அஷேரா! மனதை விட்டு அகலாத அற்புதம் – உமா ஆனந்த்

“கையைச்சுடும் என்றாலும் தீயைத்தொடும் பிள்ளைபோல்” நான் ஏன் தேடி தேடி ஈழக்கதைகளை வாசிக்கிறேன் என்று புரியவில்லை. எப்படியாவது வாழ்ந்துவிட துடிக்கும் மக்களின் கதை. உயிர் வாழும் ஆசை எந்த எல்லைக்கும் துரத்தக்கூடியது . அற்புதம் கடைசி முறையாக இலங்கையில் இருந்து கிளம்புவதை சகித்துக்கொள்ளவே முடியவில்லை.

அருள்குமரன்களும், அற்புதங்களும்தான் ஈழத்தின் அசலான முகங்கள் என்று தோன்றுகிறது. விடுதலைக்காக போராடும் இயக்கங்கள் கூட துரோகமும், வக்கிரமும், வெறியுமாக திரிவதை பார்க்கும்போது மனிதம் மீதான நம்பக்கையே அற்று போகிறது. மனித மனத்தின் அடியில் பொங்கும் க்ரூரத்தின் வடிகால்தான் இந்த போராட்டங்களா? வாழ்க்கையை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு மனிதர்களை பழிவாங்கி, எதை சாதித்தார்கள்.

ஈழம் மட்டுமல்ல கதையில் வரும் மற்ற நாட்டு அகதிகள் சொல்வதெல்லாம் படிக்கையில் எந்த பிடிமானமும் இன்றி அந்தரத்தில் தொங்குவது போன்ற உணர்வு. சக மனிதனிடம் இவ்வளவு வக்கிரத்தை காட்ட எப்படி முடிகிறது? ஒவ்வொரு முறை ஈழப்போராட்டம் பற்றி படிக்கும்போதும் இந்த மக்கள் ஏன் இவ்வளவு துயரப்படவேண்டும் என்று முடிவில்லாத ‘ஏன்’கள் வந்துகொண்டே இருக்கிறது. தீராத கேள்விகள்.. பதிலே கிடைத்தாலும் புரியாதென்றே தோன்றுகிறது.

அடுத்த முறை ஈழத்தை வைத்து வியாபாரம் செய்யும் அயோக்கியர்களிடம் முதலில் தமிழகத்தில் எத்தனை அகதிகள் முகாம்கள் இருக்கிறதென்று கேளுங்கள். எந்த நம்பிக்கை அவர்களை வருடக்கணக்காக இங்கே வைத்திருக்கிறது? தூக்கி வளர்த்த பிள்ளை உயிரோடு இருந்தால் போதுமென்றா? என்றைக்காவது எல்லாம் ஓய்ந்து நம் மண்ணிற்கே திரும்பி செல்வோம் என்றா? இப்படி ஒரு விதியா? இப்படி ஒரு வாழ்க்கையா?

ஆறாவடுவில் இறந்துபோகும் பெடியனும், அஷேராவின் அற்புதமும் எப்போதுமே மனதைவிட்டு அகலமாட்டார்கள்..

https://www.facebook.com/uma.anand.395/posts/5752479054777768

By

Read More

அஷேரா! சொல்லாமல் சொல்லும் புதிர்கள் – ஜூட் பிரகாஷ்

ஆறாவடு. ஆதிரை, வரிசையில் வாசிக்கும் சயந்தனின் மூன்றாவது நாவல் தான் அஷேரா.

யூதர்களின் ஒற்றைக் கடவுளான யாஹ்வேயிற்கு ஒரு மனைவி இருந்ததாகச் சொல்லப்படும் மனைவியின் பெயர் தான் அஷேராவாம். அஷேராவை வேதாகமத்தை எழுதிய பண்டைய யூதர்கள் வேண்டுமென்றே மறைத்து விட்டதாகவும் சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

யாஹ்வேயின் மனைவியான பெண் கடவுளான அஷேராவின் பெயரில் ஏற்பட்ட மயக்கம் தான், ‘ஆ’ வண்ணா வரிசையில் தனது நாவல்களிற்கு பெயரிட்டு வந்த சயந்தனை ‘அ’ வரிசைக்கு வரவழைத்திருக்கிறது போலும்.

அஷேரா நாவல் இரண்டு பிரதான ஆண் கதாபாத்திரங்களையும் அவர்களது வாழ்வில் வெவ்வேறு காலகட்டங்களில் பயணிக்கும் பெண் கதாபாத்திரங்களையும வைத்து பின்னப்பட்ட ஒரு நாவலாக அமைகிறது.

கதையில் வரும் பலமான பெண் கதாபாத்திரங்களின் குறியீடாகத் தான், பலமான பெண் கடவுளான அஷேராவின் பெயரைத் தனது நாவலிற்கு இட்டதாக, தம்பி சயந்தன் கூறினார்.

கதையின் களங்கள் நடந்து முடிந்த எங்கள் ஆயுதப் போராட்டத்தின் அழுக்கான சில நிகழ்வுகளை மீண்டும் இரை மீட்டிப் போவது, பல இடங்களில் நெருடலை ஏற்படுத்துகிறது.

எதை மறந்து வாழ நினைக்கிறோமோ, எது நடந்தது என்று தெரிந்தும் அது நடக்கவில்லை என்று மறுக்க நினைக்கிறோமோ, அதையே கதையின் களங்கள் மீண்டும் கண் முன் கொண்டு வரும் போது, புத்தகத்தை தூக்கி எறியலாம் போலிருந்தது.

சயந்தனின் எழுத்துக்களில் காட்சியை விபரித்து எங்களை கதைக்குள் கொண்டு போக அவர் பயன்படுத்தும் படிமங்கள் தனித்துவமானவை. அஷேராவில் எங்களுக்கு சுவிஸ்லாந்தின் அழகை ரசிக்கவும் குளிரை உணர வைக்கவும் அவர் கையாளும் படிமங்கள் அழகானவை.

சயந்தனின் கதைகளில் வெளிப்படும் இன்னுமொரு அம்சம், அண்ணன் ஷோபா ஷக்தியின் எழுத்துக்கள் அவரில் ஏற்படுத்தியள்ள தாக்கம். கதையின் கருக்களாக இருக்கட்டும், எழுத்தில் துள்ளும் எள்ளலாக இருக்கட்டும், பல இடங்களில் ஷோபா ஷக்தி அண்ணனின் தாக்கம் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும்.

சயந்தனின் கதையில் இருக்கும் கனதி அதிகம். சயந்தன் சொல்லும் கதையில் சொல்லாமல் சொல்லும் புதிர்களை அவிழ்க்க சில வேளைகளில் மண்டையை போட்டு உடைக்கவும் வேண்டும்.

எங்கட மண்ணில் இருந்து, சயந்தனைப் போன்ற பல புதிய எழுத்தாளர்கள் தரமான படைப்புக்களை தொடர்ந்தும் தந்து கொண்டிருப்பது மிகவும் உற்சாகமளிக்கிறது.

சயந்தன், கொழும்பு இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் என்பதையும் குறிப்பிட ஆக வேண்டும்.

ஆதிரை வெளியீடாக வெளிவந்திருக்கும் அஷேராவை தவறாமல் படியுங்கள்.

By

Read More

அஷேரா! அக உணர்வுகளின் திறப்பு – சுரேந்தர்

தமிழ் ஈழ போராட்டத்தைப் போன்ற குழப்படி மிகுந்த விடுதலைப் போராட்ட வரலாறு உலகில் எங்குமே காணக் கிடைக்காது. கொள்கை சாய்வுகளற்ற மூன்றாம் மனிதன் அதைப் புரிந்து கொள்ள தலைப்பட்டானானால் கிறுக்குப் பிடித்துப் போகும். என் பள்ளிக்காலத்தில் நான் நினைத்து இருந்தேன் தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசிற்கும் இடையே பிரச்சினை. தமிழ் மக்கள் சார்பாக பிரபாகரன் தலைமையில் LTTE இருந்தது. பிறகு புலிகளுக்கும் கிழக்குப் பகுதியில் பெரும்பான்மையாக இருந்த தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கும் சிக்கல் இருப்பதை அறிந்துகொண்டேன். அதன் பிறகு தமிழ் பேசும் இந்துக்கள் கிருஸ்தவர்களுக்கிடையே கூட LTTE யுடன் முரண்பட்ட வெவ்வேறு இயக்கங்கள் (PLOTE, TELO, EPRLF, EROS ) இருந்தன, ஒருவரை ஒருவர் துரோகிகள் என்றனர், அவர்களுக்குள் வெட்டிச் சாய்த்துக்கொண்டனர், என்பதையெல்லாம் அறிந்து கொண்ட போது “ச்சைக் ” கென்று இருந்தது. இவையல்லாமல் இந்திய ராணுவம் (IPKF) பிறகு பிரதான எதிரி இலங்கை ராணுவம். சிறிய நிலப்பரப்பில் இத்தனை ஆயுத இயக்கங்கள் ஒரே காலக் கட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தன என்றால், கேட்பவர் நமக்கே கிறுகிறுக்கிறதில்லையா! என் எதிரே நிற்பவன் நண்பனா எதிரியா, என்னைக் கொல்வானா இல்லை நான் முந்திக் கொள்ள வேண்டுமா என்று வாழ்நாளெல்லாம் அஞ்சி அஞ்சி வாழ்வதை கற்பனை செய்ய முடிகிறதா.

இறுதிப் போருக்குப் பின் அங்கிருந்து வெளிவரும் படைப்புகள் அந்தக் குழப்படியான காலக்கட்டத்தின் இருளை மெல்ல விலக்கம் செய்கின்றன. தாமதமாக என்றாலும் அந்த இருண்ட வரலாறு வெவ்வேறு பார்வைகளில் வெவ்வேறு பரிமாணங்களில் பதியப்பட வேண்டும். அவற்றில் சயந்தனின் படைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தன. வழமையான புலிகள் x இலங்கை ராணுவம் பரிமாணத்தில் அல்லாமல் தமிழீழ இயக்கங்களிடையே இருந்த முரண்பாடுகளையும் மோதல் போக்குகளையும் பிரதானமாகக் கொண்டு படைக்கப் பட்டிருக்கிறது அஷேரா.குருதிக்கறை படிந்த கடந்த காலத்தின் இருண்மை நிகழ்காலத்தையும் பின்தொடர்ந்து தொந்திரவு செய்கிற post war tantrum உடைய இயக்க மாந்தர்களின் கதை எனலாம் அஷேராவை.

வெறும் இயக்கங்களிடை உள்விவகாரங்களைக் குறித்த புற தகவல்களாக சுருங்கி விடாமல் அகம் சார்ந்து பல உணர்வுத் திறப்புகளைச் செய்து கொண்டே இருந்தது. குறிப்பாக அருள்குமரன் – அபர்ணா இடையே திரண்டு வரும் திருமணம் தாண்டிய உறவு கச்சிதமாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அதை affair உண்டு/இல்லை என்று எப்பக்கமும் உறுதியாக சொல்லி விடமுடிகிறது இல்லை. ஆண் – பெண் உறவுச் சிக்கல்கல் ஈழப்போரின் வரலாற்றை விடவும் பழமையானதுதானே. அதற்குரிய இடம் நாவலின் இரண்டாம் சாப்டரில் இருந்தே தொடங்கி விடுகிறது. பால்யம் முதல் தாம் வெறுக்கும் மனிதன் சரவணபவனைப்போல் தாமும் ஆகிவிட்டிருப்பதை சிக்கலான தருணம் ஒன்றில் அருள்குமரன் கண்டுகொள்கிற போதில் தம் அம்மையின் நியாயமும் அவனுக்கு விளங்கி இருக்கலாம். அது முன்னமே விளங்கித்தானோ என்னவோ அவன் அந்த உண்மையின் வெக்கையில் இருந்து விலகி விலகி ஓடிக்கொண்டே இருந்திருக்கிறான். “யார் என்ன சொன்னாலும் அம்மாவ பத்தி தப்பா நினைக்கக் கூடாது அப்பன்” எனும் தம் அம்மையின் வார்த்தைகளை அருள்குமரன் நினைவு கூறும்பொழுது புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன்.

போர் அவலங்களுக்கு இணையாக தாய்மை _ காதல் _ காமம் என பெண்மாந்தர்கள் முக்கியத்துவம் பெற்று இடைப்படுகிறார்கள். அவர்கள்மேல்தான் நாவலே கட்டி எழுப்பப் பட்டிருக்கிறது. ஒரு நாள் அவந்தி அருள்குமரனிடம் சொல்கிறாள் “எல்லா ஆண்களுமே வாசல் கதவை தட்டித்தான் பார்ப்பார்களாம். வாசலில் வைத்தே கதைத்து அனுப்புவதா அல்லது உள்ளே அழைத்து கதிரையில் உட்கார வைப்பதா அல்லது அதற்கும் உள்ளேயா என்பது பெண் தீர்மானிப்பதுதானாம்”

திருச்சியில் இருந்தபோது இலங்கை அகதிகள் முகாமைத் தாண்டித்தான் எனது அறைக்கும் பணியிடத்திற்கும் சென்று வந்து கொண்டிருந்தேன். அதன் உள்ளே எப்படி இருக்கும் என்று தெரியாது. எப்படி பிழைக்கிறார்கள் என்பதும் தெரியாது. செய்தி தாள்களிலோ சேனல்களிலோ கூட முகாம் வாழக்கையைக் குறித்த எந்தப் பதிவும் நமக்கு அறிய கிடைப்பதில்லை. சிறிய பகுதி என்றாலும் கூட மண்டபம் அகதிகள் முகாமின் வாழக்கைப் பாடுகளை நுணுக்கமாக அஷேராவில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. முகாமிற்கு வரும் கியூ ப்ரான்ச் அதிகாரி அருள்குமரனை பார்த்து சொல்கிறார் “பிழைக்கப்போன இடத்தில பிழைப்பைப் பார்க்காமல் வீணாகச் சண்டை பிடித்து சாகிறீர்கள்”. இதை இந்திய அரசின் நிலைப்பாடாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆரம்பம் முதலே இந்த ஒற்றை வரியின் மேல்தான் தமது தமிழீழ கொள்கையை இந்தியா கட்டமைத்து கொண்டிருக்கிறது.

உண்மையைச் சொல்கிறேன் – அஷேரா என்கிற தலைப்பில் எனக்கு உவப்பில்லை (உம்மை யார் கேட்டது ) இச்சா என்கிற தலைப்பில் கூட எனக்கு உவப்பில்லாமல்தான் இருக்கிறது. ஆனால் நாவல் பிடித்து இருந்தது. மத்திய ஆசிய பகுதியின் பழமையான தாய் தெய்வமாம் அஷெரா. செவ்வியல் தன்மையை அடையவிருக்கிற நாவலுக்கு ஆறாவடு, ஆதிரையைப் போன்ற வடிவான தமிழ் பெயர் ஒன்றை வைத்திருக்கலாம் என்கிற மனக்குறை ஏற்பட்டுவிட்டது. நாவலின் கருவிற்கு முக்கியத்துவம் இல்லாத ஆனால் தவிர்க்க இயலாத ஒற்றுமை ஒன்றை கவனித்தேன். பிரதான பாத்திரங்கள் அனைத்தும் “அ ” வரிசையில் பெயரிடப்பட்டிருக்கின்றன – அருள்குமரன் , அற்புதம், அபர்ணா, ஆராதனா, அவந்தி, அரங்கன். சயந்தனுடைய நாவல்களும் அப்படியே – ஆறாவடு, ஆதிரை, அஷேரா. இந்த “அ” வில் என்னவோ இருக்கிறது.

By

Read More

அஷேரா! ‘இருள்’ என்ற வார்த்தையின் அர்த்தம் – சுபா

‘ஏரி பெரிய இருள்ப் படுக்கையைப் போல விரிந்துகொண்டே போனது…’. மனதின் ஒவ்வொரு இருள் படுக்கையாக உரித்து உரித்து எடுத்து, சில நாட்களுக்கு ஆப்கானின் வரண்ட மலைகளாக நிச்சலனத்துடன் வெறித்து மட்டுமே நிற்க வைத்தது அஷேரா எனும் ஆழமான நாவல்.

காமமும், கோபமும் உயிர்க்குணங்கள். பிரிக்க முடியாதவை. இருள் போர்த்தியவை. காமத்திற்கு இருட்டின் மறைப்பும், கோபத்திற்கு இருண்ட மனம் அல்லது இருண்ட செய்கை மீதான ரௌத்திரமும் தேவைப்படுகிறது. இவை உந்துதலை (Drive) அடிப்படையாகக் கொண்டவை. போர் கூட அவ்வாறே. போர் நிலங்களின் ஒருபக்க அவலம், சிறு வயதுப் பாதிப்பு (Childhood trauma), இவை கொடுத்த அனுபவத் தாக்கங்கள் (Post Traumatic Stress Disorder), இத்துடன் பின்னிய அடிப்படை உணர்வான காமம், அது தோற்றுவிக்கும் அன்புக்கான ஏக்கம், ஆனால் நிறைய முடியாத வலி, இவற்றின் சிக்கல் நிறைந்த கூட்டு உணர்வை வெளிப்படையாகப் பேசுகின்றது இந்த நாவல். பசியைப் போல அடிப்படையான தேவை காமம். இதனை அரங்கேற்றுவதில் உள, உடல், அனுபவ, கிடைக்கும் வசதி, சந்தர்ப்ப சூழ்நிலை, இன்னொரு நபரின் அனுமதி என்கிற எல்லாமே அமைய வேண்டி இருக்கிறது. இந்த உணர்வை ஆபரணங்கள் பூட்டிக் கொஞ்சம் மெத்தனமாகப் பேசுவோர் இடையில், ‘இது இப்படித்தான்’ எனக் கையில் அள்ளி முகத்திற்கு நேரே காட்டுகின்றது அஷேரா.

சில வருடங்களுக்கு முன்னர் ‘இறைவி’ என்கிற திரைப்படம் வெளிவந்தது. பெண் சம்பந்தமான அடிப்படைப் பிரச்சனை, உணர்வின் ஆழத்தை வெளிப்படையாகப் பேசியது. பண்டைய சுமேரிய நாகரீகத்தின் பெண் தெய்வமும், புனிதத்தன்மையற்றவள் என யாஹ்வேயினால் தகர்க்கப்பட்ட சிலையையுடையவளும், ஆனால் கானானியர்களால் தொடர்ந்து தெய்வமாக வழுத்தப்பட்டவளுமாகிய அஷேராவைத் தலைப்பாகக் கொண்டு சயந்தனால் எழுதப்பட்ட நாவல் புனிதம் என்ற போலியைக் களைந்த இயல்பின் உண்மையை அப்பட்டமாக அளிக்கிறது. (இவ்விடத்தில், அபர்ணா வெளிநாடு வருவதற்காக மாற்றியமைக்கப்பட்ட கடவுச்சீட்டில் ‘அஷேரா பற்றிக் போல்’ என்ற பெயர் காணப்பட்டதான குறிப்பையும் குறிப்பிட்டாக வேண்டும்). பெண்ணியம், ஆணாதிக்கம் என்று பிரித்துப் பேசும் வெற்று முழக்கங்களின்றி, மனிதன் என்ற உயிரின் உணர்வுச்சிக்கலை நடுநிலையாக ஆராய்ந்தது இந்த நாவலின் அழகு.

புஸ்பகலா, அற்புதம், அருள்குமரன் அம்மா, அருள்குமரன், சரவணபவன், அமலி, ஆராதனா, அவந்தி, ரொக்கெட், சப்பறம், அபர்ணா, அரங்கன், நஜிபுல்லா, ஷர்மிளா, சர்வம், முல்லர், வீட்டுக்காரக் கிழவன் கிழவி எனும் ஒவ்வொருவருக்குமான கதையும், காரணங்களும் இங்குண்டு. தவிர, இனம், மொழி, இடம், ஏன் காலமும் தாண்டி பாதிப்புகளும் அதன் எதிர்வினைகளும் பொதுவானது. அருள்குமரன் – நஜிபுல்லா இருவருக்குமான பாதிப்பின் ஒற்றுமை, அற்புதத்தை முழுமையாகப் புரிந்துகொண்ட அருள்குமரனின் கனிவு என்பன இதனைக் கூறும். கதையின் இந்த உரையாடலும் கூட: ‘ஒரு நாள் அற்புதம் சொன்னார்: “அப்படியொருவர் இந்த உலகத்திலே கிடையாது. மேலே இருக்கிற வீட்டுக்காரக் கிழவனுக்கு எழுபது வயது. அவனிடம் போய்க் கேள். தாயையும் தகப்பனையும் ஹிட்லரின் விச வாயுவுக்குச் சாகக் கொடுத்துவிட்டு வியன்னாவின் தெருக்களில் பசியோடு அலைந்த ஒரு பத்து வயது யூதச் சிறுவனின் கதையைக் கூறுவான்”’. அருள்குமரன் அபர்ணாவிடம் தனக்கும், அற்புதத்திற்குமிடையான உறவை இரண்டு இயக்கப் பெடியளுக்கிடையிலான உறவைப் போல என ஒப்புவிப்பதும் இதனைக் காட்டும்.

குடும்பம், சூழ்நிலைகள் தனிமனித வேறுபாடுகளில் நிர்ணயம் வகிக்கின்றன. ஆராதனா அன்பான பெற்றோருக்கு மகளாகப் பிறந்து இயல்பில் நிதானமும், முதிர்ச்சியும் கொண்டவள். சிறுவயதுக் குழப்பங்களும், அன்பு கிடைக்காத ஏக்கத்தின் பரபரப்பும் இல்லாதவள். அமலி அக்காவிடம் பற்களின் நெருமலுடன் அருள்குமரன் அனுபவித்த காமத்திற்கும், “அன்றைக்கு ஆராதனா பரிசளித்த காமம் கோவிலின் நிவேதனம் போல் இருந்தது” என்று அவனால் குறிப்பிடப்படும் ஆராதனாவுடனான காமத்திற்கும் வேறுபாடுகள் உண்டு. முன்னைய காமம் கோபத்திற்கான வடிகால். பின்னையது அன்பின் பகிர்வு. இன்னொன்று காதல் செய்வதில் காணப்படும் வயது, அனுபவ மாற்றங்கள். பதின்ம வயது அருள்குமரன் – ஆராதனாவுக்கிடையிலான குழந்தைத்தனத்தின் குதூகலத்துடன் சேர்ந்த உரையாடலும், பின்னாளில் அருள்குமரன் – அபர்ணாவிற்கிடையிலான முதிர்ந்த வெளிப்படையான உரையாடலும் அழகாகக் காட்டப்பட்ட வேறுபாடுகள்.

நாவல் நெடுகிலும் குற்றம் செய்யாத குற்றவுணர்வு ஒரு குளிரின் சுமை போலப் பயணிக்கிறது. ஒன்று சம்பந்தமேயில்லாது கனிட்டா என்ற பெண்ணுடன் முன்னர் தொடர்புபடுத்தப்பட்டும், பின்னர் செம்மறி ஆட்டுடன் உடலுறவில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட அற்புதத்தின் ஆற்றாமை. இன்னொன்று அருள்குமரனுடன் சம்பந்தப்பட்ட ஆனால் அவனால் தவிர்க்கப்படமுடியாத சம்பவங்கள். தன் அம்மாவின் நடத்தையில் கொண்ட உணர்வுச் சிக்கல், அமலி அக்காவுடனான உறவு, கொழும்பு குண்டுவெடிப்பு இவற்றைச் சுமந்து திரியும் மனதின் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபட முடியாத அருள்குமரனின் நிலையை இது கொண்டது. “என்னுடைய வாழ்க்கையில் எல்லாத் தீர்ப்புகளும் என்னைக் கேட்காமல்தான் வழங்கப்பட்டன” என்ற அற்புதத்தின் சொல்லாடலின் உண்மை இங்கு எங்கும் பொருந்திப் போகிறது.

தொடர்புகளும், முரண்களும் கசப்பான வரலாற்றையும், சமுதாய இயல்புகளையும் காட்டி நிற்கின்றன.

தமிழீழம் என்ற சொல்லின் கீழ் இவை அடங்கும்:

அற்புதம் “ஒரு காலத்தில் தமிழீழம்தான் எனக்கும் கனவாய் இருந்தது” என்ற போதிலும் ஆகக்குறைந்தது நாற்பது இயக்கங்களுக்காவது தமிழீழம் ஒரு கனவாய் இருந்தது எனும் உண்மை, “நீங்கள் ஆயுதப் பயிற்சியைப் பெற்று திரும்பி வந்து போரைத் தொடங்கிய மூன்றாவது மாதம், நாங்கள் தமிழீழத்தைப் பெறுவோம்” என்ற மொட்டை மாஸ்ரரின் சொற்கள், “நானொரு மனிசப் பிறவியென்ற காரணமே போதுமானது” என்ற புளொட் அமைப்பிலிருந்து வெளியேறிய அற்புதத்தின் கூற்று, தான் எந்த அமைப்பில் இருக்கிறேன் என்று தெரியாமல் உயிர்ப்பயத்தில் ஓடித் திரிந்த அற்புதத்தின் “மசிர் பொறுப்பாளர்கள்” என்ற கோப முணுமுணுப்பு, “எந்தத் தலைமையை?” என்ற சப்பறத்தின் கேள்வி, “எனக்கு எதிரான கத்தி ஒரு வெள்ளைக்காரனால் நீட்டப்பட்டதல்ல, அது என்னுடைய அம்மாவைப்போல் ஒரு தமிழ்ப் பெண்ணின் வயிற்றில் பிறந்த ஒருவனாலேயே நீட்டப்பட்டது” என்கிற அற்புதத்தின் கூற்று (ரஜினி திரணகமவின் கூற்றும் இங்கு ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை), “இயக்கத்திற்கென்று ஒரு மானம் மரியாதை இருக்கிறது. அதைக் காற்றில் பறக்கவிட்டு விடாதே…” என்ற ரொக்கெட்டின் நம்பிக்கை, “அற்பமான காரணங்களைச் சொல்லிக்கொண்டு இயக்கத்திற்கு வந்தவர்கள் பிறகு அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார்கள்” எனும் இராவணேசனின் விளக்கம், ஒரு முத்திரை அளவிலே ஈழநாதம் பத்திரிகையில் வெளியாகியிருந்த ரொக்கெட்டின் வீரச்சாவு அறிவித்தல்.

காமம் என்ற சொல் இவற்றைக் கொள்ளும்:

அருள்குமரனின் அம்மா – சரவணபவன், அமலி – அருள்குமரன், அற்புதத்தின் இரவுப் படங்கள், நஜிபுல்லா – வெள்ளைக்காரி என்று நிறைவற்றுத் தகித்த காமம், நஜிபுல்லாவின் கூடலின்போது அவனின் காதலியின் கண்ணீர் தெறித்து விழுந்த காட்சி ஒரு ‘சாவித் துவாரத்தினூடாகத்’ தெரிவதைப் போன்ற கணத்தில் அருள்குமரன் கொண்ட ஆவேசம், ஆராதனா – அருள்குமரன், பின்னர் அருள்குமரன் அபர்ணாவிடம் பொருத்திப் பார்க்க முயற்சித்த அமைதி தரும் காதல், ஷர்மினா – அவளைவிட இரண்டொரு வயது குறைந்த இளைஞனுக்கிடையில் இருந்த நந்தவனத்தில் நிற்பதைப் போன்ற உணர்வைக் கொடுத்ததாக அவளால் குறிப்பிடப்பட்ட காதல், காமத்தின் உச்சமும், அண்டத்தை உணரும் உன்மத்தமும் ஒன்றேயான உணர்வைக் காட்டிய படகுப் பயணத்தில் அருள்குமரன் அடைந்த உணர்வு (Ecstasy feeling).  

அழிவு அல்லது சாபக்கேடு என்ற சொற்கள் இவற்றைச் சுட்டுகிறது:

இயக்கக் குழுக்களின் மோதல்களும், கொலைகளும், தண்டனைகளும், தஞ்சம் அளித்தவர்களின் மேல் நிகழ்த்தப்பட்ட கொலைகள், ஒரே போலான செஞ்சோலைக் குழந்தைகளின் சாவும் கொழும்பு குண்டு வெடிப்பில் பாடசாலைக் குழந்தைகளின் சாவும்.

வர்ணனைகள் மூலம் பாத்திர அறிமுகங்கள் செய்யாமலும், தனது கருத்தைத் திணிக்காத நேரடித் தகவல்களாகவும் (Subjective) தரப்பட்ட சம்பவக் கோர்வைகள் ஆழமான வாசிப்புப் பாதிப்பை ஏற்படுத்துமாறு எழுதியது எழுத்தாளனின் பெருந் திறன். அருள்குமரனின் ஒரு குறிப்பில் தொடங்கி ‘ஏதேன் ராக்கினியின் மறுதலிப்பு’ என்ற அவனின் பூடகக் குறிப்பில் முடிப்பதிலும், ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தையும் அதன் தொடர்ச்சியான காலப்பகுதியில் சம்பந்தப்பட்டவர்களின் புலம்பெயர் தேசத்து இன்றைய வாழ்வின் நிலைப்பாட்டையும் ஒரே கதைசொல்லலில் இணைப்பதிலும், ஒரு பாத்திரத்தைப்பற்றிய கதைசொல்லலில் இன்னொரு பாத்திரத்தைச் செருகி வேறொரு கதையை அடுத்துச் சொல்வதிலும், வெவ்வேறாகச் சிதறிக் கிடக்கும் பல மனிதர்களின் அனுபவ உணர்வுகளை ஏதோ ஒரு புள்ளியில் தொடர்புபடுத்தி இணைப்பதிலும், அங்கங்களின் தலைப்புகளிலும், எழுத்தின் ஓட்டத்திலும், மறைமுக எள்ளலிலுமென அஷேராவின் அற்புதம் சொல்லி மாள முடியாதது.

“குளிர்ச் சனியனைத் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் அது நான்கு மணிக்கெல்லாம் இருட்டு என்ற நாயையும் கூட்டிக்கொண்டு வரும்போதுதான் விசர் பிடிக்கின்றது. இருட்டு ஒரு விசர் நாய்தான்…”. ‘மின்சாரக் குழல் விளக்கிலிருந்து பரவிய வெளிச்சம், அடர் வனத்தின் இருளுக்கு முன்னால் மண்டியிட்டதைப்போல எஞ்சியிருந்தது…’. ‘இடையில் விழிக்கும்போதெல்லாம் இன்னதெனத் தூலமற்றுப் படரும் இந்தத் துக்கத்தை அமலி அக்காவின் உடலை இருளுக்குள் அளையத்தொடங்கிய நாளிலிருந்து அருள்குமரனுக்குத் தெரியும்…’. ‘தன்னுடைய அம்மாவின் இருண்ட முகத்தை நினைவில் கிளர்த்தினான்…’. ‘இருள் இன்னும் ஆறு மணி நேரத்தில் அவனை வெளிச்சத்திடம் காட்டிக் கொடுத்துவிடும்…’. இருட்டு வெளிச்சத்தின் அடியாள்…’. இருட்டு – ஒளிவு!, இருட்டு – துக்கம்!, இருட்டு – மன அழுத்தம்!. ஒவ்வொரு கதை மாந்தரும் காட்சிகளாக மனக்கண்ணில் விரியும் அதே நேரம், ஏகெரி ஏரியின் இருட் படுக்கையும், தூரத்தே குளிருக்குள் மங்கலாகத் துலங்கும் ஆப்கான் மலைகளும், இருண்ட கருங்கற்களாலான பாதையின் முடிவில் மோர்கார்த்தென் குன்றில் தனித்து நிற்கும் நினைவாலமும், குளிரின் விறைப்பும் ஒரு பின்னணி போல விலகாது பயணிக்கின்றன. நிலத்தின் முகத்தையே மாற்றிவிடும் வல்லபம் கொண்டது வெயில், ஆனால் இருள் படிந்த வாழ்க்கை கொண்ட அருள்குமரன், ஒரு வெயில் நாளில்தான் தாக்கப்பட்ட அனுபவத்திற்கு உள்ளானான்.

அபர்ணா என்ற பெண்ணுடன் நான் என்னைப் பொருத்திப் பார்த்த உண்மையை இங்கு மறுக்க முடியாது. அந்த இயல்பின் ஒரு பாதி நானாக இருந்தேன். திருமதி சூமாஹர், விஷ்மர் இவர்களுடனான அனுபவத்தில், “மற்றைய செவிலியர்கள் மரணத்தைக் காலால் தாண்டுவதைப்போல கடக்கிறார்கள். என்னால் அது இயலவில்லை” என்பதில், “அந்த எண்பது வயதுக் கிழவியின் மீது ஒரு புண்ணில் சீழைப்போல எனக்குப் பொறாமை வழிந்தது” என்கிறதில் நான் என்னைக் கண்டேன். இந்தப் பகுதியை வாசித்த போது சிறிது நேரத்திற்குப் புத்தகத்தைக் கவிழ்த்து வைத்துவிட்டு விறைத்துப்போன மனத்துடன் வெறித்து நோக்கி இருந்தேன் என்பது மெய். அபர்ணா அருள்குமரனைக் காப்பாற்றி இருந்திருக்க வேண்டும் என்ற நினைப்பு கேவலாக உள்ளே எழுந்தது. அற்புதத்தின் கையைத் தன்னுடைய நெற்றியில் ஒற்றிக்கொண்டு, “மன்னித்து விடுங்கள்… மன்னித்து விடுங்கள்…” என்று அரற்றிய அருள்குமரனைப் போல, “அருள்குமரா, என்னை மன்னித்து விடு” என எனக்குள் குமுறினேன். அந்த நேரத்தில் குளிந்த ஒரு கை என் நெற்றியில் படர்ந்து ஆசீர்வதிப்பது போன்ற உணர்வைத் தர வேண்டுமென மனம் ஏங்கிற்று. காலம் ஒரு அம்மா. நல்ல மருந்து. ஆனால் அது எப்போதும் எல்லாருடைய காயத்திற்கும் மருந்தாவதில்லை. மருந்திலிருந்தே சிலவேளைகளில் புதிய காயம் உருவாகி விடுகிறது. அருள்குமரன் போன்றவர்களுக்கு அப்படித்தான் விதித்திருக்கிறது.

அஷேரா – ‘இருள்’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை அறிமுகமாக்கிற்று.

அடிப்படை விளக்கங்களின்றி வெற்றுப் பேச்சுக்கு அலைவோரும், அல்லல்பட்டோரின் வலியின் ஆழங்களின் ஆரம்பம் கூட அறியாது வெறும் ஆரவாரங்களுக்காக அவதிப்படுவோருமான எம்மவரின் ‘அரிய வகை உயிரினங்கள்’ அஷேராவை வாசித்த பிறகாவது அறிதல் அடைந்தால் நலம். அற்புதத்தின் வீட்டுக்காரக் கிழவனின் மனநிலை அனைவருக்கும் வேண்டியது.

சயந்தன் என்கிற எழுத்தின் சாதனையாளனே! உன் உணர்வுச் சிந்தனையில் ஊற்றெடுத்து, விரல்களினூடு பெருகிய எழுத்துப் பாலை முட்டப் பருகிய நிறைவிலும், கனதியிலும் தலை வணங்குகிறேன்!

By

Read More

‘அஷேராவின்’ புனைவுத் தளத்தை விரிவாக்கத் தூண்டும் வாசகப்பணி இது – அசுரா

நாவலின் ஆசிரியரின் குறிப்பு எனும் இறுதிப்பகுதியும், அதுவே இந்தப் புனைவின் ‘ஆசிரியரான’ சயந்தனின் குரலாகவும் கருதி, இப்பிரதியின் பின்னல்களை அவிழ்க்க வேண்டியதான ஒரு வாசிப்பு அனுபவத்தை என்னால் உணரமுடிகிறது. இலக்கியப் படைப்பாளிகளை, தத்துவ சிந்தனையாளர்களை, வரலாற்று ஆய்வாளர்களை ஆசிரியர்கள், ஆசான்கள், எனும் பொருள்பட அழைப்பதன் உட்பொருள் என்ன?

இவர்களும் தமது சுயமான தத்துவ சிந்தனைகளூடாகவும், சுயமான இலக்கியப் புனைவுகளூடாகவும் வெளிப்படுத்தும் சம்பவங்களை வாசகர்கள் புதிதாகத் தேடிக்கண்டடையும்போது, அவர்கள் ஆசிரியர்களாகவும், ஆசான்களாகவும் வாசக மனங்களில் உணரப்படுகிறார்கள்.

ஆயினும் நிறுவனக் கல்விப் போதகர்களாகக் கருதப்படும் ஆசிரியர்கள், ஆசான்களுக்குரிய கருத்துப் புரிதலுடன் இலக்கியப் படைப்பாசிரியர்களையும், தத்துவ சிந்தனை ஆசான்களையும் உள்வாங்கமுடியாது. துரதிருஷ்டவசமாக நிறுவனக் கல்வியினூடாகப் பெற்றுக்கொண்ட பொருள்படவே ஆசிரியர், ஆசான்கள் என்பதன் கருத்துப் பொருளை இலக்கிய, தத்துவ சிந்தனையாளர்களுக்கும் பொருத்திப்பார்க்கும் நிலையுள்ளது. கலை-இலக்கிய வாசிப்பின் ரசிகர்களாகவும், தத்துவ சித்தாந்த ஆசான்களின் மீது தமது சுயத்தை இழப்பதன் ஊடாகவும், இவ்வாறான துரதிருஷ்டம் நிகழ்ந்துவிடுகிறது.

கல்வி நிறுவனங்களால் அறிமுகமாகும் ஆசிரியர்கள், ஆசான்கள், படிப்பவர்களுக்கும் வாசகர்களுக்கும் பதிப்பெண்களை வழங்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள். அவரகளிடம் நாம் கேள்வி கேட்க முடியாது. அவர்கள் சொல்லித் தருபவைகளை நாம் திரும்ப ஒப்புவிக்க வேண்டியவர்கள். ஆனால் இலக்கிய ஆசிரியர்கள், தத்துவ ஆசான்கள் மூலமாகக் கற்றுக்கொள்வதற்கும், அவ்வாறு கற்றுக்கொண்டதற்கான மதிப்பெண்களை வழங்குபவர்கள் வாசகர்களும், விமர்சகர்களுமே. இலக்கிய ஆசிரியர்களையோ, தத்துவ ஆசான்களையோ மறுத்து கேள்வி கேட்கும் உரிமையும் வாசகர்களுக்கே உள்ளது. அதேநேரம் வாசகர்களின் மதிப்பெண் வழங்கும் முறையானது கல்வி நிறுவனப் போதகர்கள் போன்றதல்ல. வாசகர்கள் முன்வைக்கும் விமர்சனங்களைப் புரிந்துகொண்டு வாசகர்களின் விமர்சனங்களிலிருந்து படைப்பாளிகள் (ஆசிரியர்கள், ஆசான்கள்) தமக்கான மதிப்பெண்களை தாமே ‘தரவிறக்கம்’ செய்துகொள்ள வேண்டும்.

அந்தவகையில் அஷேராவின் ‘ஆசிரியரான’ சயந்தன் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும், அவரை நிற்கவைத்துக் கேள்வி கேட்டு, மதிப்பெண் வழங்கும் வாசகனாகவும் என்னை நான் உணருகின்றேன். எனது இந்தச் சிறிய அறிமுக-விமர்சனத்தை உள்வாங்கி தனக்கான மதிப்பெண்ணை தானே தேர்ந்தெடுக்கும் ‘சுதந்திரத்தையும்’ வழங்குகின்றேன்.

இலக்கியப் புனைவுப் பிரதிக்குள் புதுமை செய்வதாகக் கருதி வாசகனை புலனாய்வுப் பாணியில் அலைய வைத்ததும், அனூடாக கதைகளையும், சொற்களையும் தேடிக் கண்டுபிடித்து ஒருங்கிணைக்க வைப்பதிலும் சயந்தன் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியாரக (படைப்பாளியாக) தோன்றுகிறார்!

அருள்குமரனுடைய தடித்த நீல நிறத் தொகுப்பில் கிடைத்த தகவல்களை ஜேர்மன் மொழியில் மொழிபெயர்த்துக் கொடுத்ததான தகவல்.

அவ்வாறு தடித்த நீல நிறத்தொகுப்பில் சொல்லப்பட்ட கதைகள் எதற்கும் தலைப்புகள் எழுதாத அருள்குமரன் ‘ஏதேன் ராக்கினியின் மறுதலிப்பு’ எனும் பகுதிக்கு மட்டுமே அருள்குமரனால் தலைப்பிடப்பட்டிருக்கிறதென்பதையும் அறிய முடிகிறது.

அவைகளை, ‘முன்னரைப்போல மாற்றங்களையும் இடைச்செருகல்களையும் செய்யாமல் அதை அப்படியே இங்கே இணைத்திருக்கிறேன்’ என்கிறது ‘ஆசிரியர் குறிப்பு’. அதுவே ‘ஏதேன் ராக்கினியின் மறுதிலிப்பு’ எனும் இரண்டுபக்கத் தகவல்களாக ஊகிக்க முடிகிறது. ‘ஏதென் ராக்கினியின் மறுதலிப்பு’ எனும் இறுதிப்பகுதியூடாக வாசகன் இப்பிரதியிலிருந்து வெளியேறும்போது இப்பிரதியில் சிதறிக்கிடக்கும் கதைகளை வாசகனின் கற்பனையூடாகவும் வளர்த்தெடுக்க தூண்டுகிறதா என்பதே இப்புனைவுப் பிரதி மீதான கருசனையாகவும் கருதுகின்றேன்.

மத்தியகிழக்கு பிரதேசத்தின் தொன்மவியல் பண்பாட்டுக் கதைகளில் அஷேரா எனும் பெண்தெய்வக் கதையொன்றிருக்கிறது. அது கிறிஸ்துவுக்கு முன்பான கதையாகவும் பேசப்படுகிறது. வழமையாகவே வாய்மொழியாகத் தோன்றிய கதைகள் பண்பாட்டோடும், தலைமுறைகளோடும் மாற்றத்துக்குள்ளாகி வருவது போன்றே அஷேராவும் மாற்றத்துக்குள்ளாகி அது விவிலியத்தில் ராக்கினி மாதாவாகவும் புனையப்பட்டிருக்கலாம்.

பிரதியில் சித்தரிக்கப்பட்டிருக்கும் பெண் பாத்திரங்களான அம்மா, அமலி, ஆராதனா, அபர்ணா, ஷர்மினா, புஸ்பகலா, சூமாஹர், கனிட்டா, நிலாமதி, அவந்தி போன்ற பெண்களுக்கான சித்தரிப்புக்களோடு, இறுதிப் பகுதியான ஏதேன் ராக்கினி (அஷேரா) எனும் பெண்தெய்வத்தின் தொன்மக்கதையை பொருத்திப் பார்க்க முடிகிறதா? சுவிஸ் நாட்டுத் தொன்ம வரலாறெனும் மோர்கார்த்தென் யுத்த அறிமுகத்தோடு நுழையும் வாசகன் ‘அஷேரா’ எனும் தொன்மத்தின் பின் வாசலால் வெளியேறமுடிகிறதா?

அற்புதம் குறிப்பிடுகிறார், அருள்குமரன் குறிப்பிடுகிறார் எனும் அழுத்தங்களுக்கு அப்பால் கதைசொல்லியின் புனைவுகளும் இணைக்கப்பட்டதாக, பாத்திரங்களின் கதைகள் சொல்லப்படுகிறது.

இப்பிரதிக்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்குமான தொன்மப்-புனைவுகளோடு, உள்ளே பேசப்படும் கதைகளும் அகதி விண்ணப்பத்திற்காக எம்மவர்கள் வழங்கும் புனைவுக் கதைகளில் ஒரு பகுதிதான் என வாசகர்களை நினைவூட்டவும் செய்கிறது.

அருள்குமரனின் பால்ய பருவத்து நினைவுகளாக ஆழ்மனதில் உறங்கிக் கிடக்கும் அம்மா, அமலிஅக்காவின் பாலியல் நினைவுகள் அருள்குமரனின் மூளையில் முளைக்கும் செதில்களாக வளர்கிறது. அவ்வாறு வளரும் செதில்கள் ஆராதனாவின் நினைவுகளால் உதிரவும் செய்கிறது.

அற்புதம் எனும் பாத்திரத்தின் நினைவுகளும் வளரும் செதில்களான குறியீடாகவே கதை சொல்லப்படுகிறது. அற்புதத்திற்கு தனது கழகத்தை சேர்ந்த கனிட்டா எனும் பெண் உறுப்பினரை கற்பழித்த குற்றத்திற்காக மரண தண்டனை வழங்கப்படுகிறது. இவ்வாறான தகவல்களோடும், சுவிசில் அமந்தா எனும் பாலியல் தொழிலாளிக்குமான நினைவுகளோடும் அற்புதத்தைக் கலந்து மூடப்பட்டிருக்கிறது தகவல். வாசகர்கள் புலனாய்வுப் பாணியில் துப்புத்துலக்கியே அதற்கான புரிதலை 99ம் பக்கத்திலிருந்து 109வது பக்கம் வரையில் பொருத்திப் பார்த்து ஊகிக்க வேண்டியிருக்கிறது.

இவ்வாறு ‘புலனாய்வுச்’ சிரமங்கள் இருப்பினும், பிரதிக்குள் பேசப்படும் அவந்தி, அபர்ணா எனும் பெண் பாத்திரங்களே தமது அகச் சித்தரிப்பின் தனித்துவத்தைக் கொண்டிருக்கிறது. அருள்குமரனின் அம்மா உட்பட, அதிகமான பெண் பாத்திரங்கள் பிரதான கதாபாத்திரமான அருள்குமரானால் விபரிக்கப்படுகிறது. அருள்குமரனின் பார்வையில் முன்வைக்கப்படும் பெண்களின் பாலியல் விபரமானது ஆண்களுக்குரியது. அருள்குமரன் பெண்களின் காம உணர்வினை கேள்விக்குள்ளாக்கும் தகுதியற்றவர் என்பதை அவர் அபர்ணா எனும் பெண்ணிடம் எதிர்பார்த்த ஆவல் புலப்படுத்துகிறது.

சிங்கள தாய்க்கும், மலையக தகப்பனுக்கும் பிறந்த அவந்தி எனும் பெண்ணை சிங்களப் பெண் எனும் ஒற்றைப் பரிமாணத்தில் சித்தரிக்க முடியாது. ஆயினும் அதுதான் எமது சமூகப்பார்வை என்பதாக நினைவூட்டப்படுகிறது. அவரது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இணைவும் அனுபவமும் பிரதிக்கு வெளியிலும் வாசகர்களின் கற்பனையூடாக மேலும் வளர்த்தெடுக்க முடிந்திருக்கும்!

ஆப்கானிஸ்தான் அகதியாக வரும் நஜிபுல்லாவின் கதை, அற்புதத்தின் தனிக்கதை, அபர்ணாவின், அவந்தியின் சுய கதைகள், அருள்குமரனின் அகதி வாழ்வும், இயக்க வாழ்வும், அவரது ஆழ்மனதில் முளைத்து வளர்ந்துகொண்டிருக்கும் நினைவுச் செதில்கள், வயோதிபர் இல்லத்தில் வாழும் முதியவர்களின் மனச் சித்திரங்கள் என அற்புதமான கலவைச் சித்தரிப்பு.

இப்பனைவுப் பிரதியில் நுழையும் வரலாற்று வாசலும், சுவிஸ்நாட்டில் எம்மவர்கள் அகதித் தஞ்சம் கோரும் வாழ்க்கையோடு, பாத்திரங்களும், பிரதேசச் சூழலும் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. அதற்குரிய மொழிச் சிக்கல்களை அவிழ்க்க முடிந்தாலும் பிரதிக்கு வெளியால் வாசகன் விரிந்து பறப்பதற்கு சிரமமாகவே இருக்கிறது. பிரதிக்குள் நுழைந்து பறந்து திரியும் சுதந்திரத்தை வழங்கியபோதும் அவ்வனுபங்களோடு பிரதிக்கு வெளியால் வளர்த்தெடுக்கும் வாசக மனச்சிறகு முளைத்து பறந்து செல்லத் தடையாக இருப்பது ‘ஏதேன் ராக்கினியின் மறுதலிப்பு’.

வாசகன் பிரதியின் பாத்திரங்களின் அனுபவங்களோடு விரிந்து பறப்பதற்குத் தடையாக ‘இந்த வரலாற்று வாசல்’ மூடப்பட்டிருக்கும் உணர்வைத் தருகிறது.
அஷேரா நாவலுக்கு முன்பாக நான் வாசித்த நாவல் சோ.தர்மனின் ‘பதிமூனாவது மையவாடி’. இந்த நாவல் எனக்கு தந்த அனுபவம் நாவல் எனும் பிரதிக்கு வெளியால் என்னை சிந்திக்கவும் தேடவும், பதிமூனாவது மையவாடியை எனது கற்பனைக்கு, மேலும் வளர்த்தெடுக்கும் ஊக்கத்தையும் வழங்கியது. அப்படியான ஒரு வாய்ப்பை சயந்தனின் ‘ஆதிரையும்’ தனது செவ்வியல் சித்தரிப்புக்களால் வளர்த்தெடுக்கும் தன்மை கொண்டிருந்தது.

சொற்களால் பின்னப்பட்டிருக்கும் அஷேராவை சிரமத்துடன் வாசகனான என்னால் அவிழ்த்து பிரதிக்குள் மகிழ்வாக பறந்து திரிந்தபோதும், பிரதிக்கு வெளியால் பறப்பதற்கான எனது கற்பனைச் சிறகு முளைக்கவில்லை. அல்லது சிறகு முறிக்கப்பட்டிருக்கிறது.

By

Read More

× Close