அஷேரா! ஒரு திரைக்கதைக்குரிய நாவல் – கிசாந்த்

சயந்தன் அண்ணாவின் மற்றுமொரு நாவல். ஆதிரையே அவரது படைப்புகளில் உச்சம் என்பதே என் கருத்து. இந்த நாவலின் பின்னும் அது மாறாது காணப்படுகிறது. மீண்டும் Non-linear முறையிலான கதைசொல்லும் பாங்கினை கையில் எடுத்துள்ளார். அருள்குமரன், அற்புதம் ஆகியோரின் வாழ்வின் பின்னலாக கதை வளர்ந்து செல்கிறது. ஈழத்து யுத்தத்தின் தார்மீக நோக்கம், அதன் வலிகள், வடுக்கள், சகோதரப் படுகொலைகள் போன்றதனைத்தினையும் முன்னைய படைப்புகளிலேயே அதிகம் பேசிவிட்டதனால் அதைத் தவிர்த்து / குறைத்து மனிதர்களின் மனப்போராட்டங்களை பிரதான விடயமாக்கி நாவலை நகர்த்துகின்றார்.

அருள்குமரன் மற்றும் அற்புதத்தின் பார்வைகளுக்கூடாக சமூகத்தால் பெண்கள் நோக்கப்படும் நிலைகள் தொடர்பானதொரு விமர்சனத்தினை ஆசிரியர் முன்வைக்கின்றார். ஆனால், எந்தவொரு நோக்குக்கும் இது சரி அல்லது இது பிழை என்று எந்தவொரு விளக்கத்தினையும் கொடுக்காது அதனை வாசகர் கைகளிலேயே விட்டுவிடுகின்றார்.

முக்கிய பாத்திரங்களான அருள்குமரனும், அற்புதமும் ஒன்றுக்கொன்று எதிர்மாறான கதாபாத்திரங்கள். இருந்தபோதிலும் கூட இரண்டு கதாபாத்திரங்களோடும் ஒன்றாகிப் பயணிக்க முடிகிறது. இருவருக்குமான மன உளைச்சலின் ஊற்று பெண்களாக இருக்கும் போதிலும் அடிப்படைக்காரணம் முற்றிலும் வேறுபட்டது. பாத்திரங்களின் நடத்தைகள் கதைவார்ப்பில் எவ் முரண்பாடும் இன்றி நகர்வது முக்கியமானதொன்று.

ஆராதனா, அவந்திகா, அமந்தா, அபர்ணா, அமலி என பெண்பாத்திரங்களும் சயந்தனின் நாவல்களின் தலைப்புகள் போல் ‘அ’ (a) வரிசையிலேயே அமைகிறது. இதில் ஒவ்வொரு பாத்திரங்களும் வெவ்வேறு குணாம்சம் கொண்டவை. அவை அவற்றின் வழியில் தனித்துவமானவையும்கூட. இது சரியானது இது பிழையானது என்று கருத்துக்கூற நாம் யார்? நாவலின் எந்தப்பாத்திரமும் இலட்சிய (Ideal) பாத்திரமாக வடிக்கப்படவில்லை. மாறாக ஒவ்வொன்றும் அவற்றுக்கான குறைகளின் வார்ப்புடனே படைக்கப்பட்டுள்ளன.

ஈழப்போராட்டம் தொடர்பாக மாத்திரம் உளவாங்காது உலகின் வேறுபட்ட போராட்டங்களையும் உள்வாங்கியிருப்பது முக்கிய அம்சமாகின்றது. ஆறாவடு நாவலின் போது கூறிய அதே கூற்றினை இதன்போதும் கூற வேண்டும். ஒரு திரைக்கதைக்குரிய பாணியுடனேயே நாவல் முழுவதுமாக எழுதப்பட்டுள்ளது.

குறைகள் நிச்சயமாக உண்டு. Non-linear முறையிலான கதை சொல்லலில் கதையோட்டத்தை ஆழப்பதியவைக்க வேண்டியது முக்கியமாகின்றது. ஆனால், பாத்திரங்களின் பெயர்களே ஒன்றுக்கொன்று ஒரேமாதிரியாய் காணப்படுதல் இம்முறைக்கு பின்னடைவாக இருக்கிறது என்றே கூறவேண்டும். (குறைந்தது இரு முறை முன் பக்கங்களை புரட்ட வேண்டிய தேவை உண்டானது )

அடுத்ததாக முக்கிய ஆண்பாத்திரங்கள் இரண்டினதும் மனப்போராட்டங்களுக்கான வார்த்தை விபரிப்புகளும் mirror image போன்று காணப்படுவது ஏற்கத்தக்கதா என்று குழப்பம் வருகின்றது (பாத்திரங்களே அப்போராட்டங்களை விபரிப்பது போன்றே கதை சொல்லப்பட்டுள்ளது). சொல்லிவைத்தாற்போல் பெரும்பாலான பாத்திரங்கள் வாக்குக்கண்ணுடனே வலம் வருவது ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பாகிறது. புதிதாக பாத்திர வர்ணனை வரும்போது ‘என்ன பெருசா சொல்ல போறிங்க? ஒருகண் என்னப் பாக்கும் போது மற்ற கண் பக்கத்தில இருக்கிறவன பாக்குது எண்டு சொல்ல போறிங்க. அதுதானே!’ என்று கூறுமளவுக்கு சென்றுவிட்டது.

பி.கு:- நகைச்சுவையுடன் கதையினை நகர்த்துவது ஷோபா, ஜே.கே, சயந்தன் போன்றோருக்கு கைவந்த கலை. இதிலும் நகைச்சுவை ஆங்காங்கே தெளிக்கப்பட்டுள்ளது.

பி.கு2:- ‘ஆறாவடு’ நாவலின் சம்பவங்கள் சிலவற்றை நகைச்சுவையாக உள்வாங்கியிருப்பது sayanthan touch.

இந்நாவல் எதனை கூற வருகிறது? என கேள்வி முன்வைக்கப்படலாம். இப்படியான நாவல்கள் வரலாற்றுக் கடத்திகள். புனைவுகளாயினும் தொடர் சந்ததிகளுக்கு வாழ்வியலை, வரலாற்றை கடத்தும் முக்கிய பங்கினை இவ்வாறான நாவல்களே அதிகம் செய்கின்றன. அந்தவகையிலே ‘அஷேரா’ ஈழத்து நாவல்கள் வரிசையில் மற்றுமொரு முக்கிய படைப்பாக தன்னை முன்நிறுத்துகின்றது.