காஸா! படுகொலை நாட்களின் குறிப்புகள்

Gaza, July 11, 2014
போரின் மூன்றாவது நாள். கடந்த இரவு சில நிமிட உறக்கத்தை விரும்பியிருந்தேன். ஆனால், விரும்பியதெல்லாமுமா கிடைத்துவிடுகிறது.? இனிவரும் நாட்கள் அமைதியைக் கொண்டுவருமென்று நினைத்திருந்தேன். ஆனால், வானத்திலிருந்தும் கடலிலிருந்தும் வெறித்தனம் மிக ஏவப்பட்ட குண்டுகளோடுதான் இரவே ஆரம்பித்தது. யுத்தம் தொடங்கியதிலிருந்து நேற்றைய இரவுதான் வான்வழி – கடல்வழித் தாக்குதல்கள் தீவிரமாயும் திகிலூட்டுவதாயும் இருந்ததாக உணர்ந்தேன். யுத்தம் – உண்மையில் இப்படி அழைக்க நான் விரும்பவேயில்லை. அமெரிக்க எழுத்தாளர் நோம் ஸோம்ஸ்கியின் மேற்கோளொன்றினை நினைவுபடுத்துகிறேன். 2012ல் காஸாமீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் அவர் சொன்னார்:

இஸ்ரேல்,நுட்பமான தாக்குதல் ஜெற் விமானங்களிலிருந்தும் கடற்படைக் கப்பல்களிலிருந்தும் குண்டுகளைவீசி சன நெரிசல் மிகுந்த அகதி முகாம்களையும், பாடசாலைகளையும், வீடுகளையும், பள்ளிவாசல்களையும் சேரிகளையும் அழிப்பதன் ஊடாக – வான்படை அற்ற, வான்பாதுகாப்பு அற்ற, கடற்படை அற்ற, கனரக ஆயுதங்கள் அற்ற, நெடுந்தூர எறிகணைகள் அற்ற, கவசங்கள் அற்ற, இராணுவம் அற்ற பிரசைகள்மீது தாக்குதலை நடாத்தி அதனைப் போர் என்கிறது. இது போரல்ல. இது படுகொலை. நோம் ஸோம்ஸ்கி –

எங்கேயும் ஓடவியலாதபடி எங்கேயும் மறைந்துகொள்ள முடியாதபடி சனங்களை அடைத்துப் படுகொலை செய்வதற்கும், அவர்களுடைய வீடுகளைத் தரைமட்டமாக்குவதற்கும் பெயர் யுத்தமல்ல. அது கொலை. இனப்படுகொலை.

மேற்குலக நாடுகளிலும், அமெரிக்கா, அவுஸ்ரேலியநாட்டுப் பகுதிகளிலுள்ள மக்களுக்கும் காஸாவில் என்ன நடக்கின்றது என்று எதுவுமே தெரிவதில்லையா என்று யோசிக்கின்றேன். அவர்கள் ஏன் தொடர்ந்தும் அமைதியாயிருக்கிறார்கள். எங்களுக்காகக் குரல் கொடுக்க முஸ்லீமாகத்தான் இருக்கவேண்டுமென்றில்லையே. மனிதர்களாயிருந்தாலே போதுமே..

ஆனால் இந்த அமைதி ஆச்சரியப்படுத்தவில்லை. மேற்கு ஊடகங்களின் இஸ்ரேலிய ஆதரவு நிலைப்பாட்டிற்கு இதுவோர் ஆதாரம். ஜெருசலேத்திலும், ஜாவாவிலும், அஸ்கலோனிலும் ரெலாவிவிலும் அவர்களுக்குள்ள பார்வையையும் காஸாவில் உள்ள பார்வையும் ஒப்பிட முடியாதவை. இஸ்ரேலின் தன் சார்புப் பிரச்சாரத்தினையே மேற்கு ஊடகங்களும் கிளிப்பிள்ளைபோல ஒப்புவிக்கின்றன என்பது ஊகிக்கக்கூடியதுதான். பலஸ்தீன இஸ்ரேலிய முரணில் ஏற்படுகின்ற – சிறிதோ பெரிதோ – ஒவ்வொரு சம்பவங்களையுமே அதன் பின்னணியிலிருந்தும், நூற்றாண்டுகால வரலாற்றிலிருந்தும் துண்டித்து – அதனைத் தனியே ஒரு நிகழ்வாக்கிப் பரப்புரை செய்வதை இஸ்ரேல் தொடர்ச்சியாக மேற்கொள்கிறது. ஹமாஸின் பயனற்ற ஒரு ரொக்கெற் இஸ்ரேலிய இலக்கொன்றைத் தாக்குகிறதென்றால் அந்த ரொக்கெற் மட்டுமே செய்தியாக ஊதிப் பெருப்பிக்கப்படுகின்றது. அதன் பின்னணியும் அரசியல் சூழலின் விளக்கமும் அனுமதிக்கப்படுவதில்லை. ஆதாரங்களின் அடிப்படையில் கேள்விகள் எழுப்படும்போது அதனைத் “தீவிரவாதத்திற்கான சேவைகள்” என்றே சியோனிஸ்ட்டுகள் சொல்கிறார்கள். அவர்களுடைய பிரச்சாரங்களினால் தாம் குருடர்கள் ஆக்கப்படுவதை உலக மக்கள் அனுமதிக்கக் கூடாது.

அவர்கள் உண்மைகளைத் தேட வேண்டும். முழுமையான நிலவரத்தை அறிந்து நீதியின் பக்கம் நிற்க வேண்டும்.

நான் முற்றிலும் சோர்ந்து போய்விட்டேன். வெடியோசைகளுக்கான உடலின் எதிர்வினை மேலும் வலுக்கிறது. இன்றுதான் நான் முதற்தடவையாக அழுதேன். நான் தூங்கவேண்டும். நான் அமைதிடைய 10 நிமிடங்களாவது வேண்டும். வினாடிக்கு வினாடி என்னைப் பின்தொடரும் செய்திகளை நான் நிறுத்த வேண்டும். ஆனால் முடியவில்லை. இஷாத் தொழுகைப் பிரார்த்தனை ஒலிகேட்கும் வரைக்கும், வெடியோசைகளின் ஆதிக்கம்தான் காற்றை நிறைத்திருந்தது. அல்லாஹூ அக்பர் (இறைவனே பெரியவன்) தொழுகையைக் கேட்டேன். எனக்குள்ளேயே அதனை மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டேன். இறைவனே பெரியவன்.. இஸ்ரேலை விடவும் இறைவனே பெரியவன். அவர்களுடைய படைகளை விடவும் இறைவனே பெரியவன்.. அவர்களுடைய விமானங்களை விடவும் இறைவனே பெரியவன்.. இறைவனே பெரியவன்..

எப்படியோ சில மணிநேரம் தூங்கமுடிந்தது. வானொலியை முடுக்கினேன். ஐ.நா.செயலர் பான்கி மூன் ரஃப்பா எல்லையைத் திறந்துவிடுமாறு கோரியிருந்தார். கடவையைத் திறந்துவிடும்படி எகிப்திடம் கேட்க முடிந்த அவரால் காஸாவிற்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தும்படி ஏன் இஸ்ரேலைக் கேட்கமுடியவில்லை..?

இறுதியாக காயமடைந்தோரை வெளியேற்றுவதற்காகவும் மருத்துவ வழங்கலை காஸாவிற்குள் மேற்கொள்ளவும் – ரஃப்பா எல்லையைத் திறந்துவிடுவதாக எகிப்து முடிவுசெய்துள்ளது. நல்லதுதான். ஆனால் நரகத்திலிருந்து வெளியேறி சொர்க்கத்திற்குச் செல்வதற்கான வழியைத் திறந்து விடுவதைப் போன்றதல்ல இது. உடலை எரிக்கும் இக்கோடை காலத்தில், 8 மணிநேரம் பாலைவனத்தில் பயணம் செய்து நூற்றுக்கணக்கான காயமடைந்தோரை கெய்ரோ கொண்டுசெல்வதென்பது அவர்களுக்கு மேலும் துன்பத்திற்கான வாசலைத் திறந்துவிடுவதற்கு ஒப்பானது.

காஸாவில் பெரும்பாலான நகரங்களில் கழிவுநீரை வெளியேற்றும் நான்கு பாரிய குழாய்களைக் கொண்ட அல்முன்ராடா சேதமாக்கப்பட்தடுள்ளது. விளைவாகக் கழிவுநீர் இப்பொழுது கடலில் கலக்கின்றது. தாக்குதல்களுக்குச் சிலவாரம் முன்னதாகவே எரிபொருள் நெருக்கடி காரணமாக மிகக்குறைந்த கழிவுநீரை கடலோடு கலக்க வேண்டியேற்பட்டிருந்தது.அப்பொழுதே காஸாவின் கடற்கரைகள் ஆபத்தானவையென்றும் அசுத்தமானைவயென்றும் அதிகாரிகள் அறிவித்திருந்தார்கள். காஸா மக்களுக்கான ஒரேயொரு புகலிடம் கடற்கரைதான். பொழுதுபோக்கவும் மகிழ்ச்சிக்காகவும் அவர்கள் நாடிச்செல்கிற ஒரேயொரு இடம் அதுதான்.

அந்தக் கடற்கரையிலேயே அர்ஜென்ரீனாவிற்கும், நெதர்லாந்திற்கும் இடையிலான உலகக்கோப்பைக் காற்பந்தாட்ட அரையிறுதி ஆட்டத்தைக் கண்டுமகிழ விடுதியொன்றில் சிலர் கூடியிருந்தனர். இஸ்ரேலிய யுத்த வான்கலங்கள் அவர்களை இலக்கு வைத்தது. விளையாட்டை ரசித்துக்கொண்டிருந்த இருபது இளைஞர்களில் ஆறுபேர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். மொத்த உலகமுமே உலகக்கிண்ணப் போட்டியில் கவனத்தைக் குவித்து நிற்க காஸாவில் நாம் இவ்வருடத்தின் யுத்தக்கிண்ணத்தில் அலைகழிக்கப்பட்டோம்.

யுத்தம் முடிவிற்கு வந்தபின்னர், காஸாவிற்கு உதவிகளைச் செய்யப்போகின்ற சர்வதேசத் தொண்டு நிறுவனங்களை நினைத்துப் பார்க்கிறேன். மறுபடியுமொரு காலத்தில் மறுபடியுமொரு யுத்தம் தொடுக்கப்பட்டு காஸா மீண்டும் அழிக்கப்படும்வரை அவர்கள் காஸாவைப் புனரமைப்பார்கள். ஆனால், பலஸ்தீனர்களுக்கு தேவை உதவிகள் அல்ல. நிலைப்பாடுகளே. நமக்குத் தேவை முடிவுகளே. நமக்குத் தேவை மீண்டுமொருமுறை ஒடுக்குமுறையாளர்கள் இதனை மேற்கொள்ளாத பொறிமுறைகளே.. அதுவல்லாமல் அழிவுகள் நடக்கும்வரை காத்திருப்பதும் பின்னர் உதவிகளோடு காஸா மக்களை நாடிவருவதுமல்ல.

பொறுப்புணர்வோடு இந்தச் சொற்களை எழுதுகிறேன். தன்குழந்தையின் உடல் அவயங்களை கண்முன்னாலேயே சேகரித்து வைத்திருக்கக் கண்ட தாயின் கதையை நான் சொல்லவேண்டும். குடும்பத்தின் அத்தனைபேரையும் இழந்த தந்தையின் கதையை நான் சொல்லவேண்டும், இடிபாடுகளிடையில் காலைத் துண்டித்துக்கொண்ட இளைஞனின் கதையை, இன்னும் சிலவாரங்களில் திருமணம் செய்யவிருந்த துணையை இழந்த பெண்ணின் கதையை, பத்து வயதேயான மரியம் அல் மஸ்ரியின் தந்தை – தன் ஒரேயொரு மகளைக் குரூரமான முறையில் இழந்த கதையை, பிரேதங்களிடையே தன் இரண்டுபிள்ளைகளையும் அடையாளம் காணவென வைத்தியசாலைப் பிணவறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளம்தாயின் கதையை, கட்டிட இடிபாடுகளிடையே அகப்பட்டுச் செத்தவர்களின் பிய்ந்த உடலங்களைக் கண்ட மருத்துவர்களின் கதையை, மட்டான அடிப்படை வசதிகளோடும் சாதாரண வளங்களோடும் சக்திக்கு மீறிச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் கதையை.. இப்படி எல்லாக் கதைகளையும் நான் சொல்லவேண்டும்.

என் மக்களின் துயரத்தினதும் வடுக்களினதும் கதைகள் இவை. அவர்களுடைய இதயத்தில் உருவான கதைகள். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வரவேண்டுமென்று விரும்புவதைத் தவிர வேறெதையும் வேண்டாத – அதிகாரங்கள் அற்ற நிராயுதபாணிகளின் கதைகள்..

மூன்றாவது நாள் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. சண்டை மேலும் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் தரைவழிப் படையெடுப்பையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சாவு எண்ணிக்கை 90. காயம் 700. 650இற்குக் குறையாத ஆகாய வழித்தாக்குதல்கள்.

பழிவாங்கும் உணர்வையே தம் இதயம் முழுவதும் ஏந்தி நிற்கிற ஒரு மக்கள் கூட்டத்தை இஸ்ரேல் உருவாக்குகிறதா.. ?