ஆதிரை நாவல் முதல் வாசிப்பு முடித்தேன். நுட்பங்களை தவற விடாமல் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.. அதற்குள் அவசரப் பட்டு எழுதத்தூண்டுது அந்தரித்த மனது..!
வாழ்க்கைக்கும் வார்த்தைக்குமான இடைவெளித்தூரம் என்பது இந் நாவலில் ஒரு பெருமூச்சின் நீளமே… படைப்பு நோக்கத்தின் அடிப்படைத் தார்மீகம், படைத்த விதத்தில் நம்பகத்தன்மை, வெளிப்பாட்டில் அழகு என மூன்றிலும் பூரணத்தன்மையை நிறைத்துக் கொண்ட முழு நாவல் ஆதிரை… எங்கே தொடக்கம்…எங்கே முடிவு… என்பதான ஈழப்போராட்ட வரலாற்றை மானுட வாழ்வுப் பிண்ணனியில் மட்டுமே கூடுதல் சித்திரமாக சொல்ல முற்பட்ட புதினம் இது..
போரும் அமைதியும் அல்ல – போரும் விளைவும் .. என்பதன் நடைச்சித்திரம்.. உயிரைப் பிடித்துக் கொண்டு ஒடிக் களைத்து, வாயில் நுரை தள்ளி நிற்கும் பிழைப்பினூடேயும் மனித உறவுகளிடையே மலரும் காதல், கருணையான மேலான தருணங்கள்.., நம் மனதை தீமையின் விடக்கனிகளை அண்ணாந்து பார்க்க விடாமல் செய்கின்றன..
இப்படி தடுத்தாட்கொள்ளும் பெண் சக்திப் பாத்திரங்கள் ஆச்சிமுத்துக் கிழவி, மலர், நாமகள், இறுதியில் ஆதிரை எனப் பலரும்… அவரவர் மனமுதிர் சோலையில்..
“ஒரு பொம்பிளை வயித்திலே பிறந்திட்டு இதையெல்லாம்செய்யிறே. நல்ல சாவே வராது ..” படுகொலைப் பாதகருக்கு சாபமிடும் ஆச்சிமுத்துக் கிழவி. பொம்பிளை வயிறு கடவுளின் சொந்த வயிறல்லவா.. பசி மரணத்திற்கு அஞ்சாது… என்றொரு உக்கிர வரி நாவலில்.. உலகின் மன சாட்சி உலுக்கப்படலையா… சர்வதேச நாடுகளின் கூட்டு பயங்கர வாத இறுதிக்கட்ட தாக்குதலில்- நின்றாலும் நடந்தாலும் நிலை ஒன்று தான் – என்ற கையறு நிலையில் இயக்கம் உறைந்தது…. அந்தரத்தில் அலைந்த இலவம் பஞ்சுகள்.. இறுதியில் குந்தக் கிட்டியது வெறுமைச்சுடு பாறையென முடிந்தது அந்தோ மக்கள் ஈழம்… புலத்தில் ஏது போரும் முடியும்.. அல்லது போர் நிறுத்தம் காணும்.. மனித மனங்களிடையேயான சாதிமத இன பேதப் போர் – நாவலில் ஒரே இனத்தினுள்ளும் சாதி வன்மம் சுட்டப்படுகிறது பல இடங்களில் – நிறுத்தப் படுமா…புறப்போருக்கு உயிர்த்தியாகம்.. ஆறாவடு தான் அந் நடுகல்லும்.. புற உறுப்புகள் கொண்டு என்னத்தை வாழ்ந்தோம்..
ஒரு குறள்: புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை..அகத்து உறுப்பு அன்பிலவர்க்கு…
அமைதிப்படை அட்டூழியம், சிங்கள ராணுவ கொடுங்கோன்மை இவற்றோடு புலி இயக்கதவறுகளையும் – புலிக்கென்றால் தவறு மட்டும் தானா ?! – சயந்தன் நேர்மையாக பதிவு செய்துள்ளார்.. முஸ்லீம் மக்கள் படுகொலை, கட்டாய ஆள் சேர்ப்பு, துரோகிகள் என சகோதர கொலைகள்.. என பலதையும் சுட்டித்தான் செல்கிறார் ஒரு எழுத்துக் கலைஞனாக… அதனால் தான் இது எதையும் ஒளித்துக் கொள்ளாத, உள் நோக்கம் அற்ற படைப்பாகிறது…
என்ன ஆயினும் கடைசி வரை சந்திரா கதா பாத்திரம் புலிகளை விமர்சிப்பதை நிறுத்தவில்லை… ஆனாலும் பெண் அல்லவா.. தன்னுள் ஒரு சேய் இல்லை யெனினும் பார்க்கும் இடமெல்லாம் தன் சேய்களென வாழும் ஜீவன் அவள்… கருணை தான் வீரம் அவளுக்கு.. எனக்கு வீரம் மட்டுமே வீரம்… என்னிடம் இல்லாததின் மீது வியப்பு நாட்டம்.. எனவே இயக்கத்தை என்றும் குறைத்துப் பேசமாட்டேன்… மேலும் இறுதிவரை மா பெரும் தலைமையும் உப தலைமைகளும் சொந்த வாழ்வு தேடி ஓடி விடவில்லை, அறத்தின் பாற்பட்டு மறத்தியாகம் தான்…