பூரணம்

துங்கு அகழிக்குள்ளிருந்து தலையை உயர்த்திப் பார்த்தேன் என்றாள். காயக்காரர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட கப்பல் அவளையொரு தனித் தீவில் கைவிட்டுவிட்டு தொலைவாகப் போய்க்கொண்டிருந்தது. முதுகிலேயோ தொடையிலேயோ எனக்கும் ஒரு வெடி பட்டிருந்தால் என்னையும் ஏற்றிச் சென்றிருப்பார்கள் என்று நினைத்தேன் என்றாள். ‘சின்னக்காயம் எண்டால் ஏத்த மாட்டார்கள்..’ ஒருத்திக்கு வயிறு பிளந்திருந்தது என்றாள். எட்டிப்பார்த்தால் ஆழ் கிணறு மாதிரி.. அதிஷ்டக்காரி, அழுது குழறாமலேயே ‘காயக்காரக் கப்பலில்’ இடம் பிடித்துவிட்டாள். இனி குண்டுச் சத்தங்களைக் கேட்க மாட்டாளென்று பொறாமையாய் இருந்தது என்றாள்.

வானத்தைப்போன்ற பிரமாண்டமான தகரக்கூரையில் இடி உரசுமாற்போல ஒரு ஷெல் கூவியபடி விழுந்து வெடித்தது என்றாள். ‘விஷ்க்.. விஷ்க்..’ சன்னங்கள் காற்றை ஓட்டையிட்டன. தலையை உள்ளே இழுத்துப் பதுங்கினேன் என்றாள். வெளியில் அவளுடைய தலைக்கறுப்பை கண்டால் கதிர் அண்ணன் கண்டபாட்டுக்குத் திட்டுவார். ‘உனக்குச் சாக விருப்பமெண்டால் சொல்லு, நாளைக்கே நான் ஏற்பாடு செய்யிறன்’

கதிர் அண்ணன் இயக்கத்தில் இருந்தார் என்றாள். பக்கத்திலிருந்த தரப்பாள் கொட்டிலில், அவரும் ஓர் ஊனமுற்ற பொறுப்பாளரும் தங்கியிருந்தார்கள். அவர்களுடைய ‘வோக்கி ரோக்கி’ இரைகிற சத்தம் கேட்டது. அகழிக்குள் சாக்கை விரித்துவிட்டு மல்லாந்து படுத்துக்கொண்டேன் என்றாள். எதிரில் அண்ணா உட்கார்ந்திருந்தார். அவருடைய இரண்டு பிள்ளைகளும் தொடையில் தலை வைத்து நித்திரையாகியிருந்தார்கள். அவர்களுடைய நெற்றியை தடவிக்கொண்டிருந்தார். முகம் தடித்து வீங்கிப்போயிருந்தது. அவர் ஒழுங்கான ஒரு நித்திரை கொண்டு கண்டதேயில்லை என்றாள்.

பதுங்கு அகழிக்குள் இருட்டு நுழைந்தது. கப்பல் இப்பொழுது ஒரு கறுப்புப் புள்ளியாயிருக்கக்கூடும். அதையே நினைத்துக்கொண்டிருந்தேன் என்றாள். ஓர் ஆட்டம் அசைவில்லாமல் அது போய்க்கொண்டிருந்தது. சின்னச் சின்ன நீர் மேடுகளாகத் தளும்பியபடி கடல் அமைதியாயிருந்தது. குழந்தைகள் வீரிடாமல் நித்திரை கொள்கிறார்கள். காயக்காரர்கள் முனகவில்லை. காற்று முகத்தை வருடுகிறது.

படீரென்று பக்கத்தில் வெடித்தது. பதுங்கு அகழியின் சுவர் உதிர்ந்து கொட்டுண்டுவதைப்போல உணர்ந்தேன் என்றாள். இருட்டுக்குள் விழிகளால் துளாவினாள். அண்ணா இன்னமும் உட்கார்ந்திருக்கிறார் போல. பதற்றமான பேச்சுக் குரல்கள் வெளியே நடந்துபோயின. ‘ஆமி மூவ் பண்ணினால் கதிர் அண்ணன் சொல்லுவார்’ என்ற நம்பிக்கை இருந்தது என்றாள். இரு தரப்பும் துவக்குச் சன்னங்களைப் பரிமாறிக்கொண்டார்கள். ஷெல்கள் இங்கிருந்து கூவிச்சென்று தொலைவில் வெடித்தன. காதுகளைப் பொத்திக்கொண்டேன். கடல் மட்டும் இரைந்தது என்றாள். அன்றிலிருந்து ஒன்பதாவது மாதத்தில் பூவரசன் பிறந்தான் என்று மேலும் கூறினாள்.

000

டுப்பிற்குள் அணைந்து நின்ற பூவரசனின் கழுத்தையும் முதுகையும் வைகறையின் விரல்கள் பரிவுடன் வருடின. அவளுடைய குரலில் தென்பட்ட தெளிவும் நிதானமும் திருப்தியாயிருந்தது. ஆறு வருடங்களுக்கு முன்னர், மெனிக்பாம் முகாமிலிருந்து முதற்தடவையாக மகப்பேறுக் ‘க்ளினிக்குக்கு’ சென்றபோது அங்கிருந்த தாதியின் அதட்டலான கேள்விகளுக்கு குனிந்த தலை நிமிராமல் அழுதுகொண்டிருந்ததை நினைத்தாள்.

“பதினேழு வயசுப் பெட்டைக்கு பிள்ளையைத் தந்தவன் யாரெண்டு தெரியேல்லையெண்டால் யாராவது நம்புவினமா? வீட்டுக்குத் தூரமில்லாமல்போய் எத்தினை நாளெண்டாவது கணக்கு வைச்சிருக்கிறியா”

வைகறை ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் கேவினாள். “அழாதை. இந்தா.. தண்ணியைக் குடி” தண்ணீர்ப் போத்தலைக் கை நீட்டி வாங்கி வாய் வைத்துக் குடித்தாள். சற்று முன்னர் “குழந்தையின்ர அப்பா வரேல்லையா” என்று கேட்டபோது இருந்ததைப்போல தாதியின் குரல் தணித்திருந்தது. அதற்கு வைகறை பதில் சொல்லவில்லை. தாதி “அப்பா இறந்திட்டாரா” என்று கேட்டாள்.

“இல்லை மிஸ் அப்பா யாரெண்டு தெரியாது”

வைகறைக்கு பதின்மூன்றோ பதின்நான்கு வயது நடந்துகொண்டிருந்தபோது பக்கத்துக் காணியிலிருந்த சிவந்தி அக்காவும் இதே பதிலைத்தான் சொன்னாள். அதுதான் ஞாபகத்தில் வந்திருக்கவேண்டும். சிவந்தி அக்கா திருமணம் செய்துகொள்ளாமலேயே ‘பிள்ளைத்தாச்சியாய்’ இருக்கிறாள் என்ற சேதியும் தகப்பன் யாரென்று தெரியாதாம் என்ற சேதியும் ஊர் முழுக்கப் பரவியிருந்தது. அவளை யாரும் நம்பவில்லை. ‘யாரையோ காப்பாற்றத்தான் இப்பிடிப் பொய் சொல்லுறாள்” என்று பேசித்திரிந்தார்கள். சிவந்தி அக்கா வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள்.

ஒரு நாள் ‘நல்ல தண்ணி’ அள்ளப் போனபோது அவளுடைய அப்பா ஒரு தும்புக் கட்டையால் பாம்பை அடிப்பதைப்போல அவளை அடித்துக்கொண்டிருந்ததை வைகறை கண்டாள். பூசாரிக்கு உரு வந்ததைப்போல அவருடைய முகம் விகாரமாயிருந்தது. “செத்துப்போ.. உயிரோடை இருக்காதை. செத்துப்போ..”

“அடிக்காதைங்கோ..” சிவந்தி அக்கா வயிற்றைப்பிடித்தபடி புழுதியில் பிரண்டு குழறினாள். தந்தை களைத்துப்போனவர்போல தொப் என்று உட்கார்ந்தார். “ஆரெண்டாவது சொல்லனடி. காலில விழுந்தெண்டாலும் கூட்டிக்கொண்டு வாறன்”

“எனக்குத் தெரியாது…” சிவந்தி அக்கா கத்தினாள்.

“எக்கேடு கெட்டும் நாசமாப் போ” என்று தும்புக்கட்டையைச் சுழட்டி எறிந்துவிட்டு அவர் படலையைத் திறந்துகொண்டு வெளியேறினார்.

வைகறை ஓடிச்சென்று சிவந்தி அக்காவைத் தூக்கி இருத்தினாள். “தண்ணி கொண்டு வரட்டா..” வாளியில் நீர்  இறைத்துக்கொண்டுவந்து கைகளில் கோலி வாயில் பருக்கினாள். சிவந்தி அக்கா அனுங்குகிற குரலில் “சத்தியமா எனக்கு இருட்டை மட்டும்தானடி தெரியும்” என்று முணுமுணுத்தாள்.

வைகறை இருட்டைச் சபித்தாள். இருளை, நிலவை, கடலை, கப்பலை, வெக்கையை, வியர்வை, ஒரு புளித்த நெடியை அனைத்தையும் சபித்தாள். கண்ணீர் மறுபடியும் வழிந்தது.

“அழாதை. தனியவா வந்தனி.. ” என்று தாதி கேட்டாள்.

“ம்..”

க்ளினிக்குக்கு வருவதற்கு யாருமிருக்கவில்லை. அவளுக்கு ஏழெட்டு நாட்களாகவே தலைச் சுற்று இருந்தது. மார்புக் காம்புகளில் ‘விண்’ என்ற நோவு. முகாமில் பக்கத்துக் கொட்டிலுக்குள் இருந்த ரமணி அக்காவிடம் கோடாலித் தைலம் வாங்கி நெற்றியிலும் மார்பிலும் பூசிக்கொண்டாள். புதுப்பழக்கமாக இரவுகளில் அடிக்கடி சலத்திற்குத் தூண்டியது. ஒரு பூனையைப்போல வெளியேறி வாசலின் ஓரத்தில் கழித்துவிட்டு மருமக்களோடு வந்து படுத்துக்கொண்டாள். ஒரு நாள் தொண்டைக்குள் புளிச்சலாக புரைத்துக்கொண்டு வந்து சத்தியாகிவிட்டது. வாசலிலேயே ஓங்காளித்தாள். ரமணி அக்கா ஓடிவந்து நெற்றியிலும் பிடரியிலும் கை வைத்துத் தலையைத் தாழ்த்தி “மிச்சத்தையும் எடு” என்றாள். அவள் “சாப்பாடு ஏதோ ஒத்துக்கொள்ளவில்லையாக்கும்” என்றபோதுதான் இரண்டு மாதங்களாக துடக்குத் தேதிகள் குழறுபடியாயிருப்பது உறைத்தது. நிலைகுலைந்து போனாள். அண்ணாவுக்கு மூச்சும் விடவில்லை.

முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறியபோது ‘ஆமிக்காரர்கள்’ அவளையும் அண்ணாவையும் பிள்ளைகளையும் ஒரே குடும்பமென்றே பதிவு செய்து கூடாரத்தை ஒதுக்கியிருந்தார்கள். மருமக்கட்பிள்ளைகளுக்கு நான்கும் மூன்றுமான வயதுகள். நிலவன் என்றும் இறைவன் என்றும் பெயர். வைகறையோடு நல்ல வாரப்பாடாயிருந்தார்கள். குளிக்க வார்க்கவும், கழுவவும், சோறு தீத்தவும் அவள்தான் வேண்டும் என்ற பிடிவாதத்திற்கு அண்ணனிடம் வாங்கிக்கட்டுவதும் உண்டு.

வைகறையின் அம்மாவை, அவளுக்கு நினைவு தெரிவதற்கு முன்னரேயே நோய் காவு கொண்டிருந்தது. அப்பாவிடம்தான் வளர்ந்தாள். அண்ணனை வேண்டுமென்றால் தன்பாட்டில் வளர்ந்தான் என்று சொல்லலாம். இவளைத் தாயில்லாக் குறை தெரியாமல் பார்த்துப் பார்த்து வளர்த்தார். பதின்மூன்று வயதில் பருவமெய்தி வீட்டிலிருந்த காலத்தில் அண்ணன், அவனுடைய இருபத்தியொராவது வயதில் திருமணம் செய்துகொண்டான். அவனும் அண்ணியும் ஊரைவிட்டு ஓடிப்போய் மூன்று மாதத்தின் பின்னரே திரும்பி வந்தார்கள். அண்ணி கர்ப்பமாயிருந்தாள். அக்காலத்திற்தான் நிர்மலா மாமி வீட்டிற்கு வந்தாள். அவளை அதற்கு முன்னரும் வழிகளில் கண்டிருந்தாலும் பழக்கமிருக்கவில்லை. நிர்மலா மாமி இவளைக் கண்டதும் மலர்ந்து சிரிப்பாள். சில நேரங்களில் சுண்டியதைப்போல முகம் சுருங்க பதைப்போடு ஒதுங்கி விலகுவாள். அவளைப் பார்க்கும்போது இன்னதெனத் தெரியாத ஓர் இஷ்டமும் நெருக்கமும் அதுபாட்டுக்கு உருவாகும். நல்ல செந்தளித்த முகம். அதில் பெரிய வட்டக் குங்குமப்பொட்டு.

நிர்மலா மாமி காலையில் பத்துமணிக்கெல்லாம் வந்துவிடுவாள். வந்ததும் பச்சை முட்டையைக் கடும்கோப்பியில் கலக்கியடித்துச் சுடசுடக் கொடுத்தால்  வைகறை அதை ‘அடிமுட்டக்’ குடிப்பாள். மதியத்தில் நல்லெண்ணையில் வதக்கிய கத்தரிக்காய் பொரியலும் கீரையும் பிசைந்த குழல் புட்டு. தன் கையாலேயே ஊட்டுவாள். வெயில் சாய பழங்களைக் கீலம் கீலமாக நறுக்கி சில்வர் தட்டில் அடுக்கி வைப்பாள்.. அவள்தான் ரமணிச்சந்திரனையும் லக்சுமியையும் வாசிக்கச் சொல்லிக் கொடுத்தாள். அவள்தாள் நப்கின்களைப் பயன்படுத்துவதை விளங்கப்படுத்தினாள்.

நிர்மலா மாமி இருக்கும்போது அப்பா ஒருநாளும் வீட்டிற்கு வருவதில்லை. அவர்கள் இருவரையும் ஒன்றாகக் கண்டதேயில்லை. ஏழோ எட்டு மாதத்திற்குப் பிறகு திடீரென்று ஒரு நாள் அப்பாவும் நிர்மலா மாமியும் மன்னாருக்குச் சென்றுவிட்டார்கள் என்று அறியநேர்ந்தபோது ‘அப்பா என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாம்.’ என்று வைகறை இரவு முழுவதும் அழுது புலம்பினாள். ‘அவளையும் கூட்டிக்கொண்டு வாங்க என்று நிர்மலா மாமியாவது அப்பாவிற்குச் சொல்லியிருக்கலாம்..’ என்று கோபப்பட்டாள்.

வைகறையை அண்ணன் தன்னுடன் அழைத்துச் சென்றான். அவன் “எங்கடை அப்பா செத்துப்போனார்” என்று சொன்னான்.  போன நாளிலிருந்தே ‘பிள்ளைப் பெத்திருந்த’ அண்ணிக்கு உதவி ஒத்தாசைக்கு ஓர் ஆள் தேவைப்பட்டிருந்ததைப்போல வைகறை முழு நாளும் மெனக்கெட்டாள். அண்ணிக்காரி ஒரு பொல்லாதவள்.. பகலெல்லாம் அவளும் அண்ணனும் ‘நாயே பேயே’ என்று சண்டை பிடித்தார்கள். தர்க்கம் பெருகப் பெருக அண்ணன் “கத்தாதை..” என்று உறுக்கியவாறே கிட்ட நெருங்குவான். அவளுடைய கன்னத்தில் ‘பளார்’ என்றொரு அறை விழும்வரைக்கும் பொறுத்துக்கொண்டிருந்தவள் போல பத்ரகாளியாகிவிடுவாள். அதற்குப் பிறகு அவளைச் சமாதானப்படுத்த முடியாது. “நக்கித் தின்னி, பொறுக்கி” என்றெல்லாம் அவளிடமிருந்து வசைச்சொற்கள் விழும். “மாதாவே. இதெல்லாத்தையும் பாத்துக்கொண்டிரும்” என்று ஓலமிடுவாள். பானைகளையும் சருவச் சட்டிகளையும் தூக்கி வீசுவாள். அண்ணன் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியேறியபிறகு வைகறையைப் பார்த்து “உன்ரை அண்ணரை எப்பிடி ஒரு பெட்டிப் பாம்பா அடக்கிறது எண்டு எனக்குத் தெரியுமடி” என்று வன்மத்தோடு சொல்வாள். பிறகு இரவு அமைதியாக நீளும். அண்ணி இரண்டாம் முறையாகவும் கர்ப்பமானாள்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் அண்ணி செத்துப்போனாள். அப்பொழுது கடைசிப்பெடியன் ஒரு ‘தவ்வல்’ குழந்தை, ஒரு வயதும் ஆகவில்லை. சாதாரண காய்ச்சல் என்று மாறி மாறி பனடோல் போட்டுக்கொண்டிருந்தவள் ஐந்தாவது நாள் ‘தஞ்சக்கேடாகி’ சுருண்டு விழுந்தாள். இரவே ஒரு மோட்டர்சைக்கிளை ‘ஹயருக்குப்’ பிடித்து நடுவில் இருத்திவைத்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றார்கள். நினைவு தப்பிவிட்டது. மூன்றாவது நாள் பிரேதமாகக் கொண்டுவந்தார்கள். அவளுடைய கால்மாட்டில் குந்தியிருந்து பெருவிரல்களைப் பொத்திப்பிடித்துக்கொண்டு அண்ணன் கதறியது கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. “நீங்கள் என்ரை அம்மாவெல்லோ..”

‘அண்ணனுக்கு எப்பிடிச் சொல்லுறது’ க்ளினிக்கில் வைகறையின் சிறுநீரைச் சோதித்து கர்ப்பத்தை உறுதிசெய்தபோது அவள் கூடாரத்திற்குத் திரும்ப மனமில்லாமல் புழுதிக்குள்ளேயே குந்தியிருந்தாள். காட்டு வெயிலில் உச்சி எரிந்தது. ஒரு மொட்டாக்குக் கூட போடத்தோன்றவில்லை. வயிற்றில் ஒரு சதைத் திரட்சி வளரத்தொடங்கியிருக்கிறது என்பதை சீரணிக்க முடியாமல் மூச்சுத் திணறியது. ‘நிர்மலா மாமி நெற்றியைத் தடவினால் ஆறுதலாயிருக்கும்’ என்று நினைத்தாள். யாரிடம் சொல்வதென்று ஒன்றும் தோன்றவில்லை. ‘விசாரணையில நானொரு இயக்கப்பெட்டையெண்டு பிடிச்சுக்கொண்டுபோய் பிடரியில சுட்டால் நல்லது..’ என்று யோசிக்கவே பெரிய ஆசுவாசமாயிருந்தது. அவ்வாறான வீடியோக் காட்சிகள் வெளியாகியிருக்கின்றன என்று முகாமில் பேசிக்கொண்டார்கள். ‘ஆமிக் கொமாண்டர் பல்லை நெருமிக் கொண்டு வயித்தில உதைஞ்சால் எவ்வளவு ஆறுதல்…’

வைகறை கிரமமாக இராணுவ விசாரணைகளுக்குப் போய் வரவேண்டியிருந்தது. அவள் ஓர் இயக்க உறுப்பினர் அல்ல என்பதை அவர்கள் பிடிவாதமாக நம்ப மறுத்தார்கள். “பொய் சொல்ல வேணாம், ஒரு நாள் புலியில இருந்தாலும் சொல்லிடணும்” என்று திரும்பத் திரும்ப வற்புறுத்தினார்கள். ஒரு தடித்த ஆமிக்காரி வைகறையின் உடலில் ஆயுதப்பயிற்சியின் தளும்புகளைத் தேடிக் களைத்தாள். “ஏன் உன்னை புலிகள் பிடிச்சிட்டுப் போகல” என்று சந்தேகத்துடன் கேட்டாள். “உன் வீட்டில அண்ணா தம்பி யாராவது இயக்கத்தில இருந்தாங்களா”

“இல்லை.. எனக்கு அவங்களைக் கண்ணிலயும் காட்டக்கூடாது” என்று வைகறை தீர்மானமாகச் சொன்னாள். அவள் ‘கதிர் அண்ணையைத்’ தவிர என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். அவளுக்குக் கதிர் அண்ணை என்றால் காணும். அவனில் நல்ல விருப்பம். மாத்தளனிற்கு வந்து கைவிடப்பட்டிருந்த கூடாரமொன்றிற்குள் நுழைந்தபோதுதான் முதன்முதலாக அவனைக் கண்டாள். பக்கத்துக் கூடாரத்தில் சக்கர நாற்காலியிலிருந்த பொறுப்பாளரின் முகத்தை துணியை ஈரத்தில் பிழிந்து துடைத்துக் கொண்டிருந்தான். பார்த்தவுடனேயே போராளி என்று புரிந்தது.

“அண்ணையாக்கள், இந்தக் கொட்டிலில வேற யாரும் இருக்கினமோ”

கதிர் அண்ணை நிமிர்ந்து அவர்களைப் பார்த்தான். பிறகு சாதாரணமான குரலில் “இருந்தவை. நேற்றுத்தான் செத்திருக்கவேணும்” என்றுவிட்டு அலுவலில் மூழ்கினான். வைகறைக்கு விறுக் என்று கோபம் வந்தது. ‘இப்பிடியா பதில் சொல்லுற’ முகத்தைத் திருப்பிக்கொண்டாள். கூடாரத்தின் பிளாஸ்ரிக் தரப்பாள் கத்தியால் குதறியதைப்போல கிழிந்து தொங்கினாலும் உள்ளே பதுங்கு அகழி நல்ல நிலையில் இருந்தது. சாக்குகளிலும் சேலையை வெட்டித் தைத்த பைகளிலும் நிரப்பிய மண் மூட்டைகளால் நன்றாகக் காப்புச் செய்யப்பட்டிருந்தது. அங்கேயே தங்கிக்கொள்வதென்று முடிவு செய்தார்கள்.

கதிர் அண்ணையையும் அந்தப் பொறுப்பாளரையும் தினமும் ஒருமுறையென்றாலும் சந்தித்துப்பேச போராளிகள் வந்தார்கள். அவர்கள் வருவதையும் போவதையும் ‘பராக்குப்’ பார்த்தபடிதான் வைகறை பொழுதைப் போக்கினாள். கதிர் அண்ணையிடம் மீறாத ஓர் ஒழுங்குமுறையும் நிதானமும் இருந்தது. ஷெல்கள் வெடித்துக் கரும்புகை அடங்கிய இரண்டாவது நிமிடத்தில் அவன் பச்சைத் தண்ணீரால் முகத்தை ஒத்தியெடுத்துவிட்டு ‘உப்’ என்று கன்னத்தை ஊதிச் சவரம் செய்தபடியிருப்பதைக் காணலாம். இரண்டொரு நாட்களிலேயே அவன் மருமக்கட்பிள்ளைகளுக்கு பிஸ்கற்றுக்களைத் தருவது சூசியம் தருவது வாழைப்பழம் தருவது என ஒரு பரஸ்பர அறிதல் உருவாகியிருந்தது.

ஒருநாள் வைகறை இறைவனுக்கு ரொட்டியைக் கிழித்துத் தீத்திக்கொண்டிருந்தாள். பச்சை மிளகாயை நறுக்கி வெறும் கோதுமை மாவில் பிசைந்து மண்ணெண்ணெய்த் தகர மூடியில் வாட்டிய ரொட்டி. எதிரில் கதிர் அண்ணை இளைப்பாறுவதைப்போன்ற ஒரு தோரணையில் உட்கார்ந்திருந்தான். அவனுடைய கையில் ஒரு சிறிய புத்தகமிருந்தது. விரல்கள் அலைச்சலோடு தாள்களைப் புரட்டுவதும் நிறுத்திவிட்டு வேறெங்கோ வெறிப்பதுவும் ஓரக்கண்ணால் இவளைப் பார்ப்பதுமாக இருந்தான். அது புதியதொரு அந்தரமாக இருந்தது. வைகறை சட்டையில் ஏதாவது கிழிசல் இருக்கின்றதா என்று தன்னியல்பாகத் தடவிப்பார்த்தாள். அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். ரொட்டியின் கடைசித் துண்டை இறைவனின் வாயில் ஊட்டிவிட்டு எழுந்தபோது கதிர் அண்ணையின் குரல் கேட்டது.

“பசிக்குது. ஒரு ரொட்டி சாப்பிடுங்கோ எண்டு என்னைக் கேட்க மாட்டியா..”

அவள் விருட்டென்று அடுப்புக்கு ஓடினாள். ஒரு துண்டு ரொட்டி கூட மிச்சமிருக்கவில்லை.

ஷெல்கள் விழுந்து வெடிக்கும்போது மட்டுமல்ல, அரிதிலும் அரிதாக ஒரு சுடுகாட்டின் அமைதி நிலவும்போதுகூட கதிர் அண்ணை, வைகறையை வெளியில் திரிய அனுமதிப்பதில்லை. “உள்ளை போய் இரு” என்று விரட்டுவான். அவளை இயக்கம் பிடித்துக்கொண்டு போய்விடக்கூடாதென்பதில் அவனுக்கு உள்ளூர ஒரு விருப்பம் இருந்திருக்கவேண்டும். ஒருநாள் “இஞ்சை வா” என்று கூப்பிட்டான். கையில் ஒரு சீருடைப் போராளியின் புகைப்படம் இருந்தது. அதைக் கொடுத்தான். “இவன் இப்ப உயிரோடை இல்லை. பெயர் பேராளன். ஊர் தேராவில். உன்னை எவளாவது இயக்கத்துக்கு வரச்சொன்னால் இதைக் காட்டி அண்ணை மாவீரர் எண்டு சொல்லு. உண்மையைக் கண்டுபிடிக்க மூண்டு நாளாவது ஆகும். அதுக்குள்ளை ஒரு அதிசயம் நடக்காமலா போய்விடும்.”

இன்னொருநாள் மூன்று கற்களின் இடுக்கில் எரிந்த அடுப்பில் குறிப்புப் புத்தகங்களையும் புகைப்படங்களையும் கிழித்துக் கிழித்து எரித்துக்கொண்டிருந்தான். தீயின் செம்மையில் உக்கிரமாயிருந்த அவனுடைய முகத்தை இதற்குமுன்னர் வைகறை ஒருபோதும் கண்டதில்லை. ஓடிப்போய் அவனிடமிருந்து அவற்றைப் பறித்தாள். “கதிர் அண்ணை, இது மொக்கு வேலை”

அவன் “கொண்டு வா..” என்று கத்தினான். மிரண்டுபோய்க் கொடுத்தாள்.

“நீங்கள் வைச்சிருக்கேலாது எண்டால் படங்களை என்னட்டைத் தாங்கோ. நான் வைச்சிருக்கிறன்”

“வேணுமோ” எழுமாற்றாக ஒரு படத்தை உருவி நீட்டிவிட்டு சட்டென்று திருப்பியெடுத்தான். “இதில யூனிபோமில நிக்கிறன். இது வேண்டாம்” இன்னும் இரண்டொரு படங்களை விலக்கி விலக்கித் தேடினான். “இந்தா இதை வைச்சிரு”

அந்தப் புகைப்படத்தில் கதிர் அண்ணையும் ஒரு முதிய பெண்ணும் நின்றிருந்தார்கள். அவள் சீத்தைத் துணியிலான பூப்போட்ட கைலியைச் சுற்றிக்கொண்டு மேலே வெள்ளைச் சட்டை அணிந்திருந்தாள். முகத்தில் சுருக்கங்கள் விழுந்திருந்தன. பழுப்பு நிற கல் பதித்த மூக்குத்தி அணிந்திருந்தாள். கண்கள் ஒளிர்ந்து சிரித்தன. கதிர் அண்ணை அவளுடைய தோளைக் கட்டிப்பிடித்தவாறு தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து நின்றான். சற்றுமுன்னர் அவளை முத்தமிட்டிருக்கவேண்டும். சாரமும் முழங்கை வரை மடித்துவிடப்பட்ட பச்சைச் சேட்டும் அணிந்திருந்தான்.

“நான் லீவில போய் நிண்ட நேரம் எடுத்தது. பத்து வருசத்துக்குப் பிறகு பிறந்த ஒரேயொரு முத்தெண்டு பூரணக் கிழவி என்னில அப்பிடியொரு பாசம்.  ம்.. இப்ப இந்தக் கடற்கரையிலதான் எங்கையாவது திரியும்”

கதிர் அண்ணையைக் கடைசியாகக் கண்ட நாளில்தான் மாத்தளன் கடலிற்குக் காயமடைந்தவர்களை ஏற்றுவதற்காகக் கப்பல் வந்திருந்தது. கடற்கரையில் சனங்கள் முண்டியடித்தார்கள். திடீரென்று முடிவெடுத்ததைப்போல அண்ணன் பிள்ளைகளை இழுத்துக்கொண்டு கடற்கரைக்குப் புறப்பட்டான். “யாருடைய காலில விழுந்தெண்டாலும் இவங்களை ஏத்திக்கொண்டு போகப்போறன். நீ தனியச் சமாளிப்பாய்தானே” என்றபோது வைகறைக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. மௌனமாக நின்றாள். ஆனால் அவனால் அப்படியெல்லாம் வெளியேற முடியாதென்று நினைத்தாள். அதுவொரு ஆசுவாசமாக அவளைத் திருப்திப்படுத்தியது.

அண்ணன் இரண்டு பைகளை மட்டுமே எடுத்துக்கொண்டான். நிலவனும் இறைவனும் அவனுடைய விரல்களைப் பிடித்து நடப்பதற்குப் பின்னடித்தார்கள். இவளைத் திரும்பி திரும்பிப் பார்த்தார்கள். “வாறியளா.. இல்லாட்டி விட்டுட்டுப் போகவா” கத்தினான். வைகறை அவர்களுக்குக் கையசைத்தாள். வெளியில் வந்து நின்றாள். சனக்கூட்டம் திணறுப்பட்டது. ‘இயக்கத்தோடு சண்டை பிடிக்கினம்போல’

மேலதிக சிகிச்சைக்காக யாரையெல்லாம் திருகோணமலைக்கு அனுமதிப்பது என்பதில் இயக்கத்திடம் ஓர் அளவுகோல் இருந்தது. காயத்தின் தீவிரத்திற்கும், மருத்துவர்களின் பரிந்துரைக்கும் அப்பாலும் கடும்போக்கைக் கடைப்பிடித்தார்கள். ‘கதிர் அண்ணை நினைச்சால் என்னையும் அனுப்பலாமா’ என்று வைகறை யோசித்தாள். ‘ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லியாவது அனுப்பலாம்..’ திரும்பிப் பார்த்தாள். அவனுடைய கூடாரம் வெறுமையாய் இருந்தது.

திடீரென்று கடற்கரை அமளிப்பட்டது. சனங்கள் கடலை நோக்கித் திரண்டு ஓடினார்கள். அவர்களிற்கும் இயக்கத்திற்கும் வாய்த்தர்க்கம் முற்றியிருக்கவேண்டும். கூச்சலாயிருந்தது. வைகறை நிலவனுக்காகவும் இறைவனுக்காகவும் வருத்தப்பட்டாள். ‘படீர்’ என்று ஒரு துப்பாக்கி வெடித்தது. தொடர்ந்து மூன்று அழுத்தமான வெடிகள் கடலை உதைப்பதைப்போல கேட்டன. சனக்கூட்டம் கத்திக்கொண்டு நாற்புறமும் சிதறியது. அண்ணன் பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தான். “மேல் வெடி வைச்சுச் சனத்தைத் துரத்திறாங்கள். கதிர்தான் சுட்டவன்” என்றான்.

சற்றுக்கழித்து கதிர் அண்ணையைத் துப்பாக்கியோடு கண்டாள். இவளைக் காணாததைப்போல நடந்துபோனான். ‘என்ர காலுக்குக் கீழயும் இவர் ரெண்டு வெடி வைச்சால் அடுத்த முறை கப்பல் வரேக்கை இந்த நரகத்தை விட்டுப் போகலாம்’ என்று யோசித்தாள். ‘நிலவனையும் இறைவனையும் அண்ணன் தனியச் சமாளிப்பார்தானே’

கதிர் அண்ணை அன்றைக்கு இரவு கூடாரத்தில் தங்கினானா தெரியவில்லை. மறுநாள் மதியம்போல செத்துப்போய்விட்டான். விமானத் தாக்குதலில் ஸ்தலத்திலேயே பலி. ஒரு முன்பள்ளிக் கட்டிடத்தில் வெறும் ஏழெட்டுப்பேரோடு அஞ்சலி நடந்தது.  கேள்விப்பட்டபோது வைகறைக்கு உடம்பு நடுங்கத்தொடங்கிற்று. அழுதபடி ஓடினாள். கதிர் அண்ணைக்கு எந்த இடத்தில் காயமென்று தெரியவில்லை. ஒரு காட்போட் பெட்டிக்குள் சாதாரண ஆடையில் வளர்த்தியிருந்தார்கள். காலையில் சவரம் செய்த முகத்தில் மொய்த்த இலையான்களை ஒரு சிறுவன் விசிறியபடியிருந்தான். வைகறை நிற்கத் திராணியற்று அவனுடைய தலைமாட்டில் உட்கார்ந்தாள். சருமச் சுருக்கங்கள் நிரம்பிய முகத்தில், ஒளி வற்றிய கண்களைக்கொண்ட ஒரு கிழவியை அவள் சுற்றுமுற்றும் தேடினாள். அந்த முதிய பெண்ணின் ஒப்பாரிப்பாடல் கதிர் அண்ணைக்கு ஆறுதலாயிருக்குமென்று நினைத்தாள்.

இந்த நரக நிலத்திலிருந்து தன்னை வெளியேற்றும் வல்லபம் கதிர் அண்ணைக்கு உண்டு என்ற நம்பிக்கை வைகறைக்கு இருந்திருக்க வேண்டும். அவன் நினைத்திருந்தால் கப்பலிலோ, ஏதேனும் கள்ளப்பாதையிலோ அனுப்பி வைத்திருக்க முடியும். அவனைப் பெட்டியோடு தூக்கி உழவு இயந்திரப்பெட்டியில் ஏற்றினார்கள். அழுகை வெடித்தது. வாயைப்பொத்தி அடக்கினாள். கடமுட என்று சப்தமெழுப்பியபடி உழவு இயந்திரம் நகர்ந்தது. கூடாரத்திற்குத் திரும்பினாள். வானம் கரு நீல நிறமாகியிருந்தது.

வைகறைக்கு சாப்பிடப் பிடிக்கவில்லை. பதுங்கு அகழிக்குள் இறங்கினாள். அண்ணன் பிள்ளைகளின் முதுகில் தட்டித் தூங்க வைத்துக்கொண்டிருந்தான். காற்றை உறிஞ்சியெடுத்துவிட்டதைப்போல புளுக்கமாக இருந்தது. அகழிக்கு மேலேறிப் படுக்கலாமா என்று யோசித்தாள். பயமாயிருந்தது. அண்ணன் பிள்ளைகளை தொடையிலிருந்து இறக்கிவிட்டு கால்களை நீட்டி அகழிச்சுவரில் சாய்ந்தான். அவனுடைய கண்கள் வழமைபோல மேலே நிலைகுத்தின. இரவு எட்டு எட்டரை இருக்கலாம். மயான அமைதி. இந்நேரங்களில் கதிர் அண்ணையின் ‘வோக்கி’ இரைகிற சத்தத்தைக் கேட்டாலே தெம்பாயிருக்கும். தொலைதூரத்தில் ஒரு பஞ்சப்பட்ட துப்பாக்கியிலிருந்து ஒன்றோ இரண்டு சத்தங்கள் அவ்வப்போது கேட்டன. ஆறாவது கூடாரத்தில் ஒரு குழந்தை வீரிட்டு அழுதது. இந்த இருட்டையும் அமைதியையும் பற்றிப்பிடித்தபடி ஒரு கள்ளப்பாதையால் யாரேனும் வெளியேறிக்கொண்டிருக்கக்கூடும். அந்த நிழல் உருவில்  பொறாமைப்பட்டாள். இரவுக்குக் காலில் வெடிபட்டதைப்போல ஊர்ந்தது. வைகறை நேரத்தைப் போக்காட்ட அலைகளைக் கூர்ந்து கேட்க முயற்சித்தாள். ‘ஸ்ஸ்’ என்ற இரைச்சல் ஒவ்வொருமுறையும் பெருகி பொலபொலவென்று உடைந்து பின்வாங்கியது. ‘சண்டை முடிஞ்சதும் நிர்மலா மாமியைத் தேடிக் கண்டுபிடிக்கவேணும்.’ என்று தோன்றியது. அண்ணனுக்குத் தெரிந்தால் காலை அடித்து முறிப்பான். அவன் நிர்மலா மாமியைத் திட்டித் தீர்க்காத ஒரு வசைச்சொல் இல்லை. ‘அண்ணனும் பாவம்தான்.’

அப்பாவும் நிர்மலா மாமியும் ஓடிப்போன பிறகு “உங்கட அப்பா ஏன் இப்பிடிச் செய்தவர்” என்று ஊரார் அவனைத்தான் துக்கம் விசாரித்தார்கள். நிர்மலா மாமியின் கணவர் மூக்குமுட்டக் குடித்துவிட்டுவந்து வீட்டு முற்றத்தில் நின்று தூஷணத்தில் கத்தினார். அண்ணன் பதிலுக்கு ஒரு வார்த்தையும் திருப்பிச் சொன்னதில்லை. நிறைய அவமானப்பட்டான். நிறையக் கவலைப்பட்டான். பள்ளிக்கூடத்தில் ஒரு பெடியன் வைகறைக்குக் கடிதம் கொடுத்தபோது முதலில் அண்ணனுடைய பரிதாபமான முகம்தான் ஞாபகத்தில் வந்தது. அந்தப் பெடியனுக்கு மேல் வரிசையில் தெத்துப்பல். சாடையான வாக்குக் கண். பார்க்க வேணும்போல இருக்கிற முகம். ‘உன் மௌனம் அழகுதான். எனினும் உதிரும் ஓரிரு வார்த்தைகளுக்காகக் காத்திருக்கிறேன்’ என்று கடிதத்தில் எழுதியிருந்தான். அவனுக்குக் கடைசிவரையும் பதில் சொல்லவில்லை. ஆனாலும் அவன் கொஞ்சம் தாமதித்து வந்தாலும் தவிப்பாயிருந்தது. வேறு பெண்களைப் பார்த்தாலே எரிச்சலாயிருந்தது. வைகறை பாதி உறக்கத்தில் ஒரு புன்னகையை வரைந்தாள். சவப்பெட்டி அளவிலான ஓர் இருள்கட்டி அவளை மூடிக்கொள்வதைப் போலிருந்தது. ‘குப்’ என்ற புளித்த வாடையை முகர்ந்தாள். ‘கள்ளப்பாதையால் யாரோ வெளியில போகினம் போல’ என்ற நினைவோடியது. அலை உடைந்து பின்வாங்கிய பிறகு இரைச்சலே இல்லை. ‘கடல் வத்தி நிலமாச்சுதெண்டால் நடந்தே போயிடலாம்..’ இளஞ்சூடுடைய அவளுடைய தட்டையான வயிற்றில் இருட்டின் சொரசொரப்பான விரல்கள் அவசரமாகப் பதிந்து அழுத்தின. வெகு தொலைவில் பஞ்சப்பட்ட அந்தத் துப்பாக்கி ‘டுப்’ என்று தன்னுடைய கடைசிச் சன்னத்தையும் துப்பியது. ‘சண்டை முடிஞ்சிட்டுது போல.. சனங்களை இனி வெளிய விடுவினம்..’ ஒரு மூச்சுக்காற்று தேகமெங்கும் அலைந்து திரிந்தது. வியர்த்தது. களைத்தாள். ஆறாவது கூடாரத்திலிருந்து வீரிட்ட குழந்தை அழுகையை நிறுத்தியிருந்தது. யாரோ அதனைத் தூங்கச் செய்திருந்தார்கள்.

000

காலையில் நிலவனின் வீரிட்ட குரலில்தான் கண்விழித்தேன் என்றாள். அவனுடைய பிஞ்சுக் கால்களின் கீழே அண்ணன் காய்ந்த சுள்ளித்தடியால் விளாச குழந்தை பதைத்துப் பதைத்துக் குழறியது. ஓடிச்சென்று அவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டேன் என்றாள். “ஏன் அடிக்கிறியள்” என்று கேட்கவில்லை. அண்ணனும் எதுவும் சொல்லவில்லை. அவனுடைய நேர்ப்பார்வையைக் காணக்கூடாதென்று பிரயத்தனமெடுத்தாள். பெரும்பாலும் நாள் முழுவதும் நின்றுகொண்டேயிருந்தேன் என்றாள்.

மேலும் இரண்டொரு நாட்களுக்குச் சிறுநீர் கழிக்க இயலவேயில்லை என்றும் கூறினாள்.

000

மெனிக்பாம் முகாமின் நீளக் கூடாரத்தின் பிளாஸ்ரிக் தடுப்பிற்கு அப்பால் ரமணி அக்காவும் மூன்று பிள்ளைகளும் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். வைகறை ஒரு நாளின் முக்கால்வாசி நேரமும் அவர்களுடனேயே இருந்தாள். அவள் இரண்டு தடவைகள் க்ளினிக்கிற்கு இரகசியமாகச் சென்று வந்தாள். இரண்டாம் முறை “என்னெண்டு தெரியேல்லையக்கா, ஒரே உடம்பு தஞ்சக்கேடா இருக்கு” என்று சொன்னாள். ரமணி அக்காவை நிமிர்ந்து பார்க்கவும் தயக்கமாயிருந்தது. கண்களின் அலைச்சலும் உத்தரிப்பும் காட்டிக்கொடுத்துவிடும் என்று பயந்தாள். திடீரென்று ‘இவவுக்குச் சொல்லுவமோ’ என்று நினைத்தாள். ரமணி அக்கா முதற்கேள்வியாக ‘யாரடி..’ என்று கேட்பாள். ‘தெரியாது’ என்று சொன்னால் ‘நீயெல்லாம் ஒரு பொம்பிளையோ” என்று திட்டுவாள். அவளுடைய மூத்த பெண்ணுக்கு பன்னிரெண்டு வயது நடந்துகொண்டிருந்தது. ‘இங்கு வருவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொள்ளவேண்டும்’ என்று வைகறை முடிவு செய்தாள். ஆனால் இயலவில்லை. அண்ணனுடைய கூடாரத்தில் ஒரு நிமிஷம் கூட அவளால் காலூன்ற முடியவில்லை. அவனோடு பேச்சுக் குறைந்து இல்லாமலேயே போய்விட்டது. நிலவனிலும் இறைவனிலும் காரணமின்றி எரிச்சல்பட்டாள். துடிக்கத் துடிக்க அவர்களுடைய தொடைச் சதையில் கடிக்க வேண்டும்போல ஒருமுறை தோன்றியது. திடுக்கிட்டுப்போனாள். பிறகு வருந்தினாள்.

“என்னடி ஒரு மாதிரி இருக்கிறாய்” என்று ரமணி அக்கா இரண்டொரு தடவைகள்  விசாரித்தாள். வைகறை மூன்றாவது க்ளினிக்கிற்குப் போவதற்கு முதல்நாள், அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு “என்ன எண்டாலும் என்னை நம்பிச் சொல்லு..” என்று நேரடியாகவே கேட்டாள்.

வைகறைக்கு பொசுக் என்றெல்லாம் கண்ணீர் முட்டவில்லை. “சுகமில்லாமல் இருக்கிறன். நாளைக்கு மூண்டாவது க்ளினிக்” என்று இறுகிய குரலில் சொன்னாள்.

“பிள்ளையள்.. வெளிய போயிருந்து விளையாடுங்க” ரமணி அக்காவின் பிள்ளைகள் கூய் என்றவாறு வெளியே ஓடினார்கள். அவள் வைகறையின் விரல்களை ஒவ்வொன்றாக நீவிவிட்டாள். “நான் மூண்டு பிள்ளையளிட அம்மா. என்னையே இந்த நாய்கள் பார்த்த பார்வையும் கேட்ட கேள்வியும் நினைச்சாலே வயித்தைப் பிரட்டும். ஆமிக்காரங்கள் உன்னைத் தனியவா விசாரிச்சவங்கள்?”

வைகறை தலையைக் குனிந்துகொண்டிருந்தாள். செத்துப்போன தாயே திரும்பி வந்துகேட்டாலும் வாயைத் திறப்பதில்லை என்றொரு ஓர்மம் வளர்ந்து கொண்டிருந்தது. நிர்மலா மாமி புட்டுத் தீத்தியபடியே “அது யார் பிள்ளை” என்று கேட்கிறாள். வைகறை அவளுடைய கையை விறுக் என்று தட்டிவிட்டு எழுந்து போகிறாள். “யாரடி அது” என்று கேட்கின்ற சிவந்தி அக்காவை கண்களில் ஏளனம் கொப்பளிக்கப் பார்க்கிறாள். “யாரம்மா..” அப்பா கேட்கிறார். அழுகை வருகிறது. உதடுகளைத் தைத்துக் கொள்கிறாள்.

ரமணி அக்கா வற்புறுத்தவில்லை. அடுத்தநாள் க்ளினிக்கிற்கு வைகறையோடு புறப்பட்டுவிட்டாள். “தெரிஞ்ச பிள்ளைதான்” என்று தன்னை அறிமுகப்படுத்தினாள். தாதி ‘இந்தக் காலத்துப் பிள்ளைகள்..’ என்று எதையோ இழுக்கவும் அதை மறித்து “காதலிச்சுத்தான் கல்யாணம் கட்டினவள். என்ன செய்ய.. கடவுளின்ரை அனுக்கிரகம் இல்லை” என்று துயரத்தோடு சொன்னாள். வைகறை அவளைச் சரேலென்று திரும்பிப் பார்த்தாள்.

தாதி கண்களைச் சுருக்கினாள். “அதைத்தான் நானும் கேட்டனான். இவ தெரியாதெண்டு சொன்னா” என்றாள்.

“புருசன் இயக்கத்தில இருந்தவர் எண்டதை எப்பிடி எல்லாரிட்டையும் சொல்லுறது.. எந்தப் புத்தில எந்தப் பாம்பு இருக்குமோ..”

அதற்குப் பிறகு தாதி எதுவும் பேசவில்லை. பரிசோதனைகளை முடித்து இயல்பாக இருக்கிறது என்றாள். சில சத்துக் குளிகைகளை வழங்கினாள். க்ளினிக்கிற்கான அடுத்த திகதியைக் குறித்துக் கொடுத்தாள். வரும் வழியில் “ஏன் அப்பிடிச் சொன்னீங்கள்” என்று வைகறை ரமணி அக்காவைக் கேட்கவில்லை. ‘அப்படிச் சொன்னதுக்கு நன்றி சொல்லுவமோ’ என்று தோன்றியது. பிறகு அதையும் சொல்லவில்லை. எதையுமே பேசாமலிருக்க அந்தரமாயுமிருந்தது. ரமணி அக்கா அதை சொற்ப நேரத்திற்கு உடைத்தாள். “என்ர மூண்டாவது பெட்டையின்ரை முப்பத்தொண்டுக்குத் தகப்பன் இல்லை. முதலே செத்திட்டார். ஆனா அவளை யாரும்  பதில் தெரியாத ஒரு கேள்வியைக் கேட்டு அவமானப்படுத்த ஏலாது. உன்ர வயித்தில தங்கியிருக்கிறது சிங்களமோ என்னவோ, அது ஒரு மனிச உயிர். யாராலும் நக்கலடிக்க ஏலாத ஒரு மனுசப்பிறப்பா நாளைக்கு அது நடந்து திரியவேணும் என்று நான் நினைச்சன். பிழையெண்டால் இப்பவே அதைக் கொலை செய்”

முதுகு வடத்திலிருந்து எதையோ பிடுங்கி எடுக்கிற மாதிரி சுளீர் என்றது. வைகறை போன வேகத்தில் உடுப்புக்களை அடைந்திருந்த இரண்டு பைகளையும் கொட்டிக்கிளறி அடியில் கிடந்த கதிர் அண்ணையின் படத்தை எடுத்தாள். தேகம் நடுங்கியது. விறுவிறென்று முகாமிலிருந்த ஒபிஸிற்குப் போனாள். கொமான்டரைச் சந்திக்க வேண்டும் என்றாள்.

“சேர்.. நான் இப்ப கர்ப்பமா இருக்கிறன். இவர்தான் என்ரை கணவர். இயக்கத்தில இருந்தவர். நாங்கள் கலியாணம் கட்டி ஆறு மாசம்தான் ஆகியிருந்தது. பிளேனடியில செத்திட்டார். இதை நான் முதலில் பயத்தில சொல்லவில்லை. மன்னிக்க வேணும்” படபடவென்று ஒப்புவித்தாள். உடம்பின் நடுக்கம் குறைந்தது போலிருந்தது. கொமான்டர் விபரங்களை எழுதித் தரச்சொல்லி தாளை நீட்டினான். கதிர் அண்ணையும் பூரணக் கிழவியும் கட்டிப்பிடித்தபடி நின்ற படத்தை தரச்சொல்லி வாங்கிக்கொண்டான்.

ஐந்தாவது நாள் பூரணக் கிழவியோடு ஆமிக் கொமான்டர் கூடாரத்திற்கு வந்தான்.

000

பூரணக் கிழவி ஒரு மாம்பழம் வதங்கியதைப்போல சுருங்கியிருந்தாள் என்றாள். அவளுக்குக் கூன் விழுந்திருந்தது. பழுப்பு நிறக் கல் பதித்த மூக்குத்தியைக் காணவில்லை. அவளுடைய கண்கள் மட்டும் மின்னின என்றாள். அருகிலேயே நின்ற கொமான்டர் “ஒங்க மாமி பூரணத்தை நான் கண்டுபிடிச்சிக் கொண்டு வந்திருக்கிறது” என்று சிரித்தான். தலை விறைத்தது என்றாள். கொமான்டர் “மருமகளிட்ட போங்க” என்றான். கிழவி அந்தச் சொல்லிற்காகக் காத்திருந்தவளைப்போல ஓடிவந்து தோளை இறுக்கிக் கட்டிப்பிடித்தாள். அவளுக்குப் பூஞ்சையான பாரமற்ற தேகம். ஒரு குழந்தைப்பிள்ளையைத் தாங்கிக்கொள்வதைப் போலிருந்தது. கைகளால் முகத்தை ஏந்தி மாறி மாறிக் கொஞ்சத் தொடங்கினாள். கன்னத்தில் பதிந்த ஈரத்தை இலேசான அருவருப்புடன் துடைத்தேன் என்றாள். கிழவிக்குக் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது. விம்மினாள். “வம்சம் அழியாமல் காத்த என்ர ஆத்தை” என்று காதுக்குள் முணுமுணுத்தாள். நொய்ந்த மார்போடு கட்டியணைத்தாள். சரேலென்று மண்டியிட்டு உட்கார்ந்தாள். கண்ணீர் வழிகிற முகத்தை நிமிர்த்தி ஆசையோடு பார்த்தாள் என்றாள்.

000

கிழவி நடுங்குகிற விரல்களால் வைகறையின் இளஞ்சூடான வயிற்றைத் தொட்டுத் தவிப்போடு தடவினாள். “என்ரை முத்தான முத்து வளர்கின்ற மூலமே” என்ற பெருங்குரல் உடைந்து காட்டு வெக்கையில் வழிந்தது. பூரணம் சின்னதாக மேடிட்ட அந்த வயிற்றைக் கையெடுத்துக் கும்பிடலானாள்.