“அஷோராவின் அற்புதம்” என்பது, வார்த்தைகளுக்குள் உறைந்துபோய் விடக்கூடிய ஒரு உணர்ச்சியல்ல. ஒவ்வொரு பகுதிகளாக வரைந்து வரைந்து சட்டென முழுமையான சித்திரமொன்றை காட்சிப்படுத்தி உணர்ச்சிப்பிழம்பான மனநிலையை உருவாக்கிவிடுகின்றது.
0
மறந்துவிட, விலகிப்போக, மீண்டும் நிகழ்ந்து விடக்கூடாது என்ற தவிப்பை தினம்தோறும் கொண்டலைகின்ற , அவற்றிலிருந்து வெளியேறி, தனக்கானதொரு வாழ்வை கண்டடைய முனையும் எத்தனிப்புக்களை கொண்ட மனிதர்களின் கதையிது. ஒன்றை சொல்லிவிடுகிறேன். மனிதர்கள் இப்படித்தான் இருக்கமுடியும்.
மனிதர்கள் நிலங்களால் பிணைக்கப்பட்டவர்கள். வேட்கைகளால் நிரம்பியவர்கள். நிலம் நீங்கியவர்களிடம் மிஞ்சி இருப்பது நிலம் பூசிய நினைவுகள். அதிலும் போர் நிலத்து நினைவுகள், மெல்லக் கொல்லும் நஞ்சு. அவர்கள் எங்கு வாழ்ந்தாலும், எப்படி வாழ்ந்தாலும் அவர்களுக்குள் ஒரு போர் நிகழ்ந்துகொண்டே இருக்கும். அதிலும், அதிஉத்தம இலட்சியம் என்று கருதிய ஒன்றுக்காக, தினம்தோறும் சாவை எதிர்கொண்டலைந்தவர்கள் அந்த உத்தம இலட்சியம் கண்முன்னாலேயே சிதைகின்றபோது தங்களுக்குள் இறந்துபோகிறார்கள். மீண்டும் உயிர்த்தெழுகின்றபோது சிதைவுகளையும் , குற்றவுணர்வுகளையும் இந்த சமூகம் அவர்கள் மீது ஏற்றிவிடுகிறது. அவர்களும் தங்களை மீறி சுமக்கத்தொடங்குகிறார்கள். பிரிக்கவும், நீங்கவும் முடியாத நிலையில், தாங்களாகவே சமூக விலக்கம் செய்துகொள்ள முற்படுகிறார்கள். அந்த மனிதர்களை இருள் புரிந்துகொள்கிறது. அரவணைத்துக்கொள்கிறது. இருளை தனிமை எனலாம். நண்பன் எனலாம். ஈவுகொண்ட இணை எனலாம். மொத்தத்தில் அவர்களின் இருள் நீராலானது.
காமம், உடலில் முக்கிய இடத்தில் புதைந்துகிடக்கும் சன்னம். தன் இருப்பை கணந்தோறும் நினைவூட்டிக்கொண்டேயிருக்கும். மனிதன் தன்னை மிருகமாக மாற்றிக்கொள்ளும் இடமும் அதுதான். இணைகொள்ளுதலில் தவறு என்றொன்றுமேயில்லை. ஒழுக்கம் விழுமியம் எல்லாம் மனிதன் மீது திணிக்கப்பட்டவை. திணிப்புக்கள் எப்போதுமே சுமைதான். சுமைகளை கொண்டலையும் மனிதன் அழுத்தம் தாங்கமுடியாது வெடித்து கிளர்கிறான். தீராத வேட்கைகளை கழித்துவிட எத்தனிக்கிறான். காமம் தீர்த்தல் உயிர்களுக்கு மருந்து எனலாம். விடுதலை எனலாம். சுதந்திரம் எனலாம்.
இவற்றையெல்லாம் சமூகம் அசாதாரணம் என ஒதுக்கி, ஒதுங்கி நின்றுகொள்கிறது. குற்றமாக்கிவிடுகிறது. இலக்கியம் அதனை கண்முன்னால் விரித்துப்போட்டு இதுதான் நீ என்று சுட்டுவிரலை நீட்டுகிறது. அஷேரா அதை செய்ய விளைகிறது.
காமமும் துரோகமும் அன்பும் கோபமும் பின்னிப்பிணைந்த மனிதர்களைப் பேசுகின்ற நாவல். இருளும் நின்மதியும் வேட்கைகளும் துரோகங்களும் இணைகின்றபோது நிகழ்கின்றவைகளை குறியிட முனைகின்றது. ஆண் பெண் உறவுகளை, நட்புக்களை, அதன் சிக்கல்களை ஏக்கங்களை தம்மளவில் தனித்துவமாக வெளிப்படுத்துகின்றன. காமம் மற்றும் போர் என்பவற்றின்முன், ஆண் பெண் என பிரித்துகொள்ளத்தேவையில்லை. போர் காமம் இரண்டும் மனிதர்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றிப்போடும் வல்லமை கொண்டது. அதனை நாவலில் கண்டுகொள்ளலாம்.
நாவலின் முக்கிய பாத்திரங்கள் போர் நிலத்திலிருந்து வெளியேறியவர்கள். அவர்களுக்குள் ஒரு போர் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது. அது துரோகத்தால், ஏமாற்றத்தால், இழப்பால், தனிமையால் உருக்கொண்டது. அது அவர்களுக்கு மட்டுமானதல்ல. ஒவ்வொருக்குமானது. ஆப்கான் மலைகளாகட்டும், காஸ்மீரின் பனி போர்த்த நிலங்களாகட்டும் எல்லோருக்கும் போர் காமம் இரண்டும் ஒரேமாதிரித்தான். இருள் அவர்களை புரிந்துகொள்கிறது நேசிக்கிறது. காமம் மருந்தாகிறது. விடுதலையழிக்கிறது. பொறாமையை எரிச்சலை உருவாக்குகிறது. இது எல்லாமனிதர்களிளுடமும் எதோ ஒருவிகிதத்தில் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கிறது.
காமத்தை, வேட்கையை அதன் நுண்மையான இயல்புகளை, பெண் ஆண் உறவின் சிக்கல்களை இதற்குமுன்னும் நாவல்களில், கதைகளில் வாசித்திருந்தாலும் அவையெல்லாம் ஒன்றல்ல. காமத்திற்கு எது ஒப்பீடு. எப்படி மனிதர்கள் வேறுபடுகிறார்களோ அதேபோல வேட்கைகளும், உறவின் சிக்கல்களும் வேறுபட்டுக்கொண்டே இருக்கின்றன. மனிதனின் வேட்கை தீர்வதில்லை. எழுதி தீர்க்கவா இயலும்.
இந்த புரிதலோடு, அஷேரா போருக்கு வெளியே வைத்து பேசப்பட வேண்டியது. ஆதிரை ஆறாவடு போன்ற முன்னைய நாவல்களிலிருந்து வேறுபடும் இடமும் இதுதான். வரலாற்று சம்பவங்களை பயன்டுத்தும்போது நாவலாசிரியர் என்ன நோக்கத்தில் பயன்படுத்துகிறார் என்று கண்டுகொண்டு அதனை பேசமுனையவேண்டும். எமது துர்ப்பார்க்கியம். எல்லாவற்றையும் ஆதரவு எதிர்ப்பு மனநிலையில் அணுகிவிடுவது.
மொழி சார்ந்தோ, பாத்திரங்களின் அமைப்பு குறித்தோ, நாவலின் கட்டமைப்பு உத்தி மீதான பார்வையாக எதனையும் பதிந்து கொள்ளவில்லை. வாசகனாக அது தேவைப்படவுமில்லை.
ஏற்கனவே நாவலாசிரியரின் சில சிறுகதைகளில், வாசித்த சம்பவங்களும் , பாத்திரங்களும் நாவலிலும் வரும்போது, சிறுகதைகளை வாசித்து சம்பவங்களூடாக, அவர்கள் மீது ஏற்றி நான் வைத்திருந்த விம்பம் இடையூறு செய்துகொண்டே இருந்தது. அது ஒருவித சலிப்பையும் உருவாக்கிவிட்டிருந்தது. இது எனது வாசிப்புக் குறைபாடாகவும் இருக்கலாம்.
அருள்குமரன் ஏதாவது ஒரு இடத்தில் “அற்புதம்மான்” என அழைத்துவிட மாட்டானா என்று மனம் அலைந்துகொண்டே இருந்தது. அப்படி நாவலில் அழைத்திருந்தால் அது நல்ல வாசிப்பை தந்திருக்காது. ஆனால் அப்படி அழைத்திருக்க வேண்டும் என்ற ஏக்கத்தை உருவாக்கி விட்டிருந்தது நல்ல நாவலுக்கான பண்பு . அம்மான் என்பது வெறுமே அழைப்பு மொழியல்ல. அது தருகின்ற பிணைப்பும் அன்னியோன்னியமும் கிளர்ச்சியானது. அற்புதம்மான் எனக்குள் நான் ஒருமுறை அழைத்துக் கொள்கிறேன்