6
இரவு பதினொரு மணி. சுழிபுரக் கடலை இரவு மூடியிருந்தது. அற்புதம் கடற்கரையில் உட்கார்ந்திருந்தான். வெள்ளை நுரைகள் அவனுக்குச் சற்றுத் தூரத்தில் வந்து வந்து உடைந்து அழிந்தன. ஆறுக்கெல்லாம் படகு புறப்பட்டிருக்க வேண்டும். இயந்திரத்தில் ஏதோ பழுதுபோல.. எப்படியும் சரிப் பண்ணி விடலாம் என்று மொட்டை மாஸ்ரர் சொல்லியிருந்தார். அவர்தான் அற்புதத்தை மட்டக்களப்பிலிருந்து அழைத்து வந்தவர். கண்கள் அவரைத் தேடின. படகின் பின்பகுதியில் குவிந்திருந்த பெற்றோமக்ஸ் வெளிச்சத்தில் வெட்டையைத்தான் தெரிந்தது. அவன் இயந்திரத்திலிருந்த கைப் பிடியை இழுத்து இழுத்து அதை உயிர்ப்பிக்க முயற்சித்தான். “வெட்டைதான் உங்களை இந்தியாக்குக் கூட்டிக் கொண்டு போகப் போறான்.” என்று மொட்டை மாஸ்ரர் அவனை அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். அவனுக்கு இருபத்தொட்டு வயதிருக்கும். நெடு நெடுவென்று வளர்ந்திருந்தான். ஓட்டப் பந்தயக் காற்சட்டை முழங்காலுக்கு மேலே நின்றது. ஒட்டிய வயிற்றில் பனியன் ஈரமான பூவரசம் இலையைப்போல படிந்து கிடந்தது. “இண்டைக்குக் கடல் கொஞ்சம் உரப்பாத்தான் இருக்கு. பயப்பிட வேண்டாம். வெருட்டும், ஆனால் பிரட்டாது.” என்று சொன்னான்.

அற்புதம் கடலை வெறித்துப் பார்த்தான். இங்கிருந்து கோடியக்கரை எவ்வளவு தூரத்தில் இருக்கின்றது என்று தெரியவில்லை. ஆனால் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் வருவதை விடவும் பக்கத்தில்தான் இருக்கிறது. ‘இப்பிடியே நேராகப் போனால்போதும். கரை வந்துவிடும்’
இயந்திரம் நிரந்தரமாக உயிர்த்ததும் கடற்கரை பரபரப்பானது. எல்லோரும் தண்ணீரில் நடந்து போய் படகில் ஏறினார்கள். மொத்தமாகப் பன்னிரெண்டு பேர். அற்புதம் இறுதிக் காலடியை உயர்த்தியபோது எச்சிலை மிண்டி விழுங்கினான். படகின் அணியத்திற்குப் பக்கமாகக் குந்தி தொடைகளின் இடுக்கில் பையை வைத்தான். இரண்டொரு சேர்ட்டும் சாரங்களும் உள்ளாடைகளுமே இருந்தன. வெட்டை கரையில் நின்ற மொட்டை மாஸ்ரருக்கு கை அசைத்தான். இயந்திரத்தை முறுக்க குபு குபு என்று டீசல் புகை. அற்புதம் மூக்கைப் பொத்தினான். திடீரென்று “நில்லுங்கோ..” என்று மொட்டை மாஸ்ரர் கத்துவது கேட்டது. கரையில் இருந்து அவரும் இன்னொருவனும் ஓடி வந்தார்கள். வெட்டை இயந்திரத்தைத் தணித்தான். மொட்டை மாஸ்ரருக்கு மூச்சு வாங்கியது. “வெட்டை.. இவன் புலிகளில சேரக் கேட்டவனாம். அவங்கள் மாதகலுக்கு வரச் சொல்லியிருக்கிறாங்கள். இவன் போக வள்ளத்தில இடமில்லை, அடுத்த முறை வாங்கோ எண்டவங்களாம். இப்ப எங்களோடை வாறானாம்.” என்று ஒருவனை ஏற்றிவிட்டார். “அது சரி. ஆர் குத்தினாலும் அரிசியானால் சரிதானே.” இயந்திரம் உயிர்த்து படகை உந்தித் தள்ளியது. கொஞ்சத் தூரம் போனதும், ஒரு வட்டம் இட்டது. வெட்டை கரையைப் பார்த்து கையைக் கூப்பி நெற்றியிலும் நெஞ்சிலும் ஒற்றினான். “ஐயனாரைக் கும்பிட்டுவிட்டுப் போறது ஒரு நம்பிக்கை.” என்றான்.
ஐயனார் என்றதும்தான் ஞாபகம் வந்தது. ஐயனார் கோவிலடியில் யாரோ புஷ்பகலாதேவியை ‘காட்டான் பிரிவினர்’ சுட்டுக் கொன்றதாக கரையில் வைத்து மொட்டை மாஸ்ரர் வெட்டைக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். சமூக விரோதிக்கு மரண தண்டனை என்று எழுதிய அட்டை கழுத்தில் கொளுவி இருந்ததாம். அவளுக்கு முப்பது வயது. கணவன் இல்லை. “புருசன் செத்த பிறகு மொத்தமாப் பொத்திக் கொண்டிருக்கத் தெரியாமல், அவவுக்கு இளம் பெடியங்களோடு என்ன பல் இளிப்பு வேண்டியிருக்கிறது?” என்றபோது மொட்டை மாஸ்ரருக்கு சிரிப்பு வந்தது.
படகு கொஞ்சத் தூரம்தான் போயிருக்கும். அதைக் கட்டி வைத்து அடிப்பதைப்போல அலைகள் படார் படார் என்று மோதின. அத்தனை பேரும் தெப்பலாக நனைந்தார்கள். ஆட்கள் ஓங்காளிக்கிற சத்தம்.. அற்புதம் தலையைக் குனிந்தான். கைச்சலான உப்புத் தண்ணீர் முகத்தில் வடிந்து உதடுகளில் ஈரமானது. காறிக் காறித் துப்பினான். புறப்பட்டபோது ஒரு சாகசக் காரன்போல கடலுக்கு நெஞ்சை நிமிர்த்தி அணியத்தில் நிற்கிற ஓர் ஆசை இருந்ததுதான், இப்போது வடிந்துவிட்டது. ஏதோ ஒரு நிச்சயமின்மை. தனிமையான உணர்வு. அலை வேறு தூக்கித் தூக்கி விழுத்துகிறது. அது தணிந்திருக்கிற நேரமாகப் பார்த்து வெளிக்கிட்டிருக்கலாம். எல்லோரும் அப்படித்தான் நினைத்திருப்பார்கள்போல. வெட்டை அவர்களைப் பார்த்து “இந்த நேரத்திலதான் நேவிக்காரன் திரியமாட்டான். அலையை விடவும் அவன் பொல்லாதவன்.” என்று கத்துகிற மாதிரிச் சொன்னான்.
அற்புதம் நிமிர்ந்தான். வானம் கருகிக் கிடந்தது. இன்றைக்கு அமாவாசையோ தெரியவில்லை. நிலத்தை விட்டு அல்ல, இந்த வானத்தை விட்டே தூரச் செல்வதாகத் தோன்றியது. ஏதோ ஓர் அந்தரிப்பு. மன அலைவு. கடந்த வருடம் யூலையில் கொழும்பில் நடந்த கலவரச் செய்திகளைக் கேட்டதிலிருந்தே இந்த உத்தரிப்புத்தான். ஊரில் பகிடியும் பம்பலுமாகத் திரிந்த அவன் வயதொத்த நிறையப் பேர் திடீரென்று வாய்களைத் தைத்து விட்டதைப்போல மௌனமாகிப் போயினர். முகங்களில் சவக் களை அப்பிடியது. அற்புதம் இன்னதெனத் தூலமற்ற ஆற்றாமையோடு அலைந்து திரிந்தான். ‘எரிக்கிறாயா.. திருப்பி எரிப்பேன். அடிக்கிறாயா.. திருப்பி அடிப்பேன்..’ மண்டைக்குள் அதே நினைப்பு. தலைப் பாரம். அவனுக்கு யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை. ஒன்றிரண்டு சிநேகிதர்களும் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டார்கள். யாருக்காகவோ காத்திருப்பதைப்போல நாட்களைக் கடத்தினான். அப்படித்தான் மொட்டை மாஸ்டரைச் சந்தித்தான். நியாயமாக அன்றைக்கு இந்த உத்தரிப்புத் தணிந்திருக்க வேண்டும். ஆனால் அலைக்கலைக்கிறது இந்தக் கடலைப்போல.
கடலின் சீற்றம் கொஞ்சம் குறைந்திருந்தது. அற்புதம் வெளியே பார்த்தான். ‘சளக்.. சளக்..’ இருட்டைப் போர்த்திக் கொண்டு கடல் தளுங்கிக் குலுங்கியது. ஆவேசம் இல்லை, என்றாலும் கண்ணுக்குத் தெரியாத ஒரு ராங்கித் தனம் உள்ளே இருப்பதாகத்தான் தோன்றிற்று.
0
கோடியக்கரையில் இறங்கியபோது என்ன நேரம் என்று தெரியவில்லை. அவர்களை அழைத்துச் செல்ல இரண்டு பேர் வந்திருந்தார்கள். வெட்டை “நான் உடனயே திரும்பிப் போக வேணும்.” என்றான். கரையில் நின்ற குட்டி லொறியிலிருந்து சில பொதிகளை இறக்கிப் படகில் ஏற்றினார்கள். வெட்டை கை அசைத்து “போட்டு வாங்கோ..” என்றான். லொறியில் ஏறினார்கள். உழவு இயந்திப் பெட்டியைப்போல பின்பக்கம் திறந்திருந்தது. கடற்கரைக் காற்றின் குளிருக்கு பையை நெஞ்சோடு வைத்துக் கட்டிப் பிடிக்க இதமாக இருந்தது. கொஞ்சத் தூரத்திற்கு கட முடா என்ற குலுக்கம், பிறகு சரியாகி விட்டது. அற்புதம் சரிந்து படுத்தான். வானம் இருட்டிலிருந்து சாம்பல் நிறத்திற்கு வந்திருந்தது. கருகிய சாம்பல் என்றொரு நினைப்பு உதித்தது. நட்சத்திரங்கள் ஏதாவது தெரிகிறதா என்று தேடினான். அதற்குப் பிறகு சற்றுத் தூங்கியிருக்க வேண்டும். வெளிச்சம் பரவி முகத்தில் அடித்தபோதுதான் விழித்தான். லொறியின் சில்லுகள் சதுப்பான மணலுக்குள் உருண்டு கொண்டிருந்தன. தெருவோரங்களில் அடுக்கி வைத்த மாதிரியான ஓட்டு வீடுகள். ஆங்காங்கே வெள்ளைச் சுவர்களில் உதய சூரியனும் இரட்டை இலையும் பெரியதாக வரையப்பட்டிருந்தன. அருகிலேயே சினிமாச் சுவரொட்டிகளும். தெருவின் திருப்பத்தில் ‘பாவி ஜெயவர்த்தனே.. எங்கள் ஈழ மக்களைக் கொல்லாதே.’ என்று எழுதிய வெள்ளைத் திரையைத் தொங்க விட்டிருந்தார்கள். அற்புதம் எழுந்து உட்கார்ந்தான். மனம் அமைதி அடைந்திருந்தது. லொறி மாந்தோப்புக்களை கடந்து பயணித்தது.
அவர்களுடைய முகாம் சனப் புழக்கமான இடங்களிலிருந்து சற்று விலகித்தான் இருந்தது. இடையில் வயல்களும் தரிசான நிலங்களும் இருந்தன. நுழைவாயிலில் இருந்த வீதிக் கடவையை காவலுக்கு இருந்தவர்கள் மேலே தூக்கினார்கள். லொறி உள்ளே நுழைந்து நின்றது.
“தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.” லொறியிலிருந்து குதித்து இறங்கிய ஒவ்வொருவருக்கும் கைலாகு கொடுத்து வரவேற்றான் சப்பறம். அவன்தான் பொறுப்பாளர்போல. முகத்தில் தேனீக் கூடு மாதியான தாடி வைத்திருந்தான். சேர்ட்டின் மேல் இரண்டு பொத்தான்கள் திறந்து கிடந்தன. புசுபுசு என்ற நெஞ்சு மயிர். கைகளைப் பற்றியபோது ராணுவ மிடுக்குத் தெரிந்தது. அவன் லெபனானில் ஆயுதப் பயிற்சி பெற்றவன் என்பதை அற்புதம் பின்னாட்களில் அறிந்து கொள்வான். இப்போது தாகமாயிருந்தது. “அண்ணன்.. தண்ணி கிடைக்குமா?” என்று கேட்டான்.
யாருடையதோ கையைப் பற்றியிருந்த சப்பறம் அப்படியே திரும்பினான். “அண்ணன்.. தம்பிக் கதைகள் எல்லாம் வேறை எங்கயாவது வைச்சுக் கொள்ள வேணும். இங்க எல்லாரும் தோழர்கள். சரியா தோழர்?”
“இரவிரவாக வந்தது. தண்ணி விறாய்க்குது.”
சப்பறம் சிரித்தான். ஏளனம். “என்ன தோழர்? இன்னொரு மூண்டு மாசத்தில ரெயினிங் முடிச்சு நாட்டுக்குத் திரும்பி சிங்கள ஆமியோடை சண்டையைத் துவங்கினால், நாள்க் கணக்குகிழமைக் கணக்குப் பாராமல் சோறு தண்ணி இல்லாமல் இருக்க வேணுமெல்லோ?” யாரையோ அழைத்துத் தண்ணீர் தருவித்தான். பன்னிரெண்டு பேரும் அவதிப்பட்டுக் குடித்தார்கள். தண்ணீர் தொண்டைக்குள் இறங்கிக் கொண்டிருந்தபோது “இதில யாரெல்லாம் புலிகள் அனுப்பிய உளவாளிகள்?” என்று திடீரென்று கேட்டான். அற்புத்தின் வாயிலிருந்து அனிச்சையாக வெளியேறிய நீர் கழுத்தில் வழிந்தது. அவர்களோடு வந்த லோகன் என்ற யாழ்ப்பாண இளைஞன் தீவிரமான முகபாவனையோடு “புலிகளிட உளவாளிகள் அவங்கட முகாமுக்குத்தானே போவாங்கள். நாங்கள் புளொட்டுக்குத்தான் வந்தம். இது அதுதானே?” என்று கேட்டான். சப்பறம் அவர்களுக்கு முன்னாலிருந்த ப்ளாஸ்ரிக் தரை விரிப்பை உயர்த்தி உள்ளே கிடந்த அருவாளை எடுத்தான். கொக்கச் சத்தகம் மாதிரிப் பெரிது. அதன் கூரான விளிம்பை இடது பெருவிரலால் நீவினான். “என்ன நக்கலா? பகிடிக் கதை இல்லை. அப்பிடி யாராவது வந்து அந்த உண்மையை நானாகக் கண்டுபிடிச்சால் உங்கள் ஒவ்வொருவரையும் தோலை உரிச்சு உப்புக் கண்டம் போடுவன்.”
இரவு படுத்திருந்தார்கள். அற்புதம் லோகனின் காதில் “உப்புக் கண்டம் என்றால் என்ன” என்று மெதுவாகக் கேட்டான்.
“ஊரிலை மீனைக் கீறி உள்ளை உப்பையும் தூளையும் அடைத்து மொற மொறத்த வெயில்ல காய வைக்கிறதை அப்பிடித்தான் சொல்லுறவை” லோகன் குசுகுசுத்தான். “அப்போதையே கேக்க வேணும் எண்டு நினைச்சனான். உளவாளிகள் எண்டால் வயலில் வேலை செய்யிற ஆட்கள்தானே?”
0
அற்புதத்திற்குக் காலையிலேயே விழிப்புத் தட்டிவிட்டது. முதலாவது காலை, மம்மலாகத் துலங்கியது. வயிற்று உளைவு. எழுந்து முகாமிற்குப் புறத்தாலேயே இருந்த பயிற்சி மைதானப் பக்கமாகப் போனான். மரக் கூடல்களுக்கு மத்தியில் பெரிய மைதானம். முட்கம்பிகளாலான வளையங்கள், மண் மூட்டைகள், லொறி ரயர்கள் என ஒரு பிரமாண்ட உடற்பயிற்சிக் கூடத் தோற்றம். ஆங்காங்கே கம்பங்களை நட்டு தடித்த கயிறுகளால் இணைத்திருந்தார்கள். கயிற்று ஏணிகள் தொங்கின. மேற்கு மூலையில் மாட்டுத் தொழுவத்தைப்போல ஒரு கொட்டில் தெரிந்தது. அதுதான் கக்கூசாக இருக்க வேண்டும். அதை நோக்கி நடந்தவன், கிட்டத்தில் நெருங்கியதும் துணுக்குற்று நின்றான். ‘யார் அது?’ கொட்டிலின் நடுவே யாரோ ஒருவன் அந்தரத்தில் பறந்து கொண்டிருந்தான். ஏதோ உடற்பயிற்சியாக்கும் என்றுதான் முதலில் தோன்றியது. அவனுடைய கைகளையும் கால்களையும் நான்கு மூலைகளிலும் இழுத்துக் கட்டியிருந்தார்கள். அவன் நிலத்தைப் பார்த்தபடி மிதந்தான். இன்னும் கொஞ்சம் பக்கத்தில் போகத்தான் அவன் முழுக்க நிர்வாணப்பட்டிருந்தது தெரிந்தது. இரும்புக் கம்பிகளும் குண்டாந் தடிகளும் கீழே கிடந்தன. அற்புதத்திற்கு மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. ஓடிப்போய் அவனைத் தூக்க முயற்சித்தான். பஞ்சு உடல். இருபது வயதிற்கு உள்ளேதான் இருக்க வேண்டும். “தம்பி.. டேய் தம்பி..” கன்னத்தில் தட்டி உலுப்பினான். அசைவே இல்லை. அப்போதுதான் பார்த்தான். கழுத்தில் கத்தியால் கிழித்த அடையாளங்கள். அக் கோடுகளில் கரும் சிவப்பில் இரத்தம் வடிந்து காய்ந்திருந்தது. உடம்பு முழுக்க சூடு வைத்த தழும்புகள். முதுகுத் தோலைக் கீறிப் பிளந்து மறுபடியும் தைத்திருக்கிறார்கள். காயத்தில் உப்புக் கட்டிகளும் மிளகாய்த் தூளும் சிந்தி இருந்தது.
“ஐயோ..” அற்புதம் தலையைப் பொத்திக்கொண்டு கீழே சரிந்தான். தேகம் உதறியது. இளைஞனுடைய கோணிய வாயிலிருந்து இரத்தமும் எச்சிலும் இன்னமும் ஈரலிப்போது நிலத்தில் சொட்டின. திறந்திருந்த கண்களில் இறுதி நொடியின் வாதை அச்சுப்போல பதிந்திருந்தது.
0
அற்புதத்திற்கு வாய் குளறியது. வலிப்பு வருவதைப்போல இருந்தது. அவன் முகாமிற்குத் திரும்பி ஓடினான். அப்போதுதான் எழுந்திருந்த சப்பறம் படுத்திருந்த இடத்திலேயே கால்களை உயர்த்தியும் கைகளை நீட்டியும் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் மூச்சு வாங்க நின்று “அண்ணன்.. தோழர்.. அங்க ஒரு பெடியன் தொங்கிறான். சாகப் போறான். ஓடி வாங்கள்.” என்று அரற்றினான். சொற்கள் துண்டு துண்டுகளாகத்தான் வெளியேறின. சப்பறம் அலட்டிக்கொள்ளாமல் சாவாகாசமாக எழும்பியதைப் பார்க்க பயமாக இருந்தது. “அவனை உடனை தூக்கினால் காப்பாத்தலாம்.” என்று கெஞ்சினான்.
சப்பறம் “ஓ..” என்று நிமிர்ந்து பார்த்தான். “அப்ப உம்மட கையாலயும் அடிவாங்கிச் சாக வேணுமெண்டு அவனுக்கு விதி இருக்குது.” குரலில் ஓர் உற்சாகம். கையைத் தட்டி சத்தம் எழுப்பினான். “நேற்று வந்த ஆட்கள் எல்லாம் வா.. வந்து லைன் கட்டு.” அவனைச் சுற்றி அரை வட்ட வடிவில் கூடினார்கள். “இண்டைக்கு உங்கடை முதலாவது நாள். ஒரு பயிற்சியைத் தொடங்கப் போறம். எல்லாரும் பின்னால வா.” என்று மைதானத்தை நோக்கி நடந்தான். அற்புதத்திற்கு கால்கள் பின்னிக் குழைந்தன. பரலோகத்தின் தோளைப் பிடித்தபடிதான் நடந்தான். இன்னொரு முறை அந்தக் கண்களைக் காணத் துணிச்சலே கிடையாது. சப்பறத்துக்குச் சொல்லியிருக்கக் கூடாது.
சப்பறம் பச்சைக் கருக்கு மட்டைகளையும் இரும்புக் குழாய்களையும் பொறுக்கி ஒவ்வொருவருக்கும் கொடுத்தான். “அமைப்பைப் பொறுத்தவரை, தலைமைக்குச் செய்கிற துரோகம், தமிழீழத்திற்கே செய்கிற பச்சைத் துரோகம். தமிழீழம் ஒருநாளும் துரோகத்தைச் சகிக்காது.” என்று சொல்லிக்கொண்டிருந்த போதே அவனுடைய கண்கள் அற்புதத்தைத் தேடின. “இங்க வா.. நீதானே முதல்ல பாத்தது.” கருக்கு மட்டையைக் கொடுத்தான். அற்புதத்திற்கு அப்பொழுதே ஓரளவு புரிந்துவிட்டது.
“இப்பொழுது தோழர் அற்புதம் துரோகத்திற்குப் பரிசு வழங்குவார்.”
அற்புதம் ஓரடி பின்வாங்கினான். கைகள் அனிச்சையாக மறுத்தன. பின்னால் திரும்பி ஓட முயற்சித்தான். “நில்லடா..” என்று சப்பறம் கர்ச்சிக்கிற மாதிரிக் கத்தினான். உயிர் நடுங்கியது. ஒண்டுக்கு வருமாற்போல உணர்வு. எச்சிலை விழுங்கிக்கொண்டு பரலோகத்தைப் பார்த்தான். அவன் உதடுகளைக் கடித்து அழுகையை அடக்க முயற்சித்தான். அற்புதத்தால் முடியவில்லை. பொங்கிப் பொங்கி அழுகை வெடித்தது. ஒரு கடைசி முயற்சியாக “அவன் ஏற்கனவே செத்துவிட்டான் அண்ணன்.” என்றான்.
சப்பறம் சாதாரணமாக “ஓ..” என்றான். “சரி. செத்தது செய்தி இல்லை. நீ அடிக்கிறதுதான் செய்தி. அடி.” என்றான்.
“அற்புதம் யோசிக்காமல் அடி.” என்றொரு குரல் யாரிடமிருந்தோ வந்தது. அவனுடைய பெயர் கண்ணன் என்றும், டம்பிங் என்ற அடைமொழி பிற்காலங்களில் ஒட்டிக் கொண்டது என்றும் அற்புதம் அறிந்து கொள்வான். ‘டம்பிங் கண்ணன்.’
அற்புதம் கருக்கு மட்டையை தலைக்கு மேலே ஓங்கினான். சவத்திற்கு முன்னால் கொள்ளிக் குடத்துடன் நிற்பதைப்போல தோன்றவும் கண்ணீர் உகுத்தது. கெஞ்சலுடன் சப்பறத்தைப் பார்த்தான்.
“தோழர்.. ரெயினிங் முடிச்சு நாட்டுக்கு போய், சிங்கள ஆமியைச் சுடு என்றாலும் இப்பிடித்தான் அழுது கெஞ்சுவீரா?”
அற்புதம் கண்களை இறுக மூடினான். ஓங்கி ஓர் அடி. சக் என்று சத்தம் கேட்டது. கண்கள் திறந்தன. சவம் ஊஞ்சல் மாதிரி ஆடியது. பார்த்ததும்தான் தாமதம் உருக்கொண்டு விட்டான். நாக்கை மடித்து பற்களால் கடித்தான். ஆக்ரோசம் பெருகியது. கருக்கு மட்டையை பொத்திப் பிடித்து ஓங்கினான். “என்ன மயிருக்கடா இங்க வந்தனி?” இரண்டாவது அடி விழுந்தது. “இனிமேல் இந்தப் பக்கம் வருவியாடா?” மூன்றாவது அடி. “நாயே.. நாயே..” மந்திர உச்சாடனம்போல வாய் அரற்றியது.
“நீ நிப்பாட்டு. நாங்களும் அடிக்க வேணும்.” என்று டம்பிங் கண்ணனுடைய குரல் அப்போது கேட்டது.
