காஸா! படுகொலை நாட்களின் குறிப்புகள்

Gaza, July 14, 2014

சண்டையின் ஆறாவது நாள், வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நாளாயிற்று. அடுத்த நாள் நோன்புக்கு தயாராகும் விதமாக நானும் என் குடும்பத்தினரும் சூஹூர் உணவை உண்டுக் கொண்டிருந்தோம். ஜன்னலிற்கு எதிர்ப்புறமாக நான் உட்கார்ந்திருந்தேன். இரவின் கருமையை சடுதியில் பகற்பொழுதின் பிரகாசமாக மாற்றிய பெரும் ஒளிவெள்ளத்தை வெளியிற் கண்ட சில நொடிகளுக்குள்ளாகவே பயங்கரமான குண்டுவெடிப்புக்கள் தொடர்ச்சியாகக் கேட்கத்தொடங்கின. நாங்கள் வீட்டின் மத்தியிலிருந்த அறையை நோக்கி ஓடினோம். நெடுநேரத்திற்கு என்னுடைய உடல் அதிர்ந்தபடியே இருந்தது. இதயம் ஒரு நிமிடம் உறைந்துவிட்டது. மூச்செடுக்க முடியவில்லை. சிறு குழந்தைகளின் முன்னாக அழக்கூடாது என்று என்னை கட்டுப்படுத்திக்கொண்டு நின்றேன். அவர்களுடைய கண்களின் அச்சத்தை என்னால் காணமுடிந்தது. அமைதியடைய முயற்சித்தேன்.

அத்துடன் முடிந்துவிடவில்லை. மறுபடியும் பெரு வெடிப்பொலிகள் காற்றைத் துளையிட்டன. ஜன்னலிலிருந்து தூரவிலகி மறுபடியும் வீட்டின் மத்தியில் கூடிநின்றோம். எங்கள் அயலில் வான்தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதை உறுதி செய்யும்வரை ஒன்றாக உட்கார்ந்திருந்தோம். அருகிலுள்ள அரசாங்க நிலையங்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. குண்டுத்தாக்குதலில் தம் வீடுகளை இழந்த என் தங்கையின் குடும்பத்தினரோடு சேர்த்து இந்த நிமிடத்தில் 20 பேர் எங்களோடிருந்தார்கள். பாதுகாப்புத்தேடி அவர்கள் எம்மிடம் வந்திருந்தார்கள். ஆனால் காஸாவில் பாதுகாப்பான இடமென்று ஏதும் இருக்கிறதா என்ன..?

நாம் தொடர்ந்து அரட்டையடித்தோம். சில சமயங்களில் சிரிக்கவும் செய்தோம். தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டுவெடித்ததாயும் உடனேயே தரையோடு விழுந்து படுத்துவிட்டதாயும் கூறிய அக்காவின் மகன், தான் மறுபடியும் தொழுகை செய்ய வேண்டுமா என்று எங்களைக் கேட்டான். துயரமும் புன்னகையும் கூடிய கணம் அது. நாங்கள் தூங்கச் சென்றோம்.

காலை விடிந்தது. பகற்பொழுதில் குண்டுவெடிப்புக்களின் கடுமை குறைந்திருந்தது. எப்படியாயினும் இரவுகளில் மிகக் கடுமையான குண்டுத்தாக்குதல்கள் நடக்கின்றன. எனது தந்தையும் அண்ணாவும் தாக்குதல்கள் ஆரம்பித்த பின்னர் முதற்தடவையாக காய்கறிகள் வாங்கி வருவதற்காகச் சந்தைக்குச் சென்றார்கள். கடந்த சில நாட்களாக அருகிலுள்ள கடையிலிருந்தே பொருட்களை வாங்கிச் சமாளித்தோம். வழமையாக காஸாவில் குடியிருப்புக்களின் அருகில் ஒரு சிறிய கடையிருக்கும். பகற்பொழுதில் சில மணி நேரங்களிற்குத் திறந்திருப்பார்கள். சண்டையின் முதல் மூன்று நாட்கள் தெருவில் மனிதர்களைக் காண்பதே அரிதாயிருந்தது. அந்தளவிற்கு இஸ்ரேலின் வான்தாக்குதல்கள் வெறித்தனமாயிருந்தன. ஒரு வாரத்தின் பின்னர் முதற்தடவையாக பல்கணிக்குச் சென்றேன். வீதியில் சன நடமாட்டமிருந்தது. கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்கித் திரும்பினார்கள்.

காஸாவின் போர் நெருக்கடிப் பகுதிகளில் வசித்துவந்த மக்கள் சண்டை தொடங்கிய நாளிலேயே அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பிற்காக நண்பர்கள், சொந்தக்காரர்கள் வீடுகளுக்கு வந்திருந்தார்கள். காஸா – உலகில் அடர்த்தியான சனத்தொகையைக் கொண்டதொரு நகரம். 365 சதுர கீலோமீற்றர் பரப்பில் 1.7 மில்லியன் மக்கள் வசிக்கின்றார்கள். பெரும்பாலான வீடுகள் பல மாடிக்கட்டடங்களைக் கொண்ட குடியிருப்புத் தொகுதிகளில் அமைந்துள்ளன. பெரும்பாலும் ஒரு குடும்பமே வாழக்கூடியவை. ஆனால் தற்போதைய சூழலில் 150 சதுர மீற்றர் பரப்புடைய ஒரு வீட்டில் 20 பேராவது வாழவேண்டியுள்ளது.

காஸாவில் குழாய் நீரை நாம் அருந்துவதில்லை. குடிப்பதற்கான குடிநீரை நாம் கடைகளிலேயே வாங்குகிறோம். கூரைத் தாங்கியில் சேமித்த தண்ணீரே பிற தேவைகளுக்குப் பயன்படுகிறது. இப்பொழுது கூரைத் தாங்கியின் நீர் ஏறக்குறையத் தீரும் நிலைக்கு வந்துவிட்டது. யுத்தம் இன்னும் சில நாட்களுக்குத் தொடருமானால் நாம் தண்ணீருக்கு என்ன செய்வது என்பதுதான் அப்பாவின் கவலையாக இருந்தது. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை நடக்கும் நீர் விநியோகம் தடைப்பட்டுவிட்டது. இந்நிலை தொடருமானால் குடிநீர்ப் போத்தல்களையே பிறதேவைகளுக்கும் நாம் வாங்கிப் பயன்படுத்தவேண்டியிருக்கும். அவ்வாறு குடிநீரை வாங்கும் வசதியற்ற பெருவாரியான காஸா மக்கள் இச்சூழலை எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

தண்ணீர் காஸாவின் மிக முக்கியமான பற்றாக்குறை. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பினால் கடுமையான நீர்த் தட்டுப்பாடு இப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பலஸ்தீனத்தின் நீர் வளம் முழுமையாக இஸ்ரேலினால் கட்டுப்படுத்தப்படுகின்றது. காஸாவின் ஒரேயொரு நீர் மூலமான நிலத்தடி நீர் இஸ்ரேல் கடற்பகுதியிலிருந்து ஆழத்தில் கிழக்கு – மேற்கான நீரோட்டாக அமைந்துள்ளது. ஆனால் இஸ்ரேல் தன்னுடைய எல்லைப்பகுதியில் ஆழமான கிணறுகளை காவல் வளையம் போல அமைத்துள்ளதனால் பெருமளவான நீர் காஸாவை வந்தடைய முன்பாகவே தீர்ந்துவிடுகின்றது. மிகவும் வரையறுக்கப்பட்ட நீரே காஸாவிற்கு வழங்கப்படுகிறது.

இஸ்ரேலின் வட பிரதேசத்திலிருந்து தெற்குக்கு நீர் கொண்டுசெல்லப்படுகின்ற அதேவேளை, பலஸ்தீனத்தின் இன்னொரு பகுதியான வெஸ்ட் பாங்கிலிருந்து காஸாவிற்கு நீர் எடுத்துவர அனுமதிக்கப்படுவதில்லை. இதுகாரணமாக நிலத்தடி நீர் மிக அதிக பயன்பாட்டிற்காக உறிஞ்சப்படுவதோடு அதனால் கடல்நீர்க் கலப்பும் ஏற்படுகின்றது. வெறும் 5 முதல் 10 வீதமான நிலத்தடி நீரையே குடிநீருக்காகப் பயன்படுத்த முடிகிறது. கடல்நீர் ஊடுருவலால் ஏற்பட்ட உப்புத்தன்மை, விவசாய நடவடிக்கைகளினால் ஏற்பட்ட மாசுக்கலவை ஆகியவற்றால் காஸாவின் கரையோரப்பகுதி நீர் மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல என்று 2000 ஆம் ஆண்டுமுதல் கூறப்படுகின்றது.

என்னுடைய தந்தை கடையிலிருந்து பொருட்களுடன் திரும்பியிருந்தார். இருளும் பொழுதில் நோன்பினை முடித்துக்கொள்வதாற்கான உணவினை அம்மா தயாரிக்க அவருக்கு உதவினேன். பகல்வேளை குண்டுச் சத்தங்கள் தூரத்திலேயே கேட்டன. சலாட் செய்துகொண்டிருந்தபோது முணுமுணுக்கத் தொடங்கிய என் பாடலை தூரத்தில் கேட்ட குண்டு வெடிப்பு ஒலி இடைநிறுத்தியது. சில கணங்கள் பாடலை நிறுத்திவிட்டு மறுபடியும் ஆரம்பித்தேன். வெடித்த குண்டுகளால் எவருடைய உயிரும் பறிக்கப்பட மாட்டாது என்னும் நம்பிக்கையை என் பாடல் எனக்குள் விதைத்தது. உங்கள் பாடலுக்கான பின்னணி இசையை மேலே விமானங்களே வழங்கும் வாய்ப்பை உங்களில் எத்தனை பேர் பெற்றீர்களோ தெரியாது.. நான் பெற்றிருந்தேன்.

யுத்தச் சூழல் பற்றிய சிந்தனைகளிலிருந்து கவனத்தைத் திருப்பும் ஒரு மார்க்கமாக சிறுவர்கள் என்னுடைய மடிக்கணணியில் கார்ட்டுன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கடுமையான இத்தாக்குதல் நாட்களில் என் அக்காவின் பிள்ளைகளோடு தொடர்ந்து பேசினேன். அவர்களுடைய அனுபவங்களையும் உணர்வுகளையும் அவர்கள் வெளிப்படுத்தவேண்டும் என்பதென் விருப்பம். தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி அடுத்த வான் தாக்குதலுக்கு முன்னாக கணநேரத்தில் ஓடித்தப்பியதை அவர்கள் உற்சாகத்துடன் நடித்துக் காட்டி கதை சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர். குண்டுகள் வீழ்ந்தபோது தம் படுக்கையிலிருந்து காற்றில் துள்ளி அறையின் மூலைக்குள் ஒடுங்கியதையும் அப்பொழுது பிற சிறுவர்கள் சிரித்ததையும் கூட அவர்களில் சிலர் சொன்னார்கள். அவர்கள் தம் அழுத்தங்களிலிருந்து விடுபடவேண்டுமென்று நான் விரும்பினேன். நானும் அவர்களுடைய மனநிலையிலேயே வாழ்கிறேன் என்பதை அவர்கள் அறிய வேண்டும். அச்சப்படுவதென்பது சாதாரணமானது என்பதை அவர்கள் உணர வேண்டும். தொலைக்காட்சியில் காண்பது போன்ற ஓர் உண்மையான சண்டைப்படத்தின் உள்ளேயே வாழ்வதென்பது எத்தனை அதிஸ்டமானது என்று என் அக்காவின் மகன் சொன்னான். யுத்த அதிர்ச்சிகள் நீண்டகால நோக்கில் குறிப்பாக குழந்தைகளை உளவியல் ரீதியாகப் பாதிக்கும் என்பதுதான் என் கவலையாயிருந்தது.

முந்தைய நாளைப்போல் இன்று என் மடிக்கணிணியில் அமர்ந்து நிமிடத்திற்கு நிமிடம் செய்திகளை பார்க்கமுடியவில்லை. பாதீஷ் குடும்பப் படுகொலை – மிகக் கொரூரமான செய்தியாக என்னைத் தாக்கியது. பெண்களையும் குழந்தைகளையும் கொண்ட 18 பேர் கடந்த இரவு இஸ்ரேலிய வான்தாக்குதலில் கொல்லப்பட்டார்கள். ஏவுகணைகள் அவர்களுடைய வீட்டை இலக்கு வைத்துத் தாக்கின. படுகொலையின் படங்களும், வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட உடல் அவயங்களும், உறவினர்களின் கதறலும் என்னைப் பேச்சற்றவளாக்கிவிட்டன. காஸா மக்களின் துயர நிலையை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இக்காட்சிகள் என்னை நிலைகுலையைச் செய்துவிட்டன.

காஸாவின் வடக்குப் பிரதேசத்தில் உள்ள மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறிவிட வேண்டுமென்று இன்று இஸ்ரேல் துண்டுப் பிரசுரங்களை வீசியது. அதில் சொல்லப்பட்டவாறு இஸ்ரேலிலிருந்து ஏவப்பட்ட ரொக்கெட்டுக்கள் வட பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளையும் தாக்கின. சுமார் 8000 பலஸ்தீனர்கள் இடம்பெயர்ந்து ஜபால்ய அகதிகள் முகாமிலுள்ள UNRWA பாடசலைகளில் தஞ்சமடைந்தார்கள். இதே மாதிரியான ஒரு சூழலில்தான் 2009 இலும் ஒரு UNRWA பாடசாலை குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது. ஆம். காஸாவில் பாதுகாப்பான பகுதிகளென்று எதுவுமே இல்லை.

தாக்குதல்கள் ஆரம்பித்த நாள் முதலாக நான் வீட்டைவிட்டு வெளியேறவேயில்லை. இன்று மதியத்திற்குப் பின்னர் அக்காவின் பிள்ளைகள் தங்களுடைய தந்தைவழி தாத்தா பாட்டியைப் பார்த்து வந்திருந்தார்கள். வழமையாக சன நெருக்கடி மிகுந்து காணப்படும் காஸாவின் மத்திய பகுதி இன்று பேய்களின் நகரமாகக் காட்சியளித்ததாக அவர்கள் விவரித்தார்கள். திறந்திருந்த ஒரேயொரு பேக்கரியில் பாண் வாங்க வந்தவர்களைத் தவிர்த்து தெருவில் எவரையும் காணமுடியவில்லையாம். எமது வீட்டுக்கு அருகாக இருந்த அரச கட்டடத்தொகுதியொன்றும் இரவுத்தாக்குதலில் தரைமட்டமாகிவிட்டதாக அவர்கள் சொன்னார்கள். காஸாவிலேயே தங்கிநின்று நடப்பதெல்லாவற்றையும் பதிவு செய்யும் நண்பர்களான செய்தியாளர்களை நினைத்துப்பார்க்கிறேன். அவர்கள்தான் எத்தனை துணிச்சலானவர்கள்..
யுத்தநிறுத்தம் ஒன்றைப்பற்றிய செய்திகளில் மக்கள் ஆர்வமாயிருந்தார்கள். தாமதம் செய்யாமல் இத்தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும். ஆனால் அதேவேளை பலஸ்தீனர்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்வதாக இச் சண்டை நிறுத்தம் அமையவேண்டும். நாம் நிறையப் பாதிக்கப்பட்டு விட்டோம். அதனால் நாம் முன்வைக்கும் காலடிகள் சாத்தியமான அளவிற்கு இத்துயரங்களைக் குறைப்பதற்காக இருக்கவேண்டும். 2006 இலிருந்து காஸாவை இறுக்கும் முற்றுகை நீக்கப்பட வேண்டும். தற்போதைய மின் தட்டுப்பாட்டிற்குக் காரணமான பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும். எல்லைகள் திறக்கப்பட்டு நீண்டகாலமாகத் தடைப்பட்ட வர்த்தக, ஏற்றுமதி நடவடிக்கைகள் முன்னேற்றம் காணவேண்டும். உடைந்த நம் வீடுகளை மறுபடியும் கட்டியெழுப்பும் வகையில் கொங்கிரீட் சீமெந்து காஸாவிற்குள் அனுமதிக்கப்படவேண்டும்.

யுத்தத்தின் இரத்தம் தோய்ந்த இந்நாளும் கழிகிறது. ஆறாவது நாள் முடிகிறது. இந்த இரவு அமைதியாயிருக்குமென்றும் சமாதானத்தை அளிக்குமென்றும் நம்புகிறேன். ஆயினும் சந்தேகமாயிருக்கிறது. ஏனெனில் இந்நாட்களில் காஸாவின் இரவுகள் பயங்கரமானவையாக உருமாறுகின்றன. நாம் நம்முடைய இயல்பு வாழ்விற்குத் திரும்பவேண்டுமென்று விரும்புகின்றேன். நம் காயங்களுக்கு மருந்திடவும், துக்கங்களிலிருந்து விடுபடவும் ஏதுவாக இவற்றிற்கெல்லாம் ஒரு முடிவு வந்துவிடாதா…