சயந்தனின் ஆதிரை படித்தேன். தமிழீழப் போராட்டத்தின் துவக்கப் புள்ளியான 1977 கலவரம் துவங்கி 2009 இறுதிப் போர் முடிந்து நிவாரணப் பணிகளுக்கான குழு அமைதல் வரையிலான பரந்த வரலாற்றுப் புதினம். தமிழ் ஈழம் குறித்த தெளிவு இல்லாதவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய நூல். காஷ்மீர் பிரச்சினையோ ஈழப் பிரச்சினையோ தாம் நம்பும் சித்தாந்தத்தின் வாயிலாகவும் தாம் விரும்பும் தலைவர்களின் நிலைப்பாடுகளின் அடிப்படையிலாகவும் ஏதோ ஒரு பக்கம் நிலையெடுத்து கம்பும் சுற்றும் போக்குதான் நம்மிள் பெரும்பாலோருக்கு உண்டு. சம்மந்தப்பட்டவர்கள் என்ன நினைக்கிறார்கள்? அவர்கள் இப்பிரச்சினையை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைக் குறித்த எந்தக் கவலையும் நமக்கு இருந்ததில்லை.
ஈழப் பிரச்சினையைக் குறித்து தமிழகத்தில் இருக்கும் ஒரு சாதாரண குடிமகனுக்கு என்ன அறியக் கிடைத்தது? கிடைக்கிறது? தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரைக்கைகளின் ஒருபக்கச் செய்திகள் மற்றும் தம் கட்சித் தலைவன் கூறும் கருத்துக்கள் அல்லது கதைகள். இவைதானே? ஈழத்திலேயே பிறந்து அங்கேயே படித்து அங்கேயே வளர்ந்து அத்தனைக்கும் சாட்சியாக இருந்தவர்கள் என்ன கூறுகிறார்கள்? அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? அதுதானே உண்மையான வரலாறாக இருக்க முடியும். ஈழ மண்ணின் மைந்தர்கள் எழுதுவதைத் தான் நான் நம்புகிறேன். ஆம், நிச்சயம் எழுதுகிறவர்களிடம் சித்தாந்த சாய்மானம் இருக்கலாம். ஆனால் நம் தலைவர்கள் கூறும் கட்டுக் கதைகளைக் கணக்கில் கொள்ளும்போது அவை பெரிய பாதகமில்லை வரலாற்றுத் திரிபும் இல்லை. தவிர ‘ஆறாவடு’ வையும் ‘ஆதிரை’ யையும் படித்த வகையில் சயந்தன் சாய்மானங்களைக் கடந்து எழுத்திற்கு நேர்மையாக இருக்கிறார் என்பதே எனது புரிதல்.
இயக்கத்தின் பிரச்சார பிரதியாகவும் இல்லாமல் விமர்சன தொனியும் இல்லாமல் சூழலிலிருந்து முற்றிலும் விடுபட்டு மேலிருந்து காணும் ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையில் தமிழீழ போராட்டத்தின் முப்பது ஆண்டுகாலம் பதியப்பட்டிருக்கிறது.
சிங்கள ராணுவத்திற்கும் – புலிகளுக்கும் இடையேயான நேரடி போர் விவரணைகள் ஒன்றிரெண்டு இடங்களைத் தவிர வேறெங்கும் இல்லை. எழுபதுகளில் ஆரம்பித்து 2015 பிற்பகுதி வரையிலும் இலங்கையின் பல்வேறு அரசியல் சூழல்களுக்கிடையே வாழ்ந்த மூன்று குடும்பங்களின் பாத்திரங்கள் வாயிலாக இந்த அவல வரலாறு சொல்லப் பட்டிருக்கிறது.
* இயக்கத்தின் நோக்கம் அப்பழுக்கற்றது. 70 களில் சிங்கள இனவாதக் குழுக்கள் பெருகி தமிழர்களை துன்புறுத்துவம் மத்திய இலங்கையின் மலையகங்களில் வாழ்ந்த தமிழர்கள் வடக்கு இலங்கையை நோக்கி இடம்பெயரவும் வைக்கின்றன. பொதுவாக இருக்க வேண்டிய அரசு சிங்கள இனவாதிகளை கண்டும் காணாமலும் மறைமுகமாக அவர்களை வளர்த்தெடுக்கவும் செய்கிறது. இதற்கு எதிர்வினையாகவே தமிழர்களுக்கென்று சொந்த நாடும் அரசாங்கமும் வேண்டும் என்கிற ‘பொறி’ விழுகிறது. இந்தப் பின்னனியிலேயே இயக்க வளர்ச்சியில் தமிழ் மக்களின் பங்கும் ஆதரவும் பெருகியது.
* இயக்கத்தின் ஆரம்ப காலங்களில் இளைஞர்களும் யுவதிகளும் ஆர்வத்தோடும் சுய விருப்பத்தின் பேரிலும் தம்மை இணைத்துக் கொள்கின்றனர். இயக்கம் கையறு நிலைக்குப் போகும்போது ‘சுய விருப்பம்’ எல்லாம் காற்றில் விடப்பட்டு ‘வீட்டுக்கு ஒருவர்’ என்று பிடித்துக் கொண்டு போகும் நிலையும் உருவாகிறது. இதில் மீசை கூட முளைந்திராத பள்ளிப்பிள்ளைகளும் அடக்கம்.
* வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கிறவர்கள் இயக்கத்தில் பதிவு செய்துகொண்டு பெரும்பணத்தைக் கட்டணமாக கட்ட வேண்டியிருந்தது. ஒரு அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் தமது பணத் தேவைகளை எப்படி பூர்த்தி செய்துகொள்வது? ஆகவே இம்மாதிரியான கட்டணங்கள் சிறு சிறு சலசலப்பைத் தவிர பெரிய எதிர்ப்புகளை உருவாக்கவில்லை. நரகத்தில் இருந்து தப்பிச் சென்றால் போதும். விட்ட பணத்தைப் பிறகு சம்பாதித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணமும் ஒரு காரணம். இது வேறொரு புதிய சமூக பாகுபாட்டில் நிறுத்தியது. பணம் படைத்தவர்களும் பணத்தைப் புரட்ட முடிந்தவர்களும் தமது சந்ததிகளை பத்திரமாக பிரான்ஸ், நெதர்லாந்து, சுவிஸ் உள்ளிட்ட ஐரோப்பிய பிரதேசங்களுக்கு நாடு கடத்திவிட எஞ்சிய ‘ஒன்றுக்கும் வக்கில்லாதவர்கள்’ இயக்கத்தோடு இணைந்து வீரமரணம் அடைகிற நிலை உருவாகிறது.
* பதிமூன்று பதினான்கு வயதிலேயே இயக்கத்தில் இணைந்துவிட்டவர்கள் படிப்பைத் தொடரமுடியாமல் போகிறது. போர் முடிந்து அவர்கள் மத்திய வயதில் இருக்கையில் எங்கும் வேலை கிடைப்பதில்லை. முதல் காரணம் போதுமான கல்வித் தேர்ச்சி இல்லை. மால்களில் செக்யூரிட்டி, கட்டுமான கூலித்தொழில் போன்ற விளிம்புநிலை வேலைகளே கிடைக்கின்றன. மற்றொன்று ஏற்கனவே ‘இயக்கத்தில்’ இருந்தவர் என்கிற காரணங்களால் அரசாங்கத்தின் ‘ஸ்கேனரிலேயே’ இருப்பார். விசாரனை, வேவு பார்த்தல் போன்ற தொல்லைகள் இருக்கும் என்று தமிழ் முதலாளிகளே கைவிரிக்கும் போக்கு.
* இயக்கத்தின் ‘மெடிக்ஸ்’ பிரிவின் அர்ப்பணிப்பு வியக்க வைக்கிறது. எந்த நேரம் எந்த நிலையானாலும் தம் உயிரை துச்சமாக பாவித்து பொது மக்கள் மற்றும் புலிகளின் உயிரையும் காயங்களையும் ஆற்றுப்படுத்தும் தியாகம் அது ஒரு தீவிரவாத இயக்கத்தின் பிரிவு என்பதாலேயே எங்கேயும் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதிரை அதைக் கவனமாக பதிந்து இருக்கிறது.
* இறுதிப் போரில் மத்தளன் துவங்கி முள்ளிவாய்க்கால் வரையிலான ஆறு கிலோமீட்டர் பரப்பை பாதுகாப்பு வளையமாக அரசாங்கம் அறிவிக்கிறது. உடமைகளைத் துரந்து கைப்பிள்ளைகளோடும் வயதானவர்களோடும் அவ்வளையத்திற்குள் சென்று தஞ்சம் அடைந்தவர்களின் மீது குண்டு வீசி அழிக்கிறது ராணுவம். முப்பது ஆண்டுகால போராட்டத்தை ஓரேயடியாக முடித்துக் கொள்ள மகிந்தாவிற்கு கிடைத்த one time oppurtunity. கலைஞர் நினைத்திருந்தால் போரை நிறுத்தியிருக்கலாம் என்பவர்களைக் கண்டால் சிரிப்புதான் வருகிறது. இலங்கை அன்று இந்தியாவை மட்டும் நம்பியில்லை. கலைஞர் அமைச்சரவையில் இருந்து விலகி இருக்கலாம். எதிர்ப்பின் அடையாளமாக அது இருந்திருக்கும். மற்றபடி அது போரை நிறுத்தியிருக்குமா என்றால் இல்லை என்பது தான் நிதர்சனம். கலைஞர் இடத்தில் அம்மையார், அண்ணா, எம்.ஜி. ஆர், யார் இருந்தாலும் அந்தப் போர் அப்படித்தான் முடிந்திருக்கும். ஜனவரியிலிருந்தே இன அழிப்பும் போர் வரைமுறைகளும் மீறப்பட்டு ஒரு உச்சத்தை நோக்கி நகரத் துவங்கி இருந்தது. உலகநாடுகள் பார்த்துக் கொண்டுதானிருந்தன. ஐநாவால் தலையிட முடியவில்லை. கலைஞர் நினைத்திருந்தால் முடிந்திருக்கும் என்பவர்களைக் கண்டால் ‘பலே கலைஞருக்கு அவ்ளோ பவர் இருந்துதா?’ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
எளிய தமிழ் பிள்ளைகள் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும். மேலே இருக்கும் விமர்சனங்களால் கலவரமடையக் கூடாது. அவ்வளவு பெரிய புத்தகத்தில் இவ்வளவுதான் இயக்கத்தின் மேலான விமர்சனங்கள். அதுவும் புகாராக இல்லாமல் கதையோடு வந்து போகிறது. இயக்கத்தின் நேர்மையும் தமது மக்களைக் காக்க வேண்டி அவர்கள் செய்த தியாகங்களும் முறையாக அங்கீகரிப்பட்டிருக்கிறது. இயக்க ஆதரவு என்கிற நிலையெடுத்து விட்டீர்கள். என்ன நடந்தது என்கிற வரலாற்றைத் தெரிந்துகொண்டாவது அங்கே நில்லுங்கள்.
வலதுசாரி போர் விரும்பிகளும் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பாகிஸ்தானோடு போர் புரிந்து அவர்கள் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பவர்களுக்கு என்ன கவலை இருக்கிறது? ஏஸி அரையில் சுழலும் நாற்காலியில் அமர்ந்து அவர்கள் பக்கம் ஐநாறு தலை நமது பக்கம் நூறு தலைதான் என்று தினம்தினம் கணக்கிட்டு புளகாங்கிதம் கொள்ள போர் ஒரு பொழுதுபோக்கு. அவர்களில் ஒருவர் இதைப் படித்து போர் எப்போதுமே வேண்டாம் அமைதியும் பேச்சுவார்த்தையும் தான் உயரிய கொள்கை என்று நினைப்பார்களாயின் அதுவே ஆதிரையின் வெற்றி.
நாஸிக்களின் இன அழிப்பு கொடுமைகளைக் குறித்து ஆயிரம் திரைப்படங்கள் இதுவரை எடுக்கப்பட்டிருக்குமா? சலிக்காமல் இன்னமும் வெவ்வேறு கோணங்களில் அது ஆவணப் படுத்தப்பட்டு வருகிறது. பத்து ஆண்டுகள் கழிந்தும் தமிழீழ இன அழிப்பைக் குறித்த திரைப்படங்கள் வந்தது போலவே இல்லை. ஆதிரை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தரமான இயக்குனரால் உலகப் படமாக்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.