மோட்டார் சைக்கிள் குரூப்

முடிச்சுக்களும் திருப்பங்களும் உப்பும் சப்பும் அற்ற இந்தக்கதை தொடங்குகிற போது, முறிகண்டி மாங்குளம் வீதியில் பனிச்சங்குளத்திற்கு சற்றுத்தள்ளி, தெருவிலிருந்து அடர் காட்டுக்குள், சமாந்தரமான இரு கோடுகளாய் இறங்கும் சிவப்பு மண் தெரிகிற பாதையில் சுற்றி அடைக்கப்பட்டிருந்த தகரங்களில் கரும் புகை அப்பிப் படர்ந்திருந்த குசினியையும், கானகத்தின் இருள் மெதுவாய் கவிகிற இடத்தில் பிள்ளைகளின் (பெட்டைகள் என்று சொன்னால் பனிஸ்ட்மென்ட் உண்டு) முகாமையும் தாண்டினால், திடீரென வழியின் அருகாக இணையும் ஒரு நீரோடை மீண்டும் விலகுகிற இடத்தில் கிடுகு ஓலையால் கூரை வேயப்பட்ட நான்கு கூடாரங்களில், சற்றே பெரிய கூடாரமொன்றிலிருந்து இவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

“ச்சே.. மெடிக்ஸ்ஸில் நின்ற என்னைத் தூக்கி சிவராசண்ணை அநியாயமா மெஸ்ஸில் போட்டுட்டாரே ”

இப்பொழுதுதான் மெஸ்ஸில் வேலைகளை முடித்து வந்தான். சோற்றுப்பானையை கிணற்றடியில் உருட்டி உருட்டித் தேய்த்துக் கழுவியபோது கன்னத்திலும் மூக்கிலும் கைகளால் சொறிந்ததால் உண்டான கறுப்புக் கோடுகள் இவனை வேவுப்புலி ஆக்கியிருந்தன. முகம் அலம்பிவிட்டு வந்திருக்கலாம் எனத் தோன்றிய நினைப்பினை “ஆர் பாக்கப் போகினம்..” என்று அழித்தான்.

நேற்றிரவு களவாக ஓடிப்போன இருவரைத் தவிர்த்து இன்றைய காலை எண்ணிக்கையில் நூற்று நாற்பத்து இரண்டு பேர் முகாமில் இருந்தார்கள். நான்கு பேருக்குக் காய்ச்சல், சாப்பிடவில்லை. அவர்களை விட்டுப்பார்த்தால் நுாற்று முப்பத்து எட்டு சாப்பாடுகள்.

இந்த முகாமிற்கும் அருகில் பிள்ளைகளின் முகாமிற்கும் தினமும் குசினியிலிருந்து ஒரு மாட்டு வண்டியில் சப்ளை இருந்தது. காலையில் பாண்தான் நித்திய நிவேதனம். இண்டு மூன்று உரப் பைகளில் கொண்டுவருவார்கள். தொட்டுக்கொள்ள பருப்புக் கறி. மதியச்சாப்பாட்டுக்கு எப்படியும் மூன்று மணி தாண்டிவிடும். அடுப்பிலிருந்த பானையோடு அரிசிச் சோற்றினையும் பெரிய அண்டா ஒன்றில் கொதிக்கிற சோயாமீற் கறியும் வரும். பெடியங்களிடத்தில், சைவ இறைச்சியென்றே அது அழைக்கப்பட்டது. “சைவ இறைச்சியாடா..” என்று சலித்துக் கொள்வோரும் உண்டு. அவ்வப்போது மாட்டு இறைச்சியும் அமையும்.

குசினியிலிருந்து சாப்பாடு வருவதோடு மிகுதிப்பொறுப்புக்கள் மெஸ்ஸில் நிற்பவர்களிடம் கையளிக்கப்பட்டுவிடும். உணவினைப் பங்கிடுவது, விநியோகிப்பது, சுத்தம் செய்வது, சட்டிபானை கழுவி அடுக்குவதெல்லாம் அவர்களது தொழில். பெரும்பாலும் இரண்டு பேராவது நிற்பார்கள். கஸ்டகாலம், இன்றைக்கு இவன் தனியொருவனாய் நிற்கவேண்டியதாய்ப்போனது.

சிவராசண்ணை சொல்லியிருந்தார். “எல்லா ஆக்களுக்கும் சமனா சாப்பாடு போகணும் சரியா .. உண்ட கூட்டாளி எண்டோ ..பிடிக்காத ஆக்கள் எண்டோ பாக்கக்கூடாது ..அப்படியெண்டு ஏதும் கேள்விப்பட்டனோ ..” என்று அவர் முடித்திருந்தார். இவன் அதில் சரியாக இருக்கப் பிரயத்தனப்பட்டான். ஒரு மட்டுமட்டான கணக்குப்படி ஒரு நபருக்கு ஏழு சோயாமீற் துண்டுகள் சரிவரும் போலிருந்தது. கடைசித் தட்டு நீட்டப்படும் வரை பதட்டமாகவே இருந்தது. “யாருக்கும் பத்தாமல் போனால் என்ன செய்யிறது.. எப்பிடியும் அடுத்த பனிஸ்ற்மென்ற் ரொய்லற் டிப்பார்ட்மென்ட் ஆகத்தான் இருக்கும்..”

இறுதித் தட்டினை நீட்டியிருந்தவனுக்கு இவனது வயது இருக்கலாம். முகத்தை உம் என்று வைத்திருந்தான். அவனை அனுப்பிவிட்டு தலையை வெளியே நீட்டி யாருமில்லை என உறுதிசெய்த பின்னரே இறுக்கம் தளர்ந்தது.

இவன் மெஸ்ஸில் நிற்க வேண்டிய ஆளே கிடையாது. நேற்றுவரை மெடிக்ஸ்ஸில் நின்றவன். டொக்டர். அப்படித்தான் வயதிற் சிறிய பெடியங்கள் அழைத்தார்கள். இயக்கத்தில் இணைந்த முதல்நாள் பின்னேரம் இங்கு கொண்டுவந்தார்கள். மூன்றாம் நாள் மெடிக்ஸ்ஸில் நிற்கச் சொல்லி சிவராசண்ணை சொன்னார். அப்பொழுது ஸ்டெதஸ்கோப், ரெம்பரேச்சர் மீற்றர், பிரசர் மீற்றர் எல்லாம் தருவார்கள் என நினைத்தான். ஆனால் மலேரியாவிற்கு கொஞ்சம் குளோரோபோம் குளிசைகளும், சொறி சிரங்கு படர்தாமரைக்குப் பூசுகிற களிம்பும், ஐதரசன் பேரொட்சைட் தண்ணிர் மருந்தும் கொஞ்சம் பன்டேஜ்களும் மட்டும்தான் கொடுத்தார்கள். ஐதரசன் பேரொட்சைட்டினை அளவுக்கு மீறிப்பயன்படுத்த வேண்டாம் என்று சிவராசண்ணை சொன்னார். அம்மருந்து வன்னிக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. இந்தியாவிலிருந்து தருவிக்கிறார்கள் போல,

ஐதரசன் பேரொட்சைட்டை காயத்தின் மேல் ஒரு பஞ்சினால் ஒற்றித் தேய்த்தால் நுரைத்துக் கொண்டு வரும். “அழுக்கெல்லாம் கரைஞ்சு வெளியேறுது.. இனி புண் மாறும்” என்று சொல்லப்பழகிக் கொண்டான். படர்தாமரைதான் அங்கே பரவலான நோயாக இருந்தது. மற்றையது சூரை முட் கிழியல். மற்றைய முட்களைப் போலல்லாது சூரை முள்ளு மறு வளமாக ஒரு துாண்டிலைப் போல இருக்கும். தோள் அளவிற்கு வளர்ந்த செடிகளில் ஏகத்துக்கும் நிறைந்திருந்தது. தேவைகளுக்காக காடுகளில் நுழைந்து திரிகையில் கொழுவிக் கொழுவி இழுத்ததுப் பிராண்டியது. பூனையின் நகக்கீறல்களைப் போலிருக்கும். மருந்தெதுவும் கட்டுவதில்லை. ஓடிக்குளோனை தொட்டுத் தேய்த்து விடுவான்.

படர்தாமரையைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எரிச்சலைத் தரும் கடி. எப்போ பார்த்தாலும் இடுப்பிற்கு கீழே கையை வைத்து சொறிந்து கொண்டு திரிந்தார்கள். “ரெண்டு உடுப்பெண்டாலும் கழுவி பாவியிங்க .., கட்டாயம் பென்ரரை ரெண்டு நாளைக்கொருக்கா எண்டாலும் கழுவணும். ஒவ்வொரு நாளைக்கும் குளிங்க ., இதெல்லாம் இப்ப முடியிற காலத்திலேயே செஞ்சிடணும்.. மாதக்கணக்கில குளிக்காமயும் உடுப்பு மாத்தகூட நேரமே இல்லாமயும் ஓடித்திரியிற காலமொண்டு வரலாம் ..” என்று சிவராசண்ணை தினமும் சொன்னார். இவ்வாறான விடயங்களில் அவர் கண்டிப்பாக இருந்தார். தலைக்கு வாராவாரம் எண்ணெய் பூசுவதிலிருந்து தலைமுடியை ஒட்டவாக மொட்டையடிக்கும் வரை அவர் கவனித்தார். மொட்டையடிப்பதற்கு ஒரு காரணமிருந்தது. இடையில் ஓடிப்போனவர்களை ஊரில் கண்டுபிடிப்பதற்கு மொட்டை ஒரு அடையாளமாயிருந்தது. ஊர்களில் மொட்டையர்களுக்கு இரண்டு வியாக்கியானங்கள் இருந்தன. ஒன்று, தந்தையையோ தாயையோ இழந்திருந்தார்கள். மற்றையது இயக்கத்தை விட்டு இடையில் பாய்ந்து வந்திருந்தார்கள்.

படர்தாமரைக்குப் பூசுகிற வெண்ணிறக் களிம்பு உடலில் படும்போது சற்று குளிர்ந்த உணர்வாய் இருக்கும். ஆனால் அதற்கும் கடி சொறி நின்ற பாடில்லை. ஒருநாள் சிவராசண்ணையிடம் சொன்னான். “இதை விடச் சுப்பரான மருந்தொன்று இருக்கு அண்ணை. வேப்பமிலையை இடிச்சு அரைச்சு அதுக்குள்ளை கொஞ்ச மஞ்சள் துாளையும் சேர்த்துப் பிசைஞ்சு அரையில பூசிட்டுக் கிடக்க எரியிற எரிவில விடியக்காலமை தோலோடை உரிஞ்சு எல்லாம் போயிடும்.” அவர் விழுந்து விழுந்து சிரித்தார். பெரிதாக சத்தம் வராது. கீச்சிடுவதுபோல இருக்கும். “டேய், இவன் உங்களுக்கு ஹெமிக்கல் அடிக்கப் பாக்கிறான்டா,” என்று அருக்காக நடந்து சென்ற மூன்று பேரை அழைத்துச் சொன்னார்.

இவனை விடவும் ஒன்றிரண்டு வயதுகள் குறைந்த மூன்று பெடியங்கள் அங்கிருந்தார்கள். அவர்களில் ஒருவனுக்கு முழங்காலில் ஆறாத புண்ணொன்று இருந்தது. அவனைச் சுழியன் என்று அழைத்தார்கள். காரணப் பெயராக இருக்கக் கூடும். மெலிந்த உடல்வாகு. தொளதொளத்த காற்சட்டை போட்டிருந்தான். குறுகுறுத்த கண்கள் ஓரிடத்தில் நின்றதாயில்லை. சற்று மேலேறிய நெற்றியில் தலைமயிர் இரண்டு பக்கமும் சுழித்துக் கிடந்தது. விளையாட்டாக மரமொன்றில் ஏறியபோது, தவறி விழுந்ததில் முழங்காலில் கல்லுக்குத்தியிருந்து நாட்பட்டிருந்தது. இவன் மருத்துவரான பின்னர் பார்த்த முதல் வைத்தியம் அது. சுழியன் கால்களை நீட்டி அங்கிருந்த வாங்கு ஒன்றில் அமர்ந்து கொண்டான். புண்ணை வட்டமாய்ச் சுற்றி தோல் காய்ந்து கறுத்திருந்தது. நடுவில் ரோஸ் நிறத்தில் ஆறாத புண்..

“உமக்கு எத்தினை வயசு,” என்று கேட்போது சுழியன் நிமிர்ந்து பார்த்து குறும்பாகச் சிரித்தான். பின்னர் அமைதியாயிருந்தான். ஐதரசன் பேரொட்சைட்டை பஞ்சில் ஒற்றிக் காயத்தில் தேய்த்தபோது “ஊ.. ” என்று கத்தினான். பன்டேஜ் துணியை நான்காய் எட்டாய் மடித்து காயத்தில் வைத்து சுற்றிக் கட்டினான். சுழியன் எழுந்து நடந்தபோது சற்றுக் கெந்துவது போலிருந்தது. “நன்றி டொக்டர்..”

சுழியன் ஒரு விடயகாரனெத் தோன்றியது. அவனை அரசியல் துறைக்கு சேர்க்கக் கூடும். நேற்றோ அதற்கு முன்தினமோ, பேசிக்கொண்டிருந்த போது, “டொக்டர், உங்களுக்குத் தெரியுமோ, வெளிநாட்டுப் பள்ளிக்கூடங்களில ஒரு முறையிருக்காம். ஒரு சின்னப் பிள்ளையிட்டை ஒரு எழுத்தைச் சொல்லி உடனை அந்தப்பிள்ளையின்ரை மனதில அந்த எழுத்தில தொடங்கிற ஒரு இடத்தின்ரை பெயர், ஒரு பொருளின்ரை பெயர், ஒரு ஆளின்ரை பெயரைக் கேட்பினமாம். இப்ப, அமெரிக்காவில ஒரு பிள்ளையிட்டை, கி என்ற எழுத்தில தொடங்கிற ஒரு இடம் சொல்லச் சொன்னால் அது கிங்ஸ்டன் எண்டும். ஒரு ஆளின்ரை பெயர், கிளிண்டன் எண்டும். ஒரு பொருள் கீபோர்ட் எண்டு சொல்லும்….” என்று சொன்னான். ஆங்கிலத்தில் கி என்றொரு எழுத்து இல்லையெனச் சொல்லலாமா எனத் தோன்றியது. சொன்னால் அவனது உற்சாகம் வடிந்து விடும் போலிருந்தது.

இவன் “அதற்கு இப்போ என்ன” என்பதைப் போலப் பார்த்தான். சுழியன் மேலே அண்ணாந்திருந்தான். பின்னர் “டொக்டர், நீங்க இ்ப்ப என்னைக் கேளுங்கோ..” என்று இவனது தொடையைச் சுரண்டினான்.

சட்டென்று எழுத்தெதுவும் தோன்றவில்லை. கொஞ்ச நேரம் யோசித்தான். “சரி.. அதே.. கி.. ஒரு இடம், ஒரு ஆள்.. ஒரு பொருள் சொல்லும் பாப்பம்..”

சுழியன் சிரித்தான். முழுப்பற்களும் வெளித்தெரிந்தது. பிறகு “இடம் கிளாலி, ஆள் கிட்டு, பொருள் கிரேனைட்..” பட படவென்று சொன்னான். திரும்பவும் அண்ணாந்து பார்த்திருந்தான்.

கிடைக்கிற நேரங்களில் சுழியனோடுதான் பேசிக்கொண்டிருந்தான். அலைவரிசை நன்றாக ஒத்திருந்தது. இனிமேல் இரண்டு பேர் ஒன்றாகச் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கக் கூடாது என்று தென்னவன் ஓடர் போட்ட பிறகு வேறும் யாரையேனும் சேர்த்துத்தான் கதைக்க வேண்டியிருந்தது. தென்னவன் அங்கு இரண்டாவது பொறுப்பில் இருந்தார். முகாமில் நிற்பது குறைவு. சீருடையல்லாத சாதாரண உடைகளை அணிந்தபடி காலையில் வெளியேறுபவர் அரிதாக சிலநாட்கள் முழுவதுமாக முகாமில் நிற்பார். அவர் வயதையொத்த நிறையப்பேர் அங்கிருந்ததாலேயோ என்னவோ, பொறுப்பாளர் என்றொரு நினைப்பு அவர் மீது தோன்றுவதில்லை.

ஒரு நாட் காலை கணக்கெடுத்தபோது, காணாமற்போயிருந்த இரண்டு பேர் நேற்றைய நாள் முழுவதும் ஒன்றாயிருந்து குசுகுசுத்துக்கொண்டிருந்தனர் என்று தெரியவந்தபிறகு, இரண்டு பேர் கூடியிருந்து கதைப்பதற்கு தென்னவன் தடைவிதித்தார். இயல்பாய் இரண்டுபேர் கதைப்பதற்குரிய சூழல் வாய்த்தாலும் கூட மௌனமாக கடந்துபோவது ஒருவித அந்தரமான சூழலாயிருந்தது. சும்மாவாகிலும் மூன்றாம் நபரை வைத்துக்கொண்டே கதைக்க முடிகிறது.

அப்படியொருமுறை இன்னும் இரண்டுபேரை வைத்துக்கொண்டு “எனக்கெண்டா அரசியல்துறைதான் சரி. சண்டை சரிவராது” என்று இவன் சொன்னதுதான் வினையாகிப் போனது. அதுவும் வேறேதோ பேச்சினிடையே பொதுவாகத்தான் சொல்லியிருந்தான்.

அன்றைக்கு மாலை சுழியன் மருந்து கட்ட வந்திருந்தான். காயம் முழுதாக ஆறியிருந்தது. “இனி மருந்து தேவையில்லை” என்றான். “அதை நான் சொல்லோணும்” என்றான் இவன். உண்மையில் மருந்து தேவைப்பட்டிருக்கவில்லை. இருந்தாலும் வெள்ளை பன்டேஜ் துணியை மருந்தில் ஒற்றிக் கட்டினான். அதுவே கடைசிக்கட்டானது.

காலையில் துவக்குகளோடு (பொல்லுகள் என்று சொன்னால் பனிஸ்ட்மென்ட்) பயிற்சியை முடித்துவிட்டு எல்லோரும் வரிசையாக உட்கார்ந்தார்கள். ஒவ்வொரு வரிசையும் ஒரு குரூப்பாயிருந்தது. ஒவ்வொரு குரூப்பிற்கும் ஒரு பெயர் இருந்தது. அவற்றிற்குப் பொறுப்பானவர்கள் வரிசையின் முதலிடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். இவன் பேப்பர் வாசித்தான். இடையே “ஓயாத அலைகள் ஒன்றில் கைப்பற்றப்பட்ட ஆட்லறி எத்தனை மில்லிமீற்றரிலானது” என்று கேட்டான். அது சிவராசண்ணை அறிமுகப்படுத்திய வழக்கம். பெடியங்கள் உன்னிப்பாக செய்தியைக் கேட்கிறார்களா என்று அறிகிற முறை. நாலைந்து பேர் கை உயர்த்தினார்கள். அவர்களை கைகளை கீழே விடும்படி சொன்ன சிவராசண்ணை, ஆறாவது வரிசையில் ஆகப் பின்னிருந்தவனைப் பார்த்து “நீ சொல்லு” என்றார். அவன் “நுாற்று ஐம்பத்து ஒன்று..” என்றான். பிறகு பலமாக தலையை ஆட்டி “இல்லை, இல்லை நுாற்று ஐம்பத்து ஐந்து..” என்று இழுத்தான். பின்னர் முடிவாக “ சரியாத்தெரியேல்லை. ஆனால் அந்தக் குழலுக்கை போற அளவுதான்” என்றான். சிரிப்பலைகள் பறவைகளின் சிறகடிப்பைப்போல எழுந்து அமிழ்ந்தன.

ஏழாவது வரிசையாக மோட்டர் சைக்கிள் குரூப் இருந்தது. அதில் பன்னிரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். மற்றைய வரிசையில் ஆட்கள் குறைகிற போதெல்லாம் மோட்டர்சைக்கிள் வரிசையில் ஆட்கள் அதிகரித்தார்கள். வாரத்திற்கு இரண்டு பேராவது நிச்சயமாக அதில் இணைந்தார்கள். இயக்கத்தில் இணைந்த கொஞ்ச நாட்களிலேயே வீட்டுக்குப் போகப் போகிறோம் என்றவர்களும், பயிற்சி தொடங்க முன்னரேயே ஓட முயற்சித்து வழிகளில் மாட்டிக்கொண்டவர்களும் அந்தக் குரூப்பிலேயே விடப்பட்டிருந்தார்கள்.

சிவராசண்ணை மோட்டர் சைக்கிள் குரூப்பிலிருந்து ஒருவனை எழுப்பினார். “நீ இண்டைக்குப் போகலாம்” என்றார். அவனுக்கு வாயெல்லாம் பல்லாய்ப்போனது. மகிழ்ச்சியின் உச்சத்தில் நெளிந்தான். மற்றவர்கள் அவனை ஒருவித ஏக்கத்தோடு பார்ப்பது போலிருந்தது. அவன் வீட்டுக்குப் போக விரும்புகிறேன் எனச் சொல்லி மூன்று மாதங்களாவது ஆகியிருக்கும். அப்படிச் சொன்னபோது அவன் இயக்கத்தில் இணைந்து இரண்டு வாரங்களே ஆகியிருந்தன.

போகும்போது சிவராசண்ணை இவனையும் இன்னொருவனையும் வரச்சொன்னார். அவரது துண்டாடப்பட்ட காலின் மீதி, மடித்துக் கட்டிய சாரத்தின் கீழே தொங்கியபடியிருந்தது. வலது கையின் தோளிடுக்கில் ஊன்றுகோலைத் தாங்கி கெந்தி நடந்தார். இவன் அவருக்கு அருகாக அவரைத் தாங்குமாற்போல நடந்தான். சிவராசண்ணையால் எவருடைய தயவுமின்றி நடக்க முடியாது. சண்டையொன்றில் வலதுகாலை முழங்காலுக்கக் கீழே இழந்திருந்தார். மட்டக்களப்பின் காடுகளுக்குள் சண்டை நடந்ததாகச் சொன்ன ஞாபகம்.

அவரது உடம்பில் வேறும் காயங்களை இவன் கண்டிருக்கிறான். இடது முதுகைப் பிளந்த காயமொன்றை தோல் சற்றே திரட்சியாக மூடியிருந்தது. ஒருமுறை கிணற்றடியில் சிவராசண்ணை குளிப்பதற்கு தண்ணீர் அள்ளி வார்த்துக் கொண்டிருந்தபோது அந்தக் காயத்தைக் கண்டான். அவனையுமறியாமல் “புறமுதுகு” என்ற வார்த்தைகள் வந்து விழுந்தன. கண்களை இறுக்கி மூடி நாக்கை கடித்துக் கொண்டான். ஏதேனும் பனிஸ்ட்மென்ட் கிடைக்குமோ எனத் தோன்றியது. சிவராசண்ணை முகத்திலிருந்த சவர்க்கார நுரையை வழித்தபடி சிரித்தார். “சண்டைக்குள்ள நிண்டு பார் மகனே.. அப்ப தெரியும்” என்றார்.

சிவராசண்ணைக்கு இருபத்தாறு வயதுகள் இருக்கலாம். குளித்து முடித்து நெற்றியில் திருநீற்றினை அள்ளிப் பூசினார் என்றால் அவரை ஒரு இயக்கக்காரர் என அடையாளம் காண்பது வெகு சிரமம். தென்னவன் வாக்குவாதப்படுவார். “என்ன கருமத்துக்கு இந்தச் சாம்பலைப் பூசுறீங்கள், இல்லாத கடவுளுக்கு இதெல்லாம் என்ன கோதாரிக்கு எண்டு எனக்கு விளங்கேல்லை..”

சிவராசண்ணை பதிலுக்கு விவாதிப்பதில்லை. “இரிக்கிதோ இல்லையோ, இதொரு நம்பிக்கை” என்பதோடு முடித்துக் கொள்வார்.

சற்றே உயரமாயிருந்த மேசையில் ஒற்றைக் காலால் உந்தி ஏறி சிவராசண்ணை உட்கார்ந்து கொண்டார். ஊன்றுகோல்களை சாய்த்து வைத்தார். காட்டின் தடிகளை வரிசையாக அடுக்கி அமைத்திருந்த நீண்ட இருக்கையில் இவனையும் மற்றவனையும் உட்காரச் சொன்னார். சற்று நேர அமைதிக்குப் பிறகு “என்னடா, தமிழ்செல்வன் அண்ணனுக்கு பதிலா உன்ன அரசியல் துறைக்குப் போடோணும் எண்டு சொன்னனியாம், அவ்வளவு பெரிய ஆளா நீ ” என்றார்.
இவன் பதைபதைத்துப் போனான். வார்த்தைகள் சிக்கின. “அம்மாவாணை நான் அப்பிடிச் சொல்லேல்லையண்ணை” என்று அழுமாப்போல பதில் சொன்னான். “நாங்கென்ன வேலைக்கா ஆக்களேடுக்கிறம் ” இதைச் சொல்லும் போது அவருக்கும் சிரிப்படக்க முடியவில்லை. முகத்தை்திருப்பி மறைத்துக் கொண்டார். இவன் அமைதியாய் நின்றான்.

“இண்டைலரிந்து மெடிக்ஸ விட்டுட்டு சொல்லுறவரைக்கும் மெஸ்ஸில நில்.. போ..”

சுரத்தில்லாமல் வெளியேறினான். அதுநாள் வரையான உற்சாகமெல்லாம் உடைத்து வெளியேறி வழிந்து தீர்ந்தாற்போல இருந்தது. மற்றவன் பாவம், அவன் நேற்று “புலனாய்வுத்துறைதான் எனக்கு விருப்பம்” என்றிருந்தான்.

“நீ என்ன.. அம்மானுக்குப் பதிலா உன்னை ஐ க்கு பொறுப்பா போடணும் எண்டு சொன்னியாம்..” என்று சிவராசண்ணை அவனை விசாரித்துக் கொண்டிருந்தது கேட்டது. தகடு குடுத்த அந்தக் கறுப்பாடு யாராக இருக்கும் என்று இவன் யோசிக்கத் தொடங்கினான்.

இயக்கத்திற்குச் சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே இவனை நிகழ்ச்சியொன்றில் பேசுமாறு சிவராசண்ணை கேட்டிருந்தார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவ்வாறான நிகழ்ச்சிகள் நடந்தன. மற்றைய நாட்களில் படுக்கைக்கு முன்னர் ஏதேனும் படம் போடுவார்கள். ஒளிவீச்சுக்களாகவோ, மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆங்கில தாக்குதல் படங்களாகவோ இருக்கும். பெரும்பாலும் ரம்போ வின் படங்கள் தான். இவனுக்கு சண்டைப்படங்களில் ஆர்வமிருந்ததில்லை. ஞாயிற்றுக் கிழமைக்காக காத்திருந்தான்.

ஞாயிறு நிகழ்ச்சிகளில் வில்லுப்பாட்டுக்கள் கவிதைகள் பாடல்கள் பேச்சுக்கள் என சிவராசண்ணை ஆட்களைப் பிடித்து ஒழுங்கு செய்திருந்தார். எல்லோரும் ஏதாவது ஒன்றில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டுமென்று வற்புறுத்துவார். அப்போதெல்லாம் “நாங்கள் சண்டைக்குத்தான் வந்தனாங்கள், உதுகளுக்கு இல்லை” என்று சிலர் வாக்குவாதப்படுவார்கள். “இதுகளை விட்டுட்டு, முதல்லை எங்களை ட்ரெயினிங்குக்கு அனுப்பிற வேலையைச் செய்யுங்கோ” என்பார்கள்.
“கூடி வரும் வரைக்கும் பொறுமையா இரிக்க வேணுமெண்டதும் ஒரு போராளிக்கு முக்கியம்தான். சரி ஏன் சண்டைபிடிக்க வந்தனி எண்டதையாவது ஏறிச் சொல்லு”

சுழியன் நன்றாகப் பாடுவான். கைகளைப் புறத்தே கட்டியவாறு முகத்தில் உணர்ச்சியேதையும் காட்டிக்கொள்ளாமல் மேலே கூரையைப் பார்த்தவாறு பாடுவான். “சின்னச் சின்ன கூடு கட்டி நாமிருந்த ஊர் பிரிந்தோம்..” குழந்தைமையான அவனது குரல் அந்தப் பாடலுக்குப் பொருத்தமாயிராது. ஆனாலும் அவன் பாடி முடிக்கும் வரை நிசப்தம் சூழ்ந்திருக்கும். யாருக்கும் அதை கலைத்துப் போட மனம் வராது.

ஒருநாள் இவன் சமகால அரசியல் குறித்துப் பேசினான். முதலிரு வார்த்தைகளை உதிர்க்கும் வரை தயக்கமா நடுக்கமா என உய்த்துணர முடியாத உணர்வொன்று ஒட்டியபடியிருந்தது. நீண்ட காலத்தின் முன் சிறுவயதில் பள்ளிக்கூட மேடையொன்றில் ஏறி “நான் பேச எடுத்துக் கொண்ட விடயம் சுத்தம் சுகம் தரும். சுத்தமாயிருப்பதற்கு சோப்புப் போட்டுக் குளிக்க வேண்டும் ” என்றுவிட்டு அழுதுகொண்டு இறங்கி ஓடியவன்தான் பின்னர் மேடைகள் பக்கம் எட்டியும் பார்த்திருக்கவில்லை.

இங்கே மேடையில் மைக் எதுவும் இருக்கவில்லை. அதுவே முன்னிருந்தவர்களுக்கும் இவனுக்குமான நெருக்க உணர்வொன்றைத் தோற்றுவித்தது. குரலைச் செருமிக்கொண்டு ஆரம்பித்தான். “நீங்கள் இந்த விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று நிறுத்திய போது எந்த விடயமென்பதில் இவனுக்கே குழப்பமிருந்தது.

“யாழ்ப்பாணத்தைப் புலிகள்… ” என்றவன், நிறுத்திவிட்டு மீண்டும் முதலிருந்து தொடங்கினான். “யாழ்ப்பாணத்தை நாங்கள் விட்டுவிட்டு வந்ததை எல்லாரும் தோல்வியென்கிறார்கள். ஆம். அது ஒரு ராணுவப்பின்னடைவுதான். ஆனால் உங்களுக்குத் தெரியும். யாழ்ப்பாண மக்கள் ஒட்டுமொத்தமாக இடம்பெயர்ந்த உடனே ஐநா செயலாளர் பூத்ரஸ் பூத்ரஸ் காலி தனது கவலையை தெரிவித்திருக்கிறார். தனது கரிசனையைச் சொல்லியிருக்கிறார். இதுவொரு அரசியல் வெற்றி. எங்கள் மக்கள் தங்களது பிரச்சனையை இன்று உலகப்பிரச்சனையாக்கியிருக்கினம். நீங்கள் இந்த விடயத்தை தெளிவாப் புரிஞ்சு கொள்ள வேணும்” என்று நிறுத்தினான். பேசிக்கொண்டிருந்தபோது கைகள் உயர்வதிலும் தாழ்வதிலும் அப்படியும் இப்படியும் அசைவதிலும் ஒருவிதமான கம்பீரத்தினை உணர்ந்தான். பூரிப்பாக இருந்தது. பெரும்பாலும் அப்போதே அரசியல் துறை கனவு உதித்திருக்க வேண்டும்.

சிவராசண்ணை தொடர்ந்து பேசு என்பதுபோல சைகை செய்தார். “எங்களுக்காக தமிழகத்திலே அன்பர் ஒருவர் தீக்குளித்து தன்னைக் கொடுத்துள்ளார். அவருக்கு எமது வீரவணக்கங்கள்”

அவரது பெயர் அப்துல் ரவூஃப் என்பது இவனுக்குத் தெரிந்திருந்தது. சொல்லவா விடவா என்று சற்றுக் குழம்பி அன்பர் என்றே முடித்துக் கொண்டான். சிவராசண்ணை கைதட்டினார். இறங்கி நடந்தபோது தென்னவன் தோள்களைத் தட்டி “கலக்கிட்டீர்” என்றார்.

அன்றைக்குப் பிறகு இவன் தொடர்ச்சியாப் பேசினான். வகுப்பெடுக்க வருகிற பொறுப்பாளர்களிடம் கேள்விகள் கேட்டான். மற்றையவர்களின் கேள்விகள் எப்போதும் ஒரேமாதிரியிருந்தன. “எப்ப எங்களை ரெயினிங்குக்கு அனுப்புவியள், எப்ப சண்டைக்கு அனுப்புவியள்” என்ற ரகக் கேள்விகள். முகாமிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகவே ஆட்களைப் பயிற்சிக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். இவன் அனுப்பப்படவே இல்லை. அதுபற்றி இவன் அலட்டிக் கொண்டதும் இல்லை. இவன் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கேள்விகளைக் கேட்டான். பதில்களும் அப்படியே இருந்தன.

“எங்களிடம் விமானங்கள் இருக்கிறதா..”

“ஓம், பலாலியிலும் வவுனியாவிலும் நிற்பவை எங்கடைதான்.. ஆயுதங்களை வாங்கி ஒருநாள் எங்களிடம் மொத்தமாகத் தருவதைப் போல, விமானங்களையும் தருவார்கள்.”

“ராஜீவ் காந்தியை கொலை செய்தது நாங்களோ..”

“நாங்கள் இல்லை. ஆனால் அவர் கொல்லப்பட வேண்டிய ஆள் இல்லையென்று நினைக்கிறீரோ..”

“மாத்தையா எங்கை..”

“இந்தக் கேள்விக்கான பதில் உங்கடை போராட்ட குறிக்கோளுக்கும், நோக்கங்களுக்கும் எந்த விதத்திலும் உதவியாயிருக்காது.”

மெஸ் நினைத்தது போல கஸ்டமாக இருக்கவில்லை. சிலவேளைகளில் குசினிக்குப் போய் சாப்பாடு எடுத்து வரவேண்டியிருந்தது. அதற்கு கூடவே இரண்டு பேரை சிவராசண்ணை அனுப்பி வைத்தார். நடந்துபோய் மாட்டுவண்டியில் எடுத்து வந்து மீண்டும் வண்டிலைக் கொண்டுபோய் விடவேண்டும். குசினியிலும் மோட்டர்சைக்கிள் குரூப்பிலிருந்தவர்களே வேலை செய்தார்கள். போகிற நேரமெல்லாம் “எங்களை எப்ப விடுறதெண்டு சிவராசண்ணை உன்னட்டை ஏதாவது சொன்னவரா” என்று இவனிடம் கேட்டார்கள். அவர்களில் ஒருவன் எப்போது பார்த்தாலும் “மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை. நாங்க மட்டும் உலகத்தில வீடு திரும்ப முடியல்ல” என்று பாடியபடியிருப்பான்.

குசினிக்குப் போகிற வழியில் பிள்ளைகளின் முகாமின் வாசலில் இருந்த கூட்டில் இருவர் அல்லது மூவர் சென்ரிக்கு இருப்பார்கள். நீளக்காற்சட்டை அணிந்து சற்றே பெரிய சேர்ட் போட்டிருப்பார்கள். இடுப்புப் பட்டி அணிந்திருப்பதில்லை. உள்ளே சிரிப்புச் சத்தங்களும் கேட்கும். இதற்காகவே இவனோடு குசினிக்கு வரப் பிரியப்படுபவர்களும் உண்டு. பிள்ளைகளை நேராக எதிர்கொள்ள நேர்கையில் சிரிப்பதா, அல்லது முகத்தை உம் என்று வைத்திருப்பதா என்பதில் இவனுக்கு குழப்பமாயிருந்தது. பெரும்பாலும் தலையைக் குனிந்து கொண்டு கடந்துவிடுவான். கூட வருபவர்கள் சிலவேளைகளில் அவர்களைப் பார்த்து “எப்பிடி, ஒரே பம்பலாப்போகுது போல..” என்பார்கள்.

“வேலையைப்பார்த்துக் கொண்டு போம்..” என்று பதில் வரும்.

சென்ற கிறிஸ்மஸ்ஸின் போது பிள்ளைகள் முகாம் வந்திருந்தார்கள். அன்று பெரிய பெட்டிகளில் கேக், மைலோ மில்க், கன்டோஸ் என்பனவும் வந்திருந்தன. இவன் கிறிஸ்மஸ் தாத்தா ஆகியிருந்தான். பிள்ளைகளில் அவளும் இருக்கலாம் என்று சட்டெனத் தோன்றியது. “நான் இணைந்தபடியால் அவளும் இணைந்திருக்கக் கூடும், கணவன் இறந்தால் தீக்குளிக்கிற மனைவியைப் போல.. ”

தாத்தாவின் முகமூடி வசதியாகப்போனது. யாருக்கும் தெரியாமல் ஒவ்வொருவராகத் தேடினான். அவள் இல்லை. மெல்ல மெல்ல இன்னதென முடியாத ஏமாற்றம் இவனில் படர்ந்தபடியிருந்தது.

இயக்கத்தில் சேரும்போதே அவளைப்பற்றிக் கேட்டார்கள். பத்தோ பன்னிரெண்டு கேள்விகள் அடங்கிய றோணியோவில் அச்சிடப்பட்ட ஒரு தாளில் கடைசிக் கேள்வியாக அது இருந்தது. காதல் உண்டா.. ஆம் எனில் விபரம்.. பெயர்.. முகவரி

ஆம் என்று விபரங்களைக் கொடுக்கலாம் எனத் தோன்றிய எண்ணத்தை பிறகு மாற்றிக் கொண்டான். அந்தக் காதலை நிறுத்திக் கொள்வதா தொடர்வதா என்பதில் இன்னுமொரு தெளிவு ஏற்படவில்லை. முகாமிற்கு வந்த முதல்நாட்களின் இரவுகளில் சட்டென்று வருகிற விழிப்பு, கூடவே அவளது நினைவையும் அழைத்து வரும். வீட்டில் படுத்திருக்கவில்லை என்ற நினைப்பும் சேர வெறுமையான உணர்வொன்று நெஞ்சை அடைத்துக் கொள்ளும். அவளுக்குச் சொல்லாமல் எதற்காக நான் இயக்கத்திற்கு வந்தேன் என்று இரண்டொரு தடவைகள் எழுந்த கேள்வி பிறிதொருநாள் ஏன் இயக்கத்திற்கு வந்தேன் என்பதில் வந்து நின்றது. நல்ல வேளையாக அப்படியொரு கேள்வி படிவத்தில் இருந்திருக்கவில்லை.

அதிகாலையிலிருந்து தலைக்கு மேல் விமானங்களின் இரைச்சல் கேட்கத் தொடங்கியிருந்தது. துாரத்தே வெடி அதிர்வுகள் உற்றுக் கேட்டாலன்றி, மற்றும்படி பெரிதாக கேட்கவில்லை. மினுமினுக்கிற சில்வர் சாப்பாட்டுத் தட்டுக்கள் எதுவும் வெளியில் இருக்கக் கூடாதென்று தென்னவன் சொன்னார். அடர்த்தியான காட்டுமரங்களின் கிளைகளைத் தாண்டி ஊடுருவுகின்ற சூரிய ஒளி, சில்வர் தட்டில் பட்டுத் தெறித்து விமானிக்கு சமிக்கையைக் கொடுக்கலாம் என்பதை நம்ப முடியாதிருந்தது. எதற்கும் இருக்கட்டுமென்று கால்களுக்கடியில் அகப்பட்ட ஒன்றிரண்டு கன்டோஸ் ஈயப்பேப்பர்களையும் இவன் அப்புறப்படுத்தினான்.

கிளிநொச்சிப்பக்கமாக சண்டை நடந்தது. கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றி அப்பொழுது ஆறேழு மாதங்களே ஆகியிருந்தது. புலிகளின் குரலின் செய்தியில் ஆனையிறவிலும் அணிகள் இறங்கி நிற்பதாகச் சொன்னார்கள். ஆனையிறவு என்ற பெயரைக் கேட்டதுமே முகாமில் உற்சாகக் கூச்சல்கள் கிளம்பின. வழமையாக இப்படிச் சத்தமிடும்போது சிவராசண்ணை ஒன்றிரண்டு பேரை முறைத்துப் பார்ப்பார். சத்தம் அடங்கிவிடும். ஆனால் இப்பொழுது சிவராசண்ணை தன் முகத்திலும் புன்னகையைப் படரவிட்டிருந்தார்.

இவனும் சுழியனும் இன்னும் நாலைந்து பேரும் வானொலிக்கு அருகிலேயே இருந்தார்கள். “இந்தச் சண்டைக்கு நாங்கள், ஆகாய கடல் வெளிச் சமர் – இரண்டு அல்லது ஓயாத அலைகள் – இரண்டு” என்று பெயர் வைக்கலாம்” என்றான் இவன். வார்த்தைகள் வெளியேறிய பிறகுதான் நெஞ்சு திக் என்றது. முகத்தைத் தாழ்த்திச் சுழற்றி கூட இருந்தவர்களை பார்த்தான். யாராவது போய் பற்றி வைக்கப்போகிறார்கள்.. “தலைவரின் இடத்துக்கு என்னை நியமிக்கச் சொன்னதாக..”

மதியத்திற்கு பிறகு சிவராசண்ணை எல்லோரையும் வரிசை கட்டச் சொன்னார். “சப்ளைக்குப் போக வேண்டி வரலாம். ரெடியா இரிங்க..”

திரும்பவும் உற்சாகக் கூச்சல்கள் கிளம்பின. இவனுக்கு நெஞ்சிடிக்கத் தொடங்கியது. ஷெல்லும் துப்பாக்கிச் சன்னங்களும் கண்டபடிக்குப் பறக்கிற ஓர் இடத்திற்கு அருகில் நிற்பதை யோசித்தாலே முழங்கால்களின் இரண்டு சிரட்டைகளும் குளிரில் பற்களைப் போல முட்டிக்கொண்டு ஆடுவதாய் உணர்ந்தான். மேலே கிபிர் வேறு..

“சத்ஜெய என்று சமருக்குப் பெயரிட்டு, உத்வேகம் கொண்டு வந்தாயா.. புலிகள் நித்திரையா கொள்வார்.. ” என்று யோசித்துக் கொண்டிருந்த கவிதை வரிகளும் மறந்து போயின.

பரந்தன் லைனை உடைத்துக்கொண்டு உள்நுழைய முடியவில்லையென்றும் ஆனையிறவில் இறங்கியவர்கள் ஆட்லறிகளை அழித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்திவந்தபோதுதான் போன உயிர் திரும்பி வந்தது.

முகாமில் உற்சாகமிழந்து திரிந்தார்கள். சுழியன் “ச்சே.. ச்சே..” என்றபடி திரிந்தான். “அடுத்த அடி ஆனையிறவுக்கு விழேக்கை அங்கை நான் நிப்பன்” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தான்.

இரண்டொரு நாட்களுக்குப் பிறகான ஒருநாட்காலை மோட்டச்சைக்கிள் குரூப்பிலிருந்து ஏழுபேரை சிவராசண்ணை வீட்டுக்குப் போகச் சொன்னார். இவனறிய இப்படி ஒரே தொகையில் ஆட்களை அனுப்புவது புதிதாக இருந்தது. அவர்களில் மாங்கிளியும் பாட்டுக்காரனும் இருந்தான். வரிசையில் முதலாவதாக இருந்த சுழியன் அவர்களை நோக்கி ஏளனத்தைப் போர்த்திய பார்வையை வீசினான். பிறகு தலையில் அடித்துக் கொண்டான். இவனுக்கு சுழியனில் எரிச்சல் வந்தது. “இவர் பெரிய மயிர்…”

அன்றைக்கு இரவே மோட்டச் சைக்கிள் குரூப்பில் சேரலாம் என திடீரென்று யோசனை உதித்தது. கிட்டத்தட்ட எட்டு அல்லது ஒன்பது மாதமாவது மோட்டச்சைக்கிள் குரூப்பில் இருக்கவேண்டியிருக்கும் என்ற நினைப்பு விசரைக் கிளப்பியது. புதிய மலக்கிடங்குகளை வெட்டுவதிலிருந்து சமைத்துப்போடுவது வரை வாட்டியெடுப்பார்கள். தப்பி ஓடினால் என்ன..

இவன் ஓடிப்போவது பிள்ளைகளின் முகாமில் சென்ரிக்கிருப்பவர்களின் கையில் இருக்கிறது. அவர்கள் கண்ணயரும் நேரம் எதுவெனத் தெரியவில்லை. அல்லது கண்ணயர மாட்டார்களோ என்னவோ.. அனைத்துக்கும் முதல் ஏன் விலகி வந்தேன் என்பதற்கு எதையாவது ஊரில் சொல்லவேண்டும். பயிற்சி கடினமென்று சொல்லலாம்தான். ஆனால் சூரை முட்காயங்களைத் தவிர உடம்பில் ஒரு சிராய்ப்புத் தன்னும் இல்லை. ஆகக்குறைந்தது அடிப்படைப் பயிற்சி முடித்தவர்களுக்கு முழங்கைகள் கறுத்து கண்டிய காயங்களோடு இருக்கும். அதுவும் கிடையாது.

அடுத்தநாள் பகல் முழுக்க விலகுவதற்கு என்ன காரணம் இருக்கமுடியும் என்று மண்டையைப் போட்டுக் குழப்பினான். அன்றைக்கு நடுச்சாமம், நிலவு ஒளிர்ந்து கொண்டிருந்த வெளிச்சத்தில் ஒற்றையடிப்பாதைக்கு இறங்கி நடந்தான். அருகாக நீரோடையின் சலசலப்பன்றி வேறொரு அசுமாத்தமுமில்லை. பிள்ளைகளின் முகாம் அமைதியாகக் கிடந்தது. சென்ரிக்கு இருக்கிறார்களா இல்லையா என்றும் தெரியவில்லை. குசினியைத் தாண்டி வீதியில் ஏறி மாங்குளத்தை நோக்கி நடக்கத்தொடங்கியவன் பலப்பல ஆண்டுகள் நடந்தும் நீரில் மிதந்தும் பறந்தும் வந்து நிமிர்ந்த இடம் ஐரோப்பாவின் மத்தியிலிருந்தது.

0 0 0
பெரும்பாலும் கேள்விகளை அனுப்பச்சொல்லி ஆறுதாக உட்கார்ந்து பதில்களாக எழுதியே கொடுத்துவிடுவான். நேரடிப் பேட்டிகளுக்கு ஒருபோதும் சம்மதித்தது இல்லை. அவை இக்கட்டில் மாட்டிவிடக்கூடியவை. பதிலற்ற கேள்விகளுக்கு கறுக்கும் முகத்தையும் தளம்பும் குரலையும் கமெரா காட்டிக்கொடுத்துவிடும். இந்த முறையும் கேள்விகளை அனுப்பச் சொல்லியிருந்தான். கிடைத்திருந்தன. ஒரு நள்ளிரவில் பதில்களை எழுதத் தொடங்கினான்.

கேள்வி இலக்கம் 6

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீங்கள் விலகியதற்கான காரணங்கள் என்ன..

நான் பெருங்கனவொன்றோடு அந்த அமைப்பில் இணைந்து கொண்டேன். சிங்கள அரச பயங்கரவாதத்திடமிருந்து எனது மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கிற கனவு அது. ஆனால் துரதிஷ்டவசமாக அந்த அமைப்பில்..

1.ஜனநாயகத் தன்மையை மருந்திற்கும் காண முடியவில்லை.
2.ஏக பிரதிநிதித்துவம் என்பது எனக்கு ஒருபோதும் ஏற்புடையதாக இருக்கவில்லை.
3.மாற்றுக் கருத்துக்களுக்கு அந்த அமைப்பு மதிப்பு அளிக்கவில்லை.
4.வலது சாரி அரசியலை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?
5.மக்களை மையப்படுத்திய சரியான அரசியல் செல்நெறி அங்கு இருக்கவேயில்லை.
6…
7..
8..
மேற்கூறிய பத்துக் காரணங்களும் ஒன்று சேர்ந்து ஒருநாள் அல்லது ஒருநாள் இந்த இயக்கத்தை முற்றாகத் தோற்கடிக்கும் என்பதனை நான் அப்போதே உணர்ந்திருந்தேன்.
0 0 0
பதினைந்து வருடங்களில் இயக்கத்தை விட்டு விலகியதற்கான பத்துக் காரணங்களைக் கண்டுபிடிக்க முடிந்த இவனுக்கு கடைசிவரை இயக்கத்தில் ஏன் இணைந்தேன் என்பதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.