வைதேகி
ஈழத்தில் இனவிடுதலைக்கான ஆயுதப்போராட்டம் என்ற நீண்ட பயணத்தின் பிறகு, அதைப்பற்றிய முனைப்பான பிரதிகள் தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அவை பெரும்பாலும், போராட்டத்தில் எழுத்தாளர்களின் தன்னிலையையும் தன் உணர்வுகளையும் பிரதிபலிக்கத்தக்கவாறே, எழுத்துவடிவம் பெறுகின்றன. ஒரு வகையில் அவை அரசியல் பிரச்சாரத்திற்கு இலக்கிய வடிவம் கொடுக்க முயல்கின்றன.
சயந்தனின் ஆதிரையோ, ஓர் ஒற்றைக் குரலாக, ஒற்றை உண்மையை மட்டும் வாசகருக்குக் காட்டாமல், ஆசிரியரின் குரலுக்கு அப்பால் சென்றும் பல குரல்களை கேட்க முடிகின்ற, பிரதியில் கூற எத்தனிக்கும் உண்மையைத் தாண்டியும் மேலதிக உண்மையைப் பெறுவதற்கான வாசக சாத்தியங்களைக் கொண்டிருக்கின்ற ஒரு இலக்கியப் பிரதியாக வெளியாகியிருக்கின்றது. தன் இருப்பிற்காகப் போராடிக்கொண்டிருக்கும் தனித்துவிடப்பட்ட இனமொன்றின், கடை நிலை மாந்தர்களைப் பற்றியும், போராட்டத்தின் மேன்மைகள், கீழ்மைகள் யாவற்றையும் எழுத்தாளரின் அக, புற உணர்வுகளோடு அருமையாக வெளிப்படுத்தி நிற்கிறது இந்நாவல்.
மக்களின் அனுபவங்களை நேர்த்தியான கதைகளாகத் தொகுப்பதன் மூலம் நாவலுக்கான ஒரு வடிவம் நெய்யப்பட்டிருப்பினும்கூட, வாசகர்களே நிரப்புவதற்கான இடைவெளிகளும் உண்டு. நிறைய இடங்களில் அது வாசகர்களிடம் ’வேலை வாங்குகிறது’ நாவலின் தொடக்கத்தில் தனி அத்தியாயமாக வரும் லெட்சுமணன் என்ற பாத்திரத்திற்கு முடிவில் என்ன நடந்திருக்குமென்பதை, வாசகரே தன்னுடைய கற்பனையாலும், ஊகத்தினாலும் நிரப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இறுதி அத்தியாயத்தில் மட்டுமே வருகின்ற ஆதிரையின் சொல்லப்படாத வாழ்வை, ஒரு தனி நாவலாகவே வாசகர்களால் கற்பனையில் சிருஷ்டித்துக்கொள்ளமுடியும். இவ்வாறான சாத்தியங்கள் நாவலோடு தனித்துவமான ஒரு நெருக்கத்தை வாசகர்களோடு ஏற்படுத்துகின்றன.
ஈழப்போர் என்ற தரிசனத்தை, அந்தப்போரின் நேரடி வீச்சுக்குள் வாழ்ந்த சாதாரண அடித்தட்டு மக்களின் பார்வையில் ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உட்படுத்தி எல்லாக்கோணத்திலிருந்தும் அணுகும் சுதந்திரத்தை ஆதிரை உருவாக்கி அளிக்கின்றது. வெறும் அனுபவங்களை எழுதிவிடாது, படைப்பாற்றல் மூலம், அனுபவங்களுக்கிடையிலான சங்கிலித் தொடரை சாதுரியமாக உருவாக்கி, இலக்கியப் பிரதிக்கான அழகியலை சயந்தன் படைத்திருக்கின்றார்.
ஈழப்போர் பற்றிய தர்க்கங்களை, விடைகாணவியலாத வினாக்களை ஆதிரையின் பாத்திரங்களைக்கொண்டு கேட்க வைப்பதன் மூலம் ஒற்றைப்படையான நகர்வைத் தவிர்த்து வாசகரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பல கோணங்களில் பார்க்கச் செய்கின்றது ஆதிரை. இதனாலேயே ஒரு திசையை நோக்கி வாசகர்களை ‘மேய்க்கும்’ வேலையை இந்நாவல் செய்யவில்லை.
“ஈழத்தமிழரில ஒரு இருபது லட்சமெண்டு பார்த்தாலும் இந்த இனத்தின்ர ஒரு அரசியல் போராட்டத்தின்ர அதுவும் ரத்தம் சிந்திற போராட்டத்தின்ர கடைசி விளைவை, அதின்ரை எரிவை, அதின்ரை வெக்கையை வெறும் மூன்று லட்சம் ஏழைச்சனங்கள் மட்டும் அனுபவிக்கிற மாதிரியும் மற்றவங்கள் அதுக்கு வெளியாலயும் போனது ஏதோ எதேச்சையா நடந்ததெண்டா நினைக்கிறீங்கள்..”
“சரி, நான் ஒண்டு கேக்கிறன். முள்ளிவாய்க்காலில் ஒதுங்கின இந்தச் சண்டை ஒரு வேளை யாழ்ப்பாண ரவுணுக்குள்ள ஒதுங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும் எண்டு நினைக்கிறியள்….”
“அப்ப இயக்கத்துக்கு எதுவும் செய்யிறதா நினைப்பில்லையாமோ….. கருணாநிதியும் அமெரிக்காவும் இடையில வந்து தீர்க்குமெண்டா இவ்வளவு நாளும் சண்டையை நடத்தினவை…” போன்ற கூற்றுக்களும் வினாக்களும் வாசக பங்களிப்புக்காக ஆசிரியர் பயன்படுத்திய யுக்திகளாக நாவல் முழுவதும் விரவியிருக்கின்றன.
மனச்சாட்சிக்கு உருவம் கொடுத்ததை போலவே நாவலில் கூட வரும் “சந்திரா” முள்ளிவாய்க்காலில் தலை பிளந்து இறந்து கிடக்கும் தருணத்தில் கண்முன் விரிவது ஒரு பெண்ணின் வாழ்க்கை மட்டுமல்ல, போரின் வெம்மையில் கருகிய பலநூறு, ஆயிரம் பெண்களின் வாழ்க்கைகளின் ஒரு கோட்டுச்சித்திரம். அத்தருணத்தில் “இந்தப் போராட்டம், தேவைதானா.. ” என்றொரு கேள்வி, புத்தியையும் மீறி மனதில் எழுகிறது. அப்பொழுது ஆசிரியருக்கு இணையாக, காலத்தை மறுபரிசீலனை செய்யும் ஒரு வாய்ப்பும் உருவாகிறது.
ஆதிரை, 1977இல், தேயிலைத் தோட்டக் கூலிகளாக இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மக்களிடையே, மலையகத்தில் ஆரம்பிக்கின்றது. 2013இல், யாழ்ப்பாண நகரத்தின் நுழைவாயிலான, முகமாலை வெட்டையில் முடிகின்றது. ஏறத்தாழ முப்பது வருடங்கள், தங்கு தடையற்ற பிரவாகமாக ஓடும் காலத்தில் வாழும் உணர்வை வாசகர்கள் பெறுகின்றார்கள். மக்களின் வாழ்க்கையை ஒரு பௌதிக இயக்கமாக போர், இடப்பெயர்வு, சாதிய ஒடுக்குமுறை, காதல், திருமணம், பிறப்பு, இறப்பு எனப் பல நூறு இழைகள் கொண்டதாக அது பரப்பி வைக்கின்றது. இந்திய அமைதிப் படையினரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தன்னை விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக்கொண்ட வெள்ளையக்கா என்ற சோதிமலர், கணவன் காணாமல் போக, கைக்குழந்தையுடன் தன் வயதுக்கேயுரிய ஏக்கங்களுடனும் இச்சைகளுடனும் சமூகத்தின் வார்த்தைகளுக்குப் பயந்து வாழும் ராணி, எதையுமே நேர்படப்பேசுகின்ற, அது விடுதலைப்போராட்டமாகவே இருந்தாலும் அதன் மனிதநேயமற்ற கூறுகளை சுட்டிக்காட்டுகின்ற சந்திரா என்று நாவலின் பாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான ஓட்டங்கள், தனித்தனியான தரிசனங்கள். ஒவ்வொரு பாத்திரத்தையும் இயக்கும் மன உணர்வுகள் பின்னிப்பிணைந்து முழுமையான உணர்ச்சித் திரளாகப் பிரவாகிக்கின்றது. அது போலவே சம்பவங்களும்..
77, 83 இனக்கலவரங்கள், ஒதியமலைப் படுகொலை, பிரமந்தனாற்றுப் படுகொலை, இந்திய ராணுவத்தின் மனிதநேயமற்ற கொடூரச் செயல்கள், யாழ்ப்பாண இடப்பெயர்வு, சுனாமி, செஞ்சோலை வளாகப் படுகொலை, முள்ளிவாய்க்கால் பேரவலம் என்று பல்வேறு சம்பவங்களின் தொகுப்பு, முப்பது வருடங்கள் என்ற அகண்ட காலத்தை நாவலின் ஒவ்வொரு கணத்திலும் பிரதிபலிக்கச்செய்து வாசகர்களுக்கு ஒரு மாபெரும் காலதரிசனத்தை அளிக்கின்றது.
ஆதிரையில் நிலங்கள் ஒரே திசையில் நகரவில்லை. மலையகம், திருகோணமலை, வவுனியா, வன்னி, யாழ்ப்பாணம், மன்னார் முதலான நிலங்களோடு தொடர்புபட்ட பல்வேறு மனிதர்களின் வாழ்வும், போரும் வலை போல நாலாபுறமும் பின்னிப்பின்னி விரிவடைந்திருக்கின்றது. இந்த விரிவுதான் நாவலின் தனிச்சிறப்பும் கூட. ஈழப்போரின் மானுட அனுபவத்தின் விரிவு இது.
வட இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கதை நகர்ந்தாலும் பிராதான களங்களான தனிக்கல்லடி, பேச்சிதோட்டம் என்ற இரண்டு நிலங்களில் மட்டுமே கதையின் பிரதான மாந்தர்கள் இயங்குகின்றனர். இந் நிலங்களின் நீட்சியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் வயல்வெளிகள், வரப்புக்கள், வெட்டைகள், மந்துக்காடுகளின் பூகோளக் குறிப்புகளும், தரைத்தோற்ற விவரணங்களும் நாவலில் செறிவாகப் பதியப்பட்டிருக்கின்றன. தனிக்கல்லடி என்ற கிராமம் பற்றிய விபரிப்பில், அங்கு வாழும் சமூகத்தின் இருண்டதும் ஒளிமிக்கதுமான வாழ்வின் எல்லா பக்கங்களும் கூர்மையான அழகியலோடு காட்டப்பட்டிருக்கின்றது. அக்கிராமத்தின் மத்தியில் விஸ்தீரணத்துடன் பரவிக்கிளைவிட்டிருக்கும் இத்திமரமும் அதன்கீழ் அமைந்திருந்த “இத்திமரத்தாளும்” பொருத்தமான களத்தை கற்பனையில் கொணரச்செய்து, வாசிப்பவருக்கு மிகப்பரிச்சயமான ஒரு வாழும் சூழலை தருகின்றன.
விளிம்பு நிலைப் பெண்களின் கருத்துக்களையும் அவர்களின் அகவயமான உணர்வுகளையும் எள்ளலோடும் துல்லியத்தோடும் யதார்த்தமான உரையாடல்களாக நாவல் முன்வைக்கின்றது. “தாய்க்காரியெண்டால் இரும்பு மாதிரி நிப்பாள். இவன் மகன் (ராஜீவ் காந்தி) பாவம். ஜெயவர்த்தனாட்டை ஏமாந்து போனான்” இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அரசியல் வெகு லாவகமாக இந்த உரையாடலில் உள்ளோடியிருக்கும்.
இலங்கைப் படையினரால் தம்பி சித்திரவதைக்குள்ளாக்கப்படும்போது அவனுடைய அக்கா, “காளியாத்தை எல்லாத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறாளடா.. உங்கள் ஒருத்தரையும் மிச்சம் வைக்க மாட்டாளடா.. ” என்று மண் அள்ளி வீசும்போதும், இந்திய அமைதிப்படையினரால் சிதைக்கப்பட்ட ஒருத்தி “பெத்த தாயைக் கெடுக்கச் சொல்லியாடா உங்களுக்குச் சொல்லித் தந்தாங்கள்.. இத்திமரத்துக்காரி வைச்சிருந்து பழி தீர்ப்பாளடா..” என்று அலறும்போதும், மகனை இழந்த தாயொருத்தி “எடியே காளியெண்ட வேசை.. உனக்கு ரத்த ருசி கேட்குதோடி” என்று கடவுளையே திட்டும்போதும், பெண் துயரின் கோபமும் சாபமும் உக்கிரத்தோடு வெளிப்படுகின்றன.
மக்களின் உரையாடல்கள் அவர்களுடை வட்டார மொழிகளுடனேயே நேரடியாகச் சேர்க்கப்பட்டிருப்பதானது பிரதிக்குள் வாழும் அனுபவத்தை, ஓர் உண்மைச்சூழலை ஏற்படுத்துகின்றது. ஆசிரியரின் தன்னிலைக் கூற்றுக்களைக் காட்டிலும், கதை மாந்தர்களின் குரல்களாலேயே நாவல் நகர்ந்து செல்கிறது. “அப்பிடிச்சட்டுன்னு சொல்லிட்டாலும் இந்தியான்னா உள்ளுக்க என்னமோ ஒரு நெனப்பு. எனக்குச் சரியா சொல்லத் தெரியல்ல. மழை பெய்யிற நாள்ள மூக்க நெறக்கிற புழுதி கெளம்புமே…. அப்ப ஒரு வாசம் வருமே.. அப்பிடி. சிலசமயம் கனவு முறியிறப்போ ஒரு துக்கம் முட்டிக்கிட்டுக் கிளம்புமே அப்பிடி…. என்னமோ ஒண்ணு. நல்லது நடந்திச்சின்னா சந்தோசம் தான்” இந்திய அமைதிப் படையின் வருகையை மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் வாழும், ஓர் இந்திய வம்சாவளிக் கிழவனின் குரலினுாடாகக் கேட்கின்றபோது, அந்த மழை நாளின் புழுதியை எம்மாலும் நுகர முடிகின்றது.
போர் இலக்கியம் என்பது தனியே போரின் வெற்றியைப் பாடுவதல்ல. போரின் நியாயத்தை உணர்த்துவது மட்டுமல்ல. அந்தச் சமூகத்தின் வெகு சாதாரண பிரதிநிதி ஒருவரின் வெகு சாதாரண ஆசையை, எதிர்பார்ப்பை போர் எப்படி தனது விருப்பப்படி திசை திருப்புகிறது என்பதையும் நுண்மையாக அவதானித்துப் பதிவு செய்தலே அது. மூன்று தசாப்தகால ஈழ யுத்தம், அந்தச் சனங்களின் வாழ்க்கையை, எப்படித் தன் விருப்பப்படி மட்டுமே தன் வழியில் அலையச் செய்தது என்பதையும், அதில் அடிபட்டுப்போனவர்கள், லாவகமாக விலகி நின்றவர்கள், அதனோடு யுத்தம் செய்தவர்கள் என்று அனைத்துச் சனங்களதும் கதையை, முன்வைத்த கலைரீதியான நேர்த்தியான வெளிப்பாடு ஆதிரை.
இது, தனியே இன ஒடுக்குமுறையை மட்டும் பதிவுசெய்யவில்லை. ஈழத்துத் தமிழ் மக்களிடையில் நிலவுகின்ற சாதிய ஒடுக்குமுறைகள், வர்க்க வேறுபாடுகள் – அவை ஒரு பொது யுத்தத்தை எதிர்கொள்வதில் ஏற்படுத்தும் சமநிலைக் குழப்பம் என்பனவற்றையும், சமாந்தரத்தில் பதிவுசெய்திருக்கின்றது. இறுதியில், நேர்மையான அரசியல் காரணங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட போரில் எவரெல்லாம் தப்பிப் போனார்கள், எவரெல்லாம் பலி வாங்கப்பட்டார்கள் என்ற பேருண்மையை பெரும் குற்ற உணர்ச்சியாக கவிகியச் செய்கிறது. அனைவராலும் கைவிடப்பட்ட ஒரு சமூகத்தின் கேலியான பார்வையை எதிர்கொள்ள முடியாத வெட்கத்தை ஏற்படுத்துகிறது.
கடைசிப் பக்கத்தின் கடைசி வரியில் மார்பின் குருதிச் சேற்றுக்குள் புதைந்திருந்த நஞ்சுக் குப்பியை வெகு சிரமத்தோடு ஆதிரை இழுத்த கணத்தில், இத்திமரம் ஒரு புயல்நாளில் சரிந்து விழுந்தபோது ஊருக்குள் உருவான பதற்றமும், எதிர்காலத்தின் நிச்சயமின்மையும் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.