02.12.2012 பனிகொட்டிய காலை
தூரத்தில் எங்கேயோ ஆரம்பித்து எதிர்த்திசையில் மெதுவாக நகர்ந்த இடிமுழக்கமும், இரைந்துகொண்டேயிருந்த மழைச்சத்தமும் உண்மையா அல்லது வெறுமனே பிரம்மையா என்று உள்ளுணர்வை ஆராய்ந்தபடி தூக்கத்திற்கும் விழிப்பிற்குமிடையில் கிறங்கிக் கிடந்தான் ரொக்கெற். பிரம்மைதான். இப்படியொரு சோனாவாரிப் பேய்மழை இங்கே பெய்யச் சாத்தியமில்லை.
அவன் மழையின் ஓசையை திரும்பவும் நினைவுபடுத்தினான். நரம்புகளில் சில்லிட்டது. அறையின் ஹீற்றரைச் சற்று அதிகரித்துப் பஞ்சுப்பொதி போலான போர்வையால் மூடிக்கொண்டால் கதகதப்பாயிருக்கும். எழும்பிச்செல்லத்தான்அலுப்பாயிருந்தது.
விழிப்பு வந்துவிட்டதால் இனி அலார்ம் கிணுகிணுக்கும். உடலை முறுக்கி வீசியதுபோல நேற்றிரவு கட்டிலில் விழுந்தபோது ஒருமணி. நேற்றென்றில்லை, அது தினப்படியான வழமைதான்.
நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு முடியும் வேலையொன்றை இரண்டாவது வேலையாக ரொக்கெற் செய்தான். அது மரக்கறிகளை வெட்டிப் பொதிசெய்யும் தொழிச்சாலை. பகல் வேலைநேரம் முடிந்து தொழிலாளர்கள் திரும்பிய பிறகு அவனது வேலை ஆரம்பித்தது.
தொழிற்சாலையின் இயந்திரங்களை தண்ணீரைப் பீய்ச்சியடித்து அவன் கழுவுவான். உள் சக்கரப் பற்களில் படிந்திருக்கும் மரக்கறிச் சக்கைகளை வழித்தெடுத்து பளிச் என்று துடைப்பான். “இரவில் தண்ணியடிக்கின்ற வேலைதான்”என்று பகிடிக்கு சொன்னாலும் தடித்த தண்ணீர்க் குழாய்களை இழுத்துத்திரிவதும், உடலைக் குறுக்கி இயந்திரங்களுக்குள் நுழைவதும், நின்றுகொண்டே வேலை செய்வதும் ரொக்கெற்றை வருத்தியெடுத்தன.
வேலையிடத்திலிருந்து இரண்டு நிமிட நடைதூரத்தில் பஸ் தரிப்பிடமிருந்தது. அன்றைய நாளின் கடைசி பஸ்ஸின் சாரதி தலையே போனாலும் கூட பிசகாமல் பன்னிரண்டு பத்திற்கு அதனைக் கடப்பான். ஏறிவிட்டால் பதினைந்து நிமிடங்களில் வீட்டிற்கு வந்துவிடலாம். தவறவிட்ட நாட்களில் நடந்துதான் வரவேண்டும். அம்மாதிரியான நாட்களில் ஸ்நேயும் கொட்டினால், அதைவிடுத்தொரு அரியண்டமில்லை.
மிருதுவான வெள்ளை நிறத்தேங்காய்த் துருவல்கள் காற்றில் கீழிறங்குவது போலான ஸ்நேயை அப்படியானதொரு இரவிற்தான் ரொக்கெற் முதன்முதலாக அனுபவித்தான். அதுவொரு நரக இரவு. மதியத்திலிருந்தே ஸ்நே கொட்டிக்கொண்டிருந்தது கண்ணாடிச் சாளரங்களின் வெளியே தெரிந்தது.
வேலையை முடித்து வெளியேறியபோது பஸ் போயிருந்தது. நடைபாதை முழுதும் வெண்ணிறக் களியைக் குழைத்து நிறைத்ததுபோல முழங்காலளவு ஸ்நே. வீதியின் நடுவே பனியை வழித்து ஓரமாகக் குவித்த வாகனம் உப்பைத் தூவிச்சென்றது.
கால்களைத் தூக்கி பனிக் குழையலில் பொத்துப் பொத்தென்று வைத்தபோது சப்பாத்தினுள் ஸ்நே நுழைந்து காலுறைகளை ஈரமாக்கியது. கழுத்தின் பின்புறத்தில் தூவல்கள் விழுந்து நீராகி முதுகில் இறங்கின. நக இடுக்குகளில் கூதல் ஊசியாய்க் குத்தியது. குளிரில் விறைத்திருந்த காது மடல்களை கைகளால் தேய்த்துச் சூடாக்கியபடி ரொக்கெற் நடந்தான்.
[dropshadowbox align=”left” effect=”raised” width=”350px” height=”” background_color=”#fcf8e0″ border_width=”1″ border_color=”#dddddd” rounded_corners=”false” inside_shadow=”false” outside_shadow=”false” ]வெளிச்சம் பரவிக்கொண்டிருந்தது. கண்களை மூடியபோது கைகளை மெத்தையின் வெளியே நீட்டியபடி காக்கா நிமிர்ந்துகிடந்தான். கைகளிலிருந்து இரத்தம் ஒவ்வொரு துளியாக தரையில் சொட்டியது. காக்காவின் திறந்துகிடந்த உறைந்த கண்களின் பார்வைக் கோணத்தில் சுவரில் எம் 16 ரகத் துப்பாக்கியோடு சீருடையில் பிரபாகரனின் சிறிய படமொன்று கொழுவியிருந்தது. கத்தையான மீசை. இரண்டு சயனைட் கயிறுகள், இடது பொக்கற்றில் செருகப்பட்டிருந்தன. இடுப்பில் பிஸ்டல் துப்பாக்கி…[/dropshadowbox]ஸ்நே மழையைப் போலில்லை. மழையில் ஆசை தீர நனைந்து அலைந்த காலமொன்றிருந்தது. மழை ஒரு நண்பனைப்போலவே கூடப் பயணித்தது. திடீரென்று ஒரு நாளில் கொழும்பில் அது காணாமற் போயிற்று. கருமையைப் போர்த்தியிருந்த வானம் பொத்துக்கொண்டு பொழிந்த நாட்களில் கடலில் சளக் சளக் என்று தோளில் மோதி மடிந்து விழும் அலை நீரில் நின்றபடி நனைந்த நாட்களை நினைத்தால் சிலிர்க்கிறது.
ஸ்நே அப்படி இல்லை. அது ஒருபோதும் உற்சாகம் தருவதில்லை. வின்ரர் காலங்களில் மூஞ்சை விடியாத நிலத்தைப்போல சோபையிழந்து கிடக்கின்றது. தடித்த கம்பளி ஆடைகள் இரும்பைப்போல கனக்கின்றன. அவற்றிற்கு உள்ளே எப்பொழுதும் உடல் அழுந்தி நசுங்குகிறது. ஸ்நேயை ரசிக்க முடியவில்லை. தூஷணத்தால் திட்டவேண்டும்போலிருக்கிறது.
கைத்தொலைபேசி கிணுகிணுத்து ஓய்ந்தது. பிறகு மறுபடியுமொருதடவை ஆரம்பித்தது. ஏதேதோ எண்ணங்கள் குறுக்குமறுக்குமாக ஓட உதட்டு விளம்பில் சிரிப்போடு கிடந்தவன் சுதாகரித்தான். தலைமாட்டில் கைகளால் தடவித் தூக்கினான். வெளிர்பச்சைப் பின்னணியில் திரையில் அருணன் என்ற பெயருக்கு மேலே 5.57 A.M என்று ஒளிர்ந்தது. இன்னொரு முப்பத்து மூன்று நிமிடங்கள் இருக்கின்றன. உடலைச் சோர்வாக்கி அழைப்பை ஏற்றான்.
“சொல்லு அருண்”
“அண்ணன், காக்கா செத்துப்போய் விட்டான்.”
ரொக்கெற் போர்வையை உதறித்தள்ளி எழுந்தான். சாரம் இடுப்பில் வழிந்தது. தோளை உயர்த்தி காதோடு தொலைபேசியை அழுத்தியபடி சாரத்தை இறுக்கி முடிந்தான். “என்ன.. ஏன்..”
“அவன் நரம்பை அறுத்துச் செத்துக்கிடக்கின்றான். அறை முழுவதும் இரத்தமாயிருக்கிறது. யாரிடம் சொல்வதென்றும் தெரியாமல் எப்படிச் சொல்வதென்றும் தெரியாமல் இப்பொழுதுதான் தீபன் தெருவுக்கு ஓடிப்போய் இரண்டு சுவிஸ்காரர்களைக் கூட்டிவந்திருக்கிறான். அவர்கள் மூக்கைப் பொத்தி நின்று பார்த்துவிட்டு பொலிசுக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் ஒருமுறை வரமுடியுமா”
“நீ வை. நான் வருகிறேன்.” ரொக்கெற் குளியலறையை நோக்கி ஓடினான். வெறுமனே வாயைக் கொப்பளித்து சுடுநீரால் முகத்தைத் துடைத்துவிட்டு வந்தான். ஒரு பதட்டம் நுழைந்து ஆர்முடுகிக்கொண்டிருந்தது. எட்டுமணிக்கு வேலை.
ஊத்தை உடுப்புக்களைப் போடுகிற வாளியின் அடியில் கையை நுழைத்துத் துழாவி ஜீன்ஸ் ஒன்றைக் கண்டடைந்தான். மூக்கில் பொச்சுமட்டைத் தும்பொன்றை நுழைத்துச் சுழற்றுவதுபோல கூசியது. மூக்கைச் சுருக்கி தும்மத் தொடங்கினான்.
மூக்குத்துடைக்கும் ரிசுப்பேப்பர் பைக்கற் ஒன்றை புதிதாக எடுத்து பொக்கற்றில் சொருகினான். அறை முழுவதும் ரிசுக்கள்தான் வீசப்பட்டிருந்தன. சுற்றி நோக்கினான். ஒற்றைக் கட்டிலின் மெத்தை நடுவில் பள்ளமாயிருந்தது. தரையில் இரண்டு புறத்தும் மூக்குச்சிந்திய கசங்கிய ரிசுக்கள் கிடந்தன. முந்தநாள், ஓர் அதிகாலைக் கனவின் விழிப்பின் பிறகான இயக்கத்தில் – குளியலறைக்குப் போகிற பஞ்சியில் துடைத்தெறிந்த ரிசுப்பேப்பரும் இங்கெங்கோதான். “ச்சிக்.” என்றான் ரொக்கெற்.
தூசு அப்பிய குகையொன்றினுள் நிற்பதான உணர்வு அவனைப்பற்றியது. இந்த அலுமாரியும் கட்டிலும் இல்லாவிட்டால் வெலிக்கடைச் சிறையின் இருள் சுவர்களுக்கு நடுவிலான வெளியைப்போன்றதுதான் இதுவும்.
பஸ்ஸில் ஏறி அமர்ந்தபோது சனங்களில்லை. ஓட்டுனருக்குப் பின்னிருந்த இருக்கையொன்றில் அமர்ந்தான். “காக்கா கொஞ்சம் நிதானமாக யோசித்திருக்கலாம்.” என்று தோன்றியது.
அவனைப்பொறுத்தவரை மரணமென்பது சந்திப்புக்களினதும் சம்பவங்களினதும் தொடர்ச்சியில் விழுமொரு நிரந்தரத் திரை. அல்லது மனிதர்களோடான ஊடாட்ட இழைகளில் ஒன்று அறுந்துபோவது. அவனுக்கு அதுவொரு மரத்த உணர்வு. நினைவுகள் தேங்கியிருக்கும், ஆனால் அழுதுபுரள்வதில்லை. இன்றுவரை அவனுக்குப் பலரைச் சந்திக்க முடியாமற்போயிருந்தது. அதிகமதிகம் நண்பர்களை.
கடைசியாக யாருடைய மரணத்தில் அழுதேன் என்று காலத்தின் உள்நுழைந்து நினைவுகளைத் தேடினான். ரொக்கெற்றின் தகப்பன் செத்துப்போனபோது, அவனுக்கு ஐந்து வயது. எதுவும் நினைவில்லை. ஆனால் அப்பொழுதும் அவன் அழவில்லை என்றும் ஓரமாக ஒதுங்கியிருந்தான் என்றும் பின்னாட்களில் அம்மா ஒப்பாரியில் சொன்னாள். அவள் தனித்திருக்கிற வேளைகளில் பிசிறலாக கசியும் மெல்லிய அழுகை சீரான சந்தத்தோடு ஒப்பாரியாக உச்சக் குரலைத்தொடும்.
“தென்னை மரத்தின் கீழிருத்தி ராசாவைத் தெருவே அழுதநேரம், உன்னைப் பெத்த ராசனுக்காய் நீ ஒரு சொட்டும் கண்ணீரும் அழவில்லையே..”
29.11.1988 மழை நாட்கள்
நினைவுதெரிந்த நாட்களில் தோழமையொன்றின் முதல் மரணம் ரொக்கெற்றின் இருபதாவது வயதில் நடந்தது. அவனது பெயர் அம்மப்பா. பெயரில்தான் வயதேறியிருந்தது. நேரில் மெல்லிய இளைஞன். நினைவில் முகம் தோன்றுவதற்கு முன்பாக முந்திக்கொண்டு தெரிகிற கத்தை மீசை அவனுக்கிருந்தது. ரொக்கெற்றை விடவும் மிகச்சரியாக ஏழு மாதங்கள் மூத்திருந்தான்.
அது இரண்டு துப்பாக்கிகளையும், நான்கு கிரேனைட்டுக்களையும் சுமந்து ஊர் ஊராக அலைந்தும் மறைந்தும் திரிந்த நாட்கள். அம்மப்பா ரொக்கெற்றின் இன்னொரு கையாகவே திரிந்தான். மூசுகிற கடல் அலையைப்போல இதயம் பொங்கிவழிந்த அமைதியற்ற நாட்கள் அவை. அடுத்த நிமிடம் நிச்சயமாயிருக்கவில்லை. பசிக் களையில் சோற்றில் கை வைத்த கணத்தில் சுற்றி வளைத்துத் துரத்தினார்கள். தெருவின் முகப்பில் புதிதாக முளைத்த சோதனைக் கூண்டிலிருந்து முகத்தைத் துணியால் சுற்றி மறைத்த ஒருவன் தலையை மேலும் கீழுமாக ஆட்டி காட்டிக்கொடுத்தான். அவர்கள் ஒரு பொழுதேனும் கண்மூடித் தூங்க முடியாமல் ஒரு வெறிநாயைப்போல இரவுகளை விழுங்கிக்கொண்டிருந்தார்கள். கெடுபிடி நாட்களில் ஏதோ ஒரு வயலோரக் குடிசையில் பசிக்கின்ற வயிற்றோடு யாரேனும் ஒருபிடி சோறு கொண்டுவந்து தரமாட்டார்களா என ஏங்கிக்கிடந்தார்கள்.
ரொக்கெற்றின் வெட்க சுபாவம் இயக்கத்தில் பிரசித்தம். உதவி கேட்டுத் தானாக யாரையும் அணுகமாட்டான். அம்மப்பா அப்படியே நேர்மாறு. திடீரென்று சைக்கிளை நிறுத்தி அகப்பட்ட வீடொன்றுக்குள் நுழைந்துவிடுவான். வெளியேறும்போது அவனிடம் இரண்டு பதில்கள் இருக்கும்.
“வயது வந்த பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆமிக்குத் தெரிந்தால் ஆபத்து. அதனால் இன்றும் இனிமேலும் இங்கு வரவேண்டாமென்றார்கள்”
“வந்து சாப்பிட்டுவிட்டுப் போகச் சொல்கிறார்கள்”
அவை இரண்டினது தொனிகளும் ஒரே மாதிரியிருக்கும்.
“வரச்சொன்னார்கள் என்பதற்காக எவரென்று தெரியாமல் உள்ளட முடியுமா. என்றாவது ஒரு நாளைக்கு கொழுவும். ஒட்டுமொத்தமாக எங்களைப் போடுவார்கள்.”
“அவர்கள் எங்களுடைய மக்கள்” என்று மட்டும் அம்மப்பா சொல்வான்.