தேவிகா கங்காதரன்

கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் அறவழியிலும் பின்னர் ஆயுதம் தாங்கியும் தொடரப்பட்ட ஈழத்தமிழரின் அரசியல் உரிமைக்கான போராட்டம் 2009இல் முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலத்தில் வந்து நின்றது.இந்தக் காலகட்டத்தின் 1977தொடக்கம் 2013ம் ஆண்டைத் தாண்டி முகமாலையில் ஏ ஒன்பது வீதிக்கு அண்மையில் மிதிவெடி அகற்றும் காலம் வரை ” ஆதிரை ” நாவலில் பேசப்பட்டுள்ளது.

எடுத்துக் கொண்ட கரு காரணமாக ஒரு பெரிய நாவலாக வெளிப்பட்டிருக்கிறது ஆதிரை.தமிழர் வாழ்வும், இலங்கைத்தீவில் அவர் வாழ்வில் ஊடாடும் நெருக்கடிகளும், சவால்களும், கொலைகளும், இழப்புக்களுமே மலிந்த இந்த வாழ்வினைப் பதிவு செய்வதென்பது இலகுவான காரியமல்ல.எழுத்துக்கான சயந்தனது அர்ப்பணிப்பும், உழைப்புமே இதை சாத்தியமாக்கியிருக்கிறது என நினைக்கிறேன். மலையகத்தில் பிறந்து முல்லைத்தீவைச் சேர்ந்த காட்டுக்கிராமமொன்றில் வளர்ந்த சிங்கமலை லெட்சுமணன் என்னும் இளைஞன், சித்திரவதைக்கூடமொன்றில் இராணுவ விசாரணையாளர்களால் விசாரிக்கப்படும் காட்சியொன்றுடன் நாவல் ஆரம்பிக்கிறது.கொழும்பின் புறநகர்ப் பகுதியில் இவனது பின்னணி அறியாது இருப்பிடம் கொடுத்த கியோமாக்கிழவியை இராணுவத்தினன் “எதிரிகளை மன்னித்து விடலாம்,துரோகிகளை மன்னிக்க முடியாது”என்று முடியைப் பற்றி இழுத்து பற்களை நெருமும் கட்டம்,அட, அப்ப அந்தப் பக்கமும் எதிரி,துரோகி என்னும் ஒரே சமன்பாடுதானா என எஎண்ண வைக்கிறது.

மலையகத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் யாழ் நகரில் வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படுவதைக் கண்டிருக்கிறேன். ஆசிரியர் பணி புரியவென்று மலையகம் செல்வோரே முகவர்கள் போல் தமது உறவினர்,நண்பர்கள் வீடுகளுக்கு இவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து விடுவார்கள்.வேலு என்னும் சிறுவன் இப்படித்தான் எமது அயல் வீடொன்றில் வேலைக்கு வந்து சேர்ந்தான்.அடிக்கடி வீட்டு ஞாபகம் வந்து அழுது அடியும் வாங்குவான்.தன்னை வந்து கூட்டிச் செல்லும்படி எங்களைக் கொண்டு ரகசியமாகக் கடிதம் எழுதுவித்துத் தனது தந்தைக்கு அனுப்புவான்.தீபாவளி ,பொங்கலுக்கு அவன் தந்தை வந்து சம்பளப்பணத்தையும் வாங்கிக் கொண்டு நாலைந்துநாள் விடுமுறையில் அவனை அழைத்துச் செல்வார்.இன்னொருநாளில் வேலுவின் தம்பியோ, தங்கையோ அழைத்து வரப்பட்டு இன்னொரு வீட்டில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்.இப்படி வந்தவர்கள் மர்மமான முறையில் இறந்ததையும்.

வசதி படைத்த குடும்பங்கள் எந்த விசாரணையுமின்றி தப்பிக் கொண்டதாயும் அயலவர்கள் பேசிக்கொண்டார்கள். இப்படி எமக்கு அறிமுகமான மலையக மக்களில் சிலர் 1977ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின் பின் வவுனியா முல்லைத்தீவுப் பகுதிகளில் குடியேறி வாழ்ந்த கதையும் அதைத் தொடர்ந்து ஆண்டுவாரியாக தமிழர் பிரதேசங்களில் இடம் பெற்ற அடக்குமுறைகளும், வன்முறைச் சம்பவங்களும் அதற்கெதிராக காட்டுக்குள் இளைஞர்கள் ஆயுதப்பயிற்சிபெற்று பல்வேறு இயக்கங்களாகச் செயற்பட்டதையும் நாவல் சொல்லுகிறது.

கானகமும்,அங்கு வாழும் விலங்குகளும் ,வேட்டையும், மரஞ்செடிகொடிகளுமாய் இயற்கையுடன் ஒன்றி வாழும் மனிதர் மீது திணிக்கப்பட்ட போர் எத்தகையஅழிவுகளை அவர்கள் மீது ஏற்படுத்தி விட்டிருக்கிறது. ஒரு இனத்தின் கனவுகளையும், இலட்சியங்களையும்,இழப்புக்களையும் வெளிப் படுத்த விரும்பும் போது அந்நாவலில் கதாபாத்திரங்கள் வார்க்கப்படும் விதமே அந்தப் படைப்பைப் பூரணப்படுத்துகிறது.நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அவற்றுக்கே உரிய வேறுபட்ட குணாதிசயங்களுடன் படைக்கப் பட்டிருக்கின்றன. ஆச்சிமுத்துக்கிழவி,சந்திரா ,மீனாட்சி,மலர் என்று ஏராளமான பாத்திரப் படைப்புக்களிடையே யார் இந்த ஆதிரை என்றறியும் ஆவலுடனும்,எங்காவது இந்தப் பாத்திரத்தை மனதில் வாங்கத்தவறி விட்டேனா என்ற ஐயத்துடனும் 651 பக்கங்களைக் கடந்தேன்.

ஆதிரை என்பது ஒரு நட்சத்திரம்.

ஆதிரை என்பவள் மணிமேகலையின் அமுதசுரபியில்” பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக “என்று முதலில் உணவிட்டவள் பெயர்.இந்நாவலில் வருபவள் யார் என்ற விடை இறுதி அத்தியாயத்தில் கிடைத்தது.எல்லைக்காவல் கடமையில் இறுதி மூச்சு வரை இருந்தவளே அவள்.மனம் அசை போட்டதை எழுத்தில் கொண்டு வந்தது சிலவேளை நாவலாசிரியர் மனப்பாரத்தைக் குறைத்திருக்கலாம்.ஆனால் வாசகர் நெஞ்சில் அழிக்கப்பட்ட வாழ்க்கையின் நினைவுகளை,பெறுமதிகளை அழியாத சித்திரமாகப் பதியச் செய்து விட்டார்.

அண்மையில் ஈழத்தின் வலிகளையும் கண்ணீரையும் சுமந்து சில நாவல்கள் வெளிவந்துள்ளன.அதனுடன் சம்பந்தப்பட்ட மக்களாக இருப்பதினால் மட்டுந்தானா இந்தப் படைப்புகளுடன் எம்மால் இணைந்து பயணிக்கமுடிகிறது?

புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் படைப்பது இலக்கியத்தன்மையற்றவையென்றோ, அழகியலைக் காணவில்லை என்றோ குறைத்து மதிப்பிடும் பார்வைகளையும் அண்மையில் கண்டோம். தமது வலியை, அனுபவங்களை படைப்புக்களில் வெளிப்படுத்தும் சுதந்திரத்தை இக்கருத்துக்கள் கட்டுப்படுத்துவதற்கு இடம் கொடுத்து விடாது எழுதும் படைப்பாளிகளுக்கு ஆதரவாக நல்ல வாசகர்கள் என்றும் இருப்பார்கள்.

By

Read More

தீபன் சிவபாலன்

01
இலக்கியம் குறித்த நினைவு எழும்போதெல்லாம் குலசேகர ஆழ்வார் பக்தி இலக்கியப் பாடல் ஒன்றும் சேர்ந்தே நினைவுக்கு வரும் – வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் என்கிற வரிகள் அது.  கடந்தகாலத்தின் கொடு நினைவுகளும் நிகழ்காலத்தின் மீது படருகின்ற அன்றாடம் குறித்த அச்சங்களும் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மைகளும் நம்மை ஒரு வாள்  கொண்டறுக்க இலக்கியத்தின் நிழல் மீது சிறிதளவேனும் மாறாத காதல் கொண்டு இங்கே கூடியிருக்கின்ற நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஞாயிறு மாலை வணக்கங்கள்!தமிழினி வெளிடாக வந்திருக்கின்ற சயந்தனின் ஆதிரை நாவல் குறித்து எனது தரப்பு விமர்சனத்தை இந்த நிகழ்வில்  முன்வைக்க நண்பர் முரளி என்னைக் கேட்டிருந்தார் – கேட்டபோதும் திரும்ப உறுதிப்படுத்திய போதும் கட்டுரையை  கேட்பவர்கள் பின்தொடர வசதியாக ஓரளவுக்கு மெதுவாக வாசிக்க சொல்லிக் கேட்டிருந்தார். – என்பதையும் ஒரு வாக்குமூலமாக முன்வைத்து செல்லலாம் என்று நினைக்கிறேன்.உண்மையில் ஆதிரை மீதான எனது விமர்சனத்தை இரண்டு ஆரம்ப மேற்கோள் புள்ளிகளில் இருந்து தொடங்க விரும்புகிறேன் ஒன்று; நாவல் எழுதி அல்லது நாவலாசிரியர் குறித்து ஓரான் பாமுக்கின் மேற்கோள், மற்றது விமர்சகர்  குறித்து தமிழ்நாட்டு விமர்சகர் வேதசகாயகுமார் ஒரு முன்னுரையில் குறிப்பிட்டது.

ஓரான் பாமுக் சொன்னார்; // நாவலாசிரியனுடையது ஒரு குமாஸ்தா பணியைப் போன்றது என்பதை அடிக்கோடிட்டுச் சொல்கிறேன். நாவலாசிரியன் ஓர் எறும்பைப்போல நெடுந்தூரத்தை அவனது பொறுமையால் மெதுவாகக் கடக்கிறான். ஒரு நாவலாசிரியனின் அருளிப்பாட்டினாலும் கற்பனாவாதப் பார்வையிலும் நம்மைக் கவர்வதில்லை.அவன் பொறுமையினால்தான். //

வேதசகாயகுமார் சொல்கிறார். // “விமரிசகன் பேராசை கொண்டவன். இலக்கியப் பரப்பில் எப்போதாவது நிகழும் பெருநாவல் மட்டுமே அவனுடைய எதிர்பார்ப்பு. அதுமட்டுமே மரபை முன்னெடுத்துச்செல்லும் தகுதிபெற்றது. இதனாலேயே பெருநாவலை நிகழ்த்திய, அல்லது நிகழ்த்தக்கூடும் என்ற நம்பிக்கையைத்தரும் படைப்பாளிகள் மீது புகழ்மொழிகளைச் சொரிய விமரிசகன் என்றுமே தயங்குவது இல்லை. ஆனால் பெரும்பான்மையான தமிழ்ப்படைப்பாளிகள் இந்த நம்பிக்கையை அளிப்பது இல்லை. தங்கள் படைப்புலகச் சாதனையின் வெளிவட்டத்தை இவர்கள் முதல் படைப்பிலேயே வரையக்கூடும். பிறகு அதை தக்கவைத்துக்கொள்வதற்கான போராட்டம். அல்லது சிறு சிறு வட்டங்கள் வரைந்து தங்கள் இருப்பை படைப்புலகுக்கு உணர்த்தும் யத்தனங்கள். இதன் மீது எரிச்சல் கொள்ளும் விமரிசகன் இவர்களால் எதிரியாக இனம்காணப்படுகிறான்”.//

இந்த இரண்டு தரப்பு கருத்தும்  ஓரளவுக்கு எனக்கு இணக்கமாக இருப்பதால் இங்கு முன்வைக்க விரும்பினேன். இன்றைக்கு இருக்க கூடிய பொதுமைப்படுத்தப்பட்ட – வணிக மயப்படுத்தப்பட்ட – தன்முனைப்பு மற்றும் சமூகமயப்பட்ட சூழலில் நேர்மையான இலக்கியமும் கடினமானது; நியாயமான விமர்சனமும் சிக்கலானது. இரண்டும் ஒன்றை ஒன்று கற்பிதம் செய்து கொண்டு சொரிந்து கொள்ளும் அல்லது வியாக்கியானம் செய்து கொண்டு பிராண்டிக் கொள்ளும். கருத்துகளின் – அபிப்பிராயங்களின் – உரையாடல்களின் – விமரிசனத்தின் சமூகரீதியான வணிகரீதியான அரசியல் ரீதியான தார்ப்பரியம் அத்தனை சுலபமாக படைப்பாளியை படைப்பின் பின் இறக்க அனுமதிக்காது. அது படைப்பாளியையும் அவர் சார்ந்த வெளியீட்டுப் பரப்பையும் மீண்டும் மீண்டும் பேசவே தூண்டும். ஒரு ஆரோக்கியமான வெளியில் இந்த விவாதங்களும் உரையாடல்களும் தரப்புருவாக்கம் மற்றும் கருத்துருவாக்க அடிப்படையில் முக்கியமானவை என்றே நான் கருதுகிறேன்.  அந்த ஆரோக்கியமான வெளி குறித்த புரிதலுடனே எனது கருத்துகளை முன்வைக்கிறேன்.

02
ஒரு படைப்பின் மையம் அல்லது சாராம்சம் என்பது அதன் வாசகருக்கு அப்படைப்பு ஏற்படுத்தித் தரும் ஒரு சிற்றிழை தான், சிறு பொறிதான் – அந்த சிறுபொறியின் வழியேதான் அந்தப் படைப்பு அதன் வாசகரை கவர்கிறது. அந்த சிற்றிழை வழியே தொடர்ந்து செல்லும் வாசகனோ வாசகியோ அந்தப் படைப்பின் அகலை வந்தடைகிறார்கள். அந்த பொறியின் மற்றும் அகலின் சிரஞ்சீவித்தனமே அந்தப் படைப்பை கால ஓட்டத்தில் ஒரு பேரிலக்கியமாக அறிவிக்கும்.

உண்மையில் சொன்னால் ஒரு படைப்பு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பொறியை உண்டுபண்ணுகின்ற சாத்தியமே அந்தப் படைப்பின் நுணுக்கமான வெற்றி என்று நினைக்கிறேன் அதுதான் அந்தப் படைப்பின் மீதான வாசிப்பின் பன்முகத்தன்மை எடுத்துச் செல்லும்.  உதாரணமாக யோ.கர்ணனின் கொலம்பஸின் வரைபடங்கள் படைப்பு இங்கே வெளியிடப்பட்ட போது அது குறித்து பேசிய ஒருவர் சொன்னார் – இந்தப் படைப்பு தனக்குள் ஏற்படுத்திய பொறி என்பது கொலம்பஸ் ஒரு பிழையான வரைபடத்தை வைத்துக் கொண்டு சரியான இடைத்தை அடைந்தார்; ஆனால்  பிரபாகரன் ஒரு சரியான வரைபடத்தை வைத்துக் கொண்டு பிழையான இடத்தை அடைந்தார் என்பதை என்றார். அது ஒரு அரசியல் சார்ந்த பொறி .பிறிதொரு நாளில் நான் அந்தப் புத்தகத்தை வாசித்தபோது அது எனக்குள் வேறு ஒரு மானுடம் சார்ந்த தெறிப்பை சொன்னது; அதாவது களம் பிழைத்து காலம் பிழைத்து ஆட்டம் பிழைத்த கையறு நிலையில் ஒரு முன்னாள் போராளி சரணடைய போகின்ற போது தடுக்கின்ற இன்னொரு இயலாத போராளி தன்னை கொன்று விட்டு போகக் கேட்டதை – மானுடக் கருணை தாண்டிய அந்த மன்றாட்டம் தான் அவனை அதன் பின் எப்போதும் எங்கேயும் வரைபடங்கள் இன்றி வெளியேறுகின்ற வாய்ப்புகள் கிடைத்தும் வெளியேறாமல் தடுக்கின்றது என்பதை சொன்னது.

ஒவ்வருவருக்கும் ஒவ்வொரு விதமான வாசிப்பின் சாத்தியம் என்பது இதுதான் என்று நினைக்கிறேன்.

ஒரு கலைப்படைப்பு  அனுபவங்கள் சார்ந்தே ஒரு அனுபவத்தை ஏற்படுத்தும் – ஒத்த அனுபவங்கள் மீது பரிவுறும் – வேறுபாடான அனுபவங்களை நோக்கி தொடர்ச்சியான பகிர்வை உரையாடலை தேடலை முன்வைக்கும் – அந்த அகல் காலவெளியில் வெவ்வேறு அனுபவங்கள் தேடி மானுடப் பரப்பெங்கும் இன மொழி பால் பேதங்கடந்து இடையறாது தொடர்ந்து வெவ்வேறு வடிவங்களில் பயணிக்கும். ஒரு கடலும் கிழவனையும் போல ஒரு மோக முள்ளை  போல இன்னும் எத்தனையோ பல்லாயிரம் படைப்புகளில்… இந்த இடத்தில் உங்களுக்கு பரிச்சியமான பிடித்தமான எதனையும் இட்டு நிரப்பலாம் என்றே நினைக்கின்றேன்

ஒரு பேரிலக்கியத்தின் தொடர்ச்சியான உருவாக்கம் என்பது இவ்வாறுதான் நிகழ்கிறதே அன்றி அதன் அட்டையில் உங்களுக்கு உடன்பாடாகவோ முரண்பாடாகவோ  எழுதப்படும் வெற்று எழுத்துக்களைக் கொண்டல்ல என்பதையும் இங்கே ஆரம்பத்திலேயே குறிப்பிட விரும்புகிறேன். ஒரு கிளாசிக் என்று சொல்லப்படுகின்ற நாவலை அதன் ஆரம்பநிலை வாசகனாக என்னை முன்வைத்து தொடங்குகின்ற சிக்கலையும் கவனப்படுத்தவே விரும்புகிறேன்.
03.
ஆதிரை சயந்தனின் ஆறாவடுவை தொடர்ந்த  இரண்டாவது நாவல் பிரதி – ஆறாவடு அளம்பில் கடலில் காலை இழந்து இத்தாலிப் பயணத்தில் உயிரை இழக்கின்ற அமுதனின்  fiber glass செயற்கைக்கால், எரித்திரிய கிழவன் இத்ரிஸ்க்கு சற்று ஏறக்குறைய பொருந்துவதில் முடிகிறது.

உலகம் முழுவதும் எப்படி பேரினவாதத்தின் பெரும் ஒடுக்குமுறையின் அது கையில் எடுக்கின்ற ஆயுதங்களின் முகங்கள் ஒரேமாதிரியானவையோ அதே போல அதற்க்கு எதிர் நிலையில் புரட்சியில்  எதிர்ப்பில் தவறில்  தோல்வியில் கைவிடப்படுகின்ற உதிரிகளின் இறந்தகாலமும் எதிர்காலமும் நிகழ்காலமும் சற்றேறக் குறைய ஒரேமாதிரியானதுதான் என்பதை இரண்டு அரசியல் ரீதியான அமைதிக்காலத்தின் சம்பவத் தொடர்ச்சியாகவே பெரிதும்  சொன்ன நாவல் ஆறாவடு.

அதன் பின்புலத் தொடர்ச்சியாகவே என்னால் ஆதிரையையும் நோக்க முடிகிறது.  பெரும் உழைப்புடனும் – நிலம் சார்ந்த, மனிதர்கள் சார்ந்த, சம்பவங்கள் சார்ந்த விஸ்தீர்ணத்துடனும் முன்வைக்கப்படுகின்ற பெரு நாவல் ஆதிரை. முன்னரே குறிப்பிட்டதை போலவே பல்வேறான வாசிப்புச் சாத்தியங்களின் இழைகளை பொறிகளை உள்ளடக்குகின்ற பிரதி. ஓரளவுக்கு இங்கே இருப்பவர்கள் ஆதிரையை வாசித்து இருப்பதனால் அதன் அரசியல் – அழகியல் – பிரதி மனிதர்கள் சார்ந்து உங்கள் அனுபவங்களோடு என்னைப் பின்தொடர்வீர்கள் என்றே நம்புகிறேன்.

இந்த நாவலின் ஆரம்பமும் முடிவும் – காலங்கள் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டு – பிரதியின் ஒழுங்கை குலைப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. 05/ june 1991 இல் நிகழ்கின்ற சிங்கமலை லட்சுமணனின் அந்த தடுப்புக் காவல் கதையின் தொடர்ச்சி அதற்கு பின்பு 1977 இல் ஆரம்பிக்கின்ற பிரதிக்குள் எங்கும் சொல்லப்படவே இல்லை அது போல 31/12/2008 இல் நிகழ்கின்ற ஆதிரையின் காவல் பணியினதும் வீரச்சாவினதும் முன்கதையும் 2013 இல் முடிகின்ற கதைக்குள் எங்கும் சொல்லப்படவும் இல்லை. உண்மையில் இவ்வாறாக இந்தப் பிரதியின் ஒழுங்கை குலைக்கின்ற அமைப்பை ஒரு பொறிமுறையாகவும் உத்தியாகவுமே நான் கருதுகிறேன். இது இந்த பிரதியின் வாசகருக்கு அதன் ஆரம்பத்தில் ஒரு சம்பவம் சார்ந்த எதிர்பார்ப்பையும் ஈர்ப்பையும் உண்டுபண்ணி அதன் வழியே நாவலின் அடுத்த தளத்துக்கு வாசகரை தொடர்ச்சியாக அழைத்துச் செல்கிறது. அதுபோலவே எல்லாம் முடிந்த பின்னும் – சொல்லப்படுகின்ற ஒழுங்கு குலைந்த காலத்தின் முடிவுக்கதை மீண்டும் அதன் வாசகரை கடந்த காலத்துக்குள் உள்ளிழுத்து  அந்தப் பிரதி குறித்து சிந்திக்க வைக்கிறது. இந்த இரண்டு அத்தியாயங்களும் மிகத் தெளிவாக விடுதலைப் போரை , தியாகத்தை அர்ப்பணிப்பை – அதைக் காவிச் செல்கின்ற ஆண்  பெண் உடல்கள் அடையும் வலியை நோவை சித்திரவதையை  பேசுகின்ற கோணத்தில் இந்த பிரதியின் அரசியலையும் பிரதியாளரின் நிலைப்பாட்டையும்  தெளிவாக பேசிவிடுகிறது.

ஆனால் இந்த ஒழுங்கு குலைந்த இரண்டு கதைகளினதும்  பாத்திரங்களின் மொழி ஒரே மாதிரியானதல்ல. பின்னர் எங்கும் குறிப்பிடப்படப்படாத அளவில் சிங்கமலை லட்சுமணன் முதல் அத்தியாயத்தில் கதை சொல்லியின் தன்மை விகுதியில் நான் ஆகிறான் – முடிவில் ஆதிரை எல்லோரையும் போலவே படர்க்கை விகுதியோடு ஆதிரையாகவே மடிகிறாள். என் போன்ற வாசகன்/விமர்சகன் ஒரு கட்டத்துக்குள் வரச் சிரமப்படுகின்ற இடம் இது என்று நினைக்கிறேன்.

04
ஒரு நாவலின் பெரும் பலமே அந்த நாவல் கட்டப்படுகின்ற நிலம்தான் – அதுதான் அந்த நாவலின் மொழியை, திணை சார் அழகியலை, கதை மாந்தர் தன்மையை  கலாச்சார பண்பாட்டு அம்சங்களை என்று முழுமைக்கும் அந்த நிலத்தின் தொடர்ச்சியே அந்த நாவலில் ஊடுருவிப் படர்ந்திருக்கும் – எப்படி ஒரு வேம்பலையின் துயரை கைவிடப்படுதலின் பேரலைவை நெடுங்குருதி பேசியதோ – எப்படி ஒரு  தாதனூரின் மதுரையின் காவல் முறையை அதன் பண்பாட்டு எச்சங்களின் மீதான காலனித்துவக் களவை வசீகரம் சொட்ட காவல்கோட்டம் பேசியதோ அப்படியே தனிக்கல்லடி, எட்டேக்கர் மேட்டுக்காணி என்று வன்னி நிலத்தில் பரவுகிறது ஆதிரை.

சொந்த நிலமிழந்து காலத்துக்கு காலம் அந்த நிலத்தை வந்தடைகின்ற மனிதர்களின் எதிர்காலக் கனவுகளும் பிரயாசைகளும் வாழ்வு குறித்த முனைப்புகளும் எத்தனங்களுமே நாவலின் பெரும்பாலான அத்தியாயங்களில் எழுதிச் செல்லப்பட்டிருக்கிறது. ஒரு காடு சார் வாழ்வு முறையின் நேசங்களும் பிடிமானங்களும் நம்பிக்கைகளும் அதனை நேசிக்கின்ற மனிதர்களின் எளிமையும் அழகியலுயும் சேர நாவல் முழுவதும் பெரும்பாலும் பேசப்பட்டிருக்கிறது.

நம் ஒவ்வொருவருக்கும் இந்த நாவல் அதன் அழகியல் தளத்தில் வெவ்வேறான அனுபவங்களை கொடுத்திருக்கலாம். நேரத்தின் தேவை கருதி குறிப்பிட்ட சில பகுதிகளையே  முன்வைக்க விரும்புகிறேன். – ஏறத்தாள மூன்று தலைமுறை தாண்டி நீள்கின்ற கதையில் மூன்று பேரின் மூன்று விதமான  உறவு குறித்து பேசப்படுகிறது.  மலரக்காவினது அறியாப்பருவத்து அப்பாவித்தனமான ஏமாற்றுப்படுகின்ற கதை – ராணியினது கணவன் இறந்த பின்னரான உறவின் கதை – இவற்றை கண்டும் கேட்டும் வளர்கிற நாமகளின் சாரகனோடான காதல் கதை.

உண்மையில் நான் ஏன் இது குறித்து பேச விரும்புகிறேன் என்றால். மனித  உணர்வுகளின் ஆதாரமான அடிப்படியான காதல் உணர்வு எல்லாத் தலைமுறைக்குள்ளும் புறவயமான எல்லாச் சிக்கல்களையும் தாண்டி ஒரு காட்டுப் பூவைப் போல தன்பாட்டில் பூத்துக் கிடக்கிறது என்பதைச் சொல்லத் தான்.

ஒரு இடத்தில காதல் வசப்படுகின்ற ராணி சின்னராசுவை காணப் போகின்ற போது முற்றத்தில் விழுகின்ற தன் நிழலுருவம் குறித்து திருப்தி கொண்டவளாக செல்கிறாள். இது ஒரு கவிதைத் தருணத்தை எனக்கு ஏற்படுத்தித் தந்தது.

இந்த இடத்தில் எனக்கு பிடித்த இரண்டு கவிதைகளை குறிப்பிட  விரும்புகிறேன்  ஒன்று: நா.சபசேன்  05-01-1983 இல் எழுதிய காதல் என்ற கவிதை;

ஈச்சையும் பன்னையும் மண்டிக் கிடக்கும்
சுடலையின் பின்புறம்  எதிர்பாராமல் சந்தித்தோம்.
என்னைக் கண்டதும் கண்கள் விரிந்தது;
மெதுவாக  சைக்கிளை நிறுத்தினாய்.
மழைகள் முடிந்து படர்ந்து கிடக்கும்  பச்சைப் பின்னணியில்
நல்லதொரு கவிதையை படிப்பது போல் சிவந்து நிற்கிறாய்!
மற்றது தீபச்செல்வன் 2000 களின் மத்தியில் எழுதிய நீ பேசாது போன பின்னேரம் என்கிற கவிதை
//என்னதான் பேசுவாய்
நான்தான்
என்ன கேட்கப்போகிறேன்?//ஒரு நாள் பின்னேரம்
உனது வீட்டில்  நாம் அருந்திய  தேனீர்க் கோப்பைகளினுள்
இணைந்து கிடந்தன  நமது இருதயங்கள்//இந்த இரண்டு கவிதைகளிற்குமான கால இடைவெளியை யுத்தமும் யுத்தம் சார் எத்தனங்களுமே நிறைத்திருந்தன இருந்த போதிலும் காதல் மனித உணர்வுகளில் வரைகின்ற சித்திரம் எல்லாக் காலங்களிலும் எல்லாத் தலைமுறையிலும் எல்லாக் கொடுமைகளுக்குள்ளும் சிக்கல்களுக்குள்ளும் அழகியல் பூர்வமானது என்பதை சொல்லவே இதனைக் குறிப்பிடுகிறேன். இவ்வாறான கவிதைத் தருணங்களை உள்ளடக்குகின்ற/ உருவாக்குகின்ற பிரதி அதன் வாசகருக்கு அழகியல் தளத்தில் பரவசமளிப்பதில் வியப்பேதுமில்லை.

இருந்த போதும் நாமகள் சாரகன் உறவின் கதை அதன் பருவ கால வசீகரத்தை தாண்டி தீவிரமாக பேசப்படவில்லை என்றே தோன்றுகிறது. பெரும் அவலங்களையும் உயிரிழப்புகளையும் கடந்து சொந்தச் சகோதரனுக்குகூட சொல்லாமல் இரவில் படகேறிப் போகிறவளின் கதையை – அதன் பின்பு சாரகனோடு சேர முடியாமல் திரும்புகின்ற நிலையை  ஒரு மூன்றாம் தரப்பாக ஓடிக் கடக்காமல், அதன் சாத்திய அசாத்தியங்களை நின்று நிதானமாக பேசியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. அதுவும் பிரதிக்கான சமூக அரசியலின் கடமை என்றே நினைக்கிறேன்.

05
இந்தப் பிரதியின் அரசியல் குறித்து பேசிவிட நிறைய திறப்புகளும் சாத்தியங்களும் இருக்கின்றன. ஓரளவுக்கு சுருக்கமாக முன்வைக்க விரும்புகிறேன். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற – நாம் ஒவ்வொருவரும் இருக்க விரும்புகின்ற காலத்தையே அதன் சம்பவங்களையே – நம் கதைகளாக முன் வைக்க விரும்புவோம் இல்லையா அந்த வகையில் தொடர்ச்சியான சம்பவங்களினூடாகவும் காலங்களின்  ஊடாகவுமே ஆதிரை  பயணிக்கிறது.

பல இடங்களில் இந்தக் கதை தான் இருக்க விரும்புகின்ற காலத்தை – அந்தக் காலம் பிழைக்கின்ற போது – கதை சொல்லி பேச விரும்புகின்ற அரசியலை வெளிப்படுத்துகின்றது. ஒரு படைப்பு  அதன் கலைவடிவத்தில் நேர்த்தியாக – யாருக்கும் உடன்பாடான முரண்பாடான அரசியலை பேசுவதில் எனக்கெந்த ஆட்சேபனையும் இல்லை.

ஒரு தோற்றுப்போன யுத்தத்தின் – அதன்  கையறுகாலத்தின் – எதிலிச் சூழலின் உதிரிப் பிரதிநிகளை பேசுகின்ற பிரதியில் அதன் சமூக இன யதார்த்தங்களை பிரதிபலிக்க – நேரிடையான பாத்திர சம்பாசணையையே இந்தப் பிரதி கையில் எடுத்திருப்பது கொஞ்சம் நெருடலான ஏமாற்றத்தையே எனக்கு அளித்தது.

ஆனால் அதையும் தாண்டி சில நுட்பமான நுணுக்கமான அரசியலையும் நாவல் முன்வைக்கிறது. ஓரளவுக்கு புலிகள் நிலைகொண்டிருந்த காலத்தில் பெரிதும் பயணிக்கிற நாவலில் – சாதி சார்ந்த அடக்குமுறை குறித்தும் – நவீன தீண்டாமையின் மூலகங்கள் குறித்தும் உரையாடல்களாகவும் விவாதங்களாகவும் பெரிதும் அதன் பாத்திரங்களின் ஊடாக முன்வைக்கப்படுகையில் எந்தச் சூழலிலும் பாத்திரங்களின் சாதி புலிகளின் பிரதிக் காலத்தில் நேரடியாக குறிப்பிடப்படவில்லை. ஆனால் புலிகளின் வீழ்ச்சி சற்றேறக்குறைய நிச்சியமாகி விட்ட – இறுதிக் காலத்தில் – முள்ளி வாய்க்காலில் சந்திராவோடு செத்துப்போன அத்தார் – அடையாளம் காணப்படுகின்ற இடம் பின்வருமாறு அமைகிறது .

// உடல் சிதைந்து வலது கண் மட்டும் திறந்திருந்த ஒரு தலையை நீண்ட நேரமாக யாராலும் அடையாளம் காண முடிய வில்லை புதைப்பதற்கு சற்று முன்பாகவே ஒரு நடுத்தர வயதுக்காரன் அடையாளம் காட்டினான்.

“இந்த அம்பட்டக் கிழவனை எனக்குத் தெரியும் அத்தார் எண்டு கூப்பிடுகிறவை. ஒரு வெள்ளாளப் பொம்பிளையைக் கட்டியிருந்தவர். இவருக்கு பிள்ளைகள் இல்லை..” //

உண்மையில் இவ்வாறான நுட்பமாக அரசியலை பேசுகின்ற இடங்களே  வாசகருக்கான  சிந்தனை தருணங்களையும் பிரதிக்குள் பங்கெடுக்கின்ற வெளியையும் உருவாக்கித் தரும் என்பது எனது கருத்து.  மேலும் இந்த வாசிப்பை இனியும் நீடிக்காமல் இத்துடன் முடிக்காலாம் என்றே நினைக்கிறேன்.  உங்களின் நேரத்துக்கும் பொறுமைக்கும் நன்றி வணக்கம்.

Facebook இலிருந்து

By

Read More

எஸ்.வாசன்

“பொதுசன நூலகங்களில் இருக்கின்ற கனமான புத்தகங்கள் எனக்கு வாழ்வின் பல மோசமான உண்மைகளை கற்று தந்திருக்கின்றன” – இது நாம் அதிகம் அறிந்திராத தனது இளவயதில் மரணித்த ஈழத்து எழுத்தாளர் முனியப்பதாசன் ஒரு தடவை கூறிய வாசகம். இதனை வாசித்ததிலிருந்து கனமான தடித்த புத்தகங்களை காணும்போதெல்லாம் இந்த வாசகம் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஆயினும் அவையனைத்துமே வாழ்வின் மோசமான உண்மைகளைக் கற்று தருபனவாக இல்லாதிருந்த போதிலும் விதிவிலக்காக ஒரு சில புத்தகங்கள் சில வேளைகளில் அமைந்ததுண்டு. அவற்றில் அண்மையில் வெளிவந்த தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’ எனும் மகா நாவலைக்குறிப்பிடலாம். அது கடந்த பல தசாப்த காலமாக நீடித்த ஈழப்போரின் பின்னணியில் மறைந்திருந்த பல மோசமான உண்மைகளையும் வரலாற்றையும் விபரித்துக் கூறிச்சென்றது. இப்போது சயந்தனின் ‘ஆதிரை’ எனும் 664 பக்ககங்கள் அடங்கிய கனமான தடித்த நாவலொன்று எமது பார்வைக்கு கிட்டியுள்ளது. இது வாழ்வு குறித்தும் வரலாறு குறித்தும் எத்தகைய உண்மைகளை வெளிக்கொணரப் போகின்றது என்ற ஆவலுடனேயே இந்நூலினில் நாம் உள் நுழைகிறோம்.

இன்றைய நவீனதமிழ் இலக்கிய உலகில் சயந்தன் மிகவும் கவனத்திற்குரிய ஒரு எழுத்தாளர். இவரது ஏனைய நூல்களை நாம் கண்ணுற்ற போதும் அது மிகப் பெரிய பாதிப்புக்களை எம்மிடையே ஏற்படுத்தவில்லை. அர்த்தம் சிறுகதைத்தொகுதி தமிழ்த்தேசியத்தின் பிரச்சார ஊதுகுழல்களாக விளங்கிய பல சிறுகதைகளையும் ஆறாவடு நாவல் பலத்த சிரமமான வாசிப்பனுபவத்துடன் கடக்க வேண்டிய ஒரு நாவலாகவும் விளங்கியது. இப்போது இவரது இரண்டாவது நாவலாக ‘ஆதிரை’ வெளிவந்துள்ளது. தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நாவல் முன்னுரை, முகவுரை, மதிப்புரை, அணிந்துரை என மரபு சார்ந்த மதிப்பீடுகள் எதுவுமின்றி வெறும் மொட்டையாக வெளிவந்திருப்பது விசனத்தை ஏற்படுத்துகின்றது. பல வருடங்களுக்கு முன்பு காலம் இலக்கிய சஞ்சிகையில் சயந்தனின் ‘புத்தா ’ என்ற சிறுகதையொன்று வெளிவந்தது. தலைநகரில் கைது செய்யப்பட்டு சிங்கள பொலிசாரினால் சித்திரவதை செய்யப்படும் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினை சேர்ந்த ஒருவனின் கதையாக விரிவடையும் இச்சிறுகதையானது அவனிற்கு அடைக்கலம் கொடுத்த ஒரு சிங்களத்தாயின் கைதுடனும் அலறலுடனும் முடிவடைகின்றது. இச்சிறுகதையினை ஆரம்ப அத்தியாயமாகக் கொண்டு இக்கதையின் நாயகனையே பிரதான பாத்திரமாகக் கொண்டு சயந்தன் தனது கதையை விரிவாக்கம் செய்கிறார். அதுவே எமக்கு ‘ஆதிரை’ ஆகக் கிடைகின்றது.தலைநகர் கொழும்பில் ஆரம்பித்த இக்கதையானது காலத்தின் பின் நகர்வுடனே மலையகம் நோக்கி நகர்ந்து மலையகத்திலிருந்து இனக் கலவரம் காரணமாக வன்னி நோக்கி இடம்பெயரும் ஒரு குடும்பத்தின் கதையாக வளர்கின்றது. வன்னியை வந்தடையும் அக்குடும்பமும் வன்னி நிலப்பரப்பில் தொடரும் அவர்களது வாழ்வும் அவர்களோடு இணைந்த வன்னி மக்களின் வாழ்வாகவுமே இந்நாவல் விரிவடைகின்றது. ஆனால் இங்கு பிரதான மையப் பொருளாக பல தசாப்த காலமாக நீடித்த ஈழவிடுதலைப் போர் கதையை நகர்த்தி செல்கின்றது.

இது ஒரு வரலாற்றுப் புனைவு. ஈழப்போரில் இடப்பெற்ற படுகொலைகளினதும் கொடுந்துயரங்களினதும் வரலாற்றை சாமான்ய மக்களின் சாட்சியங்களாக இக்கதை குறுக்குவிசாரணை செய்கின்றது. வீர, தீர செயல்களுக்கும் மயிர்க்கூச்செரியும் தாக்குதல்களுக்கும் குறைவில்லாத இவ்வீர வரலாறானது ஒரு இனப்படுகொலையுடன் முடிவடைந்த பின்னர் இது எஞ்சி நிற்கும் அனைவரையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகின்றது. போரை நடித்தியவர்களை மட்டுமன்றி, போரிற்கு ஆதரவு நல்கியோர், எதிர்ப்புத் தெரிவித்தோர், நடுநிலை வகித்தோர், போரை விட்டு இடை நடுவில் தப்பியோடியோர், என அனைத்து தரப்பினரையும் இது கேள்விக்குள்ளாக்குகின்றது. மௌனமாக இருந்தோரையும் கூட இது விட்டு வைக்கவில்லை.
தியாகங்களுடனும் இழப்புக்களுடனும் அர்ப்பணிப்புகளுடனும் வீரமரணங்களுடனும் பயணித்த ஈழவிடுதலைப்போராட்டமானது பல்வேறு காலகட்டப்பகுதியில் உட்கட்சிப் படுகொலை, சகோதர இயக்க படுகொலை, கட்டாய ஆட்கடத்தல் என்ற இன்னுமொரு தவறான படிக்கட்டிலும் பயணித்தது. இவ்விரு வேறு திசைகளில் பயணித்த இப்போராட்டத்தின் இடைநடுவில் சிக்கிக்கொண்ட மக்கள் கேட்ட நூறாயிரம் கேள்விகளுக்கான விடைகளாக இந்நாவல் விரிவடைகின்றது.

மேலும் சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை வர்க்க முரண்பாடுகளை இது சாடுகின்றது. எல்லாவற்றிட்கும் மேலாக இது ஆடம்பரமானதும் சுயநலமிக்கதுமான யாழ்ப்பாணக் கலாச்சாரத்தினை எள்ளி நகையாடுகின்றது. அதன் சாதீய சிந்தனைகளை தப்பியோடும் சுயநலப் போக்கினை கேள்விக்குள்ளாக்கின்றது.

நாமகள், ராணி, மலர், வினோதினி, சந்திரா, வல்லியாள் என மிக அதிகமான பிரதான பாத்திரங்களாக பெண்களைக் கொண்ட இந்நாவலில் பெண்களின் குரல்கள் மிக அதிகமாக ஓங்கி ஒலிக்கின்றன. இவைகளில் சில அழகுரல்கள் ஆகவும் சில போர்ப்பரணிகளாகவும் விளங்குகின்றன. மீண்டும் மீண்டும் விளிம்பு நிலை மக்களே போராட்டித்தில் ஈடுபடுகிறார்கள் என்பதும் அவர்களே இப்போரினால் அதிகம் பதிக்கப்படுகிறார்கள் என்பதும் போரினை ஆரம்பித்த மேட்டுக்குடி மக்கள் இடைநடுவில் சாதுரியமாக தப்பிவிட்டார்கள் என்பதும் இந்நாவல் அதிகமாக தெரிவிக்கும் செய்தி. இவர்கள் உரையாடல்களிலும் உணர்வுகளிலும் தெறிக்கும் உண்மைகளும் கோபாவேசங்களும் அனைவரையும் கேள்விக்குள்ளாகின்றது.

“தம்பிக்கு என்னை விடவும் மூண்டு நாலு வயசு கூடத்தான்.—-தன்னை நம்பி வந்து செத்துப்போன பிள்ளையளின்ரை கனவைப் பற்றி யோசிச்சுக் கொண்டிருந்தவர்,, தன்னை நம்பி உயிரோடை இருந்த சனங்களுக்காகவும் யோசிச்சிருக்கலாம்.” – இது பிரபாகரன் மீது சிவராசன் வைக்கும் விமர்சனம்.

“போராட்டத்தை தொடங்கிட்டு வெளிநாட்டுக்கு ஓடாத கொஞ்சப்பேரில் நானும் ஒருவன். போராட்டத்தை தொடர்ந்து நடத்திட்டு கடைசியில் செத்துப் போகாத கொஞ்சப் பேரிலயும் நான் ஒருவன்.”- இது சிவராசன் தன் மீது தானே வைக்கும் விமர்சனம்.

“இந்த அம்பட்டக் கிழவனை எனக்குத் தெரியும். அத்தார் எண்டு கூப்பிடுவினம். ஒரு வெள்ளாளப் பொம்பிளையைக் கட்டியிருந்தவர்.” – கொத்துக் கொத்தாய்க் கொலைகள் நடைபெறும் போர்க்களத்தில் இருந்து அத்தாரின் சிதைந்த உடலைப் பார்த்து ஒரு நடுத்தர வயதுக்காரர். யாழ்ப்பாணத்து சாதியத்தின் வலிமையை இதைவிட தெளிவாக யாரும் விபரித்து விட முடியாது.

“சனங்கள் இனிப் போறதுக்கு வழியில்லை. கடைசிவரையும் நிண்டு சாவம் எண்டுறதை நீங்கள் வீரமா நினைக்கலாம். அதுக்காக.. வாழ ஆசைப்படுகிற சனங்களையும் உங்களோடை உடன்கட்டை ஏறச்சொல்லி வற்புறுத்தேலாது.” – இது இதற்கு மேலும் ஓட முடியாது என்கிற போது சந்திரா இயக்கம் மேலே வைக்கும் விமர்சனம்.

“நாங்கள் இப்படி பம்பலா இருக்கிறதை பார்த்தா வெளிநாட்டிலை இருக்கிறவை எங்களைத் துரோகியாத்தான் பாப்பினம்.” – தடுப்பு முகாமில் இருந்து ஒரு போராளி.

இவை யாவும் இந்நாவலின் கதை மாந்தர்கள் தமது உரையாடல்கள் வாயிலாக வெளிப்படுத்திய விமர்சனங்கள். மேலும் இது ‘அவர்கள் வேறு கண்ணீரைத் தேடித் போனார்கள்.’ என்ற வரிகள் மூலம் மக்களின் கண்ணீரை காசாக்கும் ஊடகங்களை ஏளனம் செய்கின்றது. அத்துடன் ஒரு இளம் பெண்ணின் படிப்பு செலவுக்கு லண்டனிலிருந்து மாசம் ஆயிரம் ரூபாவை அனுப்பிவிட்டு தினமும் தொலைபேசியில் தொந்தரவு செய்யும் லண்டன்காரரை பரிகசிக்கின்றது. கோழி வளர்ப்பதற்கு நிதி உதவி செய்துவிட்டு கோழி வளர்ப்பு சரியில்லை என்று திட்டிவிட்டு போன அவுஸ்திரேலியா குடும்பத்தை நையாண்டி செய்கின்றது.

“போன கிழமை சந்திரா ரீச்சரிட்டை படிச்சதெண்டு சுவிசிலிருந்து சயந்தன் எண்டு ஒருத்தன் வந்தவன். கதை எழுதுறவனாம். ரீச்சர் எப்படி செத்தவ —எண்டெல்லாம் கேட்டு தண்ர டெலிபோனில ரெக்கோட் செய்தவன்”

“ஏனாம்?”

“தெரியேல்லை. சனம் உத்தரிச்சு அலைஞ்ச நேரம் கள்ளத்தோனியிலை வெளிநாட்டுக்கு போனவை இப்ப எல்லாம் முடிஞ்ச பிறகு ஒவ்வொருத்தனா வந்து விடுப்புக் கேக்கிறாங்கள்”- இது சயந்தன் தன் மீது தானே குற்றவுணர்ச்சியுடன் வைக்கும் விமர்சனம்.

ஒரு படைப்பையும் படைப்பாளியையும் அணுகும் போது அறம், அழகியல், கோட்பாடு என்ற கருதுகோள்களை அளவீடாக கொள்வது உலக நியதி. இந்நாவலில் அழகியலை நாம் நோக்கும்போது சயந்தன் தனது தனித்துவமான அற்புதமான படைப்புமொழியுடன் கூடிய ஒரு உன்னத தளத்தில் உலவுவதை அவதானிக்க முடிகின்றது. ஆரம்ப அத்தியாயங்களில் வன்னி நிலப்பரப்பின் இயற்கை அழகினையும் தான் அறிந்த அனைத்து வாழ்வு முறைகளையும் வாசகர்களிடம் முற்று முழுதாக கையளிக்க எண்ணி மிக அதிகளவு வர்ணனைகளை திகட்டுமளவிற்கு அள்ளித்தெளிக்கிறார். அதன் பின் அவர் ஒரு இயல்பான ஒரு தனித்துவமான நடையில் பயணம் செய்கிறார். ஒரு புதிய படைப்பு மொழி மூலம் தன் நாவலை நகர்த்தும் இவர் தனது முந்தைய படைப்புக்களைத் தோற்கடித்து ஒரு முன்னேறிப் பாய்ச்சல் ஒன்றினை மேற்கொள்கிறார். இவர் தனது கோட்பாடாக தமிழ்த் தேசியத்தை வரித்துக் கொள்கிறார். இதுவும் இங்கு தெளிவாகத் தெரிகின்றது. இது இவரது தெரிவு. இதனையும் நாம் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அறம் என்று வரும்போது இவர் தனது எழுத்தில் சற்றே வழுவி நிற்பது புரிகின்றது. சிங்கள இராணுவத்தாலும் இந்திய இராணுவத்தாலும் பாதிக்கப்படும் இவரது கதை மாந்தர்கள் ஒரு போதும், இவர் விடுதலைப் புலிகளின் பல அராஜக நடிவடிக்கைகளை குறிப்பிட்டிருந்த போதும் அந்நடவடிக்கைகளால் பாதிப்படைவதில்லை. முஸ்லிம் மக்கள் வெளியேற்றம், டெலோ இயக்க அழிப்பு, கட்டாய ஆட்சேர்ப்பு என்பவையெல்லாம் இவரது கதை மாந்தர்கள் யாரையும் பாதியாமல் ஒரு புள்ளியாகக் கடந்து போகின்றன. இது உண்மையில் தான் கடைப்பிடிக்கும் கோட்பாட்டை காப்பற்ற சற்றே ஒதுங்கி நிற்கும் தந்திரம்.

இறுதியாக ‘ஆதிரை’ காலத்தின் தேவை கருதி எழுதப்பட்ட நாவல் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. நடந்து முடிந்தது ஒரு கொடுந்துயரம். இது தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும். அதற்கான தார்மீகப் பொறுப்பை நாம் அனைவரும் ஏற்றுத்தான் ஆகவேண்டும். இந்த குற்றவுணர்வு அனைவரிடமும் எழுதல் வேண்டும். இக்குற்றவுனர்ச்சியை ஒவ்வொருவரிடமும் விதைப்பதில் சயந்தன் வெற்றி பெறுகிறார்.
http://www.geotamil.com

By

Read More

இரவி அருணாச்சலம்

இப்போது இதனைக் குறித்துக் கொள்ள வேண்டும், ஒருபேப்பர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்த சயந்தன் அவர்கள் `ஆதிரை’ என்ற புனைவுப் பாய்ச்சல் நிகழ்த்தியுள்ளார். அது குறித்த பத்தி எழுத்தே இது.

சயந்தனுக்கு இது முதலாவது நெடுங்கதையல்ல, ஏலவே, `ஆறாவடு’ என அறியப்பட்டவர். `ஆறாவடு’ புதினத்தை வாசிப்பதற்கு முன்னர் சயந்தனையிட்டு எனக்கு அவ்வளவாக நம்பிக்கை எழவில்லை. அதனை வாசித்துமுடித்த கணத்திலிருந்து எனது கருத்தை நான் மாற்றிக் கொண்டேன். `கணிப்புக்குரிய கதைஞன்’ வந்து சேர்ந்தான்என்று `பொங்குதமிழ்’ இணையத்தில் என் கட்டுரை வெளியாயிற்று. அக்கட்டுரையின் இறுதியில் “கணிப்பிற்குரிய கதைஞன் சயந்தன் என்பதை அடுத்தடுத்து வரும் படைப்புக்கள் தான் உறுதிப்படுத்த வேண்டும்” என்று எழுதினேன்.
அந்த உறுதிப்பாட்டினை சயந்தன் ‘ஒரு சொட்டுக் கண்ணீர்’ சிறுகதை மூலமே வெளிப்படுத்தியிருந்தார். `ஆதிரை’ நெடுங்கதையினூடு அவருக்குரிய சிம்மாசனம் தரப்பட்டது. தமிழில் மிகச்சிறந்த புதினங்களின் பட்டியலில் இதற்கு நான் முன்னுரிமை கொடுப்பேன்.

1977 தமிழர் மீதான இனப்படுகொலையில் மலையகத்திலிருந்து சில தமிழர்கள் இடம்பெயர்ந்து வன்னியை வந்தடைகின்றனர். அது தான் `ஆதிரை’யின் தொடக்கப் புள்ளி அங்கிருந்து ஆரம்பித்த இடையறாத ஒப்பாரிப் பாடல்கள் முள்ளிவாய்க்கால் ஊழியில் சுற்றிச் சுழன்று, 2013 வரை ஓலமிடுகிறது. காற்று எங்கும் அதனை கரைத்து விடவில்லை. சுமார் 35 வருடங்கள் நாங்களும் அப்பாடலுடன் அலைந்து உலைந்து அல்லபட்டு பயணிக்கின்றோம்.

`ஆதிரை’ புதினம் பேசிய அரசியல் எனக்கு ஒருப்பட்டது. ஓரிடத்தில் கூட முரண்பட்டுப் போனதில்லை. சிங்கள பௌத்த பெருந்தேசிய இனவாத அரசியலில் உண்மையின் திசை வழியில் நின்றே சம்பவங்கள் புனையப்படுகின்றன. 77 தமிழர் மீதான இனப்படுகொலையில் தொடங்குகின்றது 83 ஐத் தொடுகின்றது முள்ளிவாய்க்காலில் தொடர்கின்றது, முடிந்து விடவில்லை. என் மேலான ஆச்சரியம் இது தான். இலங்கைத் தமிழர் மீது நடாத்தப்பட்ட வன்முறைகளில் பெரும்பாலானவை இதில்பதியப்பட்டு இருக்கின்றன. ஆனால் அவை வெறும் தகவல்களாக அல்ல. இரத்தமும் சதையுமான சாட்சியாக அவை பதியப்பட்டிருக்கின்றன.

சயந்தன் அதனை நேர்த்தியாக கையாள்கின்றார்.யாவற்றுக்கும் வகை மாதிரி பாத்திரங்கள் உருவாகின்றன. அப்பாத்திரங்கள் உயிருடனும், உணர்வுடனும் பிணைபடத் தவறவில்லை. தேவையற்றது என்று எப்பாத்திரத்தையும் சொல்லி விடமுடியாது. அது நமக்குள் கொண்ட ஊடாட்டம் நம்பகத்தன்மை வாய்ந்தது. உறவும்காலமும், உணர்வும் ஒரு நார் போல அத்தனை கண்ணிகளையும் இணைத்து விடுகின்றன.

பேரினவாத அலையில் சிக்குண்டு தள்ளாடும் தமிழ்த்தேசிய இனத்தின் பாடுகளை மாத்திரம் இவை பேசவில்லை. சிறு சிறு பாடுகளையும் பேசுகின்றது. பிரதேச வாதம், தலித்தியம், பெண்ணியம் யாவும் பிரச்சாரமாக அமையாது, கலைத்துவமாக பேசப்படுகின்றது.

இதில் முக்கியமாக நான் கருதுவது முள்ளிவாய்க்கால்ஊழி குறித்த சித்திரம், நாங்கள் சில காட்சிப்படுத்தல்களை பார்த்தோம், பலர் சொல்லக் கேட்டோம். ஆனால்,இத்தனை உயிர்ப்புடன் வேறெங்கும் நாம் உணர்ந்ததில்லை. உன்னி எழுந்த ஒரு படைப்பாற்றல் அது. முள்ளிவாய்க்கால் ஊழியை வேறு யாரும் இவ்வளவு சித்தரித்திருக்கிறார்களா என்றால் நான் வாசித்தவற்றில் இல்லைஎன்று மறுதலிப்பேன். முள்ளிவாய்க்கால் ஊழியை சிலர் விளம்பரங்களுக்காகவும், வேறு சிலர் வியாபாரத்திற்காகவும் பயன்படுத்தினர். ஆனால், சயந்தன் படைத்தது மானுடத்தின் ஓலத்தை வெளிக்காட்டுவதற்கே. அதனால்தான் அது உயிர்ப்புடன் திகழ்கின்றது.

‘ஷெல் பீஸ்’ என்னுள் ஏறியது, கந்தக மணத்தை சுவாசித்தேன். பதுங்கு குழியில் இறந்து போன உறவைப் புதைத்து, கண்ணீர் சொரிந்தேன். தியாகங்களை ஓம் என்று ஒப்புக்கொள்ள என் மனம் தயங்கவில்லை. வீரம் விழுந்துபட்டதை எண்ணி துடிதுடித்தது மனது. ஓம் அதுதான் படைப்பு, அதுவே தான் புனைவு. புனைவு என்றால் ‘தன்னுள் வாங்கி தான் அதுவாக நின்று, பிறர் மீது அந்த உணர்வை கடத்தி கவியச் செய்வது’ என் அனுபவத்தைநான் எழுதுவது எளிது. அதில் புனைவு உண்டு தான்.என் அனுபவத்தை கலைத்துவ நெறிப்பட்டு அந்தந்தப் பருவத்துக்குரிய மனநிலைக்குள் சென்று படைப்பதும் ஒரு புனைவு தான். அது தனி மனித நிலை.

`ஆதிரை’ புனைவு வழிபட்டு ஓர் இலக்கியமாகி நிற்கின்றது. ஈழத்துப் படைப்புக்களில் ஆரம்பத்தில் அது சாத்தியமாகியது. துÖரத்துப் பச்சை (கோகிலம் சுப்பையா), இனிப்படமாட்டேன் (சி.வி.வேலுப்பிள்ளை), தில்லை ஆற்றங்கரையில் (இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்), காட்டாறு (செங்கையாழியான்) என்று சிலவற்றைக் குறிப்பிடலாம்.

சிங்கள மொழியில் மார்டின் விக்ரமசிங்க எழுதிய `கம்பேரலியா’ (கிராமப் பிறழ்வு) மிகவும் கவனத்தில் எடுக்க வேண்டிய ஒரு புதினம். தமிழ் நாட்டில் புனைவுப் புதினம்என்பதில் வெற்றி பெற்ற நுÖற்றுக்கணக்கான நுÖல்களை என்னால் பட்டியலிட முடியும். கரைந்த நிழல்கள் (அசோகமித்திரன்), மரப்பசு (தி.ஜானகி இராமன்), ஆழிசூழ் உலகு(ஜே.டி.குறுஸ்) என்று அவை விரிந்து கொண்டே செல்கிறது.

ஈழத்துத் தமிழில் சயந்தன் `ஆதிரை’ என்ற புதினத்தைத் தந்து சிலபல வெளிகளை தன் புனைவினால் இட்டு நிரப்புகின்றார். ஒரு சமூகம், நான்கைந்து குடும்பங்கள், இருபது முப்பது மனிதர்கள், நான்கைந்து தளங்கள், பெரும்நிலப்பரப்பு, 35 வருடகாலம், இயற்கை, சூழல், தொழில்,இன்னும் எத்தனை அம்சங்கள் உள்ளனவோ அத்தனையையும் புனைவினுÖடாக சயந்தன் எமக்குள் ஏற்றுகிறார். `சந்தர்ப்பமே இல்லை இவ்வாறான ஒரு புனைவை நாம் கண்ணுறுவதற்கு’

சோபா சக்தி எழுதிய `பொக்ஸ் – கதைப்புத்தகம்’ புனைவு வழிப்பட்டு நமக்கு இன்னோர் உலகத்தையும் நிலத்தையும் காட்டியது. புனைவு வழிப்படுத்திய அந்தப் புதினத்தையும் நான் மெச்சுவேன். ஆனால், அது காட்டிய உலகம்மாயாலோகம். அங்கு வாழ்ந்த மனிதர்கள் இரத்தமும் சதையுமானவர் அல்லர், சோபாசக்தி பிடித்துப் பிடித்து வைத்த உருவங்கள் அவை. அங்கு ஒலிக்கும் குரல்கள் யாவும், சோபாசக்தியின் வாய் திறந்து வருபவை. மேலாகஅதன் பூடக அரசியல் சொல்லும் செய்தி மானுட தர்மத்திற்கு உரியதல்ல.

முடிவுக்கு வருகிறேன். இப்பத்தியின் நோக்கம் நிச்சயமாக ஒன்று தான். சயந்தன் எழுதிய `ஆதிரை’ எனும் புதினம் அரசியல், இலக்கிய தளத்தில் சகலராலும் வாசிக்கப்பட வேண்டியது ஒன்று. அதை நான் உரத்துச் சொல்கிறேன்.

 

http://orupaper.com

By

Read More

நடராஜா வாமபாகன்

தெனியாய எனப்படும் மலையகத்தோட்டத்தில் லயன்களில் ( காம்ப்ராக்கள்) 77இல் மூட்டப்படும் பெரும் தீயுடன் ஆரம்பிக்கும் கதை மார்பின் குருதிச்சேற்றில் புதைந்திருக்கும் சயனைட் குப்பியை ஆதிரை சிரமப்பட்டு இழுப்பதோடு முடிகின்றது, இடையில் பல கிளைக்கதைகள், ஈழப்போர் என்ற மையக்கருவை சிதைக்காமல் பின்னப்பட்ட ஓர் பல்சுவைக்கதம்பம் இந்த ஆதிரை.

இதில் காதல் உணர்வுண்டு, மெலிதான காம உணர்வுண்டு, வன்னி மக்களின் வாழ்க்கை முறையுண்டு, இத்திமரக் கதையுண்டு, வேட்டைக்கு போவோர் பின்பற்றும் நுணுக்கமான தந்திரோபாயங்கள் உண்டு, பன்றிக்கு வியர்ப்பதில்லை என்ற ஆச்சரியமான தகவல்கள் உண்டு.
பலவருடங்களுக்கு முன் எனக்குத்தெரிந்த இஸ்லாமியன் ஒருவன் பன்றிக்கு வியர்ப்பதில்லை அதனால் அதன் மாமிசம் சாப்பிட்டால் நோய் வரும் என்று கதை அளந்தான், ஆதிரையில் ஆசிரியர் இதைக்கூறியபோது வியந்துபோனேன்.

சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிக்கொடுமைகள் போகிறபோக்கில் சொல்லப்பட்டுள்ளன. ‪#‎அம்பட்டனுக்கு‬ வெள்ளாளப்பிள்ளை கேட்குதா, எனக்கு தலையை சிரைத்த நாவிதன் சம்பந்தி என்று சொல்லவே உடலில் மிளகாய் தூளைக்கொட்டியது போன்று எரிகின்றது. சாதி மறைந்து விடவில்லை அது பொடியளின் துவக்குக்கு பயந்து அமந்து போய் கிடக்கு#

பல சாட்டையடிகள். எம்மைப்போன்ற சுயநலமிகளுக்கு, நடுத்தர வர்க்கத்துக்கு, மேல்தட்டினருக்கு. புலம்பெயர்ந்தும் அரசியல் பண்ணும் ஏமாற்றுக்காரர்களுக்கு.ஓரிரு உதாரணம்.

‪#‎வன்னியில்‬ இப்போது இரண்டு வர்க்கம்தான், ஒன்று சாகத்துணிந்த வர்க்கம், இன்னொன்று வாழ ஆசைப்படும் வர்க்கம், எல்லோரும் பரம ஏழைகள், ஏழை போராடியது போதும் இனிமேல் பணக்காரன் போராடட்டும் என்கிறீர்கள், பணக்காரன் எங்குள்ளான் அவன் வெளியில் போய் மாமாங்கம் ஆச்சுது#.
‪#‎முள்ளிவாய்க்காலில்‬ முடிவுக்கு வந்த போர் யாழ்ப்பாணத்தில் வந்திருந்தால், சிங்களவனே போரை நிறுத்து என்று வெளிநாட்டில் கொடி பிடித்தவர்கள் பிரபாகரனே போரை நிறுத்து என்று பதாகையை மாற்றிப்பிடித்திருப்பார்கள்#
.
கதையைப்படித்து முடித்தபின்னரும் அதன் தாக்கத்தில் இருந்து மீளமுடியவில்லை. மக்கள் பட்ட அவலங்கள், அவலங்களால் எழுந்த அங்கலாய்ப்புக்கள், போராளிகளைத் திட்டிய தாய்மார்கள், அவர்களை, அவர்களின் தியாகங்களை போற்றிய மனிதர்கள், தேயிலைத்தோட்டத்தில் பிறந்து வளர்ந்து யாழ்ப்பாணமே போகாத, அது எங்குள்ளது என்பது கூடத் தெரியாத லெட்சுமணனின் யாழ் பற்றிய வண்ணக்கனவுகள்.

77இல் ஆரம்பித்து 2013வரை விரியும் ஆதிரை என்னை குற்ற உணர்வுள்ளவனாக மாற்றியுள்ளாள். மாவீரர்களின் தியாகம், எதையுமே எதிர்பார்க்காமல் அவர்கள் செய்த அர்ப்பணிப்புக்கள் எல்லாம் மனதில் சுமையாக மாறியுள்ளது. கண்னிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டவனின் பொருளாதாரச்சுமைகள் மனதில் ஈட்டியாக குத்துகின்றது. ஈற்றில் சில வார்த்தைகள், எப்படியும் இன்னும் சில காலத்துக்கு அத்தாரும், கணபதியும், வெள்ளையனும், மற்றும் லெட்சுமணன், நாமகள், வல்லியாள், சிங்கமலை, முத்து, மலர், ராணி, ஒளிநிலா இசைநிலா எனது மனதை ஆக்கிரமிப்பார்கள்.இதைவிட அதிகமாக எழுதினால் இனிமேல் வாசிக்கும் ஆவலுடன் இருப்பவர்களின் வேட்கை தணியலாம், நான் ஈழப்போர் பற்றி அறிந்தவை, தெரிந்தவை, எல்லாவற்றையும் மீறி எனக்குள் ஓர் பாதிப்பை உண்டு பண்ணியுள்ளாள் இந்த ஆதிரை. நன்றி.

By

Read More

× Close