5
நஜிபுல்லா பிறந்த காலத்தில்தான் சோவியத் ரஷ்யாவின் படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தன. ஒரே வெற்றிக் கொண்டாட்டம். பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்த ‘நீயொரு முஜாகித் என்றால் இயந்திரத் துப்பாக்கி உன்னுடைய நண்பன். நீயொரு முஜாகித் என்றால் ஏவுகணைகள் உன்னுடைய நண்பர்கள்’ என்ற பாடலை நஜிபுல்லாவின் தாத்தா சுலைமானிதான் எழுதினாராம். அவரோடுதான் சிறு வயதில் அவன் ஆடு மேய்க்கப் போவான். காலையிலேயே புறப்பட்டுவிடுவார்கள். ஆடுகள் பாறை இடுக்குகளில் புற்களைத் தேடிப் போக, ஏதேனும் ஒற்றை மர நிழலில் ஓய்வெடுப்பார்கள். தாத்தாவின் உதடுகள் இசைக்கத் தொடங்கும். “இந்த மலைகளும் பாறைகளும் சாட்சியாக எதிரிகளை ஒரு நாள் தோற்கடிப்போம்.” அவருடைய மங்கோலிய முகத்தின் தோல் சுருக்கங்களுக்கு உள்ளே கண்கள் ஒளிரும். சொற்ப நேரம்தான். கண்கள் தாழ்ந்துகொள்ள பெருமூச்சு வெளியேறும். “நான் துப்பாக்கியை ஏந்தியதில்லைத்தான். ஆனால் பாடல்களை எழுதியபோது ஒரு போர்ப் பயிற்சியாகத்தான் நினைத்தேன். அவற்றைப் பாடியபோது களத்தில் நின்ற பெருமிதம் எனக்கு.. எல்லாம் கனவுபோல ஆகிவிட்டது.”
சோவியத் வெளியேறிய கொஞ்சக் காலத்திற்குள்ளேயே ஆப்கானிஸ்தானின் இனக்குழுக்களுக்கு இடையில் முறுகல் தொடங்கிவிட்டது. மறுபடியும் யுத்தம்.. துப்பாக்கிச் சத்தங்கள்.. வெடி குண்டுகள்.. ரத்தத் தெருக்கள்.. “நான் ஹஷாராக்காரன்தான். ஆனால் எழுதிய பாடல்கள் எல்லோரையும்தானே ஆசீர்வதித்தன. எல்லோருக்கும்தானே நன்றி சொன்னேன். யாருக்கும் என் பாடல்கள் புரியவில்லை.” என்று தாத்தா வருந்தினார். இறுதியில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தார்கள். “அவர்கள் நம்மிடமிருந்து பாடலையும் இசையையும் கூட பறித்துக்கொண்டார்கள்”
அவர் தன்னுடைய சிறிய தம்புராவைத் துண்டு துண்டாக உடைத்து விறகாக்கினார். காலம் அவரில் முதுமையைப் போர்த்தியது. ஆடு மேய்க்கப்போனார். அமெரிக்க இரட்டைக்கோபுரங்கள் மோதி அழிக்கப்பட்ட அந்த நாளில் அவருடைய பட்டியிலிருந்து மூன்று ஆடுகள் வழி தவறிப் போயிருந்தன. அவர் இரவிரவாக “ஆடுகள் நாளைக்கு வந்துவிடும்” என்று அரற்றிக்கொண்டே இருந்தார். பிறகு ஒரு நாள் பாகிஸ்தானுக்குத் தப்பிச் செல்லும் வழியில் அவர் கொல்லப்பட்டார்.
நீண்ட மலைத்தொடர்களுக்கு நடுவில் கற்களைப் பரவிய வனாந்தரத் தெரு. லொறி குண்டு குழிகளில் விழுந்து எழுந்தது. கடமுடவென்று சத்தமிட்டுப் புகையைக் கக்கியது. தாத்தா கம்பளிப் போர்வையால் தலையை மூடி தாடையில் பொத்திப் பிடித்திருந்தார். மலைகள் அவரை விட்டு நீங்கின. ‘ஆப்கானின் தேவதைகளே.. நீங்களே உங்களைக் காத்திடும் வல்லபம் ஆகுக..’ என்று முணுமுணுத்தார். கண்ணீர் திரண்டு ஒரு கொப்புளமாகச் சிந்தியது. அந்தக் கணத்திற்காகத்தான் காத்திருந்ததைப்போல, லொறி வெடித்துப் பற்றி எரியத் தொடங்கியது. யாருமே எதிர்பார்த்திராத ஏவுகணைத் தாக்குதல். அவை அமெரிக்காவிற்குச் சொந்தமான ஏவுகணைகள் என்று தாத்தாவிற்கு கடைசி வரை தெரியாது. அவர் அமெரிக்காவிற்கு எதிராக ஒரு பாடலைக் கூடப் பாடியதில்லை. ஒரு வரியைத் தன்னும் எழுதியதில்லை.

நஜிபுல்லாவின் குடும்பத்தில் அவனும் அம்மாவும் மட்டுமே எஞ்சினார்கள். ஏனோ ‘செத்திருக்கலாம்.’ என்றுதான் அவனுக்குத் தோன்றியது. சனங்களோடு சனங்களாக ஒரு மசூதியில் தஞ்சமடைந்து இருந்தார்கள். மூன்றாவது நாள் தலிபான்கள் அங்கு வந்தார்கள். ஒவ்வொரு இளைஞராகக் கையை நீட்டி எழுந்து வரச் சொன்னார்கள். நஜிபுல்லா தன்னுடைய முறைக்கு முன்னதாகவே எழுந்தான். “நானும் வருகிறேன்.”
ஒரு தலிபான்காரன் நஜிபுல்லாவின் அம்மாவுக்கு ஆறுதல் சொன்னான். “கவலைப்படாதீர்கள். ஒருநாள் ஒரு பெரிய வெடியோசை காற்றில் கேட்கிறபோது உங்களுடைய மகன் சொர்க்கத்தை ஏகுவான்.”
0
இரவு எட்டு மணி இருக்கும். அறைக்குள் நுழைந்த நஜிபுல்லா, வாசலில் தயங்கி நின்ற ஒருத்தியை கையைப் பிடித்து உள்ளே அழைத்தான். அவள் இரும்புக் கொள்கலனை அப்போதுதான் முதன்முதலாகப் பார்ப்பதுபோல தலையைச் சுழற்றியவாறு வந்து படுக்கையில் உட்கார்ந்தாள். வெள்ளைக்காரி. கூரான மூக்கும், களையான முகவெட்டும். அவளுடைய முகச் சாயலைக் கொண்டு ‘எந்த நாட்டுக்காரி?’ என்பதைக் கண்டுபிடிக்க அருள்குமரனால் இயலவில்லை. அற்புதத்திற்கு என்றால் அந்தச் சூக்குமம் தெரியும். அன்றைக்கு இரவு பன்னிரெண்டு மணி தாண்டிய படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது “இவள் அல்பானியன்காரி.. இவள் ரொமேனியன்.. இஞ்ச பார். இவள் பிரேசில். அச்சு அசல் தமிழ் மாதிரி.” என்று ஒவ்வொருத்தியாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அவனுக்கு ஒரு வித்தியாசமும் பிடிபடவில்லை. ‘பழகப் பழகத்தான் தெரியவரும்போல.’ என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டான்.
அறைக்குள் வந்தவளை நஜிபுல்லாவின் காதலி என்றுதான் முதலில் நினைத்தான். அவளை நோக்கி சிநேகமாகப் புன்னகைத்தான். எழுந்து வெளியில் போவது நல்லது என்று தோன்றியது. திடீரென்று சசி அக்காவின் ஞாபகம். அவளுடைய வீட்டில் வைத்துத்தான் அவனும் ஆராதனாவும் சந்தித்துக் கொள்வார்கள். அப்படியான நேரங்களில் சசி அக்கா “சரி கதைச்சுக் கொண்டிருங்க. சங்கக் கடை வரைக்கும் போட்டு வாறன்.” என்று புறப்படுவாள்.
“இல்லை அக்கா. நீங்கள் இருங்கள்.” என்பான் அருள்குமரன். ஒரு சம்பிரதாயத்திற்காகக் சொல்வதுதான்.
“அப்பிடியா.. சரி நான் போகேல்லை.” சசி அக்கா பொய்யாக அவர்களுக்கு நடுவில் உட்கார்ந்து இரண்டு பேரையும் குறும்பாகப் பார்ப்பாள். ஆராதனா வெட்கப்படுவாள். அருள்குமரனில் அசடு வழியும்.
“சரி. பதறாதீங்க. நான் போய் நிவாரணச் சாமானை ஏத்திக்கொண்டு வாறன். அதுவரைக்கும் கையைக் காலை வைச்சுக்கொண்டு சும்மா இருங்க.”
சசி அக்கா திரும்பி வர எப்பிடியும் ஒரு மணி நேரமாவது ஆகும். வேலிப் படலையிலேயே சைக்கிள் மணிச் சத்தத்தை ஒலித்துக்கொண்டு வருவாள்.
“நாலு சனம் வந்து போகாத வீடு உண்மையில வீடு இல்லை. அது வெறும் கிடுகும் மண் சுவரும்தான். நீங்கள் வாறது ஆறுதல்.” என்று அடிக்கடி சொல்வாள். அவளுக்கு பதினேழு வயதிலேயே திருமணம் முடிந்துவிட்டது. இயக்கத்திலிருந்து துண்டு கொடுத்து விலகியிருந்த கண்ணன் அண்ணாவோடு ஓடிப் போய்ச் செய்த கல்யாணம். அதனாலேயே அப்பாவும் அம்மாவும் பேச்சுவார்த்தை இல்லை. ‘சசி அக்காவிற்குக் இப்ப குழந்தைகள் பிறந்திருப்பார்களா? அவளுடைய வீட்டில் சேர்த்திருப்பார்களா?’
அந்த வெள்ளைக்காரி அருள்குமரனை யாரென்று சைகையால் கேட்டாள். நஜிபுல்லா ஒன்றும் சொல்லவில்லை. பக்கத்தில் நெருக்கமாக அமர்ந்து அவளுடைய கழுத்தைக் கோர்த்துக் கட்டிபிடித்தான். அவளை முகர்வதுபோல காதுகளை மூக்கால் வருடினான். கன்னத்தில் தொடங்கி கழுத்து வழியாக முத்தங்கள் கீழிறங்கின. அவள் ஒருவித சலிப்போடு தடுத்து விலக்கினாள். திரும்பவும் அருள்குமரனைக் காட்டி எதையோ கேட்டாள். நஜிபுல்லா சிரித்தான். “ஏன் உனக்கு அவனும் வேண்டுமா? நான் போதாதா? இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் சமாளிப்பாயா?” அவ்வளவும்தான். அவனுடைய உடல்மொழியில் அருள்குமரனுக்கு மொத்தமும் புரிந்துவிட்டது. ‘இங்கே இருக்கக் கூடாது. எங்கயாவது ஓடிப் போய் இருட்டுக்குள் காணாமல் போய்விட வேண்டும்.’ ஓங்காளிக்குமாற்போல துள்ளி எழுந்தான். அதற்கிடையில் நஜிபுல்லாவும் அவளும் ஆவேசமாக முத்தமிடத் தொடங்கியிருந்தார்கள். அவள் படுக்கையில் சரிந்தாள். அவளுடைய மேற்சட்டை உயர்ந்தது. தயிரைப்போன்ற வயிறு. நஜிபுல்லா அதைக் கையால் பொத்தினான். சட்டையை கிழித்து எறிவதைப்போல நீக்கினான். அவள் அவனுடைய வலது தோளைக் கடித்தபடி தம்மைப் போர்வையால் மூட முயற்சித்தாள். கிச்சுக் கிச்சு மூட்டியதைப்போல சிணுங்கல்கள்.. அருள்குமரனுடைய கண்கள் உறைந்து போயின. ‘வெளியே ஓடு..’ ‘இல்லை.. இங்கேயே இரு..’ மாறி மாறி இரண்டு குரல்கள் உலுக்கி எடுத்தன. மூலைக்குள் குந்தி இருந்து முழந்தாள்களை இரண்டு கைகளாலும் கட்டிப் பிடித்தான். தலை கவிழ்ந்தது. நிமிர்ந்தது. கவிழ்ந்தது. விறைத்தது.
வெள்ளைக்காரியின் இரண்டு தொடைகளையும் ஏந்திப் பிடித்தவாறு நஜிபுல்லா மூச்சிரைத்தான். அவளுடைய முதுகு நெஞ்சாங்கட்டை வைக்காத பிரேதத்தைப்போல குறண்டியபடி மேலெழுந்தது. ஒரு கோழி செட்டையடித்துத் திமிறுவதைப்போல நஜிபுல்லாவின் முதுகில் மாறி மாறிக் குத்தினாள். போர்வை அங்குமிங்குமாக இழுபட்டு விலகியது. கட்டிலின் விளிம்பில் தலையைத் தொங்கப்போட்டாள். பொன்னிற மயிர் கீழிறங்கி அசைந்தது. நஜிபுல்லா வேகமானான். அவள் ‘வேண்டாம்.. வேண்டாம்..’ என்று முனகினாள். துடித்துத் துடித்து உயிர் பிரிகின்ற கடைசி நொடியைப்போல கண்களை மூடினாள். ஒரு துளி கண்ணீர் தெறித்து விழுந்தது. திடீரென்று அந்த அறைக்கு வெளியே நின்று சுவரையே வெறித்துப் பார்ப்பதுபோல அருள்குமரனுக்குத் தோன்றியது. தனியனாக நின்றான். அவன் பார்த்துக் கொண்டிருக்கச் சுவரில் ஜன்னல் முளைத்தது. உட்புறமாகச் சரியாக மூடாத ஜன்னல். நஜிபுல்லா அசைகிறான். அவசர அவசரமான அசைவு. அவள் கண்களை மூடிக் கிடக்கிறாளா.. இல்லையா.. ‘வேண்டாம்.. வேண்டாம்’ என்று முணுமுணுக்கிறாளா.. இல்லையா.. அருள்குமரன் பற்களை நருமிக்கொண்டு எழுந்து நின்றான். உரு வந்ததைப்போன்ற சன்னதம். தொம் தொம் என்று இரும்புத் தரையை உதைந்தான். ஒரே பாய்ச்சலில் பாய்ந்து நஜிபுல்லாவின் கழுத்தைப் பிடித்துக் கீழே தள்ளினான். அவனது நெஞ்சில் ஏறி உட்கார்ந்து தொண்டைக் குழியை அழுத்திப் பற்றினான். அசைய முடியாத உடும்புப் பிடி. கோபக் கனல். இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தான். “அவள் வேண்டாம் எண்டெல்லோ சொன்னவள்.. அவள் வேண்டாம் எண்டெல்லோ சொன்னவள்..” ஆவேசத்தில் வார்த்தைகள் குழறின. நாக்கை வெளித் தள்ளி பற்களால் கடித்தான். கடைவாயில் எச்சில் வழிந்தது. நஜிபுல்லா முழுக்கச் சோர்ந்துவிட்டான். காற்றில் ஆடுவதைப்போல தலை அங்கும் இங்கும் அசைந்தது. “அம்மா..” என்று முனகினான். அருள்குமரனுக்கு நினைவு மங்குவதைப்போல தோன்றிற்று. பிடி தளர்ந்தது.
0
அருள்குமரன் தமிழ்க் கடையில் வாங்கிய பொருட்களோடு பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தான். மிளகாய்த் தூள், கறிவேப்பிலை மாதிரியானவற்றுக்கு இந்தக் கடைக்குத்தான் வரவேண்டும். சோயா இறைச்சியும் ஓரிரு மரக்கறிகளும் வாங்கியிருந்தான். அவற்றைச் சமைப்பது இலகு. மீன், இறைச்சி என்றால் ஒடுங்கிய குசினிக்குள் வெட்டிக் கழுவிச் சமைக்கச் சிரமம். பேருந்துக்கு இன்னமும் மூன்று நிமிடங்கள்தான் இருந்தன. அது சொன்ன நேரத்திற்கு வந்து நிற்கும். நடையைக் கூட்டினான். இங்கே எல்லாமுமே எழுதி வைத்த மாதிரியாக நடக்கின்றன. ‘இன்று நான் வர கொஞ்சம் தாமதமாகும். ஐந்து இருபதுக்கு வந்து விடுவேன்.’ என்று முல்லர் சொன்னால், அவன் ஐந்து பத்தொன்பதுக்கும் வருவதில்லை. ஐந்து இருபத்தொன்றுக்கும் வருவதில்லை. நொடியும் பிசகாத ஒழுங்கு. அதுவே சலிப்பாகவும் இருந்தது. ஏதோ நாடு மொத்தமுமே நேர அட்டவணைகளை எழுதிச் சுவரில் ஒட்டி வைத்த ராணுவ முகாம்போல.. நிறுத்தத்திற்கு வந்தான். ஒன்றிரண்டு பேர்தான் நின்றார்கள். அன்றைக்குப் பேருந்து மூன்று நிமிடங்கள் தாமதித்துத்தான் வந்தது. அதற்கிடையில் அவர்கள் ஆயிரத்தெட்டு முறை நேரத்தைப் பார்த்துச் சினந்தார்கள். அருள்குமரனுக்கு யாரையோ தோற்கடித்த மகிழ்ச்சியில் சிரிப்பு வந்தது. பேருந்தில் ஏறினான். தாமதமாக வந்ததற்கு பயணிகள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்பதாக சாரதி அறிவித்தான். மகிழ்ச்சி காணாமல் போனது. மறுபடியும் சலிப்பு.
பேருந்தின் கடைசி வரிசையில் ஜன்னல் ஓரமாக அற்புதம் உட்கார்ந்திருந்தார். பார்த்த உடனேயே ஒரு புளுகம். வெளிறிப்போன சாம்பல் நிறக் குளிராடையை அணிந்திருந்தார். அவரது உருவத்திற்குப் பொருத்தமே இல்லாமல் தொள தொளத்தது. அருகில் இருந்த வெறுமையான இருக்கைகளை நோக்கி நடந்தான். அற்புதத்தின் வீட்டிலிருந்து புறப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்கும். இடையில் சந்திக்கவில்லை.
“அண்ணை.. என்னைத் தெரியுமா?”
அற்புதம் ‘தெரியும்.’ என்பதை குழைவான உடல் மொழியால் ஒப்புக்கொண்டார். அவர் இருந்த விதம், அதே இருக்கையில் இன்னும் நான்கைந்து பேர் அவரை நசித்துக்கொண்டு இருப்பதைப்போல தோன்றிற்று. கைகள் இரண்டையும் தொடை இடுக்கில் வைத்திருந்தார். அன்றைக்குப் போதையில் இருந்தபோது அவருடைய குரலும், உடல் மொழியும் மிடுக்காக இருந்தன. இன்றைக்குத் தலை கீழ். அவர் ஜன்னலோடு தலையைச் சாய்த்து வெளியே பார்க்கத் தொடங்கினார். தெருவின் இரு பக்கமும் வழித்துவிடப்பட்ட பனிக் குவியல் கெட்டியாகி இள வெயில் பட்டு மினுங்கியது. இனி மழை பெய்தால்தான் கரையும். அற்புதம் ஏதாவது கேட்பார் என்று அருள்குமரன் எதிர்பார்த்தான். தமிழில் பேசி எத்தனை நாட்களாகி விட்டது? நெதர்லாந்தில் இருக்கிற வின்சன் அண்ணா முகாமிற்கு அழைத்து இரண்டொரு தடவைகள் பேசியிருக்கிறார்தான். அவர் அப்பா வழியில் உறவு. அருள்குமரனை சுவிற்சர்லாந்திற்கு அனுப்பும் ஏற்பாடுகளை அவர்தான் கவனித்துக் கொண்டார். எப்போது அழைத்தாலும் “இனி எண்டாலும் குழப்படி விடாமல் ஒழுங்கா இரு.” என்று சொல்லத் தவறுவதில்லை.
“சரி.”
“ஏதாவது வேலை தேடு. அதுவா உன்னட்ட வராது.”
“ம்.”
“உனக்குத் தாற அகதிக் காசை தேவையில்லாமல் செலவழிக்காதை. சேர்த்து வை.”
“ஓம்.”
“அது ஆயிரம், ரெண்டாயிரம் எண்டு சேர்ந்தால் எனக்குத் திருப்பித் தா.”
“ம்.”
அந்த மலைக் கிராமத்தில் எப்படி வேலை தேடுவது என்று தெரியவில்லை. ஒன்றோ இரண்டு உணவு விடுதிகளைத்தான் பார்த்திருக்கிறான். ஏதாவது தொழிற்சாலை இருந்தால் கூட்டித் துடைத்துச் சுத்தம் செய்கிற வேலையாவது கேட்டுப் பார்க்கலாம். அதுவும் இல்லை. எதற்காக அகதி முகாமைக் கொண்டுபோய் அந்த உச்சியில் வைத்தார்களோ.. வீடுகளே அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இருந்தன. வீதிகளில் நடந்தால் எப்போதாவதுதான் எதிரில் யாராவது வருவார்கள். அருகே ஆயிரம் ஆண்டு காலப் பழமையான ஒரு பெரிய தேவாலயம் இருந்தது. தூரத்திலிருந்து பார்த்தால் நான்கு கொத்தளங்களைக் கொண்ட உயரமான கோட்டையைப்போல தெரியும். நஜிபுல்லாவை அடித்த அன்று அருள்குமரனுக்கு இரவு நித்திரையே வரவில்லை. காதுக்குள் ஓ என்று இரைச்சல். நள்ளிரவில் எழுந்து கொட்டக் கொட்ட விழித்திருந்தான். கண்களை மூடி.. எண்ணங்களை மூக்கு நுனியில் குவித்து.. மூச்சை ஆழ இழுத்து.. ம்கூம். ஒன்றுக்கும் பயனில்லை. விடிந்ததும் முதல் வேலையாக அந்தத் தேவாலயத்திற்குப் போனான். நுழைவாயிலில் அமைதி பேணவும் என்று தமிழில் மட்டும் எழுதியிருந்தார்கள்.
திருப்பீடத்திலிருந்த மரியாளும் அவள் கையில் ஏந்தியிருந்த பாலனும் பளிங்குக் கறுப்பு நிறத்தில் தோன்றினார்கள். மரியாள் பகட்டான ஆடை உடுத்தியிருந்தாள். அவளுடைய கருணை ததும்புகிற முகத்தின் முன்னால் முழந்தாளிட்டு நின்றான். இரைச்சல் அடங்கியது. பாலனின் முகத்தை ஆசையோடு பார்த்தான். ‘இவனுக்கு என்ன.. ஒரு ஏழு வயது ஆகியிருக்குமா?’ துணுக் என்று அந்த எண்ணம் தோன்றிற்று. ‘இந்தக் குட்டி முதுகில்தான் சிலுவையைச் சுமத்தப் போகிறார்கள். பிஞ்சுக் கைகளை ஆணி துளைக்கப் போகிறது.’ வெடுக்கென்று தலையை உயர்த்தி மரியாளைப் பார்த்தான். அவளுடைய கண்களில் சாவுப் பயம். மருண்டு போனான். ஒரே பாய்ச்சலில் வெளியே தாவி ஓடினான்.

அகதி முகாமின் வாசலிலேயே நஜிபுல்லா நின்றான். அவனுடைய இடது கண்ணுக்குக் கீழே குளவி கொட்டியதைப்போல வீங்கியிருந்தது. கழுத்தில் நகக் கீறல்கள். ‘அவள்தான் பிராண்டி இருக்கவேண்டும்.’ அவனை நேர்கொண்டு பார்க்கவே அந்தரமாக இருந்தது. அவனுடைய கையைப் பிடித்து மன்னிப்புக் கேட்டுவிட்டால் இந்தக் குமைச்சல் ஒருவேளை தீரக் கூடும். அவன் கையைத் தட்டிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டால்..? மன்னிப்புக் கேட்பதில் ஒரு அவமானமும் இல்லை. அதை ஏற்க மறுத்தால் அதுதான் அவமானம். அவமானப்பட முடியாது. நஜிபுல்லாவை விலகி நடந்தான். அவன் கையால் தடுத்து நிறுத்தினான். ‘அடித்தால் திருப்பி அடி..’ என்று மண்டைக்குள் திரும்பவும் கூச்சல்.
“உன்னை உடனடியாக முல்லர் வந்து சந்திக்கச் சொன்னார்.” என்றான் நஜிபுல்லா. ‘தகடு’ கொடுத்துவிட்டான்போல. முல்லர் என்ன தண்டனை தருவான் என்று தெரியவில்லை. முகாமில் இருக்கின்ற அத்தனை பேருக்கும் சமைத்துப் போடு என்று சொல்லக் கூடும். மல சல கூடத்தைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டியிருக்கலாம். காலையிலிருந்து இரவு வரைக்கும் மரத்தில் ஏறி இருக்கின்ற தண்டனைகளும் உண்டு. ‘ஒண்டுக்குப் போக’ முல்லர் எத்தனை தடவை அனுமதிப்பான்? இயக்கத்தில் ஒரு முறைதான். கைகள் இரண்டையும் மேலே உயர்த்திக் கொண்டு அகதி முகாமைச் சுற்றி நூறு வட்டங்கள் ஓட வேண்டுமா? அதுவும் இந்தக் குளிருக்குள். இடையில் களைத்துப் போய் நின்று மூச்சு வாங்கினால்.. ஐயோ.. மறுபடியும் முதலேயிருந்து ஒன்று.. இரண்டு.. மூன்று..
முல்லர் உட்காரச் சொன்னான். “உங்கள் இரண்டு பேருக்கும் என்ன தகராறு? குழந்தைப் பிள்ளைகளா நீங்கள்? நான் என்ன இங்கே கின்டர் கார்டன் பள்ளியா நடத்துகிறேன்?” என்று கேட்டான். அவன் கோபப்பட முயற்சித்தான்போல. ஆனால் முடியவில்லை.
“பெரிதாக ஒன்று இல்லை செப்ஃ. சாதாரண வாய்த் தர்க்கம், கடைசியில் இப்படி ஆகிவிட்டது. நான் அவனிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.”
முல்லர் முகத்தைச் சலித்தான். “உங்களை நம்ப முடியாது. நான் வேண்டுமானால் இரண்டு பேரையும் வேறு வேறு அறைகளுக்கு மாற்றிவிடுகிறேன்.” என்றான்.
“வேண்டாம் செப்ஃ. இனியொரு முறை இப்படி நடக்காது.”
“கிட்டத்தட்ட முப்பது வருசம், இந்த மாநிலத்தின் முதலாவது அகதி முகாமிலிருந்து வேலையில் இருக்கிறேன். எத்தனை எத்தனை மனிதர்கள்.. எவ்வளவு மன அழுத்தம். எல்லாம் தெரியும். நீ ஒன்று செய். ஒவ்வொரு நாளும் உனக்கென்று சமையல் செய். இறைச்சியை வெட்டுவதும் மரக்கறிகளை நறுக்குவதும் மாவைப் பிசைவதும் நசிப்பதும் மன அழுத்தத்திலிருந்து விடுலை அளிக்கும். உனக்குச் சமைக்கத் தெரியுமா?”
அருள்குமரன் முல்லரை நிமிர்ந்து பார்த்தான். உதட்டில் எகத்தாளப் புன்னகை முளைத்தது. “திரு முல்லர். நான் மாதத்தில் மூன்று முறையாவது நூறு பேருக்குச் சமைத்துப் போட்டவன். தெரியுமா?”
அற்புதத்திற்குப் பக்கத்திலிருந்த இருக்கையில் பொருட்களை வைத்துவிட்டு அவருக்கு முன்னாலேயே நின்றான். அவர் எதுவும் கதைக்கவில்லை. ‘சும்மா இருக்கிற நேரங்களில் வீட்டுங்கு வாங்கள்’ என்று அழைக்கக் கூடும் என்று எதிர்பார்த்தான். பரவாயில்லை. ‘எதுக்கு நிக்கிறீங்கள்? இருங்கவன்.’ என்றாவது சொல்லலாம். அதுவும் இல்லை. ஏமாற்றமாக இருந்தது. இன்னும் இரண்டொரு நிறுத்தங்களில் இறங்க வேண்டும். “அண்ணை.. நீங்கள் வேலை செய்யிற இடத்தில ஏதாவது வேலை இருக்கா? என்னட்டை விசா இல்லைத்தான், எண்டாலும் முகாமில் சும்மா இருக்கப் பொழுது போகேல்லை.”
அற்புதம் பெருமூச்சோடு திரும்பினார். “முந்தி என்றால் தமிழருக்கு வேலை இருக்கு என்று வாசலில் எழுதியே வைச்சிருந்தாங்கள். இப்ப அப்பிடியில்லை. கிழக்கு ஐரோப்பாக்காரரும் குறைஞ்ச சம்பளத்திற்கு வேலை செய்ய வாறார்கள். நல்ல வேளையா அவங்களுக்குக் கொஞ்சம் சூடு சொரணை இருக்கிறதால முதலாளிகள் எங்களை இன்னமும் வைச்சிருக்கிறாங்கள்.” அவர் நிறுத்தல் பொத்தானை அழுத்தினார். முதுகுப் பையைச் சுமந்தவாறு எழுந்தார். அருள்குமரன் அவரைப் பின்தொடர்ந்து பேருந்திலிருந்து இறங்கினான்.
“நீங்கள் ஒவ்வொரு நாளும் கட்டாயம் முகாமில நிக்க வேணுமா?” என்று அற்புதம் கேட்டார்.
“இல்லை.. இல்லை..” என்று அவசரமாக மறுத்தான். “திங்களும் வியாழனும் காசு வாங்க நிக்க வேணும். மற்றும்படி சொல்லிட்டு வெளிய போகலாம்.”
“கடைக்குப் போட்டு வாறீங்களா?” தூக்கி வந்த பையைப் பார்த்தபடி கேட்டார்.
“ஓம். இரவுக்குச் சமைக்கப் போறேன்.”
“அப்ப வீட்டுக்கு வாங்க.. முகாமுக்கு விடியப் போகலாம்.”
“ஓம்.” அருள்குமரனுடைய நடை துள்ளலாக மாறியது. குட்டி போட்ட பூனைபோல அற்புதத்திற்குப் பின்னாலேயே நடந்தான். திடீரென்று அந்த நினைப்புத் தோன்றியது. இதுதான் சந்தர்ப்பம். கேட்டுவிட வேண்டும்.
“அண்ணை.. நீங்கள் எந்த இயக்கம்?”
