தமிழ்நதி

எந்தவொரு படைப்பையும் முன்முடிவுகளோடு வாசிக்கக்கூடாதென அண்மைக்காலமாக எண்ணுகிறேன். ஆனால், முகநூலும் சில இணையப் பதிவுகளும் தந்த சித்திரங்களை எளிதில் துடைத்தழித்துவிட்டு வாசிக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டும். அதிலும் குறிப்பாக அ.இரவியால் எழுதப்பட்ட விமர்சனங்கள்… பிடித்த குழந்தையை கொஞ்சிக் கொஞ்சி கன்னம் வலிக்கப் பண்ணும் நேசம் அது.

முப்பதாண்டு கால வரலாற்றின் (அது எப்போதும் பகுதி வரலாறே) நெடுக்குவெட்டுத் தோற்றத்தை புனைவின் ஓரம்சமாகிய அழகியல் கெடாது கொணர்வதென்பது இலகுவான வேலையன்று. இலக்கியகர்த்தாக்கள் குழுக்களாகப் பிரிந்து இயங்கும் துரதிர்ஷ்டவசமானதொரு சூழலில் காலப்பிழைகள், தரவுத் தவறுகள் நேர்ந்துவிடாது பார்த்துக்கொள்ளவும் வேண்டும். இல்லையெனில், கிழித்துத் தோரணங் கட்டிவிடுவார்கள். சாதாரணர்களுக்கு கைகூடாத வன்மம் உக்கிரங் கொண்டியங்கும் காலமிது. இத்தகைய பிழைகளற்று, தன் பாத்திரங்களுக்கூடாக காலத்தை நகர்த்திச் செல்வதில் சயந்தன் வெற்றிபெற்றிருக்கிறார். ஒரு படைப்புக்கு இத்தனை ‘நீதி’செய்வதற்கு கடும் உழைப்பு வேண்டும். இந்நாவலை எழுதுவதற்கு சயந்தன் எடுத்துக்கொண்ட காலம் வீணாகிவிடவில்லை. ‘ஆதிரை ஒரு வரலாற்று ஆவணம்’ என்று சொல்வது அதீதந்தான். ஈழ வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஒரு துளி இந்நாவல் என்றால் அது மிகையில்லை. சயந்தன் ஒரு அற்புதமான கதைசொல்லி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

சற்றே அரதப் பழசான வாசகம் என்றாலும், ‘இந்நாவல் மண்வாசனையை மீட்டு வந்தது’என்பதைக் கூறியேயாக வேண்டும். பிரதேச மொழி வழக்குகளிலும் பிசகு நேர்ந்துவிடாதவாறு கவனஞ் செலுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே சொல்லப்படாத உவமானங்களும் நிலத்துக்கு நெருக்கமான அவற்றின் தன்மையும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை.
உதாரணத்துக்கு ஒன்று: ‘குளுவன் மாட்டைப் போல சொற்கள் அடம்பிடித்தன’

இதுவொரு துன்பியல் நாடகம். இந்நாவலில் வரும் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். ‘ஆதிரை’யில் துயரம் குறைவாக இருக்கிறதென்றும் மேலும் வேண்டுமென பதிப்பாசிரியர் கேட்டதாகவும், அதனால் மேலும் இரண்டு மாதங்கள் எடுத்துக்கொண்டு சயந்தன் எழுதியதாகவும் தமிழ்க்கவி அவர்கள் இந்நாவல் விமர்சனக் கூட்டத்தில் கூறியதாக சித்தாந்தன் எழுதியிருந்ததை வாசித்தேன். அதீத துயரம் சிலசமயங்களில் படைப்பிலிருந்து வாசகரை ‘ஓடிப் போ’என்கிறது. நான் நாவலை எடுப்பதும் வைப்பதுமாக இருந்து ஒருவழியாக வாசித்து முடித்தேன். அப்படிச் செய்வதானது ஒருவகையான தப்பித்தல்தான். இன்னுஞ் சொல்லப்போனால், 2009 ஏப்ரல், மே பற்றி எழுதப்பட்ட பக்கங்களை புரட்டிப் புரட்டிக்கொண்டு அடுத்த விசயத்திற்குத் தாவிவிடலாமா என்றுகூட எண்ணினேன். ஆனால், சமகாலத்தில் ஒருவரால் எழுதப்பட்ட படைப்பின் ஒரு வரியையும் தவறவிடாமல் படித்துவிடவேண்டும் என்ற ஓர்மத்தினால் தொடர்ந்து வாசித்தேன். அக்காலகட்டப் பகுதி குறித்து எழுதப்பட்டிருந்த அநேகமானவை ஏற்கெனவே அறியப்பட்டவையே. பிரான்ஸிஸ் ஹாரிசனும், குணா கவியழகனும் தமிழ்க்கவியும் கார்டன் வெய்ஸ்-ம் பல்லாயிரம் ஆதரவு-எதிர் இணையப் பக்கங்களும் கூறியவையே. எனினும், இலக்கியமெனப்படுவது மீள வலி கிளர்த்தும் வலிமை பொருந்தியது.

எதிரெதிரில் நின்று தர்க்கம் புரியும் பாத்திரங்களாகிய சந்திராவும் அத்தாருமே இந்நாவலின் உந்துவிசைகளாக இயங்கியிருக்கிறார்கள். விடுதலைப் புலிகள்மீது விமர்சனங்களைக் கொண்ட சந்திராவும், அவர்கள்பால் மென்சாய்வு கொண்ட அத்தாரும் நாவலை வளர்த்திச் செல்கிறார்கள். அவர்கள் இருவரும் இறந்தபிறகு நந்தன் சேரும், பெயர் குறிப்பிடப்படாத அந்த மனிதனும் எதிரெதிர் நின்று வார்த்தையாடுகிறார்கள். ஒரு தட்டு தாழ்கிறபோது மற்றத்தட்டில் இட்டு நிரப்புகிற வேலையை சயந்தன் பிரக்ஞையோடே செய்திருக்கிறார் என்று வாசிக்கும்போது தோன்றியது.

இந்த ‘நடுநிலை’என்ற சொல் ஒரு வில்லங்கம் பிடித்த சனியன். நீதிக்கும் அநீதிக்குமான இழுபறியில் (அப்படியொன்றும் பெரிய கோடு இடைநடுவில் இல்லையென்றபோதிலும்) நடுவில் நின்று அல்லாடும் உத்தரிப்பினால் மனம் சிதைந்து அழிபவர்கள் உண்டு. மற்றொரு ‘நடுநிலை’யினரோ பிழைப்புவாதிகள்.
என்னதான் விடாப்பிடியாக அழாமலிருந்தாலும் ஒரேயொரு இடத்தில், கண்கள் கலங்கி வழிய புத்தகத்தைத் தூக்கியெறிந்துவிட்டு (மன்னிக்கவேண்டும் சயந்தன்) அமர்ந்துவிட்டேன். உடலில் குருதிபோல நாவலின் உயிரியக்கத்திற்குக் காரணமான அத்தார் இறந்து கிடக்கிறபோது ஒருவன் கூறுவான்:

“இந்த அம்பட்டக் கிழவனை எனக்குத் தெரியும். அத்தார் எண்டு கூப்பிடுறவை. ஒரு வெள்ளாளப் பொம்பிளையைக் கட்டியிருந்தவர். இவருக்குப் பிள்ளையள் இல்லை.”

இதுதான் அந்த ‘மனிதன்’இன் அடையாளம்! பாழாய்ப் போகாதா இந்த சமூகம்!

எங்கள் மண்ணைப் பற்றி இன்னும் சொல்லப்படாத கதைகள் பல்லாயிரம் இருக்கக்கூடும். அவற்றுக்காகக் காத்திருப்போம். ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமற் போகிறபோது…. வேறென்ன செய்வது? வாசிப்பதை நிறுத்திவிட்டாற் போகிறது.