தீபு ஹரி
ஆதிரையைப் படிக்கத் தொடங்கிய போதே, போர் பற்றிய லட்சியவாதக் கற்பனைகள் எல்லாம் உடைந்து விட்டன. தியாகம் ,லட்சியம், கனவு என்பதைத் தாண்டி போர் என்பது ஒடுக்கப்படுகின்ற மக்களின் விடுதலைக்கும், உரிமைக்குமான வேட்கையே என்பது விளங்கியது.
போர் எவ்வாறு மனிதர்களுடைய சமநிலையை, வாழ்வாதாரத்தை, நம்பிக்கைகளை,தன்மானத்தை எல்லாம் குலைத்துப் போடுகிறது?எது மக்களை இயக்கத்தை நோக்கி நகர்த்துகிறது? பெண்களுடைய பார்வையில் போர் என்னவாக இருக்கிறது என்கிற கேள்விகளுக்கான பெரும் தேடலாகவே இந்தப் புதினம் விரிகிறது.
ஒரு போரின் வெற்றி தோல்வியை வெளியில் இருந்து வெறும் பார்வையாளர்களாகப் பார்க்கிறவர்கள், அதனுடைய கொள்கை , நோக்கம் , அதை நோக்கிய போராட்டத்திற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் போன்றவற்றை வைத்து அதை ஆதரிக்கவும், விமர்சிக்கவும் செய்கிறோம். போர் என்றால் இழப்புகளும் இருக்கதான் செய்யும் என்று சமாதானம் கொள்கிறோம். ஆனால் நேரடியாக போருக்குள் அகப்படும் மக்களின் மனநிலை வேறாக இருக்கிறது. போரினால் ஏற்படும் பொருள் இழப்புக்கள்,உயிர் இழப்புகள்,மற்றும் பாதுகாப்பின்மை போன்றவை பெரும்பான்மையான மக்களை அகிம்சை வழியிலான போராட்டத்தையே ஆதரிக்கச் செய்கிறது.
இந்த நாவலில் வரும் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் போரை விரும்புவதில்லை. அது கொடுக்கும் அமைதியின்மையையும் , பதட்டத்தையும் வெறுப்பவர்களாகவே இருக்கிறார்கள்.
சங்கிலி,சந்திரா போன்றவர்கள் இவற்றால் நேர்கிற துன்பங்களை ஆய்ந்து பார்த்து போர் ஒரு சரியான ஆயுதமில்லை என்கிற முடிவுக்கு வருகிறபோது, சிங்கமலை,முத்து,கணபதி , போன்ற பலர் அதன் சாதக பாதகங்களைப் பற்றியோ, தங்களின் உரிமைகள் பற்றியோ பெரிய புரிதல்கள் இல்லாமல், தங்களுடைய அமைதியான வாழ்க்கைக்கு போர் என்பது ஒரு இடையூறாக இருக்கிறது என்கிற முடிவுக்கு நகர்கிறார்கள்.இந்த நாவல் வெறுமனே போர் சூழலையும் அதன் பாதிப்புகளையும் மட்டுமே விவரிப்பதோடு நின்று விடுவதில்லை. மாறாக அதன் காரணிகளைத் தேடிப் பயணிக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் வலி குறித்து நிறையப் பேசுகிறது.
இதற்கு சிங்கமலை கதாபாத்திரம் மிகச் சிறந்த உதாரணம். மலையக மக்களின் குரலாக அவர் வெளிப்படுகிறார். இன்னும் மூதாதையரின் நாடான இந்தியாவைக் குறித்த ஏக்கமும், தொடர்ந்து “அங்கே மட்டும் நம்மை என்ன நல்லா நடத்தினாங்க?ஊருக்கு வெளியிலே சேரியில் தானே கிடந்தோம் ” என்கிற ஆதங்கமும் , கூலிகளாக இங்கிருந்து ஆடுமாடுகளைப் போல் மக்களை தேயிலைத் தோட்டங்களுக்கு கொண்டு சென்றதைப் பற்றிய விவரிப்பும், சாதிய அமைப்பையும் , அதை ஆதரிக்கும் மனங்களையும் விமர்சிக்கும்படியாக அமைந்திருக்கின்றன.
வர்கத்துக்கும், சாதி அடுக்குகளுக்கும் சம்பந்தமில்லை என்பதை ஒரே பொருளாதாரச் சூழலில் உள்ள முத்து-வெள்ளையன் திருமணத்திற்கு முதலில் தன் மறுப்பைத் தெரிவிக்கும் மீனாட்சியின் வாயிலாக வெளிப்படுத்தி இருக்கிறார். அதே போல ப்ராமினீய முகத்தின் பிரதிநிதிகளாக புண்ணியார் மற்றும் அவரது மனைவி ராசாமணி இருவரையும் படைத்திருக்கிறார்.
‘1000 முட்டைகளில் பலகாரம் செய்து கொடுத்து புலிகளின் விடுதலை இயக்கத்தில் ஒரு பதவியை சம்பாதித்தது போல ,1001 முட்டைகள் செய்து கொடுத்து ஆர்மிகாரர்களிடமிருந்து தப்பித்து விடுவார்” என்பது போன்ற வாக்கியங்களின் மூலமாக , சாதியம் எவ்வளவு சாமர்த்தியமாக சூழ்நிலைக்கேற்ப மாறுவதன் மூலமாக அழிவிலிருந்து தன்னைக் காத்துக்கொள்கிறது என்பதைக் கூறியிருக்கிறார்.
அதே போல இந்த நாவலில் பெண் கதாபாத்திரங்கள் தீரா நம்பிக்கை உடையவர்களாகவும், குடும்ப அமைப்பின் மீது மிகுந்த பற்றுடயவர்களாகவும் படைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆச்சி முத்துக் கிழவி அந்த வயதிலும் தன்னுடைய மூத்தமகனின் குடும்பத்திற்கு ஒரு கோணிச்சாக்கு முழுக்க சுமக்க முடியாமல் உணவுப் பொருட்களை தலைச் சுமையாய்க் கட்டி எடுத்துக்கொண்டு செல்வது அதற்கு ஓர் அழகிய சான்று.
துரிதத்தில் இடமாற்றங்களுக்கு தங்களைத் தயார் செய்து கொள்வதிலும், இழப்புகளில் இருந்து தங்களை மீட்டுக் கொள்வதிலும் வாழ்வின் மீதான நம்பிக்கையையும், பற்றுதலையும் அணையாமல் காப்பவர்களாக பெண்கள் இருக்கிறார்கள்.
தனக்கும் ,தன் தாய்க்கும் இழைக்கப்பட்ட அநீதிக்குப் பிறகு போராளியாக மாறும் மலர் , ஒரு காலை இழந்து, அதன் பிறகு செவிலியாகப் பணி செய்து ,போரின் இறுதியில் தன் கணவனை இழந்து தன் மகளுடன் தனித்து விடப்படுகிறாள். அதன் பின்னும் அவள் எதிர்காலத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அளப்பரியது.ராணி, மலர், மீனாட்சி, முத்து, சந்திரா , என அனைவருமே மிகுந்த உயிரோடமுள்ள கதாபாத்திரங்கள். திருமணமான ஓரிரு வருடத்தில் ,வியாபாரத்திற்கு பொருள் வாங்கச் சென்ற தன் கணவன் என்னவானான் என்கிற தகவலைக் கூட அறிய இயலாத ராணியின் பரிதவிப்பும், மணிவண்ணனுடனான அவள் உறவும், போர்ச் சூழல் எவ்வாறு தனி மனித வாழ்க்கையை நரகமாக்குகின்றது என்பதற்குச் சிறந்த உதாரணம்.
இதில் மிக முக்கியமாக படிப்பவர்களை யோசிக்கச் செய்வது , இந்தச் சூழலில் வளரும் குழந்தைகளின் மனவியல். சந்திரா டீச்சர் துவக்கை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு ஏன் வருகிறீர்கள் என்று கேட்கிற போதும், வினோதியை போன்று இன்னும் வாழ்வு என்றால் என்னவென்றே அறியாத பல குழந்தைகள் இயக்கத்தில் இணையும்போதும் அவர்களின் நிலை குறித்த பதட்டமும், கையறு நிலையும் நமக்கு உருவாகிறது. ஒரு பேணியில் துப்பாக்கி ரவைக் கோதுகளை உருட்டி விளையாடும் இசைநிலா முகமும் ஒளிநிலா முகமும், போரின் கடைசி தருணத்தில் ,உயிருக்கு அஞ்சி ஓடித் திரிகின்ற போது , கொத்துக் கொத்தாய் மடிந்து விழும் சனத்திற்கு நடுவில் , வெள்ளையன் வெறுத்துப் போய் ,எத்தனையை மறைக்கிறது குழந்தைகளுடய கண்களிலிருந்து என்று நினைக்கிற காட்சியும் நினைவுகளில் உழன்றபடியே இருக்கின்றன.
அத்தார் விடுதலை இயக்கத்தை ஆதரிக்கும் ஒருவனாக இருக்கிறான். சங்கிலி, கணபதி போன்றோருக்கு நேர் எதிராக, சிறுபான்மை இனமாகவும், ஒடுக்கப்படுகிற இனமாகவும் இருக்கின்ற வலியை அத்தாரின் வாயிலாக ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார். போரினால் என்னென்ன எதிர்மறை விளைவுகள் உண்டாகி இருக்கின்றன என்ற போதும், இயக்கத்தை ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே நம்பிக்கையாக அத்தார் பார்க்கிறான். உண்ணாவிரதமிருந்தது இறந்து போகிற திலீபனோடே அகிம்சயையும், காந்தியையும் புதைத்து விட்டார்கள் என்பதை வழிமொழிகிற குரலாக அவனுடையது இருக்கிறது.
உலக நாடுகள் ஒவ்வொன்றும் எப்படி போரில் ஆதாயம் தேடுகின்றன என்பதும், மக்கள் உயிர் என்பது அதிகாரத்திற்கு எப்போதுமே லாப நஷ்டக் கணக்கு என்பதும் காட்சிகளின் விவரிப்பில் நன்கு புலனாகிறது. கருணாநிதியோ, அமெரிக்காவோ, அதிகாரத்தின் முகம் மக்களுக்கான கண்களற்றது
என்பது புலனாகிறது.சமாதனத்திற்காக ராணுவத்தை அனுப்புகிற இந்திய ராணுவம் எவ்வெவ்வாறு தமிழ் மக்களை ஒடுக்கியது ,துன்புறுத்தியது அவர்களுடைய வாழ்க்கையை நரகமாக்கியது என்பதெல்லாம் அறிய நேர்கிற போது ஒரு சாதாரண குடிமகன் அமைப்புகளின் மீதான தன்னுடைய சந்தேகங்களையும் அவநம்பிக்கைகளையும உணரத் தொடங்குகிறான்.
ஆதிரையைப் படிக்கும் போது Gone with the wind நாவலின் நினைவு வந்து கொண்டே இருந்தது. அமெரிக்காவின் உள்நாட்டு போர் ஒன்றைப் பற்றிய நாவல் அது. அதில் அந் நாவலாசிரியர் அமெரிக்காவின் தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் கொஞ்சம் அந்நாவலில் அவர்கள் மீதான கரிசனம் கொஞ்சம் அதிகம் தொனிக்கும்படி எழுதி இருப்பார். அதையும் தாண்டி fiction வகையறாவில் அது அப்போரைப் பற்றிய மிக முக்கியமான ஆவணம் என்று நான் எண்ணுகிறேன். சயந்தனுடைய ஆதிரை எந்த மனச்சாய்வும் இல்லாமல் பரந்துபட்ட பார்வையில் போர் சூழலில் வாழ நேரிட்ட மக்களைப் பற்றிப் பேசுகின்ற படைப்பு. தற்கால இலக்கியத்தில் மிக முக்கியமாக இடத்தில் வைக்கப்பட வேண்டிய ஒரு நாவல். போரினால் ஒடுக்கப்பட்ட, அல்லற்பட்ட ஓர் இனத்தின் துயரை, வலியை நேர்மையாக பதிவு செய்திருக்கும் படைப்பு ஆதிரை.