சயந்தனின் அஷேரா நாவலை வாசித்தேன். ஈழப்போருக்குப் பிந்தைய போராளிகளின் மனநிலையை ஒட்டிய நாவலாக அமைந்திருக்கிறது. வளரிளம் பருவத்திலே போராளி குழுக்களில் பங்கேற்பவர்கள் வாழ்வின் ஒரு பகுதியைப் போரின் உக்கிரத்தையும் உயிரச்சத்துடனே எதிர்கொள்கின்றனர். போர் விழுமியங்களான தியாகம், இலட்சியம் ஆகியவையை அச்சங்கொள்ளச் செய்கின்ற தண்டனைகளின் வாயிலாகவும் இயக்க நடவடிக்கைகளாக முன்வைக்கப்படுகிறது. இந்தச் சூழலில், இயல்பாக மனத்தில் எழுகின்ற காதல், சாவச்சம் ஆகியவை தறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதிலிருந்து தப்பித்து வெளியேறுகிற முன்னாள் போராளிகள் இருவரை மையமிட்டே நாவல் அமைகிறது.
சுவிர்சுலாந்தின் மொர்கார்தென் அகதிகள் முகாமிலிருந்து நாவல் தொடங்குகிறது. மெர்கார்தென் குன்றின் அருகில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் சுவிஸைக் கைபற்ற ஆஸ்திரிய நாட்டு இளவரசன் தலைமையில் படையெடுப்பு அங்கு நடைபெறுகிறது. அதனைச் சுவிஸ் நாட்டு தளபதி முறியடிக்கிறான். அந்த உக்கிரமான போரிலிருந்து தப்ப ஆஸ்திரிய நாட்டு வீரர்கள் அங்கிருக்கின்ற ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.
அந்த முகாமில் இருக்கும் அருள்குமரனின் விசாரணை அறிக்கையிலிருந்தும் அவனது குறிப்பேட்டிலிருந்துமாக நாவல் விரிகிறது. வெளிநாடொன்றில் அருள்குமரனின் அப்பா வேலை செய்கிறார். அம்மாவுக்கும் எதிர்வீட்டில் வசிக்கும் சரவணபவனுக்கும் உறவு இருப்பதை ஏழு வயதிலே அறிகிறான். அம்மாவுக்கும் சரவணபவனுக்கும் சண்டை ஏற்படுகிறது. அவளுடைய வீட்டுக்கி வந்துனறைக்கதவைச் சார்த்திச் சேலையொன்றை எடுத்துத் தூக்கிட முயல்கிறான் பவன். தடுக்கச் செல்லும் போது கடைசியாக ஒருமுறை எனக் கோரிக்கை வைக்கிறான். வெளியே நில்லுங்கோ மாமனுக்கு மருந்து கொடுத்துவருகிறேன் என அம்மா அவனுக்காக இணங்கி போகிறாள். காலமெல்லாம் அம்மாவின் அந்த வார்த்தைகள் அவனை அருவிக்கொண்டிருக்கிம்றன பின்னொரு நாள், யார் என்ன சொன்னாலும் அம்மாவை வசைபாட கூடாது என மகனிடம் சொல்லிவிட்டு அரளிவிதையை அரைத்துச் சாப்பிடுகிறாள். தேவாலயத்தின் மீது போடப்படும் குண்டில் உடல் சிதறி இறந்து போகிறாள். அம்மாவின் அம்மாவான பெத்தம்மாவும் தூரத்து உறவான அமலி அக்காவுடன் வளர்கிறான். வளரிளம் பருவத்துக் காதல் வகுப்புத் தோழியான ஆராதனாவின் மேல் துளிர்க்கிறது. அவளைத் தனக்கான ஆறுதலாகவும் மீட்பாகவும் காண்கின்றான். வீட்டில் இருக்கும் அமலி அக்காவின் மீதான பாலியல் இச்சை தாளாமல், அவளுடன் உறவு கொள்கிறான். குற்றவுணர்வும் பயமும் மேலிட வி.புலிகள் இயக்கத்தில் சேர்கிறான். அந்த இயக்கத்தின் ரொக்கட் என அழைக்கப்படும் நீதியரசன் அறிமுகமாகிறான். இயக்கப் பதிற்சிகளில் கடுமையாக நடந்துகொள்ளும் ரொக்கட், நண்பர்களுக்கு நோவு,பசி போதான தருணங்களில் சாலப்பரிந்து ஊட்டும் அன்னையாகிறான். அங்கிருந்து தப்பியோடி, தமிழ்நாட்டுக்குச் செல்ல மறைந்திருக்கும் போது பிடிபடுகிறான். பின்னர், புலிகளின் ரகசியச் செயல்பாட்டாளனாக மாறி குண்டு வெடிப்பு ஒன்றில் மறைமுகமாக ஈடுபடுகிறான். அந்தக் குண்டுவெடிப்பில் 38 குழந்தைகள் இறந்து போகின்றன. மற்றோரு குற்றவுணர்வுக்கான முடிச்சு விழுகிறது. இப்படியாகக் குற்றவுணர்ச்சிகளும் அன்பின் தகிப்பும் உள்ளவனாக சுவிற்சலாந்துக்கு அகதியாக வருகிறான்.
அங்கு முன்னரே அகதியாகத் தஞ்சமடைந்திருக்கும் அற்புதத்தைக் காண்கிறான். தமிழீழத்துக்கான ஆயுதம் தாங்கிய போரென்பது பல இயக்கங்களும் தனிநபர்களும் நடத்தியதே. அப்படியாக, புளோட் இயக்கத்தில் பங்கெடுத்துப் பின்னர் டெலோ இயக்கத்தில் இணைந்து விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்படுகிறார். தமிழீழம் அமைந்தால் வரதட்சணை இல்லாமல் அக்காமார்களைத் திருமணம் செய்து கொடுக்கலாம் எனத் தொடங்குகிற இயக்க ஈடுபாடு பின்னாளில் வெறும் உயிர்த்தலுக்கான அலைவுறுதலாக மாறிப் போகிறது. அடைக்கலம் கொடுத்தவர்களைப் பலிகொடுப்பதும் பிறரை மருட்டியாவது உயிரை இருத்திக் கொள்வதுமான அலைவில் மீண்டு சுவிஸில் அகதியாகத் தஞ்சமடைகிறார். அங்கே, வயதான யூதத்தம்பதிகளின் வீட்டில் வாடகைக்கு இருக்கிறார். பாலியல் இச்சை மேலிடும் போது அரைகுறை ஆடைகள் அணிந்த பெண்களின் காட்சிகளைப் பார்த்து ஆறுதலடைகிறார். உயிர்வாழ்தலுக்கான நெடிய போராட்டத்தில் காமம் முற்றிலும் மரத்துப் போயிருக்கிறது. பாலியல் உணர்வு மேலிடும் போது செம்மறியாட்டுடன் உறவுகொள்ள முயன்ற குற்றத்துக்குக் கைது செய்யப்படுகிறார். அருள்குமரன் அவர் மீது அன்பு செலுத்துகிறான்.
கொழும்பில் பிறந்து அஷேரா என்ற புனைபெயரில் சுவிஸில் அகதியாக இருக்கிறாள் அபர்ணா. எந்நேரமும் சந்தேகத்துடன் கணவன் அலைகிறான். அவனை விட்டுவிலக முடியாத சகிப்புத்தன்மையுடன் வாழப்பழகிவிட்டாள். அருள்குமரனுடனான நட்பு ஏற்படுகிறது. கடந்து போயிருக்கும் இளவயது காதலின் பரவசமும் அன்பையும் இருவரும் உணர்கின்றனர். அருளிப் மனத்தில் எழுந்திருக்கும் அம்மாவின் காம இச்சையைப் பற்றிய பிம்பமும் ஆண்களைப் பற்றிய அஷேராவின் பொதுப்பார்வையும் உரசிக் கொள்கின்றன. தங்களுக்குள் பொதிந்து போயிருக்கும் குற்றவுணர்வு, காயங்கள் கூர்நகங்களாகி ஒருவரையொருவர் பிறாண்டி கொள்கின்றனர். அந்தக் குருதித்தடங்களைப் பார்த்து அன்பும் செலுத்து கற்றுக் கொள்கின்றனர்.
தலிபான் இயக்கத்தில் கட்டாயமாகச் சேர்க்கப்படுகின்ற நஜிபுல்லா கள்ள உறவில் ஈடுபட்ட பெண்ணைச் சுட்டுக் கொல்கிறான். அந்தக் குற்றவுணர்வினால் முகாமின் மேலிருக்கும் குன்றிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்கிறான். புலிகள் இயக்கத்தில் இணைந்து காயமுறுகின்ற சிங்கள பெண்ணான அவந்திகா, பிந்தைய நாட்களில் தன்னைச் சிங்களவளாக அறிவித்துக் கொண்டு பாதுகாப்புத் தேடிக் கொள்கிறாள். ஆட்டோகாரர் ஒருவருடன் ஒடிச்சென்று புதியவாழ்வையும் ஏற்படுத்திக் கொள்கிறாள்.
போராளி குழுவிலிருந்து வெளியேறுகின்றவர்கள், மனிதர்களை நெருங்கமுடியாத அளவு நினைவுகளில் இருக்கும் கீழ்மைகளையும் குற்றவுணர்வையும் எண்ணிப் பெருக்கிக் கொண்டிருக்கின்றனர். இயக்கத்திலிருந்து தப்பும் அற்புதத்துக்கு அடைக்கலம் தரும் பண்ணையாரையே பலி வாங்கிவிட்டே தப்ப இயல்கிறது. இயக்கம் அவனைக் கற்பழிப்புக் குற்றவாளி எனப் பழி சுமத்தித் தேடுகிறது. எதிரி போராளி கும்பலின் முன் கைகூப்பி உயிர் பிழைக்கிறான். உயிர்த்திருப்பதற்கான போராட்டமாக அலைகழிகின்ற வாழ்வில் இயல்பான உணர்வுகள் அனைத்தும் மட்டுருத்தப்படுகின்றன. சுவிஸில் பாலியல் தொழிலாளியைப் பார்க்கும் போது கற்பழிப்புக் குற்றவாளி எனும் நினைவால் அலைகழிக்கப்படுகிறான். அவனுடைய வாழ்வில் தூய அன்பு ஒன்றை அருள்குமரனிடம் உணர்கிறான்.
அருள்குமரன் தன் வாழ்வில் நிறைந்திருக்கும் பெண்கள் குறித்த நினைவுகளை மீட்டியப்படியே இருக்கிறான் . பிறிதொரு இளைஞனுடன் உறவு கொண்டிருந்தாள் என்பதற்காக அம்மா மீதான கலங்கலான சித்திரத்தைக் கொண்டிருக்கிறான். நஜிபுல்லா கொல்கின்ற பெண்ணின் வாக்குமூலமே பெண்களின் இயல்பான பாலியல் தேவை குறித்து தெளிவிக்கின்றது. அந்தக் காமத்தையே அமலி அக்காவிடமும் உணர்கிறான். வேறொருவனை மனத்தில் நினைத்துக் கொண்டு, அருள்குமரனிடம் தன் எளிய பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்கிறாள். ஆராதனாவிடம் காதலையும் காமத்தையும் உணர்கிறான். அவன் நினைவுகளில் காமத்தின் மீது படிந்திருக்கும் கசப்பைப் போக்கும் அனுபவமாகவும் உணர்கிறான். கணவனால் துன்புறுத்தப்பட்டும் அவனுடனான வாழ்வைத் தொடரும் அபர்ணாவிடமும் அன்பை உணர்கிறான். அபர்ணாவிடமும் ஆராதானாவிடமும் ஒன்றையொன்று நிகர் செய்யும் அன்பு என்னும் அனுபவத்தை உணர்கிறான். குற்றவுணர்வும் கீழ்மைகளும் அமிழ்த்த தற்கொலையே தனக்கான மீட்பாக உணர்கிறான்.
தனது அக்காளின் திருமணத்துக்காக இயக்கத்தில் அற்புதம் இணைகிறான். குற்றவுணர்வையும் பயத்தையும் மறைத்துக் கொள்ள இயக்கத்தில் அருள்குமரன் இணைகிறான். இயக்கங்களின் இலட்சியங்களுக்கான கருவிகளாகிறார்கள். இயக்கப்போராளிகளிடம் தியாகம், வெறி போன்ற விழுமியங்கள் போன்றவற்றையே கோருகின்றன. பசி, காமம், காதல் போன்ற அத்தனை உணர்வுகளும் மழுங்கடிக்கப்படுகின்றன. இயக்க ஒழுங்குமுறைக்குள் பொருந்த மறுக்கும் உணர்வுகள் துண்டிக்கும் தண்டனைகள் தரப்படுகின்றன
அற்புதம் தெலோ இயக்கத்தில் இணைந்த மறுநாளே இயக்கத் தலைமைக்குத் துரோகம் புரிந்தான் என இளைஞனொருவனை அடித்து முதுகு தோலை உரித்து உப்புக்கண்டம் தடவி அந்தரத்தில் கட்டித் தொடங்கவிடுகின்றனர். இயக்கத்தில் இணைந்த புதியவர்ளை உயிரற்ற உடலைக் கருக்கு மட்டையாள் விளாறச் செய்கிறார்கள். அந்தத் தண்டனையை அளித்தவனே, இயக்கப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் தப்பிக்க முயல்கிறான். இயக்கப் போராளிகளிடம் உயிரச்சத்தை ஏற்படுத்தும் தண்டனைகளால் தலைமையிடம் விசுவாசத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்த நம்பிக்கைகளின் பின்னணியில் அதிகாரப் போட்டிகள் நடைபெறுகின்றன.
தமிழீழத்துக்கான ஆயுதம் வழியிலான போராட்டத்தில் பங்கேற்ற அமைப்புகள், தனிநபர்களின் பெயர்கள் நாவலின் தொடக்கத்திலே இருக்கின்றன. அந்த அமைப்புகளுக்குள் நிலவி வரும் போட்டிகளும் தலைதூக்குகின்ற அமைப்புகளை முடக்கும் செயற்பாடுகளுக்காக எதிரிகளுடன் தற்காலிகச் சமரசம் செய்து கொண்ட அரசியல் வரலாற்றையும் ஊடாகப் பதிவு செய்கின்றார். இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கின்ற அகதிகளுக்கான வாழ்விடங்களின் மோசமான சூழலையும் காண முடிகிறது. பல்லாண்டுகளாக அகதிகளுக்கான மறுவாழ்வு மையங்களாகச் செயல்படுகின்ற முகாம்கள் அடிப்படையில் எவ்வித மாறுபாடுகளுமின்றி அவர்களை அகதிகளாக மட்டுமே வாழ அனுமதிக்கிறது.
நாவலின் இறுதியில் ஜெருசலேத்தில் அஷேரா எனும் பெண் தெய்வச் சிலைகளை யாஹ்வே எனும் மன்னன் சிதைக்கச் செய்கிறான். அந்தத் தெய்வத்தின் மீதான நம்பிக்கையையும் சேர்த்து உடைக்க முயல்கிறான். மக்கள் உடைந்து போயிருக்கும் விக்கிரகங்களுக்கு முன்னால் நின்று மன்னிப்புக் கோரி தம் குழந்தைகளுக்குத் தெய்வத்திடம் பாலூட்டச் செய்கின்றனர். அவர்களில் ஒருபகுதியாகத் தெய்வமாகும் தருணமது. அவ்வாறே தன் உடலின் ஒரு பகுதியாகவே மாறியிருக்கும் குற்றவுணர்வும் காமத்தின் முடிவில்லா ஊடாட்டத்திலிருந்தும் விலகி நிற்க தற்கொலை புரிந்து கொள்கிறான் அருள்குமரன்.
– அரவின்குமார்