காஸா! படுகொலை நாட்களின் குறிப்புகள்

Gaza, July 15, 2014

இரத்தம் தோய்ந்த இன்னுமொரு நாள் கடந்து செல்கிறது. இந்த இரவின் ஆரம்பம் அமைதியாக இருந்தது. ஆம். அது புயலுக்கு முந்திய அமைதி. இங்கே அமைதியென்பது வான் தாக்குதல்கள் இல்லாத ஒரு பொழுதென்றே அர்த்தப்படுத்துகிறேன். ஆனால் அல்லும் பகலும் ஸ்ஸ்ஸ் என எங்கள் தலைக்கு மேலே அலையும் வேவு விமானங்களின் இரைச்சல் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. எங்கேயோ பூம் என்ற ஒலியோடு ரொக்கெற் வெடிக்கிறது. மிகச் சரியாக ஜெர்மனி – ஆர்ஜன்ரீனா உலகக் கோப்பைக் கால்பந்தாட்டத்தின் முடிவிற்கு அடுத்துக் கேட்டது. ஒருவேளை ஜெர்மனியின் வெற்றியை விமானி ரசிக்கவில்லையோ.. ? அடுத்து இன்னொரு வெடியோசை.. அதையடுத்து இன்னொன்று.. அது வீட்டிலிருந்து அருகாகவுள்ள பொலிஸ் நிலையமொன்றைத் தாக்கியது. அப்பொழுது நாங்கள் நோன்பை முடித்து உணவு எடுத்துக்கொண்டிருந்தோம். என்னுடைய நினைவெல்லாம் காஸாவின் வடக்கிலிருந்து துரத்தப்பட்டு ஐ.நா பாடசாலைகளில் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான சனங்களைச் சுற்றியே இருந்தது.

பல்கனியில் உட்கார்ந்து விடியும் வரை வானத்தை வெறித்துக்கொண்டிருந்தேன். மூக்கைத் துளைக்கும் நாற்றத்திலிருந்து விடுபட அயற்குடியிருப்பாளர்கள் வீதியில் குப்பைகளை எரித்துக்கொண்டிருந்தார்கள். நகராட்சி செயலிழந்து விட்டது. சூடான கோடை காலமென்பதால் குப்பைகள் நிறைந்து வழிந்து மணக்கத்தொடங்கிவிட்டன.

எனது பகுதி ஓரளவு அமைதியாயிருந்தாலும் தூரத்தே குண்டுச் சத்தங்கள் கேட்டபடிதானிருக்கிறது. வீடுகள், பள்ளி வாசல்கள், மருத்துவ நிலையங்கள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக ஷெல் தாக்குதலைத் தொடுத்துவருகின்றது. தடைசெய்யப்பட்ட பயங்கரமான க்ளஸ்டர் ரகக் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாக அல் ஸிபா மருத்துவர்கள் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்கள். வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்படும் அதிகளவான காயங்கள் சிகிச்சையளிக்க முடியாத நிலையிலிருக்கின்றன. இவ்வகைக் குண்டுகள், வெடிக்கும்போது உள்ளிருக்கும் நூற்றுக்கணக்கான சிறு குண்டுகள் வெடித்துப் பரவுகின்றன. இவை மனித உடலின் ஆழத்தில் திசுக்களையும் இரத்த நாளங்களையும் அறுத்தெறிவாதால் இரத்தப்பெருக்கு உண்டாகி இறுதியில் மரணம் ஏற்படுகின்றது. இஸ்ரேல் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதையும் அறிந்திருந்தோம். கடந்த யுத்தகாலங்களிலும் பொஸ்பரஸ் குண்டுகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததை நினைவுபடுத்துகிறேன். பாலஸ்தீன மக்களை தம்முடைய ஆய்வுகூட எலிகளாகப் பயன்படுத்துவதற்காகவா இஸ்ரேல் அவர்களை ஆக்கிரமிப்புச் செய்கிறது..? தம்முடைய இராணுவ வளர்ச்சிக்கான பரிசோதனைக்காகவா பாலஸ்தீனர்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.. ? எவ்வளவு மனிதமற்ற செயலிது!?

என்னுடைய இதயத்தை அழச்செய்த ஒரு காணொளியை இன்று பார்த்தேன். அது மிகவும் கொடுரமானது. ஒரு பாலஸ்தீனத் தந்தை இறந்துபோன தன் இரண்டு சிறு பிள்ளைகளையும் இறுக்கி அணைத்தபடி கதறுகிறான். அவர்களைக் காப்பாற்ற முடியாத கையகலாத்தனத்திற்காக அவர்களிடம் மன்னிப்புக்கேட்டு ஓலமிடுகின்றான். ஆயுதங்களற்ற வெகு சாதாரண ஒரு குடிமகன், இஸ்ரேலிய விமானங்களிடமிருந்தும் போர்க் கப்பல்களிலிருந்தும் தன் பிள்ளைகளைப் பாதுகாக்க முடியாத துயர நிலைக்காக தன் பிள்ளைகளிடம் மன்னிப்புக் கேட்டு இறைஞ்சுகிறான். எத்தனை நெஞ்சை உலுக்குகிற காட்சியிது

இது மற்றுமொரு காணொளி. http://mashable.com/2014/07/10/abc-diane-sawyer-palestinian-family-israeli/ ABC News தொகுப்பாளர், தன்னுடைய செய்தியளிக்கையில் ஏவுகணைகள் இஸ்ரேலிற்குள் வந்து விழுகின்றன என்கிறார். அப்பொழுது திரையில் இஸ்ரேலிய விமானங்கள் படுவேகமாக காஸாவிற்குள் பறக்கின்றன, இரண்டு பாலஸ்தீன இளைஞர்கள் இடிபாடுகளுக்கிடையில் படுக்கை மெத்தைகளைத் தூக்கிச் செல்லும் ஒரு புகைப்படத்தை திரையில் காட்டி “ஒரு இஸ்ரேலியக் குடும்பம், முடிந்தவரை தம்மைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்..” என்று அவர் விவரிக்கின்றார். பின்னர் அது ”தவறு” என்று ABC News ஒப்புக்கொண்டது ஆனால் யோசித்துப் பார்த்தால், ஒருமுறை மிகப் பரவலாக பரப்பப்பட்ட பொய்யை எத்தனைமுறை “தவறென்று” ஒப்புக்கொண்டாலும் அதுவே மறுக்கமுடியாத உண்மையாக மாறிப்போகின்றது .

நான் மறுபடியும் யோசிக்கின்றேன். இந்த யுத்தத்தின் பின்னாலுள்ள உண்மையான காரணம் என்ன..? இது ஏன் இப்பொழுது நிகழ்கிறது. வெஸ்ட்பாங்கில் கொல்லப்பட்ட மூன்று இஸ்ரேலியக் குடியேறிகளுக்காகவா.. ? அல்லது ஹமாஸின் ரொக்கெற்றுக்கள் இஸ்ரேலின் உள்ளே தாக்கியதனாலா..?

ஹமாஸ், ஜனநாயக வழிமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்டதன் ஊடாக காஸாவை நிர்வகிக்கிற ஓர் அமைப்பு. நாம் விரும்புகிறோமோ இல்லையோ, இது சட்டப்படியானது. இது காஸா மக்களுடைய தெரிவு. பொதுமக்கள் மீதும் யுத்தத்தில் ஈடுபடாதவர்கள் மீதும் இஸ்ரேல் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வது, ஹமாஸை அழிப்பதற்கானது மட்டுமல்ல. இதனை ஒரு கூட்டுத் தண்டனையாக இஸ்ரேல் கருதுகிறது. போராளிகளையும், ஹமாஸ் உறுப்பினர்களையும், காவல்துறை அதிகாரிகளையும், மட்டுமே தாம் தாக்குவதாக இஸ்ரேல் நியாயப்படுத்தினால்கூட – அவர்களுடைய குடும்பங்களையும் அயலவர்களையும் ஏன் கொல்கிறார்கள்..? இஸ்ரேல் வான்கலங்கள், பாடசாலைகளையும், சுகாதார நிலையங்களையும், பள்ளிவாசல்களையும், நீர் வசதிகளையும், இடம்பெயர்ந்தோர் புனர்வாழ்வு முகாம்களையும்.. சிறுவர் முன்பள்ளிகளையும் ஏன் குறிவைக்கின்றன. இந்த இடங்கள் ஆயுதங்களைச் சேமித்து வைக்கும் இடங்களா..? அதற்கு வாய்ப்புக்கள் உண்டா..? இதைக் கேட்க நாதியேயில்லை. சட்டங்களும் இல்லை. தர்க்கங்களும் இல்லை. யுத்தம் தொடங்கிய நாள் முதலாகக் கொல்லப்பட்டவர்களிலும் காயமடைந்தவர்களிலும் 70 வீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களுமே என்று மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. 90 வீதத்திற்கு அதிகமானோர் சாதாரண பொதுமக்கள்.

எங்களிடம் ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறைகளோ, அல்லது வான் காப்பு ஆயுதங்களோ கிடையாது. நான் நினைக்கிறேன், உண்மையில் மிக முக்கியமான தலைவர்களைக் கொல்வது மட்டுமே இஸ்ரேலின் நோக்கமாயிருந்தால் ஏன் அவர்களைக் குறி வைக்க முடியவில்லை. இஸ்ரேலிடம் அதற்குப் போதுமான தொழில்நுட்பமும் சக்தியும் உள்ளது. ஆனால் அவர்கள் வலுவற்ற பெண்களையும், குழந்தைகளையும் பொதுமக்களையுமே கொன்று குவிக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக இனப்படுகொலையை அரங்கேற்றுகிறார்கள். ஹமாஸ் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்க பொதுசனங்களை முதலீடு ஆக்குகிறார்கள். அவர்களுக்கு, பாலஸ்தீனம் தொடர்ந்து துன்பத்தில் கிடந்துழல வேண்டும்.

காஸா முழுவதும், அச்சுறுத்தலும், கொலையும், படுகொலையுமான நூற்றுக்கணக்கான கதைகள் இருக்கின்றன. நான் அரசியல் பேசிவில்லை. தேவையுமில்லை. என்னுடைய கவனமெல்லாம், ஒவ்வொருநாளும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிற மனிதர்களைக் குறித்ததே. காஸா நிலத்துண்டுக்குள் அடைபட்டு சொல்லொணாத் துயரங்களுக்கு முகம்கொடுக்கும் மனிதர்களைப் பற்றியதே.

ஒருவேளை, பாலஸ்தீனப் போராளிகளிடம், உயர் இராணுவ தொழில்நுட்பம் வாய்த்து, பாலஸ்தீனர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற படுகொலையின் பங்குதாரர்களான ஒவ்வொரு இஸ்ரேலிய வீரனையும், இராணுவ அதிகாரியையும், அரசியல்வாதிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் தண்டிப்பதற்கு முடிவெடுத்தால் என்ன என்று கற்பனை செய்கிறேன்… அது போன்றவொரு செயலைச் செய்தால் என் யூகத்தின்படி இஸ்ரேல் என்றொருநாடு பின்னர் இருக்காது.

யூத அதி தீவிர வலதுசாரிக் கட்சியொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அய்லெட் ஷேக்ட் என்ற பெண்மணி தெரிவித்த கருத்துப்பற்றிய ஒரு கட்டுரையை வாசித்தேன். அதித்தீவிர வலதுசாரியென்றால் நேத்தன்யாஹூவுக்கும் வலது. http://www.independent.co.uk/voices/why-im-on-the-brink-of-burning-my-israeli-passport-9600165.html அய்லெட் ஷேக்ட் தன் பேஸ்புக் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

”ஒவ்வொரு தீவிரவாதியின் பின்னாலும் பலநூறு ஆண்களும் பெண்களுமுள்ளார்கள். அவர்கள் இல்லாமல் தீவிரவாதத்தை முன்னெடுக்க முடியாது. அவர்கள் எல்லோருமே எதிரிகள். ஆகையால் அவர்கள் சாவை அவர்களே தேடிக்கொள்வார்கள். தம் பிள்ளைகளை பூக்களோடும் முத்தங்களோடும் நரகத்திற்கு அனுப்பிவைத்த எதிரிப்படையின் தாய்மாரையும் இப்பொழுது சேர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களும் தங்கள் மகன்களைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டும். இதைவிட நீதி எதுவும் இருக்கமுடியாது”

மனிதத் தன்மையற்ற வார்த்தைகள். அப்படியானால் நாங்களும் சகல இஸ்ரேல் மக்களையும் எதிரிகளாகக் கருதவேண்டும்..? ஏனென்றால் 66 ஆண்டுகளுக்கு முன்னால 1948இல் பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டு அவர்கள் வாழ்ந்த வீடுகளில் இருந்து அகதி முகாம்களுக்கும், புலம்பெயர்ந்தவர்களாக உலகம் முழுவதற்கும் விரட்டப் பட்ட போதும், சர்வதேச சட்டங்களுக்கு முரணாக, அவர்கள் தாயகம் திரும்புவது தடுக்கப்பட்டது. பாலஸ்தீனத்தில் வாழ்ந்த பூர்வீக மக்களை வெளியேற்றியதன் ஊடாக இஸ்ரேல் என்றொரு நாடு உருவாக்கப்பட்டது. வரலாற்று வேர்களைக் காரணம் சொல்லி நில அபகரிப்புக் கோரப்பட்டது.
ஆனாலும் ஒன்றை நான் உறுதியாகச் சொல்கிறேன். படை நடவடிக்கைகளால் பெயர்க்கப்பட்டபோதும், இஸ்ரேலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோதும், மிருகத்தனமாக வதைக்கப்பட்டபோதும், முற்றுகைக்குள் எம்மை ஒதுக்கித் தள்ளியபோதும் – பாலஸ்தீனர்கள் நாடற்றவர்கள் அல்ல. இத்துயரின் முடிவாக என்றோ ஒருநாள், நாம் நம் நிலத்திற்குத் திரும்புவோம்.

தொலைவிலிருந்து இயக்கும் ஆளில்லாத சிறிய விமானங்கள் சிலவற்றை பாலஸ்தீனப் போராளிகள் இஸ்ரேலின் உள்ளே அதிக தூரங்களுக்குச் செலுத்தித் தாக்குதல் நடாத்தினார்கள் என்ற செய்தியோடு இந்நாள் கழிகிறது. இந்நாளின் குறிப்பிடத்தக்க செய்தியும் இதுவே. ஆம், நம்பிக்கை ஒன்றுதான், மிக அடிப்படையான வளத்தோடு, ஒன்றைக் கண்டுபிடிக்கவும், அதை உருவாக்கவும், அதைக்கொண்டு எதிர்க்கவும் உங்களை ஊக்குவிக்கும். முழு அரபு உலகமும் செய்யாத ஒன்றை இவர்கள் செய்து முடித்துள்ளார்கள்.

சாத்தியமான மோதல் தவிர்ப்பு ஒன்றைப் பற்றியும் செய்திகளும் உலாவுகின்றன. இஸ்ரேல் – காஸா எல்லைப் பகுதியில் மோதல் தவிர்ப்பு ஒன்றை எகிப்து பரிந்துரை செய்துள்ளது. இதன்படி நாளை காலையிலிருந்து இஸ்ரேல் தன்னுடைய அனைத்து வான்தாக்குதல்களையும், கடல், தரைத் தாக்குதல்களையும் நிறுத்தவேண்டும். தரை வழிப் படையெடுப்பை மேற்கொள்வதில்லையென்றும் பொதுமக்களைத் தாக்குவதில்லையென்றும் உறுதியளிக்கவேண்டும். அதே நேரத்தில் சகல பாலஸ்தீனப் பிரிவுகளும் தமது தாக்குதல்களை நிறுத்த வேண்டும். நிரந்தர யுத்த நிறுத்தத்திற்கு ஏதுவாக காஸா இஸ்ரேல் எல்லைகள் திறக்கப்பட்டு பொருளாதாரத் தடை தளர்த்தப்பட வேண்டும். பொதுமக்களின் போக்குவரவு அனுமதிக்கப்படவேண்டும்.

இது நல்ல செய்தி. எகிப்தின் பரிந்துரைக்குச் சாதகமான பதில்களை எதிர்பார்த்திருக்கின்றேன். ஒருவேளை இது நடந்துவிட்டால், என்னுடைய பிறந்த நாளான நாளை, நான் மட்டுமல்லாது லட்சக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கப் போகின்ற ஒரு நாளாக அமையும் என்று நம்புகிறேன்.