அஷேரா – 8

8

சிங்கப்பூரில் இருந்து சூரிச் நகருக்கு புறப்படத் தயாராக இருந்தது அந்த விமானம். இடையில் எங்கும் நிறுத்தாத நேர்ப் பறப்பு. அபர்ணா ஒரு பெரிய மாளிகைக்குள் நுழைவதைப்போல உணர்ந்தாள். அவ்வளவு பிரமாண்டம். ‘பெரிய வயிற்றுடன் ஒரு பிள்ளைத்தாச்சிப் பெண் நடப்பதைப்போலதான் இது பறக்கும்போல.’ ஜன்னலோர இருக்கையைத் தேடி அமர்ந்த உடனேயே மள மளவென்று பட்டியை இழுத்து அணிந்தாள். பக்கத்தில் யாருமே அதை அணிந்திருக்கவில்லை. ‘புதுப் பழக்கம் எண்டு காட்டிக் குடுத்து விடுவேனோ?’ வயிற்றைத் தடவிக்கொள்வதைப்போல இரண்டொரு முறை பாவனை செய்துவிட்டு சட்டென்று பட்டியைக் கழற்றிவிட்டாள். அவளை யாருமே சட்டை செய்ததாகத் தெரியவில்லை, என்றாலும் கைப் பையில் இருந்த பாஸ்போர்ட்டை எடுத்து விரித்து வைத்துக் கொண்டாள். கேசம் விரிந்து தோளில் புரள, உதடுகள் சிரித்தும் சிரிக்காமல் இருக்க, கூர்மையான பார்வையோடு அவளுடைய கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தைப் பொருத்தி அச்சு அசலாக உருவாக்கப்பட்ட சிங்கப்பூர் பாஸ்போர்ட் அது. பெயர் அஷேரா பற்றிக் பவுல். தேசியம் சிங்கப்பூர். பிறந்த இடம் சிங்கப்பூர். பிறந்த திகதி 05.06.1980. வழங்கப்பட்ட திகதி 23.06.2000.. மேலும் வெவ்வேறு பக்கங்களில் சென்னைக்குப் பயணம் செய்ததற்கான முத்திரைகளும் இடையிடையே பாங்க்கொக், புக்கெட் நகர முத்திரைகளும். அத்தனையும் போலி.

அபர்ணா நேரத்தைப் பார்த்தாள். இன்னும் பதினான்கு மணி நேரங்களில் சூரிச்சில் இருப்பாள், அரங்கனின் கைகளைக் கோர்த்தபடி. ஒரு குளிர் பரவிற்று. கல்யாணப் பேச்சு முற்றாகியதிலிருந்து குரலாகவே கேட்ட உருவத்தை முதன் முதலாக நேரில் பார்க்கப் போகிறாள். ஓரிரு முறை ஸ்கைப் வீடியோவில் பேசியிருந்தாலும், துல்லியமாக அறுத்து உறுத்துக் கதைக்கும் அந்தக் குரல்தான் அவனுடைய அடையாளமாகப் பதிந்திருக்கிறது.

அரங்கனுடைய வீட்டிலிருந்துதான் திருமணம் பேசி வந்தார்கள். அபர்ணா கொழும்பில், ஒரு இலத்திரனியல் கடையில் கணக்காளராக அப்போது வேலை செய்துகொண்டிருந்தாள். யாருடையதோ கல்யாண வீடியோவில்தான் அவளை முதன்முதலாக அவன் பார்த்தானாம். “மாப்பிளை பொம்பிளைக்குப் பக்கத்தில எல்லாரும் கமெரா வெளிச்சத்தில முழுசிக் கொண்டிருக்க நீர் மட்டும் ஒரு சிரிப்போடை கீழ்ச் சொண்டாலை முகத்தில ஊதினீர். அப்பவே நீர் யார் எண்டு விசாரிக்கத் தொடங்கிட்டன்.”

அவனுடைய தொலைபேசி அழைப்புகள் இரவு பன்னிரெண்டு மணிக்குப் பிறகுதான் வரும். “இப்பதான் வேலையால் வந்தன். அங்கை என்ன நேரம்?” என்று தொடங்குவான். அபர்ணாவிற்கே ஆச்சரியம்தான். அவளையும் அறியாமல் நள்ளிரவின் தொலைபேசிக் கிணுகிணுப்பிற்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்.

“இண்டைக்குச் சரியான வேலை. இப்பதான் வந்தன். இனித்தான் சமைக்க வேணும். அங்கை என்ன நேரம்?”

“ஒரு மணி ஆச்சுது. எல்லாரும் நித்திரை.”

“அப்ப நான் வைக்கவா?”

“இல்லை.. இல்லை.. நான் அறைக்குள்ள இருந்துதான் கதைக்கிறன். அங்கை குளிர்காலம் தொடங்கிட்டுதா?”

“நீர் அறைக்குள்ளை தனியவா இருக்கிறீர்.. பக்கத்தில யாரும் இல்லையா?”

“இல்லையே.. ஏன் கேக்கிறீங்கள்?”

“சரி.. அப்ப ஒருக்கா கொஞ்சி விடும்.”

குளிர் மின்னல் பாய்ந்து ஓயும். குறுகுறுப்பான இந்த உணர்வுகள் புதிது இல்லைத்தான். பதினோராம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது ஆதவன் என்றொரு பெடியன், சரேலென்று முகத்தைத் திருப்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபடியும் புத்தகங்களில் மூழ்கிவிடுவான். சில நொடிகளுக்குத்தான் கண்கள் சந்திக்கும். அதுவே விர் என்று ஆகிவிடும். அவன் பார்க்கிறானா என்று அறிய ஆவல் பீறிடும். கடைசி வரைக்கும் அவன் பார்த்துக்கொண்டுதான் இருந்தான். கதைத்ததே இல்லை. ஒருவேளை அவன் நேரே வந்து கண்களைப் பார்த்து உங்களைக் காதலிக்கிறேன் என்று சொல்லியிருந்தால்..? பதில் தெரியவில்லை. அதை யோசித்தால் எண்ணங்கள் குவிவதில்லை. ‘ஓம்.’ என்றிருப்பேனா..? ‘இல்லை.’ என்றிருப்பேனா..? பனிப் புகார் மாதிரியான மனநிலை. அதனால் என்ன? அவன் கதைத்தால் சந்தோசமாகத்தான் இருந்திருக்கும். அவனுக்குத்தான் அந்தத் துணிச்சலே வரவில்லை. அது ஓர் ஏமாற்றம். அதுவே கொஞ்ச நாள் கழித்து அவன் வேறு யாரையும் அப்படி இமை வெட்டாமல் பார்க்கிறானா என்று வெஞ்சினமாக உருமாறி விட்டது. இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. வெட்கத்தோடு.

அரங்கனே ஒரு முறை “நீர் யாரையும் காதலிச்சிருக்கிறீரோ?” என்று கேட்டான். “இல்லை.” என்றுவிட்டாள்.

“அப்ப என்னைத்தான் முதன்முதலா காதலிக்கிறீரோ?”

“எவ்வளவு நாளுக்கெண்டு நானும் போனுக்காலயே காதலிக்கிறது?” நாணத்தின் குரல் ஒலி.

“நாளைக்கே நினைத்தாலும் ஒரு ரூட் சரியா இருக்குது. துபாய்க்குப் போய் அங்கை இருந்து பெலாரஸில இறங்கினால், போலந்து போர்டரைக் கடத்தி விடுவாங்கள். எப்பிடியும் மூன்று மாசம் பிடிக்கும். ஆம்பிளைகள் எண்டால் பரவாயில்லை. பொம்பிளைகளுக்குச் சரிவராது.”

“ஏன் சரி வராது? அதெல்லாம் சரிவரும்.” பகிடிக்குச் சீண்டுவாள்.

“ஏஜென்சிக்காரனுக்குத்தான் வழியில எல்லாம் சரிவரும்.  இந்தக் கதையை நிப்பாட்டும். எனக்குத் தெரியும், என்ன செய்ய வேணுமெண்டு.”

அபர்ணா ஆறு மாதங்களுக்கு மேலாகக் காத்திருந்தாள். எப்போதோ புறப்பட்டிருந்தால் போலந்து கடந்தே போயிருந்திருக்கலாம் என்று அடிக்கடி தோன்றும். அரங்கனிடம் சொல்லப் பயம். அந்தப் பேச்சே எடுக்க மாட்டாள். அப்பாதான் கரைச்சல் படுத்தினார். “எப்ப கூப்பிடுவார் எண்டு கேள். காலம் போகுது.” அவருடைய மனதை யாரோ குழப்பிவிட்டார்கள். ‘தாய் தகப்பனுக்காக தமிழ்ப் பெட்டையை கட்டுறம் எண்டு சொல்லி இருப்பாங்கள். பிறகு அக்கறை காட்ட மாட்டாங்கள். அங்கை யாரும் வெள்ளைக்காரியளோட இருப்பாங்கள்.’ அம்மாவிடம் சொல்லிக் கவலைப்பட்டிருப்பார்போல. அவள் தெளிவாகத்தான் இருந்தாள். “இதென்ன வெறும் பேச்சுக்கால்தானே? ரெண்டும் நேர நேர கூட பார்த்ததில்லை. கொஞ்சக் காலம் பார்ப்பம். இல்லாட்டி சொல்லி நிப்பாட்டுவம். சீதனம் எண்டு ஒண்டும் குடுக்கேல்லைத்தானே..” அம்மாவில் கோபம் கோபமாக வந்தது. ‘பரவாயில்லை. அவர் ஆறுதலாக் கூப்பிடட்டும். அதுவரைக்கும் போன் பண்ணி கதைச்சுக்கொண்டாவது இருக்கட்டும்.’

போன  வாரம் ஒருநாள் அரங்கன் காலையிலேயே அழைத்தான். “பாதையைக் கண்டு பிடிச்சாச்சு.” என்று சிரித்தான். “இன்னும் ரெண்டு நாளில சிங்கப்பூருக்கு வெளிக்கிடுவீர். அங்கயிருந்து நேராக என்னட்டதான் வருவீர்.”

தலைக்கு மேலிருந்த பொதியறைகளை ஒரு பணிப்பெண் சாத்திச் சென்றாள். திடீரென நறுமண வாசம். இன்னொருத்தி இருக்கைப் பட்டிகளை அணிந்தீர்களா என்று கண்களாலேயே சோதனை செய்தபடி வந்தாள். அவளுக்கு புன்முறுவலைச் சிந்திவிட்டு அபர்ணா பட்டிகளை அணிந்துகொண்டாள். ஒரு பாரம் இறங்கியதைப்போல இருந்தது. வெளியே பார்த்தாள். இன்னும் சற்று நேரத்தில் இந்த ஜன்னலில் நீலக் கடல் தெரியும். மேகங்கள் தெரியும். போகப் போக வெண் பனி உறைந்த மலை முகடுகள்.. பச்சை விரித்த புல்வெளிகள்.. இருக்கையில் தலையைச் சாய்த்தாள். ஆசுவாசமான பெருமூச்சு வெளியேறிற்று. அரங்கன் அறிமுகமான நாளில் இருந்து ஒவ்வொரு தருணங்களையும் நினைத்துக் கொண்டாள். திடீரென்று ஞாபகம் வந்தது. இன்று காலை அவன் சொல்லி இருந்தான். “கவனமாகக் கேளும். பிளேன் பறக்கத் தொடங்கின பிறகு, ரொய்லெட்டுக்கை போய் இந்தப் பாஸ்போர்ட்டை தூள் தூளாக் கிழிச்சுப் போடும்.” அபர்ணா திரும்பவும் ஒரு முறை பாஸ்போர்ட்டை விரித்துப் பார்த்தாள். ‘அஷேரா பற்றிக் பவுல்.’ பற்றிக் பவுல் ஏற்கனவே கேள்விப்பட்டதுதான். அவளோடு படித்த இவோன் தமிழினியின் தம்பிக்கு அதுதான் பெயர். அஷேராதான் இதுவரைக்கும் கேள்விப் பட்டிராத பெயர். 

0

சூரிச் விமான நிலையத்தில் குடி வரவு அதிகாரியின் முன் நின்று “என்னிடம் பாஸ்போர்ட் இல்லை. நான் இலங்கையிலிருந்து அகதியாக இங்கு வந்திருக்கிறேன்.” என்று சொன்னபோது அவர் “அப்படியா? மகிழ்ச்சி. சரி.. வாருங்கள்.” என்று அழைத்துச் சென்று வெளியே காத்து நிற்கிற அரங்கனின் கைகளில் ஒப்படைத்துவிடுவார் என்றுதான் நினைத்திருந்தாளா? உண்மையைச் சொன்னால், அபர்ணா அதைப்பற்றி எல்லாம் யோசித்திருக்கவே இல்லை. அரங்கனிடம் போகிறேன்! அது மட்டும்தான் மனதில் நிறைந்து நின்றது. அவனும் விளக்கமாக எதையும் சொல்லவில்லை. அல்லது சொன்னபோது அவள்தான் காது கொடுத்துக் கேட்கவில்லையோ தெரியாது. இப்போது இவர்கள் எங்கோ அகதி முகாமுக்குக் கொண்டு போகப்போவதாகச் சொல்கிறார்கள்.

காலையில் எட்டு எட்டரைபோல விமானம் தரையிறங்கியது. வெளியேறியபோது வாசலில் வைத்துக் கன்னத்தில் அறைந்ததைப்போன்ற குளிர். குளிராடைகள் சூட்கேஸில்தான் இருந்தன. ஒன்றையாவது கையோடு கொண்டு வந்திருக்கலாம் என்று நினைத்தாள். நல்லவேளை, கட்டிடத்திற்குள்ளே இதமான வெப்பக் கணகணப்பு. கைப் பையிலிருந்து சீப்பை எடுத்து தலை வாரினாள். காலையில் பற்களைத் தீட்டவில்லை என்ற உணர்வு ஓர் அந்தரமாக இருந்தது. வாயைத் தன்னும் கொப்பளிக்க வேண்டும். வெளியே ஓடுபாதைகளைத் தாண்டி பச்சைப் பசேலென்ற புல்வெளிகள் விரிந்தன. தூரத்தில் மலை அடுக்குகள். பனிச் சிகரங்கள். ஒரு விமானம் புள்ளியாகத் தோன்றி உருப் பெருத்துப் பெருத்து தாழ்ந்து ஓடுபாதையில் இறங்குவதை கொஞ்ச நேரத்திற்குப் புதினமாகப் பார்த்துக்கொண்டு நின்றாள். குடிவரவு அதிகாரிகளிடம் எப்படிச் சொல்வது என்ற யோசனை ஓடியது. ஆட்களுக்கு முன்னால் வைத்துத் திட்டுவார்களா..? இந்த நாட்டில் முப்பதாயிரமோ நாற்பதாயிரம் இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று ஒருமுறை அரங்கன் சொல்லியிருந்தான். அப்படியென்றால் அத்தனை பேரும் திட்டுத்தான் வாங்கியிருப்பார்கள்.

0

அபர்ணா, அகதிகளுக்கான இடைத் தங்கு முகாமில் மூன்று மாதங்கள் வரை தங்க நேர்ந்தது. அவளுக்குப் பிறகு வந்தவர்கள் எல்லாம் இரண்டு மூன்று வாரங்களிலேயே வேறு வேறு மாநிலங்களுக்குப் போய்க் கொண்டிருக்க அவளை மட்டும் இழுத்தடித்தார்கள். பொழுதே போகவில்லை. எட்டு மணி வரையிலும் போர்த்துக் கொண்டு தூங்குவாள். ஆஸ்பத்திரி வார்ட்டுகள்போல மேலும் கீழுமான அடுக்குக் கட்டில்களில் மிகுதி மூன்று பேரும் சோமாலியப் பெண்கள். அவர்கள் காலையிலேயே எழுந்து கல கலவென்று கதைத்துக் கொண்டிருப்பார்கள். நித்திரை குழம்பிவிடும். கடமைக்குச் சாப்பிட்டுவிட்டு வருவாள். பாணும், பட்டரும், ஜாமும் பரவாயில்லை. மத்தியானச் சாப்பாட்டைத்தான் வாயில் வைக்க முடியாது. அரைகுறையாக வேகிய இறைச்சியின் ஓரங்களில் பச்சை ரத்தம் கசியும். வாயில் வைத்தால் ஓங்காளிக்கும்.

முகாமில் அவ்வப்போது அடிப்படை உரிமைகள், முதலுதவி என்று வகுப்புகள் நடந்தன. அன்றைக்குப் பால்வினை நோய்களைப் பற்றிய ஏதோ ஒரு வகுப்பு. தெரியாத் தனமாக நுழைந்துவிட்டேன் என்றுதான் நினைத்தாள். அவளுடைய பத்தாம் வகுப்பு விஞ்ஞான பாடத்தில் இனப்பெருக்கத் தொகுதி என்றொரு பாடம் இருந்தது. முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே படித்த பள்ளிக்கூடம், என்றாலும் சரஸ்வதி மிஸ், ‘அது அப்பிடியாம்.. இது இப்படியாம்..’ என்று தாண்டிச் சென்றுவிட்டாள். ரியூசனில் கேட்கவே வேண்டாம். தயாபரன் சேர், ‘இந்தப் பாடத்தை வீட்டில நீங்களே படியுங்க’ என்று சொல்லிவிட்டார். இங்கே ஒரு மாதிரி அசூசையாகத்தான் இருந்தது. ஆம்பிளைகளுக்குத் தனிய பொம்பிளைகளுக்குத் தனிய என்றாவது வைத்திருக்கலாம். இறுதியில் ஆசிரியை திருமதி மார்ட்டின் ஒவ்வொருவருக்கும் எதையோ கொடுத்துவர, கை நீட்டி வாங்கிய பிறகுதான் பார்த்தாள். ‘ஆணுறை.’ சைக்.. அரியண்டம். வரும் வழியிலேயே குப்பைக் கூடைக்குள் எறிந்துவிட்டாள். அறைக்கு வந்தபிறகுதான் அதைத் திறந்து பார்த்திருக்கலாம் என்று தோன்றிற்று.

அகதி முகாமிலிருந்த தொன்னூறு நாட்களிலும் ஒரேயொரு ஆறுதல் என்றால், அது அரங்கனோடு கதைத்ததுதான். அவன் ஒவ்வொரு நாளும், அங்கிருந்த நாணயக் குற்றித் தொலைபேசியின் இலக்கத்திற்கு இரவு எட்டு மணிக்கு அழைப்பான். அருகிலேயே காத்து நின்று முதலாவது கிணுகிணுப்பிலேயே எடுத்துவிடுவாள். அன்றைய நாளை முழுவதுமாக அவனிடம் ஒப்பித்தால்தான் ஒரு நிறைவு. ஆணுறை வாங்கியதை மட்டும் அவனுக்குச் சொல்லவில்லை. அது ஏன் என்று அவளே யோசித்திருக்கிறாள். காரணம் தெரியவில்லை.  

நாளாக நாளாக காத்திருப்பு கோபமாக மாறியது. “நான் என்ன ஆடோ? மாடோ? இலை குழைகளைத் திண்டுகொண்டு இன்னும் எத்தினை நாளைக்கு இருக்கிறது?” என்று எரிந்து விழத் தொடங்கினாள்.

“பொறுமையா இரும். பொழுது போக்க வேற தமிழ்ப் பொம்பிளையள் அங்கை இல்லையோ?” 

“ஒருத்தரும் இல்லை. தமிழ் ஆம்பிளையள்தான் இருக்கினம்.”

கிறிஸ்துமஸ் தினத்தின் இரண்டாவது நாள் அபர்ணாவை இடைத்தங்கல் முகாமிலிருந்து விடுவித்தார்கள். அரங்கனுடைய மாநிலத்திலிருந்த இன்னொரு முகாமிற்குச் சென்று பதிந்துகொள்ள வேண்டும். தஞ்சக் கோரிக்கையின் பதில் வர இரண்டு மூன்று வருடங்களும் ஆகலாம், பரவாயில்லை. அரங்கன் அவளைத் திருமணம் செய்வதற்காக ஏற்கனவே விண்ணப்பித்திருந்தான். இரண்டு மூன்று மாதங்களில் அதற்கு அனுமதி அளித்துவிடுவார்கள். அதுவரை அவனோடேயே தங்கிக் கொள்ளவும் இயலும். அவ்வப்போது புதிய முகாமிற்குப் போய் வந்தால்போதும். பெரிய நிம்மதி.

இரண்டு நாட்களாகவே கடும் பனி பொழிந்து கொண்டிருந்தது. கூரைகள், புல் தரைகள், மரக் கிளைகள், இலைகள், கம்பி வேலி எல்லாவற்றிலும் வெண் களி. கண்களைக் கூசச் செய்கிற வெண்மை. அபர்ணாவை அழைத்துப் போக அரங்கன் வந்திருந்தான். அவன் கொடுத்த புதிய கழுத்துச் சால்வையும் கையுறைகளையும் நீண்ட காலணிகளையும் அணிந்து கொண்டு புறப்பட்டாள்.  அரங்கன் அவளுடைய கையைப் பற்றி “நிலம் வழுக்கும், கவனம்.” என்றான். 

ஈரம் ஊறிய பனித் துருவல்கள் அவளில் விழுந்தன. இரு கைகளையும் விரித்து ஏந்தினாள். குழந்தையின் குதூகலத்தோடு ஆகாயத்தைப் பார்த்துச் சிரித்தாள். உதடுகளில் பனிப் பூ சில்லிட்டுக் கரைந்தது. ஓர் அழகிய பயணம், மூன்று மாத ஓய்விற்குப் பிறகு மறுபடியும் தொடர்கிறது. பூரிப்பில் திளைத்தாள்.

கொஞ்ச நேரத்திற்குள் காரில் விரல் தடிப்பிற்கு பனி படிந்திருந்தது. அரங்கன் அதை வழித்து நீக்கினான். கதவைத் திறந்து அவள் ஏறி உட்கார்ந்ததும் இருக்கைப் பட்டியை அணிந்துவிட்டான். “இங்கை காரில மற்றப் பக்கம்தான் இருக்க வேணும்.” புறப்பட்டார்கள். தெருக்களில் பனி இல்லை. உடனுக்குடன் அகற்றுகிறார்கள்போல. கண்ணாடியில் இறங்குகிற பனிச் சிறகுகளை வைப்பர் அங்கும் இங்குமாகத் தள்ளியது. வேக வீதியின் இரண்டு பக்கமும் பாற்கடல்தான். தூய வெண்மையில் ஓர் ஆழமான நிதானம் இருக்கிறது. நிறங்கள்தான் பதற்றமானவை. வழி முழுவதும் பார்க்கப் பார்க்கச் சலிக்காத காட்சிகளில் மூழ்கிக் கிடந்தாள். இரண்டு மணி நேரப் பயணம். அரங்கன் காரை நிலக் கீழ் தரிப்பிடத்தில் நிறுத்தினான். மேலே அடுக்கு மாடிக் குடியிருப்பில் அவனுடைய வீடு நான்காவது தளத்தில் இருந்தது. லிப்ட் இல்லை. படிகளில் நடந்து ஏறினார்கள். அரங்கன் கதவைத் திறந்து “வாரும்.” என்றான். வெப்பக் கணப்பின் மணம். அந்தக் கணத்தில் மனம் விம்மி முட்டியது.

சிறிய வீடுதான். குறுகலான தரைத் துண்டின் ஒரு புறத்தில் படுக்கையறையும் மறுபுறத்தில் சமையலறையும் குளியலறையும் இருந்தன. அபர்ணா நேராகச் சென்று வரவேற்பறையில் உட்கார்ந்தாள். ஏற்கனவே இட்டுமுட்டான இடவசதிதான், அதற்குள் பொருட்களைக் கொட்டி நிறைத்தது மாதிரி இருந்தது. மூலைக்குள் தொலைக்காட்சி. பக்கத்தில் குட்டிக் குட்டி கண்ணாடி அலுமாரிகள். உள்ளே வீடியோ கசெற்றுக்கள் மட்டும் ஒரு நூறு இருநூறு இருக்கும். பாட்டு சிடிகளை பாவிப்பதே இல்லைப்போல. தொலைக்காட்சியின் மேலே அரங்கன் காரிலே கை ஊன்றி நிற்கிற ஒரு படம் இருந்தது. அவன் இங்கு வந்த ஆரம்ப நாட்களில் எடுத்திருக்க வேண்டும். ஜன்னல் திறந்துதான் இருந்தது என்றாலும் வெளிச்சத்தின் வரவு குறைவு. எழுந்து வெளியே பார்த்தாள். மதியம் இரண்டு மணிக்கு ஏதோ மம்மல் பொழுதுபோல தெரிந்தது. கைகளை நீட்ட மறுபடியும் விரல்களில் பனி. மறுபடியும் குதூகலம்.

அரங்கன் வட்ட மின் விளக்கை ஒளிர வைத்தான். “கோலா குடிக்கிறீரா?”

“இந்தக் குளிருக்குள்ளை வேண்டாம். கொஞ்சம் கழித்து ரீ குடிக்கிறேன்.”

“சரி. ரீவி பாரும்.” ரிமோட்டைக் கொடுத்துவிட்டு பக்கத்தில் உட்கார்ந்தான். குரலுக்கு மட்டுமே பழக்கப்பட்டதாலேயோ என்னவோ உடலின் அருகாமை சற்று அந்நியமாகத்தான் இருந்தது. “ஹலோ.. இப்ப அங்கை என்ன நேரம்?” என்று கேட்டால் நன்றாக இருக்கும். நேரம் போவதே தெரியாமல் கதைத்துக்கொண்டிருக்கலாம். அரங்கன் அடிக்கடி எச்சிலை விழுங்குவது தொண்டைக் குழியில் தெரிந்தது. அவளையே கண் வெட்டாமல் பார்த்தான். அபர்ணா பார்வையை வேறெங்கோ அலையவிட்டாள். கொஞ்சம் படபடப்புத்தான். ஆர்வம்.. தவிப்பு.. கிளர்ச்சி.. பயம்.. அரங்கள் அவளுடையை கையை எடுத்து விரல்களைக் கோர்த்து வைத்துக் கொண்டான். இந்தச் சித்திரத்தை மனதில் எத்தனை தடவைகள் நினைத்துப் பார்த்திருப்பாள்.  “என்னில விருப்பமா?” என்று அரங்கன் கேட்டான்.

“ம்..”

“நிறையவா?”

“ஓம்.”

அள்ளிக் கொள்வதைப்போல கட்டிப்பிடித்தான். அபர்ணாவுடைய தேகம் கனிந்ததைப்போல இளகிற்று. காத்திருப்பின் மூச்சுப் பெருகிற்று. அப்பொழுதும், அதற்குப் பிறகும், இரவிரவாகவும் பனி பொழிந்துகொண்டே இருந்தது.

இரவின் சோர்வு அடித்துப் போட்ட மாதிரி நல்ல நித்திரை. காலையில் ஒன்பது மணிபோலதான் கண் விழித்தாள். அரங்கன் ஏற்கனவே எழுந்துவிட்டான்போல. ஜன்னலை அவன்தான் திறந்திருக்க வேண்டும். குளிர் புகுந்து அமுக்கியது. அவன் ஏதோ யோசனை வயப்பட்ட தோரணையில் கட்டிலின் விளிம்பிலேயே உட்கார்ந்திருந்தான். அபர்ணா ஆடையைச் சரி செய்தபடி எழுந்து கதவு வரைதான் நடந்திருப்பாள், “இங்கை வாரும்.” என்று அழைத்தான். ‘என்ன?’ என்பதைப்போல பக்கத்திலேயே உட்கார்ந்து அவனுடைய கையைப் பிடித்தாள். சலிப்போடு விடுவித்தான். “ராத்திரி நீர் நடந்துகொண்டதெல்லாம் எனக்குத் திரும்பத் திரும்ப மண்டைக்குள்ள வந்துகொண்டே இருக்கு. நித்திரையே இல்லை. கேட்கிறன் எண்டு குறை நினைக்க வேண்டாம். இதெல்லாம் உமக்கு முதலே பழக்கமா?”     

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *