11
இரவின் கடைசிச் சத்தமும் நீங்கியது. அற்புதத்திற்கு நித்திரை வரவில்லை. ஏதேதோ ரீங்காரங்கள், நாய்கள் குரைக்கின்ற சத்தங்கள், தொலைவில் பேருந்துகளின் இரைச்சல்கள் கேட்டுக்கொண்டிருந்தபோது நேரம் கட கடவென்று போன மாதிரி இருந்தது. இப்போது அப்படி இல்லை. காலத்தை காலால் மிதித்து வைத்திருக்கிற அமைதி. யோசனைகள் அலைந்தன. ‘சப்பறம் ஏன் அப்படிக் கேட்டான்?’ இன்று காலை மைதானத்திற்கு நடந்தபோது பக்கத்திலேயே அவன் நடந்து வந்துகொண்டிருந்தான். திடீரென்று காதுக்குக் கிட்டவாக “தோழர் நாங்கள் தப்பிப் போவமா?” என்று அவன் கேட்டபோது சோதித்துப் பார்க்கிறான் என்றுதான் தோன்றியது. கொஞ்ச நாட்களாகவே அவன் பழைய வேகத்துடன் இல்லைத்தான். அவனைப் பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டார்கள். யார் நீக்கினார்கள், எங்கிருந்து நீக்கினார்கள் எதுவும் தெரியாது. ஒரேயடியாகத் தளர்ந்து போய்விட்டான். ‘யாரை நம்பிறது.. யாருக்கு விசுவாசமாக இருக்கிறது ஒன்றும் தெரியேல்லை.’ என்று ஒன்றிரண்டு பேரிடம் புலம்பியிருக்கிறான். “தோழர் உன்னை உளவு பாக்கிறதுக்காக நான் இதைக் கேட்கேல்லை. நான் தப்பி ஓடப் போறன். விருப்பம் இருந்தால் வா.. வந்தால் அது உனக்கொரு வாய்ப்பு. எனக்கொரு தைரியம்.” யாராவது பார்த்தால் ஏதோ இயல்பாகக் கதைக்கிறார்கள் என்று தோன்றுகிற மாதிரி மறுபடியும் கேட்டான். அற்புதத்திற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, எதற்கும் ஒரு பாதுகாப்பாக இருக்கட்டும் என்று “தலைமையை மீறி நான் எதையும் செய்ய மாட்டன்.” என்றான். சப்பறம் “எந்தத் தலைமையை?” என்று கேட்டான்.
மூன்று மாதங்களுக்குள் எவ்வளவோ நடந்துவிட்டன. இப்போது டம்பிங் கண்ணனும் அவனுடைய சகாக்களும்தான் இங்கே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்கள். அவர்கள் ‘எப்படா இரவு வரும்?’ என்று காத்திருப்பார்கள்போல. இரவுக்குத்தான் ஆட்களைக் கடத்தும் வல்லமை இருந்தது. திடீர் திடீர் என்று காணாமல் போனவர்களைப் பற்றி பிறகு ஒரு கதையும் இல்லை. டம்பிங் கண்ணன் யாரையாவது வெருட்டும்போது சாடை மாடையாகச் சொல்லிக் காட்டுவான். ‘சவுக்கம் தோப்புக்கைதான் உனக்குச் சாவு. கவனம்’ அவ்வளவுதான். ஏன் கடத்துகிறார்கள்? யாருடைய உத்தரவில் கடத்துகிறார்கள்? தெரியாது. அமைப்புக்குள் ஏதோ குத்துவெட்டு நடக்கிறது என்பது மட்டும் புரிந்தது. முதல் நாளின் அதிர்ச்சி, அதற்குப் பிறகு சலிப்பு என்று ஏனோ தானோ என்றுதான் நாட்கள் நகர்ந்தன. ஆனாலும் தப்பிப் போவதைப் பற்றி அற்புதம் யோசிக்கவில்லை. டம்பிங் கண்ணனோடு பகைக்காமல் இருந்தாலேபோதும். எப்படியும் ஒருநாள் இலங்கைக்கு அனுப்பத்தானே வேண்டும்.
மறுபடியும் சப்பறத்தின் வார்த்தைகளில் அலைந்தான். தப்பி ஓடுவதற்கு அவனிடம் ஏதோ ஒரு காரணமாவது இருக்கிறது. அவனைப் பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டார்கள். ஆனால் நான் ஏன் ஓட வேண்டும்? எனக்கென்ன காரணம்? இரவு எல்லோரும் நித்திரைக்குத் தயாரானபோது சப்பறத்திடம் அதைத்தான் கேட்டான். அவன் ஏதோ பகிடிக் கதையைச் சொல்வதைப்போல முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான். “ஒரு காரணமும் தேவையில்லை தோழர். நீர் ரத்தமும் சதையும் இதயமும் மூளையும் இருக்கிற ஒரு மனிசப் பயல். அந்தக் காரணம்போதும்.”
மூன்றாவது நாள் நள்ளிரவில் அற்புதமும் சப்பறமும் புறப்பட்டுப் போனார்கள். சப்பறம் ஏற்கனவே வழிகளைப் பார்த்து வைத்திருக்க வேண்டும். இருள் கூட தங்களைப் பார்த்துவிடக் கூடாதென்ற கவனத்தோடு நடந்தார்கள். பிரதான சோதனைச் சாவடியில் யாராவது காவலுக்கு இருப்பார்கள். அந்தப் பக்கம் போகக் கூடாது. ஒரு பெரிய அரை வட்டப் பாதையில் சாவடியைச் சுற்றிக் கடக்க வேண்டும். அது முழுக்கக் காடுபோல முட் பற்றை வளர்ந்திருந்தது. குனிந்துகொண்டுதான் ஓட வேண்டும். அற்புதம் “ஹிப் பொஷிசன்” என்று முணுமுணுத்தான். அது முதுகை வளைக்காமல் முழந்தாளை மட்டும் மடித்து குள்ளமாக நிற்கின்ற பயிற்சி. உண்மையில் இரண்டு நிமிடத்தைக் கூட அப்படித் தாக்குப் பிடிக்க முடியாது. கால்கள் பயங்கரமாக நோகும். அப்படியே ஓடவும் வேண்டும். கொஞ்சம் நிமிர்ந்தாலும் இதோ.. இந்தச் சப்பறம் தடியால் குண்டியிலேயே அடிப்பான். “ஓடு” அற்புதம் ஓடத்தொடங்கினான். பின்னாலேயே சப்பறமும். அவனுக்கு மூச்சு வாங்கியது. நின்றால் யாராவது அடிப்பார்கள் என்ற பயத்திலேயே ஓடுகிற மாதிரித் தோன்றிற்று. முட்கள் குத்திக் கிழித்தன. கையெல்லாம் காயம். வேர்த்து ஓடியது. ஒரு மாந்தோப்புக் குறுக்கிட்டது. நிற்கக் கூடாது. ஓடு. வயல்வெளி. இன்னும் கொஞ்சத் தூரம்தான், தெரு வந்துவிடும். ஒரு வேலிக் கம்பியைத் தவழ்ந்து கடந்தபோது சப்பறம் சொன்னான். “ஒருவேளை எங்களை உயிரோடை பிடிச்சாங்கள் எண்டால், தோலை உரிச்சு உப்புக் கண்டம்தான் போடுவாங்கள்.”

பொல பொல என்று வெளிச்சம் பரவியது. இரவு ஒரு துரோகி, அது வெளிச்சத்திடம் காட்டிக் கொடுக்கப் போகிறது. அற்புதம் பரபரப்பானான். அடுத்தது என்ன என்று அவனுக்கு எதுவும் தெரியாது. சப்பறம் உடனடியாக பட்டுக்கோட்டைக்குப் போக வேண்டும் என்றான். அங்கே யாரோ இருக்கிறார்களாம். பேருந்து நிலையத்திற்கு வந்தார்கள். கையில் ஐந்து சதக் காசு கூட இல்லை. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து. டம்பிங் கண்ணனுக்கு இப்பொழுது தெரிந்திருக்கும். காவலுக்கு இருந்தவர்களை நினைத்தால் பாவமாக இருந்தது. அவனிடம் தப்ப மாட்டார்கள். தலைகீழாகக் கட்டித் தொங்க விட்டுவிடுவான்.
சப்பறம் ஒரு தேநீர்க் கடை வாசலில் போய் நின்றான். கடைக்காரர் வெற்று மேலோடு நின்றார். இடுப்பில் கைலி. கைகள் தாள லயத்தில் இயங்கின. “தம்பி.. டீயா..” சப்பறம் அவருக்குக் கிட்டவாகப் போனான். “நாங்கள் ரெண்டு பேரும் ஈழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவங்கள். பட்டுகோட்டை வரைக்கும் போகவேணும். பஸ் காசு எடுத்திட்டு வரேல்லை. தருவீங்களா?” கடைக்காரர் கைலிக்குள் சுருட்டி வைத்திருந்த பணத்தாளை நீட்டினார். “உங்க தலைவர் பிரபாகரன் எப்பிடி இருக்கிறார்?”
“நாங்க அந்த இயக்கம் இல்லை.” என்று சப்பறம் சொல்வான் என்று அற்புதம் பார்த்துக்கொண்டு நின்றான். ஆனால் “அவருக்கு என்ன.. நல்லாத்தான் இருக்கிறார்.” என்றுதான் சொன்னான்.
“சந்தோசம். டீ குடிச்சிட்டு போறீங்களா?” பேருந்து புறப்பட இருந்தது. கடைக்காரருக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஓடிப்போய் ஏறினார்கள். ஜன்னலோர இருக்கை வேண்டாம். நடுவிலேயே உட்கார்ந்தார்கள்.
“இனிப் பயப்பிடத் தேவை இல்லை. பட்டுக்கோட்டையில் எனக்குத் தெரிஞ்ச ஒருவர் இருக்கிறார். பெரிய பண்ணையார் அவர். அங்கை கொஞ்ச நாளுக்குத் தங்கிவிட்டு பிறகு யாழ்ப்பாணம் போவம்.” என்றான் சப்பறம்.
0
பண்ணையாருக்கும் சப்பறத்திற்கும் முன்னரேயே அறிமுகம் இருந்திருக்க வேண்டும். உயர்ந்த மதில் சுவரின் இரட்டைக் கதவைத் திறந்துகொண்டு நுழைந்தபோதே அவனைக் கண்டுகொண்டார். “அடடே.. பார்த்து ரொம்ப நாளாச்சு. எப்பிடி இருக்கீங்க தம்பி? என்ன சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கீங்க?” நெருங்கி வந்து தோள் அணைத்தார்.
முற்றத்திலேயே நெல் மணிகள் மலைபோல குவிந்து கிடந்தன. இரண்டு உழவு இயந்திரங்கள். போவதும் வருவதுமாக நிறைய வேலை ஆட்கள்.
“ஐயா.. ரெண்டு நாட்களுக்கு நாங்கள் இங்க தங்க வேண்டியிருக்குது. ஒரு ஏற்பாடு சரி வந்ததும் போய்விடுவோம்.” சப்பறம் பண்ணையாரின் கைகளைப் பற்றிக்கொண்டு சொன்னான்.
“அட அதுக்கென்ன தம்பி.. இது உங்க வீடு. எவ்வளவு நாள் வேணும்னாலும் தங்குங்க.” என்றவர் “பொன்னுரங்கம்… பையன்களுக்கு தண்ணி கொண்டு வா..” என்று அழைத்தார். அவரது மனைவியாக இருக்க வேண்டும். நல்ல செழித்த முகத்தில் நெற்றி நிறைந்த குங்குமம். சேலைத் தலைப்பை கழுத்தில் போர்த்தியபடி தண்ணீர்ச் செம்பைக் கொண்டுவந்து நீட்டினாள். சப்பறம் பறித்துக் குடித்தான். அவ்வளவு தாகம்.
“சரி தம்பிக.. எனக்கு வெளிய ஒரு வேலை இருக்கு. நீங்க கொஞ்சம் ஆறுங்க. நான் வந்துர்றேன்.”
பண்ணையார் வெளியேறியதும் அற்புதம் மெதுவாகக் கேட்டான். “யார் இவர்? புளொட்டுக்கு சப்போர்ட்டா?”
“இவர் புலிகள் வந்தாலும் இப்படித்தான் வரவேற்பார்.” என்றான் சப்பறம்.
இரவிரவாக நித்திரை கொள்ளாத தேகம், அடித்துப் போட்டாற்போல நொந்தது. அலுப்புத் தீரக் குளிக்க வேண்டும். பொன்னுரங்கம் துடைப்பதற்குத் துண்டும், வேட்டியும் கொடுத்தாள். “குளிச்சிட்டு வாங்க தம்பி. சாப்பிடலாம்.”
பண்ணையாரின் வீட்டுக்குப் புறத்தாலேயே ஓவென்று வாய் பிளந்த ஒரு பென்னாம் பெரிய கிணறு இருந்தது. அருகிலேயே முட்டித் தளும்புகிற நீர்த் தொட்டி. அற்புதம் ஆரச்சோரக் குளித்தான். வெயிலுக்கு நீர்த் தழுவல் சுகமாக இருந்தது. தலையைத் துவட்டி வேட்டியை உடுத்திக்கொண்டான். பொன்னுரங்கம் ‘எங்கே காணவில்லையே?’ என்று பார்க்க வந்திருக்க வேண்டும். கண்டு சிரித்தாள். “சாப்பிட வாங்க.”
மேசையில் உணவுக் கிண்ணங்கள் பரவிக் கிடந்தன. ஆட்டுக்கறிக் குழம்பு, ஈரல் பிரட்டல், மொச்சைப் பொரியல், ரசம்.. செத்த நாக்கில் வெட்கத்தை விட்டு எச்சில் ஊறியது. சப்பறம் ஏற்கனவே சாப்பிடத் தொடங்கியிருந்தான். “எனக்குச் சரியான பசி. அன்ரி வேற ருசியா சமைச்சிருக்கிறா. அதுதான் தொடங்கிட்டன்.”
“உட்காருங்க.. உங்க வீடு மாதிரி. கூச்சப்படாமல் சாப்பிடுங்க.” பொன்னுரங்கம் சோறு அள்ளி வைத்தாள். “ஊர்ல அம்மா அப்பா எல்லாம் நல்ல இருக்கிறாங்களா? சிங்களவன் ரொம்பத் தொல்லை பண்ணுறானா?”
அதே நேரத்தில் பண்ணையார், டம்பிங் கண்ணனையும் இன்னும் இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு கதவைத் திறந்தார். “நீங்க அவங்க கூட்டாளிகளா.. சந்தோசம். நீங்களும் வர்றதா அவங்க சொல்லலயே. பயணக் களைப்பில மறந்திருப்பாங்க. சரி வாங்க. வந்து முதல்ல சாப்பிடுங்க.” நேராக உணவுக் கூடத்திற்குத்தான் வந்தார்கள். அற்புதம் சோற்றுக் கவளத்தைக் கையில் ஏந்தி வைத்திருந்தவன், டம்பிங் கண்ணனைக் கண்ட மாத்திரத்திலேயே வாயில் போட்டு ம்ளுக் என்று விழுங்கினான். ‘இண்டைக்குத் தோலை உரிச்சு உப்புக் கண்டம் போடப் போகிறார்கள்.’
சப்பறம் பண்ணையாரைப் பார்த்து “இவங்களை ஏன் இஞ்ச கூட்டிக்கொண்டு வந்தனீங்கள்?” என்று கத்தினான். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. இரண்டு பேரையும் மாறி மாறிப் பார்த்தார். “உங்க இயக்கம்தான் தம்பி.” என்றார். “மசிர் இயக்கம்.” அவன் சாப்பாட்டுக் கோப்பையை டம்பிங் கண்ணனை நோக்கி வீசினான். அது சுழன்றபடி அரை வட்டப் பாதையில் பறந்து சுவரில் மோதி ணங் என்று விழுந்தது. துடித்து ஓய்ந்தது. டம்பிங் கண்ணன் ஒரே பாய்ச்சலில் பக்கத்தில் வந்தான். இடுப்பிலிருந்து பிஸ்ரலை உருவி சப்பறத்தைக் குறி பார்த்தான். அவனுக்குச் சிரிப்பு வந்தது. “தோழர் டம்பிங் கண்ணன் இப்போது துரோகத்திற்குச் சிறப்புப் பரிசு வழங்குவார்.” என்றான். பண்ணையார் சுதாகரித்துவிட்டார். அவர் ஓடிவந்து டம்பிங் கண்ணனுக்கு முன்னால் சப்பறத்தை மறைத்துக்கொண்டு நின்றார். “என்ன தம்பி இது? அண்ணன் தம்பிகளா பழகிட்டு துப்பாக்கியை நீட்டுறீங்க.. முதல்ல உட்காருங்க.. எதுவாயிருந்தாலும் பேசிக்கலாம்.” தன்னுடைய வார்த்தைகளுக்கு மரியாதை இருக்குமென்று அவர் நம்பியிருக்க வேண்டும்.
அற்புதம் இன்னமும் உணவு மேசையிலேயே உட்கார்ந்திருந்தான். கை விரல்கள் சோற்றில் அளைந்து அளைந்து மேலுமொரு கவளத்தை உருவாக்கின. திடீர் திடீரென்று காட்சிச் சட்டங்களை மாற்றுவதைப்போல ஒவ்வொருவரையும் பார்த்தான். ஒரு மூலைக்குள் ஒடுங்கிய கோழிக் குஞ்சைப்போல சப்பறம். முகத்திலும் கழுத்திலும் நீர் முத்துக்களைப்போல வியர்வை. “உன்னைக் கெஞ்சிக் கேக்கிறன். என்னை தலைமையிட்ட கூட்டிக்கொண்டு போ.” இரந்தான். பண்ணையார் குரலை உயர்த்தினார். “நானும் சொல்லிட்டே இருக்கேன். நிறுத்துங்க தம்பி. இல்லைன்னா பொலீசைக் கூப்பிடுவேன்.” பொன்னுரங்கம் தலைக்கு மேலே கைகளைக் கூப்பி “ஏழு மலையானே.. காப்பாத்து.” என்று கதறினாள். டம்பிங் கண்ணன் ஒவ்வொருவரையும் ஆறுதலாகப் பார்த்தான். சப்பறத்திடம் திரும்பி “இது தலைமையின் உத்தரவுதான் முன்னாள் பொறுப்பாளரே.” என்றான். யாரும் எதிர்பார்த்திரா நேரத்தில் பண்ணையாரை தள்ளி விழுத்திவிட்டு பிஸ்டலை அழுத்தினான். முதற் சூடு சப்பறத்தின் நெஞ்சுப் பக்கத்தில் தைத்தது. அவன் ஓட்டையைப் அடைப்பதைப்போல நெஞ்சைப் பொத்தினான். கண்கள் வெளியே பிதுங்கத் தொடங்கின. குப்புற விழுந்தான். அவனுடைய இரத்தம் ஐந்தாறு பாதைகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கியபோது அற்புதம் இரண்டாவது கவளச் சோற்றை விழுங்கினான்.

பண்ணையாருக்கு எங்கிருந்துதான் தைரியம் வந்ததோ? ஒரே தாவலில் டம்பிங் கண்ணனைக் கட்டிப் பிடித்துக்கொண்டார். “நீ வெளிய ஓடு பொன்னுரங்கம்.” அவள் மாரிலும் தலையும் அடித்துக் குழறினாள். சூட்டுச் சத்தம் வெளியே கேட்டிருக்க வேண்டும். வேலை ஆட்கள் கூடி விட்டார்கள். “வாங்கடா.. இவனைப் பிடியுங்கடா..” பண்ணையார் சத்தம் போட்டார். ஒரே ஒரு எத்து. டம்பிங் கண்ணன் துள்ளி விடுபட்டான். பற்களில் விகாரச் சிரிப்பு. பிஸ்ரலை நீட்டியபடி அவரைச் சுற்றிச் சுற்றி வந்தான், ஒரு விளையாட்டைப்போல. பண்ணையார் மறுபடியும் அழைத்தார். “பாத்திட்டு நிக்காமல் வாங்கடா..” சொல்லி வாய் மூடவில்லை, பிஸ்ரல் அடுத்தடுத்துக் குண்டுகளைத் துப்பியது. கழுத்தில், தோள்பட்டையில், நெஞ்சில் துளைத்தது. டம்பிங் கண்ணன் வெறி பிடித்தவன் மாதிரித் துள்ளினான். வேலை ஆட்கள் திக்குத் திக்காகச் சிதறினார்கள். அவர்களைத் துரத்திக்கொண்டு ஓடினான். பண்ணையாரின் கடைசிக் குரல் கோழி கேருவதைப்போல வெளியேறியது. கழுத்துத் துவாரத்திலிருந்து இரத்தம் ஒரு முறை கொப்பளித்து அடங்கியது. அற்புதம் எழுந்தான். கால்களுக்கிடையில் பரவிய குருதியிலிருந்து விலகி பென்னாம் பெரிய கிணற்றை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
“ஏன்டா.. கண்டாரோழிகளா.. சோறு தின்ன தட்டிலேயே பீயைப் பேண்டுட்டுப் போறீங்களேடா..” பொன்னுரங்கம் ஆவேசமாக் கத்துவது கேட்டது.
0
இரண்டு மாதங்கள் கடந்திருக்கும். என்னகிழமை.. என்ன திகதி எதுவும் தெரியாது. ஆலத்தூர், வடசேரி, மன்னார்குடி என்று ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்தான். ஒழுங்கான குளிப்பு முழுக்கு இல்லை. மாற்றுத் துணி இல்லை. வயிற்றுக்கு ஒரு நேரச் சோறு கூட இல்லை. கன்னங்கள் வற்றி புசு புசு என்று தாடி வளர்ந்துவிட்டது. பரட்டைத் தலை. காவிப் பற்கள். ஆளே அடையாளம் தெரியவில்லை. டம்பிங் கண்ணனால் கூட கண்டுபிடிக்க முடியாது. இந்தக் கோலத்தில் போய் ‘நான் ஈழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவன்.’ என்று யாரிடமாவது செலவுக்குக் காசு கேட்டால் ‘வெளிய போடா பிச்சைக்கார நாயே’ என்றுதான் துரத்துவார்கள். அன்றைக்கே கிணற்றில் விழுந்து செத்திருக்கலாம் என்று சில சமயம் தோன்றும். உண்மையில் அவன் அப்படித்தான் தீர்மானித்திருந்தான். கிணற்றின் அருகில் வந்ததும்தான் கால்கள் திசை மாறி விட்டன.
கோயில் பிரகாரங்களில் படுத்தெழுந்து அங்கேயே கிடைப்பதைத் தின்றான். சாப்பாட்டுக் கடைகளின் வெளியே குப்பைத் தொட்டிகளில் நிறையும் இலை மீதிகளை நிறையப் பிச்சைக்காரர்கள் வழித்து உண்பார்கள். பசியில் உயிரே போகும்போது வேறு வழியில்லை. ‘ஈழமும் மயிரும்.’ என்று சபித்தான். ‘சப்பறத்தின் கதையைக் கேட்டிருக்கக் கூடாது. அடி உதைப் பட்டாலும் அங்கேயே இருந்திருக்க வேண்டும்.’ எப்போதாவதுதான் அதிசயமாக சோறு கிடைத்தது. ஒவ்வொரு கவளமும் பொன்னுரங்கத்தின் ஓலம். ‘சோறு தின்ன தட்டிலேயே பீயைப் பேண்டுட்டுப் போறீங்களேடா..’
கும்பகோணத்தில் அலைந்து திரிந்தபோது சென்னை என்று எழுதியிருந்த லொறியைப் பார்த்ததும் ஏறிக்கொள்ளலாம் என்று தோன்றிற்று. “இதில ஏறட்டுமா அண்ணை?”
சாரதி பரிதாபமாகப் பார்த்தார். “நீ சென்னைக்குப் போகணுமா.. சரி ஏறு?”
மூட்டைகளோடு மூட்டைகளாக உட்கார்ந்திருந்தான். ஏதோ ஒரு வேகத்தில் ஏறியாயிற்று, ஆனால் சென்னைக்குப் போய் என்ன செய்வதென்று தெரியவில்லை. பிச்சைதான் எடுக்க வேண்டும். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு தாம்பரத்திலிருந்த துர்க்கை அம்மன் கோவிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வாட்ட சாட்டமான இரண்டு இளைஞர்களிடம் கையை நீட்டிக் காசு கேட்டான். “அண்ணை.. பிச்சை போடுங்கண்ணை..” அவர்கள் எப்பிடிக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. “நீங்கள் இலங்கைத் தமிழோ?” என்று உடனே கேட்டார்கள். அண்ணை! இந்த வார்த்தைதான் காட்டிக்கொடுத்திருக்கிறது. ஒரு மாதிரிப் பதற்றம்.. அவர்களுக்கு பின்னால் நின்ற யாரிடமோ யாசிப்பதைப்போல பார்வையைத் திருப்பினான்.
“எழும்புங்க..”
அற்புதம் கும்பிட்ட கையுடன் எழுந்தான். கைலிக்குள் சேர்த்திருந்த சில்லறை நாணயங்கள் நிலத்தில் சிந்தின. கண்ணீர் பொல பொலத்து வழிந்தது. “அண்ணையாக்கள்.. கோவில்ல வைச்சு என்னைச் சுட்டுடாதீங்கள்.” கேவி அழுதான். இளைஞர்களில் ஒருவன் கிட்ட நெருங்கித் தோளை அரவணைத்தான். அந்தத் தொடுகையில்தான் எத்தனை தோழமை.. அற்புதம் உடைந்துபோய் விட்டான். கட்டுக்கடங்காத அழுகை. “ஈழத் தமிழன் இப்பிடி அழக்கூடாது. முதல்ல இப்பிடியொரு பிச்சைக்காரன் மாதிரியே இருக்கக் கூடாது. எங்களோட வாங்க.” அவர்கள், ரெலோ இயக்க உறுப்பினர்கள் அற்புதத்தை சைக்கிளில் ஏற்றி அழைத்துப் போனார்கள்.
0
தாம்பரத்தில் இருந்த ரெலோ இயக்க முகாமில் அற்புதம் தங்கியிருந்தான். “இயக்கங்களுக்குத்தான் வெவ்வேற பெயர்கள். எல்லாருக்கும் இலக்கு ஒண்டுதானே?” அங்கிருந்த பொறுப்பாளர் அவனை வரவேற்ற நாளில் அப்படித்தான் சொன்னார். “எது என்னைத் தேடித் தேடிச் சுடுறதா?” என்று கேட்கத் தோன்றியது. தவிர்த்துவிட்டான். ஒருவகையில் அது உண்மையும்தான். இயக்கங்களுக்கிடையில் கொள்கை வேறுபாடுகள் என்று எதுவும் இல்லையே.. நண்பர்களிலேயே சிலர் புளொட்டுக்கும் சிலர் ரெலோவிற்கும் சிலர் புலிகளுக்கும் போயிருக்கிறார்கள். யாரைத் தெரியுமோ, எப்படித் தொடர்புகள் கிடைக்குமோ அப்பிடியே போய் இணைய வேண்டியதுதான். புலிகளுடைய படகு புறப்பட்டுப் போய்விட்டதால் புளொட்டில் சேர்கிறேன் என்று எங்களோடேயே ஒருவன் வந்தானே. இயக்கங்களின் பெருசுகளுக்குத்தான் இதெல்லாம் புரிவதில்லை. ஒரு பேச்சுக்கு டம்பிங் கண்ணன் என்னைத் தேடி வந்து நெற்றிக்கு நேரே துவக்கை நீட்டினால் இவர்கள் என்ன செய்வார்கள்? கையைப் பிடித்து அவனிடம் ஒப்படைத்துவிடுவார்களா?
முதல் சில நாட்களுக்கு வாசல் கதவைக்கூடத் தாண்டியதில்லை. பயப் பீதி. கொஞ்சம் கொஞ்சமாக தேயிலை, சீனி, அரிசி, பருப்பு என்று பக்கத்தில் இருக்கின்ற கடைகளுக்குப் போய்வந்தான். அச்சம் சற்றுத் தணிந்தது. இப்போது ஆவணங்களை பிரதி எடுக்க அவனைத்தான் அனுப்பினார்கள். பேருந்தில் சென்றுவரத் தொடங்கினான். “இப்பிடியே எங்களோடு இருந்துவிடு.” என்றும் கேட்டார்கள்தான். ஏனோ அற்புதத்திற்கு அப்படித் தோன்றவில்லை. ஊருக்குப் போகத்தான் ஆசையாக இருந்தது. “உங்கட இயக்கத்திலிருந்து ஒராள் தப்பி ஓடினால் ரெண்டு மாசத்தில அவரை மறந்துவிடுவீங்களா?” என்று ஒருநாள் கேட்டான்.
“அது தப்பி ஓடுற ஆளைப் பொறுத்தது.”
“என்னை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி விடுறீங்களா? நான் ஊருக்குப் போக ஆசைப்படுறன்.”
ஒருநாள் வேதாரண்யத்திலிருந்து மாதகலை நோக்கிப் புறப்பட்ட படகில் அற்புதம் உட்கார்ந்திருந்தான். கூடப் பயணித்த யாரையும் அறிமுகமில்லை. வழியனுப்பவும் யாரும் வரவில்லை. வரவேற்பதற்கும் யாரும் வரப் போவதில்லை. வெளியே கடலைப் பார்த்தான். அலைகளே இல்லை. சுழிபுரத்திலிருந்து புறப்பட்ட நாளில் மூசி மூசிப் பொங்கிய கடல், இன்றைக்குச் செத்த மாதிரிக் கிடக்கிறது. அன்றைக்கு மொட்டை மாஸ்ரர் சொன்னதை நினைத்தான். “நீங்கள் எல்லாம் ரெயினிங் முடிச்சு வந்த கையோடை சண்டையைத் தொடங்கினால், மூண்டு மாசத்தில தமிழீழம்.” அந்தச் சொற்களை அரட்டைதான் நிறைய நம்பியிருந்தான்.
அவனுக்குக் கல்யாண வயதில் இரண்டு அக்காக்கள் இருந்தார்கள். சீதனம் கொடுத்துக் கல்யாணம் கட்டிவைக்க இயலாத வறுமைப்பட்ட குடும்பம். யாரோ சோசலிச தமிழீழத்தில் சீதனம் கொடுக்கத் தேவையில்லை என்று சொல்லவும் அதை நம்பிப் படகேறிவிட்டான். “ஆறு மாதங்களில் ரெயினிங் முடிஞ்சிடும். அடுத்த மூன்று மாசத்தில தமிழீழம். எப்பிடியும் அடுத்த வருசக் கடைசியில அக்காக்களுக்கு கல்யாணம்கட்டி வைப்பன்.” பாவம், இப்ப எங்கிருக்கிறானோ.. அமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டு ஆளுக்காள் மாறி மாறி ‘மண்டையில் போட்டபோது’ “இந்த நாய்களால என்ர அக்காக்களிட கல்யாணாம் தள்ளிப் போகுது.” என்று வருத்தப்படுவான்.
பெருமூச்சு வெளியேறிற்று. சண்டையே தொடங்கவில்லை. ஆனால் நான் தோற்றுப் போனேன். அலையற்ற கடலையே வெறித்துப் பார்த்தான். ராங்கிக்காரி அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தன்னிரக்கம் பெருகியது. மாதகலில் இறங்கியதும் யாரிடமாவது காசு கேட்கவேண்டும். கையில் ஒரு சதமும் இல்லை. ‘நான் ஈழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவன். அவசரமாகக் கொஞ்சம் காசு தேவைப்படுகிறது. தருவீங்களா?’ எந்த இயக்கம் என்றால் யாரைச் சொல்வது?
மாதகலில் இறங்கியவனை ரெலோ இயக்கக்காரர்களே அழைத்துவந்து யாழ்ப்பாண நகரத்தில் விட்டார்கள். பழக்கமில்லாத இடம். பேருந்து நிறுத்தத்தில் விசாரித்தபோது இரவுக்குத்தான் புறப்படும் என்றார்கள். பெரியகடைப் பக்கமாக அலைந்து திரிந்தான். பசித்தது. ஒரு பழக்கடை வைத்திருந்த ஐயாவிடம் வெட்கத்தைவிட்டுக் கேட்டபோது அவர் “அம்மாளாச்சியே..” என்று பதை பதைத்துப் போனார். நிறையப் பழங்களை ஒரு பையில் வைத்துக் கொடுத்தார். இம்மாதிரி நேரங்களில் கண்ணீர் அதுபாட்டுக்கு உகுக்கிறது. நடந்தான். ஒரு சினிமா தியேட்டர் தென்பட்டது. றீகல் தியேட்டர். வெளிச்சுவரில் ஆங்கிலத் திரைப்படச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. பார்த்த உடனேயே தெரிந்தது, அது வயது வந்தோருக்கான படம் என்று. கால்கள் அனிச்சையாக அதை நோக்கி நடந்தன. பசியும் காமமும் வெட்கம் அறிவதில்லைப் போலும். கச்சைக்கு வெளியே முக்கால்வாசி மார்பும் பிதுங்கியபடி குனிந்து நின்ற வெள்ளைக்காரப் பெண். பூனைக் கண்கள், பெருத்த உதடுகள், வழுவழுத்த கால்கள், குதி உயர்ந்த செருப்பு, ஆங்கிலத்தில் ஏதேதோ பெயர்கள், தினசரி இரவுக் காட்சி.. கண்கள் ஒவ்வொன்றாகக் கீழிறங்கின. சம்மந்தமே இல்லாமல் வெள்ளை நிறத் தாளில் ஓர் அறிவிப்பு. அற்புதம் தீ சுட்ட மாதிரி துடித்துப் போய்விட்டான். அவனுடைய மார்பளவுப் படம். ஒருநாள் பயிற்சி முகாமில் ஒவ்வொருவராக நிற்க வைத்து எடுத்த படம், அடுத்தடுத்து ஒட்டப்பட்டிருந்தது. ஈரக்குலை நடுங்கியது. கால் ஊன்றி நிற்க முடியவில்லை. பக்கத்தில் யாராவது நிற்கிறார்களா என்று பார்த்தான். யாருமில்லை. அவன்தானா அது.. மேலே பெயர் இருந்தது. சிவப்பிரகாசம் அற்புதராஜா. சந்தேகமே இல்லை. அவன்தான்.
‘எமது கழகத்தைச் சேர்ந்த கனிட்டா என்ற பெண் உறுப்பினரைக் கற்பழித்த குற்றத்திற்காக கழகத்திலிருந்து விலக்கப்பட்ட சிவப்பிரகாசம் அற்புதராஜா – அற்புதம் என்ற இந்தச் சமூக விரோதிக்குக் கண்டதும் சுட்டுத் தள்ளும் மரண தண்டனை வழங்கப்படுகிறது.’
