தமிழ் மக்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தின் இறுதி 15 வருடங்களை ஒட்டுமொத்தமாக தாங்கி நின்றது வன்னிப் பெருநிலம். காடுகளும், களணிகளும், கடலும் சார்ந்த வன்னிப் பெருநிலம், தன்னுள் தன் பூர்வீகக் குடிகளை மாத்திரமின்றி மலையகத்திலிருந்தும், கிழக்கிலிருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்தும் வந்த பெருமளவு மக்களையும் ஒரு தாயின் உள்ளன்போடு உள்வாங்கிக் கொண்ட பூமி.
வன்னிப் பெருநிலத்தைத் தவிர்த்து ஈழத் தமிழரின் வாழ்வையும், அரசியலையும், அதுசார் போராட்டங்களையும் இனி என்றைக்குமே பேசிவிட முடியாது. எங்கிருந்து ஆரம்பித்தாலும் வன்னிப் பெருநிலத்தையும், முள்ளிவாய்க்காலின் கடற்கரை சுடுமணல் பரப்பையும் தாண்டிக் குதித்தோட முடியாது. அங்கு நின்று நிதானித்துப் பேசுவதற்கு ஆயிரமாயிரம் கதைகள் உண்டு. அனுபவமும், படிப்பினையும், எதிர்காலத்துக்கான ஓர்மமும், ஏன், நீதியும் கூட அங்குண்டு. ஆயுதப் போராட்டத்தின் பெரும் வெற்றிகளும், (இறுதித்) தோல்வியும் கூட வன்னிப் பெருநிலத்துள்ளேயே நிகழ்ந்து முடிந்தது.
வன்னிப் பெருநிலத்தோடு ஒன்றி வாழ்ந்தவர்களின் வாழ்வோடும், புதிய பிறப்புக்களோடும், ஜீரணிக்க முடியாத இறப்புக்களோடும்…. ஒருசில பிழைத்திருத்தல்களோடும் ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியையும், வீழ்ச்சியையும், அதன் தொடர் விளைவுகளையும் பேசியிருக்கின்றது சயந்தனின் ‘ஆதிரை’.
வன்னிப் காடுகளுக்குள் உறங்கும் ஆயிரமாயிரம் உண்மைகள் போலயே ஆயுதப் போராட்டத்தின் பக்கங்களை யாராலும் முழுமையாக பேசிவிட முடியாது. ஆனாலும், அங்கு வாழ்ந்தவர்களின் ஒவ்வொரு நாளும், அனுபவமும் புதிய உண்மைகளை இந்த உலகத்துக்கு செல்லும் வல்லமை பெற்றவை. அவை, பெரும்படிப்பினைகள். அப்படியானதொரு, முயற்சியின் பக்கத்திலிருந்து புனைவொன்றை எழுதுவதற்கான பொறுப்பினையும், உழைப்பினையும் சயந்தன் ‘ஆதிரை’யை எழுதி முடிப்பதற்கு செலவிட்டிருக்கின்றார். அது, பெரும் உழைப்பினை சலிக்காமல் கோரும் ஒன்றாகவும் இருந்திருக்கும். அதனை வாசித்து முடிக்கின்ற போது அதனை உணர முடிகின்றது.
வன்னிக் காடுகளின் வெம்மையையும், குளிரையும் மாத்திரமின்றி அத்தார், சந்திரா ரீச்சர், மலர் அக்கா, லெட்சுமணன், ராணி, வெள்ளையன், விநோதினி, சாரகன், ஒளிநிலா, இசைநிலா…. இன்னும் இன்னும் பலரின் வாழ்வோட்டத்தின் ஒவ்வொரு கட்டங்களினூடும் ஆயுதப் போராட்டத்தின் அனைத்துக் கட்டங்களையும் ‘ஆதிரை’ கடக்க முயன்றிருக்கின்றது. நாம் எல்லோருமே அறிந்த பல கதைகளை அல்லது உண்மைகளை ஒரு சில காட்சிகளோடு அல்லது தகவல்களோடு கடந்திருக்கின்ற சயந்தன், இறுதி மோதல்களினை நோக்கிய பயணத்தின் தடத்தினை அழுத்தமான பதிவு செய்ய முனைந்திருக்கின்றார்.
ஆயுதப் போராட்டமொன்று ஏன் ஆரம்பித்தது, பெருவெற்றிக்கணக்கங்களை மக்களிடம் உணரச் செய்தது… ஒரு சில காலத்துக்குப் பிறகு கடுமையான தோல்வியை வழங்கி முடிந்து போனது. இதனையே, ஆதிரையில் வரும் நபர்கள் பிரதிபலிக்கின்றார்கள், பேசுகிறார்கள், வாக்குவாதம் செய்கிறார்கள், மௌனித்து ஆமோதிக்கின்றார்கள். சரி பிழைகள், நியாயங்கள் அநியாயங்கள் என்று எல்லாவற்றையும் பேசுவதற்கு முயன்றிருக்கின்றார்கள். குறிப்பாக, அத்தார், சந்திரா ரீச்சர் பாத்திரங்களினூடு ஆரம்பத்திலிருந்தே அதனைக் கட்டமைத்து எடுத்துச் செல்வதில் சயந்தன் பெரும் கவனம் செலுத்தியிருக்கின்றார். அதுபோல, ஆயுதப் போராட்டத்தின் இறுதி நிமிடங்கள் கொடுத்த வலிக்கு அப்பாலும், அந்தப் போராட்டத்தின் நியாயம் தொடர்பில் தன்னுடைய கருத்தினை கவனமாக உட்செலுத்துவதில் நாவலாசிரியர் கவனமாக இருந்திருக்கின்றார்.
ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களை யாழ்ப்பாணம் எடுத்துக் கொண்டாலும், அதன் பெருவெற்றிகளின் பங்களிப்பு என்பது வடக்கு- கிழக்கு மற்றும் வடக்கு- கிழக்கின் கலந்துவிட்ட மலையக மக்களின் பெரும் அர்ப்பணிப்போடு நிகழ்த்தப்பட்டவை. அதற்கான ஒட்டுமொத்த உரிமையையும் ஒருதரப்பு கோர முடியாது என்பதையும் ஆதிரை பதிவு செய்திருக்கின்றது. அது, ஆயுதப் போராட்டத்தினை வெற்றிக்காரணிகள் சார்ந்து மாத்திரமே உணர்ந்து வைத்திருக்கின்ற பெருமளவான தமிழ் மக்களுக்கு படிப்பினை.
ஆயுதப் போராட்டங்கள் வெற்றி தோல்விகள் மாத்திரம் சார்ந்தவை அல்ல. அதன் உள்விளைவுகளும், தொடர் விளைவுகளும் ஜீரணிக்க முடியாதவை. அதனை எதிர்கொள்வதற்கான திராணி தமிழ் மக்களில் குறிப்பிட்டளவானவர்களுக்கு இல்லை என்பதையும் ‘ஆதிரை’ தன்னுடைய இறுதிப் பாகங்களில் பதிவு செய்திருக்கின்றது. ஒரு இலக்கியப் பிரதியாக ‘ஆதிரை’ வெற்றிகரமாக பக்கத்தில் எவ்வளவு தூரம் வைக்க முடியுமோ, அதேயளவுக்கு அரசியல் உரையாடல் பதிவுகளாகவும் முக்கிய பங்காற்றியிருக்கின்றது என்று கொள்ள முடியும்.
‘ஆதிரை’யை எழுதிய சயந்தனின் ‘ஆறாவடு’ (2012இல் வெளியான நாவல்) வாசித்த கணத்தில் பெரும் கோபமும், எரிச்சலும் ஏற்பட்டது. அந்த உணர்நிலை தொடர்பில் எனக்கு இன்றைக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஏனெனில், ஆறாவடு மிகமிக அவசரமாக பொறுப்பற்ற தனங்களோடு எழுதப்பட்டது மாதிரியான தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, ஆயுதப் போராட்டமொன்று முடிந்து போன கணத்தில் பலருக்கு அது சார்ந்த கதைகளைக் கேட்பதற்கு பாரிய ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வத்தினை சந்தையாக்கும் முயற்சியில் சிலர் இலக்கியங்கள் என்கிற பெயரில் பல பிரதிகளை எழுதிக் கொண்டிருந்தார்கள். அதன் தொடர்ச்சியாகவே நான் ‘ஆறாவடு’வினையும் பார்த்தேன். அது, இலக்கிய அடையாளத்தை நோக்கிப் பறக்கும் குஞ்சொன்றின் பிரதியாகவே இருந்தது.
ஆனால், ‘ஆதிரை’ அப்படியான எந்தவொரு எண்ணத்தினையும் ஏற்படுத்தவில்லை. ஆறாவடு மூலம் சயந்தன் மீது ஏற்பட்டிருந்த கோபத்தினையும், எரிச்சலையும் ‘ஆதிரை’ துடைத்தெறிந்திருக்கின்றது. ‘ஆதிரை’ தமிழ் மக்களின் குற்றவுணர்சிகளிலிருந்தும் எழுதப்பட்டிருக்கின்றது. வாசிக்கும் போதும் அப்படியான மனநிலை தொற்றிக்கொள்கின்றது. சயந்தனும் அந்தக் குற்றவுணர்ச்சி மனநிலைக்குள்ளிலிருந்து தான் எழுதியிருக்கின்றார்.
எல்லாவற்றையும் விட ‘ஆதிரை’, லெட்சுமணனோடு ஆரம்பித்து, காவற்தெய்வம் ஆதிரையோடு முடிந்து போவதுதான் அதன் அழகியலையும், அர்ப்பணிப்பையும், ஏன் நியாயத்தையும் கூட உணர்த்தி நிற்கின்றது.