“ஆதிரை”, இனப்போர் தன் நச்சுப்பற்களால் தேயிலைத் தோட்டத் தமிழர்களையும் தீண்ட, அங்கிருந்து இடம்பெயரும் இந்தியவழித் தமிழர்களோடு தொடங்கி, அவர்கள் சக்கிலியர்கள், வடக்குமுகமாக வளர்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிக்கிட்டு, சற்று தெற்காமை வந்து, அம் மக்களோடு ஒண்ணுமண்ணாப் புழங்கும் சந்திரா-அத்தார் தம்பதி வழியாக விமர்சனக்கோணமும் பெறுகிறது. சந்திரா வெள்ளாளத்தி, அத்தார் அம்பட்டர்.
இதில் நாயகர்கள் என்று எவரையும் முன்னிருத்த ஏலாது. நாவல் சம்பவங்களால் நகர்கிறது. சம்பவங்களும் ஒருநேர்க்கு என்றில்லாமல் முன்னும்பின்னுமாய் வைக்கப்பட்டிருக்கின்றன. ‘புலி’ லெட்சுமணன் பற்றிக் கூறும் முதல் அத்தியாயமும், ‘புலி’ ஆதிரை பற்றிக் கூறும் இறுதி அத்தியாயமும் துண்ண்டாக நின்று, வியக்கத்தக்க வகையில், நாவலுக்கு ஒரு முழுமையைக் கொண்டுதருகின்றன.
பாம்புக்கடி பட்ட கிழவியை சைக்கிளில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டுபோய், பாதிவழியில், இருட்டுக்குள், பிணமாகச் சுமந்துவரும் தேவமலர் பாத்திரப் படைப்பு போதும், ‘நூலாசிரியர்’ சயந்தனின் திறமையைப் பறைசாற்ற.
தமிழினத்தை ஒடுக்குவதற்காகத் தொடுக்கப்பட்ட போரில் போராடிச் செத்தவர்கள் எல்லாரும் ஏழைகள், கீழ்ச்சாதியினர் எனவும்; பணமும் யாழ்ப்பாணமும் தப்பித்துக்கொண்டன என்றும் கோடிகாட்டுகிறது “ஆதிரை”யின் கருத்தாக்கம். புலிகளின் தோல்வியோடு நாவல் முடிந்தாலும் புலிகள் சாகும்வரை போராடியதைச் சுட்டி ஒரு நேர்முறைக் குறிப்போடு முடிகிறது.