ஈழப்போராட்ட வரலாற்றையும் அதன் அதிர்வுகளையும் கண்ணீரும் இரத்தமுமாகப் பேசிய ஆதிரைக்குப்பின்னராக சயந்தன் அண்ணாவால் எழுதப்பட்டிருக்கின்ற அஷேரா நாவலானது , “போராட்டம் முடிவடைந்த பின்னர் தனி மனிதன், தன் அடுத்த கட்ட வாழ்வியலுக்குள் இயல்பாக நகரமுடியாது உழல்கின்ற தன்மையை தனிமனித போராட்டமாக உணர்வு கொந்தளிக்க பேசுகின்றது.
தமிழீழம் என்ற ஒற்றை இலக்கிற்காக ஆயுதப்போராட்டத்தைக் கையிலெடுத்த இயக்கங்கள் அத்தனையும் “தனிமனித தவிப்புக்களையும், தொடர்ச்சியான உளப்போராட்டங்களையுமே பரிசளித்துச் சென்றிருக்கின்றது. தனிநாடு கேட்டு போராடிய தமிழன் தன் இனத்திற்குள்ளேயே ஒருவனை ஒருவன் போட்டுக்கொடுத்து , சுட்டுத்தள்ளி ,உயிர்களையெல்லாம் விலைகொடுத்துவிட்டு , கடைசியில் “நாடற்றவன் ” ஆக புலம்பெயர் தேசங்களில் அடைக்கலம் தேடுவதையும் , நாடு / நிலம் என்று வன்முறையைக் கையாள்கின்ற இயக்கங்கள் / குழுவினர் ஈழநாட்டில் மட்டுமல்ல, எங்கே இருந்தாலும் அதன் நீட்சி தனிமனித விரக்தியையும் , கசப்பையுமே மீதமாக விட்டுச்செல்கின்றது என்பதையும் கண்முன் கொண்டுவருவதோடு , ஆங்காங்கே நல்லிணக்கம் பற்றிய புரிதலையும் சமாதானத்தையும் நாவல் இயல்பாகப் பேசுகின்றது.
இயக்கப் போராளியான அருள்குமரன் கொழும்பில் பேருந்தொன்றில் இருக்கின்றான். சிங்களப்பிச்சைக்காரன் ஒருவன் சிங்களப்பாடல்களைப் பாடிக்காட்டியவாறு , சிங்களத்தில் எழுதப்பட்ட அட்டைகளைப்பயணிகளுக்கு வழங்கி பிச்சை கேட்கின்றான். பொக்கற்றிலிருந்து நாணயக்குற்றிகளை எடுத்தவனுக்கு சி்ங்களவர்களின் இனவாதவெறி நினைவுக்கு வர, “அம்மா… தெற்கே சமுத்திரம் பொங்குகிறது. மகாகங்கைக்கு வடக்கிலே நிலங்களைத் தமிழர் விழுங்கியிருக்கின்றார்கள். என்னால் எப்படி காலை நீட்டித் தூங்க இயலும்… சொல்” இனவாதத்தைத் தூண்டும் பாடல்களைத் தான் இவர்களும் பாடுகின்றார்களோ என்று சந்தேகம் தொற்றினாலும் , ‘பிச்சைக்காரனின் கெஞ்சலான முகம் ,ஈரலித்த கண்கள் , பாளம் பாளமாக வெடித்திருந்த உதடுகள் ‘ அவனை மனிதனாக மாத்திரமே அந்த நேரத்தில் உணரவைக்கின்றது. ஆரம்பத்தில் கொடுக்க எடுத்த நாணயக்குற்றிகளுடன் மேலதிகமாக சிலவற்றையும் போட்டு உள்ளங்கையில் வைக்கின்றான். சிங்களப்பிச்சைக்காரன் “ஸ்துதி ” என நன்றி சொல்கின்றான். பஸ் கடந்து சில மணி நேரத்தில் , இராணுவத்தினர் பஸ்ஸை நிறுத்துகின்றார்கள்.
ஆக நாடு , நிலம் , ஆட்சி, அதிகாரம் என்பன தனிமனித விரோதத்தையும், குழு மோதலையும் தவிர்க்கமுடியாததாக ஆக்கிவிடுவதுடன் தனிமனிதனைப் பைத்தியம்பிடிக்கவும் வைக்கும் போல.
உள ரீதியான சிக்கல்களை அனுபவிப்பவர்கள், அநாதரவானவர்கள், சோசலிசத் தமிழீழத்தில் சமத்துவம் கிடைக்கும் , சீதனம் மறையும் என்ற பேச்சுக்களில் மயங்கியவர்கள் என ஒரு சாராரும் , வன்முறைகளை விரும்பி ஏற்று சக மனிதனைக் கொல்லும் வெறிபிடித்தவர்களும் இயக்கங்களுக்குச் செல்ல தாராளமாகவே இருந்தார்கள்.
“அற்பமான காரணங்களைச் சொல்லிக்கொண்டு இயக்கத்திற்கு வந்தவர்கள் பிறகு அற்புதமான காரியங்களைச் செய்திருக்கின்றார்கள்” என்ற வார்த்தைகள் மனதோடு ஏனோ ஒட்டிக்கொண்டன.
சிங்களத்தாய்க்கும் தமிழ்த்தந்தைக்கும் பிறந்த அவந்தி என்கின்ற பெண் தாயின் மரணத்தின் பின் அநாதரவாகி இறுதியில் கிறிஸ்தவப்பாதிரியார் ஒருவரிடம் சரணடைகின்றாள். அவர் தனது திருச்சபைக்குச் சொந்தமான அநாதை இல்லத்தில் சேர்க்கின்றார். ஈழப் போராட்டப் பிரச்சாரங்களால் அவள் உந்தப்பட்டு போராட்டத்திற்குள் தன்னை ஈடுபடுத்துகின்றமையும் அதில் தீவிரமாக ஈடுபடுகின்றமையும் மிக அற்புதமான மொழி அடர்த்தியுடன் மனதைநெகிழச்செய்கின்றது. அவந்தி , ” நான் இரவே இரண்டு மூன்று சட்டைகளை அணிந்திருப்பேன். அந்தச் சின்ன வயதில் தமிழர்களாயிருந்தால் கொல்லப்படுவார்கள் என்று எனக்குத் தெரிந்திருந்தது. அந்தச் சின்ன வயதில் பெண்ணாயிருந்தால் உதைப்பார்கள் என்று தெரிந்திருந்தது. அந்தச் சின்ன வயதில் வேலைக்காரியாக இருந்தால் அடிப்பார்கள் என்றும் தெரிந்திருந்தது ” எனத் தன்கதையைக் கூறுகின்றாள்.
ஈழச்சமூகத்தில் கட்டவிழ்ந்து காணப்பட்ட ஒடுக்குமுறைகளை இவ்வாறாக நாவல் பேசியிருக்கின்றது.
சக மனிதனை அவநம்பிக்கையுடன் , பயத்துடனும் நடுங்கும் மனத்துடனும் ஏறிடும் அளவிற்கு , மனிதர்களை வன்முறையாளர்களாகவே உற்பத்தி செய்திருக்கின்ற போராட்ட இயக்கத்தின் கூண்டிலிருந்து தப்பித்து வெளியேறிய அற்புதம் ஆறுதலுக்கென , இளைப்பாறக்கூட ஒரு மனித நிழலைத் தேடவில்லை.
அவர் அம்மை நோயினால் தாக்கமுற்ற போது அருள்குமரன் ஆற்றிய பராமரிப்பு சேவை என்பது வியக்கவைக்கின்றது. இயக்கங்கள், வேண்டுமென்றால் அந்த மனநிலை ஒன்றை மனிதர்களுக்கு அருவருக்காமல் கற்றுக்கொடுத்திருக்கக்கூடும் , “நான் இல்லையென்றாலும் ஏதோவொரு இயக்கத்தில் நின்ற ஒரு பொடியன் உங்களை இப்படித்தான் கவனிப்பான் ” என்பதாக அருள்குமரன் சொல்கின்றான்.
அம்மை நோய்க்காலத்தில் மாமிசம் உண்ணக்கூடாது என சொல்லப்படுவதும் , அம்மாளாச்சியின் கோபம் ,பயபக்தியுடன் தான் இருக்கவேணும் என்பதை அருள்குமரன் நினைவுபடுத்திக்கொள்வதும், ஒரு இனக்குழுமம் எங்குவாழ்ந்தாலும் கலாசாரம் , பண்பாடு என்பன தொடர்ந்துகொண்டிருக்கும் வெகுவிரைவில் போட்டுடைக்க முடிவதில்லை என்பதைக் காட்டுகின்றது.
தனிமை உணர்வு தனக்குப் புதியதல்ல என்று கூறும் அற்புதம் இரவு நேரங்களில் காமத்தின் வேட்கையைத் தணிப்பதற்கென , தொலைக்காட்சிகளில் வருகின்ற பாலியல் இச்சைகளைத் தூண்டுகின்ற பெண்களின் தோற்றத்திற்காகக் காத்திருப்பதும் செம்மறியாட்டுடன் உறவு வைத்த குற்றத்திற்கென அந்நாட்டு நீதிமன்றத்தினால் தீர்ப்பு கேட்க நேரிடுவதும் ” இவர் கிட்டத்தட்ட இரவுக்கடல் , உக்கிரம் , அழுகை , ஏக்கம் எல்லாமுமாகச் சிதறுகின்ற மனுஷன் .ஐம்பது வயதான பிறகும் பெண் உடலைக் காண , அதுவும் ரீவியில் காண இரவு பன்னிரெண்டு மணி வரை காத்திருப்பது ஒரு சாபம் அல்லவா , அப்படியும் சொல்ல முடியாது அதைப்பதின் நான்கு வயதில் காண்பதும் பெரும்சாபம் தான் “. அருள்குமரன் கூறுவதும் நாவலில் இழையோடும் பெருந்துயரம்.
சிறு வயதிலே உணர்வு மோதல்களால் சிக்குண்ட அருள்குமரனைச் சுத்தியே கதை நகர்ந்தாலும் ,யன்னல் வழி ஊடாக விரிந்துசெல்லும் பார்வையைப்போல், சமூகத்தின் பல்பரிமாணங்களையும் நாவல் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திவிடுகின்றது. நாட்டை விட்டு வந்தாலும் சரி ,|நாடு துரத்தி வந்தாலும் சரி தமிழர்கள் குணத்தாலும், பண்பாலும் , கலாசாரத்தாலும் ஈழத்தையே பிரதிபலிக்கின்றனர் என்பதை பல இடங்களில் , அங்கதச் சுவையுடனும் , சில இடங்களில் பரிதாபத்துடனும் நாவல் தொட்டுச்செல்கின்றது.
ஈழத்தில் இருந்து திருமண உறவின் நிமித்தம் புலம்பெயர் நாட்டுக்கு வந்த அபர்ணா , அருள்குமரனுடன் ரகசியமான ஓர் உறவைப் பேணுகின்றாள். பல தருணங்களில் ஆறுதலாகவும் அன்பாகவும் இருக்கின்றாள். அருள்குமரனும் அபர்ணாவும் பஸ்ஸில் பேசுவதை தமிழர்கள் விடுப்பாக பார்க்கின்றனர். தன் கணவனின் சந்தேகங்கள் , குணங்களை ஒன்றுவிடாமல் சொல்லிக்கொண்டாலும் , வீட்டை விட்டு வெளியேறவும் முடியாமல் பொறுத்திருக்கவும் முடியாமல் தனக்குள்ளேயே தன்னை ஆசுவாசப்படுத்தி சிலவற்றை ஏற்றும் சிலவற்றை விலக்கியும் வாழ்கின்ற சராசரிப் பெண்ணாகவே அவளைப் பார்க்க முடிகின்றது.
“கல்யாணம் பேசியிருந்த காலத்தில் திடீரென ஒரு நாள் நீர் யாரையாவது காதலித்திருக்கின்றீரா என்று அரங்கன் [அபர்ணாவின் கணவன் ] கேட்டார். பகிடிக்கதையைக் கேட்பதைப் போலத் தான் இருந்தது. ‘இதென்ன சவக்கதை’ என்றேன். அப்படிச் சொன்னதால் பிற்காலத்தில் ஒரு நாளுக்கான அடியும் , உதையும் குறைந்திருந்தது. குறைந்த பட்சம் ஒரு பெண் தான் ஒருவனை மனதால் நினைத்தேன் என்று சொல்லியிருந்தால் கூட வீணாக அவள் மீதான பொய்க்குற்றச்சாட்டுக்களை அடுக்கி அவளைத் துன்புறுத்த, கணவன் உரிமை கொள்கிறான் என்பது சீற்றத்தை ஏற்படுத்தினாலும் மிகக் கேவலமான யதார்த்தம் அவை.
இருட்டு வேளைகளில் எல்லாம் அருள்குமரனிடம் வந்து மறையும் அமலிஅக்காவின் பெயர் அன்ட் லவ்லி வாசம் நாவல் முடிவு வரை வெறுப்பையே கடத்திவருகின்றது. எந்தவொரு நாளில் கூட இருளைத் தவிர்த்துவிட இயலாது . அது ஒவ்வொரு நாளுமே மனிதனைத் துரத்தி வருவது. அந்த இருளைப்போலவே மனித வாழ்க்கையை காமம் துரத்துகின்றது. காம உணர்வு குறித்து பேசப்படாதும் , பேசுவதே பாரிய பிழை என்றும் கட்டமைக்கப்பட்டிருக்கின்றதே அன்றி காம உணர்வைக்கடத்த ஏதோவொரு வடிகாலை மனிதமனமும் மனித உடலும் தேடி அலைந்துகொண்டே தான் இருக்கின்றது. அற்புதம், அருள்குமரன், ஆராதனா ,சரவணபவன், அருள்குமரனின் அம்மா, அமலி அக்கா, அபர்ணா, நஜிபுல்லா, என்ற பாத்திரங்கள் ஒவ்வொரு வகையான தேர்வை உபயோகித்துக்கொண்டே அந்த இருளைக்கடக்கின்றனர்.
அருள்குமரன் ஐந்து வயதாக இருக்கும் காலத்திலேயே குடும்பப் பொருளாதாரம் தந்தையை வெளிநாட்டுக்குத் துரத்துகின்றது. முப்பத்தொரு வயதான இளம் தாய், தன்னிலும் ஐந்து வயது குறைவான சரவணபவன் என்பவனுடன் உறவொன்றைப் பேணுகின்றாள் . அவர்கள் இருவருக்குமான அந்நியோன்னியமும் , ஒட்டுறவும் , சத்தம் கேட்காத நகைச்சுவைப்பேச்சுக்களும் பிஞ்சு வயதிலேயே அருள்குமரனை மோசமான மனப்பாதிப்பிற்கு இட்டுச்சென்று , அவனது கடைசிநாள்வரை துரத்துகின்றது . அவன் தாயிடமிருந்த போதே கோபம், சந்தோசம், நிம்மதி, குதூகலம், ஏமாற்றம், காமம், காதல், சஞ்சலம், குரோதம் என்ற உணர்வுகளை நுகரத்தொடங்கியவன்.
“அம்மாவைப்பற்றி யார் என்ன சொன்னாலும் அம்மாவை வெறுக்கக்கூடாது ” என, தன் இறுதி நாளில் மகனிடம் கூறிய அவளது வார்த்தைகள் லாவகமாகக் கடக்கக்கூடிய ஒன்றல்ல என்றாலும் பிற்படத் தொடரும் அருள்குமரனின் சிதைவுற்ற வாழ்வு அவனது தாய் மீது கழிவிரக்கத்தையும், சரணபவன் மீது பெரும் சினத்தையும் தவிர்க்கமுடியாது ஏற்படுத்தியே விடுகின்றது.
ஒரு மனித மனத்தின் குற்றவுணர்வுகள் , மனச்சாட்சி என்பன அவர்களை எங்ஙனமாக வாழ்வின் முடிவிற்கே கொண்டுசென்று சேர்க்கின்றது என்பதும், அருள்குமரன் தன் பிஞ்சு மனதில் வரைந்து கொண்ட பெண் தொடர்பான அருவருப்பான விம்பத்தை , பின்னர் கண்ட எந்தப்பெண்ணும் உடைத்துவிடவில்லை என்பதும் ஆராதனா போன்ற ஒரு பெண்ணை அவன் கற்பனை பண்ணி ஏமாற்றமடைவதும் கனதியானவை.
போராட்டத்தின் பின்னரான மன வெறுப்பும் , வாழ்க்கை குறித்த சலிப்பு அல்லது ஆண் மனத்தின் திமிரும் வக்கிரமுமோ என்னவோ தெரியவில்லை.இங்கு வருகின்ற முக்கிய கதை மாந்தர்களான அற்புதமும் சரி அருள்குமரனும் சரி, வாயிலிருந்து தூசண வார்த்தைகளைக் கொப்பளிக்கின்றனர். அவந்தி ஓர் இடத்தில் அருள்குமரனிடம் ” அந்த வார்த்தையை என்னுடைய ஏழாவது வயதில் அப்பா அம்மாவைப் பார்த்துச்சொன்னார். பத்தொன்பதாவது வயதில் இந்த அண்ணா இந்தியன் நேவியைப் பார்த்துச்சொன்னார்… ” என்கிறாள். காலம் காலமாக இந்த வசைச்சொற்கள் , பலரது தீராக்கோபத்தை மெதுவாகக் தணிக்கின்றது போலும். சமூகத்தில் வெறுப்பை வெளிப்படுத்தும் போது உயர்ந்தளவில் சரளமாக உச்சரிக்கப்படுகின்ற இந்த தூசண வார்த்தைகளை இலக்கியத்தின் வழிகொண்டு வருதல் தேவைதானா ??? என்கிற கேள்வியும் பல இடங்களில் வந்துபோனது.
கதைமாந்தர்களை மரணத்தின் வாசலில் கொண்டு சேர்க்கின்றதே, அப்படியெனில் நாவல் ஒழுக்கப்பெறுமானங்களை பேசுகின்றதோ என்று நினைத்துக்கொண்ட போது சில நியாயமான உரையாடல்கள்,அதைத் தடுத்துநிறுத்தியிருந்தன. “செத்துப்போன என்னுடைய அத்தம்மா சொல்லுவாள் , எல்லா ஆண்களுமே வாசல் கதவைத்தான் தட்டிப்பார்ப்பார்களாம் , வாசலில் வைத்தே கதைத்து அனுப்புவதா அல்லது அதற்கும் உள்ளேயா … என்பது எப்போதுமே பெண்ணுடைய தீர்மானம் தானாம் ” என்ற அவந்தியின் பேச்சில் பெண்கள் குறித்த பார்வை சரியாகக் கவர்ந்திருந்தது. ஆனாலும் ஆழ்மன தாக்கங்களும் , குற்றமற்ற மனத்தை குற்றவாளியாக்க முனைதலும் , ஆற்றிக்கொள்ள முடியாத குற்றவுணர்வும் மனித மனத்தைத் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்வதை வெகு சீக்கிரம் ஆற்றுப்படுத்த முடியாது என்பதும் போராட்டம் முடிந்த பின்னராவது ஏதோவொரு ஆற்றுப்படுத்தல் பொறிமுறையை உருவாக்க வேண்டிய கட்டாய தேவை ஈழச்சமூகத்தினருக்குத் தேவைப்படுகின்றது என்பதையும் நாவல் சொல்லவிழைகின்றது என நம்புகின்றேன்.
ஆக மொத்தத்தில் , தனிமனித உணர்வுகளை ஆண் – பெண் என்று பாரபட்சப்படுத்தாது அவரவர் மனநிலையில் வைத்து நடுநிலையாகப்பேசுவதும், பாத்திர வார்ப்புக்கள் , நகர்வுகள் , மொழிக்கட்டமைப்பு என்பன நேர்த்தியாக, உள்ளதை உள்ளவாறு வெளிக்கொணர்வதும் நாவலின் வெற்றி. எளிதாகக் கடந்துபோகக் கூடியதற்கான எந்த வித எத்தனங்களுமின்றி ஒவ்வொரு உணர்வுகளுக்கும் அற்புதமான மொழியாள்கையினால் உருக்கொடுத்து அதன் ஆழ அகலங்களை வாசகர்களிடமே விட்டுச்செல்கின்றமையும், புனிதங்கள் எனக்கட்டமைக்கப்பட்டவற்றை மொழிக்கற்களால் அசைத்துப்பார்க்கும் முயற்சியும் , அட்டகாசம்.