சயந்தனின் ஆறாவடு நாவலுக்கு இதழில் வந்த மணிமாறனின் வாச்சியத்திற்குப் பின் இப்போது வந்திருக்கும் ஆதிரை நாவல் அளவில் பெரியதாயினும் தன் தீவு நிலத்தின் அகப்பரப்பில் மலையக சாயல்களோடு பெயர்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களின் கதை தான் நாவலாகி இருக்கிறது. ஆறாவடு நாவலோ அளவில் சிறியதாயினும் கால் இழந்த போராளியின் செயற்கைக் கால் கடல் கடந்து பயணிப்பதால் அதன் நவீனம் புனைவாக சாத்தியமாகி இருக்கிறது. ஆதிரை நாவலோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலாக மாறியிருப்பதிலிருந்து டொனால் பார்த்தல் மேயின் டால்ஸ்டாயின் மியூசியம் கதையின் குறியீடைப் பெற்று விடுகிறது. எல்லாச் சம்பவங்களையும் தொகுத்து குட்டிமணி முதல் முள்ளிவாய்க்கால் வரை உதிரம் தோய்ந்த காகிதமடிப்புகளை வரைபடங்களாக வெட்டி ஒட்டும் குலாஜி ஓவியகங்களாக சில நூறு பக்கங்கள் இந்த நாவலை தகவல் நாடாக மாற்றியிருக்கிறது. இந்த தகவல் நாட்டிலிருந்தே கத்தரிக்கப்பட்ட செய்திகளை மற்ற எழுத்தாளர்களின் கண்களுக்குத் தப்பிவிடும் விடுபடல்களையும் சேகரித்திருக்கிறது. நிலப்பரப்பின் தனி மொழியாக மலையக இருப்பின் புராதான இருட்டில் தங்கம்மை, சிங்கமலை, வள்ளியாள், அலைக்கழிந்த வெள்ளையன், லட்சுமணன், விநோதினி இயக்க உறுப்பினர்களாக நாவலின் ஊடே அலைந்து மறைந்து திரிகிறார்கள். ஆனால் பேச்சி தோட்டத்திற்கு அப்பால் எட்டு ஏக்கர் மேட்டு நிலத்திற்கு அப்பாலிருந்து நாவலின் ஊடாக நெளிந்து வரும் விஷம் சுமந்த சர்ப்பம் வாலில் விசும்பி நின்று படம் விரி கோலத்தில் ரசவாதியாகிவிடும் படைப்பாளியைப் பார்க்கிறது. அவன் சாட்சியமாகவே ஆதிரையை விழுங்குகிறது. அவன் சைக்கிள் மீது சாய்கிறாள். பொழுது இருண்டு போகிறது. நாவலின் துக்கம் கனவுப் பாம்பிலிருந்து ஆதிரையை உமிழ்கிறது. வெளிச்சம் வருகிறது. சிறிது சிறிதாக வருகிறது. பின்னே வரும் பக்கங்களையும் ஆதிரையின் சிறிய வெளிச்சத்தில் யாரோ வாசிக்கிறார்கள். மொழி நிழல்கள் காட்டின் உயிர்சுடரில் ஆடி புனைவுப் பாம்பு சயந்தனின் எழுதும் விரலை வலுவாகக் கவ்விக் கொள்கிறது. படைப்பில் விஷத்தை படைப்பாளி கையாள வேண்டிய தருணம் வருகிறது. கணம் தவறினாலும் அவனைக் கொன்று விடும் என்கிறார் காருகி முராகாமி. புனைவாளன் விஷத்தை பளிங்காக மாற்றுகிறான். நீலம் பாதித்த அத்தியாயங்களை வாசிக்கும் போது வாசகனும் சில பக்கங்களில் நீல சரீரமாகிவிடுகிறான். இந்தப் புனைவுப் பாம்பு தீண்டியது மிகச் சிலவே ஆயினும் குறிஞ்சி நிலத்தின் நரம்பறிந்த விரல்களாய் எழுதும் விரல்கள் இருப்பதில் யார் கை மூலம் என்பதை விட சயந்தன் விரல்களால் எழுதப்பட்ட ஆதிரை கழிவிரக்கத்தையும் கையறு நிலையையும் சம்பவங்களூடே கடந்து செல்வதற்குரிய உத்தியாக நான் நினைக்கவில்லை. மலையக இரவுகளும் வன்னிப் பெருநில ஊர்களும் சுன்ணாம்பு வளையத்தில் உள்ள சிறு சிறு தீவுகளும் ஒரே நிலமாக இருப்பதில்லை. எட்டு எக்கர்களாக மணற்பாம்புகளோடு ஊழி நடனத்தில் மண்மாரி வீசியது. ஆறாவடுவில் சயந்தினின் புனவுகள் நிலப்பரப்பைத் தாண்டி கடலுக்குள் மூழ்கி நகர்வதாகும்.
கடலும் கடல் சார்ந்த உலகமும் கடலுக்கு அப்பால் இருக்கும் உலகமும் எக்கர்களாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. இதில் எட்டு ஏக்கரில் எதார்த்தவாத வாழ்வியல் பரப்பும் விவசாயமும் நிலத்தை விட்டு வேறொரு நிலத்திற்கு இடம் பெயர்வதும் கடலைத் தாண்டாத சமூக அக்கரை சார்ந்த நாவலாக உருமாற்றிக் கொள்கிறது. எட்டேக்கர் x எட்டு எக்கர் புனைவில் பிளக்கும் இடைவெளிகளை எழுதிச் செல்வதற்கான பக்கங்கள் முன் கூட்டியே அறியப் பட்ட பக்கங்களை கோரி நிற்பதில்லை. புனைவின் நிகழ்கணம் தான் நவீன நாவலின் உயிர்நாடி. ஆனால் அதே வேளை குடும்பங்களின் எளிய வாழ்விலிருந்து ஆயிரம் துகள் துகல்ளான கீற்றுகள் இந்த நாவலின் வசீகரமான பக்கங்கள். அமிலப் பசியே உன்னை கவனிக்கப் போவதில்லை என்று தாயார் மகளைப் பார்க்க மலை மலையாக இறங்கிப் போகிறாள். அது ஒருபக்கம் இருக்க, குடும்பக் கதைகளுக்கு மேல் ஊழிக்காலத்துடன் தன்னை சயந்தன் கை மூலம் எழுதிக் கொள்கிறது எக்கர் ஞாழல். தனுஷ்கோடியிலிருந்து ஆதிரையில் வரும் ஒரு சில பக்கங்கள் இராமேஸ்வரம் தனுஷ்கோடி என்று குறிப்பிடுவதில் அவைகள் வெறும் வார்த்தைகள் அல்லவே.