10
அருள்குமரனின் அரசியல் தஞ்சக் கோரிக்கையை மத்திய புகலிடப் பணியகம் ஏற்றுக்கொண்ட தகவலைப் பதிவுத் தபாலில் அனுப்பியிருந்தார்கள். கடிதத்தின் உள்ளே கத்தையாகத் தாள்கள், ஒன்றுமே விளங்கவில்லை. மாலையில் முல்லர் வரும் வரைக்கும் காத்திருந்தான். லப்பாமும் டப்பாமும்தான் அந்தரப்பட்டார்கள். “ரிஜெக்ட் பண்ணிப் போட்டாங்களோ?”
முல்லருக்கு கடிதத்தின் தலைப்பைப் படித்தபோதே புரிந்துவிட்டது. கையை நீட்டி “வாழ்த்துகள்” என்றான். ஒரு நிம்மதியான தலை அசைப்புத்தான் பதில். “இனி நீ ஒரு அங்கீகரிக்கப்பட்ட அகதி.” என்றபோது வெறுமையான ஒரு புன்னகை. அவனுக்கான புதிய அடையாள ஆவணங்களை இணைத்திருந்தார்கள். பெயர், பிறந்த திகதிகளைச் சரிபார்த்தான். தேசியம் என்பதற்கு நேரே எதுவும் இல்லை. வெறும் மூன்று கோடுகள். நாடற்றவன் என்று அர்த்தம்.
லவகுசராசா வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் முகம் வாடி இருந்தது. அவனுடைய தஞ்சக் கோரிக்கையை ஏழு வருடங்களாக வைத்து இழுக்கிறார்கள். “அசல் சண்டை நடந்த யாழ்ப்பாணத்தில இருந்து வந்த எனக்கே இன்னமும் ஒரு முடிவு இல்லை. சண்டைக்கு சம்மந்தமே இல்லாமல் இருந்த கொழும்புக்காரன் நீ.. எனக்கு எப்பிடி உடனை தந்தாங்கள்?” அவன் வெட்கத்தை விட்டு கேட்டே விட்டான். பார்க்கப் பாவமாக இருந்தது. ஐந்தாறு பேர் ஒன்றாகத் தங்கியிருக்கும்போது இம்மாதிரித் தருணங்கள் வரத்தான் செய்யும். மொட்டையப்பாவின் ஞாபகம் வந்தது. அவனும் இப்படித்தான். யாராவது இரவோடு இரவாகத் தப்பி ஓடினால் அடுத்த நாள் முழுக்க கவலையாகத் திரிவான். “இண்டைக்கு அவன் தன்ர அம்மா கையால சாப்பிடுவான்.. அதை நினைக்க ஒரு மாதிரி இருக்கு.”
இரண்டு விசாரணைகளின்போதும் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் தட்டச்சுச் செய்யப்பட்டு ஆவணங்களோடு இணைக்கப்பட்டிருந்தன. அவற்றை கோப்பில் அடுக்கி வைத்தான். ‘ஒரு ஞாபகமாக இருக்கட்டும்.’
“இனிச் சொல்லலாம் தானே. உண்மையா உம்மட கேஸ் என்ன? உடன ஏற்றுக்கொள்ளுற அளவுக்கு உமக்கு என்ன நடந்தது?” லவகுசராசா திரும்பத் திரும்பக் கேட்ட கேள்விக்கான பதில் இந்தத் தாள்களில் ஏதாவது ஒரு பக்கத்தில்தான் இருக்க வேண்டும். நினைவிருக்கிறது. அது ஒரு நீண்ட பதில்.

கொழும்பு – 15, மட்டக்குளியில் ஜெயசீலி என்றொரு தியேட்டர் இருந்தது. அங்கே எப்பொழுதுமே வயது வந்தோருக்கான திரைப்படங்களை மட்டுமே காண்பிப்பார்கள். அன்றைக்கு பாபிலோனா நடித்த ஒரு படத்தை – பெயர் மறந்துவிட்டது.- பார்க்கலாம் என்று நானும் ராகுலனும் செந்தூரனும் திட்டமிட்டிருந்தோம். மருதானை என்ற இடத்தில் பேருந்தில் இருந்து இறங்கிய நான் அவர்களுக்காகக் காத்து நிற்கத் தொடங்கினேன். பன்னிரெண்டு மணிக்கு வருவதாகச் சொல்லியிருந்தார்கள். வெயில், அனலை அள்ளி தலையில் கொட்டியது. வியர்வை கொப்பளித்தது. கைக்குட்டையை முக்கோணமாக மடித்து புறங்கழுத்தில் செருகி வைத்தேன். தூசுப் படலமும், வாகன இரைச்சலும், ஹோர்ன் சத்தங்களும் அரியண்டப்படுத்தின. மருதானைச் சந்தியில் வெள்ளைக் கையுறை அணிந்த பொலிஸ்காரர்கள் தீவிரமாகக் கடமையில் ஈடுபட்டிருந்தார்கள். இன்னமும் நண்பர்களைக் காணவில்லை. தாமதமாகினால் படம் ஆரம்பித்துவிடும். ஒவ்வொரு பேருந்து வரவும், வாசற்படியையும் நேரத்தையும் பார்த்துக் கொண்டிருந்தேன். பஞ்சிகாவத்தைச் சந்தியிலிருந்து மருதானை வரையிலும் ஒன்றையொன்று நெரித்தபடி வாகனங்கள் ஊர்ந்துகொண்டிருந்தன. சிறுவர் பாடசாலைகள் முடிவடைகிற நேரம்போல, பெரும்பாலான பேருந்துகள் பள்ளிச் சேவையில் ஈடுபட்டிருந்தன. உள்ளே வெள்ளை மொட்டுக்கள்போல பள்ளிச் சிறார்கள். நல்ல ஞாபகமிருக்கிறது. ஒரேயொரு பேருந்து மட்டும், வர்ண மலர்ச் சரங்களால் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கல்யாண வீட்டுக்கு வாடகைக்கு அமர்த்தியிருக்கக் கூடும். பள்ளிக் குழந்தைகள் ஒருமித்த குரலில் பாடிய பாடல்கள் கேட்டன. அவர்கள் தெருவில் நின்றவர்களுக்கு பிஞ்சுக் கைகளை அசைத்தார்கள். பதிலுக்கு நானும் அசைத்தேன். திடீரென்று படத்துக்குப் போக வேண்டாம்போலத் தோன்றியது. நண்பர்கள் வந்தபிறகு கடற்கரைக்குப் போகலாம். குழந்தைகள் காகிதத்தில் செய்த விமானங்களை பேருந்துச் சாளரங்களால் வெளியே பறக்க விட்டார்கள். ஒரு காகித விமானம் காற்றில் அலைந்து அலைந்து மேலேறுவதையும் கீழிறங்குவதையும் பார்த்துக்கொண்டே இருந்தேன். அது மருதானைப் பாலத்தின் கீழே குத்திக்கொண்டு சரிந்தபோது பாலத்தின் மேலே குண்டு வெடித்துச் சிதறியது.
யாராவது உதைந்து விட்டார்களா..? அப்படித்தான் பேருந்து நிறுத்தக் கண்ணாடித் தடுப்பில் மோதுப்பட்டு விழுந்தேன். கண்ணாடிகள் சில்லுச் சில்லாக நொருங்கி எனக்கு மேலேயே கொட்டுப்பட்டன. எங்கும் சா ஓலம். ரத்த வெடுக்கு. சற்று முன்னர் பாட்டுப் பாடிய குரல்களின் கூக்குரல்கள். வெடி மருந்தின் நாற்றத்தைத் தாங்க முடியவில்லை. வாயில் எச்சில் வழிகிறது. கையை அசைக்க நினைக்கிறேன். இயலவில்லை. மூளை திணறுகிறது. நித்திரையில் திடீரென விழிப்புத் தட்டும்போது இப்படி நடந்திருக்கிறது. அந்நேரங்களில் ‘செத்துவிட்டேனோ?’ என்று பயந்திருக்கிறேன். இப்ப உண்மையாகவே செத்துவிட்டேனா? அழுகுரல்களும், அம்புலன்ஸ் வண்டிகளின் இரைச்சல்களும் மெல்ல மெல்ல அமிழ்கின்றன. அம்மா.. ஆராதனா.. ரொக்கெட்.. பெத்தம்மா.. ராகுலன்.. செந்தூரன்.. பாபிலோனா.. அமலி அக்கா.. சரவணபவன்.. யாரோ என்னைச் செக்கில் இட்டு நெரிக்கிறார்கள். முதுகிலிருந்தும், இடுப்பிலிருந்தும், தொடையிலிருந்தும் இரத்தத்தைப் பிழிகிறார்கள். உடலைக் கவிழ்த்துக் கிடந்தேன். வலது கை வயிற்றின் கீழே சிக்கியிருந்தது. ஓர் இரவுத் திருவிழாவில் தனியே தொலைந்துவிட்டதைப்போல தோன்றியதுதான் என்னுடைய கடைசி நினைவு.
இரண்டு நாட்களுக்குப் பிறகு கொழும்புப் பெரியாஸ்பத்திரியில் கண்விழித்தபோது ஒரு சிங்களத் தாதி ‘නැවත පොළොවට සාදරයෙන් පිළිගනිමු සහෝදරයා’ ‘ -பூமிக்கு மீண்டும் வருக, சகோதரா – என்று சிரித்தாள். எனக்குப் பக்கத்து வார்ட்டில் ஒரு பள்ளிச் சிறுமி படுத்திருந்தாள். அவளுடைய இரண்டு கால்களையும் துண்டித்திருந்தார்கள்.
பத்தப் பன்னிரெண்டு நாட்கள் ஆஸ்பத்திரியிலேயே தங்க வேண்டியிருந்தது. காயங்கள் முழுதாக ஆறவில்லை. திடீரென்று ஒரு நாள் ஆமிக்காரர்கள் உள்ளே நுழைந்தார்கள். வந்த வேகத்திலேயே எனது கைகளைப் பின்னால் மடக்கிப் பிடித்துக்கொண்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தக் குண்டு வெடிப்பில் எனக்கு தொடர்பு இருக்கிறது என்று அவர்கள் சொன்னபோது, உண்மையிலேயே அன்றைக்கு நான் செத்திருக்கலாம் என்று தோன்றியது. அவர்களுடைய சித்திரவதைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். என்னைத் தர தரவென்று இழுத்துச் சென்றபோது பூமிக்கு மறுபடியும் வரவேற்ற தாதியை கண்கள் பரிதாபத்துடன் தேடின. அவள் கடமையில் இருந்திருந்தால் நிச்சயமாக இராணுவத்துடன் சண்டை பிடித்திருப்பாள்.
