சுகன்

நஞ்சுண்ட காடு ,விடமேறியகனவு,ஆறாவடு,ஆதிரை போன்ற நாவல்கள் தமிழகத்தில் மற்றும் புகலிடத்தில் கவனம் பெறுதலும் கவனம் கோரலுக்கான முன்மொழிவிற்குமான பின்னணி என்ன ?

யுத்தத்தின் இறுதி நாட்கள் வரை யுத்தத்தின் மானசீகமான ஆதரவுத்தளமாக அதன் ஆதாரமாக அதன் இயக்குதளமாக இருந்த தமிழக – புகலிட ஈடுபாட்டாளர்கள்,யுத்தத்தின் அவலமுடிவை சீரணிக்கமுடியாமல் தலை கவிழ்ந்தார்கள், எதிர்கொள்ளமுடியாமல் முகம் திருப்பினார்கள் ,அவர்களுக்கு தப்பித்தல் ஒன்று தேவைப்பட்டது,மாற்று வடிகால் ஒன்று தேவைப்பட்டது ,சர்வதேச விசாரணை -இனப்படுகொலை -கூண்டிலேற்றுதல் போன்ற பங்குச் சந்தை – ஊக வாணிப கோரிக்கைகள் ஏமாற்றமளிப்பதாகவும் அதை வலியுறுத்துவதற்கான வலுவான தமிழ் அரசியல் தரப்பு இன்மையாலும் அந்தப் போர் ஆதரவு உளவியலுக்கு ஒரு மாற்றுப் பதிலீடு,ஒரு ஆற்றுப்படுத்தல் -காடாத்துதல் தேவைப்பட்டபோது இந்த நாவல் வகைமாதிரிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன,
இந்த வகை மாதிரிகளின் முக்கிய பண்பாக தார்மீகமாக எழுந்த எதிர் விமர்சனங்களை-எதிர் நிகழ்வுகளை எப்படித் தவிர்த்து கதையைக் கட்டமைத்தல் என்பதிலேயே கவனமாக இருக்கிறது,

யோ .கர்ணன் – ஷோபாசக்தி வகை இலக்கியப் படைப்புகள் தவிர்க்கப்படும் உளவியலையும் குணா .கவியழகன் -சயந்தன் வகை படைப்புகள் முன்மொழியப்படுவதுமான பொது உளவியலும் இதுவே,

படைப்பு மனநிலை என்பது சுய விசாரணை ,தன் அறிதலுக்கு மாறு செய்யாத ஒப்புதல்.
அது சொரிந்துகொடுத்தல்- ஒத்தடம் கொடுத்தல் அல்ல. வள்ளுவரில் சொல்வதெனில் தன் நெஞ்சு நாணுதல்.

ஆதிரை நாவல் தொடக்கத்தில் இந்த உளவியல் இப்படித்தான் தொடங்குகிறது..
விஜேரத்தின என்ற பேத்தையன் சித்திரவதை செய்பவனாகவும் நிலாம்தீன் அவனுக்கு துணை நிற்பவனாகவும் நாவல் தொடக்கம் அமைகிறது
0 0 0

ஓங்கிய இரண்டு பனைமரங்கள் ,அதன் பின்னணியில் தாக்குதலுக்காகக் காத்திருக்கும் கையில் துப்பாக்கி ஏந்திய, வெற்றி நிச்சயம் ,ஓயாத அலைகள், சுதந்திரப்பறவைகள் என்ற பகுதி பகுதியான கட்டமைப்புகளோடு தலைவரின் இரண்டு பொன்மொழிகள் மட்டுமே துணைகொண்டு நம்காலத்து நாயகன், நிரபராதி, சோமையா ராசேந்திரன் என்ற சிங்கமலை லெட்சுமணன் என்ற தமிழன் கிளாசிக் அட்டையில் முன்னிற்கிறான்(ள்); முன்னிறுத்தப்படுகிறான்(ள்); மின்னல் அடிக்குதுசார்!

உபாலி கேட்கிறான், “மச்சான் ! நீ புலிதானே ! அப்படியானால் உனக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும் ,மறைக்காமல் சொல்லு ! சந்தையில் புதிதாக என்ன ஆயுதம் வந்திருக்கிறது ?”

“உனக்கு துப்பாக்கிகளைக் கையாளத் தெரியுமல்லவா…. நீ என்னோடு சேர்ந்துவிடு ”
என்ன கொடுமை சார் ! சிங்களவனும் முஸ்லிமும் சேர்ந்து தமிழனை என்னமாய்க் கொடுமைப்படுத்தி சித்திரவதைப் படுத்துறாங்க சார் ! கிளாசிக் !
0 0 0

தமிழ் உணர்வுக் கவிஞர்களும் அடையாள நெருக்கடி – அவதிக்குள்ளாகும் அடிப்படைவாத எழுத்தாளர்களும் ஒரு சுகமான ஆறுதலாக, ஆசுவாசமாக தமது உணர்வுகளை கதைகளின் பாத்திரங்கள்மேல் ஏற்றிச் சொல்வது ஒரு நல்ல தந்திரோபாயமாக கொள்ளப்படுகிறது , இந்த “ஏவிவிடுவதற்கு “இலக்கிய மதிப்பு இருப்பதில்லை .ஆனால் அதற்கு கவர்ச்சிகரமான உடனடி கவனஈர்ப்பு இருக்கவே செய்கிறது, இந்த அவ்வப்போதைய உணர்ச்சிகளில் குளிர்காயும் அந்த உணர்ச்சிகளில் ஆதாயம்தேடும் எழுத்து பின்னர் அந்த அலை ஓய்ந்தபின் இலக்கிய அந்தஸ்து பெறுவதில்லை. நந்தசிறிகளும் சுமக்கமுடியாமல் தொட்டிலைச் சுமந்துபோன பொடிமெனிக்கே களும் லங்காராணி களும் இங்கு அப்படித்தான் காட்சிப்படுத்தப்படுகிறார்கள்.

“நாலுபக்கமும் சிங்களவங்க கிட்ட அடிவாங்கிக்கிட்டு கிடக்கிறதைவிட இந்தத் தமிழ்ச் சனங்ககூட வாழ்ந்திட்டுப் போயிடலாம் ” என இளைஞர்கள் சிலர் அபிப்பிராயப்பட்டனர் என நாவல் ஒரு சரடை அவிழ்த்துவிடுகிறது,

ஆனால் அதேநேரம் அவனுக்கு கடைக்காரச் செட்டியார்களும் கங்காணிகளும் தங்களைத் தொடுவதில்லை,வீட்டுக்குள் விடுவதில்லை என்ற தீட்டுக் கொடுமையிலிருந்து தப்பிச்சிரலாம் என்று சிங்கமலை நினைக்கிறான் …

மலையகத்தில் சாதி ஒதுக்குதல்கள் அல்லது சாதி முரண்கள் ஒரு பிரதான, குறிப்பிட்ட பிரச்சனையாக இல்லை, தீட்டு என்கிற தீண்டாமை முரண் அங்கு ஒரு தாக்கமாக இல்லை, எவ்வளவுதான் அதை அங்கு ஒரு ஆய்வு நிமித்தமாகவேனும் தேடினாலும் அதற்கு வலு இருப்பதில்லை,

“மலையக தொழிற்சங்கங்களில் சாதியம்” என தன்னிடம் பயின்ற ஆய்வு மாணவர் ஒருவருக்கு பேராசிரியர் சிவத்தம்பி ஆய்வு செய்வதற்காகப் பரிந்துரைத்தபோதிலும் அம்மாணவரால் அதை அங்கு செய்யமுடியவில்லை அம்மாணவர் அவ்வாய்வைக் கைவிட்ட சேதி ஒன்றுள்ளது, பின்னர் அப்படியான ஆய்வு ஒன்று வந்ததா தெரியவில்லை.

ஆனால் சிங்கமலைக்கு துரைத்தனம் என்பது சாதிய தீட்டாகவும் கண்காணித் துரைத்தனமாகவும் முடிந்ததில் டேவிற் ஐயாவின் காட்டுப்புலத்தில் குடியேற நேர்ந்துவிடுகிறது ,குடியேற நேர்ந்த பிற சம காரணிகள் எவையென தேடினால் நான்குபக்கமும் கடலால் சூழப்பட்ட சிங்களவர்கள்..

0 0 0

வெறுப்பு- துவேச அரசியலிலும் இனத்துவ அடிப்படை மனநிலைகளிலும் சுகமும் ஆறுதலும் கொள்ளும் எழுத்துகள் அவ்வளவு நாகரீகத்திற்குரிய மனித மாண்புகளுக்குரிய உன்னதமான -மேன்மையான -தகுதியான அடையாளத்தை பெற்றுக்கொள்வதில்லை ,காசிஆனந்தனுக்கும் சேரனுக்கும் புதுவை ரத்தினதுரைக்கும் இங்கு அதுதான் நிகழ்ந்தது, இலக்கிய உத்திமுறைகளை ,சொல்லும் முறையில் பரீட்சார்த்தங்களை மொழியின் எல்லையற்ற சாத்தியங்களை பயன்படுத்தி மானுடம் போற்றும் தனித்துவமான போற்றத்தக்க படைப்பாளிகளாக மிளிர்வதற்குப் பதில் “மண்டைக்குள் என்ன அரசியல் இருக்கிறதோ அதுதான் எழுத்திலும் வரும் ” என வெளியே வரும் வேகத்திலேயே அங்கீகாரங்களுக்காக பரிதாபமாக யாசித்துக் காத்துக்கிடக்கின்றன , பெருந்தன்மையான ஒரு சின்னப்பாராட்டில் பெருமிதம் கொண்டுவிடுகின்றனஅவ்வெழுத்துக்கள் .

காலத்தைக் குலைத்துப்போட்டு கதை நுட்பத்தை ஆழமாக்குவதற்குப்பதிலாக நாவலில் முதல் பாகம் 1991 இற்கும் அடுத்த அத்தியாயம் 1983 இற்கும் அடிப்படையில் அது கையாளும் வெறுப்பு மனநிலையில் எந்த மாற்றமுமில்லை ,குலைப்புமில்லை ,கவிழ்ப்புமில்லை . முதல் பக்கத்தில் என்ன சொல்ல விழைந்ததோ பண்ணிப்பண்ணி தவளைப்பாச்சலில் அதனது 104 வது பக்கத்திலும் அதைத்தான் பேச வந்துவிடுகிறது .மண்டைக்குள் என்ன அரசியல் இருக்கிறதோ …அதுதான்.

//ரோந்துகளுக்குப் புறப்படும் ஆமிக்காரர்கள் இப்போதெல்லாம் தெருக்களில் இரத்தம் காணாமல் திரும்புவதேயில்லை ,கண்டபாட்டிற்குச் சுட்டுப் பழிதீர்த்தார்கள், தமிழ்ப் போராளிகளுடைய எழுச்சி கிளைத்துப் பரவத் தொடங்கியிருந்தது ,யாழ்ப்பாணத்தின் போலிஸ் நிலையங்கள் முற்றுகையிடப்பட்டிருந்தன ,சிப்பாய்கள் வழிமறித்துத் தாக்கப்பட்டார்கள் //

78 ஆம் பக்கத்தில்// சிங்களச் சனத்தின்ரை கோபத்தைப் புரிந்துகொள்ளிறன் என்று ஜெயவர்த்தனா சொல்லிறார் , ….அத்தார் பிறகு தீர்க்கமாகச் சொன்னான் ,தமிழ்ச் சனத்தின்ரை கோபத்தைப் புரிந்துகொள்ளிற காலம் ஒண்டு வரும் சிங்கமலை //
2015 இல் எவ்வளவு தீர்க்கதரிசனமான வார்த்தைகள் ,கூல்….கூல் ..

(தொடரும்)

சுகனின் பிந்திய குறிப்பு:

“ஒருபேப்பர்” என்ற கீழ்த்தரமான அவதூறுப் பத்திரிகையில் அ.ரவியுடன் ஆசிரியர்குழுவில் இருந்தவர் சயந்தன் என்று அ .ரவியின் முகநூல் தகவல் சொல்கிறது ,இது எனக்குத் தெரியாது ,முன்னர் தெரிந்திருந்தால் நான் ஆதிரையை விமர்சனத்திற்கு எடுத்திருக்கமாட்டேன் ,விமர்சனத்திற்குத் தகுதியான அல்லது நிராகரிப்பிற்குத் தகுதியான புனைவுகள் பல இருக்கின்றன , பொய்யையும் அயோக்கியத்தனத்தையும் அடிப்படையாகக்கொண்ட அந்தப்பத்திரிகையால் மன உழைச்சல்களுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளானவர்கள் ,பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் ,தற்சமயம் அதுகுறித்த விமர்சனத்தைப் பாதியிலேயே நிறுத்தவேண்டியிருக்கிறது.

By

Read More

மீரா பாரதி

ஈழவிடுதலைப் போராட்டத்தில் இறுதிவரை பெரும் பங்காற்றியவர்களும் அதிகமாக (கட்டாயமாகப்) பலியாக்கப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் வடக்கு கிழக்கில் சாதியாலும் வர்க்க நிலைகளாலும் ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்ட மக்களே. இவர்களுடன் மலையகத்திலிருந்து இடம் பெயர்ந்து அகதிகளாக வன்னிப்பிரதேசங்களில் வாழ்ந்த மலையக மக்களும் பாதிப்புக்குள்ளானார்கள். ஒரு புறம் தமிழ் சமூகங்களுக்குள் இருக்கின்ற சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் வர்க்க சுரண்டல்கள். மறுபுறம் தமிழ் சமூகங்கள் மீதான சிறிலங்கா அரசின் இன ஒடுக்குமுறை. இவற்றுக்கெல்லாம் முகங்கொடுத்த இந்த மக்கள் 1958ம் ஆண்டுகளிலிருந்து நடைபெற்ற தமிழ் மக்கள் மீதான ஒவ்வொரு தாக்குதல்களின்போதும் (இவை இனக்கலவரம் அல்ல) உள்நாட்டில் பல இடங்களுக்கு தொடர்ச்சியாக இடம்பெயர்ந்தார்கள். சாதியாலும் வர்க்கத்தாலும் மேல் நிலையில் வாழ்பவர்களைப்போல இவர்களால் புலம் பெயர்ந்து பக்கத்து நாடான இந்தியாவிற்கு கூட போக முடியாது, அதற்கான வசதிகளும் வாய்ப்புகளும் இல்லாதவர்கள். இவர்களின் வாழ்க்கை பொதுவான வரலாறுகளில் மட்டுமல்ல இலக்கியங்களிலும் முக்கியப்படுத்தப்படுவதோ கவனத்தில் கொள்ளப்படுவதோ இல்லை. ஏனெனில் இவர்கள் எல்லாவகையிலும் கீழ் நிலையில் வாழ்கின்ற முக்கியத்துவமற்ற மனிதர்கள். ஆனால் போரில் முன்னிலை அரங்குகளுக்கு மட்டும் முக்கியமானவர்கள். ஆகவேதான் அவர்களின் கஸ்டங்கள் வெளியே தெரிவதுமில்லை. அதைப்பற்றி யாருக்கும் அக்கறையுமில்லை. ஆனால் சயந்தன் அவர்கள் ஒரு படைப்பாளியாக அதை உணர்ந்து பொறுப்புடன் இவ்வாறான மனிதர்களைப் பிரதான பாத்திரங்களாகக் கொண்டு அவர்களின் பார்வையில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை ஆதிரை என்ற ஒரு படைப்பாகப் புனைந்துள்ளார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார் எனக் குறிப்பிட்டால் தவறில்லை. இவ்வாறான படைப்புகள் மூலம்தான் இந்த மனிதர்கள் வரலாற்றில் நினைவு கொள்ளப்படுகின்றனர் என்றால் மிகையில்லை.

இவ்வாறான நாவல்களை வாசிக்கும் பொழுது படைப்பாளர் மீது இருக்கும் மதிப்புக்கும் தமது அரசியலுக்கும் ஏற்ப ஒவ்வொருவரும் அதனுடன் ஒன்றித்தோ அல்லது தள்ளி நின்று எச்சரிக்கையுடனோ வாசிக்கலாம். இவ்வாறு வாசிப்பது படைப்பை ஒரேடியாக புகழவும் அல்லது இகழவும் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம். இதற்குமாறாக ஒரு படைப்பை படைப்பாக வாசிக்கும் பொழுதுதான் அதனுடன் ஒன்றிக்க முடியும். அனுபவிக்க முடியும். அதனுடன் வாழ முடியும். பல்வேறு உணர்வுகள் உணர்ச்சிகளுடன் நாமும் பயணிக்க முடியும். அவ்வாறு அனுபவித்து வாழ்ந்து முடித்த பின்னர்தான் புறவயமாக நின்று அதை விமர்சிப்பது ஆரோக்கியமாக இருக்கும். அல்லது கருப்பு வெள்ளையாகப் பார்க்கும் மனநிலையையே ஏற்படுத்தும். ஆகவே படைப்பு மற்றும் படைப்பாளர் தொடர்பான எல்லாவகையான முற்கற்பிதங்களையும் ஒரு கணம் ஒதுக்கிவைத்துவிட்டு இந்த நாவலை வாசித்தேன். இவ்வாறு வாசித்தபொழுதுகளில் அதனுடன் நானும் வாழ்ந்தேன் என்றால் பொய்யல்ல. அவர்கள் சிரிக்கும் பொழுது நானும் சிரித்து, காதலிக்கும் பொழுது நானும் காதலித்து, காமத்தை வெளிப்படுத்தியபோது அதை நானும் உணர்ந்து, இரகசியமாக எனக்குள் அனுபவித்து, அநியாயம் நடைபெறும் பொழுது நானும் கோபப்பட்டு, துயரும் இழப்புகளும் ஏற்படும் பொழுது நானும் அழுதேன் என்பதே உண்மை.

வர்க்க சாதிய ஒடுக்குமுறைகள், போர், விடுதலைப் போராட்டம் என்பவை மட்டுமல்ல இயற்கையும் மனிதர்களைப் படுத்தும் பாடுகளையும், போர் முடிவுற்றதன் பின் ஒவ்வொருவரும் தமது வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், நடைபெறும் மாற்றங்களையும் தனது ஆதிரை நாவலில் வெளிக் கொண்டுவருகின்றார் படைப்பாளர். இந்தப் படைப்பில் நடமாடும் மனிதர்களின் வாழ்வு என்பது நாள் முழுவதும் (அன்று) உழைத்து அன்றே உண்பதற்கானது மட்டுமே. ஆனால் அதிலும் மிச்சம் பிடித்து தமக்கான ஒரு வாழ்விடத்தை சிறு கொட்டிலை அழகாக அமைத்துவிடுவார்கள். இவ்வாறு வன்னியின் காடுகளுக்குள் டேவிட் ஐயா மற்றும் டாக்டர் ராஜசுந்தரம் அவர்களின் முன்னெடுப்புகளால் உருவாக்கப்பட்ட குடியேற்ற திட்டங்களும் அதைச் சூழவுள்ள கிராமங்களும் போருடனும் போராட்டத்துடனும் எவ்வாறு மாற்றம் பெறுகின்றன என்பதை விபரிக்கின்றார். இந்த மாற்றங்களுக்குள் அகப்பட்ட மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களும் ஏற்கனவே வன்னியில் வறுமையில் வாழும் குடும்பங்களும் எதிர்கொள்ளும் கஸ்டங்கள் ,வலிகள், இழப்புகள் மிகவும் துன்பமானவை. இவை வாசிப்பவர்களிடம் பல்வேறு உணர்வுகளையும் சிந்தனைகளையும் தூண்டலாம்.

இந்த நாவலில் காமமும் காதலும் மிக இயல்பாக உயிர்வாழ்கின்றன. எந்தவிதமான பூச்சுக்களும் பூசாது சமூக வாழ்வின் நிழற் கண்ணாடிகளாக வெளிப்படுகின்றன. சமூகங்கள் புறப்பார்வைக்கு மட்டும் முன்வைக்கும் இலட்சிய பாத்திரங்கள் அக சமூகத்திற்குள் வாழ்வதில்லை. மனிதர்கள் போலி வாழ்வு வாழ விரும்புவதில்லை. ஆனால் சமூகம் அவர்களை போலியாகவே வாழ நிர்ப்பந்திக்கின்றது. இதற்கிடையிலான போராட்டமே மனிதர்களின் இன்னுமொரு வாழ்வாகின்றது. லட்சுமணனன் என்ற சிறுவன் பெண் உடல் மீது கொள்கின்ற மோகம், வெள்ளையக்கா, ராணி, சின்ராசு, மணிவண்ணன், சாரங்கன், நாமகள், அத்தார், சந்திரா, சங்கிலி, மீனாட்சி என ஒவ்வொருவர்களுடைய காதலும் காமமும் மிக யதார்த்தமாக வெளிப்படுகின்றன. இவர்களின் வாழ்வை ,காதலை ,காமத்தை எந்தவிதமான விரசமும் இல்லாமல் அழகாகவும் உணர்வுபூர்வமாக படைத்திருக்கின்கிறார். இதை வாசித்தபோது எனது வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்தில் இடம்பெற்ற இவ்வாறான சம்பவங்களுடனும் அதனால் ஏற்பட்ட அனுபவங்களுடன் ஒன்றித்துப் பயணிப்பதாக உணர்ந்தேன். என்னை மீளவும் அந்தக் காலத்தில் வாழ்ச் செய்தது. இன்றும் அந்த ஏக்கங்கள் என் ஆழ்மனதில் துயில்கொள்கின்றன என்பதை அறிந்து கொண்டேன். இதுதான் நமது அக சமூகம். புற சமூகம் என்பது நாம் நல்லவர்களாக போடுகின்ற வேடங்கள் மட்டுமே.

இப் படைப்பின் ஒவ்வொரு பாத்திரங்களும் என்னுடன் வாழ்ந்தன. அவர்கள் அவர்களாக மட்டும் வாழவில்லை. எனது வாழ்வில் கடந்து சென்றவர்களாகவும் வாழ்ந்தார்கள். அவ்வாறான ஒருவர்தான் ஆச்சிமுத்து. இவரது நடை, உடை, பேச்சு, மற்றும் மனிதர்கள் மீதான அக்கறையும் அன்பு என அனைத்தும் எனது அப்பாச்சியையும் இறுதிப்போரின்போது வன்னியில் உயிரிழந்த இன்னுமொரு அப்பாச்சியையும் நினைவூட்டின. அதேநேரம் மனிதர்களை சந்தேகிக்கின்ற, ஒதுக்கிவைக்கின்ற இராசமணி போன்ற யாழ் உயர்சாதி அதிகாரவர்க்க பெண்கள் பலரையும் பார்த்திருக்கின்றேன். எனது வாழ்விலும் ஒரு ஆரம்பகால வெள்ளையக்கா (மலரக்கா) இருக்கின்றார். பல சாரங்கன்களை கண்டிருக்கின்றேன். மேலும் சரணடையும் போராளிகளின் ஏக்கங்களும் நம்பிக்கைகளும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களும் நமக்குள் குற்றவுணர்வை உருவாக்குகின்றார்கள். கைது செய்யப்பட்டு பேரூந்தில் கைவிலங்கிடப்பட்டு வெளிவந்த படங்களில் இருந்த போராளிகள் ஒவ்வொருவரும் சரணடைந்த போராளி விநோதினியாக என் மனதில் வந்தார்கள். புனர்வாழ்வின்(?) பின்பு ஊருக்கு திரும்பும் வெள்ளையன் பாத்திரம் தனது வாழ்வை மீளக் கட்டமைக்க எதிர்நோக்கும் சவால்கள் பல. இது இன்றைய வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முக்கியமானதொரு பிரச்சனை. இவையெல்லாம் ஒரு புனைவாக இருப்பினும் இவர்கள் எல்லாம் கற்பனை பாத்திரங்களல்ல. நிஜ வாழ்வில் நமக்கிடையில் வாழும் மனிதர்கள், நண்பர்கள், உறவுகள் எனலாம். இப்பாத்திரங்களின் உறவுச்சங்கிலியை ஆரம்பத்தில் தந்திருந்தமை பயனுள்ளதாக இருந்தது. மேலும் சிலவற்றை தந்திருக்கலாம் எனத் தோன்றியது.

ஆதிரை நாவலின் ஒவ்வொரு வசனங்களையும் ஒவ்வொரு பக்கங்களையும் அத்தியாயங்களையும் பகுதிகளையும் வாசித்து முடிக்கும் பொழுது பல்வேறு உணர்வலைகளையும் உருவாக்குகின்றன. குறிப்பாக சில அத்தியாயங்களை முடிக்கும் பொழுது எழுதப்படும் இறுதி வசனங்கள் வாசகர்களையே படைப்பாளர்களாக்குகின்றது எனலாம். கவிஞர்கள் இவற்றைக் கவிதைகள் என்பார்கள். ஒரு வாசகராக நான் அதை வாசித்தபின் எனது கற்பனைகள் சிறகடித்துப் பறந்தன. உதாணரமாக, “நாங்களென்ன மனிசரை மனிசர் சுட்டுப் பொசுக்கவோ துவக்கோடை அலையிறம் (167)” “அப்பொழுது முதலை தும்பியாக உருமாறியது (182)” “அய்யா நானும் இந்தியாவில இருந்து வந்தவன்தான் (188)” “காற்றின் திசை திடீரென்று மாறியிருக்க வேண்டும். மழைச் சாரல் கால்களில் தூவியது (381), “மீனாட்சி கடைசிவரைக்கும் அதற்குப் பதில் சொல்லவில்லை (442)” “அவளுடைய காதுக்குள் “நீ துடக்கெல்லோ” என்று கிசுகிசுத்தான்.” அவள் “பொய் சொன்னனான்” (449), “அன்றைக்கு ராணி முகம் மலர்ந்து சிரித்தாள் (494)”, “அதற்குப் பிறகு … மகளை ஒருபோதும் கண்டதில்லை (605)”, “அவர்கள் வேறு கண்ணீரைத் தேடிப் போனார்கள் (637)”. இந்த வசனங்கள் என்னில் ஏற்படுத்திய பாதிப்புகளை விரிவாக்கினால் கதையை சொல்ல வேண்டி ஏற்படுவதுடன் கட்டுரையும் நீண்டுவிடும் (ஏற்கனவே கட்டுரை நீளமானது மட்டுமல்ல கதையைக் கூறுவதில் உடன்பாடுமில்லை.) ஆகவே அதை தவிர்க்கின்றேன். ஆனால் நீங்கள் வாசிக்கும் பொழுது அதை அனுபவிப்பீர்கள் என நம்புகின்றேன்.

இப் படைப்பு பல அத்தியாயங்களை கொண்டது. நாடற்றவன் என்ற தலைப்பில் ஆரம்பித்து ஏதிலி, இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி, இரட்டைப் பனை, ஓயாத அலைகள், புகலிடம், வெற்றி நிச்சயம், சுதந்திரப்பறவைகள், படுகளம், மறியல் கொட்டில், இத்திடிரக்காரி என முடிகின்றது. இத் தலைப்புகளே படைப்பாளரின் அரசியலை ஒரளவு வெளிப்படுத்துகின்றது எனலாம்.
என் வாழ் நாளில் இதுவரை ஒரு தலைவர் எனக்கு கிடைக்கவில்லை. அரசியல் செயற்பாட்டில் ஈடுபட ஆரம்பித்ததிலிருந்து ஒவ்வொரு தலைவர்கள் வந்தார்கள். அவர்களை நான் சுவீகரிக்க முதல் அவர்களாகவே நான் அவர்களை விட்டுவிட வழிசமைத்தார்கள். என்னாலும் நான் விரும்புகின்ற ஒரு தலைவராகவும் வரமுடியவில்லை. இவை எல்லாம் (தூர)அதிர்ஸ்டமா என நானறியேன். ஆனால் எனது அப்பாவுக்கு ஒரு தலைவர் இருந்தார். ந.சண்முகதாசன். இவர் மீது அவர் வைத்திருந்த மரியாதையையும் அன்பையும் பற்றையும் நான் அறிவேன். ஒரு சிறு விமர்சனமும் நாம் அவர் மீது முன்வைக்க முடியாது.

இவ்வாறுதான் தமிழர்களுக்கு ஜீ.ஜீ.பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம், எனத் தொடர்ந்து, டெலோவின் சிறி சபாரட்ணம், ஈபிஆர்எல்எப்பின் பத்பநாமா, புளொட்டின் உமாமகேஸ்வரன், ஈரோசின் பாலகுமார் எனப் பல தலைவர்கள் வந்தனர். பின் டக்ளஸ் தேவானந்தா, இப்பொழுது சம்பந்தன், விக்கினேஸ்வரன் எனத் தொடர்கின்றது. ஒவ்வொரு தலைவர்கள் மீதும் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் பலர் இன்றுவரை மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றார்கள். அவர்கள் மீது விமர்சனம் முன்வைப்பதை எதிர்க்கின்றார்கள். அல்லது அந்த விமர்சனங்களை மறுக்கின்றார்கள். அந்தளவுக்கு அவர்களது பாசமும் உறவும் அவர்களது கண்களை மறைக்கின்றன. இவர்கள் அரசியலையும் தனிப்பட்ட உறவுகளையும் கலந்து பார்ப்பதன் விளைவே இது. இந்தடிப்படையில்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது அந்த அமைப்பின் உறுப்பினர்களும் அனுதாபிகளும் அவர்களுடன் வளர்ந்த சிறுவர்களும் வைத்திருக்கும் அன்பையும் மரியாதையையும் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றேன். ஆகவே இந்த நாவலின் படைப்பாளரையும் அவர் வாழ்ந்த சூழலையும் கருத்தில் கொண்டு இதைப் புரிந்து கொள்ளகின்றேன். இருப்பினும் இவ்வாறான ஒருவர் தான் அறிந்த உணர்ந்த உண்மைகளையும் அதன் மீதான விமர்சனங்களையும் சுயவிமர்சனங்களையும் வெளிப்படையாக முன்வைக்கின்றார். இதை நாம் நிச்சயமாக வரவேற்க வேண்டும்.மேலும் தனது படைப்பு தொடர்பான வெளிப்படையான விமர்சனங்களை வரவேற்கின்றார். இது பக்குவப்பட்ட ஒரு எழுத்தாளரின் முதிர்ச்சியை வெளிப்படுத்துகின்றது. படைப்பாளர்கள் இவ்வாறு இருப்பதே ஆரோக்கியமானது.

ஒடுக்கும் அரசு ஒடுக்கப்படும் மக்களுக்கு செய்வதையே ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுகின்ற அமைப்புகளும் செய்யுமாயின் அப்போராட்டமானது தவறான பாதையில் செல்கின்றது என உறுதியாகக் கூறலாம். இவ்வாறான ஒரு போக்கை சகல ஈழ விடுதலை அமைப்புகளும் கொண்டிருந்தன. ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பு தனது போராட்ட தொடர்ச்சியாலும் அர்ப்பணிப்பாலும் மரணங்களினாலும் அதனை மறைத்துவிட்டன. ஆகவே தவறுகள் வெளித்தெரிய வாய்பில்லாமல் போனது. அல்லது அவ்வாறான விமர்சனங்களை எதிர்கொள்வதற்கான வெளியை ஏற்படுத்தவில்லை. ஆகவே விமர்சனங்கள் மக்களின் மனங்களுக்குள்ளேயே நடைபெற்றன. அதனை மிகத் தெளிவாக படைப்பாளர் வெளிப்படுத்துகின்றார். விடுதலைப் போராட்டம் அதை முன்னெடுத்த தலைமைகள் தொடர்பான விமர்சனங்கள் நேர்மையாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இயக்கச் சண்டைகள், முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது, சாதாரண சிங்களவர்கள் மீதான படுகொலைகள் போன்றவை மட்டுமல்ல இன்றுவரை ஈழத் தமிழர்களுக்கு தவறான தகவல்களை வழங்கி தமது தவறை மறைத்த செஞ்சோலைப் படுகொலையின் உண்மையான வரலாற்றையும் பதிவு செய்துள்ளார். மேலும் குறிப்பாக குற்றமிழைக்கப்பட்ட அல்லது தூரோகி என்றழைக்கப்பட்ட ஒருவருக்கு குழந்தைகள் முன் வழங்கப்படும் தண்டனை எவ்வாறான தாக்கத்தை குழந்தைகளில் ஏற்படுத்தும் என்பதையும் உரையாடுகின்றார். ஆனால் நமது போராட்ட இயக்கங்கள் இந்தளவிற்கு நுண்ணுணர்வு கொண்டவர்களாக இருக்கவில்லை. ஏன் இவ்வளவு அனுபவத்திற்குப் பின்பும் நாம் கூட நுண்ணுணர்வு குறைந்தவர்களாக அல்லது அற்றவர்களாகத்தான் இப்பொழுதும் இருக்கின்றோம் என்பது துர்ப்பாக்கியமானது.

எல்லாப் போராட்ட இயக்கத்திற்குள்ளும் இரண்டு விதமான போக்குகளைக் கொண்டோர் இருந்திருக்கின்றார்கள். ஒரு போக்கு மக்களின் மீது மதிப்பு வைத்து போராட்டமே மக்களுக்கானது ஆகவே அவர்களுடன் பண்பான உறவை வைத்திருப்பதுடன் விடுதலைப் போராட்டத்தை எவ்வாறு ஒரு மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும் என்பவர்கள். இன்னுமொரு போக்கு ஆயுதம் தரித்தவர்களே அதிகாரமுடையவர்கள். நமக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். நாம் போராடுகின்றவர்கள். மக்கள் எம்மைப் பின்பற்ற வேண்டும் என்பவர்கள். இந்தடிப்படைகளில் சில உறுப்பினர்கள் மக்களுக்கு எதிராக ஆயுதத்தைத் திருப்புகின்றார். ஆனால் இன்னும் சிலர் இறுதிவரை மக்களின் தேவைகளை கவனித்து பூர்த்தி செய்கின்றனர். இன்னுமொரு போராளியோ தன் இயலாமையையும் தவறுகளையும் உணர்ந்து ஒரு குழந்தையிடம் மன்னிப்பு கேட்கின்றார். இவ்வாறான தருணங்கள் உணர்ச்சிமயமானவை. இருப்பினும் போரின் இறுதிக் காலங்களில் நடைபெற்ற கொலைகளை குறிப்பாக நமக்குள் நடைபெற்ற கொலைகளை ஒரு மன்னிப்பில் கடந்து சென்று விடமுடியாது. அதுவும் கிளிநொச்சி பிடிபட்டவுடன் போராட்டம் தொடர்பாக இறுதி அல்லது மாற்று முடிவுகள் எடுக்காது இறுக்கணங்களில் முள்ளிவாய்க்காளில் வைத்து ஆயுதத்தை மெளினித்து சரணடைய எடுத்த முடிவு மிகவும் சந்தர்ப்பவாதமானதாகும். மக்களைவிட இயக்கத்தினது குறிப்பாக தலைமையின் மீது மட்டும் அக்கறை கொண்ட முடிவு அது. இதுவே சிறுவர் சிறுமிகளும் பெண் போராளிகளும் இராணுவத்திடம் உயிருடன் பிடிபடுவதற்கும் அவர்கள் எல்லாவகையிலும் கொடுமைப்படுத்தப்படுவதற்கும் வழிகோலியது. இதுமட்டுமின்றி தமது தவறான முடிவால் தாமே அதற்குப் பலியுமானார்கள். இதற்குப் புலம் பெயர்ந்த இயக்க விசுவாசிகள் கற்பிக்கும் நியாயம் என்னெவெனில் “அதிகமான மக்கள் இனப்படுகொலை செய்யப்படும் பொழுது தீர்வு கிடைக்கும் என தலைவர் நம்பினார்” எனக் கூறுகின்றவர்கள் நம்புகின்றவர்கள் இப்பொழுதும் இருக்கின்றார்கள். இதனால், “மேலும் பலர் கொத்து கொத்தாக கொல்லப்படவில்லையே” எனக் கவலைப்படுகின்றவர்களும் உள்ளனர். தாம் பாதுகாப்பாக புலம் பெயர்ந்த தேசங்களில் இருந்து கொண்டு இப்படியும் மனித மனங்கள் சிந்திக்கின்றனவா என யோசிக்கும் பொழுது கோவமே மிஞ்சுகின்றது. இப்படி ஒரு விடுதலையைப் பெறுவதைவிட அடிமையாகவே வாழ்ந்து செத்துவிடலாம். இவ்வாறான தவறுகளை நாம் புரிந்து கொள்ளாதவரை நமது விடுதலை என்பது ஆதிரை நட்சத்திரங்களைப் போல நம்பிக்கையளித்துக் கொண்டு மிகத் தூரத்திலையே இருக்கும். அதேவேளை ஆதிரை போன்ற போராளிகளின் மரணங்கள் வெறுமனே பலியாடுகளாக மட்டும் தொடரும் என்பது துர்ப்பாக்கியமானது. இது அவர்களது கனவுகளுக்கும் நம்பிக்கைகளும் வாழ்க்கைக்கும் நாம் செய்கின்ற துரோகம் என்றால் மியைல்ல.

ஈழப் போராட்டம் இனவழிப்புடன் 2009ம் ஆண்டு மே மாதம் முடிவுற்ற பின்னர் பல படைப்புகள் புலத்திலிருந்தும் புலம் பெயர்ந்த தேசங்களிலிருந்தும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உதாரணமாக வன்னி யுத்தம், கடவுளின் மரணம், சேகுரோ இருந்த வீடு, ஊழிக்காலம், அகாலம், உம்மத், கனவுச்சிறை, வேருலகு, ஆறாவடு, கசகறனம், நஞ்சுண்ட காடு, பொக்ஸ்…. இப்படி பல. இந்தப் படைப்புகள் ஒவ்வொன்றும் வெறுமனே புனைவுகள் இல்லை. பல மனிதர்களின் வாழ்வு தந்த அனுபவங்கள், படிப்பினைகள், தேடல்கள், கேள்விகள். அவர்களின் கடந்த கால வரலாறுகள். ஆகவே ஈழத்தில் வாழும் தமிழ் சமூகங்களின் விடுதலைக்காக செயற்படும் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒரு தீர்வை நோக்கி தமது பார்வைகளை முன்வைப்பதற்கு முதல் இப் படைப்புகளை ஒருதரம் என்றாலும் வாசிக்க வேண்டும். இவை நிச்சயமாக ஒரு பார்வையை அவர்களிடம் உருவாக்கும். கடந்த காலங்கள் கசப்பானவை மட்டுமல்ல துன்பமும் துயரமும் வலிகளும் நிறைந்தவை. இவற்றை வெறுமனே அரைகுறை அரசியல் தீர்வுகளுடன் கடந்து செல்ல முடியாது. மாறாக நியாயமான அரசியல் தீர்வு ஒன்றே இதுகாலவரையான அழிவுகளுக்கும் மரணங்களுக்குமான பதிலாக இருக்க முடியும். அந்த தீர்வு நிச்சயமாக ஒற்றையாட்சியின் கீழ் வாழ்வதும் இல்லை அதற்காக தனிநாடும் இல்லை என்பதையே இப் படைப்புகள் ஒவ்வொன்றும் மீள மீள வலியுறுத்துவதாக உணர்கின்றேன்.
ஈழத் தமிழர்களின் இன்றைய காலம் சுயவிமர்சனம் செய்கின்ற காலம். ஏனெனில் சிறிலங்கா அரசினதும் ஆதிக்க சமூகங்களினதும் சக்திகளினதும் ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை கிடைக்குமா என்பது இன்றும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. ஆகவே போராட்டமானது இன்னுமொரு பத்து அல்லது இருபது வருடங்களில் மீளவும் ஆரம்பமானால் ஆச்சரியமில்லை. ஆனால் அவ்வாறு ஒரு போராட்டம் மீள ஆரம்பிக்கும் பொழுது இன்றைய தவறுகளிலிருந்து அவர்கள் கற்க வேண்டும். அதற்கு இவ்வாறான படைப்புகளே பங்களிக்கும்.

சயந்தன் அவர்கள் மலையக மக்களின் வாழ்வை படைப்பாக்கியிருப்பதையும் சரியான பார்வையில் அவர்களின் பிரச்சனைகளை முன்வைத்திருப்பதையும் மதிக்கின்றேன். வரவேற்கின்றேன். இருப்பினும் இவர்களது பேச்சுவழக்கு, மொழி போன்றவை தொடர்பாக மேலும் கவனம் எடுத்து செயற்பட்டிருக்கலாம் என உணர்கின்றேன். ஏனெனில் ஒரு படைப்பாளர் தான் வாழாத, தனக்குத் தொடர்பில்லாத சமூகங்களின் வாழ்வை குறிப்பாக தான் வாழும் சமூகங்களால் ஒடுக்கப்படுகின்ற ஒரு சமூகத்தின் வாழ்வைப் படைப்பாக்கும் பொழுது அதிகமான பொறுப்பும் அக்கறையும் அவசியமானதாகும். அந்த மக்களின் வாழ்வு, பண்பாடு, கலாசாரம், மொழி, பேச்சு வழக்கு என்பவற்றை விரிவாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்து உள்வாங்கிக் கொண்டு படைப்புருவாக்கத்தில் ஈடுபடும் பொழுது அது உயிர்ப்புடன் வரும். இனிவரும் தனது படைப்புகளில் இவற்றைக் கவனிப்பார் என நம்புகின்றேன்.
சயந்தன் அவர்களின் ஆறாவடு நாவல் இருபதுகளில் வாழ்கின்ற ஒரு வாலிபனின் இளமைத் துடிப்புப்பான படைப்பு எனின் ஆதிரை மூப்பதுகளில் வாழ்கின்ற ஒருவரின் பன்முகப் பார்வைகளைக் கொண்ட (ஒரளவாவது) பொறுப்புள்ள ஒரு படைப்பாகும். இப்படைப்பானாது மேலும் ஆழமானதாக படைக்கப்பட்டிருக்கலாம். படைப்பாளர் படைப்பின் ஆரம்பத்தில் மிக நிதானமாகவும் ஆழமாக காலுன்றிப் பயணிக்கின்றார். ஆனால் படைப்பின் இறுதியில் சில விடயங்களை நேர்மையாக விமர்சனம் செய்தபோதும் சில விடயங்களை வலிந்து நியாயப்படுத்த முயற்சிப்பதுடன் அவசர அவசரமாக பயணித்தாரோ என்று தோன்றுகின்றது. ஆரம்பத்திலிருந்த நிதானமும் ஆழமும் இறுதியில் காணாமல் போய்விட்டன. ஒரு படைப்பாளி அறுபது எழுபவது வயதுடைய ஒருவரின் வாழ்வனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு, ஒவ்வொரு பாத்திரங்களாக வாழ்ந்து, அவர்களின் உள்ளுணர்வுகளுக்குள் மேலும் ஆழமாகச் சென்று அவர்களின் அக முரண்பாடுகளை விரிவாக வெளிப்படுத்துவாராயின் குறிப்பிட்ட படைப்பானாது பன்மடங்கு உயர்வானதாக அமையும். இது ஒரு தவம்.

அவ்வாறான ஒரு படைப்பு மனித சமூகத்திற்கான ஒரு வழிகாட்டியாகவும் செயற்படலாம். ஒரு படைப்பானது குறிப்பிட்ட சமூகத்தின் நிழற் கண்ணாடி போன்றதாகும். இதனுடாக வாசிப்பவர் அல்லது பார்ப்பவர் தனது முரண் நிலைகளை தானே உணரலாம். இது ஒருவர் தனது முரண்களைக் கடப்பதற்கான தேடலை ஊக்குவிக்கலாம். இதுவே ஒரு படைப்பின் மிகப் பெரிய பங்களிப்பாகும். ஆதிரை இப் பங்களிப்பை ஒரளவே செய்கின்றது. இவரது அடுத்த படைப்பு மேற்குறிப்பிட்டவாறான குறைகளை நிவர்த்தி செய்தும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும் வெளிவர வேண்டும் என விரும்புகின்றேன்.ஒடுக்கப்பட்ட மனிதர்களின் குறிப்பாக வன்னியில் வாழ்ந்த மலையக மக்களின் வாழ்வை ஆதிரை எனும் ஒரு படைப்பாகத் தந்தமைக்காக நன்றி கூறுவது எனது பொறுப்பாகும்.

ஆதிரை
இரவில் ஒளிர்கின்ற ஒரு நம்பிக்கை நட்சத்திரம்.

By

Read More

ப.ரவி

நாவல்களில் வெவ்வேறு விதமான பாத்திரங்கள் சித்தரிக்கப்படுகின்றபோது அங்கே தனியானவொரு உண்மை மட்டும் இருப்பதற்கு இடமில்லை. வெவ்வேறு உண்மைகள் இருக்கும் சாத்தியம் உண்டு. அதை ஆசிரியர் கதை சொல்லலின்போது அங்கீகரித்தபடி அதற்குள்ளால் நகரவேண்டும். அதற்கு உண்மையில் ஒருவர் தனது கருத்தின் சார்புநிலையை அக் கணங்களில் துறக்க வேண்டியிருக்கும். தனது கருத்துசார் நிலையை தற்காலிகமாக அழித்துவிட்டு பாத்திரங்களின் கருத்துசார் நிலைக்கு மாறிக்கொண்டு எழுதுவது சுலபமானதொன்றல்ல. பொதுவில் தாம் சார்ந்த கருத்துநிலை இடையீடு செய்தபடியே இருக்கும். (எழுதுதலின்போது) அதைத் துறப்பது ஒருவித துறவு நிலைதான்.

இதைச் சாதிக்க முடியாத எழுத்துகளை ஆசிரியன் அல்லது ஆசிரியை இறந்துவிட்டான்(ள்) என்றெல்லாம் அணுக முடியாது. இதை ஒப்புக்கு அல்லது எடுப்புக்கு சொல்கிற ஆசிரியர்கள்தான் விமர்சனங்களை தனது கருத்துநிலையில் நின்று மட்டும் அணுகுவதில் முண்டியடிக்கிறார்கள் அல்லது விமர்சனங்களுக்கு பதிலெழுதி மாய்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில் விவாதங்களின்போது கடைசியாகக் கதைச்சு முடிக்கிறார்கள்.

வாசகரின் நகரல் எதுவாக இருக்கப்போகிறது. அவர்கள் மற்றைய மனிதர்களின் பார்வைப்புலத்தினூடு இந்த உலகைப் பார்க்க தயாராக இருக்கிற ஒருவித அறம்சார் கடப்பாட்டுடன் (moral obligation) வாசிப்புகளை நிகழ்த்த வேண்டும். எளிமையாகச் சொன்னால் அந்த மனவளத்துடன் வாசிப்பை நிகழ்த்திக்கொண்டிருக்க வேண்டும். இதுவும் சுலபமானதல்ல.

சயந்தனின் ஆதிரை நாவலையும் அவ்வாறானதொரு வாசிப்பை நிகழ்த்த எடுத்த முயற்சியின் அடிப்படையில் நான் கண்டுகொண்டதை பதிவுசெய்கிறேன்.

தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டமும் அதனூடு வெளிக்கிளம்பிய போரும் அவற்றோடு சம்பந்தப்பட்ட அல்லது அதை முன்னெடுத்த மாந்தர்களை மட்டுமல்ல, அதனோடு நேரடியாகச் சம்பந்தப்படாத மக்களையும் எவ்வாறு தாக்கியது, தாக்குகிறது என்பதை வெளிப்படுத்துகிற படைப்புகளில் சயந்தனின் ஆதிரைக்கு ஒரு தனி இடம் இருக்கிறது என்பது என் துணிபு.

போர்கள் குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் விளிம்புநிலை மக்களையும் அதிகம் பாதித்துவிடுகிறது. அது நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களுடன் சேர்த்து, சம்பந்தப்படாத எல்லா மக்கள் பிரிவினரையும் -குறிப்பாக விளிம்புநிலை மக்களை- எவ்வாறு கோர்த்துவிட்டிருக்கிறது என்பதை ஆதிரை சொல்கிறது. இக் கருத்துருவின் அடிப்படையில் இந் நாவலின் மையம் இவர்களிலிருந்து விரிந்து பரவிச் சென்றிருப்பது முக்கியமானது. இனக்கலவரத்தையும் போரையும் மோசமாக எதிர்கொண்டவர்கள் என்றளவில் தமிழ் வெளிக்குள்ளும், இறுதிப் போரின் உக்கிரம் கவிழ்ந்து கொட்டிய நிலம் என்றளவில் வன்னிப் பெருநிலத்திற்குள்ளும் கதை மாந்தர்கள் கசங்கித் திரிகிறார்கள்.

1977 இனக்கலவரம் தமது பாதுகாப்பின் மேல் எற்படுத்திய அச்சுறுத்தலால் மலையகத்திலிருந்து வன்னி நோக்கி வந்த மலையகத் தமிழ் மக்களையும் இந்தப் போர் எவ்வாறு கோர்த்துவிட்டது என்பதை சிங்கலையினூடாக ஆதிரை பதிவுசெய்திருக்கிறது. காட்டின் மைந்தர்களாக வேட்டையோடும் இயற்கையோடும் பின்னிப் பிணைந்த வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த மயில் குஞ்சன், சங்கிலி போன்றோரின் வாழ்நிலைக்குள் இந்தப் போர் ஒரு மதம் கொண்ட யானையாகப் புகுந்து நிகழ்த்திய அழிவுகள் நாவலெங்கும் குவிந்துபோய்க் கிடக்கிறது.

»» காட்டுக்குள்ள வரவேண்டாமெண்டு ஒருத்தன் சொல்லுறான். (வேட்டைத்) துவக்கை கொண்டு வந்து தா எண்டு இன்னொருத்தன் சொல்லுறான். எங்கடை வாழ்க்கையை இப்ப வேறைவேறை ஆக்கள்தான் நடத்துறாங்கள். (167)
தன்ரை சனங்களுக்காக சுரந்துகொண்டிருந்த இந்த நிலத்துக்கு கொள்ளி வைச்சிட்டியளே…பாவியளே… இந்தா பாருங்கோடா… எத்தினை உசிரை எரிச்சுப் பொசுக்கியிட்டுது… உன்ரை நிலம் என்ரை நிலமெண்டு இந்தக் காட்டை எரிக்க வேண்டாமெண்டு கதறினதை யாரும் கேட்கலயே.»» (125)

கதை சொல்லல் முறையில் கையாளப்பட்டிருக்கிற நேர்கோட்டின்மை (non-linear) முறைமை, அதன்வழியாக முக் காலங்களையும் அருகருகே கொண்டுவந்து பேசுகிற சந்தர்ப்பங்கள், மொழியின் கையாளுகை, குறியீடுகள், புதிதான விபர்pப்புகள் என்பன குறிப்பிடத்தக்கன. காட்சிப்படுத்தலையும் கடந்து உள்ளுணர்வுகளினூடாக பயணிக்கிற நாவலாக இது இருக்கிறது. மொழியாளுகை அதற்கு பெரிதும் துணைநிற்கிறது.

»» முதுகுவடத்தின் ஓரத்தில் விறுவிறுக்கத் தொடங்கியது. எலும்புக்கும் தசைக்கும் இடையில் இரத்தத்தில் மூழ்கிக் கிடந்த ஒரு கறுப்புப் பூனை கூரிய பற்களால் தசையை பிய்த்துத் தின்னத் தொடங்கியது…»» (454)

அரசியல் கைதிகளாக கொடுமையான சிறைவாழ்க்கையை அனுபவித்தவர்களோ, போரில் கிழிபட்டு எறியப்பட்டவர்களோ வாழ்வின் மீதான ஒரே நம்பிக்கையில் அல்லது பிடிப்பில்தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் முற்றாக அறுந்துபட்டு வீழ்வதில்லை. எந்த கொடிய நிலைமைகளுக்குள்ளும் சிக்குப்படுகிற போதிலெல்லாம், ஆபத்தை எதிர்பாராத திசைகளிலிருந்து எதிர்கொள்கிற போதிலெல்லாம், இதை தம்மளவில் வெற்றிகொள்வதிலும், காலநீட்சியில் தகவமைதலிலும் நடத்துகிற பொளதீக மற்றும் உள ரீதியிலான போராட்டங்கள் அவர்களிடம் எழுகிற இயல்பான மனித உணர்ச்சிகளை அழுகையில் மட்டும் வைத்திருப்பதில்லை.

சிறுசிறு விசயங்களில்கூட லயிப்பை உண்டுபண்ணுகின்றன. குழந்தைகள்போல் ஆகிவிடுகிற சந்தர்ப்பங்களும் உண்டு. அவர்கள் சந்தோசமான தருணங்களை உணர்ந்துகொள்ளத் தவறுவதில்லை. ஆட்டுக்குட்டி துள்ளிவிளையாடுவதையும், மாடு கன்று ஈனுவதில் அதன் வலியோடான இணைவும் கன்றின் மீதான துள்ளல் உணர்வுகளும், பூனையின் குழைவான வருடலின் மென்மையுமென நிசப்தமான சந்தோசம் ஒரு தீபமாகி இருண்டுபோன மனத்தை ஆக்கிரமிக்கின்றன. குழந்தைகள் கையில் கிடைத்த பொருட்களை படைப்பாற்றல் கொண்ட வகையில் சரிசெய்து விளையாடத் தொடங்குகிறார்கள். காமம் கசிகிறது. அது செயலூக்கமாக இருக்கிறது. பதுங்குகுழிக்குள் உடலின் உரசல்களும்கூட நிகழ்ந்துவிடுகின்றன. காதல் உணர்வுகள் இயல்புநிலை வளர்ச்சி கொள்கின்றது. இந்தவகை வாழ்தலின் உயிர்ப்பு முக்கியமானது.

காதலுக்கும் காமத்துக்கும் நெருக்கமான, தவிர்க்கமுடியாத உறவு இருக்கிறது. அதை பசப்பு வார்த்தைகளால் வியாக்கியானப்படுத்த முடியாது. அவை உடல் உள ரீதியிலான இயல்பூக்கம் கொண்டவை. காதல் என்பதை இருவருக்கிடையிலான தொடர்ச்சியான உறவுமுறை, இணைந்த போராட்டம், நட்பு, இரகசியங்களை பகிர்தல் போன்றவற்றில் காதலனை அல்லது காதலியை இந்த உலகின் மையத்தில் வைத்துக் காணுதல் என்று சொல்ல முடியும்.

“ஆடான ஆடெல்லாம் தவிடு புண்ணாக்குக்கு அழ, சொத்தி ஆடு என்னத்துக்கோ அழுததாம்” என்று காமத்தின் இயல்பூக்கத்தை மறுக்கிற மனப்பான்மை கொண்ட சமூகத்தில் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசுதல் வெட்கத்துக்கு உரியதாகிறது. கதைமாந்தர்களைச் சூழ்ந்த யுத்த சூழலுள் அதை எதிர்கொள்வதில் நடத்துகிற இணைந்த வாழ்வியல் போராட்டத்தினூடும், இளமையினூடும், உடல் சார்ந்தும் ஆதிரையில் காதலும் காமமும் பேசப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் மறுத்து அல்லது காயடித்து ‘இலட்சிய வகைப்பட்ட’ துயரை, வலிகளை, பயங்கரத்தை மட்டும் வார்த்துக்கொண்டிருக்கும் நாவல்கள் அல்லது கதைசொல்லல்கள் வாசகரையும் சித்திரவதை செய்வதிலேயே முடிவடைகிறது அல்லது அதே குறியாய் இயங்குகின்றன. முழுமையாக உணர்ச்சியலைக்குள் (sentiment) மட்டும் உழலவைத்துவிடுகின்றன. ஆதிரை அதற்கு வெளியே நிற்கிறது.

உணர்ச்சியலை (sentiment) மட்டுமன்றி அன்றாட வாழ்வின் துரும்பு போலான ஒவ்வொரு சிறுசிறு விசயங்களையும் நுண்மையாக உள்வாங்கி, விண்மீன்களாய்ச் சேகரித்து, அழகியலோடு வழங்க வேண்டும். பனி படர்ந்த புல் நுனியிலிருந்து, வெட்டப்படும் செடிகொடிகள் ஈறாக, , இத்தி மரம் பாறுண்டு வீழ்கிறவரையான விபரிப்புகளில் அது காட்சிப்படுத்தலையும் தாண்டி அதன் நிறங்கள், வாசனைகள் என ஆதிரை நுழைந்துதான் இருக்கிறது. மனிதர்களை இயற்கையிலிருந்து பிரித்தறியாத ஒரு மனம் வாய்க்கப்பெறுகிறபோது இயற்கையென்பது காட்சி விம்பங்களையும் தாண்டி, குறியீட்டு வகைப்பட்ட சுட்டலையும் தாண்டி மனிதர்களின் உள்ளுணர்வினூடு வாசனையும் நிறங்களும் கொண்டு பரவுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

ஆதிரை நாவல் போரின் வலிகள் கீழ்மட்டம் வரை எவ்வாறு ஊடுருவி அந்த மக்களை அலைக்கழித்தது என்று சொல்லுகிற அதேநேரம், அந்த அன்றாட வாழ்வின் உயிர்ப்பான அம்சங்களையும் சிறுசிறு சந்தோசங்களையும் சமூக உறவுமுறைகளின் ஆத்மார்த்தமான இழைகளையும் இணைத்துக்கொண்டே நகர்கிறது. இசைவாக இயற்கையின் மீதான நுண் அவதானிப்புகளை அதன் வாசனைகளை மிக ஆழ்ந்த இரசனையுடன் சொல்லிச் செல்கின்றது. இதன்மூலம் வாசகரை ‘ஓயாத’ துயரின் கிடுக்கிப் பிடியிலிருந்து பல சந்தர்ப்பங்களில் விடுவித்துக்கொள்கிறது. இன்னொரு வடிவில் சொல்வதானால் வாசகரை தண்டிப்பதிலிருந்து விலகிச் செல்கிறது.

போர்ப்பட்ட நாட்களிலும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லா மனிதர்களுக்கிடையிலான உறவுகள் பரஸ்பரம் ஆதரவாக இருந்த பக்கங்களையும் அது சொல்கிறது. மனிதர்களுக்கும் போராளிகளுக்குமிடையே (குறிப்பாக பெண் போராளிகள்) இருந்த மனிதநேயம்;, உதவும் மனப்பான்மைகள் பற்றியும் பேசப்படுகின்றன.

இதில் வரும் குடும்பப் பெண்ணான சந்திராவின் பாத்திரம் முக்கியமான ஒன்று. இறுதிவரை கேள்விகளுடனேயே இந்த விடுதலைப் போராட்ட ‘ஞாயங்களை’ எதிர்கொள்கிறார். கணவரான அத்தார் ஒரு தமிழ்த் தேசியவாதியாக, புலிகளின் விசுவாசியாக அல்லது அனுதாபியாக இருக்கிறார். எப்போதுமே இந்த முரண் அவர்களது உரையாடல்களுக்குள் தெறிப்பதை பல இடங்களில் நாவலாசிரியர் பதிவுசெய்கிறார். இந்தவகை உரையாடல்கள் நாவலினுள் வேறு பாத்திரங்களினூடாகவும் வருகிறது.

ஆரம்பத்தில் கூறியதுபோல நாவல்களில் இந்த உரையாடல்களை கட்டமைக்கிறபோது ஆசிரியர் இறந்துவிட வேண்டும். அதாவது தான் சார்ந்திருக்கும் கருத்துசார் நிலையை அவர் துறந்து அந்தந்த மக்களின் கருத்துசார் நிலையை வெளிப்படுத்துகிற, அவர்களின் மொழியில் பேசுகிற உரையாடலை கட்டமைக்க வேண்டும். இதை பலர் செய்வதில்லை என்பதுதான் யதார்த்தம். மாறாக இதை தமது கருத்துநிலையின்பால் பயன்படுத்திக்கொள்கின்றனர். அல்லது அதற்குள்ளால் வடித்தெடுத்து உரையாடலை வளர்க்கின்றனர். ஆதிரையில் ஆசிரியர் அந்தத் தவறைச் செய்யாமல் இருந்துவிட முயற்சித்திருக்கிறார். அதில் கணிசமான வெற்றியும் கண்டுள்ளார்.

பாத்திரங்கள் பொது மனிதர்களாக இருக்கும்போது இவ்வாறான உரையாடல்கள் பொதுப்புத்தியின் வெளிகளுக்குள் பெரும்பாலும் தர்க்க முரண்களால்தான் கட்டமைக்கப்பட முடியுமாயிருக்கும். அதுவே அரசியல் பாத்திரங்களாக அல்லது மத, கலாச்சார, சமூக புத்திஜீவித பாத்திரங்களாக வருகிறபோது உரையாடலை வேறொரு தளத்தில் நிகழ்த்த வேண்டியிருக்கும். ஒருவகை தத்துவ விசாரம் பின்புலமாக இந்தவகை உரையாடல்களில் ஓடிக்கொண்டிருக்கும். நாவலின் அரசியல் கனதியை அதிகரிக்க விரும்பினால் இந்தவகை உதிரிப் பாத்திரங்கள் வந்துபோகச் செய்ய முடியும். ஆனால் ஆதிரையின் ஆசிரியர் அதுகுறித்து அக்கறைப்படிருக்கவில்லை.

அவரது அக்கறை பொது மனிதர்கள் அதுவும் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், விளிம்புநிலை மனிதர்கள் சார்ந்த பாத்திரங்களிலேயே இருக்கிறபோது அதில் கட்டமைக்கப்படும் உரையாடல்கள் தர்க்க முரண்களையே சார்ந்திருக்கும். இந்த தர்க்க முரண்கள் எப்பவுமே ஒரு சாவி போன்றது. அது உற்பத்தியாக்கும் கேள்விகளுக்கான விடைக்கு தத்துவ விசாரத்தினூடாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதனால் அது (தர்க்க முரண்கள்) முக்கியமானதுதான்.

எது எப்படியிருப்பினும் முக்கியமானது நாவலாசிரியர் இந்த உரையாடலில் வாசகரை அலைக்கழிப்பதுதான். அதாவது இந்த முரண்களில் இருபக்க (அல்லது பலபக்க) உண்மைகளும், நியாயங்களும் சரிபோலத் தோன்றுமளவிற்கு அலைக்கழிப்பதன் மூலம் வாசகரின் கருத்துநிலையின் மீது தாக்கம் செலுத்துவதும், ஒரு தேடலை நோக்கி அவர்களை தள்ளிவிடக்கூடிதுமாக இருக்கும். இது அறிவைத் தேடவைப்பது, பன்முகமாக சிந்திக்க வைப்பது என்றும் சொல்லலாம். இது ஒருவகை எழுத்துச் செயற்பாடு. ஆதிரையில் இவ்வகை உரையாடல்கள் -பொது மனிதர்களுக்கிடையில்- காத்திரமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தாலும், சில இடங்களில் வாசகரிடம் வெவ்வேறான உண்மைகள் குறித்தான அலைக்கழிப்புகள் போதாது என்று படுகிறது.

முஸ்லிம், சிங்கள மக்கள் மீதான புலிகளின் வன்முறைகள், மாற்று இயக்க அழிப்புகள், பிள்ளைபிடிப்புகள் போன்றவற்றின் மீதான உரையாடல்;கள் கண்மூடித்தனமான புலியாதரவாளர்களுக்கு அல்லது புலியிசத் தமிழ்த் தேசியவாதிகளுக்கு உவப்பானதாக இருக்க சாத்தியம் குறைவு. இந்த உவப்பின்மையை முள்ளிவாய்க்காலில் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் நுழைய முயற்சித்தவர்கள் மீதான புலிகளின் தாக்குதல் போன்ற விடயங்களை ஆதிரை சுட்டுவது இன்னும் அதிகரித்திருக்கவே செய்யும்.

»» சனங்கள் இனிப் போறதுக்கு வழியில்லை. கடைசிவரையும் நிண்டு சாவம் எண்டுறதை நீங்கள் வீரமா நினைக்கலாம். அதுக்காக.. வாழ ஆசைப்படுகிற சனங்களையும் உங்களோடை உடன்கட்டை ஏறச்சொல்லி வற்புறுத்தேலாது. அவள் (சந்திரா) அத்தாரைப் பார்த்துத்தான் சொன்னாள். அவன் தலைகுனிந்திருந்தான்…
சனங்கள் களைச்சுப் போயிட்டுது. மன்னாரிலையிருந்து நேற்றுவரைக்கும் தங்க ஒரு இடமும் சோறாக்க ஒரு உலையும் கிடைக்குமெண்டு தாங்களாகவே வந்த சனம்தான் இப்ப வெளியிலை போகலாமெண்டு நினைக்கினம். அதுக்குப் பேர் துரோகமில்லை. »» (541)

»» முஸ்லிம் ஊர்காவல் படையும் ஆமியும் சேர்ந்து வீரச்சோலை மல்லிகைபுரப் பக்கங்களில் தமிழரை வெட்டுறதும், பிறகு பெடியள் ஏறாவூரிலை முஸ்லிம் சனத்தை இழுத்து வெட்டுறதும், பிறகு அவங்கள் வந்து சுடுறதும், இப்பிடி எங்கடை காடெல்லாம் முஸ்லீம்கள், தமிழர் பிணங்கள்… முஸ்லிம் ஊர்காவல் படை வெறியங்கள் ஆடுற ஆட்டத்துக்கு இப்பிடித்தான் பதிலடி குடுக்கோணும் எண்டு என்ரை புருசன் சொல்லுவார்… பாவமக்கா ஒரு பாவமும் அறியாத குழந்தைகளையெல்லாம் இவங்கள் வெட்டிப் போட்டுட்டாங்கள்… ரெண்டு பள்ளிவாசலிலையும் மிதக்கிற ரத்தத்தில் மிதந்ததுகள் இருநூறுக்கு மேலையாம். எங்கடை பெடியங்கள் ஆடினது வெறியாட்டம் தானேயக்கா…»» (248)

»» ‘நேற்று அநுராதபுரத்திலையாம் ஆமி உடுப்போடை ஆரோ பூந்து நூறு நூற்றைம்பது சிங்களவங்களையும் சிங்களப் பெண்டுபிள்ளைகளையும் வெட்டி வீசிப்போட்டாங்களாம். பன்சலைக்குப் போன சனங்கள் கும்பிட்டது கும்பிட்டபடி ரத்த வெள்ளத்தில் கிடந்துதுகளாம்.’
அவர்கள் பேசிக்கொள்ளாமல் நடந்தார்கள். சங்கிலியின் வாசலில் ‘ஒரு பீடி தாங்க’ என்று கேட்டு வாங்கிய பெரியதுரை அதை அத்தாரின் நெருப்பில் பற்றவைத்து இழுத்தான். தொண்டை கரகரக்க காறித் துப்பினான். »» (153)

புலிகளினதும் மற்றைய இயக்கங்களினதும் இராணுவத்தினதுமான வன்முறைகள் கொலைகள் வெளிப்படுத்தப்பட்ட அளவுக்கு முஸ்லிம் ஊர்காவல் படையின் வன்முறைகள் கொலைகள் குறித்தான வெளிப்படுத்தல்கள் இதுவரை இல்லை. இந்த வன்முறை பற்றி ஆதிரை மெலிதாக தொட்டுச் செல்கிறது. அதேநேரம் முஸ்லிம் பொது மக்களின் ஆத்மார்த்தமும் அரவணைப்பும் விருந்தோம்பலும் பற்றியும் அது பேசுகிறது.

»» முள்ளுமுள்ளா முளைச்ச தாடியோடை ஒருத்தன் வந்தான். ஏற இறங்கப் பார்த்தான்… அவன் என்னை உள்ளை வாங்கோ எண்டான். கேட்காமலே தண்ணி தந்தான்…. சிறுமியின் தாய்க்காரி சுடுசோத்தில் மீன்கறியை ஊத்தி ஒரு பார்சல் கட்டித் தந்தாள். கைநீட்டி வாங்கேக்கை கை நடுங்கிற மாதிரி இருந்தது. எனக்கு இன்னும் கொஞ்சப் பார்சல்கள் தருவியளா எண்டு கேக்கேக்கை என்னையுமறியாமல் கண்ணிலை தண்ணி. அவள் ‘அல்லாவே’ என முணுமுணுத்துக்கொண்டு உள்ளை ஓடினாள். பாத்திரங்களை வறுகிற சத்தம் கேட்டிச்சு. நாலு பார்சல் கட்டித் தந்தாள். »» (464)

வெறும் புலியெதிர்ப்பைக் கொண்டவர்களுக்கும் இந்த நாவல் உவப்பைத் தந்துவிடப் போவதுமில்லை. இந்த இரு எதிரெதிரான (வெறும் புலியாதரவு, வெறும் புலியெதிர்ப்பு) போக்குகளுக்கிடையில் உழல்பவர்களுக்கு உவப்பாக இந்த நாவல் அகப்பட சாத்தியமில்லை.

வன்னியில் நிலவிய புலிகளின் நிழல் அரசு உருக்குலைந்து கொட்டுப்பட்டபோது கஞ்சி வார்ப்பு, மருத்துவ உதவி, போராளிகளின் -குறிப்பாக பெண்போராளிகளின்- உதவும் மனப்பான்மை என்பவற்றியும் ஆதிரை சொல்லிச் செல்கிறது. சுனாமி பற்றிய விபரிப்பின்போதும் போராளிகளின் இந்த ஆதரவுக் கரம் பேசப்படுகிறது.

திலிபனின் விடயத்தில் அவனது மரணத்துக்கு இந்திய இராணுவம் மீதான (இந்தியா மீதான) பொறுப்பை மட்டும் காண்கிறது ஆதிரை. இங்கு ஒரேயொரு உண்மையாக அது கட்டமைக்கப்படுகிறது. ஆனால் புலிகளின் தலைவர் ஒரு சொல்லை உதிர்த்திருந்தாலே அந்த மரணத்தைத் தடுத்திருக்க முடியும் என்றானபோது அதிக பொறுப்பை புலிகளின் தலைமையிடமே நாம் காணவேண்டியிருக்கிற இன்னொரு உண்மையும் இருக்கிறது. இவ்வாறான சில களன்களில் புலிகளின் மீதான அனுதாபப் போக்கு இழையோடியிருப்பதாகக் கொள்ள நேர்கிறது. அதுசம்பந்தப்பட்ட உரையாடல்களில் ஆசிரியர் பாத்திரங்களினூடாகப் பேசுவதான சறுகல் நிகழ்ந்துவிடுகிறது.

யாழ் சமூகத்தின் ‘அறுக்கையான’ வாழ்வு பற்றியதும், அகதிநிலையில்கூட சாதியடையாளத்தை பேணுவது பற்றியதும், அதன் நடுத்தர வர்க்க குணங்கள் ஆற்றுகிற தப்பித்தல் பற்றியதுமான செயல்கள் பல இடங்களில் வந்துபோகின்றன. முள்ளிவாய்க்காலின் கடைசித் துயர நாட்களிலும் அந்தக் களத்திலிருந்து நந்தன் மாஸ்ரர் (மேலும் சிலருடன்) வள்ளமொன்றின் மூலம் யாழ்ப்பாணத்துக்கு தப்பிப் போகிற சூக்குமத்துள் இந்த ‘தப்பித்தல்’ வெளிப்படுத்தப்படுகிறது. (இந்தியா தவிர்ந்த மற்றைய வெளிநாடுகளுக்கு தப்பியோடி வந்தவர்களிலும் பெரும்பான்மையோர் யாழ்ப்பாணத்தவர்தான் என்பது தெரிந்துகொள்ளாதாருக்கான குறிப்பு.)

முள்ளிவாய்க்கால் களேபரத்துள் இளைஞன் ஒருவனின் உயிரைக் காப்பாற்றுகிற உத்தியாக நாமகளை ஒரு பொய்க் கல்யாணத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் ஒத்துக்கொள்ள வைக்கிறார்கள். அவர்கள் கணவன் மனைவியாய் அருகாகியதுகூட கிடையாது. இது வினையாகி அவளை விடாப்பிடியாய்க் காதலித்தவனிடமிருந்து கடைசியில் பரிதாபகரமாகப் பிரித்தெறிகிறது யாழ் ஒழுக்கவாதம்.

அதேபோலவே யாழ் சைவவேளாள மேலாதிக்கம் கட்டிக்காக்கும் சாதிய மனப்பான்மைகள் பல இடங்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அத்தார் என்பரும் வேளாள சாதியைச் சேர்ந்த சந்திராவும் கணவன் மனைவியாக தனிக்குடும்பமாக வன்னியில் வாழ நிர்ப்பந்திக்கப்படதையும், சந்திராவின் பெற்றோர் நடந்துகொள்கின்ற முறைகளில் சாதியம் வெளிப்படுவதையும் நாவல் சொல்லிச் செல்கிறது. அதையும்விட சந்திராவுக்கும் அத்தாருக்குமான உரையாடல்களிலும் அது பேசுபொருளாக்கப்பட்டிருக்கிறது.

»» ‘ஒரு காலத்திலை.. என்ன ஒரு காலத்தில இப்பகூட உங்களையெல்லாம் மனிசராயும் மதிக்காத ஆக்கள் தங்களையும் தமிழ் எண்டுதான் சொல்லுகினம். அவையள் தங்களைக் காப்பாத்திறதுக்கு உங்களைப் பாவிக்க மாட்டினமெண்டு என்ன நிச்சயம்? ’ என்கிறாள் சந்திரா.
‘இதொரு நியாயமான கேள்விதான். ஒருவேளை இந்தப் போராட்டத்தை உன்ரை அப்பா தொடங்கியிருந்தால், இந்தப் பயம் எனக்கும் வந்திருக்கும்தான்..’ அத்தார் இறுக்கம் தளர்ந்து சிரித்தான்.
‘ஏனடியப்பா இவளவு கதைக்கிற நீ உன்ரை அப்பர் ஆடின ஆட்டங்களையும் வெட்டு ஒண்டு துண்டு ரண்டாக் கதைக்க வேணுமெல்லோ.’ என்றபோது சந்திரா முகத்தைத் திருப்பிக்கொண்டு போனவள் இரண்டு மூன்று நாட்களுக்குப் பேசாது முகத்தை «உம்» என்று வைத்திருந்தாள். »» (171)

நாவலில் அத்தாரை தமிழ்த் தேசியவாதியாக தொடரவைத்த ஆசிரியர் பின்பகுதியில் அவரை கம்யூனிஸ்ட் என சந்திராவினூடாக சொல்லும்போது அதிர்ச்சியாக இருந்தது. அவரது உரையாடலில் இடதுசாரிய வாசனையை நுகர முடியவில்லை. கம்யூூனிஸ்டுகள் சிலர் அப்படியானார்கள் என்பது உண்மைதான் என்பது வேறு விசயம். இடதுசாரியத்தை தமது அரசியல் சார்புக்கு ஏற்ப வளைத்துப் போடும் குயுக்தி; அவர்களிடம் இருக்கும். அது அத்தாரிடம் ஒருபோதும் வெளிப்பட்டில்லை.

மனிதவாழ்வில் தனிமனிதர்கள் எல்லா உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த முடிவதில்லை. அவற்றை கலாச்சாரங்கள், ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள், பழக்கவழக்கங்கள், நாகரிகங்கள் போன்றவை மட்டுமன்றி, பாதுகாப்புக் காரணங்களும் என பலவகையான வரப்புகள் தடுத்து மனதில் தேக்கிவைத்துவிடுகின்றன. உபாதைகளையும்கூட தந்துவிடுகின்றன. அவை உள்மன இடுக்குகளில் இரகசியங்களாகப் புதைக்கப்படுகின்றன. இந்த இடங்களை ஊடுருவி வாசகரை ஆற்றுப்படுத்தும், லயிக்கவைக்கும் அதிசயங்களை புனைவுகள் நிகழ்த்தவல்லவை. இது வாசகரின் உணர்ச்சி அனுபவமாக அமைகிறது.

புனைவு என்பதை பொய் சொல்லலாகக் குறுக்கிவிட முடியாது. அது கட்டமைக்கிற சம்பவங்களை பொளதீக முறையில் (physical) நாம் சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது காட்சிப்படுத்தல்களை, நேரடி அனுபவங்களை பிரதிபண்ண வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் யதார்த்த நிகழ்வுகள் வழங்குகின்ற உணர்வெழுச்சி அல்லது உணர்ச்சி அனுபவங்களை (emotional experience) புனைவுகள் தருவனவாக இருத்தல் வேண்டும். அதேபோல் புதிய அறிவுசார் அனுபவங்களை (intellectual experience) அது வழங்குவதாகவும் இருத்தல் வேண்டும். அதை நாம் யதார்த்தவாத புனைவாக (realistic fiction) சுட்டலாம். நமது வாழ்வுலகத்துக்கு வெளியேயான அரசியல் சூழல்களை, வாழ்முறைகளை, பழக்க வழக்கங்களை, பண்பாடுகளை, மனிதர்களை, கருத்துகளை, இயற்கை வளங்களை, பிரளயங்களை, வரலாற்று சம்பவங்களை… என நீளும் அறிவுச் சேகரங்களை ஒரு இலக்கியப் புனைவின் அறிவுசார் அனுபவம் வழங்குவது பற்றிய சுட்டல் அது. ஆதிரையில் இந்த அனுபவங்கள் கிடைக்கப் பெறுகின்றன.

பௌதீக ரீதியில் புனையப்படும் சம்பவங்களை வரலாற்று ஆதாரங்களாக தகவல்கள் என்ற அடிப்படையில் எடுப்பது பிழையானது. அதேநேரம் புனைவினூடு வாசகருக்குக் கிடைக்கிற அறிவுசார் அனுபவம் என்பதுதான் இலக்கியங்களில் வரலாற்றுப் போக்கைத் தேடும் அல்லது அதன் (வரலாற்றின்) உண்மைத்தன்மையை அல்லது அதன் மற்றைய பக்கங்களைத் தேடும் நூலிழையையும் தரவல்லதாக இருக்கிறது. இதற்கு புனைவெழுத்தாளர்களுக்கு வரலாற்று அறிவும் வரலாற்றுப் பார்வையும் முக்கியம். அவற்றை பொய்களால் கட்டமைப்பது அபத்தம்.

ஆதிரையை இந்தவகையில் ஒரு யதார்த்தவாதப் புனைவாகக் கொள்ள முடியும். ஏற்கனவே அறியப்பட்ட ஒரு வரலாற்றின் போக்குக்கு சமாந்தரமாக அது செல்கிறது.

18ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற நாவல் இலக்கிய வடிவம்தான் முதன்முதலான உருவாகிய உலகமயமாக்கல் அதாவது ‘இலக்கிய உலகமயமாக்கல்’ (literary globalisation) என்கிறார் அறியப்பட்ட துருக்கிய நாவலாசிரியர் ஒர்கான் பாமுக். நாவலானது உலகின் எந்த மூலையில் இருப்பவர்களாலும் தமது சூழ்நிலைமைகளுக்குள் வைத்து வாசிக்கப்படக் கூடியது என்கிறார். அதற்குள் இலக்கிய வகைகளின் (கட்டுரைகள் உட்பட) எல்லா வடிவங்களையும் உட்புகுத்த முடியும் என்கிறார். நாவல் இலக்கிய வடிவத்தின் வளத்தை இது எடுத்துக் காட்டுகிறது. உணர்ச்சி அனுபவங்களை மட்டும் தருவதான வெறும் கதை சொல்லலாக நாவலை புரிந்துகொள்ள முடியுமா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
Novels are encyclopedic. Can put inside anything என்பார் Orhan Pamuk.

எனவே நாவல்களில் புனைவுகளைக் கட்டமைப்பதில் நாவலாசிரியருக்கு சமூகப்பொறுப்பு அல்லது பொறுப்புக் கூறும் தார்மீகம் இருக்க வேண்டும். நாவலினுள் வாசகர் ஒருவருக்கு ‘தனது உண்மை’ சார்ந்து எழும் கேள்விகளையெல்லாம் நாவலாசிரியர் வெறும் புனைவு என்ற ஒற்றைச் சொல்லால் எதிர்கொள்ளும்போது நாவலுக்கான கனதி இல்லாதொழியும்.

மனித மனமானது கலாச்சாரம், மதம், மொழி, ஒழுக்கம், குடும்பம், பாசம்… என்றவாறான பல நிலைகளால் கட்டமைக்கப்படுவதால் புறச் சூழ்நிலைகளின் மாற்றங்கள் அறிவுசார் நிலைக்கும் அல்லது பிரக்ஞைசார் நிலைக்கும் சவால்விட்டபடியே இருக்கும். இந்த உள்மனச் சிக்கல்கள் பொது மனிதஜீவியை எல்லா நிலைமைகளிலும் ஒருபடித்தானவராக இருப்பதை சாத்தியமின்மையாக்கும். அதனால்தான் ஒரு மனிதஜீவி அறிந்தோ அறியாமலோ தவறிழைக்கக் கூடியவர் என்பதும், முரண்கொண்ட மனநிலைகளால் அலைக்கழிக்கப்படக் கூடியவர் என்பதும் யதார்த்தமாக இருக்கிறது.

மனிதர்களை பாத்திரப்படைப்பாகக் கொள்ளும் நிலைமைகளில் இந்த முரண்நிலையை அழித்தொழித்தல் மூலம் தனிமனிதரை ஒருபடித்தானவர்களாக உருவாக்குவதுதான் பெரும்பாலும் நடந்தேறுகிறது. இதன்மூலம் தவறுகளேயற்ற ‘கதாநாயகர்களையும்’, தவறுகள் மட்டுமேயுள்ள ‘வில்லன்களையும்’, கேள்விகேட்கப்பட முடியாத ‘தலைவர்களையும்’ உருவாக்குவது சாத்தியமாகிறது. ஆதிரையின் கதைமாந்தர்கள் ஒருபடித்தானவர்களாகவே தெரிகிறார்கள். ஆனாலும் நாவல் ‘கதாநாயகர்களை’ உருவாக்கிற வேலையைச் செய்யவில்லை. அதற்கு முக்கிய காரணம் அது மையப்படுத்தியிருக்கும் கதைமாந்தர்கள்தான். போராளிகளையும் அது அவ்வாறு கட்டமைத்ததாய் இல்லை. கதைமாந்தர்களினுள் போராளிகளும் உருவாகிய நிலைமைகள் இருந்தபோதும் அவர்கள் முன்னிலைப்படுத்தப் படவில்லை. இதில் ஆசிரியருக்கு மேற்குறித்த பார்வையொன்று இருக்க சாத்தியம் உண்டு.

ஆதிரை போர்ப்பட்ட பூமியொன்றின் மூன்று தலைமுறையினூடான வரலாற்றுப் போக்கை பெண்கள், குழந்தைகள், மற்றும் விளிம்புநிலை மக்கள் சார்ந்து புனைவாக்கியிருப்பதால், இலக்கியத் தளத்தில் தனக்கென ஒரு இடத்தை அது பிடித்துக்கொள்ளும். அதேநேரம் ஆதிரையை கிளாசிக்கல் என அடையாளப்படுத்தியது எந்த அடிப்படையிலோ தெரியவில்லை. விற்பனை உத்திக்காக பதிப்பகத்தால் இது செய்யப்பட்டிருக்கலாம் என்ற விமர்சனங்களை புறந்தள்ள முடியவில்லை.

பெருமாள்முருகனின் மாதொருபாகனில் பின்தொடர்ந்த பூவரச மரத்தை நினைவுபடுத்துகிறது ஆதிரையின் இத்தி மரம். காளியாத்தாவின் இருப்பிடம் அது. இயற்கை சார்ந்து இருந்த மக்களுக்கு பெரும் சமூக நம்பிக்கைகளின் குறியீடாக அது இருந்தது. அது புயலில் பாறுண்டு வீழ்ந்தது ஒரு ஆபத்தை முன்னறிவிப்பது போலாயிற்று. அபசகுனமாகத் தோன்றிற்று. போராளி ஆதிரை என்பவள் இத்திமரக்காரி போலவே இன்னொருவகைப்பட்ட நம்பிக்கையின் குறியீடாகத் தெரிகிறாள்.

நாவலின் கடைசியில் ஆதிரை வருகிறாள். அவள் அம்பாறையைச் சேர்ந்த ஒரு பெண்போராளி. ஓமந்தைக்கு அருகில் எல்லைக் காப்பரணுக்குள் நிலையெடுத்தபடி தனிமையில் இருந்தபோது வானில் ஆதிரை நட்சத்திரம் எதுவென அடையாளம் காணமுடியாமல்; சலித்துக்கொள்கிறாள். அந்த அமைதியைக் குலைத்துக்கொண்டு எழுந்த எதிரியின் படைநடத்தலின்போது காப்பரணுக்குள் சிறைப்பட்ட ஆதிரையும், அவளைக் கடந்துசென்ற கவசவாகனங்களும், இராணுவ சப்பாத்துக் கால்களின் விரைவுகளும், முறிந்து விழுகின்ற மரங்களும், சுருண்டெழுகிற புகைமண்டலத்தில் எரிந்து சாம்பலாகும் காற்றின் திரள்களும், இராணுவத்தின் தாக்குதலும், புலிகளின் எதிர்த்தாக்குதலும், மூன்று மிடறுக்கான தண்ணீரும், இரண்டு தட்டைவடைகளுமாய் கசங்கிச் சுருங்கியது அவளது பூமி. பின்னரான காலங்களில் கைவிடப்பட்ட ஆதிரையின் காப்பரணை காலம் பற்றைகளாலும் இடிபாடுகளாலும் மூடிக்கொண்டது. ஆதிரையை?

– ரவி (23012015)

குறிப்புகள் :
1. ஆதிரையின் அட்டை வடிவமைப்பு சொல்லக்கூடியதாக இல்லை
2. ‘கறுப்புப் பூனை’ என்ற சொல் பற்றியது.
“” முதுகுவடத்தின் ஓரத்தில் விறுவிறுக்கத் தொடங்கியது. எலும்புக்கும் தசைக்கும் இடையில் இரத்தத்தில் மூழ்கிக் கிடந்த ஒரு கறுப்புப் பூனை கூரிய பற்களால் தசையை பிய்த்துத் தின்னத் தொடங்கியது…”” (பக்.454)
‘கறுப்பு’ என்பது பயங்கரம், கிரிமினல்தனம், துயரம் என்றவாறாக வெள்ளையின வெறியர்களால் அர்த்தமேற்றப்பட்ட சொல். அதை இணைத்து உருவாக்கப்பட்டிருக்கிற சொற்களை கறுப்பினப் போராளிகள் 60களில் மறுத்தனர். ஆனால் இப்போதும் பொதுவழக்கில் அதுபற்றிய பிரக்ஞையற்று பெரும்பாலானோரும் பாவிக்கிறார்கள். இங்கு சயந்தனும்தான்.)
https://sudumanal.wordpress.com/2016/01/23/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/#more-746

By

Read More

தமிழ்கவி

ஆதிரை ஒரு காத்திரமான வரலாற்றைப் பதிவு செய்து கொண்டு நகர்கிறது.கடந்த காலம் நிகழ்காலம் எனபவற்றில் தீவிரமான போக்குக் காட்டி விரைகிறது தமிழர்களின் என்பதைவிட என்னுடைய ஆறிய புண்ணை மிக மோசமாக கீறிக் கிழித்துச் செல்கிறது. எதையெல்லாம் எமது சந்ததி மறக்கக் கூடாதோ அதையெல்லாம் கச்சிதமாகப் பதிவு செய்துவிட்டது. படிக்கும் ஒவ்வொருவருக்கும் இது தம்முடைய கதை என்பது புரியும் 1958ல் தொடங்குவதாக தொிந்தாலும் 1977ல் ஆரம்பிக்கிறது 2015வரை பரந்த ஒருகாலத்துடன் நிறைவடைகிறது. சிலபல குறிப்புகளுக்கு முன் இது மீண்டும் ஒரு முறிந்த பனை போலதோற்றமளிக்கிறது.அதனால்தான் பனையை அட்டையில் நட்டார்களோ அல்லது பனை இயல்பாகவே வந்து பொருந்தியதோ யானறியேன் . பாடுகளை தொங்கலிருந்து அனுபவித்தவள் என்பதால் என்னை கலக்கியடிக்க இதனால் முடியவில்லை எனினும் இது ஓர அவசியமான அவசரமான பதிவு ஆயிரம் அரசியல் பேச்சு வார்த்தைகளால் செய்ய முடியாததை.ஆதிரை செய்துவிடும் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை . இதேகளத்தில் ஒதியமலைப் படுகொலைகளுடன் தொடங்கி ஓயாதஅலைகள் மூன்று வரை பதிவுசெய்யப்பட்ட“ உயிர்த்தெழுகை “நாடகம் நா. யோகேந்திர நாதன் எழுதியது புலிகளின் குரல் வானொலியில் தொடராக இரண்டுவருடங்களுக்குமேல் ஒலிபரப்பானது பாத்திரங்களின் பெயா்கள் வேறு சம்பவங்கள் ஒனறுதான் அந்த நாடகத்தில நான் ”குஞ்சாத்தை என்ற பாத்திரத்தில் நடித்து நடிகையாக வெளிப்பட்டேன். இந்த புத்தகம்பற்றி நிறையவெ எழுதவிரும்புகிறேன் சயந்தன் ஒரு அசகாயசூரன்தான்…

ஆதிரை வன்னிப்பிரதேச பெயர்களில்கவனம் செலுத்தவில்லை வன்னி மக்கள் தமக்கிடையே உறவு சொல்லி அழைக்கும் பழக்கமுள்ளவா்கள் .மச்சாள் அம்மான் குஞ்சியப்பு ஆசையம்மா எனறவாறு மலையகத்தமிழரகளின் உரையாடல்கள் காத்திரமாக அமைக்கப்படவில்லை அங்கே செல்லமணி மலையகத்துப் பெயரில்லை பாத்திரமும் சூழலில் ஒட்டவில்லை உரையாடல்களில் டிப்ரஷன் டிசைன்.போன்ற வார்த்தைகள்ஒட்டவிலலை என்பதுட ன் மக்கள் யுத்தகளத் தமிழிலேயே உரையாடுவதுண்டு கீசிட்டுது காத்துப்போட்டுது ரெக்கி மற்றும்பல….சமபவங்களின் கோர்வை மிக நேர்த்தியாக செல்வதால் இவற்றை களத்தை கண்காணாத தொலைவில் ரசிப்பவர்கள் புரிந்துகொள்ளலாம் இறுதியுத்த காலத்தில் செம்மலை அளம்பில் குமுழமுனை ஓட்டிசுட்டான் பேதான்ற இடங்களும் கிளிநொச்சியும் சமகாலத்தில் இடம் பெயர்ந்தவை சில இடங்களில் பிரதேசங்கள் மாறிநிற்கின்றன் ஆயினும் அது வழுவல்ல கண்டாவளையிலிருந்து புதுக்குடியிருப்பை அல்லது புதுக்குடியிருப்பு வீதியை பார்க்க முடியாது கண்டாவளையில்பேஸ இல்லை மக்களுக்குத்தான் செல் போட்டவன் எட்டேக்கர காணியில் காவல்காரர் சரி. அதே காலப்பகுதியில்தான் சுதந்திரபுரப் படுகொலை நடந்தது சுமார் நாற்பதுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டும் எழுபது பேர்வரை காயமடைந்தும் போயினர். அவரகளும் பலர் தனிக்கல் தண்ணிமுறிப்பு பகுதியாலும் மலையகத்தாலும் வந்தவர்கள்தான்.ஒதியமலைப் படுகொலையை அடுத்து பெடியள் கொக்குத்தொடுவாய் சிங்களவரைத்தாக்க விசாரிக்க வந்தவன் பொன்னம்பலத்தாரை ப் பிடிச்சு விசாரிக்க அநதாள் என்ர அஞ்சுபிள்ளை சத்தியமா என்க்குத் தொியாதெண்ண…அப்ப கூப்பிடு அந்த அஞ்சு பிள்ளையளையும் எண்டுகேட்டான வேற வழியில்லாம் பிள்ளையள கூப்பிட்டுவிட அஞ்சு பொடியளை பிடிச்சுக் கொண்டுபோன ஆமி அஞ்சையும் சுட்டுப்போட்டான்.இதை நான் பிழை சொல்ல வேணுமெண்டதற்காக சொல்லவில்லை சயந்தன் கேட்டதாலதான் சொல்லுறன் இப்பிடி சின்ன சின்னப் பிழையள்தான் இருந்தாலு ம் முட்டையிலும் மயிர்பிடுங்கிற ஆள் நான் ஈழ நாதத்துக்கு காரசாரம் எழுத வெளிக்கிட்ட நாள்ள யிருந்து எல்லாத்திலும் பிழை பிடிக்கிறதை ஒரு கலையாச் செய்வன்…சயந்தன்ர எழுத்து நடைய உச்சேலாது வேற ஏதும் இன்னும் கண்டுபிடிச்சா சொல்லுறன் ஙா ஒருடத்தில அவர் என்னையும் மென்ஷன் பண்ணியிருக்கிறார் சூ….பேசிமுடிய பதின்மூண்டு பேர் வருறமாதிரி சைக் எனக்குப் புல்லரிச்சிட்டுது அப்பிடி வந்திருந்தா….ஏன்ராப்பா கடைசியில நடந்த கொடுமை…ஆக பாலகுமாரன் ஒருவர்தான் கம்பஸில மீற்றிங் வச்சு கடைசியாகேட்டார் ஒரு கேள்வி இனி என்ன எல்லாரும் என்னோட கைகோா்க்கலாமே எண்டார்..இருபத்தொன்பது போ் கை கோர்த்து வந்தவைஆதவன் றெஜி புஸ்பராசா கலைக்கோன் எல்லாம் அதுக்க வந்தவைதான. சரி விடுவம் பெரிய காப்பியம் எழுதயுக்க கொஞ்சம் வருணனை மிகைப்படுத்தல் இருக்கத்தான் வேணும் அது குற்றமல்ல ….எப்பிடிப் பாா்த்தாலும் தனிமனித முயற்சி தலையால கிடங்கு கிண்டினாலும் கிண்டுவனேயொழிய என்னால இவ்வளவு விவரம் அடக்கி எழுத ஏலாது அதில சயந்தனில கொஞ்சப் பொறாமையும்தான் போட்டி போடேலாது பொறாமைப்படுறதை ஆா் என்ன செய்யிறது..

ஆரம்பத்திலயே சிங்களவர் வெட்டுறாங்களாம் கொள்ளையடிக்கிறாங்களாம் எண்டு சிங்கமலையும் மற்றாக்களும் வெளிக்கிடக்க சயந்தன் சின்ப்பிள்ளையா இருந்திருக்கிறார் லெட்சுமணனை அங்கயே கைவிட்டிட்டு தொங்கல்ல போய் ஆதிரையை தொட்டிருக்கிறார் ஆதிரைகளை என்பதே சரி…. மன்னார்பகுதியிலிருந்த களமுனைவிடத்தல்தீவை வளைத்தபோதே பெருமளவு மகளிர் அணியினர் கைவிடப்பட்டனா் . இதேகளமுனையில்தான்ஜெயசிக்குறுய் சமரின்போது யாழ் செல்லும் படையணிதணிகைசெல்வி உட்பட மகளிர் குழு வொன்று முற்றாக சிதைந்தது அதில் தியாகமப்பா தன் குடும்பத்தின மூன்றாவது மாவீரரை அடைந்தார் களமுனைகளின் ஆள்பிடிப்பையும் பிரச்சாரத்தையும் சிறு பிள்ளைத்தனமாக வருணிக்கும் சயந்தனின் ஆதிரை களமுனையின் சாதனைகளைப் பதிவிட பின்நிற்பது போல ஒரு பிரமை தட்டுகிறது. இன்றைக்கும் சிங்கள அரசு நிராயுதபாணிகளான தலைவனை இழந்த போராளிகளைக்கூட விடுவிக்க அஞசுகிறது என்றால் அது அந்த அச்சத்தை தமிழர்களால் இன்னும் தக்க வைக்க முடிந்திருக்கிறது என்றால் எம்பா அதை எழுத பஞ்சிப்பட்டாய். அந்த ரெண்டொரு பெட்டையளத்தவிர மற்றவையப்பற்றி…..ஊகும் எனக்குப்புாியதபல விடயங்களுள் இதுவும் ஒன்று மற்றது சாகரன் நாமகள் காதல்….சாகரன் என்ன சொன்னான் …. ராணிக்கும் முத்துவுக்கும் இடையேயான கடைசி உரையாடலும் கருக்குமுள்ளுப்போல நெஞ்சுக்கை கிடந்து அறுக்குது….என்ரா ஏன்ரா எங்களை இப்பிடி படிச்ச நாவலுக்குப்பின்னால அலைய விட்டாய்…?

www.facebook.com/thamayanthy.ks/posts/875800999205287

By

Read More

யதார்த்தன்

கருவுற்ற பெண் நாவல்

முன் குறிப்புக்கள்

01

நாடுகடத்தப்பட்ட ஆரிய குழுமத்தினரான விஜயனும் அவனுடைய எழுநூறு தோழர்களும் இலங்கைக்கு வந்தபோது , இலங்கையில் இயக்கர் நாகர் முதலான தொல்குடிகள் செழித்த இலங்கை நிலத்தில் வாழ்ந்துகொண்இருந்தனர். ஸ்பானியர்களும் பிரிடிஷ்காரர்களும் அமெரிக்க கண்டங்களின் தொல்குடிகளை வலுக்குன்றச்செய்து தங்களுடைய குடியேற்றங்களை நிறுவ அவர்களிடம் ஆயுதங்களும் நரித்தந்திரமும் இருந்தன. நேரடியான போர் மூலம் அவர்களால் அது சாத்தியமானது .ஆனால் விஜயனுக்கு அது சாத்தியமில்லை. மிலேச்சத்தனம் காரணமாக நாடுகடத்தப்பட அவர்களிடம் வெறும் எழுநூறுபேரே காணப்பட்டனர். அவர்களால் நேரடியாக போர்செய்து இலங்கையில் ஒரு குடியேற்றத்தை பெறமுடியாது.

எனவே விஜயன் இலங்கையில் கண்ணுற்ற முதல் பெண்ணான குவேனியை வஞ்சித்து திருமணம் செய்தபின் மிக இலகுவாக இலங்கயின் ஆட்சியை தனக்கு கீழ் கொண்டுவந்தான். தேசத்தை கைக்கொள்ளதக்க பெண்களை அக்கால ஆதிக்குடிப்பெண்கள் கொண்டிருந்தனர். தாய்வழிச்சமூகத்தின் இருப்பு இலங்கையின் வரலாற்று ஓட்டத்தில் அங்காங்கே முக்கியம் பெறுகின்றது. குறிப்பாக தென்னாசிய பெண்கள் ஐரோப்பியர் காலம் வரை (கி.பி 16 நூற்றாண்டு) தம் தாய்வழி சமூக உரித்தை ஆணுக்கு நிகராக பேணிவந்ததை இவ்வாறான வரலாற்று இடங்களின் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.

(2012 எழுதிய கட்டுரை ஒன்றிலிருந்து)

முன்குறிப்பு 02

30 வருடகால இனப்போர் ஆயிரக்கணக்கான பொய்களாலும் உண்மைகளாலும் விளங்கிக்கொள்ளப்படுகின்றது. ஒவ்வொரு நிலத்தில் இருந்து பார்க்கும் ஒவ்வொரு தனிமனிடனுக்கும் போர் பற்றி வெவ்வேறான கருத்தாக்கங்கள் மனதினுள்ளும் அறிவினுள்ளும் கருக்கொண்ருக்கும். உண்மையின் அல்லது உண்மையின்மையின் இருப்பென்பது நிலையற்ற ஓர் மாறிலி என்றே கருகின்றேன் .

30 வருடமும் ஒரு பெரும் கால மேடையில் பொரும் போர் சார்ந்தவிடயங்களும் ஓர் நாடகத்தைப்போல நிகழ்த்தப்பட்டன. நிகழ்த்துபவர்கள் தவிர ஏனையவர்கள் மேடையை சுற்றி வாழ்ந்தனர்.

(போரும் அதன் குழந்தையொன்றும் – கட்டுரையின் நறுக்கு)

 

ஆதிரை -01 சமூக அமைப்பினை முன் வைத்து.

காலணித்துவம் தென்னாசியாவின் பெண்மனத்தை ஆணின் பார்வையின் ஊடாக சிந்திக்கும் உணரும் ஓர் சார்பு நிலையினதாக பூரணமாக மாற்றிப்போட்டது, குடும்பத்தில் தொடங்கும் சமூக கட்டுமானம் பெண்ணை ஆணின் சார்பானவளாக மாற்றியது. தாய்வழிச்சமூக அமைப்பு தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பெண் நனவிலி மனம் ஆண்சார்பினை ஏற்றுக்கொண்டது ஆண் அதிகாரத்தின் சின்னமானான் , ஆண்மனம் புறவயமான சுதந்திரமான சிந்தனை, மிக்கதாய் மாறிக்கொண்டது , பெண் அகத்தினுள்ளே வாழ்ந்தாள் அவளுடைய உச்ச பட்சமான கரிசனை தன்னுடைய குடும்பம் பற்றியதும் , சுதந்திரமான ஆணை பெற்றேடுப்பதும் வளர்ப்பதும் பற்றியதுமாகவே இருந்தது. விவசாய முதலானவற்றை கண்டறிந்தவளும் மிகப்பெரும் நிலத்தலைவியாக இருந்த தென்னாசிய பெண்மனம் காலணித்துவத்தின் பின்னர் பெருமளவில் மாற்றியமைக்கப்பட்டது , ஆதிப்பெண்ணின் உயர் தன்மை இறுதியாக தென்னாசிய குறிப்பாக இந்திய நிலத்திலேயே எச்சங்களை கொண்டு நின்றது , உதாரணமாக இந்திய பெண் தெய்வங்கள் பற்றிய தொன்மங்களை பழைய தாய்வழி சமூகத்தின் எச்சங்கள் எனலாம். இது இந்திய பண்பாட்டின் மிக செறிவான தாக்கத்தைகொண்ட இலங்கை நிலத்திற்கும் பொருந்தும்.

இலங்கையின் பெண் சமூக அமைப்பு என்பது பின் காலணித்துவத்தின் பின்னரும் இந்திய அளவில் ஆண்பார்வைக்குள் மறைந்து விடவில்லை என்றே கருதுகின்றேன். இலங்கை சமூக அமைப்பில் அதிலும் இலங்கை தமிழ்ச்சமூக அமைப்பில் பெண்கள் அகவயமான வாழ்வியலை மேற்கொண்டாலும் சமூக அமைப்பின் பெரும் தூண்களாகவே ஆண்மனத்தினால் கருதப்படுகின்றது. குறிப்பாக 70 களின் பின்னர் எழுந்த விடுதலைப்போராட்டமும் முரண்பாட்டுக்குள்ளே தினம் ஜீவித்த வாழ்க்கையும் குடும்பத்தலைவியும் ஆணுக்கு சமனாக இயங்க வேண்டிய கடப்பாட்டை உள்ளேற்றியது.

இதன் அடிப்படையிலேயே சயந்தன் ஆதிரையை பெண் மனத்தில் அதிகம் காலூன்றி நின்று எழுதமுனைந்திருக்கிறார். நாவல் முழுவதும் எழும் போரின் , போராட்டத்தின் பின்னணியில் இயங்கும் குடும்பங்களினதும் அவற்றின் தலைமுறைகளினதும் மாளாசோகமும் , கொண்டாட்டமும் இத்திமரத்துகாரி (காளி ) யில் தொடங்கி ஆதிரை வரை பரந்து புரையோடுகின்றது. நாவல் முழுவதும் பெண்களிடமே காலம் இருக்கிறது , நாவலாசிரியரின் பிரதியை பெண்களே எழுதுகின்றனர் மலையில் தொடங்கி காட்டில் இறங்கி குடாவில் திரும்பி கடல் வரை பெண்களை தொடர்ந்தே எழுத்து செல்கின்றது.

நிற்க

நிலம் பற்றிய மூன்று குறிப்புக்கள்

மலை

சயந்தன் மலையகத்தில் கதையை தொடங்குகின்றார் , மலைய தமிழர்களின் வாழ்வின் பெருஞ்சோக் அத்தியாயங்கள் இன்ரு பரவலாக இலக்கிய மேடைக்கு எடுத்து வரப்பட்டாலும் இன்றும் அது “ஈழத்து இலக்கிய பரப்பில்” தனியான ஒன்றாக கருதப்படுகின்றது , இலங்கையின் 30 வருட போராட்டம் , அடக்கு முறை , இனவாதம் என்பவற்றுக்கும் மலையக மக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லாததை போலவும் அவர்களுடைய துன்பம் பிறிதானது என்பதும் இலக்கியங்களின் பொது புத்தியாகவுள்ளது , ஆனால் இனப்பிரச்சினைக்கும் சரி மலையகமக்களின் பிரச்சினைக்கும் சரி அடக்குமுறையும் அரசும் தான் எதிர் தரப்பு என்பதே உண்மை . யாழ்ப்பாணத்தார் “தோட்டக்காட்டான்” “கள்ளத்தோணி” என்று மோசமமான சித்தரிப்பொன்றை அவர்கள் மீது வைத்திருக்கின்றார்கள் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் மேட்டுக்குடி உயர் சைவ வேளாளர் என்று சொல்பவர்களின் நாவில் நான் பலமுறை இத்தகைய வார்த்தைகளை கண்டிருக்கின்றேன், வன்னிமக்களை காட்டார் என்பதும் (ஆனால் போரின் போது வன்னிக்கு ஓடி பதுங்கிகொண்டது நகை முரண்) மலையக மக்களை கள்ளதோணி என்பதும் யாழ்ப்பாண பொதுமனநிலையின் கறுப்பு பக்கங்கள் இதனை ஆசிரியர் தெளிவாக காட்டுகின்றார். யாழ்ப்பாண மக்கள் பற்றிய எள்ளி நகையாடல் களில் ஆசிரியர் மிகதிறமாக இவற்றை முன் வைக்கின்றார்.

மலையக மக்கள் இலக்கியத்திலோ , அரசியலிலோ தனித்து விட வேண்டியவர்கள் அல்லர் , உரிமைகள் கோரப்படும் போது தமிழ்ப்பரப்பு அவர்களின் தோள்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டியது கடமையாகும் என்பது சயந்தனின் தீர்க்கமான நிலைப்பாடு.
இந்தியராணுவம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கமலையை கொடுமைப்படுத்தும் போது வலியின் உச்சத்தில் அவ
“ஐய்யா நானும் இந்தியாவிலிருந்து வந்தவன் தான் ” என்று கதறுகின்றான். இந்திய இராணுவம் அவன் தலையைகொய்து எடுத்துபோகின்றது.

இவ்வாறு

காடு

கதை காட்டிற்கு இறங்கிய பின்னர் தான் உருக்கொண்டாடுகின்றது , போராட்டத்தின் பின்னணியில் பெண்களும் ஆண்களும் வாழ்வியலை மாற்றியமைக்கின்றனர். தொழில்கள் மாறுகின்றன, உறவுமுறைகள் புரழ்கின்றன. மூன்று தலைமுறைக்கும் வெவ்வேறேனான வாழ்க்கை முறை , இயற்கையில் இருந்து மக்களை போர் பிரிக்கின்றது , தெய்வநம்பிக்கைகள் , இத்திமரமாக பாறிவிழுகின்றன , காட்டின் மகன்கள் சோபையிழந்துபோகின்றனர். காடு சமநிலையை இழக்கின்றது எனினும் மனிதர்களை அது கைவிடுவதாக இல்லை , மயில்குஞ்சன் , சங்கிலி போன்ற மனிதர்கள் விடுதலைக்காக போராடுபவர்களை காட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றனர், காட்டை அவர்கள் எடுத்துக்கொள்கின்றனர்.காடு அவர்களை எடுத்துக்கொள்கின்றது. காட்டின் விளிம்பில் போர் தொடங்குகின்றது , இளவர்சர்களும் இளவரசிகளும் போருக்கும் போகின்றனர், அவர்களிம் காதல் இருக்கிறது , காமம் இருக்கிறது கூடவே ஓர்மமும் கோபமும் காலத்திற்காக வந்து சேர்கின்றன , காட்டின் விளிம்புகள் அவர்களை உள்ளே இழுத்துகொள்கின்றது அவர்கள் காட்டுக்குள் நுழைய விளிம்பில் இருந்த மக்கள் கொஞ்சம் அசுவாசம் அடைகின்றனர் , அவர்களை பாதுகாக்க காட்டுக்குள் இளவரசர்களும் இளவரசிகளும் இருக்கின்றனர் , அவர்கள் அரசர்களை நம்புகின்றார்கள். எல்லோரும் நம்புகின்றார்கள்.
இடையில் தாய்குலத்தின் கண்ணீர் எழுகின்றது.

குடா

விடுதலை போராட்டத்தின் ராஜாக்களின் நகராகவும் , சிறிய நீர்ப்பரப்பால் துண்டிக்கப்படும் நிலமான யாழ் குடாநாட்டின் மனநிலை உடைய மக்களை சயந்தன் நன்கு உள்வாங்குகின்றார் , சாதியமைப்பு , சொத்து சேர்த்தல் முதலான இடங்களில் யாழின் உண்மை முகங்கள் பலதும் வெளியே எடுக்கப்படுகின்றன. கதையின் பல இடங்களை திருப்பிவிடும் நிலமாக யாழ் வன்னியுடன் அவ்வப்போது இணைகின்றது.

கரை

கரையில் எல்லோரும் நம்பிக்கையுடன் ஒன்று கூடுகின்றார்கள் , இளவர்சர்களும் இளவரசிகளும் வஞ்சிக்கப்படுகின்றார்கள். போர் தாண்டவமாடுகின்றது , நம்பிக்கையெல்லாம் கடலில் கரைகின்றது , மாபெரும் கனவு உடைந்து நொறுங்குகின்றது, ஒரு இனம் அதன் நிலத்தில் வஞ்சிக்கப்படுகின்றது. கரையெல்லாம் ரத்தம் . போர் முடிந்த பின் அல்லது முடிந்ததாக சொல்லப்பட்ட பின் எல்லாம் ஓலத்தில் நிலைக்கின்றது.
ஆண்களின் ஓலம் பெண்களின் குரலில் மறைந்து போகின்றது.

இனி

ஆதிரை நாவல் விமர்சனம் இங்கே தொடங்குகின்றது

முன்பு குறிப்பிட்டதைப்போல் ஆதிரை போருக்கு பின்னால் இயங்கும் மூன்று தலைமுறையின், தாய்களின் கண்ணீரை தாங்கிநிற்கின்றது , அழகியல் பூர்வமான படிமங்களை ஆதிரை பெரும்பாலும் வெற்றிகரமாக உருவாக்கின்றது . மொழியமைப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற எண்ணத்தை சில இடங்களில் காணலாம்.
சயந்தன் உண்மையின் பக்கத்தில் குற்ற உணர்வோடு நிற்கப்பார்கின்றார் , பிரபாகரன் சொன்ன
இயற்கை எனது நண்பன் ,வாழ்க்கை எனது தத்துவாசிரியன் வரலாறு எனது வழிகாட்டி , என்பவை ஆரம்ப அத்தியாயங்களின் பெயர்களாய் அமைக்கின்றார். அதனைப்போல் ஓயாத அலைகள் வெற்றி நிச்சயம் என்று பெரும் போர்களங்களின் பெயர்களும் ,

இங்கே குற்றம் என்பது கூட்டு பொறுப்பும் கூட , நம்முடைய பிணங்களை மீள் பரிசோதனை செய்யவேண்டும்தான் ஆனால் தியாகங்களை கொச்சைபடுத்தல் என்பது அறமன்று.
உண்மையினதும் , அறத்தினதும் , அன்பினதும் , கருணையினதும் மற்றும் நீதியினதும் அருகில் சென்று நின்று கொள்ளள் மட்டுமே உத்தமானது.

ஓஷோ வாழ் நாள் பூராகவும் காந்தியை விமர்சித்தவர் ,ஏராளம் கடிதம் காந்திக்கு எழுதிதள்ளினார் , காந்தி உருவாக்க நினைக்கும் இராம ராஜ்ஜியம் மீது கேள்வி கேட்டார் , காட்டமாக விமர்சித்தார் , எதிர்பிலே வாழ்ந்தார். ஆனால் காந்தி இறந்ததும் ஓஷோ குலுங்கி குலுங்கி அழுதாராம் .

நிற்க

நாவலில் ஒரு இடத்தில்

“போன கிழமை சந்திரா டீச்சரிட்ட படிச்சதெண்டு சயந்தன் எண்டு ஒருத்தன் வந்தவன் கதையெழுதுறவனாம் ரீச்சர் எப்பிடி செத்தவா ? நீங்கள் எந்த பாதையால மாத்தளனுக்கு போனீங்கள் , ? இயக்க பெடியள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் ? அவங்கள்ள இப்பவும் கோவம் இருக்கோ எண்டெல்லாம் கேட்டு தன்ர ரெலிபோன்ல ரக்கோட் செய்தவன் ”
“ஏனாம் ?”
“தெரியேல்ல சனம் உத்தரிச்சு அலஞ்ச நேரம் கள்ளத்தோணியில வெளிநாட்டுக்கு போனவங்கள் இப்ப எல்லாம் முடிஞ்ச பிறகு எல்லாரும் வந்து விடுப்பு கேக்கிறாங்கள்”

என்று வரும் .

இப்பிடியான இடங்களிலும் அத்தார் , சிவராசன் முதலான பாத்திரங்களின் நிலையிலும் அப்பாத்திரங்களின் மொழிதலிலும் அடிக்கடி ஆசிரியரின் மரணத்தையும் மனத்தையும் காணமுடிகின்றது.

போரின் பின்னர் நடக்கும் அத்தனை அத்தியாயங்களும் 2000 களின் குழந்தைகளாக எமக்கு முன்னே நிகழ்ந்தவை நிகழ்ந்துகொண்டிருப்பவை , கடைசி 70 பக்கங்களை கண்ணீருடன் கடக்க வேண்டியுள்ளது ,
விபூசிகா போன்று போரின் மிச்ச அவலங்கள் பெண்குரலெடுத்து காணாமல் போன உறவுகளுக்கு ரோட்டில் கிடந்து அழும் காட்சிகளை இப்போது தரிசித்துகொண்டிருகிறோம் . எல்லோர் வீட்டிலும் போரின் ஏதோ ஒரு மிச்சம் கிடந்து அழுத்துகின்றது ஆத்மாவிற்கு நெருக்கமாக சென்று நெருடுகின்றது .

இது செவ்வியல் இலக்கியமாக , மகத்தான நாவலா என்பதற்கு 508 பக்கத்தில் கசியத்தொடங்கும் கண்ணீர் 664 ஆம் பக்கத்தில் ஆதிரை சயனைடை எடுக்கும் போது ஒரு நதியாக மாறிவிட்டதை மீறி நான் எதுவும் எழுதுதல் . சுயகொலையாகும்.

ஆதிரை தமிழிலக்கிய பரப்பின் இன்னொரு பெரும் பாய்ச்சல் , தலைமுறைகளின் கொண்டாட்டம் , இருப்பு , கண்ணீர் என்பவற்றின் பிறிதொரு படியெடுப்பு. இத்திமரக்காரி எனும் மிகப்பெரும் பெண் தொன்மத்தில் இருந்து ஆதிரைவரை ஒலிக்கும் கூட்டு பெரும் பெண்குரல், ஆதிரை தனி ஒரு முழுமையான செய்தியை சொல்லு முடிக்கவில்லை , அது எச்சங்களை , அல்லது சூல்களை உருவாக்குகின்றது , ஆதிரை ஒரு கருவுற்ற பெண் நாவல் , இன்னும் பலதை உருவாக்கதக்க சூல்களை ஆதிரையெங்கும் காண்கின்றேன். இன்னும் ஆயிரக்கணக்கான உண்மைகள் இருக்கின்றன, நாம் மிகத்தொலைவிற்கு போகவில்லை கடந்தகாலம் மிக அருகில் கிடக்கின்றது , இன்னும் உத்தரித்து கிடக்கின்றது.

வேதனையுறும் சமூகத்தின் அவலக்குரல் , கோபத்தின் சீற்றம் , அறத்தின் யுகக்கண்ணீர் , நீதியின் நெடுந்தாகம் ஆதிரையின் வழியே பெரும் சத்தமாய் , அவலக்குரலால் கோரப்படுகின்றது.
அதுவும் ஒரு பெரும் குரல் கூட்டம் பெண்குரலால் அழுத்தி ஒலிக்கின்றது ,
ஏன் ஆண்கள் யாரும் அவலத்தில் அழுவதில்லையா , அது கண்ணீரில்லையா?
ஆம் , ஆனால்

பெண்ணின் கண்ணீர் ஆத்மாவிற்கு மிக நெருக்கமானது .

http://yatharthann.blogspot.ch/2016/01/01.html

By

Read More

× Close