7
மத்தியான நேரத்தில் காயம் பட்டால் ரத்தம் குபு குபு என்று பொங்கும் என்று பெத்தம்மா சொல்வாள். உண்மைதான். நஜிபுல்லாவின் வலது கையிலிருந்து ரத்தம் அருவி மாதிரித்தான் கொட்டிற்று. ‘நாசமாய்ப்போனவன், கையைத் தாறு மாறாகக் கிழித்து வைத்திருந்தான்’.
அருள்குமரன் மதியச் சமையலை முடித்துவிட்டு அறைக்குத் திரும்பியபோது நஜிபுல்லா இரண்டு கைகளையும் முகத்திற்கு நேரே உயர்த்தி வைத்திருந்தான். தொழுவதற்கு ஆயுத்தமாகிறான்போல, சற்றுக் கழித்து வந்து அவனையும் சாப்பிடக் கூப்பிடலாம் என்று அருள்குமரன் நினைத்தான். வெள்ளைச் சோற்றுடன் பால் சொதியும் அவித்த முட்டையும் மீன் பொரியலும் ஆப்கானிஸ்தானில் சாப்பிட்டிருக்க மாட்டான். திரும்ப எத்தனித்தபோதுதான் சடுதியில் கண்டான். நஜிபுல்லாவின் முழங் கையிலிருந்து ரத்தம் கொட்டி நிலத்தில் தெறித்தது. ‘நாசமறுக்க..’
எந்தக் கையில் காயமென்று சட்டென்று பிடிபடவில்லை. அருள்குமரன் ஓடி வந்து இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கினான். வலது கை மணிக்கட்டில்தான் தாறுமாறான கிழியல். பிளேட்டாலோ என்னத்தாலோ அறுத்திருக்கிறான். “நாயே.. என்ன வேலை செய்திருக்கிறாய்?” நஜிபுல்லா மணிக்கட்டில் இருந்து பார்வையை விலக்கவே இல்லை. அவன் வலியைத் தாங்குவது முகத்தில் தெரிந்தது. அழுது அழுது கண்ணீர் காய்ந்த முகம்.
அவசரத்திற்கு அருகில் ஒரு துணி கூடக் கிடைக்கவில்லை. கதவில் கொழுவியிருந்த சேர்ட்டை இழுத்து பற்களால் கடித்துக் கிழித்தான். மணிக்கட்டுக்குக் கீழே சுற்றிக் கட்டினான். மிச்சத் துணியால் ரத்தம் பாவிய இடங்களைத் துடைத்தபோது வெட்டிய காயம் துலக்கமாகத் தெரிந்தது. ஒன்றல்ல, ஐந்தாறு வெட்டுகள். பிளவுகளில் குருதி திரும்பத் திரும்ப கசிந்தது. ‘விசரன்.’ இதை இப்படியே விட்டுவிட முடியாது. முல்லரின் அலுவலக அறையில் முதலுதவிப் பெட்டி இருக்கிறது. ஞாபகம் வரவும் எழுந்து ஓடினான். கடவுளுக்கு நன்றி. முல்லர் இன்னமும் வெளியே போகவில்லை. அவன் பெருத்த வயிற்றைத் தூக்கிக் கொண்டு அருள்குமரனுக்குப் பின்னாலேயே ஓடிவந்தான். மூச்சிரைக்க கைகளை முழந்தாளில் ஊன்றியவாறு நின்றான். ரத்தத்தைப் பார்த்தவுடனேயே அவனுக்குப் பதறிவிட்டது. தலையில் அடித்தான். அருள்குமரனைப் பார்த்து “சாத்தானே.. அவனைக் கொலை செய்யப் பார்த்தாயா..” என்று கத்தினான். “என்னுடைய குண்டியில் புணர்வதற்கென்றே உங்களுடைய ஊத்தை நாடுகளில் இருந்து இங்கே வந்து தொலைக்கிறீர்கள். இதை இப்போதே பொலிஸுக்குச் சொல்ல வேண்டும். இல்லையென்றால் என் தலை போய்விடும்.”
நஜிபுல்லா வாய்திறந்தான். “அவன் ஒன்றும் செய்யவில்லை. நான்தான் வெட்டினேன்.”
“ஓ.. உனக்குப் பேச வேறு முடிகிறதா.. ஜீசஸ்.” முல்லர் ஆசுவாசமாக மூச்சை விடுவித்தான். அருகில் வந்து நஜிபுல்லாவின் கையைப் பிடித்துப் பார்த்தான். ரத்தக் கொப்பளிப்பு அடங்கியிருந்தது, என்றாலும் மருந்து கட்ட வேண்டும். “இந்தப் பைத்தியக்காரத்தனத்தக்கு நான் பதில் சொல்ல முடியாது. புறப்படு, வைத்தியசாலைக்குப் போக வேண்டும்.” நஜிபுல்லா மறுபேச்சு இல்லாமல் எழுந்து நடந்தான்.
படுக்கையிலும் தரையிலும் பெரிய பெரிய குங்குமப் பொட்டுக்களாக ரத்தம். அருள்குமரன் துவாயை நீரில் நனைத்துக்கொண்டு வந்து துடைத்துப் பார்த்தான். அது படுக்கையின் வெள்ளை விரிப்பில் நவீன செந்நிற ஓவியம்போல உருமாறியது. மள மளவென்று விரிப்பை இழுத்துச் சுருட்டி ஊத்தை உடுப்பு வாளிக்குள் புதைத்த பிறகுதான் நிம்மதியாக இருந்தது. முழந்தாளில் தவழ்ந்த தவழ்ந்து தரையைச் சுத்தமாக்கினான். ‘ரத்தம்.. கொலை.. தண்டனை.. இதுகளைப்பற்றி எதுவும் தெரியாத ஆட்களோடுதான் இனிப் பழக்கம் வைத்துக்கொள்ள வேண்டும். சுவிஸ்காரர்களாக இருந்தால் இன்னும் நல்லது.’
ஆனால், பிறகொரு நாள் அற்புதம் சொன்னார். “அப்பிடியொருவர் இந்த உலகத்திலேயே கிடையாது. மேல் வீட்டுக் கிழவனுக்கு இப்ப எழுபது வயதிருக்கும். போய்க் கேள். தாயையையும் தகப்பனையும் ஹிட்லரின்ட விச வாயுவுக்குச் சாகக் குடுத்திட்டு வியன்னாத் தெருக்களில் பட்டினியா அலைஞ்ச ஒரு பத்து வயசு யூதப் பெடியனின் கதையைச் சொல்லுவான்.”
0
ஷர்மினா காபூலைச் சேர்ந்தவள். இரட்டைக் குழந்தைகளின் தாய். அவளுக்கு மரண தண்டனை விதித்த செய்தி தலிபான்களின் வானொலியில் காபூல் முழுக்க ஒலிபரப்பானது. ஷர்மினாவை, ஓராண்டுக்கு முன்னர், அப்போதுதான் குழந்தைகள் பிறந்திருந்த காலம், கைது செய்து சிறையில் அடைத்திருந்தார்கள். திருமணத்திற்கு வெளியே கள்ள உறவு என்ற குற்றச் சாட்டு. கணவன்தான் தலிபான்களிடம் முறையிட்டிருந்தான். இருபது வருடங்களுக்கு முன்னர் சோவியத் ரஷ்யாவில் பயிற்சி பெற்ற ராணா என்ற பெண் பொலிஸ் அதிகாரி ஷர்மினாவை விசாரித்தாள்.
இரும்புக் கம்பிகளால் ஷர்மினாவின் முதுகிலும் கால்களிலும் அடித்தார்கள். கன்னங்களில் மாறி மாறி அறை விழுந்தது. அவளுடைய பற்கள் உடைந்து ரத்தத்தோடு சிந்தின. வீங்கிய முகத்தின் உள்ளே புதைந்த கண்களால் அவள் பரிதாபமாகப் பார்த்தாள். அந்தப் பார்வையை ராணாவாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “தயவுசெய்து உண்மையை ஒப்புக்கொண்டு விடு. இல்லையென்றால் ஊருக்கு நடுவே உன்னைக் கிரேனில் தூக்கில் போடுவார்கள்.” என்று மிரட்டினாள். “உன்னைக் கல்லால் எறிந்து கொல்லப் போகிறார்கள்.” “உன்னை உயிரோடு கொளுத்தப் போகிறார்கள்.” எப்போதெல்லாம் சித்திரவதை ஓய்கிறதோ அப்போதெல்லாம் ஷர்மினா நிமிர்ந்து காவலர்களைப் பார்த்து “உண்மை இறைவனுக்குத் தெரியும்.” என்றாள்.
காவலர்கள் சலித்து ஒதுங்கினார்கள். அவள் காற்றில் துணிபோல தரையில் துவண்டாள். “கொலையைத் தவிர வேறு என்ன சித்திரவதை என்றாலும் செய்யுங்கள். அதற்குப் பிறகு பொக்கிஷங்களான என் குழந்தைகளுடன் வாழ அனுமதியுங்கள்.” வாய் முணுமுணுத்தது. ராணா அவளைக் கைத் தாங்கலாகத் தூக்கி நடத்திச் சென்றாள். அந்த இருண்ட முகத்தை எதிர்கொள்ள முடியவில்லை. அந்தரித்தாள். ஷர்மினா துயரப் புன்னகையோடு ராணாவைப் பார்த்து “வருந்தாதீர்கள். என்னுடைய கணவர் செய்யாத ஒன்றை நீங்கள் செய்துவிடவில்லை.” என்றாள்.
சிறைக் கதவைத் திறந்து ஷர்மினாவை உள்ளே அனுப்பியதும்தான் தாமதம், கைதிகளிடம் அழுதுகொண்டிருந்த குழந்தைகளை இரண்டு தோள்களிலும் ஏந்தி வாங்கிக் கொண்டாள். குழந்தைகள் அப்போதுதான் அழுவதை நிறுத்தின. சிறைக் கம்பிகளுக்கு எதிர்ப் புறம் நின்ற ராணாவை அமைதியாகப் பார்த்தாள். ராணாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அங்கிருந்து புறப்பட எத்தனித்தபோது ஷர்மினாவின் குரல் கேட்டது.
“என்னுடைய பாதி உயிரை நீங்கள் எடுத்து விட்டீர்கள். மீதி உயிரை இதோ என் தோள்களில் ஏந்தியிருக்கிறேன்.”
0
சேனல் 4 தொலைக்காட்சியின் செய்தியாளர் சாய்ரா, அமெரிக்கப் படைகளால் தலிபான்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானிற்குப் போயிருந்தார். அதற்கு முன்னரே அவருடைய நம்பிக்கைக்கு உரிய தொடர்பாளர்களைக் கொண்டு ஆரம்பித்திருந்த ஆவணப் பட வேலைகளை இறுதி செய்ய வேண்டியிருந்தது. ஒரு மைதானத்தின் நடுவில் வைத்து ஷர்மினா சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள் அவருக்கு அப்படித்தான் கிடைத்தன. அவர் தன்னுடைய ஆவணப் படத்திற்கு முகத்திரை என்று பெயர் வைத்தார். அது ஒலிபரப்பான காலத்தில் உலகளாவிய கவனத்தைப் பெற்றது. இப்போது யூ ரியூப் இணையத்தில் முழுமையாகப் பார்க்கக் கிடைக்கிறது.
அனல் அடித்த வெயில் நாளாக இருந்திருக்க வேண்டும். அந்த மைதானத்தின் எங்கோ ஒரு மூலையிலிருந்து அலைபேசிக் கமெராவின் காட்சிச் சட்டகம் பதற்றத்தோடு நகர்ந்தது. ஆண்கள், முக்காடிட்ட பெண்கள், சிறுவர்கள் என்று எக்கச் சக்கச் சனம். திடீரென்று ஒரு நடுக்கம். இப்போது திரை முழுக்க தெளிந்த வானம். கமெரா கீழே விழுந்திருக்கக் கூடும். சில நொடிகளுக்குத்தான். பிறகு தலைகீழாக அலைந்து நிமிர்ந்தபோது ஒரு ரொயோட்டா வாகனம் புழுதியை இறைத்தபடி மைதானத்திற்குள் நுழைவது தெரிந்தது. திரண்டு நின்ற சனங்கள் கூச்சலிட்டார்கள். ரொயோட்டா மைதானத்தை இரண்டு முறை வட்டமடித்துவிட்டு நின்றது. ஷர்மினாவை இரண்டு பெண் காவலர்கள் கீழே இறக்கினார்கள். அவள் வெளிர் நீல நிற புர்கா அணிந்திருந்தாள். ஒரேயொரு முறை தலையை நிமிர்த்தி மைதானத்தைப் பார்த்தாள். கூச்சலைக் கத்தரித்து விட்டதைப்போன்ற மயான அமைதி. ஷர்மினா சில காலடிகளே நடந்தாள். அவளால் இயலவில்லை. தவழ்ந்துதான் போனாள். மைதானத்தின் நடுவில் வைத்து அவளை முழந்தாளில் உட்காரச் செய்தார்கள். அவள் துவண்டு துவண்டு விழுந்தாள்.
இப்போது ஆவணப் படத்தில் ராணா தோன்றினாள். அவளை அமெரிக்கப் படைகளின் காலத்தில் படமாக்கி இருக்க வேண்டும். காட்சிகளில் துல்லியமான தெளிவு. ராணாவுக்கு ஐம்பது வயது இருக்கலாம். ஆளுமையான உடல் மொழி. அலட்சியமான பார்வை. அவள் புர்கா அணிந்திருக்கவில்லை. ஆனால், தலையை சால்வையால் சுற்றி இருந்தாள். ஆங்கில உப தலைப்புகள் இவ்விரண்டு வரிகளில் தோன்றின.
“நான் மைதானத்தின் வாசலிலேயே இறங்கிவிட்டேன். ஷர்மினாவோடு இரண்டு பெண் காவலர்கள்தான் போனார்கள். இந்த இடத்தில் இந்த நேரத்தில் அவளுக்கு மரண தண்டனை கொடுக்கப்படும் என்ற தகவல் ஏற்கனவே வானொலி ஊடாகப் பரவியிருந்தது. அதைப் பார்க்க நிறையச் சனங்கள் வந்திருந்தார்கள். ஷர்மினாவுக்கு அதைப் பற்றி எல்லாம் தெரியாது. அவள் சிறையிலிருந்து புறப்பட்டபோது நான் எதையும் சொல்லவில்லை. என்னவோ, அவளுடைய உயிர் அவளுக்குத் தெரியாமலேயே போகட்டும் என்று நினைத்தேன். அவளுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது. பெண் கைதிகளிடம் குழந்தைகளை ஒப்படைத்தபோதுகூட “வெறும் நூறு கசையடிகளோடு என்னை விடுதலை செய்து விடுவார்கள். போவதும் வருவதுமாக வந்து குழந்தைகளை வாங்குகிறேன்.” என்றுதான் சொன்னாள். அவர்களிடமிருந்து இரண்டு மூன்று தடித்த ஆடைகளை இரவல் வாங்கி புர்காவிற்குள் அணிந்தாள். “வெறும் நூறு என்று சொன்னாலும், அவை நூறு கசையடிகள் அல்லவா..” அவளிடமிருந்து இருண்ட புன்னகை சிந்தியது.
ஷர்மினாவைக் குந்தி இருக்கச் செய்தார்கள். அவளால் இயலவே இல்லை. “கோவிக்காமல் எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? இந்த இரண்டு கைகளையும் பிடித்துக் கொள்கிறீர்களா?” என்று இரண்டு கைகளையும் உயர்த்தினாள். “கசையால் அடிக்கும்போது மட்டும் விலகிக் கொள்ளுங்கள். தவறுதலாகக் கூட உங்களில் பட்டுவிடக் கூடாது.”
பெண் காவலர்கள் அவளுடைய கண்களைக் கட்டினார்கள். இரண்டு கைகளையும் இழுத்துப் பிடித்துக் கொண்டார்கள். மயான நிசப்தம். மொத்தக் கூட்டமுமே மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டது. முதற் சத்தம் ‘டப்’ என்று எதிரொலித்தது. ஓராண்டு கால நம்பிக்கை கடைசியில் பொய்த்துவிட்டது என்று உணர்வதற்குக் கூட அவளுக்கு அவகாசம் கிடைத்திருக்காது. தலை குத்தெனச் சாய்ந்தது. அவளுக்குப் பின்னால் சற்றுத் தொலைவில் குறி பார்த்து நின்றவனுக்கு இடது கைப் பழக்கமாக இருக்க வேண்டும். ஓர் இடைவெளி. இரண்டாவது குண்டு குறி தவறி நிலத்தைத் துளைத்தது. காவலர்கள் ஷர்மினாவைக் கைவிட்டார்கள். அவள் தலை குப்புறக் கவிழ்ந்தாள். அதற்குப் பிறகும் அவசியமே இல்லாமல் அங்கும் இங்குமாக அவன் சுட்டுக் கொண்டிருந்தான். அவனுக்குக் கை நடுங்கியிருக்கும் என்றுதான் தோன்றுகிறது. திடீரென்று துப்பாக்கியைத் தூர எறிந்துவிட்டுத் தலையைப் பொத்திக்கொண்டு குந்தி இருந்தான். சற்று முன்னர் ஷர்மினா இருந்ததைப்போல. நான்கைந்து பேர் மைதானத்திற்குள் ஓடிச் சென்று அவனைக் கழுத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார்கள். சொற்ப காலத்திற்கு முன்னர்தான் அவன் தலிபான்களோடு இணைந்திருந்தான்.
0
அருள்குமரனுக்கு மூச்சுத் திணறியது. போர்த்துக் கொண்டு சோபாவில் படுத்திருந்தான். அந்த ஆவணப் படத்தைப் பார்த்திருக்கக் கூடாது. ஷர்மினா குந்தி இருந்த போதாவது நிறுத்தி இருக்க வேண்டும். ராணா என்ன சொல்கிறாள் என்று கேட்டிருக்கக் கூடாது. தலையில் அடுப்புக் கரியை அடைந்து விட்டதைப்போன்ற பாரம். எதையுமே கோர்வையாக யோசிக்க முடியவில்லை. சிதைந்த எண்ணங்கள். ஷர்மினா நீல நிறப் புர்கா அணிந்து குந்தி இருக்கிறாள். ஐயனார் கோவிலுக்கு முன்னால் புஸ்பகலாதேவியை மின் கம்பத்தில் கட்டி வைத்திருக்கிறார்கள். அவளது நெற்றிப் பொட்டிலிருந்து வழிந்த குருதி உதடுகளில் காய்ந்திருக்கிறது. அமலி கண்ணீரோடு முலையை ஊட்டுகிறாள். சரவணபவன் எதையோ சொல்ல அம்மா வெட்கப்பட்டுச் சிரிக்கிறாள். நஜிபுல்லா தலையைச் சரித்து துப்பாக்கியில் குறிபார்க்கிறான். ‘டப்..’ அமுக்கமான ஒரு வெடி ஒலி. “ஐயோ..” அருள்குமரன் வாய்விட்டுக் கத்தினான். அற்புதம் எப்போது வருவார் என்று தெரியவில்லை. அவர் வந்தால் இந்தப் பாரத்தை இறக்கி வைக்கலாம். ‘சந்தோசத்தைப் பகிர்ந்தால் அது இன்னும் இன்னும் கூடும். துன்பத்தைப் பகிர்ந்தால் அது மெல்ல மெல்லக் குறையும்.’ என்று பெத்தம்மா அடிக்கடி சொல்வாள்.
தனிமை கழுத்தைத் திருகியது. அழுகிய ஈரச் செதில்கள் முளைத்து தேகத்தை மூடுகின்றன. இந்தக் கற்பனையின் அருவருப்பைச் சகிக்க முடிவதில்லை. திரும்பத் திரும்ப மனம் அதிலேதான் குவிகிறது. புண்ணும் சீழும் வடியும் தோல்ச் செதில்கள். மூளையின் வழுவழுத்த திசுக்களில் பொருமிப் பொருமிக் கொப்புளங்கள்.. அருள்குமரன் பற்களை நருமினான். இதோ.. இதோ.. மண்டை ஓட்டு உட் சுவரில் அந்தக் குரல் எதிரொலிக்கிறது. ராணாவின் குரல்.
“இது நாள் வரை யாருக்கும் சொன்னதில்லை. சொல்லக் கூடாது என்றுதான் இருந்தேன். அதுதான் ஷர்மினாவுடைய சாவுக்குக் கௌரவம் என்றொரு நம்பிக்கை. ஆனால் இப்போது அப்படித் தோன்றவில்லை. கௌரவம் அவளுடைய உண்மையில்தான் இருக்கிறது. ஷர்மினா கொல்லப்படுவதற்கு ஐந்தாறு நாட்களுக்கு முன்னர் என்னைச் சந்தித்தாள். இரண்டு குழந்தைகளும் அவளுடைய நெஞ்சில் சாய்ந்திருந்தன. என் கண்களை நேராக நோக்கினாள். ‘நீங்கள் விரும்பிய உண்மை இதுதானே. குறித்துக் கொள்ளுங்கள். ஆம், என்னை விடவும் இரண்டொரு வயதில் இளையவனாக இருந்த ஒருவனில் நான் காதல் வயப்பட்டிருந்தது உண்மைதான். என் தனிமையையும் துயரையும் அது என்னையும் அறியாமல் தோற்கடித்தது. நறுமணப் பூக்கள் சொரிகின்ற நந்தவனத்தில் நின்ற உணர்வை என் வாழ்நாளில் முதன் முறையாக அனுபவித்தேன். அதுபோதும்’ என்றாள். சாய்ரா.. என்னை அப்படிப் பார்க்காதீர்கள். தயவுசெய்து என்னைச் சந்தேகிக்காதீர்கள். அல்லா மீது ஆணையாக அவள் சொன்னதை நான் விசாரணைக் குறிப்பில் எழுதவே இல்லை.”
அருள்குமரன் போர்வையைக் காலால் உதைந்து கீழிறக்கினான். துள்ளி எழுந்து நின்றான். உதடுகள் எதையெல்லாமோ அரற்றின. கழுத்தில், இடுப்புக் குழியில், தொடைகளில் நடுக்கமாக இருந்தது. தொண்டை காய்கிறது. திரும்பத் திரும்ப எச்சிலை விழுங்கிப் பார்த்தான். மூளை அவிகிறது. அதன் ஈரலிப்பெல்லாம் ஆவியாகிக் கரைவதைப்போன்ற பிரமை. கண்களை மூடி நெற்றிப் பொட்டில் விரலால் தேய்த்தான். மூக்கு நுனியிலிருந்து வெளியேறும் காற்றில் மனதைக் குவித்து.. ‘மனதும்.. மயிரும்.. மண்ணாங்கட்டி.’ தரையை உதைந்தான். ‘அது இங்கே தான் எங்கேயோ கிடந்தது.’ கண்கள் அந்தரப்பட்டு பெரு மார்புப் பெண்ணைத் தேடின. அந்தப் புத்தகம் கணணி மேசையில் கிடந்தது. தாவி எடுத்து சோபாவில் வாகாகப் படுத்தான். பக்கங்களை ஆறுதலாகப் புரட்டத் தொடங்கினான். ‘அற்புதம் இப்ப வந்திடுவாரோ..’ அவர் சலூனுக்குத்தான் போயிருந்தார். நேரத்தைப் பார்த்தான். எழுந்து புத்தகத்தையும் தூக்கிக் கொண்டு குளியலறைக்குள் நடந்தபோதுதான் எதேச்சையாகக் கவனித்தான். ஜன்னலில் வெயில்!
பத்து வாளிகளில் தண்ணீரை ஏந்திக் கொட்டி விட்ட மாதிரி வெயில் நுழைந்தது. கதவைத் திறந்துகொண்டு ஆராதனா வந்தால் எப்பிடி இருக்குமோ அப்பிடியொரு வெளிச்சம். எத்தனை மாதங்களுக்குப் பிறகு வருகிறது. அருள்குமரன் மூச்சை இழுத்து வெயிலை ஆசையோடு முகர்ந்தான். அது தலைக்குள் நுழைந்து அடைந்திருந்த அடுப்புக் கரியை வறுகி வெளியேற்றியது. ஊரில் இருந்த வரைக்கும் வெயிலைப் பெரிதாகக் கண்டு கொண்டதில்லை. இங்கே வந்த பிறகுதான். அதுவும் முதன்முறை குளிர் காலத்திற்குள் நுழைந்த அந்தக் காலம் பயங்கரம். ஏதோ இருண்ட பதுங்கு குழிக்குள் போன மாதிரியே இருந்தது. எப்பொழுதும் சோர்வு.. எப்பொழுதும் கிலேசம்.. பிடரிக்குக் கீழ்க் கழுத்தில் எப்பொழுதும் ஒரு நமைச்சல். ஏதாவது நோயாக இருக்குமோ என்று தோன்ற டொக்டரிடமும் போனான். அது ஒருவித கோளாறுதான் என்று அவளும் சொன்னாள். ‘வின்ரர் ப்ளு.’ என்று பெயர். பிரகாசமான வெளிச்சம்தான் ஒரேயொரு மருந்து.
இதோ அது வந்துவிட்டது. தோலில் முளைத்த நாற்றச் செதில்களை நறுக்கி எறிகிறது. மூளையின் திசுக்களில் தண்ணீர் வார்க்கிறது.
அருள்குமரன் கையில் இருந்த புத்தகத்தை வீசி எறிந்தான்.

0
அபர்ணா நீல நிற டெனிம் ஜீன்ஸ் அணிந்திருந்தாள். வெள்ளை நிற வட்டக்கழுத்து ரீ சேர்ட்டின் மேலே அதே நீலத்தில் டெனிம் சேர்ட்டைத் திறந்து விட்டிருந்தாள். குளிர் நீங்குகிறது. தூக்கிச் சுமக்க முடியாக தடித்த கம்பளி ஆடைகள் இனித் தேவையில்லை. நீண்ட கேசத்தைக் கற்றையாக்கி வர்ண வளையங்களால் முடிச்சிட்டிருந்தாள். நெற்றியில் சிவப்பு நிறப் பொட்டு. அழுத்தமான ‘சொக்லேட்’ நிற முகம். இந்த முக வெட்டுத் தோற்றத்தை முன்னரும் வேறு யாரிலோ பார்த்த மாதிரி அருள்குமரனுக்குத் தோன்றியது. அவன் அப்போதுதான் அற்புதத்தின் வீட்டிலிருந்து புறப்பட்டு தபால் நிலையத்திற்கு வந்திருந்தான். பேருந்துக்கு நேரம் இருந்தது. வெயிலைக் கண்டபோது திரண்ட உற்சாகக் களி இன்னமும் தீரவில்லை. ஒரு பியர் குடிக்கலாம். அற்புதத்தின் குளிர்பதனப் பெட்டிக்குள் அது தீர்ந்துவிட்டிருந்தது. இல்லையென்றால் எடுத்துக்கொண்டே வந்திருக்கலாம். எதுவும் சொல்ல மாட்டார். எழுந்து தானியங்கி இயந்திரத்தை நோக்கி நடந்தான். அபர்ணா சுற்று வட்ட நடை பாதையில் நின்று இவனைப் பார்த்திருக்க வேண்டும். அவள் அப்போதிருந்தே நான்கு திசைகளிலும் பிரியும் தெருப் பெயர்களை மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள். உடல் மொழியில் ஒருவித பதட்டம். அந்த முகத்தை ஏற்கனவே பரிச்சயமான மாதிரி திரும்பவும் யோசனை ஓடியது. கண்டுபிடித்து விட்டான். ஒரு தமிழ்ப் படத்தில் கதாநாயகியின் அக்காவாக நடித்தவளின் முகம் இவளுக்கு. அவளுக்கு மெல்லிய உடல். இவளுக்கு அப்படி அல்ல. கொஞ்சம் தொக்கைதான். அருள்குமரன் தனக்குள் புன்னகைத்தான். இயந்திரத்திற்குள் நாணயத்தைச் செலுத்த முயன்றபோது “அண்ணா, நீங்கள் தமிழா?” என்ற குரல் கேட்டது. நிமிர்ந்து பார்த்தான். அபர்ணா ‘நான்தான்’ என்று சைகை செய்தாள். அவளுக்கு எப்படியும் அவனை விடவும் மூன்று அல்லது நான்கு வயது அதிகமாக இருக்கும். ‘ஓம்.’ என்று தலையசைத்தான். அவள் வீதியைக் கடந்து வந்தபோது உடல்மொழி ஆசுவாசமாகத் தளர்ந்திருந்தது. கையில் ஓர் துண்டுக் காகிதம் வைத்திருந்தாள். அதை நீட்டி “உங்களுக்கு இந்த அட்ரஸ் எங்கை இருக்கெண்டு தெரியுமா?” என்று கேட்டாள். “இங்கதான் எங்கயோ இருக்க வேணும்.” தன்னுடைய விரல்களைப் பின்னிக் கொண்டு முணுமுணுத்தாள்.
பெண்களுக்கான அவசர உதவிகளுக்கும் ஆலோசனைகளுக்குமான மையம் என்று மட்டும்தான் துண்டுக் காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது. கோணலான எழுத்துக்கள், அவசரத்தில் கிறுக்கியதைப்போல. ‘இந்தப் பெயரைப் பார்த்த ஞாபகமாகத்தான் இருக்கிறது. ஒன்றின் கீழ் ஒன்றாக நிறையப் பெயர்ப் பலகைகளில் இதுவும் ஒன்றாக ஊதா நிறத்தில் இருந்தது.’ அருள்குமரன் சிறுவிரலைக் கடித்துக் கொண்டு யோசித்தான். பிடிபட்டு விட்டது. பக்கத்தில்தான். ஒரு அடுக்குமாடி வளாகத்தின் முன்றலில் இருந்த பெயர்ப் பலகைகளில் இந்தப் பெயரைப் பார்த்திருக்கிறான்.
“இதால நேர போனால் முதலாவதா வாற சிக்னல்ல வலது பக்கம், பெரிய கட்டடிம். வேற வேற உதவி நிறுவனங்களும் அங்கதான் இருக்கு. முன்னுக்கே பெயர் எழுதி இருப்பினம்.”
அபர்ணா தயங்கினாள். “நீங்கள் குறை நினைக்காட்டி வந்து காட்டுறீங்களா? கனநேரமாத் தேடுறன். கொஞ்சம் பதட்டமாவும் இருக்கு.”
அருள்குமரனுடைய பேருந்து அவனைக் கடந்து போனது. அடுத்ததற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. ‘சரி.’ என்று தலையசைத்துவிட்டு நடந்தான். அபர்ணா பின்தொடர்ந்தவாறே “நீங்கள் இங்கயா இருக்கிறீங்கள்?” என்று கேட்டாள்.
“ஓம். மேல இருக்கிற அகதி முகாமில.” அவளைத் திரும்பிப் பார்த்துச் சொன்னான்.
“உங்களுக்கு டொச் தெரியுமா?”
இம்முறையும் அவளைத் திரும்பிப் பார்க்க, அவள் நடையைக் கூட்டி அவனுக்கு அருகாக வந்து நடந்தாள்.
“அவ்வளவாக இல்லை. இப்பதான் முகாமில் வகுப்புக்கள் நடக்கிறது.”
“இங்கிலிஸ்?”
“அது தெரியும்.”
“உங்களைக் கஸ்ரப்படுத்துறனோ தெரியாது. எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? நான் சொல்லுறதை அவங்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல முடியுமா?” அவளுடைய குரலில் ஒரு பாவனையாகக் கூட இரந்து கேட்கின்ற தொனி இல்லை.
“ஓ.. நீங்களும் சுவிஸுக்குப் புதுசா?”
“இல்லை.. இல்லை.. ஐஞ்சு வருசமாகிட்டுது. டொச் கதைப்பன், எண்டாலும் இந்த மாதிரி நேரங்களில நினைக்கிறதைச் சொல்ல முடியாமல் பதட்டமா இருக்கும். என்னடா.. முன்னப் பின்ன தெரியாத ஆளிட்ட எல்லாம் சொல்லுறாளே எண்டு நினைக்காதீங்க.. எனக்குக் கொஞ்சம் படபடப்பா இருக்கு. இந்த நேரங்களில கோர்வையாக் கதைக்கவும் வராது.” அவளுக்கு மகரந்த ஒவ்வாமைபோல. அடிக்கடி மூக்கை உறிஞ்சினாள். கண் மடல்களைத் தேய்த்தாள். “வெயில் சனியன் வந்தாலே இது ஒரு ஆக்கினை.” என்று சினந்தாள். வசந்தத்தின் தொடக்கத்தில் நிறையப் பேருக்கு இப்படி ஆகும். கண்கள் கடிக்கும். மூக்கு உளையும். தும்மிக் கொண்டே இருப்பார்கள்.
லிப்ட்டுக்குள் புகுந்து நான்காவது மாடியிலிருந்த அலுவலகத்திற்கு வந்தார்கள். வரவேற்பு மேசையில் கணணியில் மூழ்கியிருந்த பெண் தலையை நிமிர்த்திப் புன்னகைத்தாள். வயது முப்பதுக்கு உள்ளேதான் இருந்திருக்கும். ஏனென்று தெரியவில்லை, அருள்குமரன் அறுபது, எழுபது வயதுப் பெண்மணி யாரோ ஒருத்தியைத்தான் எதிர்பார்த்திருந்தான். திடீரென்று ஒரு தயக்கம் ஒட்டிக்கொண்டதைப்போல இருந்தது. அவள் “நல்ல நாள் ஆகட்டும்.” என்று வரவேற்றாள். இரண்டு பேரையும் உட்காருமாறு கை காட்டி விட்டு அவர்கள் தாமாகவே பேசத் தொடங்குவார்கள் என்பதைப்போல காத்திருந்தாள்.
அபர்ணா தலையை நிமிர்த்தாமலேயே “இண்டைக்கு இரவு நான் தங்கிறதுக்கு ஒரு இடம் ஏற்பாடு செய்த தர முடியுமா எண்டு கேட்டுச் சொல்லுறீங்களா?” என்று கேட்டாள்.
அருள்குமரன் அதை மொழிபெயர்த்தான். ஆலோசனை மையப் பெண்ணின் கண்களில் ஆர்வம் பெருகுவதைப்போல இருந்தது. “இவளுடைய வீட்டில் ஏதாவது வன்முறை அல்லது துன்புறுத்தல்.. நடக்கிறதா?”
அபர்ணா தாமதிக்கவில்லை. “தயவுசெய்து ஓம் எண்டு சொல்லுங்கள். இதுக்கு மேல என்னால பொறுக்க முடியாது என்று சொல்லுங்கள். என்னை அடித்தே கொன்றுவிடுவான் என்று சொல்லுங்கள். ரெண்டு பேர் ஒண்டா இருந்தாச் சண்டை வரும்தான். ஒத்துக்கொள்ளுறன். வாய் வார்த்தை தடிக்கும்தான். அதுக்காக எப்ப பார்த்தாலும் எவனோட படுத்திட்டு வந்து என்னோடை சண்டை பிடிக்கிறாய் எண்டு கேட்டு உதைஞ்சால் தாங்க முடியுமா? இண்டைக்க ஒரு முடிவு வேணும். இதுக்கு மேல அடியைத் தாங்கிற சக்தி உடம்புக்கும் இல்லை. மனசுக்கும் இல்லை.”
அருள்குமரன் ‘இவருக்கு வீட்டில் வன்முறை நடக்கிறது.’ என்று மட்டும் சொன்னால்போதும் என்று நினைத்தான். குரலைச் செருமியபோது அவள் மறுபடியும் தொடங்கினாள்.
“வேலையால வந்து குளிச்சிட்டு கொஞ்ச நேரம் ஆறி இருப்பன். இந்த ஓநாய் ஊத்தை உடுப்பைக் கிளறி உள்ளுடுப்பைக் கொண்டு வந்து இது ஏன் ஈரமாக இருக்கு எண்டு கேக்கும். நீங்களே சொல்லுங்கள்.. இந்த நாயை விசம் வைச்சுக் கொன்றால்த்தான் என்ன?”
அருள்குமரனுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும்போல் இருந்தது. கேட்டு வாங்கிக் குடித்தான். “உங்களுக்கு ஒரு பெண் மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்யச் சொல்லவா?” என்று அபர்ணாவிடம் கேட்டான்.
“ஒண்டும் வேண்டாம். முதல்ல இண்டைக்கு இரவு தங்கிறதுக்கு ஒரு இடம் தரச் சொல்லுங்கள். நிம்மதியா ஒரு நித்திரை கொள்ள வேணும்.” வார்த்தைகளில் இருந்த ஓர்மம் கரைந்து நிறையச் சோர்ந்திருந்தது.
ஆலோசனை மையப் பெண் ஏதோ நிறையக் கணணியில் தட்டச்சுச் செய்துவிட்டுத் திரும்பினாள். “இன்று இரவுக்குத் தேவையான பொருட்பளை வீட்டிற்குப் போய் எடுத்துக்கொண்டு வர முடியுமா?”
“இவள் எனக்கு ஆலோசனை தாறாளா? இல்லாட்டி என்னைக் கொல்லுறதுக்கு அவனுக்கு ஆலோசனை குடுக்கிறாளா?” அபர்ணா கத்தினாள்.
அருள்குமரன் “இவர் அதற்குப் பயப்படுகிறார்.” என்று மட்டும் சொன்னான்.
“அப்பிடி என்றால் பொலிஸில் ஒரு முறைப்பாட்டை செய்வதுதான் நல்லது. உங்களுக்குச் சம்மதமா?”
அபர்ணா “அதெல்லாம் வேண்டாம்.” என்றாள்.
