சின்ராசு மாமாவின் சட்டைப் பையினில் எப்போதுமிருக்கிற பீடிக் கட்டு அல்லது சுருட்டு அல்லது ஒற்றைச் சிகரெட் முதலானவற்றைப் பார்த்து அவரது தொழில் நிலவரத்தைச் சொல்லுகிற ட்ரிக்ஸ் எனக்குத் தெரிந்திருந்தது. “மாமோய், கடலம்மா இண்டைக்கு பார்த்துப் பாராமல் அள்ளித் தந்திருக்கிறா போல” என்றால் அன்றைக்கு ஒரு முழுச் சிகரெட் பெட்டி சின்ராசு மாமாவின் சட்டைப் பையினில் முன் தள்ளியவாறு இருக்க மணிக்கொரு தடவை அவர் சிகரெட்டை ஊதித்தள்ளுகிறார் என்று அர்த்தம். அப்போது இடுங்கிய கண்களில் மகிழ்ச்சி மேவியிருக்க இரண்டொரு தடவை உடலைக் குலுக்கி மாமா சிரிப்பார். கூடவே கொஞ்சம் கள் வெறியும் சேர்ந்திருந்தால் “மருமோன்” என்று இரண்டொருநாள் மழிக்காத தாடி சேர்ந்திருக்கும் கன்னங்களால் என் கன்னத்தில் உரசி கைகளால் உச்சி வருடிக் கொடுப்பார். கடற்கரையெங்கும் நிறைந்து கிடக்கிற இராவணன் மீசையாட்டம் அவரது வெண்ணிறக் கம்பித் தாடி மயிர்கள் என்னைக் குத்தும். அப்போது கள்ளின் புளித்த வாசமும் சிகரெட்டா புகையிலயா பீடியா என உய்த்தறிய முடியா ஒரு புழுத்த நாற்றமும் அவரிடமிருந்து வீசிக்கொண்டிருக்கும்.
கடலுக்குப் போகாத நாட்களில் கரையில் நெஞ்சளவு தண்ணீரில் ஒட்டிக் கூடு கவிழ்த்து சமையலுக்கும் மீன்கள் கிடைக்காத நாட்களாயிருந்தாலும் சரி, இரவில் கரை மறையப் போய் வலை படுத்து நிலவு வெளிக்க முதல் இழுக்கிற வலையில் சீலாவும் ஒட்டியும் திரளியுமாய் வலையின் கண்களுக்குள் சிக்கிக் கிடக்க கரையைத் தொடுகிற படகில் இருந்து ஓர் இராஜகுமாரனாய் அவர் துள்ளிக் குதித்து நடக்கிற நாட்களாயிருந்தாலும் சரி சின்ராசு மாமா கள்ளில் இருந்து இன்னொரு உயர் வஸ்துவுக்கு மாறினார் இல்லை. வெயில் கொழுத்துகிற மத்தியான வேளைகளில் நேரே தவறணையிலிருந்து போத்தல் நிறைந்த கள்ளோடு வருவார். பனையோலையைக் கோலி, பிளா செய்து கள்ளை வார்த்து பதுங்கு குழிக்கு வெட்டி அடுக்கிய பிறகு எஞ்சியிருந்த பனங்குற்றியொன்றில் இரண்டு காற்பாதங்கள் மட்டுமே தொட்டிருக்க குந்திக் கொள்வார். கள்ளில் மிதக்கிற பனம் பாளைத் துருவல்களை கையினால் வழித்து ஒதுக்கியபடி பொச்சடித்துக் குடிக்கத் தொடங்கும் போது மறு கை, மாமி சுட்டு வைத்த சற்றே பெரிய மீனில் லாவகமாக முள்விலக்கி சதையை வழித்து அருகில் குவித்தபடியிருக்கும். அவ்வப்போது வாய்க்குள் அவற்றை அதக்கிக் கொள்வார்.
சின்ராசு மாமாவை அப்படிக் கோலத்தில் பார்க்கிற போது “இந்த மனுசன் ஒழுங்கா குண்டியை குத்தியில வைச்சு இருக்கலாம்தானே” என்று எனக்குள் ஓடும். துாரத்திலேயே நின்று கொள்வேன். சுட்ட மீனின் வேகாத வெள்ளைச் சதையும் கருகிச் சுருங்கிய தோலும் செதில்களும் அரியண்டமாயிருந்தன. அப்பொழுது அவர் என்னை நோக்கி பிளாவை நீட்டுவார்.
“வா மருமோன், எப்பன் குடி” நான் முகத்தைச் சுழித்தபடி நிற்பேன்.
“கற்பகதருவடா.. உடம்புக்கும் மனசுக்கும் நல்லது.”
“புளிச்ச கள்..” என்றுவிட்டு நான் நகர்ந்த பிறகு பின்னால் ஒரு குழந்தைப் பிள்ளைச் சிரிப்பொன்று படரும். “மாமிட்டைக் கேள், சுறாவும் கெளுத்து முட்டையும் எடுத்து வைச்சிருக்கிறன். கொண்டு போய் கொப்பம்மாட்டைக் குடு”
அப்பம்மாவின் சமையலில், மஞ்சள் சேர்த்த சுறா வறுவல், பொன்னிறத் தேங்காய்த் துருவல்களைப் போலிருக்கும். வெறும் வெள்ளைச் சோற்றில் பால் சொதியும் சுறா வறையும் பிசைந்து வாரத்தில் ஏழு நாளும் சாப்பிட நான் தயாராயிருந்ததை சின்ராசு மாமா அறிந்திருந்தார். குழம்பில் கலந்திருக்கும் கொண்டைக் கடலை அளவிலிருந்த கெளுத்து மீன் முட்டைகளை தங்கச்சி அடிபட்டுச் சாப்பிடுவாள். மாமா அவளுக்கு இரண்டு பெயர்களை வைத்திருந்தார்.
“முட்டைச்சி, கருவாட்டுப் பூனை”
சின்ராசு மாமாவிடம் சிகரெட், பீடி, சுருட்டு என்பவை போலவே கட்டுமரம், எஞ்சின் படகு, சமயங்களில் எதுவுமில்லாத வெறும் துாண்டில் என நிலையற்ற தொழிலும் இருந்தது. நாட்டு நிலமைகள் குலைய முன்னிருந்தே அவரிடம் இரட்டை எஞ்சின்கள் பொருத்திய சற்றே பெரிய படகொன்றிருந்தது. இரண்டொரு பேரை அழைத்துக் கொண்டு அவரே வலை படுக்கப் போவார். பதின்நான்கு வயதில் அப்படிப் போகத் தொடங்கியவர் கல்யாணத்திற்குச் சற்றுக் காலம் முன்பாக கடன் பட்டு அந்த எஞ்சின் படகினை வாங்கியிருந்தார். ஆட்களை வைத்துத் தொழில் செய்யத் தொடங்கிய பிறகும் சின்ராசு மாமா கடலுக்குப் போகாத நாள் கிடையாது. பொழுது நன்றாய்க் கழிந்து இருள் பரவிய பிறகு ஆளும் பேருமாய் அவரது படகினை நீருக்குள் தள்ளி இறக்குவார்கள். பின்பகுதியில் எஞ்சினுக்கு அருகில் சின்ராசு மாமா உட்கார்ந்து கொள்வார். அவரே அதனை இயக்குவார். நட்சத்திரங்கள் அவருக்கு வழிகாட்டின.
கரையின் வெளிச்சங்கள் மறைந்த துாரத்தில் அந்தத்தில் ஈயக்குண்டுகளையும் மேலே உருண்டை மிதவைகளையும் கொண்ட வலையை அவர்கள் கடலில் இறக்கினார்கள். சீசனுக்கு ஏற்ற மாதிரி மாமா வலைகளைத் தீர்மானிப்பார். முரல் காலங்களில் பறவை வலையும், சூடை மீன் நாட்களில் சூடை வலையும் தவிர்த்து மற்றைய நாட்களில் அறக்கொட்டி வலையை அவர் எடுத்து வருவார். அந்த வலையில் சற்றே உருப்படியான மீன்கள் அள்ளுப்பட்டன.
வலையைப் படுத்த பிறகு நீரின் மேலே மஞ்சள் வெள்ளை நிறங்களாலான உருண்டை ரெஜிபோம் காவிகள் அரை வட்ட வடிவில் அல்லது நேர்கோட்டுக் கிடையில் அலையினில் துள்ளியபடி மிதந்து கொண்டிருக்கும். வலையின் இரண்டு முனைகளையும் படகோடு இணைத்து எஞ்சினை அணைத்து சற்றுத் தொலைவினில் நங்கூரம் பாய்ச்சியிருப்பார்கள். சின்ராசு மாமா சட்டியில் குழைத்த சோற்றினில் ஜாம் போத்தலில் எடுத்து வருகிற புளிச் சொதியை ஊற்றிப் பிசைந்து மற்றவர்களுக்கு கவளமாகக் கொடுப்பார். அவர்கள் இளைஞர்கள். நீண்ட காலமாக மாமாவோடு தொழிலுக்கு வருகிறவர்கள்.
“கடைசி வரைக்கும் என்னோடேயே இருந்து தொழில் செய்யலாம் என்று நினைக்கக் கூடாது. ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு சொந்தமாத் தொடங்கிவிட வேணும். அப்பவும் கடலுக்கு வாறதை நிப்பாட்டக் கூடாது. இது உங்கடை கடல், உங்கடை சொந்தத் தொழில். நீங்கள்தான் வரவேணும். வீட்டில இருந்து கடல்தொழில் செய்ய முடியாது”
“கடல் ஒரு திரவியம், எப்பவும் சுரந்து கொண்டே இருக்கிற மடி. இந்த மடியை விட்டுட்டு சவுதிக்கும் ஓமானுக்கும் போய் என்ன செய்யப்போறாங்கள்” என்று மாமா சமயங்களில் அலுத்துக் கொள்வார்.
இரவுத் தொழிலில் அவர் கண்ணயர்வதில்லை. படகின் விளிம்பில் முதுகு சாய்த்து நட்சத்திரங்களை அளந்து கொண்டிருப்பார். அவை ஒவ்வொன்றினதும் பெயர்களை அவர் நினைவு வைத்திருந்தார். அவற்றைச் சத்தமாகச் சொல்லிப் பார்ப்பார். விரிந்த கடலும் இருண்ட வானமும் முகத்தில் வருடுகிற குளிர் காற்றும் இன்னதென முடியாத உணர்வலைகளை அவருக்குள் உண்டு பண்ணின. அக்கணங்களில் அவரது உடல் அசைந்து நடுங்குவதைப் போலிருக்கும். “முப்பது வருடங்களின் அரைவாசி நாட்கள் இந்தக் கடலின் அலைகளின் நடுவே கழிந்தன” எனத் தோன்றுகையில் திடீரென்று விரல்களை விரித்து தண்ணீருக்குள் அங்குமிங்கும் அலம்புவார். சட்டென்று நீரை அள்ளி தீர்த்தம் போல பருகி நெற்றியில் தடவி தலையினில் தெளித்துக் கொள்வார்.
பின்நிலவு வெளிக்கிளம்ப முன்னர் வலையின் இரு முனைகளையும் பிடித்து வலித்து படகில் ஏற்றத் தொடங்குவார்கள். பாடு அதிகமென்றால், அலைகளில் படகு தள்ளாடியபடியிருக்க இழுத்து ஏற்றுவதில் சிரமமிருக்கும். அச்சமயங்களில் மாமா சாரத்தைக் கழற்றி வைத்துவிட்டு பென்ரரோடு கடலுக்குள் இறங்கி விடுவார். தண்ணீருக்குள் நீந்தியபடி அவர் தள்ளிக் கொடுக்க இளைஞர்கள் வலையை ஏற்றுவார்கள்.
வலையின் கண்ணிகளுக்குள் உடலை நுழைத்து இழைகள் இறுக்க செத்த மீன்களைத் தவிர்த்து நட்சத்திரங்களும் அகப்பட்டன எனத் தோன்றும் குட்டிக் குட்டியான வெள்ளி நிற மீன்களும் பெரிய வாட்களையொத்த மீன்களும் சட சட என உடலை அடித்துத் துடிக்கிற சத்தம் ஒரு கலவர சூழலை படகுக்கு கொடுத்திருக்கும். சின்ராசு மாமா இரண்டு புறங் கைகளையும் தலையில் வைத்து விரல்களை மடக்கி நாவூறு கழித்துக் கொள்வார். அவரிடம் வினோதமான ஒரு பழக்கம் இருந்தது. கரைக்குப் புறப்பட முன்னர், உயிரோடு துடிக்கிற ஒரு மீனை மீண்டும் கடலுக்குள் விடுவார். அது நீரைச் சுழித்து ஓடுகிறதா என் இருட்டுக்குள் தேடுவதைப் போல சற்று நேரம் பார்த்தபடியிருப்பார். அவரது முதலாளியிடமிருந்து இந்தப் பழக்கத்தை தானும் கொண்டதாக ஒரு நாள் சொல்லியிருந்தார். அப்போது இளைஞர்களில் ஒருவர் க்ளுக் என்று சிரித்தான்.
“நாளைக்கே இந்த மீன் திரும்பவும் பிடிபட்டு கறிக்கு துண்டானால் என்ன செய்யிறது”
சின்ராசு மாமா அவனை ஊடுருவிப் பார்த்தார். “பிடிபடட்டும். துண்டாகட்டும். ஆனால் ஒரு நாளென்றாலும் கூடுதலாக அதுக்கு உயிர் வாழக் கிடைச்சது பார்த்தியா. அதுதான் விசயம். இது மீனுக்கு மட்டுமில்லை. எனக்கு உனக்கு என்று எல்லாருக்கும் தான் பொருந்தும். மனிசர்களுக்கும் அப்பிடித்தான். இப்ப சாகிறாயா இல்லாட்டி கொஞ்சம் நேரம் கழிச்சு சாகிறாயா எண்டு எமன் கேட்டால் நீ என்ன சொல்லுவாய்..” என்றவர் இடைவெளி விட்டுத் தொடர்ந்தார். “கிடைக்கிற ஒரு நிமிசமென்றாலும் உயிரோடு வாழத் துடிக்கிறதுக்குத்தான் கடலுக்கையும் வெயிலுக்கையும் புழுதிக்கையும் இந்த ஓட்டம்.”
நாட்டு நிலமைகள் சீரழியத் தொடங்கின. இந்திய இராணுவ காலத்தில் கடலில் இறங்குவதற்கு நேரக் கட்டுப்பாடுகள் வந்தன. இரவுத் தொழிலைச் செய்ய முடியாமல் போனது. சின்ராசு மாமா முதன்முறையாக சிகரெட்டில் இருந்து பீடிக்கு மாறினார். எஞ்சின்கள் கழற்றப்பட்ட அவரது படகு கடற்கரைச் சுடுமணலில் நீண்டகாலத்திற்குக் குப்புறக் கவிழ்க்கப்பட்டிருந்தது. அவரோடு தொழிலுக்கு வந்த இளைஞர்களில் ஒருவன் கட்டடத் தொழில் ஒப்பந்தத்தில் அபுதாபிக்குப் போனான். இடுப்பளவு தண்ணீரில் தனித்து நின்று துாண்டில் போட்டுச் சேர்த்த மீன்களோடு கரைக்குக் நடக்கும் போது ஒரு காலத்தில் கரையேறிய படகிலிருந்து துாக்க முடியாமல் சுமந்து வந்து ஏலம் கூறுமிடத்தில் கொட்டிய மீன் திரள் குவியல் நினைவுக்கு வரும். தன் கால்கள் சொர சொர மணலில் புதைவதாய் உணர்ந்து திடுக்கிட்டுச் சுதாகரிப்பார்.
செலவுகளைச் சமாளிக்க படகின் எஞ்சின்களை அடிமாட்டு விலைக்கு சின்ராசு மாமா விற்றார். மாதகலில் இருந்து இந்தியாவிற்கு கடத்தல் செய்கிற ஒரு கோஷ்டி அதனை வாங்கியது. “நாங்கள் ஒளிச்சு மறைக்கேல்லை. கடத்தல் செய்யத்தான் கேட்கிறம்” என்று அவர்கள் சொன்ன போது மாமா அவர்களிடம் “அதுக்குப் பேர் கடத்தல் இல்லை” என்றார்.
“இது யாவாரம். தொன்று தொட்டு நடக்கிற யாவாரம். இடையில அரசாங்கங்கள், சுங்கம் எண்டும் வரியெண்டும் கொண்டந்திட்டு காலம் காலமா நடக்கிற யாவாரத்தை கடத்தல் எண்டுறாங்கள். உங்களுக்குத் தெரியுமோ அந்த நேரம் பர்மா வரைக்கும் இந்த யாவாரம் நடந்தது”
அவர் வலைகளையும் விற்கும் காலம் வந்தது. பகலில் கண்ணுக்குத் தெரிகிற துாரத்தில் களங்கண்ணி செய்து பார்க்கலாம் என்றான பிறகு, உசரத்தில் படுக்கிற வலைகள் தோதுப்படவில்லை. அவற்றை விற்று களங்கண்ணி வலையும் பதினைந்து முழக் கம்புகளும் வாங்கினார். காய்ந்த பாசிகள் முழுதும் வழியாத பழைய வலைகள். கண்டல் பட்டை சாயம் போட்டு அவற்றை அவித்தெடுத்தார்.
நீண்ட காலத்தின் பின் படகு மீண்டும் நீரில் இறங்கியது. மகனைப் பள்ளிக்கூடத்தால் அன்றைக்கு நிறுத்தி அழைத்துச் சென்றிருந்தார். தடியூண்டித் தாங்கியபடி சென்று கரை நிலம் தெரிகிற துாரத்தில் வைத்து கடலில் கம்புகளை வட்டமாகப் புதைத்தார். மகன் ஒரு தவளையைப் போல கைகளையும் கால்களையும் விரித்து ஒவ்வொரு கம்புகளுக்கு இடையிலும் பாய்ந்து அவற்றில் வலைகளைப் படரவிட்டான். மாமா படகில் ஏறி களங்கண்ணிக் கூட்டை திருப்தியோடு பார்த்தார். அமாவாசைக் காலமான இந்த இரண்டு வாரமும் மீன்பாடு பரவாயில்லாமல் இருக்குமெனத் தோன்றியது.
அன்றைக்கு இரவு மாமியோடு பெரும் புடுங்குப்பாடு அவருக்கு வந்தது. மகனை பள்ளிக் கூடத்தால் நிறுத்தி கூட்டிச் சென்றதற்கு மாமி சத்தம் போட்டார். சின்ராசு மாமாவிற்கு சாப்பாட்டைப் போட்டுக் கொடுத்துவிட்டு “அவன்ரை வாழ்க்கையையும் தண்ணிக்குள்ளை தாழ்க்காட்டப் போறியளே..” என்றார்.
மாமா இன்னமும் சாப்பிடத் தொடங்கவில்லை. பிசைந்து கொண்டிருந்தார். மனைவியிடமிருந்து அவ் வார்த்தைகளை அவர் எதிர்பார்க்கவில்லை. கையில் வைத்திருந்த பீங்கானைச் சுழட்டி எறிந்தார். அது குசினிச் சுவரில் பட்டு துண்டுகளாய்ச் சிதறியது. நீளத்திற்கும் சோறும் கறியும் கொட்டுப் பட்டிருந்தன. காலடியில் கிடந்த அரிக்கன் லாம்பை காலால் உதைந்து விட்டார். அது சரிந்து விழுந்து உருள, உள்ளே நெருப்பு பக் பக் என்று சத்தமிட்டது. மாமி ஓடிவந்து அதனை நிமிர்த்தியபோது சடாரென எழுந்த சின்ராசு மாமா அவவின் தலைமயிரை கொத்தாகப் பற்றிப் பிடித்துக் கொண்டார். மாமியின் புறங்கழுத்தில் ஒன்றிரண்டு அடிகளும் விழுந்தன. மாமி பெருங்குரலெடுத்து “கொல்லுங்கோ, என்னைக் கொல்லுங்கோ” என்று குழறினா. மகன் ஓடிவந்து அவரைப் பிடித்து விலக்கினான். மாமி தொடர்ந்தும் அழுதபடியிருந்தார். மாமா கோபம் தாங்காது மூசிக்கொண்டிருந்தார்.
“நீ இவ்வளவு நாளும் திண்ட சோறு, போட்டிருக்கிற நகை, உடுத்த புடைவை எல்லாம் இந்தக் கடலின்ரை உப்புக்கையும் குளிருக்குள்ளையும் நான் கிடந்து உழல்ந்தபடியால தான் கிடைச்சதுதான். இப்ப கடல் உனக்கு கொலைகாரியாப் போச்சுது. கடலம்மா தாய்க்குச் சமானமடி. நம்பி வாற ஆரையும் கைவிடாது..”
சின்ராசு மாமா ஒருபோதும் வெறுமனே கடல் என்றது கிடையாது. கடலம்மா, அம்மா அல்லது சீதேவி என்பார். அவரது வீடு கடலோரத்தில் இருக்கவில்லை. சற்றுத் தள்ளி குடிமனைகளுக்குள் அய்யனார் கோயிலுக்கு அருகாக இருந்தது. ஆனால் எப்பொழுதும் அந்த வீட்டில் ஒருவிதமான கடல் வாசம் வீசிக்கொண்டேயிருந்தது. கேற்றைத் திறந்தவுடன் குப் என முகத்தில் அடிக்கிற வாசம்.
வலைகளுக்கு பொத்தல் போடுவதாயினும் ஈயக் குண்டுகளை கட்டுவதாயினும், அவித்துக் காயவிடுவதாயினும் வீட்டின் முற்றத்தில்தான் நடந்தன. “உந்த வலையளை கடற்கரை வாடியிலை வைச்சு பொத்தலாம் தானே” என்றால் மாமா சிரிப்பார்.
“எடேய்.. இதென்ன வலையில இருந்து வாற வாசம் எண்டு நினைக்கிறியே? இது இந்த வீட்டின்ரை ஒரிஜினல் வாசம். இது கடலம்மா தந்த வீடு. கடலம்மா தன்ர மடியைச் சுரந்து சுரந்து தந்த செல்வத்தில கட்டின வீடு. இந்த வாசம் இந்த வீட்டுக்குள்ளை எப்பவும் இருக்க வேணும். இதில்லாட்டி எனக்கு நித்திரை வராது”
என்னையும் ஒருநாள் மாமா கடலுக்கு அழைத்துச் சென்றார். நான் சின்ன வயதிலேயே நீந்தப் பழகியிருந்தேன். என்றாலும் மாரிகாலக் கிணறும் கேணியும் கடற்கரையின் தப்புத்தண்ணீருமென அது மட்டுப்பட்டிருந்தது. “தவளைதான்ரா கிணத்துக்கை நீந்தும்” என்று மாமா நக்கலடிப்பார்.
எனக்கு கடல் அச்சம் தந்தது. கடலின் சுழிகளைக் கேள்விப்பட்டிருந்தேன். சில சமயங்களில் கரைகளுக்கு சுழி வரும். அகப்பட்டால் ஆளைச் சுழற்றியடித்து உள்ளே அமுக்கி விடும். ஒரு முறை இதைச் சொல்லி “கடல் சனியன்” என்றபோது அருகில் நின்ற மாமா நாக்கைக் கடித்தபடி ஓங்கிக் குட்டினார். கடல் பரவாயில்லைப் போலயிருந்தது.
“கடலம்மா ஆரையும் விழுங்கமாட்டாள்”
இம்முறை ஓர் அசட்டுத் துணிவில் நான் படகில் ஏறியிருந்தேன். கடல் அமைதியாக இருந்தது. பெரிய ஆழமில்லை. தாங்கும் கம்பை நீருக்குள் குத்தி அடி நிலத்தில் ஊன்றித் தள்ள படகு முன் நகர்ந்தது. அப்போது உண்டாகிற நீர் மேடுகளைத் தவிர்த்து பெரிய அலைகள் இல்லை. சிலர் ஐந்தரை முழக் களங்கண்ணிகளை நெஞ்சளவு உயரத் தண்ணீரிலேயே போட்டிருந்தார்கள். அவற்றில் தாக்காது மாமா லாவகமாக இரு பக்கங்களிலும் மாறி மாறி கம்பூன்றினார்.
“இப்பிடியே போனால், கடைசியில இந்த வள்ளத்தையும் வித்துப் போட்டு நானும் கரையிலதான் வலை விரிக்கோணும்.. இப்பவே இதை வித்துப் போட்டு கட்டுமரமொன்றை வாங்கலாமோ என்று யோசிக்கிறன். கைக்கெட்டும் துாரத்திற்குப் போறதுக்கு இது என்னத்துக்கு..”
நான் அமைதியாக இருந்தேன். துாரத்தே நேவிக்கப்பல் ஒன்று புகாரின் நடுவில் தெரிவது போல மங்கலாகத் தெரிந்தது. கடலில் இப்படியான ரோந்துகள் வழமையாகி விட்டிருந்தன. சின்ராசு மாமாவும் அதனை அவதானித்திருக்க வேண்டும். அவரிடமிருந்து ஆழ்ந்த மூச்சு வெளிப்பட்டது. “பிரேமதாசா எல்லாத்தையும் சரிப்பண்ணுவான் எண்டு நினைச்சிருந்தன். தலைகீழாப் பிரட்டிப் போட்டான். ”
களங்கண்ணிகளுக்கு அருகாக படகை நிறுத்திய மாமா நீருக்குள் இறங்கினார். “இறங்கடா” என்றார். நான் தயங்கிய படி நின்றேன்.
“உன்ரை வயசில நான் கடலில ரண்டு நாள் காணமல் போய் திரும்பியிருக்கிறன். அதுவும் இப்பிடித் தப்புத்தண்ணியில்லை. ஆழக்கடல். இந்தியன் நேவி எங்களுக்கு புது உடுப்பெல்லாம் தந்து கொண்டந்து விட்டாங்கள்.. ம். அதுவொரு காலம்..”
ஊன்றப்பட்டிருந்த களங்கண்ணிக் கம்பொன்றை படகிலிருந்த படியே பற்றிப் பிடித்து நான் மெதுவாக காலை வைத்தேன். “எப்பிடியும் இரண்டு பேரைத் தாழ்க்கும் ஆழம் இருக்கும்” இலேசாகக் குளிர்ந்தது. சமநிலை செய்வதற்காய் நீருக்குள் கால்களை உதைத்தபோது கால் விரல்கள் வலையின் கண்ணிகளுக்குள் சிக்கி மீண்டன. இடுப்பின் அரைப்பகுதி எரியத் தொடங்கியது. கொஞ்ச நாட்களாக வட்டக்கடி மாதிரியென்னவோ அங்கு பரவியிருந்தது. விறாண்டி விறாண்டி புண்ணாக்கி வைத்திருந்தேன். “இந்த மீன்களைச் சாப்பிடுவதில்லை” என்று நினைத்துக் கொண்டேன்.
சின்ராசு மாமா களங்கண்ணிக் கூட்டிலிருந்த ஒரு முனையின் கம்பைப் பெயர்த்தெடுத்து வந்து என்னிடம் பிடித்துக் கொள்ளச் சொன்னார். நான் பிடித்து நின்ற கம்போடு அதனை அணைத்துப் பிடித்துக் கொண்டேன். லேசாக ஆடுவதைப் போலிருந்தது. கடற்பாசிகளும் கஞ்சல்களும் உடலைத் தொட்டுப் போயின. அரியண்டமாயிருந்தது. மாமா மற்றைய கம்புகளையும் பெயர்த்து ஒன்றாக அணைத்துக் கொண்டு வந்தார். கண்ணியின் வட்டப்பரப்பு ஒடுங்கி வந்தது.
நான் படகில் ஏறி ஒன்றாய்ச் சேர்ந்த கம்புகளைின் மேல் நுனியைக் கட்டிப்பிடித்தபடியிருந்தேன். சட்டென்று நீருக்குள் மூழ்கியவர் கம்புகளின் அடிமுனையை பிடித்தபடி தலையைச் சிலுப்பிக் கொண்டு மேலெழுந்தார். “ஹே” என்று சத்தமிட்டபடி துாக்கி படகில் போட்டார். வலைக்குள் வெள்ளி வெள்ளியாக மீன்கள் துடித்தபடியிருந்தன. பெரிய பாடில்லை. சிறிய மீன்கள்.
நேவிக்கப்பல் நீண்ட துாரம் பயணித்திருந்தது. “பெரும் மீன் கடல் முழுக்க அவன்தான் திரியிறான்” என்றார் மாமா. கரைக்கு வேகமாகப் படகு நகர்வதைப் போல் தோன்றிற்று. கம்பு ஊன்றிய போது, வயர்களால் பின்னப்பட்டிருந்த பையிலிருந்த போத்தல் கள்ளை மாமா அப்படியே கவிழ்த்துக் குடித்ததை நான் கண்டேன். மாமா தொழிலின் போது கள்ளுக் குடிப்பது இது முதற்தடவையெனத் தோன்றியது.
நிலைமைகள் நாளும் நாளும் மோசமாகத் தொடங்கியிருந்தன. கடலில் எப்பொழுதும் ஒன்றிரண்டு நேவிக்கப்பல்கள் தரித்து நிற்கத் தொடங்கின. நேவியை உச்சிவிடலாம் என உசரப்போன ஒன்றிரண்டு பேர் திரும்பி வரவேயில்லை. பரன் அண்ணனுக்கு கல்யாணம் முடிந்து ஆறேழு மாதங்களே ஆகியிருந்தது. நிலவற்ற ஒரு இரவில் அவர் அப்படி ஆழக்கடலுக்குப் போனார். திரும்பி வரவில்லை. அன்றைய இரவில் கடலில் வெடிச்சத்தங்கள் கேட்டிருந்தன.
அழுது வடிந்து வீங்கிய முகத்தோடு அவரது மனைவி புவனா அக்கா ஒவ்வொரு காலையும் கடற்கரைக்கு வந்து நிற்பார். கடற்கரை மணலில் அவர் கால்களை நீட்டி உட்கார்ந்து விக்கி விக்க அழுவதைப் பார்க்க அந்தரமாயிருந்தது. அப்போது அவர் பிள்ளைத்தாச்சியுமாயிருந்தார். “பிள்ளை, உனக்காக இல்லாட்டியும், வயித்தில வளருகிற பிள்ளைக்காக எண்டாலும் ஒரு வாய் சாப்பிடு” என்று அவரது அம்மா சாப்பாட்டை நீட்டியபோது புவனா அக்கா கையால் வீசித்தட்டி விட்டார். கோப்பை கவிழ்து கடற்கரை மணலில் கொட்டுப்பட்டது. சற்று நேரம் அதையே வெறித்தபடியிருந்த புவனா அக்கா பிறகு என்ன நினைத்தாரோ, வெறி கொண்டவரைப்போல கொட்டிக் கிடந்த சோற்றை எடுத்து அவுக் அவுக் என விழுங்கினார். கடலைத் திரும்பியும் பார்க்காமல் கண்களைத் துடைத்தபடி வீட்டுக்கு ஓடினார். மூன்றாவது மாதம் ஆண்குழந்தையொன்றைப் பெற்றெடுத்தார். அதனை கடலே இல்லாத ஊரில் வைத்து வளர்க்கப்போவதாக ஆஸ்பத்திரி வார்ட்டில் படுத்திருந்து புவனா அக்கா சத்தமிட்டார்.
கடலில் தினமும் சண்டைகள் என்றானது. கரையில் நின்று பார்க்கும் போது, பீரங்கிகளும் தெரிகிற தெளிவில் நேவிக் கப்பல்கள் அண்மித்தாக நின்றன. போராளிகள் மண்மூடைக் காவலரண்களை கடற்கரையெங்கினும் அமைத்தார்கள். இரவு பகலென்று சென்ரிக்கு நின்றார்கள்.
ஒருநாட் காலை எவரையும் கடலுக்கு இறங்க வேண்டாம் என்று தடுத்தார்கள். நீண்ட வாகனங்களில் கூர் மூக்குகளைக் கொண்ட படகுகளைக் கொண்டு வந்து கரையினில் இறக்கினார்கள். தனியாக எடுத்துவந்த பீரங்கிகள் படகுகளில் பொருத்தப்பட்டன. போராளிகளின் பாட்டும் கூத்தும் கும்மாளமுமாக கடற்கரை நிறைந்திருந்தது. செய்தி ஊருக்குள் பரவி சனங்கள் வந்திருந்தார்கள். சின்ராசுமாமா வாடிக்கு வெளியில் போட்டிருந்த நீண்ட பனங்குற்றியில் இருந்து பார்த்தபடியிருந்தார். கரும்சட்டை போட்ட இரண்டு இளைஞர்கள் தம் வெண்பற்கள் தெரியச் சிரித்தபடி அவரைக் கடந்து போனார்கள். கடலில் கால்நனைத்து விளையாடினார்கள்.
வோக்கிகள் இரைந்து இரைந்து பேசின. பிறகு கரையிலிருந்து நான்கைந்து படகுகள் நீரைக்கிழித்தபடி விரைந்தன. கடைசியாகப் புறப்பட்ட படகில் கருஞ்சட்டை இளைஞர்கள் இருவரையும் சின்ராசு மாமா கண்டார். அவர்கள் திரும்பிக் கையசைத்தார்கள். தன்னையுமறியாமல் அவர் மெதுவாகக் கையசைத்தார். பெரும் ஈயக்குண்டு ஒன்றை தொண்டைக்குள்ளால் நெஞ்சுக்குள் இறக்கியதைப் போலவிருந்தது.
கடலினில் வெடிச் சத்தங்கள் கேட்கத் தொடங்கின. “காங்கேசன்துறையில இருந்து வெளிக்கிட்ட கப்பலை மறிச்சு அடிக்கிறாங்கள்” என்று யாரோ சொன்னார்கள். கடலின் அடி ஆழத்தில் மங்கலாகத் தெரிந்த நேவிப்படகு வழமையை விட வேகமாக நகர்வதாகத் தோன்றிற்று. திடீரென்று தீப்பிடித்து எரியத்தொடங்கியது.
சற்று முன் தன்னைக் கடந்து போனவர்களுக்கு மகனின் வயதை விட ஒன்றிரண்டு வயதுகளே அதிகமிருக்கும் என சின்ராசு மாமாவிற்குத் தோன்றிய போது உடல் அசைந்து திடுக்கிட்டது. எழுந்து விறு விறு என வீட்டுக்கு நடந்தார். “நீ இனிக் கடலுக்கை வரவேண்டாம். நானும் போறதாயில்லை.” என்று மகனிடம் சொன்னார்.
அப்பொழுது கிளாலிப் படகுச் சேவை நடந்து கொண்டிருந்தது. கொம்படி, ஊரியான், ஆனையிறவு, கேரதீவு பூநகரிப் பாதைகள் மூடப்பட்டிருக்க யாழ்ப்பாணத்திலிருந்து சனங்கள் கிளாலிக் கடனீரேரியைக் கடந்து கிளிநொச்சிக்கும் வவுனியாவிற்கும் கொழும்பிற்கும் போய் வந்தபடியிருந்தனர். மீன்பிடிப் படகுகளே சேவையில் ஈடுபட்டிருந்தன. எஞ்சின் பூட்டிய ஒரு படகின் பின்னால் ஐந்தாறு படகுகளை கயிற்றால் தொடுத்துச் சனங்களை ஏற்றினார்கள். கடலில் நேவியின் அசுமாத்தம் தெரிந்தால், தொடுவைப் படகுகளுக்கான இணைப்புக் கயிற்றை வெட்டிவிட்டு எஞ்சின் படகு ஓடித்தப்பிவிடும் எனக் கதை இருந்ததால் சனங்கள் முதலாவது படகிலேயே ஏற அடிபிடிப் பட்டார்கள். பூநகரியிலிருந்தோ ஆனையிறவிலிருந்தோ புறப்படுகிற நேவிப்படகுகள், கிளாலிக் கடலில் சனங்களை வெட்டிப்போட்ட சம்பவங்களும் நடந்திருந்தன.
சின்ராசுமாமா இன்னொரு படகும் எஞ்சினும் இருந்தால் கிளாலி ஓட்டம் செய்யலாம் என நினைத்தார். ஏகப்பட்ட கடன் ஏற்கனவே இருந்தது. வலைகளை விற்றார். மாமி மிச்சமுள்ள நகைகளையும் விற்றார். மண்ணெண்ணெய்க்குப் பழக்கப்பட்ட எஞ்சின் ஒன்றைத்தான் வாங்க முடிந்தது.
கிளாலியில் பயணச் சேவையை போராளிகளின் வருவாய்ப் பகுதியினர் நிர்வகித்தனர். சின்ராசு மாமா ஓடவேண்டிய தினங்களும் நேரங்களும் அவர்களால் வழங்கப்பட்டன. வேறும் நான்கு படகுகளை அவர்கள் தொடுவையாக இணைத்தனர்.
நன்றாய்ப் பொழுது சாய்ந்த இரவு சின்ராசு மாமா முதற்பயணத்தை ஆரம்பித்தார். ஒவ்வொரு படகிலும் பதினைந்துக் குறையாமல் ஆட்கள் இருந்தனர். மாமா படகினில் செருப்புப் போடுவதில்லை. பயணிகள் அப்படியிருந்தது மாமாவிற்கு என்னமோ போலிருந்தது. கடலிலோ படகிலோ செருப்பணிந்த யாரையேனும் காண நேரும்போது கடல் மாதாவைக் காலால் உதைப்பதைப்போன்றதொரு சித்திரம் அவர் மனதிற்குள் ஓடியது. “சனத்திற்குப் பிளேனில போறதெண்ட நினைப்பு”
“எவ்வளவு நேரத்தில போவீங்கள்,” என்று இளைஞன் ஒருவன் கேட்டான். அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. உள்ளுக்குள் அவனைத் திட்டினார். “தம்பி, இப்பிடியான பயணங்களுக்கு நேரம் கேட்கக் கூடாது, என்ரை சக்திக்கு உட்பட்டு நான் உங்களை கரையில கொண்டுபோய்ச் சேர்ப்பன்.”
பயணம் பெரிய கஸ்டமாகத் தெரியவில்லை. நேவியின் அசுமாத்தம் இல்லாத நாட்களாயிருந்தன. நட்சத்திரங்களைப் பிடித்து மாமா படகை ஓட்டினார். உப்புத்தண்ணீர் உடலில் படாத ஒன்றை கடல்தொழில் என அவரால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. திருப்தியின்மை தொடர்ந்தபடியிருந்தது. ஆயினும் மீண்டும் சிகரெட் பிடிக்கத் தொடங்கியிருந்தார்.
ஒரு நாள் வந்தது. காலம் பூராகவும் அவரது துாக்கத்தைக் கெடுத்துத் திடுக்கிட வைத்து உடல் வியர்க்க மூச்சு வாங்குகிற நாள். மூன்று நாட்களுக்கு முன்பாக படகில் சனங்கள் ஏறிபடியிருந்தார்கள். சின்ராசு மாமா அவர்களுக்கு ஷொப்பிங் பைகளை விநியோகித்த படியிருந்தார். “சத்தி வந்தா தலையைக் குனிஞ்சு இதுக்குள்ளை எடுங்கோ, போட்டுக்குள்ளயோ மற்றாள் பாக்கக் கூடியமாதிரியோ எடுத்துப் போட வேண்டாம். பிறகு மற்றாட்களுக்கும் வரும். பக்கத்தில இருக்கிறவரை தலையைப் பிடிச்சுக் கொள்ளச் சொல்லுங்கோ.. சரியாப் போடும்.”
பதினாறு படகுகள் புறப்பட்டுச் சென்றன. மாமா ஸ்ரார்ட் செய்தார். தண்ணீரை கைகளால் கோலி அள்ளிக் கொஞ்சம் குடித்து நெற்றியிலும் தலையிலும் தடவி “கடலம்மா” என்றார். படகு புறப்பட்டது. பத்து நிமிடம் ஆகியிருக்காது, கரையில் ரியுப் லைட் வெளிச்சங்கள் தெளிவாகத் தெரிந்தன. கடலைக் கிழித்தபடி இரைச்சலோடு வந்த போராளிகளின் “குருவி”ப் படகொன்று மெதுவாகி சமாந்தரமாக நின்றது. “நிப்பாட்டுங்கோ, பூநகரி நேவி கடலுக்கை இறங்கிட்டான். போட்டை உடனை கரைக்குத் திருப்புங்கோ. நாங்கள் முன்னுக்கு போன போட்டுகளை நிப்பாட்டித் திருப்ப வேணும்.” என்று விட்டு மீண்டும் வேகமெடுத்து இருளுக்குள் மறைந்தது.
படகிலிருந்த சனங்கள் குளறத் தொடங்கினார்கள். இறுதித் தொடுவைப் படகிலிருந்து அழுகை ஓலம் கிளம்பியது. “ஒருத்தரும் பதட்டப்படவேண்டாம். கரையிலதான் நிக்கிறம்” என்றார் சின்ராசு மாமா. ஒரு அரை வட்டமடித்து படகுகளைத் திருப்பினார். உடல் குளிர்ந்து விறைப்பதைப் போலத் தோன்றிற்று. பதினாறு படகுகளில் நுாற்றுக்கணக்கான சனங்கள் கடலுக்குள் இறங்கியிருந்தார்கள்.
அவர் ஷொப்பிங் பைகளை விநியோகித்துக் கொண்டிருந்த போது அணித்தாகச் சென்ற இரண்டாவது தொடுவையில் தாயின் மடியில் ஸ்வெட்டர் உடுப்பும் தொப்பியும் அணிந்திருந்த குழந்தையொன்று மெதுவாக அவரைப் பார்த்து சிரித்தது. சின்ராசு மாமாவின் வெண்ணிறத்தாடி குழந்தையின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். அதன் சிரிப்பில் மனது இலேசாவதைப் போன்றதொரு உணர்வை அவர் அனுபவித்தார். தாடியைத் தடவிவிட்டுச் சிரித்தார். “மாமாக்கு டட்டா சொல்லு..” என்று தாய் சொன்ன போது பிஞ்சுக் கைகளை அது மெதுவாக ஆட்டியது. சின்ராசு மாமா தன்னையுமறியாமல் கைகளை அசைத்தார்.
பதினாறு படகுகளில் நான்கு நேவியிடம் சிக்கிக் கொண்டன. அவை ஒவ்வொன்றின் பின்னாலும் மூன்று நான்கு தொடுவைகள் இருந்தன. காலையில் இருந்தே கடற்கரை அதகளப்பட்டது. உடலங்களை அலை கிளாலிக்கும் மறுகரையான நல்லுாருக்கும் மாறி மாறிச் சேர்த்தது. அவைகளில் மருந்திற்கும் ஒரு துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருக்கவில்லை. வாள் வெட்டுக்கள். கையிலும், முகத்திலும், நெஞ்சிலுமாக உடலைப் பிளந்த கோடு கோடான வெட்டுக்கள். மணிக்கட்டுக்களில் கைகள் துண்டாக்கப்பட்டிருந்தன. சின்ராசு மாமா கரைமணலில் தன்போக்கில் நடந்தார். காலடியில் அச்சம் உறைந்த வெறித்த கண்களோடு சடலங்கள் கிடந்தன. நுாற்று நாற்பத்து நான்கு சடலங்கள்!
புலிகளின் குரலில் செய்தியறிந்து சிந்தாமணி மாமியும் மகனும் கடற்கரைக்கு வந்திருந்தார்கள். சிதைந்த உடலங்களைப் பார்த்த மாமி ஓங்காளித்துச் சத்தி எடுத்து தலையைப் பிடித்தபடி ஓரிடத்தில் உட்கார்ந்தார். மகன் பேயறைந்தவனைப் போல நின்றான். அவனைக் கூட்டிக்கொண்டு உடனே வீட்டுக்குப் போகும்படி மாமா வற்புறுத்தினார்.
“உந்தத் தொழிலும் வேண்டாம். ஒண்டும் வேண்டாம். நாங்கள் பிச்சை எடுத்துச் சாப்பிடலாம். நீங்கள் வாங்கோ”
“வருவன், வள்ளத்தை எடுத்துக் கொண்டு வாறன், நீ போ, வாறன். ஒண்டும் நடக்காது. நீ போ”
மூன்றாவது நாள், படகுகள் வழமைபோல ஓடத்தொடங்கின. சனங்களால் கடற்கரை நிறைந்திருந்தது. வேறு வழியிருக்கவில்லை. சின்ராசுமாமா கடலில் இறங்கினார். இரண்டு தொடுவைகளிலும் சேர்த்து நாற்பது பேரளவில் இருந்தார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி இறுகியிருந்தார்கள். அவ்வப்போது நெஞ்சில் கை வைத்து வேண்டிக் கொண்டார்கள். பாதிரியார் ஒருவர் கைகளில் செபமாலை வைத்து செபித்தபடியிருந்தார். அமைதியைக் குலைத்தபடி குழந்தையொன்று வீரிட்டுக் கத்தத் தொடங்கியது. சிலர் முகங்களில் கலவரம் படர்ந்ததை சின்ராசு மாமா கண்டார்.
“என்ரை குஞ்செல்லே, அழாதயணை.. அப்பாட்டையெல்லே போறம். அழப்படாது.” குழந்தை மீண்டும் துாங்கிப் போனது.
நல்ல நிலவிருந்தது. அதன் ஒளி, உயரும் அலை மேடுகளில் பட்டு வெளிச்ச நடனம் புரிந்தது. சின்ராசு மாமா நேரத்தைப் பார்த்தார். இன்னும் ஒன்றரை மணி நேரத்திற்குள் நல்லுார்க் கரையை அடைந்து விடலாம். சற்று வேகப் படுத்தினார். “டக்” என்று என்னவோ முன் அணியத்தின் கீழே முட்டுப்பட்டது போலத் தோன்றியது. முன்னர் தொழிலுக்கு பெருங்கடலுக்குச் செல்கிற சமயங்களில் சற்றே பெரிய சுறாக்கள் படகில் முட்டுப்பட்டு ஓடும்போது இப்படிச் சத்தம் கேட்பது வழமை. ஆனால் மாமாவின் உள்ளுணர்வு அது சுறா இல்லை என்று சொல்லியது. வேகத்தை மெதுவாக்கினார். அருகிருந்த சக ஓட்டியிடம் எஞ்சினின் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு பதட்டத்தை வெளிக்காட்டாமல் அணியத்தை நோக்கி நடந்து கீழே பார்த்தார்.
அப்படியே தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது. படகின் விளிம்பில் கைகளை ஊன்றித் தாங்கிக் கொண்டார். எல்லாமே இருண்டு போவதாகத் தோன்றியது. சுதாகரிக்கப் படாத பாடு பட்டார்.
கீழே ஒன்று ஒன்றரை வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தையொன்றின் கால்கள் வெட்டப்பட்ட சடலம் தண்ணீரில் அணியத்தின் வெளிப்புறத்தோடு அணைந்திருந்தது. அதன் அறுணாக் கயிறு ஆணியொன்றில் மாட்டியிருக்க படகு சடலத்தைத் தள்ளியபடி முன்னேறியது. குழந்தையில் வெள்ளை பாய்ந்திருந்தது. அறுணாக் கொடியில் வெள்ளிக் கூடொன்றிருந்தது. கால்கள் இல்லை. வெட்டிய இடத்தில் இரத்தம் கழுவுப்பட்டு வெள்ளைத் தசைகள் பிய்ந்து தண்ணீரில் இழுபட்டன. முகம், சிரித்துக் கொண்டே செத்ததைப் போலிருந்தது. அன்றைக்கு கையசைத்துச் சென்ற ஸ்வெட்டர் போட்ட குழந்தையின் நினைவுகள் அலைகளாய் திரண்டன. அது என்னானதோ..
மாமா படகில் சனங்களைப் பார்த்தார். ஆளையாள் வெறித்தபடியிருந்தார்கள். மெதுவாக விளிம்பில் நெஞ்சை அழுத்திக் குனிந்து கைகளால், மாட்டியிருந்த அறுணாக்கயிற்றை எடுத்து விட்டார். அழுகை உடைத்துக் கொண்டு வந்துவிடுமாற் போல இருந்தது. குழந்தையை படகினின்றும் துாரத்தே தள்ளிவிட்டார். அருகிருந்தவர்கள் என்ன என்பதைப் போல பார்த்தார்கள். “கடற்பன்றி” என்று பொய் சொன்னார்.
எஞ்சினருகில் வந்து உட்கார்ந்து படகை இலேசாகத் திருப்பியபோது துாரத்தே அவருக்கு இடதுபுறமாக குழந்தை மிதந்து கொண்டிருந்தது. அன்றைக்கு இரவு சினிராசு மாமாவிற்கு காய்ச்சல் வந்தது.
மாமா வீட்டிற்கு வந்தார். யாரோடும் முகம் கொடுத்துப் பேசாது தன் போக்கில் திரிந்தார். சோம்பிக் கிடந்தார். ஒரு கனவில் இருளில் எல்லாப்பக்கமும் விரிந்த கடலின் நடுவே கட்டுமரமொன்றில் மாமா தனித்து விடப்பட்டிருந்தார். பிரகாசமான நிலவொளி தண்ணீரில் தெறித்தது. ஆனால் மேலே நிலவில்லை. அது ஏன் என்று யோசித்தபடியிருந்தார். அப்பொழுது துாரத்தே குழந்தையொன்று தண்ணீரில் மிதந்து அவர் அருகில் வந்தது. அது கண்களை மூடித் துாங்குவதைப் போலிருந்தது. மாமா அதன் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். அது சிரித்தது. கன்னத் தசைகளை விரித்து நன்றாகச் சிரித்தது. ஆனால் செத்துப் போயிருந்தது.
மாமா திடுக்குற்று விழித்தார். உடல் வியர்த்துக் கொட்டியது. எழுந்து சிகரெட்டைத் தேடினார். வெறும்பெட்டிதான் சட்டைப்பையில் இருந்தது. பழைய பீடியொன்றைத் தேடிப் பற்றவைத்தார். வெளியே வந்து இருட்டினில் அமர்ந்து கொண்டார். சிந்தாமணி மாமியும் எழுந்து வந்து ஆறுதலாக தலையைத் தடவினார்.
“என்னய்யா..”
“நான் இனி கிளாலியில ஓடேல்லை. நாளைக்கு போய் போட்டை எடுத்தரலாம் எண்டு நினைக்கிறன். எங்கடை கடலிலயே கரையில எதையாவது செய்யலாம்.”
அடுத்த நாள் காலை பூநகரியிலிருந்து முன்னேறிய இராணுவத்தினர் கிளாலியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். புலிகள் தொடர்ந்தும் எதிர்த்தாக்குதலை நடாத்துவதாக புலிகளின் குரலும், கைப்பற்றிய பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் பணிகளில் இராணுவம் ஈடுபடுவதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வர்த்தக சேவையும் செய்தி சொல்லின. சின்ராசு மாமா இடிந்து போய் உட்கார்ந்தார். அவரது எஞ்சினும் வள்ளமும் இரண்டு லட்சமாயினும் பெறுமதியாயிருந்தன.
ஐந்தாறு நாட்களுக்குப் பிறகு ஒருநாள், கிளாலியைக் கைப்பற்றியிருந்த படையினர் விரட்டியடிக்கப்பட்டனர் எனக் காலைச்செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தபோதே சின்ராசுமாமா கிளாலிக்குப் புறப்பட்டார். கிளாலி எரிந்து கொண்டிருந்தது. கரை முழுவதும் இராணுவச் சடலங்கள்; கடலுக்கென்ன, அது எல்லாச் சடலங்களையும் கரை சேர்க்கிறது.
ஓலையால் வேயப்பட்டிருந்த பயண அலுவலகங்கள், சனங்கள் இளைப்பாறும் கொட்டில்கள் எல்லாம் எரிந்து கருகியிருந்தன. படகுகளிலிருந்தும் கைவிடப்பட்ட வாகனங்களிலிருந்தும் புகையெழுந்தபடியிருந்தது. சின்ராசு மாமாவின் உள்ளுணர்வு அவரது ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தியது. நடை தளர்ந்து கால்கள் துவண்டன. கைகளால் பின்னங்கழுத்தைப் பொத்தி வானத்தைப் பார்த்தவாறு முழங்கால்களை மணலில் ஊன்றி விழுந்தார்.
துாரத்தே, ஒரு சிறிய தென்னை மரத்தின் கீழே, சிந்தாமணி, எப்போது பார்த்தலும் கல்யாணக் காலங்களை நினைவுறுத்துகிற அவரது படகு கருகிய எலும்புக் கூடாக கவிழ்ந்திருந்தது. சின்ராசு மாமா பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார்.
அன்றிலிருந்து மாமா ஒடுங்கிப்போனார். கரைவலை வீச்சு, துாண்டில், களங்கண்ணியென்று போவதையும் நிறுத்தினார். எல்லா வருத்தங்களும் வந்து சேர்ந்தன. கண்கள் உள்ளிழுத்து, தோல்கள் சுருங்கி முதுமையின் கோடுகள் சீக்கிரமாகவே அவரை ஆக்கிரமித்தன. கள்ளைக் குடித்துவிட்டு “நான் செத்தபிறகு, நீங்கள் என்ன செய்வியளோ தெரியாது. என்ரை சாம்பலை இந்தக் கடலில கரைக்கோணும். அதுவும் கரையில இல்லை. நல்லா உசரப்போய்.. கரை மறைஞ்ச கடலில கொட்டோணும்”
மாமா சின்னச்சின்ன கூலி வேலைகளுக்குப் போகத் தொடங்கியிருந்தார். பழக்கமேயில்லாத தொழில்கள். தேங்காய் உரிக்கப் போனபோது உள்ளங்கையை அலவாங்கு குத்திக் கிழித்திருந்தது. விறகு வெட்டினார். வலதுகாற் பெருவிரல் நகத்தை கோடாலி கொண்டு போனது. குடும்பத்தைக் கொண்டு நடத்துவது பெரும் சிரமமாக இருந்தது. கடன்காரர்கள் நெருக்கினார்கள். “நிலமைகள் சரிவரட்டும், இன்னும் தெம்பிருக்கு. கடலுக்குப் போவன்.” அன்று அவர்களுக்குச் சொன்னார்.
சிந்தாமணி மாமி சந்தைக்கு மீன் விற்கப் போனார். சொரியலாக வாங்குகிற மீன்களை இரண்டு மண்ணெண்ணெய் பரல் மூடிகளில் பரப்பி சந்தையில் நாள் முழுதும் உட்கார்ந்திருந்தார். எல்லாம் ஒரு சாணுக்குள் அடங்குகிற சின்ன மீன்கள். பெரிதாக யாவாரம் ஆகவில்லை. பழைய நினைவுகள் அவரை வாட்டியெடுத்தன. கல்யாணமான காலம், சின்ராசு மாமா கடலால் மீண்டு வீட்டுக்குள் நுழையும் தோற்றம் எப்போதும் ஒரேமாதியிருந்தது. ஒரு கையில் பெரிய பாலை மீனின் வாலைப்பிடித்துத் துாக்கியவாறு சாரத்தின் ஒரு முனையைத் துாக்கி வாயில் கடித்தபடி அவர் நுழைவார். மாமி தனக்குள் சிரித்துக் கொள்வார். “அய்யனார்தான்”
“இதென்ன, சாறத்தைத் துாக்கிக் காட்டினபடி வாறியள், தெருவால பெண் பிரசுகள் திரியிறேல்லயே..”
“நானென்ன செய்ய..? வாழ்க்கையில அரைவாசிக் காலம் பென்ரரோடையே வாழ்ந்திட்டன். உடம்பில துணி நிற்குதில்லை. நீ இரவில…” மாமி தனது கைகளால் மாமாவின் வாயைப் பொத்துவார். “வெட்கம் கெட்ட மனுசன்..”
அதுவொரு காலம்;
சந்தையில் பெரிய வருமானம் கிடைத்ததில்லை. சாப்பாட்டுச் செலவுகளுக்குப் போதுமாயிருந்தது. மாமா எப்போதாவது கடற்கரைப் பக்கம் வந்து போவார். கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டு திரும்பிவிடுவார். அவர் பிரேமதாசாவிற்குப் பிறகு இரண்டு பேரை நம்பியிருந்தார்.
“சந்திரிக்கா என்ன இருந்தாலும் ஒரு பொம்பிளை, ஒரு தாய், கஸ்ரம் தெரிஞ்சவள். எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டி, கடலைத் திறந்து விடுவாள். காலம் வரும்”
“ரணிலைப் பார்க்கவே படிச்ச களை தெரியுது. அதிர்ந்து கதைக்கத் தெரியாத ஆள்ப்போல கிடக்கு. சனங்களின்ரை கஸ்ரத்தை தெரிஞ்சு வைச்சிருப்பான். இந்த நாட்டின்ரை முன்னேற்றம் எங்களை மாதிரியான ஆட்களின்ரை கையிலதான் இருக்கென்று அவனுக்குத் தெரியும். மகன் வாத்தி வேலை கிடைக்குமெண்டு கம்பசுக்குப் போறான். நிலைமை சரிவருமென்றால் படிச்சு முடிய கடல் தொழிலுக்குத்தான் அவனை அனுப்புவன். வழியொன்று வரும்.”
கடைசியாக மகிந்த ராஜபக்ஷ கடல்வலயத் தடைச் சட்டத்தைச் சற்றுத் தளர்த்தி, மட்டுப்பட்ட அளவில் மீன்பிடிக்கான அனுமதியை வழங்கினார்.
0 0 0
மேற்படி கதை முடிந்துவிடவில்லை. அதனை எங்கு முடிப்பதென பிரதியாளருக்குக் குழப்பம் இருந்தது. எப்படி முடிப்பதென்பதிலும்,
ஒரு நல்ல நடுநிலையாளருக்கு எது அழகு என குப்புறப்படுத்து யோசித்ததில் ஒன்று (ஒன்றல்ல மூன்று) புலப்பட்டது. அதன்படியாக இந்தப் பிரதி மூன்று இடங்களில் முடிக்கப்படுகிறது. ஒரேயொரு இடத்தில் முடிகிறது.
0 0 0
1
கடற்கரையின் சோதனைச் சாவடியில் சின்ராசு மாமா வரிசையில் நின்றார். இராணுவத்தினர் ஒவ்வொருவரினதும் பெயர் முகவரிகளைப் பதிந்து அடையாள அட்டையை வாங்கி வைத்துக் கொண்டனர். எதிரே கடல் விரிந்திருந்தது. அன்றொருநாள் அதன் கரைவழியே நடந்த கரும் சட்டை இளைஞர்களின் சிரித்த முகங்கள் நினைவுக்கு வந்தன. அவர்களது மூச்சுக் காற்றும் உடலும் கலந்த கடல்..
“அவர்களின்.. கனவு..”
மாமாவின் முறை வந்தது. சிப்பாய் கையை நீட்டி, “ஐடென்ரி காட்” என்றான். அந்தக் கை..! பரனைச் சுட்ட கை, இத்தனை ஆண்டுகளுக்கு பின்னாலும் மறக்க முடியாத குழந்தையை துாக்கி வெட்டிய கை.. இரத்தம் வழிகிற கை.. பிசாசின் கை..
சின்ராசு மாமா அடையாள அட்டையைக் கொடுக்கவில்லை. வரிசையினின்றும் விலகி “இல்லை, நான் கடலுக்குப் போகேல்லை. போக மாட்டன்” என்று விட்டு விறு விறு எனத் திரும்பினார். “தமிழன், பச்சைத் தமிழன்.. என்ரை கடலில இறங்க நீங்கள் ஆர் பெர்மிஷன் தர… மாட்டன். அப்பிடியொரு பெர்மிஷன் எனக்கு வேண்டாம். சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்டினி கிடந்து செத்தாலும் சாவனே தவிர கடலுக்கை காலை நனைக்க மாட்டன்.” வைராக்கியத்தோடு தனக்குள் சொல்லிக் கொண்டார். அதற்கடுத்த மூன்றாவதோ நான்காவது வாரத்தில் சின்ராசு மாமா செத்துப் போனார்.
2
கடற்கரையெங்கும் மீனவர்கள் திரண்டிருந்தனர். சின்ராசு மாமா தன் பேரனின் கையில் செங்கொடியொன்றைக் கொடுத்து மேடையில் நிறுத்தியிருந்தார். மாமாவின் உடல் தளர்ந்திருந்தாலும் குரலில் நடுக்கமிருக்கவில்லை. “மீனவத்தோழர்களே, இன்றைக்கு இந்தக் கடற்கரையில் இருந்த அதிகார ராணுவத்தினரை கற்களால் எறிந்தே நாம் கலைத்தோம். நாம் இத்தோடு நிறுத்தப் போவதில்லை. சிங்கள சீன ரஷ்ய கியுப மீனவர்களையும் திரட்டி உலகம் தழுவிய கூட்டுப் புரட்சியை ஏற்படுத்தி – நமக்கான கடலை, நமக்கான வயலை, நமக்கான தொழிற்சாலைகளை, நமக்காகப் பெறுவோம். தோழர்கள் ஒன்றை மனதில் வைத்திருக்க வேண்டும். இன்றைக்கு இந்த இராணுவச் சாவடிக்கு கற்களால் எறிந்தது போல, அன்றைக்கு இந்தக் கடற்கரையை ஆக்கிரமித்து நின்ற புலிகளையும் துரத்தியிருந்தால் நாம் இத்தனை துன்பப்பட்டிருக்கத் தேவையில்லை. மேலும் தோழர்களே நமது எதிரி இன்றைக்கு ஓடிய இராணுவத்தினர்கள் அல்ல. அவர்கள் வெறும் கருவிகள். கருவிகளை இயக்குகின்ற கயிறுகள் முதலாளிகளின் கைகளில் இருக்கிறது.”
அப்பொழுது எல்லோரும் அந்த ஊரின் சம்மாட்டியார் வீட்டுக்கு ஓடினார்கள். அவர் வீட்டுக்கு கல் எறியத் தொடங்கினார்கள்.
3
“ஐடென்ரிகாட் தாங்க” என நீட்டிய சிப்பாயின் கையை சின்ராசு மாமா வாஞ்சையுடன் பற்றிக் கொண்டார். “புத்தா, நெஞ்சில் கை வைத்துச் சொல்கிறேன். இலங்கையில் மனிதாபிமானம் மிக்கவர்கள் எவரென்றால் அது நீங்களே.” என்று அவனுடைய கைகளை தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். சிப்பாய் சிரித்தான்.
சின்ராசு மாமா வரிசையில் நின்றவாகளைப் பார்த்து மேலும் சொன்னார். “நானொரு உண்மையைச் சொல்கிறேன், கேளுங்கள். இன்றைக்கு இலங்கை மாதாவின் இந்தப் பிள்ளைகள், நம்மைக் கடலுக்குப் போய் வாருங்கள் என அனுப்புகிறார்கள். ஏன் அப்படியொரு வாய்ப்பை புலிகள் நமக்குத் தரவில்லை.. அதற்கு ஒரேயொரு காரணம் மட்டுமே இருக்க முடியும். அது வெள்ளாளர்கள் கடல் தொழிலுக்குப் போவதில்லை என்பது மட்டுமே. வயல் நிலங்களைப் பாதுகாத்த புலிகள் கடலைப் பாதுகாக்கத் தவறியதன் பின்னாலிருக்கிற சாதி அரசியல் இதுதான்.
இன்று அந்த வாய்ப்பை நமக்கு இந்தப் பிள்ளைகள் தந்திருக்கிறார்கள். நாம் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கே எல்லோரும் பாடுங்கள், “நமோ நமோ தாயே, நம் சிறிலங்கா.. நல்லெழில் சீரணி, நலங்கள் யாவும் நிறை மாமணி.. லங்கா.. ”
எல்லோரும் பாடினார்கள். இராணுவத்தினர் கைதட்டினார்கள்.
0 0 0
பெரிய வரிசையில்லை. அழுக்கடைந்த பெனியனும் மடித்துக்கட்டிய சாரமும் கட்டி சின்ராசு மாமா வரிசையில் நின்றார். காலை எட்டுமணிக்கெல்லாம் சாவடியைத் திறந்து தொழிலுக்கு அனுமதிக்கிறார்கள். பொழுது சாய்வதற்குள் கடற்கரையை விட்டு வெளியேறிவிட வேண்டும். இரவுத் தொழிலுக்கு இன்னமும் அனுமதி வழங்கவில்லை.
“ஐடென்ரி காட்” கூட்டுக்குள் இருந்தவனுக்கு மகனின் வயதுகள் வரும். கொடுத்தார்.
“என்ன செய்யிறது..” என்று அவன் கேட்டான். மாமாவிற்கு சரியாக விளங்கவில்லை. அவனுக்கு அருகாக முகத்தைக் கொண்டுபோய் “என்ன.. சேர்..” என்றார்.
“என்ன தொழில் செய்யிறது..” அவன் குரலை உயர்த்தியது அச்சமூட்டுவதாய் இருந்தது. மாமாவின் உடல் ஒருதடவை அசைந்து திடுக்கிட்டது. அவருக்கு பின்னால் நின்றவரைச் சுட்டினார். “இவர் பதினைஞ்சு முழக் களங்கண்ணி போட்டிருக்கிறார். இவரோடை உதவி ஒத்தாசைக்குப் போறனான் சேர்.” நேற்றும் சொல்லியிருந்தார்.
“சரி, பின்னேரம் வரும்போது ஐடென்ரி கார்ட்டை எடுக்கணும்”
மாமா நடந்தார். பின்னால் வந்தவனும் இவரோடு இணைந்து கொண்டான். சின்ராசு மாமா அவனது கையைப் பிடித்து யாரும் வருகிறார்களா எனப் பார்த்தார். சற்றுத் தயங்கினார். பிறகு “தம்பி, நிலவில்லாக் காலம்தானே, என்ரை மனசு, நல்ல பாடிருக்கும் என்றுதான் சொல்லுது. எனக்கொரு ஒரு ஐம்பதாயிரம் ரூபா தருவியே.. பிறகு வேலையில கழிச்சுக் கொள்ளன். இவன் மகனை அபுதாபிக்கு அனுப்பிற ஒரு அலுவல் சரிவந்திருக்கு.