காஸா! படுகொலை நாட்களின் குறிப்புகள்

Gaza, July 13, 2014

இன்று யுத்தத்தின் ஐந்தாம் நாள், இருளடைந்து விட்டதா.. இது ஐந்தாவது நாளா அல்லது ஆறாவது நாளா.. ? பல வருடங்களுக்கு முன்னர் நடந்ததொன்றை நினைவு கொள்வதுபோல இந்த யுத்தம் எப்பொழுது ஆரம்பித்ததென நினைவுபடுத்த முயற்சித்தேன். வெகு சில நாட்களே ஆகியுள்ளன என்பதை நம்ப முடியவில்லை. நாட்களின் எண்ணிக்கை ஒரு பொருட்டே இல்லை. சொற்ப நாட்களில் காஸாவைத் துடைத்தழிக்க இஸ்ரேலால் முடியும். ஆனால் பலஸ்தீனரின் துயரங்களை நீட்டிப்பதும் வடுக்களை ஆழப்படுத்துவதும்தான் அவர்களுக்கு வேண்டியதாயிற்றே..

கடந்த இரவு தொடங்கிய கடல்வழித் தாக்குதல்களும் குண்டு வீச்சுக்களும் குறைந்த அளவில் இன்னமும் காஸா நகரப்பகுதியில் தொடர்ந்துகொண்டிருக்கின்றன

நிலைகுலையச்செய்த சம்பவமொன்று நேற்று இரவு நடந்தது. மாற்றுத் திறனாளிகளுக்கான புனர்வாழ்வு நிலையத்தின் மீது இஸ்ரேலிய வான்படையினர் குறிவைத்துத் தாக்கியதில் நித்திரையிலேயே இரண்டு மாற்றுத்திறனாளிப் பெண்கள் கொல்லப்பட்டார்கள். பலர் காயமடைந்தனர். அவர்களில் பலர் அவயங்களை இழந்திருந்தனர். ஒரே சமயத்தில் பல தொண்டு நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் குறிவைக்கப்பட்டன. எத்தனை வெட்கக் கேடான சம்பவம் இது. இதனை எவ்வகையிலாவது அவர்களால் நியாயப்படுத்தி விட முடியுமா.. ?

சென்ற இரவு நான் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பிறகு எப்படி என்னால் தூங்கிட இயலும்.? நிம்மதியாக உறங்கும் உலகத்திலிருக்கும் அனைத்து மக்களுக்கும்.. குண்டுச் சத்தங்கள் இல்லை, வேவு விமானங்களின் இரைச்சல் இல்லை, இறந்த உடல் அவயங்களின் பரிதாபகரமான படங்கள் இல்லை, கட்டிட இடுபாடுகளிடையே சாவணைத்த தம் குழந்தைகளைக் கட்டியணைக்கும் பெற்றோர்களின் காணொளிகள் இல்லை.. இந்த ஆசீர்வதிக்கப்பட்ட தூக்கத்திற்கு நீங்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளவேண்டும் ..

ஒவ்வொரு முறையும் கண்களை மூடும்போதும் என் மக்கள் தூங்கிக்கொண்டிருக்க தாக்கியழிக்கப்படும் நூற்றுக்கணக்கான வீடுகளையே காண்கிறேன். சில சமயங்களில் முன் எச்சரிக்கையோடும் பல சமயங்களில் இன்றியும் ஒரு வீடு F 16இனால் குறி வைக்கப்படும்போது அதனுடைய அர்த்தம் என்னவென்றால் தாக்குதலின் தீவிரத்தினால் சுற்றியுள்ள 5 வீடுகளும் கடுமையாகச் சேதமுறும் என்பதுதான். நள்ளிரவில் அயல் வீடொன்றுக்கு எச்சரிக்கை கிடைக்கும் போதே நாமும் வெளியேறிவிட வேண்டும். எச்சரிக்கை கிடைத்த ஒருவர் உங்களிடம் வந்து சொல்வதையும் 7இலிருந்து 10 நிமிடங்களுக்குள்ளாக கண்ணுக்கு முன்னால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நீங்கள் ஓடுவதையும் கண் முன்னாலேயே வீடு அழிக்கப்படுவதையும் உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா..?

வீடென்பது சுவர்களாலான வெறும் கட்டிடம் அல்ல. எங்களுடைய வீடுகள் எம்முடைய சிறு பராயங்கள். எம்முடைய நினைவுகள், எம்முடைய கனவுகள். அது எம்முடைய புகலிடம். உங்களுடைய புத்தகங்களை விட்டு, உங்களுடைய தலையணையை விட்டு, பணத்தை, நகைகளை விட்டு, சின்னத்தங்கைக்குப் பிடித்தமான பொம்மையை விட்டு, உங்கள் மகனின் விளையாட்டுப் பதக்கங்களை விட்டு, நீங்கள் விரும்பும் தேனீர் கோப்பையை விட்டு எப்படி உங்களால் நிமிடத்தில் வெளியேற முடியும்.. ஒருவேளை வெளியேறி உயிர் தப்பினாற்கூட காலம் முழுதும் செத்துப்பிழைப்பதே வாழ்க்கையாயிருக்கும்.

கடந்த நாட்களில் இந்தக்கதையை கேள்வியுற்றிருந்தேன். யாசீர் அல் ஹஜ் ஓர் இளைஞர். அவருடைய தொலைபேசிக்கு இஸ்ரேலிய இராணுவத்திடமிருந்து அழைப்பொன்று கிடைத்திருந்தது. 10 நிமிடங்களில் அவருடைய வீட்டைவிட்டு வெளியேறுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. யாசீர் அப்பொழுது வீட்டில் இருக்கவில்லை. வெளியே தன் நண்பர்களோடு இருந்தார். வீட்டிற்குத் தொடர்ச்சியாக அழைப்பை மேற்கொண்டும் யாரும் பதில் அளிக்கவில்லை. யாசீர் தன்னால் முடியுமானவரை விரைவாக ஓடினார். அவர் வீட்டை அடைந்த பொழுதில் எல்லாமும் முடிந்திருந்தது. வீடு, அவருடைய குடும்பம், அனைத்தும் மண்ணோடு மண்ணாகிவிட்டன. தன்னுடைய தவறில்லாத ஒன்றின் கொரூர நினைவைச் சுமந்துகொண்டு மிச்சமுள்ள நாட்களை அவர் எப்படி வாழப்போகிறார் என்று கற்பனை செய்யவே முடியவில்லை.

நொடிக்கு நொடி செய்திகளைப் பின்தொடரும் சக்தி இன்று எனக்கில்லை. ஆயினும் பேஸ்புக் தகவல்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நெஞ்சை உருக்கும் ஒளிப்படங்களையும் காணொளிகளையும் கொண்ட செய்திகள்.. நேற்று நான் குறிப்பிட்ட ஹன்னாம் குடும்பத்திலிருந்து ஒரு குழந்தை. அவளுடைய பெயர் கிஃப்பா.. (போராடுதல் என்று அர்த்தம்) பிறப்பிலேயே காது கேளாதவள். அவள் தன் தாயின் குரலை ஒருபோதும் கேட்டதில்லை. ஒரு பாடலை, ஒரு பூனையின் சத்தத்தை, ஒரு சிட்டுக்குருவியின் குரலை அவள் எப்போதும் கேட்டதில்லை. இறுதியில் அவளுக்குச் சாவினைக் கொடுத்த குண்டுகளின் பெரு வெடிப்புச் சத்தத்தையும் அவள் கேட்டிருக்க மாட்டாள்.

இக்காலத்தில் உலகின் பல நாடுகளிலும் நடந்த காஸாவிற்கு ஆதரவான போராட்டங்களும், எதிரியின் யுத்தக்குற்றங்களை அம்பலப்படுத்தியும் அவனுடைய ஆக்கிரமிப்பை நிறுத்தச் சொல்லியும் இடம்பெற்ற ஊர்வலங்களும் என் ஆத்மாவிற்கு சற்று உயிரளித்தது. பிரித்தானியாவிலும், ஐரோப்பாவிலும், ஆசியாவிலும், யப்பானிலும், அரபு நாடுகளிலும் நடைபெறும் இப்போராட்டங்களின் வழி பலஸ்தீனத்தை அங்கீகரிப்பவர்களும், அதனுடைய நியாயப்பக்கத்தைப் புரிந்து கொண்டவர்களும், ஆதரவளிப்பவர்களும் இந்த உலகமெங்கும் வாழ்கிறார்கள் என்று அறியும்போது நம்பிக்கை துளிர்த்தெழுகிறது. உடனடி நடவடிக்கைகளுக்காக இந்த மக்கள் தம்முடைய அரசுகளுக்கு மேலும் மேலும் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டுமென்பது என்னுடைய விருப்பம். அவர்களும் அதனை அறிவார்கள். டப்ளினில் ஓங்கி ஒலித்த ஒரு பிரித்தானியக் குழந்தையின் குரல் இன்றைய நாளை அர்த்தமாக்கியது. அவள் உரக்கச் சொல்கிறாள்.. ”ஆறிலிருந்து கடல் வரை, சுதந்திர பாலஸ்தீனம்! சுதந்திர காசா!”

அதே சமயம் சிலரால் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க முடிகிற தர்க்கம் என்ன என்பதும் எனக்குப் புரியவில்லை. இவ்விடயத்தில் சாதாரணமான ஒரு பின்னணியை நான் தரமுடியும். 66 வருடங்களுக்கு முன்னால் பலஸ்தீனத்தில் ஏற்கனவே மக்கள் குடியிருந்த பகுதிகளில் உலகெங்கும் துன்புறுத்தப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தினர் அகதிகளாகக் குடியேற்றப்பட்டனர். ஐரோப்பாவில் துன்புறுத்தப்பட்ட யூத அகதிகள் தமக்கான தாயகத்தைக் கண்டுபிடித்த போது இன்னுமொரு அகதிக்கூட்டம் உருவானது. அவர்கள் பலஸ்தீனர்கள். இஸ்ரேலிய விரிவாக்கம் நிரந்தரமானதும் நியாயமற்றதுமான ஆக்கிரமிப்புக்களின் வழியாக யூதர்களுக்கு மட்டுமான நகரங்களை உருவாக்கியது. இன்றும், மற்றும் காஸாவிற்கு எதிரான எல்லா யுத்தங்களின் போதும் காஸாவின் நிலத்தைப் பறித்தெடுக்கும் நோக்குடனேயே குண்டுகள் வீசப்படுகின்றன. ஹமாஸுடனோ அல்லது அது அல்லாமலோ பலஸ்தீன மக்களை அழிப்பதுதான் இஸ்ரேலின் நோக்கம். ஹமாஸை அழிக்கின்றோம் என்பதெல்லாம் வெறும் சாட்டுத்தான். தசாப்தங்களுக்கு முன்னர் எம் நிலம் திருடப்பட்டது. அன்றுமுதல் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்தே வாழ்க்கை நகர்கிறது. ஒஸ்லோ உடன்படிக்கையினாலோ அல்லது இனவாத ”இரண்டு நாடுகள் ” தீர்வினாலேயோ (two state solution) வெகு நிச்சயமாக பாதுகாப்பு ஒருங்கிணைப்பினாலேயோ நம்முடைய நிலத்தைத் திரும்பப் பெற முடியாது. பேச்சுவார்த்தைகள் நிலைமைகளை மேலும் மோசமாக்கின. நில அபகரிப்பிற்கான அச்சுறுத்தலை விடுத்தபடியல்ல.. மாறாக எதிர்த்தரப்பு உண்மையாக இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும்.

எதிர்ப்பு – சுதந்திரத்திற்கு மிக அவசியமானது. விடுதலைக்கான பாதை மென்மையானதோ அல்லது இலகுவானதோ அல்ல. அது மிக நீண்டது. இந்தப் போர் அதன் பாதையில் ஒரு மைல் கல். இச்சூழலில் பெஞ்சமின் பிராங்கிளின் மேற்கோளொன்றை நினைவு படுத்துகிறேன். “சிறிய தற்காலிக பாதுகாப்பொன்றை அடைய அத்தியாவசிய சுதந்திரத்தை விட்டுக்கொடுப்பவர்கள் சுதந்திரத்தையும் சரி பாதுகாப்பினையும் சரி, அடையத் தகுதியானவர்களல்ல. ”

அல் காஸம் படையணிகள் இஸ்ரேலின் இரண்டாவது பெரிய நகரமான டெல் அவிவ் மீது பதிலடித் தாக்குதல்களை மேற்கொண்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. உயர் ஆற்றல் மிக்க ஏவுகணைகளை முதற்தடவையாக அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறையை வெற்றிகரமாக அவர்கள் உடைத்துள்ளார்கள். இஸ்ரேலியர்களை இத்தாக்குதல் திகிலடையச் செய்துள்ளது. சில இஸ்ரேலிய ஊடக ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஆக்கரமிப்பு எதிர்ப்புப் போராளிகள் மற்றப் பெரிய நாடுகளின் இராணுவங்கள் செய்ய முடியாத காரியத்தைச் சாதித்திருக்கின்றனர்.

எல்லா அறிகுறிகளும் ஒன்றையே சுட்டுகிறன: ஆம். காசா தன் எதிர்ப்பை நிறுத்திக்கொள்ளாது. அடிப்படையானதும் முக்கியமானதுமான கோரிக்கைகள் ஏற்கப்படும்வரை இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்படப்போவதில்லை. குறைந்தபட்சம் 2006 முதல் எங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பொருளாதார முற்றுகையையாவது விலக்கிக் கொள்ள வேண்டும்.

இன்று வரை 30 குழந்தைகள் உட்பட 151 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.1063 பேர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள். 13 பாடசாலைகள் தீவர சேதமடைந்துள்ளன. 5 ஆரம்பச் சுகாதார நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன. 3 பள்ளிவாசல்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களின் மொத்த எண்ணிக்கை 2090.

ஐந்தாவது நாள் முடிகிறது. இந்நாட்குறிப்புக்கள் எழுதுவதை நான் நிறுத்த விரும்புகிறேன். இந்த யுத்தம் நிறுத்தப்படவேண்டும். இப்பொழுது இந்த நிமிடத்தில் சாளரத்தின் ஓரமாக உட்கார்ந்து இக்குறிப்புக்களை எழுதுகின்றேன். வெளியே பூரண நிலவு எத்தனை அழகாயிருக்கிறது. வழமையாக நான் இரவுப் பொழுதுகளையே விரும்புகிறேன். அமைதியையும் பாதுகாப்பான உணர்வையும் தருவிக்கும் வல்லமை இரவுக்குண்டு.

ஆனால் என்றைக்கு காஸாவில் தாக்குதல்கள் தொடங்கப்பட்டனவோ அன்றைக்கே எல்லாம் தலை கீழாக மாறிவிட்டன.