காஸா! படுகொலை நாட்களின் குறிப்புகள்

Gaza, July 12, 2014
நான்காவது நாள் ஏற்கனவே முடிந்துவிட்டது. உண்மையில் நான் இப்படி எழுதிக்கொண்டிருப்பதையும் நாட்களை எண்ணிக்கொண்டிருப்பதையும் நிறுத்தவே விரும்புகிறேன். இந்தத் தாக்குதல்கள் விரைந்து முடியவேண்டும். கடந்த இரவு கடுமையான கடல் வழித்தாக்குதலோடுதான் ஆரம்பித்தது. கடற்கரையையண்டி வசிப்பதனால் தாக்குதலின் கடுமையையும் வீச்சையும் கேட்கவும் உணரவும் முடிந்தது. காஸா துறைமுகப்பகுதியில் காஸா ஆர்க் செயற்திட்டத்தின் படகுகளை இஸ்ரேலியத் தாக்குதல்கள் குறிவைத்திருந்தன. (காஸா ஆர்க் – பலஸ்தீன படகுகள் கூட்டமைப்பு, மீனவர் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அமைதிச் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய ஒரு செயற்திட்டம்). துறைமுகப்பகுதியில் பெரும் தீ மூண்டது. மீனவர்களுடைய படகுகள் எரிந்து நாசமாகின. காஸா மீனவர்கள் கடற்கரையிலிருந்து 3 கடல் மைல் பிரதேசத்திற்குள்ளேயே மீன்பிடியில் ஈடுபட முடியுமென்ற கட்டுப்பாட்டை ஆக்கிரமிப்பின் இன்னுமொரு வடிவமாக இவ்வாரத்தின் தொடக்கத்தில் இஸ்ரேல் அரசு விதித்திருந்தது. இக்கட்டுப்பாடு காஸா மீனவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும். ஏற்கனவே இஸ்ரேலினுடைய கட்டுப்பாடு 6 கடல் மைல் தூரமென வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் நல்ல மீன்வளம் இவ்வரம்பை மீறியே வாய்ப்பாதால் மீனவர்கள் அதிகமான நெருக்கடிகளைச் சந்தித்து வந்தார்கள். எல்லையை நெருங்கிய சமயங்களில் மீனவர்கள் கொல்லப்பட்டதும் கைது செய்யப்பட்டதுமான சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. அவர்களுடைய படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இஸ்ரேலின் தரைவழியான படையெடுப்பு இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. ஹமாஸின் இராணுவப்பிரிவான அல் கஸாம் படையணிகள் அதற்கு அச்சுறுத்தலாக உள்ளன. அல் கஸாம் படையணிகள் தயாராக இருந்தார்கள். தம்முடைய ஆற்றலையும் திறனையும் அவர்கள் இஸ்ரேலியருக்கு ஏற்கனவே உணர்த்தியிருக்கிறார்கள். நான் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில் இல்லையென்ற போதிலும், ஆம்! நான் ஒப்புக்கொள்கின்றேன், எதிர்த்து நிற்கும் இந்தப் போர்க்குணம் என்னைப் பெருமையடையச் செய்கின்றது. இன்றும், பல பத்தாண்டுகளுக்கு முன்னிருந்தும், பலஸ்தீனர்கள் எதிர்கொள்கின்ற ஆக்கிரமிப்பையும் அநியாயத்தையும் அநீதியையும் பொறுத்துக்கொண்டு அவர்கள் மௌனமாக இருந்ததில்லை. அவர்களுடைய எறிகணைகள் இஸ்ரேலின் உள்ளே சென்று வெடித்துச் சேதங்களை உண்டு பண்ணத்தொடங்கியிருக்கின்றன. இஸ்ரேலின் இழப்புக்கள் பற்றி அதிகாரபூர்வமாக எந்தத் தகவலையும் நான் கேட்கவில்லையென்ற போதிலும் இஸ்ரேலிய ஊடக ஆய்வாளர்கள் சில தகவல்களைச் சொல்லியிருந்தார்கள். ஏவுகணைகளை வானிலேயே தடுத்து அழிக்கும் Iron Dome எனப்படும் ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறையை நம்பவேண்டாமென்றும் ஒவ்வொரு தடவையும் அபாய ஒலி கேட்டதும் தரையோடு விழுந்து படுக்குமாறும் ஜெருசேலம் நகராட்சி மக்களைக் கேட்டிருந்தது. ஆம், சில பத்து பலஸ்தீன எறிகணைகள் இஸ்ரேல் பகுதியில் விழுந்து சேதங்களை உண்டு பண்ணியிருந்தனதான். ஆனால் இவை நூற்றுக்கணக்கான வீடுகளைத் தரைமட்டமாக்கியிருக்கின்றனவா? கணக்கற்ற சனங்களின் சாவுக்குக் காரணமாயிருந்திருக்கின்றனவா..? நிச்சயமாக இல்லை. ஆனால் இஸ்ரேலின் ஏவுகணைகள் காஸா முழுவதையும் சல்லடையாக்கியிருக்கின்றன

கண்விழிக்கையில் நான் முதலில் கேள்வியுற்ற செய்தி ரஃப்பாவில் நடந்த படுகொலையைப் பற்றியதுதான். விடிகாலைப் பொழுதில் ஹான்னன் குடும்பத்திற்குச் சொந்தமான மூன்று கட்டிடங்கள், மனிதர்கள் உள்ளே உறங்கிக்கொண்டிருக்கும்போது எவ்வித எச்சரிக்கைகளும் வழங்கப்படாமலேயே F 16 ஏவுகணைகளால் தாக்கி அழிக்கப்பட்டன. ஐந்து குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தார்கள். இப்பொழுது தாக்குதல் எச்சரிக்கைகள் இஸ்ரேலிப் படைகளால் வழங்கப்படுவதில்லை. எவ்வளவு பயத்தை விதைக்கக்கூடிய அநீதியிது? பிறிதொரு குடியிருப்புத் தொகுதி மீதான தாக்குதலில் இளம் மருத்துவர் அனாஸ் அபு அல் காஸ் கொல்லப்பட்டார். அனாஸ் ஏற்கனவே 2008-2009 யுத்தத்தில் தன் பெற்றோரை இழந்தவர். தொடரும் ஒவ்வொரு யுத்தமும் எங்களுடைய முழுக் குடும்பங்களையும் அழிக்கின்றன. ஒரு போரில் சாகாவிட்டால் அடுத்ததில்! இப்படியாக தொடர்ச்சியாக!

இரவு கடுமையான ஷெல் தாக்குதல்களோடு தொடங்கியது. ஆனால் நேற்றை விட இன்றைய பகல்பொழுது அமைதியாயிருந்தது. காஸா நகரப்பகுதியில் குண்டுகள் குறைவாகவே ஏவப்பட்டன. ஆயினும் தூரத்தில் குண்டுச் சத்தங்களை என்னால் கேட்கமுடிகிறது. செய்திகளின்படி இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்கள் காஸாவின் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளையே நடந்து வருகின்றன.

இஸ்ரேலிற்கும் ஹமாஸிற்கும் இடையில் அதிகரிக்கும் வன்முறைகளை முடிவுக்கொண்டு வருவதற்கான யுத்த நிறுத்தப் பேச்சுக்களுக்கு அமெரிக்கா உதவும் என்று ஜனாதிபதி ஒபாமா இன்று அறித்தார். ஐ.நா செயலர் பான் கி மூனும் இரு தரப்பும் மோதலைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளதோடு இந்தப் பகுதி மொத்தமும் கத்தி முனையில் இருப்பதாக ஐநாவின் பாதுகாப்பு அமைப்பிடம் வர்ணித்திருந்தார் .சில மணிநேரம் கழித்து பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் நெதன்யாகு – இஸ்ரேலியப் பிரதமர் எப்பேர்பட்ட அழுத்தமும் ஹமாசின் மீதான எங்கள் தாக்குதல்களை தடுக்கமுடியாது என்று குறிப்பிட்டார். வெளியுறவுத் துறை அமைச்சரான லிபெர்மான் இது இறுதிவரை சென்று பார்ப்பதற்கான நேரம் என்றும் எட்டாவது Iron Dome க்கான பேட்டரி தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாள் முழுவதும் கடுமையான அழுத்தத்தின் கீழ் வாழ முடியாது. நாங்கள் கூடிப் பேசுகிறோம். குழந்தைகளை பீதியடையாமலிருக்க முயற்சிக்கின்றோம். குண்டுகளின் சத்தங்களை வைத்தே கடலிலிருந்து வீசப்படுகினறதா அல்லது விமானத்திலிருந்தா என்று அக்காவின் மகன் கணித்துச் சொல்கிறான். அவ்விடயத்தில் அவனோடு போட்டியிட முடியவில்லை. எனக்கு இது இரண்டாவது யுத்தமே. அவனோ 2008, 2012, 2014 – மூன்று யுத்தங்களின் சாட்சியாக இருக்கின்றான். பதினான்கு வயதுப் பையன், எதிர்காலத்தில் தன் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் சொல்வதற்காக தன்னிடம் நிறையக் கதைகள் என்கிறான். எமது மண்ணை மீண்டும் அடைந்த பிறகு ஜெருசேலத்தில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசலில் ஒவ்வொரு வெள்ளித் தொழுகைக்கும் செல்வேன் என்கின்றான். காஸாவின் குழந்தைகள் நீதி வெல்லுமென்ற உணர்வோடு வளர்கிறார்கள். ஆக்கிரமிப்பாளர்கள் ஒருநாள் விலகிச் செல்வார்கள் என்றும் நாம் மறுபடியும் நம் நிலத்தை அடைவோம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

பலஸ்தீனத்தின் ஜனாதிபதி என்று ”அழைக்கப்படுகின்ற” மெஹ்மூத் அப்பாஸ் சண்டை ஆரம்பித்த இந்நாட்களில் முதற்தடவையாக வாய்திறந்தார். வன்முறைகளை நிறுத்துவதற்காக தான் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன என்றார் அவர். படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களை உண்மையாகவே இவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறாரா.. அவர்களைக் குறித்துக் கவலைப்பட்டிருக்கிறாரா.. எவ்வகையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.. ? சில பத்தாண்டுகளாக எந்த தீர்வையும் எட்டாமலிருக்கும் இந்த “சமாதானப் பேச்சுவார்த்தைக்கா இஸ்ரேலியர்களை தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தார்?

வெஸ்ட் பாங்கில் கல்வி அமைச்சு ஆத்திரமூட்டும் செய்தியொன்றை இன்று அறிவித்தது. பலஸ்தீனத்தின் இரண்டு பகுதிகளுக்குமான (காஸா மற்றும் வெஸ்ட் பாங்க்) உயர்நிலைப் பாடசாலைப் பரீட்சை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இவர்கள் இன்னொரு உலகத்திலா வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் ? காஸாவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று இவர்களுக்குத் தெரியாதா.. ? வெட்கக் கேடு. பின்னர் மக்களுடைய கண்டனக்குரல்களையடுத்து பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடும் முடிவை அவர்கள் மீளப்பெற்றார்கள்.

இதயத்தை நொருங்கச் செய்யும் காணொளியொன்றை இன்று பார்க்க நேரிட்டது. https://www.facebook.com/photo.php?v=612428508876174&fref=nf தலை பிளக்கப்பட்ட தன் சிறு பிள்ளையை வைத்தியசாலையில் கட்டியணைத்துக் கதறும் ஒரு தந்தையின் காட்சி. தன்னுடைய அணைப்பிலிருந்து குழந்தையை விலக்க அவர் அனுமதிக்கவேயில்லை. ஒவ்வொரு முறையும் கண்களை மூடும்போது இக்காட்சி என்னுள்ளே விரிகிறது, இந்தத் தாக்குதலுக்குப் பின் இது போன்ற நூற்றுக்கணக்கான துயரக்கதைகளை நீங்கள் கேட்பீர்கள். இவற்றை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. பேச்சற்றவளாக உணர்கிறேன். மொத்த உலகின் தேவாலயங்களையும் பள்ளிவாசல்களையும் விட காஸாவின் வைத்தியசாலைச் சுவர்கள்தான் பெருகி வழியும் அழுகையையும் பிரார்த்தனைகளையும் இதுவரையில் அதிகமாகக் கேட்டிருக்கும்.

பின்வரும் செய்தியோடு இன்றைய நாள் முடிவுக்கு வந்தது. பாலஸ்தீன வீடு மற்றும் பொதுப்பணி அமைச்சின் தகவல்களின்படி இதுவரை 282 வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. 260 வீடுகள் மீண்டும் வசிக்க முடியாதளவிற்கு பாரிய சேதமடைந்துள்ளன. 8910 வீடுகள் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. மருத்துவ அறிக்கையின் படி 105 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 785 பேர் காயமடைந்துள்ளனர்.

படுக்கைக்கு சென்றபோது வேவு விமானங்களின் இரைச்சலைத் தவிர்த்து முன்னில்லாத அமைதியாயே இருந்தது. என்னுடைய பிரியமான உறவுகள் எவரையும் இழந்துவிடக்கூடாதென்று ஏனோ அஞ்சுகிறேன் இப்பொழுது. என்னால் தாங்க முடியாது. நானும் கூட செத்துப்போக விரும்பவில்லை. நான் நிறையப் பயணிக்க வேண்டும். உலகத்தை அறிய வேண்டும். தொழில் வாழ்வைக் கண்டுகொள்ளவேண்டும். எனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மிகச் சாதாரணமான கனவுகள். கொல்லப்பட்ட ஒவ்வொருவருக்கும் இருந்ததைப்போன்ற கனவுகள்.
ஆனால் அவர்களுடைய கனவுகள் நிறைவேறாமலேயே சாவுகளால் தடுக்கப்பட்டுவிட்டன..