன்மையும் நாவலுக்குள்ளிருக்கிறது. அருள்குமரனின் தாய்க்கு நேர்வது, அவனுக்கு கொழும்பில் நேர்வது, நஜிபுல்லாவின் வாழ்க்கை என்ற முக்கோணத்தை இந்த நாவலின் ஆதாரமான மையமாகக் கொள்ளலாம். நாவலின் தொனி துயரார்ந்த மனச்சோர்வைக் (melancholy) கொண்டதாக இருக்கிறது.
தன்னுடைய நினைவுகளுக்குள் நிகழும் போரிலிருந்து மீண்டு மனச்சமாதானத்தையும் அமைதியையும் அருள்குமரன் அடையவேண்டும் என்றே நான் விரும்பினேன். ஆனால் இந்தக் கணத்தில், காட்சிகள் குழம்பிய ஒரு புள்ளியிலிருந்து பார்க்கும்போது எகெரி ஏரிக்கு மேலிருக்கும் குன்றின் கைப்பிடிச் சுவரில் அருள்குமரனின் குளிராடை மட்டும் தனித்திருப்பது போல் தெரிகிறது.