சமகால இலக்கியக் குறிப்புகள்

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை அல்ல என்ற ஜெயமோகனது கூற்று எனக்கு அதிர்ச்சியை அளிக்கவில்லை. ஒருவேளை, அவர் அது இனப்படுகொலையே என்றிருப்பாரானால் மாத்திரமே, “இல்லையே.. இவர் இதைச் சொல்வது தப்பாச்சே.. ஏதேனும் hidden agenda இருக்குமோ ” என்று யோசித்திருப்பேன். மற்றும்படி இலங்கையில் இனப்படுகொலை நடக்கவேயில்லை என்று கோத்தபாய ராஜபக்ச சொன்னபோது எப்படிக் கடந்துபோனேனோ அப்படித்தான் கடந்துபோனேன். தவிரவும், ஈழத்தமிழர்களுக்கான ஒரு தீர்வு தமிழகத்தில் இருந்து ஒரு போதும் வராது என்று தீர்க்கமாக நம்புகிறவனாகவும் நானிருப்பதால், ஜெயமோகனது இக்கூற்றுக்கு ஐந்து சதப் பெறுமதியைக் கூட அளிக்க முடியவில்லை. நாளைக்கே இதைச் சீமான் சொன்னாலும் இதே நிலையிலேயே தொடர்வேன். ஏனெனில் இதுவும் அதுவும் ஈழத்தமிழர்களுடைய அரசியல் பயணத்தில் ஒரு சிறு சலசலப்பைக் கூட ஏற்படுத்தப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். நிற்க,

ஜெயமோகனது இந்த இனப்படுகொலை தொடர்பான கூற்று, மற்றும் இந்திய இராணுவத்தினர் ஈழத்தில் மனிதாபிமானத்தோடுதான் நடந்துகொண்டார்கள், மற்றதெல்லாம் புலிகளின் பிரச்சார நுட்பம் என ஒரு ஜெனரல் சொன்னார் என்ற முன்னைய கருத்து, ஆயுத விடுதலைப் போருக்கு எதிரான அவரது கருத்து நிலை என அனைத்துமே மையம் கொண்ட மனநிலையானது ஓர் இந்தியப் பெரும் தேசிய மனநிலையாகும். இந்தியா என்கின்ற ஒற்றை அரசின் (state) ஒருமைப்பாட்டையும், உறுதித்தன்மையையும் கட்டுக்குலையாமல் பேணுவதற்கு, இந்திய ஒருமைப்பாட்டை நேசிக்கும் மனங்களைத் தொடர்ந்தும் அதே மாயையில் வைத்திருப்பதற்கு, ஈழம் பற்றி, காஷ்மீர் பற்றியெல்லாம் இப்படியான கருத்துக்களை உருவாக்குவதும், பரப்புவதும் அவர்களுக்கு நிபந்தனையாகிறது. அதைத்தான் அவர்கள் காலங்காலமாகச் செய்து வருகிறார்கள். அது ஜெயமோகன் மட்டுமல்ல, இலக்கியம், எழுத்தென்ற இந்தப் பரப்பிலேயே வேறும் பலரும் இருக்கிறார்கள் என்பது எந்தளவிற்கு உண்மையோ, அவர்களோடு நம்மிற் பலர் வலு கூலாகக் குலாவுகிறார்கள் என்பதும் உண்மை.

0 0 0

தீபன் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் ஒரு கேள்விக்கு, இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே என ஷோபா சக்தி அளித்த பதில், சுவிற்சர்லாந்துப் பத்திரிகையொன்றில் கவனப்படுத்தப்பட்டு வெளியாகியிருந்தது. அதைப்பற்றி அக்காலத்தில் இளவேனிலோடு உரையாடியிருக்கிறேன். ஒரு சர்வதேச மேடையை அழுத்தமான ஒரு பதிலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார் என்று நான் சொன்னபோது இதெல்லாம் நம்மூருக்குத் தெரிய வராதா என்று அவர் கேட்டிருந்தார். நான் சிரித்துக்கொண்டே, உங்களூர் பத்திரிகையாளர்களுக்கு அவரிடம் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியைத் தவிர கேட்பதற்கு வேறு எதுவும் தெரியாதே… என்று சொல்லியிருந்தேன்.

இனப்படுகொலையைப் பற்றிய ஐநா வரையறைகள், சர்வதேச சட்டங்கள் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், படுகொலையைச் சந்தித்த அந்த இனத்தின் குரலே முதன்மையானதும் முழுமையானதும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை. ஈழத் தமிழர்கள் பட்ட வாதையின் குரல்தான் இனப்படுகொலைக்கான உச்ச ஆதாரம். மற்றெவரைப் பற்றியும் நானெதற்கு அலட்டிக்கொள்ள வேண்டும்…?

0 0 0

ஜெயமோகன் ஆதிரையைச் சிலாகிப்பதால் எனக்கும் அவருக்குமிடையில் ஓர் உறவு உள்ளோடிக்கொண்டிருப்பதாகச் சிலர் நினைக்கிறார்கள் போலுள்ளது. அது அவர்களுடைய தவறுமல்ல, தமிழ் இலக்கியச் சூழல் பெருமளவுக்கு இவ்வாறு “உள்ளாலதான்” ஓடுகிறது.

ஆயினும் அவர்கள் நினைப்பதைப்போல நமக்கிடையில் அப்படியெதுவும் இல்லை. நான் இதுவரையில் அவருடைய 3 நாவல்களை மட்டுமே படித்திருக்கிறேன். (ஏழாம் உலகம் – மிகப் பிடித்த நாவல், உலோகம் – குப்பை, வெள்ளையானை – எனது சிற்றறிவுக்கு மொக்கை) ..

ஜெயமோகன் மட்டுமல்ல, இந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு இலக்கிய பீடம், ஜாம்பவான், ஆசான், குரு, ஆதர்சம்.. இப்படியெவரோடும் எனக்கு ஒட்டுமில்லை. உறவுமில்லை. உட்பெட்டிச் செய்தியில்லை. தொலைபேசி உரையாடலில்லை. நேரிற் சந்திப்பும் இல்லை. இதிலொரு திமிரோடுகிறது என நினைத்தாலும் பரவாயில்லை, எனக்கொரு முன்னுரை, பின்னுரை, அணிந்துரை என்ற பெயரில் உங்களது அங்கீகாரத்தையும் வழங்குங்கள் என நான் யாரிடத்திலும் இதுவரை கை நீட்டியதில்லை.

ஓர் ஈழத்து எழுத்தாளளிள் ஆகக்கூடிய இலக்கு தமிழகத்தின் அங்கீகாரம்தானா என்ற கேள்வி சில காலமாகவே என்னைத் தொடர்கிறது. ஈழத்திலிருந்து கிடைக்கும் பாராட்டைவிட, தமிழகத்திலிருந்து கிடைத்தால் ஏன் வானுக்கும் பூமிக்கும் இடையில் துள்ளிக் குதிக்கின்றோம்.. எந்தப் புள்ளியில் அது உயர்ந்து நிற்கிறது.. அதில் செல்வாக்குச் செலுத்துவது நமக்குள் இருக்கின்ற தாழ்வு மனப்பான்மையா…
இன்னொரு வகையில் ஈழப் படைப்புக்களுக்கான தமிழக அங்கீகாரம் பற்றி எனக்கு ஒரு சந்தேகமிருக்கிறது. ஈழத்தமிழர்கள் ஓர் அடிபட்ட இனம், பாவப்பட்ட இனம், தோல்வியுற்ற இனம் என்ற பரிதாபத்தை அவர்களின் படைப்புக்களில் ஓர் ஆறுதலாகத் தடவி “பாவப்பட்டதுகள், சந்தோசப்படட்டும்” எனத் தரப்படுகின்ற ஓர் இலக்கியச் சலுகையா அது.. எனின் அவ்வாறான ஒரு சலுகையை ஆதிரை தவிர்த்துக்கொள்ளவே விரும்புகிறது..

0 0 0
எழுத்து எனக்குத் தவமல்ல. எழுத்து எனக்கு வாழ்வுமல்ல. அதற்கும் வெளியே வாழ்வு காதலும் களிப்புமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வேண்டுமானால் எழுத்தை எனக்குத் தவிப்பு என்று சொல்லலாம். அது என் தனிப்பட்ட தவிப்புத்தான். தொண்டைக்குள் முட்போல சிக்கிக்கொண்டிருக்கிற தவிப்பு. ஒவ்வொரு முறையும் அடங்கிய பிறகு நான் விரைவில் மீண்டுவிடுவேன். மற்றும்படி என் எழுத்தால், இனத்திற்கு விடுதலை வாங்கித் தருவேன் என எனக்குச் சீன் போடத்தெரியாமலிருக்கிறது. சமூகம் பெரிய மனது பண்ணி அதை மன்னிக்க வேண்டும். நான் ஓர் இலக்கியச் செயற்பாட்டாளனும் அல்ல. ஒருவேளை எதிர்காலத்தில் செயற்படுவேனாயின் ஈழம்தான் எனது செயற்படுகளமாயிருக்கும்.

0 0 0
கடைசியாக
எனக்கு ஒரு விடயம் புரியாமலிருக்கிறது. ஜெயமோகன் இனப்படுகொலை இல்லையென்கிறார். ஆம் அது உள்நோக்கம் கொண்ட கருத்துத்தான். ஆனால் அதே இனப்படுகொலையின் பங்காளியெனப்படுகின்ற திமுகவின் பிரச்சார பீரங்கியாயிருந்த மனுஸ்யபுத்திரனின் முன்னும் பின்னும் நம் ஓரிரு ஈழப் பிள்ளைகள் குலாவித் திரிகிறார்களே இது எங்ஙனம் சாத்தியம்.. ? என்ன சமன்பாடு..