9
வெயில்தான் நிறங்களாலானது. பனி போர்த்திய வெண்மை வெறுமையாலானது. அருள்குமரன் பேருந்தின் ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தான். கிளிப் பச்சை நிறப் புல் நிலங்களில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. காதுகளில் இலக்கக் குறியீடு. கழுத்தில் ஆடிய செப்பு மணிகள் அசைந்து ஒலி எழுப்பின. அப்படி மூர்க்கமாகக் கத்திய அபர்ணா பொலிஸில் சொல்லுவமா என்று கேட்டபோது மட்டும் ஏன் வேண்டாம் என்றாள் என்று தெரியவில்லை. இப்பொழுதுதான் அங்கிருந்து புறப்பட்டான். அபர்ணா இரவு தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு நேரம் ஆகுமென்றும் அதுவரை காத்திருக்குமாறும் ஆலோசனை மையத்தில் சொன்னார்கள். அவன் அப்போதே புறப்பட்டிருக்கலாம். அவளை அழைத்துச் செல்லும் வரை காத்திருந்திருக்கத் தேவை இல்லை. ‘அவள் கேட்காமலேயே அப்பிடித் தொங்கிக் கொண்டிருந்ததுக்கு ஏதும் நினைச்சிருப்பாளோ?’ இருக்காது. அவள் இயல்பாகக் கதைத்துக் கொண்டுதான் இருந்தாள். ஏதோ ஒரு ‘ரூட்’ சொன்னாளே.. ஒரே நாளில் சிங்கப்பூரில் இருந்து சூரிச். ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் கள்ளப் பாஸ்போர்ட்டில் அப்படி நிறையப் பேர் வந்துகொண்டிருந்தார்கள். இப்பொழுது இறுகிவிட்டது. அருள்குமரன் மேற்கு ஆபிரிக்காவில் செனகல் என்ற நாட்டுக்குச் சென்று அங்கிருந்து மொரோக்கோவுக்குத் தரை வழியாகப் பயணித்து வான் வழியாக இத்தாலியில் இறங்கி, சுவிற்சர்லாந்தில் நுழைந்திருந்தான். அறுபது நாட்களைத் தின்ற பயணம்.
பேருந்து நிறுத்தத்தில் துள்ளி இறங்கினான். ஏறுவதற்காகக் காத்திருந்தவர்களுக்கு உற்சாகச் சிரிப்புடன் “குத்தென் ஆபென்ட்” என்றான். நெரிசலான நகரங்களில் என்ன மாதிரியோ தெரியாது, கிராமங்களில் இதுவொரு பழக்கம். தெருவில் யாரைக் கண்டாலும் வணக்கம் சொல்லுகிறார்கள். கண்களால் ஒரு சந்திப்பு, புன்சிரிப்பு, நல்ல நாள் ஆகட்டும் என்றொரு வார்த்தை.
முகாமிற்கு நடந்தபோது முல்லரின் கார் முந்திச் சென்றதைக் கண்டான். நல்லதாகப் போய்விட்டது. நேராக அலுவலகத்திற்குள் நுழைந்து “குத்தென் ஆபென்ட் திரு முல்லர்” என்றான்.
“குத்தென் ஆபென்ட்.” முல்லர் தலையை நிமிர்த்தாமலேயே கண்களை மட்டும் உயர்த்திப் பார்த்தான். “ஓ.. இங்குதான் இருக்கிறாயா? இப்போதெல்லாம் உன்னை இங்கு காணவே முடிவதில்லை. யாராவது பெண் நண்பியைக் கண்டு பிடித்துவிட்டாயோ என்று நினைத்தேன்.”
அருள்குமரன் வெட்கப்படுவதைப்போல சிரித்தான். “முல்லர், என்னை நஜிபுல்லாவிடமிருந்து பிரித்து வேறொரு அறைக்கு மாற்றி விடுகிறீர்களா?”
முல்லருக்கு முகம் சலித்தது. “ஏன்? அவன் மறுபடியும் கையைக் காலை வெட்டிக் கொண்டுவிட்டானா? கடவுளே.. இந்த ஊத்தை நாட்டுக்காரார்களால் பெரிய தொந்தரவு.”
“இல்லை. இல்லை. அவனுக்கு ஒன்றும் இல்லை. நான்தான் கேட்கிறேன்.”
“சைஸெ..” என்றான் முல்லர். அற்புதமும் இதே வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவான். ஏதாவது தூஷணச் சொல்லாக இருக்க வேண்டும். “குழந்தைகளுக்கு இடையில் பிணக்குத் தீர்க்கிற இந்த கின்டர் கார்டென் வேலையை சீக்கிரமே தூக்கி எறிய வேண்டும்.” முல்லர் தடித்த பதிவுப் புத்தகத்தை மேசையில் விரித்து எதையோ வாசித்தான். “இன்றைக்கு இரண்டு புதியவர்கள் இங்கே வருகிறார்கள். பெயரைப் பார்த்தால் உன்னுடைய நாட்டுக்காரர்களைப் போலத்தான் தெரிகிறது. பார்.” விரலால் சுட்டிக் காண்பித்தான். லவகுசராசா குசேலராசா என்ற மாதிரியான ஏதோ பெரிய பெயர். மற்றைய பெயரும் அப்படித்தான். “அவர்களோடு உன்னையும் ஒராளாகப் போடட்டுமா?”
“தாராளமாக.. நான் அவர்கள் வந்த பிறகு பொருட்களை எடுத்து மாற்றுகிறேன்.”
அருள்குமரன் நேராக நஜிபுல்லாவிடம் போனான். அவனுடைய இடது கையில் இன்னமும் வெண்ணிறத் துணிக் கட்டு. அதில் பார்வையைத் தவிர்த்தான். “நஜிபுல்லா.. நான் அப்படி நடந்திருக்கக் கூடாது. தயவுசெய்து மன்னித்துக்கொள். இப்போது ஒரு கோபமும் இல்லை. நான் முல்லரிடம் சொல்லி இன்னொரு அறைக்கு என்னை மாற்றச் சொல்லிவிட்டேன். இனி நீ எத்தனை பெண்களைக் கூட்டிவர விருப்பமோ அத்தனை பேரையும் கூட்டிக்கொண்டு வா. நான் இடைஞ்சல் செய்ய மாட்டேன்.” நஜிபுல்லா சிரிக்கக் கூடும் என்றுதான் நினைத்தான். ஆனால் அவனுடைய முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. குனிந்த தலை நிமிராமல் நின்றான். செத்த கண்கள். அருள்குமரனுக்கு அதற்கு மேல் அங்கு நிற்கச் சங்கடமாக இருந்தது. வெளியே வந்து குன்றின் உச்சிக்குச் சென்ற ஒற்றையடிப் பாதையில் நடந்தான். ‘ஒரு மன்னிப்புப் பூழலும் கேட்டிருக்கத் தேவையில்லை. சொல்லாமல் கொள்ளாமல் சாமான்களைத் தூக்கிப் போயிருக்க வேண்டும்.’ கருங்கற்களாலான படிகள் ஆரம்பித்தன. ஒவ்வொன்றுக்கும் இடையில் ஓர் அடியாவது உயரம். ஏற ஏற மூச்சு வாங்கியது.
உச்சியிலிருந்த ‘மோர்கார்த்தென் சண்டை’ நினைவாலயத்தைத் தூரத்திலிருந்து பார்த்தால், யாழ்ப்பாணக் கோட்டையில் உள்ள தூக்கு மேடையைப்போலத் தோன்றும். உள்ளிருந்து பார்த்தபோது ஒரு வட்ட வடிவக் கொட்டிலைப்போல இருந்தது. முகப்பிலேயே ‘1315ம் ஆண்டு நவம்பர் 15ம் திகதி ஒஸ்திரியப் படைகளை இவ்விடத்தில் வழிமறித்துத் தாக்கி வெற்றி பெற்ற சுவிட்சர்லாந்து வீரர்களின் நினைவாக..’ என்று செதுக்கி இருந்தார்கள். ஐந்து கோணங்களிலும் தூண்கள் கூரையைத் தாங்கி நின்றன. நடுவில் முற்றம். இடுப்பளவுச் சுவர். ஒரு பக்கம் அதள பாதாளம் போன்ற சரிவு. சுவரைப் பிடித்தவாறு கீழே பார்த்தான். கால்களை நடுங்கச் செய்கிற ஆழத்தில் தார் வீதி பாம்பு ஊர்வதைப்போல வளைந்து கிடந்தது. ஒரே சீரான வேகத்தில் ஒளியைப் பாய்ச்சியபடி கார்கள். அருகிலேயே எகெரி ஏரி ஆரம்பித்து தூரத்தில் எங்கோ மலையடிவாரத்தில் காணாமற்போனது. மாலை ஆறு மணி வெயிலுக்கு தண்ணீர் ஈயத்தாள்போல மின்னியது. தளபதி வெர்னர் ஸ்ராபாஹரின் வீரர்கள் ஒஸ்திரிய இளவரசனான லியோபோல்ட்டின் படைகளை மறித்துத் தாக்கியபோது கொல்லப்படுவதை விட குளிரால் உறைந்த இந்த ஏரிக்குள் புதைந்து சாவது வலியற்றது என்று நினைத்த ஒஸ்திரிய வீரர்கள் இந்த ஏரிக்குள் குதித்தார்களாம்.
இப்போதெல்லாம் இருட்டுவதற்கு ஏழு ஏழரை ஆகிறது. இனி நாளாக நாளாக பகல் நீளும். இரவு பத்து மணிக்கும் வெளிச்சத்தைப் பார்க்கலாம். ‘முதல்ல இண்டைக்கு இரவு தங்கிறதுக்கு ஒரு இடம் தரச் சொல்லுங்கள். நிம்மதியா ஒரு நித்திரை கொள்ள வேணும்.’ திடீரென்று அபர்ணாவின் நினைவு வந்தது. கோபமும் மௌனமும் அழுகையுமாக இருந்த அந்த முகம். கதாநாயகியின் அக்காவின் முகம்! அந்தப் படத்தை கொழும்பில்தான் பார்த்திருந்தான். முடிந்து திரும்பும்போது ராகுலனும் செந்தூரனும் கதாநாயகியைச் சிலாகித்துக்கொண்டே வந்தார்கள். “போங்கடா.. அவளிட அக்காதான் வடிவு.” என்றான் அருள்குமரன். “இதுதான் எண்டு சொல்லத் தெரியேல்லை. ஆனால் ஏதோ பக்கத்து வீட்டில இருக்கிற அக்கா மாதிரி இருக்கிறா. கண்ணைப் பாத்தீங்களா.. துறுதுறுவெண்டு இருந்திச்சு.” இப்போது நினைக்க, சிறு புன்னகை துளிர்த்தது. ‘நாளைக்கு ஆலோசனை மையத்திலிருந்து அரங்கனைக் கூப்பிட்டுப் பேசுவார்களாக்கும். அவனுக்கு ஏதாவது மனநோயாக இருக்குமோ.. ‘எவனோட படுத்திட்டு வந்தனி எண்டு அடிக்கிறான்’ அபர்ணாவுடைய அழுத குரலை அப்படிச் சந்தேகிக்கவே முடியவில்லை. அம்மாவின் அழுத குரலை அப்படி யாராவது சந்தேகிப்பார்களா..? சைஸெ..’ அருள்குமரன் கருங்கல் தரையை காலால் உதைந்தான். மள மளவென்று படிகளில் இறங்கினான்.
இலங்கையைச் சேர்ந்த அந்த இரண்டு பேரும் முகாமுக்கு வந்துவிட்டார்கள்போல. வழியில் முல்லர் நின்றான். “உன்னைத்தான் தேடினேன். போய் பொருட்களை எடுத்துக்கொண்டு வா.” என்றான். அருள்குமரன் நஜிபுல்லாவின் அறைக்குள் நுழைந்து பைகளைத் தூக்கினான். பொருட்கள் என்று பெரிதாக எதுவும் இல்லை. தலையணையையும் போர்வையையும் சுற்றி வைத்தான். சவர உபகரணங்களைக் காணவில்லை. பொதுக் குளியலறையிலேயே மறந்து வைத்துவிட்டான். கதவிலிருந்த ஆடைக் கொழுவியில் நஜிபுல்லாவின் உடுப்புக்கள்தான் தொங்கின. அவனை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. போட்டு வாறன் என்று கூடச் சொல்லத் தேவையில்லை. அவனுடைய திமிர் அவனோடு இருக்கட்டும். என்னிடம் காட்டக் கூடாது. வெளியேற எத்தனித்தபோது நஜிபுல்லா “அருள்குமரன்” என்று அழைத்தான். செத்த குரல். எழுந்து வந்து கையைப் பற்றிக் கொண்டான். வேர்த்த உள்ளங்கை. “எனக்கு உன்னில ஒரு கோபமும் இல்லை. போயிட்டு வா.”
0
அதே இரும்புக் கொள்கலன். ஒரு மூலையில் ‘ட’ வடிவில் இரண்டு கட்டில்கள். எதிர்ப்பக்கத்தில் இன்னொரு கட்டில். அருள்குமரன் நுழைந்தபோது இரண்டு பேரும் பொருட்களைக் கடை பரப்பிக் கொண்டிருந்தார்கள். அவனை விடவும் வயது சற்று அதிகம்தான்போல. இருபத்தாறு, இருபத்தேழு இருக்கலாம். ஒருவனுக்கு லவகுசராசாவோ என்னவோ என்று பார்த்த ஞாபகம். மற்றையவனுடைய பெயர் தெரியவில்லை. அவன் தலைவர் பிரபாகரனுடைய படம் பொறித்த தமிழ்த்தாய் கலண்டரை கையில் வைத்துக் கொண்டு “இதை எதில கொழுவிறது?” என்று கேட்டான். மற்றவன் தலையைச் சுழற்றிக் கொள்கலனைப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமலேயே தன்னுடைய வேலையைத் தொடர்ந்தான். அவர்கள் பெரிய சூட்கேஸில் உடுப்புக்களைக் எடுத்து வந்திருக்க வேண்டும். “இது என்ரை.. உது உன்ரை..” என்று பிரித்து பழைய பத்திரிகைகளால் சுற்றி வைத்தார்கள். பார்ப்பதற்கு இரட்டையர்களைப்போன்ற தோற்றம். ‘லப்பாம் டப்பாம்.’ என்று ஏனோ தோன்றவும் அருள்குமரன் முறுவலித்தான். எத்தனையோ வருடங்களுக்கு முன்னால், ஒரு சிறுவர் இதழில் படித்த இரட்டையர்களின் பெயர் அது. காலத்தில் புதைந்து கிடந்துவிட்டு இன்றைக்கு நினைவுகளில் முளைக்கிறது. குரலைச் செருமியவாறு நேராகச் சென்று தனித்திருந்த ஒற்றைக் கட்டிலில் உட்கார்ந்தான்.
“எட.. நீங்களும் தமிழே?” லவகுசராசா வாயெல்லாம் பல்லாகச் சிரித்தான். “யாராவது கறுப்பன்கள் வந்து பூந்திடுவாங்களோ எண்டு பயந்துகொண்டிருந்தம்.” வெளிநாட்டுக் களை உள்ள முகம் அவனுக்கு. நிறையக் காலமாக சுவிஸில் இருக்கிறான்போல. அவனிடம் அதைப்பற்றி ஒன்றையும் கேட்டுவிடக் கூடாது. ரத்தம், கொலை, துவக்கு என்று தொடங்கிவிடுவார்கள். இவர்களுக்குப் பதில் யாராவது சுவிஸ்காரர்கள் வந்திருந்தால்.. நாசமறுக்க.. சுவிஸ்காரன் ஏன் அகதியாக வரப்போகிறான்?
“நானும் கறுப்புத்தானே?” என்று அருள்குமரன் சிரித்தான்.
“நீங்கள் எங்கை யாழ்ப்பாணமோ? நாங்களும் யாழ்ப்பாணம்தான்.”
“ம்..”
“நல்லவேளை. மட்டக்களப்பு என்றால் இருக்கிற கோபத்துக்கு அடிபிடிதான் நடந்திருக்கும். இவன் கருணா என்ன வேலை செய்திருக்கிறான் எண்டு பாத்தீங்களே?”
இவர்கள் இன்றைக்கு நித்திரை கொள்ள விடமாட்டார்கள். தெரியாத்தனமாக வந்து அகப்பட்டுவிட்டேனோ? இனி முல்லரிடம் போய் அறையை மாற்றுங்கள் என்று கேட்டால் செருப்பாலேயே அடிப்பான். உடுப்பை மாற்றிவிட்டு கட்டிலில் சாய்ந்தான். லப்பாமும் டப்பாமும் ‘எப்ப வந்தனீங்கள்? எப்பிடி வந்தனீங்கள்?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ‘இம்.. உம்..’ என்றுதான் பெரும்பாலான பதில்கள். ஒருகட்டத்தில் “நான் பிறந்தது மட்டும்தான் யாழ்ப்பாணத்தில. வளர்ந்தது கொழும்பில.” என்று சொல்லிப் பார்த்தான்.
“கொழும்பில ஒரு பிரச்சினையும் இல்லைத்தானே? ஏன் வந்தனீங்கள்?”
“..”
“அது சரி. குண்டுகள் அறம்புறமா வெடிச்சதுதானே..”
“..”
“குண்டுகள் வெடிக்கிற நேரம் உங்களுக்கு ஒரு பிரச்சனையும் வாறேல்லையே?”
அருள்குமரன் எப்போது தூங்கிப் போனான் என்று தெரியவில்லை. நடுச் சாமத்தில் சத்தங்கள் கேட்டுத்தான் திடுக்கிட்டு விழித்தான். உறுமுவதும் ஓய்வதுமான கார்களின் இரைச்சல். தட தடவென்று ஆட்களின் நடமாட்டம். எங்கோ தூரத்தில் அம்புலன்ஸ் வண்டியின் கூவல். இனம் புரியாத எச்சரிக்கை உணர்வு தொற்றிக் கொள்ள எழுந்து வெளியே வந்தான். இரண்டு பொலிஸ் வாகனங்கள் நின்றன. கரு நீலச் சீருடைப் பொலிஸ்காரர்களின் டோர்ச் வெளிச்சங்கள் இங்கும் அங்குமாக அலைந்தன. யாரையாவது தேடுகிறார்களா? அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களைப் பொலிஸார்தான் கைது செய்து திருப்பி அனுப்புவார்கள் என்று கேள்விப்பட்டிருந்தான். முரண்டு பிடித்தால் ஊசி அடித்துத்தான் விமானத்தில் ஏற்றுவார்களாம். உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் இங்கு அப்படி யாரும் இல்லையே.. அடுத்த கொள்கலனில் இரண்டு திபெத்தியர்கள்தான் இருந்தார்கள். அவர்கள் யாரோடும் ஒரு சோலி சுரட்டுக்கும் போகாத சீவன்கள். நேரில் கண்டால் ஒரு சிரிப்பு. அவ்வளவும்தான். அருள்குமரனை ஒரு பொலிஸ்காரி கண்டுகொண்டாள். “நீ இங்கேயா இருக்கிறாய்?” என்று கேட்டுக்கொண்டே கிட்ட வந்தாள்.
“ஆம், இந்த முகாமில்தான்.”
“இங்க எத்தனை பேர் இருக்கிறீர்கள்? யாராவது வெளியே போயிருக்கிறார்களா?”
“ஏன் கேட்கிறீர்கள்?”
“ஏரிக்கரை வீதியில் ஒரு விபத்து. ஒருவன் உயிரிழந்துவிட்டான். ஒருவேளை மோர்கார்த்தென் நினைவாலய உச்சியிலிருந்து கீழே விழுந்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம்.”

அருள்குமரன் நெற்றியைச் சுருக்கி ஓரிரு நொடிகளுக்குத்தான் யோசித்திருப்பான். தீடீரென்று ஏதோ உறைத்தது. “நஜிபுல்லா..” என்று கத்தியவாறு கொள்கலனை நோக்கி ஓடினான். கதவு ஓவென்று திறந்திருந்தது. நஜிபுல்லாவைக் காணவில்லை. மின் விளக்கு எரிந்தது. கட்டிலில் எப்போதுமே குமைந்து கிடக்கும் போர்வை அபூர்வமாக மடித்து விரிக்கப்பட்டிருந்தது. தரையைக் கூட்டித் துடைத்திருக்க வேண்டும். பதகளிக்கத் தொடங்கினான். வாசலில் இரண்டு மூன்று பொலிஸ்காரர்கள் கூடிவிட்டார்கள். அவர்களிடம் கட்டிலைக் காட்டி எதையோ சொல்ல முயன்றான். குளறலான சொற்கள். “அவன்தான்.. அவன்தான்.” உடல் வியர்த்து நடுங்கிற்று. “டேய்.. நஜிபுல்லா..” என்று கத்திக்கொண்டு குன்றை நோக்கி ஓடியவனை கருங்கல் படிகளில் வைத்து ஒரு பொலிஸ்காரி மடக்கிப் பிடித்தாள். “இப்பிடி உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நீ அங்கே போகக் கூடாது.”
“என்னை விடுங்கள்.. என்னை விடுங்கள்..” இரும்புப் பிடி அசையவே இல்லை. இழுத்துக்கொண்டு கீழே வந்தாள். இதற்கிடையில் முல்லரை அழைத்து வந்திருந்தார்கள். அவருடைய முகத்தைப் பார்க்கவே குற்ற உணர்ச்சியாக இருந்தது.
“நான்தான்.. நான்தான் அறையை மாத்தாமல் இருந்திருக்க வேணும். நானும் இருந்திருந்தால் அவன் போயிருக்க மாட்டான்.” நிலத்திலேயே குந்தி இருந்து முழந்தாள்களைக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினான்.
0
நஜிபுல்லாவின் உடல் பாகங்களை எகெரி ஏரியிலிருந்தும் கண்டெடுத்தார்கள். அவன் நினைவாலயத்திலிருந்து குதித்தபோது உயிர் இருந்திருக்கக் கூடும். ஆனால் வேகமாக வந்த ஒரு கார் மோதித் தள்ளிவிட்டது. உடல் சிதைந்து போயிற்று.
இரண்டாவது நாள் காலையில் இறுதி நிகழ்வுகள் நடந்தன. ஒன்றிரண்டு பேர்தான் வந்தார்கள். அருகிலேயே முல்லர் உட்கார்ந்திருந்தார். கைகளைக் கோர்த்துக்கொண்டு பிரார்த்திப்பவர்போல சலனமற்ற முகம். நஜிபுல்லாவின் உடல் விளக்குமாற்றால் கூட்டியள்ளிய ரொக்கெட்டின் அம்மாவைப்போல ஒரு பொட்டலத்தில்தான் கிடக்க வேண்டும். அருள்குமரனுடைய பார்வை பிரேதப் பெட்டியிலேயே நிலைகுத்தி நின்றது. ‘எனக்கு உன்னில் ஒரு கோபமும் இல்லை. போயிட்டு வா.’ இறுதிச் சொற்களில் திரும்பத் திரும்ப நினைவு குவிந்தது.
இரவு, ஆளரவம் இல்லாமல் இருந்திருக்கும். தூக்கத்தில் திடீரென்று விழிப்புத் தட்டியபோது ‘தற்கொலை செய்துகொள்வோம்.’ என்று தோன்றியிருக்கும். இருட்டிலேயே நடந்து நினைவாலயத்திற்குச் சென்றிருப்பான். இடுப்பு உயரச் சுவரில் சாய்ந்து நின்று பார்த்தபோது ஏரி ஒரு பெரிய கரு நிறப் படுக்கையைப்போலத் தோன்றியிருக்கும். தெரு விளக்குகளின் சோர்ந்த ஒளியில் தண்ணீர் கரையில் தளும்புவது தெரிந்திருக்கும். வளைவான வீதியில் அவ்வப்போது சீறும் ஒரு சோடி வெளிச்சக் கண்கள். ஏரியின் முடிவிடங்களில் எழுந்து உயர்ந்த மலைகள் அவனுக்கு ஆப்கானிஸ்தானின் வரண்ட மலைகளை நினைவு படுத்தியிருக்கும். ‘ஆப்கானின் தேவதைகளே.. நீங்களே உங்களை காத்திடும் வல்லபம் ஆகுக.’ அவன் ஒரே தாவலில்..
அருள்குமரனுக்கு விதிர்த்தது. நினைவுகளைக் கலைத்துவிட படாத பாடு பட்டான். நஜிபுல்லாவைத் தூக்கிச் செல்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டார்கள். நெஞ்சுக்குள் குமுறல் கூடிக் கூடிப் பெருத்தது. எந்தக் கணத்திலும் வெடித்து உடைந்துவிடும். இங்கே இருக்கக் கூடாது. அவசர அவசரமாக எழுந்து முல்லரின் தோள்களை ஆதரவாக அணைத்துவிட்டு வெளியேற எத்தனித்தபோதுதான் கவனித்தான். அந்த மூத்த முகம் இரத்தமாகச் சிவந்து கிடந்தது. வழியும் கண்ணீரை துடைத்துவிடவும் அவருக்குத் தோன்றவில்லை. மேல் உதடு வலிப்பு மாதிரித் துடித்தது. அரற்றுவதைப்போல திரும்பத் திரும்ப வார்த்தைகள் வெளியேறின.
“என்னுடைய கின்டர்கார்டன் குழந்தைகளில் ஒன்று அநியாயமாகச் செத்துக் கிடக்கிறதே..”
0
அருள்குமரனுக்கு முகாமில் இருக்கவே பிடிக்கவில்லை. நஜிபுல்லா, ஷாமினா, ராணா என்று நினைவுகள் சுழன்றுகொண்டே இருந்தன. எங்காவது வெளியே போவதென்றாலும் அற்புதத்திடம்தான் போக வேண்டும், அவருடைய கதைகளைக் கேட்டுக்கொண்டு. பாவம். அவருடையதும் வாதையான இறந்த காலக் கதைகள். கொலை, பழிவாங்கல், சித்திரவதை.. இது மாதிரி நேரங்களில் காதுகளில் சக்கை வைத்து அடைத்துவிட வேண்டும். ஆராதனா கதைப்பாளே அப்படி யாருமே கதைக்க மாட்டார்களா? சிரிப்பு.. பகிடி.. பம்பல்.. எதுவுமே இல்லை. தனிமை. நினைவாலயத்தில் ஏறிச் சும்மா இருப்பதற்குக் கூட பயமாக இருந்தது. அங்கிருந்த இடுப்பளவுச் சுவரில் யாரும் ஏறாதவாறு இரும்பு வேலியால் அடைத்திருந்தார்கள். அதற்குப் பிறகு தோற்றத்தில் ஒரு சிறைக் கூண்டுபோல ஆகிவிட்டது. அறையைப் பகிர்ந்த லப்பாம் டப்பாம்களோடு ஏதாவது கதைக்கலாம் என்றால் ‘அதுகள் ஆகவெண்ட வெருளியள்.’ நஜிபுல்லாவின் சாவுக்கு இரண்டாம் நாள், அருள்குமரன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான். சாப்பிடவும் இல்லை. லவகுசராசாதான் ஆரம்பித்தான். “எதுக்குக் கவலைப்படுறீங்கள்? பாகிஸ்தான்காரங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். அவங்கள்தானே இலங்கை அரசாங்கத்துக்கு மல்ரிபெரல் ஆயுதங்கள் குடுத்தவங்கள்.”
“அவன் பாகிஸ்தான்காரன் இல்லை. ஆப்கானிஸ்தான்.” அருள்குமரனிடம் சுரத்தே இல்லை.
“எல்லா ஸ்தானும் ஒண்டுதானே..” என்று எதையோ சொல்லியவாறு லவகுசராசா வெளியே போனான். அவனுக்கும் மற்றயவனுக்கும் அடிக்கடி முறுகல் வரும். ஐந்து சதத்திற்கும் பெறுமதி இல்லாத ஏதேதோ காரணங்கள். லவகுசராசாவை இந்திய இராணுவம், தமிழ்த் துணை இராணுவக் குழுக்கள், புலிகள், இலங்கைப் பொலிஸ், இலங்கை இராணுவம் என்று எல்லோருமே கைது செய்தார்களாம். ‘நீ எங்களுடன் இரு.’ என்று வலுக்கட்டாயமாக அவனை வைத்துக் கொண்டார்களாம். ஒவ்வொருவராகத் தப்பி கடைசியில் படகில் இத்தாலிக்கு வந்து இறங்கியபோது இத்தாலிப் பொலிஸ்காரர்களும் அவனைக் கைது செய்தார்களாம். லவகுசராசா சொல்லி வாய்மூடவில்லை, மற்றவன், “அப்ப இத்தாலிப் பொலிஸ் உன்னைத் தங்களோடை சேரச் சொல்ல வில்லயா?” என்று கேட்டுவிட்டான். அவனுடைய முகத்திலேயே ஒரு குத்து விழுந்தது. கட்டிப் புரண்டு சண்டை பிடித்தார்கள். பிறகு அவர்களாகவே ஒருவாறு சமாதானம் ஆகிவிட்டார்கள். “இஞ்ச.. இப்பிடிச் சண்டை பிடிச்சதை முல்லரிட்டைச் சொல்ல வேண்டாம். எங்கடை ஊத்தைகள் எங்களோடையே இருக்கட்டும்.”
எங்காவது வேலைக்குப் போகலாமென்றால் வதிவிட அனுமதிப் பிரச்சனை இருந்தது. தற்காலிக அனுமதிக்கு யாரும் வேலை தருவதில்லை. களவாகத்தான் செய்ய வேண்டும். அதற்குத் தமிழ் முதலாளிகள்தான் யாராவது வேலை தர வேண்டும். ஒருநாள் அருள்குமரன் மளிகைச் சாமான் வாங்கப் போகும் தமிழ் முதலாளி அதற்குத்தான் பேச்சுக் கொடுத்தான்.
“தம்பி புதுசோ?”
“ஓம் அண்ணை. மலைக் காம்ப் இல் விட்டிருக்கினம்.”
“விசா தந்திட்டாங்களோ?”
“இல்லை அண்ணை. ரெண்டாவது விசாரணை முடிஞ்சிட்டுது. முடிவைப் பாத்துக் கொண்டு இருக்கிறன்.”
“அது இழுக்கும் தம்பி ஆறேழு வருசத்துக்கு. அதுவரைக்கும் காத்திருக்காமல் கிடைக்கிற வேலைகளைச் செய்து நாலு காசு சேரும்.”
அருள்குமரனே தன்னிடம் வேலை கேட்பான் என்று எதிர்பார்த்தானோ என்னவோ, நீண்ட நேரமாக அமைதியாக இருந்தான். புறப்படுகிற தருணத்தில்தான் “இங்கை செவ்வாயும் சனியும் மீன் வாறது. எனக்குத் தனிய நிண்டு வெட்டிக் குடுக்க கஸ்ரம். வந்து செய்தீரெண்டால் பொழுதும் போகும். ஐஞ்சாறு பிராங்க் கையிலயும் சேரும்.” என்றான். சம்பளத்தை நிர்ணயித்துவிட்டான் என்று தோன்றியது. பரவாயில்லை. இந்தக் கோடை காலத்துப் பெரிய பகல்களைத் தாண்டுவதற்காகவேனும் இதைச் செய்யலாம். “சரி. நாளைக்கு வாறன்.” என்றான்.
“உமக்கு விசா இல்லை எண்டு தெரிஞ்ச ஒருத்தருக்கும் நீர் வேலைக்கு வாறதைச் சொல்ல வேண்டாம். பொலிசுக்குப் போட்டுக் குடுத்துவிடுவாங்கள். காட்டிக் குடுக்கிற கள்ள நாய்கள். இதுகள்தான் எங்கடை இனத்தின்ர சாபக் கேடுகள். இல்லையெண்டால் தலைவர் எப்பவோ…”
அருள்குமரன் “எனக்கு பஸ் வருகுது.” என்றுவிட்டு வெளியேறினான்.
பேருந்து நிறுத்தத்திலிருந்து நான்கைந்து நிமிட நடையில் நிலக்கீழ் தளத்தில் தமிழ்க் கடை இருந்தது. அடுத்த நாள் காலை கடை திறக்கும் நேரத்திற்கே அருள்குமரன் வந்துவிட்டான். ஒடுங்கிய படிகளில் இறங்கி கதவைத் திறந்ததுமே மசாலா வாசம் மூக்கை அரித்தது. அரிசிப் பைகள், வெங்காயச் சாக்குகள், மரக்கறிகளோடு ரெஜிபோம் பெட்டிகள் என்று இட்டுமுட்டான இடவசதிதான். இறாக்கைகளில் மளிகைப் பொருட்கள் நிரப்பப்பட்டிருந்தன. பெரும்பாலும் இந்திய, இலங்கை, ஆபிரிக்கத் தயாரிப்புக்கள்தான். பில் மேசையில் முதலாளி உட்கார்ந்திருந்தான். நன்றாக ஞாபகத் வைத்திருக்கக் கூடிய பெயர் அவனுக்கு. பரலோகம். ஏதாவது பட்டப் பெயராக இருக்கும். அவனுக்கு மேலே சுவரில் வெள்ளைக்காரக் குழந்தையின் வண்ணப்படம் பெரிய அளவில் சட்டமிடப்பட்டு மாட்டப்பட்டிருந்தது. முன்னரே கலண்டர்களில் அந்தக் குழந்தையின் முகத்தைக் கண்ட ஞாபகம். அல்லது வேறு குழந்தையோ தெரியாது. கடையின் பின் பகுதியில்தான் மீன் விற்பனை நடந்தது. கண்ணாடிப் பெட்டிகளில் குறுணிக் கற்களைப்போன்ற ஐஸ்கட்டிகளுக்கு மேலே மீன்கள், கணவாய்கள், நண்டுகள், இறால்கள் சீராக அடுக்கப்பட்டிருந்தன. நேற்று இரவே வந்திருக்க வேண்டும்.
பரலோகம் வரவேற்றான். “இண்டைக்குச் சனிக்கிழமைதானே. சனங்கள் நேரத்தோட வரத் தொடங்குவினம். வடிவாகச் செதிலைத் தட்டி குடலை எறிந்து துண்டு துண்டுகளாக வெட்டிக் கொடுக்க வேணும். மெசின் இருக்கிறது. ஒரு தடவை செய்து காட்டவா?”
“இல்லை.. நான் செய்யிறன்.” என்றான் அருள்குமரன். வெள்ளை நிறப் பொலித்தீன் அங்கியை கழுத்தில் முடிந்து நெஞ்சை மறைத்தான். பாரை, விளை, சூரை, அறக்குளா, பாலை.. பரவாயில்லை, எல்லாப் பெயர்களும் இன்னமும் ஞாபகத்தில் இருக்கின்றன. விளை மீனின் காதுச் சிறகை விரித்தபோது இரத்தச் சிவப்பாக இருந்தது. புது மீன்தான். யாரோ வந்தார்கள். நிமிர்ந்தான். நெற்றியில் மூன்று இடங்களில் குங்குமப் பொட்டு வைத்த பெண். கணுக்காலைத் தொடும் பாவாடையும் தொள தொளத்த சட்டையும் அணிந்திருந்தாள். தடித்த தாலிக் கொடி மின்னியது. “தம்பி.. இது இலங்கை மீனோ? இல்லாட்டி இந்தியா மீனோ?”
அருள்குமரனுக்குச் சிரிப்புக் கசிந்தது. “இது சைனா மீன் அன்ரி.” என்றான். அவள் அந்தப் பகிடியை ரசித்த மாதிரித் தெரியவில்லை. ”எனக்கு இந்தியா மீன்தான் வேணும்.” என்றாள். “இலங்கை மீனாகப் பிறந்திருக்கும். பிறகு இந்தியாவில அகதியாக ஆகியிருக்கும்.” என்றபோது கலகலவென்று சிரித்தாள். “நீர் சரியான பகிடிக்காரன்தான். ரெண்டு விளை மீனும் ஆறேழு நீலக் கால் நண்டும் எடும்.” என்றாள்.
பனித் துகள்களில் புதைந்திருந்த ஒரே அளவான இரண்டு மீன்களைத் தூக்கினான். மேசையில் அழுத்திப் பிடித்துக்கொண்டு கூரிய அரத்தினால் சொரிய சொரிய செதில்கள் உதிர்ந்தன. பொலித்தீன் காற்றுக் குமிழிகளை நெரித்து உடைப்பதைப்போல ஓர் இதமான காரியம். செதில்கள் உதிர்கிறபோது தேகமே பொலிவுறுவதைப்போல இருந்தது. மீனின் கண்களுக்குப் பக்கத்து இறக்கைகளை நறுக்கினான். இயந்திரத்தை உயிர்ப்பித்ததும் மெல்லிய பற்களைக் கொண்ட இரும்பு வாள், இயங்கத் தொடங்கியது. அதில் மீனைத் தள்ளித் துண்டுகள் ஆக்கினான். துண்டுகளைக் குடல் நீக்கி பையில் போட்டு அவளிடம் நீட்டினாள். “நன்றி அக்கா.” புதுப் பழக்கம் என்பதால் தாமதமாகிறது. நாளாக நாளாகப் பழகிவிடும். பரலோகம் குரல் கொடுத்தான். “கொஞ்சம் வேகமாச் செய்யும். ஆட்கள் லைனில நிக்கினம்.”
இரண்டாமாள் இலங்கை மீன்தான் ருசி என்றான். “அண்ணை, ராமேஸ்வரத்தில இருந்து போற ரோலர் படகுகள், வழிச்சிட்டு வாறது முழுக்க இலங்கை மீனைத்தானே.” கெட்டிக்காரன். வெறும் இருபதே நிமிடத்தில் தேர்ந்த ‘யாவாரி’ ஆகிவிட்டான். மறுபடியும் பரலோகத்தின் குரல் கேட்டது. “நீர் கேட்டுக் கேட்டுக் குடுத்தால்தான் வாங்காத ஆக்களும் வாங்குவினம்.”
அருள்குமரன் யாரைக் கூப்பிடலாம் என்று பார்த்தான். சற்றுத் தள்ளி கத்தரிக்காய்களில் சூத்தையைச் சோதித்துக்கொண்டிருந்தாள் ஒருத்தி. அவளை அழைக்கலாம். “அன்ரி இங்க வாங்க.. இந்த மீனைப் பாருங்க.. இது பாலை மீன். ஒருக்காச் சாப்பிட்டால் விடவே மாட்டீங்கள்.” அவள் திரும்பிப் பார்த்த பார்வையிலேயே நெருப்பு எரிந்தது. கத்தரிக்காயைக் கூடையில் போட்டாள். “பாலை, சரியான முள் எண்டு யோசிக்கிறீங்கள்போல. பரவாயில்லை. அறக்குளா எடுக்கிறியளா? காதைப் பாருங்க, ரத்தம் மாதிரி. வெட்டித் தாறன், அங்கிளுக்குச் சமைச்சுக் குடுங்க.”
அவள் சிடு சிடு என்று பரலோகத்திடம் போய் எதையோ சொன்னாள். அவ்வளவும்தான்.. பரலோகம் தலையில் அடித்துக்கொண்டு குழறாத குறையாக ஓடி வந்தான். “டேய்.. உனக்கு யாரிட்டை என்ன கதைக்கிற எண்டு தெரியாதா? கோவில் ஐயாக்கு மீன் சமைச்சுக் குடுங்கோ எண்டு ஐயரம்மாட்டையே சொல்லுற அளவுக்கு நக்கலா?”
திகைப்பாகி விட்டது. அவனுக்கு உண்மையிலேயே ஐயரம்மா என்று தெரியாது. “ஐயோ.. மன்னிச்சுக் கொள்ளுங்கோ அன்ரி. நீங்கள் ‘அது’ என்று எனக்கு உண்மையிலேயே தெரியாது.” என்றான்.
“அவ கோதுமை மா மாதிரி வெள்ளையா இருக்கும்போதே ஐயரம்மாதான் எண்டு உனக்குத் தெரியாதா?”
“இல்லை.. எனக்குத் தெரியாது.” இம்முறை முகத்தில் அடித்த மாதிரி பதில்.
“எதிர்த்துக் கதைக்கிற நாய்களை உள்ளை எடுத்த என்னைத்தான் செருப்பால அடிக்க வேணும். நீ வெளிய போ.. ஒரு நிமிசமும் இங்கை நிக்கக் கூடாது.” பரலோகம் கத்தினான். அதிகாரம் சட்டென்று தணிந்து பவ்வியமானது. “அம்மா.. இந்த ஒரு முறைக்கு மன்னிச்சுக் கொள்ளுங்கோ. இனிமேல் இப்படி நடக்காது” என்று பயபக்தியோடு சொன்னான்.
அருள்குமரன் அங்கியின் முடிச்சை அவிழ்த்து கீழே விழுத்தினான். எடுத்துக் கூட வைக்கவில்லை. ரீ சேர்ட்டின் கழுத்துப்பகுதியில் செதில்கள்.. பதறிப் போய் தட்டி உதிர்த்தான். கையுறையைக் கழற்றிவிட்டு கைகளை அலம்பினான். வெளியேறும்போது பரலோகத்திற்குச் சொல்லவும் இல்லை. படி ஏறித் தெருவுக்கு வந்தான். பேருந்துக்குக் காத்து நின்றபோதுதான் பரலோகம் ஓடி வருவது தெரிந்தது. ஐயரம்மா போயிருக்க வேண்டும்.
“என்ன தம்பி.. டக்கெண்டு வெளியால வந்திட்டீர். இந்த மாதிரிச் சண்டைகளும் சேர்ந்ததுதானே யாவாரம்.. நான் வெளிய போ எண்டு கத்துவன். நீர் கெஞ்சுவீர்.. சரி போய் வேலையைப் பார் எண்டு நான் சொல்லுவன்.. அவ்வளவும் ஏன்? நீர் ஐயரம்மாட்டை கேட்டிருந்தாலே அவ என்னட்டைச் சொல்லி இருப்பா.. சரி வாரும். எங்களுக்கு வாங்க வாற ஆட்களிட சந்தோசம்தானே முக்கியம்.”
அருள்குமரன் அலட்சியமாக நின்றான். உள்ளுக்குள் கொதித்துக்கொண்டு வந்தது. அதற்குப் பலியாகிவிடக் கூடாது. பரலோகம் விடுவதாக இல்லை.
“தம்பி பொறுத்த நேரத்தில் இப்படி விட்டுட்டுப் போகக் கூடாது. உம்மை மாதிரி ஆட்களாலதான் இன்னமும் தமிழீழத்தை..”
அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. “பொத்தடா வாயை..” பரலோகம் விக்கித்துப் போய் நின்றார். நிறுத்தத்தில் நின்ற பயணிகள் இரண்டு பேரையும் கூர்ந்த பார்த்தார்கள். அருள்குமரன் பரலோகத்தின் காதுக்குப் பக்கத்தில் முகத்தை வைத்துக்கொண்டு வெளியே யாருக்கும் கேட்காத குரலில் சொன்னான். “இதுக்கு மேல இதில நிண்டு ஒரு சொல்லுக் கதைச்சாலும் அறுத்து சைனா மீன் எண்டுதான் விற்க வேண்டி வரும்.”
பேருந்து வந்தது.
0
இரு தோள் மூட்டுக்களையும் கன்னங்களுக்கு அருகே உயர்த்தி முகர்ந்து பார்த்தான். மீன் மணம் இருக்கத்தான் செய்தது. கடைசி வரிசையில் ஜன்னலோர இருக்கை. கண்ணாடியில் சாய்ந்திருந்தான். பக்கத்தில் யாருமில்லை என்பது ஓர் ஆசுவாசம்தான், என்றாலும் அடுத்த நிறுத்தங்களில் யாராவது உட்காரலாம் என்ற உணர்வு அலைத்துக்கொண்டே இருந்தது. அதுவும் சுவிஸ் கிழவிகள் என்றால் முகத்தைச் சுழித்து அருவருப்பு உணர்வை நேரே காட்டுவார்கள். அவர்கள் சும்மாவே கறுப்பு மனிதர்களுக்குப் பக்கத்தில் அமர்வதில்லை. நின்று கொண்டே வருவார்கள். ‘குண்டிக் கொழுப்பு.’ அருள்குமரன் புன்னகைத்தான்.
பேருந்து இரு புறமும் பச்சையை விரித்த பாதையில் ஏறியது. புல் வெளிகளும், சோள வயல்களும், செம்மறி ஆட்டுப் பண்ணைகளும் மாறி மாறித் தென்பட்டன. இடையில் ஒரு பள்ளத்தாக்காக இருக்க வேண்டும். இரு நிலங்களையும் நீண்ட பாலம் இணைத்தது. மண்டபம் அகதிகள் முகாமிலிருந்து ராமேஸ்வரத்திற்கு போகிற வழியில் இருக்கின்ற பாம்பன் பாலம் மாதிரி நீள அகலம். இரண்டு பக்கமும் வேலி மாதிரித் தடுப்பு. அப்பிடியிருந்தும் சிலர் அதில் ஏணியைச் சாய்த்து ஏறி தற்கொலை செய்து விடுகிறார்கள். அவர்கள் விழுந்த இடங்களில் பூங்கொத்துக்களை ஐந்தாறு முறையாவது கண்டிருக்கிறான். ‘வெள்ளைக்காரன் எதுக்குத் தற்கொலை செய்து சாகிறான்?’ என்று தோன்றியது. இப்படித்தான், இடைத் தங்கல் முகாமில் கொசோவா நாட்டைச் சேர்ந்தவர்களைக் கண்டபோதும் யோசித்தான். ‘வெள்ளைக்காரர் ஏன் அகதியாகிறார்கள்?’
ஓரிரு நிமிடங்களில் பேருந்து பாலத்தைக் கடந்து விடும். ‘இப்ப ஒரு குண்டு வெடிச்சால்..?’ சட்டென்று நினைத்தான். முகம் வெளிறிய மாதிரி ஆகிவிட்டது. ஒவ்வொரு முறையும் சரியாக நடுப் பாலத்தைக் கடக்கிறபோது இந்த நினைவு அனிச்சையாகப் பீடிக்கிறது. ‘சத்தம் பக்கத்து மலைகளில் பட்டு எதிரொலிக்கும். பாலம் ஓவென்று வாயைப் பிளக்க, கொளுந்து விட்டெரியும் நெருப்புப் பந்தாக பஸ் அதள பாதாளத்தில் விழும்.’
தபால் நிலைய நிறுத்தத்தில் இறங்கினான். அடுத்த பேருந்திற்காக நாற்பது நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். ஏரியை நோக்கி நடந்து கரையிலிருந்த நீளக் கதிரையில் உட்கார்ந்தான். நீர், நீள நீளக் கோடுகளாக நெளிந்தது. நீச்சலடிக்கிற சிறுவர்கள் கூச்சலிடுகிறார்கள். ஆண்களும் பெண்களும் கைகளை வீசி கரை நெடுகிலும் நடக்கிறார்கள். சூரியன் முதுகுக்குப் பின்னாலிருந்து பிடரியில் சுடுவது இதமாக இருக்கிறது. ஒளிக் கதிர்கள் அவனைத் தாண்டிச் சென்று நீரில் தெறிக்கின்றன. இரண்டு வயதும் நிரம்பாத ஒரு குழந்தை பிஞ்சுப் பாதங்களில் கரை மணலில் நடந்தபடி வாத்துக்களுக்கு பாண் துண்டுகளை தயக்கத்துடன் நீட்டுகிறது. அவனுக்கு இடது புறத்திலிருந்த இன்னொரு கதிரையில் ஓர் இளம் சோடி தம் உதடுகளைச் சாப்பிடுகிறார்கள்.
“அதென்ன.. கண் வெட்டாமல் அப்பிடியொரு பார்வை. என்னைத் தின்னுற மாதிரி..” ஆராதனா அவனுடைய மூக்கைப் பிடித்து இழுத்தபடி கேட்கிறாள். இரண்டு பேரும் மருத மரத்தின் இடுப்பளவு உயரக் கிளையில் உட்கார்ந்திருக்கிறார்கள். இரண்டு வாரத்திற்கு முன்னர் அணை உடைத்துக் கரை புரண்ட குளம் இப்பொழுது ஆறியிருக்கிறது. அரை வட்ட நீர்க் கோடுகள் அடுத்தடுத்துக் கரைக்கு வருகின்றன. புல் தரையில் கரும்பச்சை நிற கானாங்கோழிகள் தத்துகின்றன.
“ஒரு குழந்தைப் பிள்ளை அம்மாவைப் பாக்கிற மாதிரி நான் உன்னைப் பார்த்துக் கொண்டேயிருப்பன்.”
அருள்குமரன் சிரித்தான். “குண்டுக் கன்னமும் கத்தரிக்காய் மாதிரி கை காலும் உள்ள அந்தக் குழந்தையா?”
ஆராதனா கண் சிமிட்டுகிறாள். “நீ அப்பிடியே குழந்தையாகவே இருந்திருக்கலாம்தானே..” என்கிறாள்.
சட்டென்று ஒன்று தோன்றுகிறது. சொன்னால் ‘சனியன்’ என்று திட்டுவாள். ஆராதனா ஐந்து விரல்களையும் குவித்து அவனுடைய நெற்றி மயிரைக் குலைக்கிறாள். “ஏன் என்னில விருப்பம் எண்டு சொல்லு.” அருள்குமரன் வானத்தை அண்ணாந்து பார்த்தான். நீல வர்ணம். ஒன்றன் மேல் ஒன்றாக வெள்ளைப் பொம்மைகள் உட்கார்ந்திருப்பதைப்போல மேகங்கள். உற்றுப் பார்த்தால் கண், காது, மூக்கு எல்லாம் தெரிகிறது. ‘கேட்கிறாள் தானே.. சொல்லு’ என்கிற பாவனை. யோசித்தான். அவனுக்குப் பதினேழுக்குள் நுழைகிற வயதுதான். வாழ்க்கை ஓர் அலை புரளும் கடல் என்றால், இது வெறுமனே கரையில் நிற்கிற வயது. அப்பிடித்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் கடல் மூசிக்கொண்டு கரையில் நுழைந்து எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது. கோளாறு.. திரிபு.. வெறுமை. பெண் என்ற சித்திரம் தாறுமாறாக வரையப்பட்டுக் கிழிக்கப்பட்ட தாள் என்ற நினைப்பு பால்யத்தில் ஏற்பட்டிருக்க வேண்டாம். ஆராதனா.. நல்ல வேளை நீ வந்தாய். அழகான தாளில் நேரிய கோடுகளை வரைந்து வர்ணம் தீட்டினாய். உன் கைகைளப் பிடித்துக்கொண்டு நான் கடலுக்குள் இறங்குவேன்.
“நேரமாகுது. நான் போக வேணும்.” ஆராதனா கிளையிலிருந்து குதித்தாள். கானாங்கோழிகள் விலகி ஓடின. அருள்குமரன் எழுந்தான். இன்னும் பத்து நிமிடங்களில் பேருந்து வந்துவிடும். நிறுத்தத்திற்கு வந்தான்.
தெருவின் மறுகரையில் பாறைச் சுவர்போல மலைக் குன்று உயர்ந்தது. தலையை நிமிர்த்திப் பார்த்தான். யாழ்ப்பாணக் கோட்டையில் தூக்குமேடைக் கோபுரம் புள்ளியாகத் தெரிந்தது. இதோ இங்கேதான் நஜிபுல்லாவைக் கூட்டி அள்ளினார்கள். கார்ச் சக்கரங்களில் சிக்கிய உடல் துண்டங்கள் இதோ இந்த நீரிலேதான் மிதந்தன. அருள்குமரன் ஓடிச் சென்று பேருந்தில் பாய்ந்து ஏறினான்.
